ஜாரவா மக்களிட மிருந்து கற்றுக்கொள்ளுதல்
இந்தியா விழித்தெழு! நிருபர்
“உங்களுடைய இரத்த அழுத்தம் உச்ச நிலையில் உள்ளது, உங்களுடைய நரம்புகள் தளர்ச்சியடைந்துள்ளது. வெப்பமண்டலத் தீவுகளுக்குச் சென்று ஓய்வுபெறுங்கள்!” நவீன நாகரிகத்தின் அழுத்தங்களின் கீழும் மன இறுக்கங்களின் கீழும் நீங்கள் முடுக்கப்படுவீர்களானால், இதுவே உங்களுக்குத் தேவையான அறிவுரையாக இருக்கும். மருத்துவ காரணங்களுக்காக அப்படி இல்லை என்றாலும், அப்படிப்பட்டக் கவர்ச்சியான ஓர் ஆலோசனையை யார் மறுக்கக்கூடும்? எனவே ஜாரவா மக்களின் வீடாகத் திகழும் அந்தமான் தீவுகளுக்கு விஜயம் செய்வதன் மூலம் நீங்கள் ஏன் அவ்வெல்லா அழுத்த நிலையிலிருந்தும் வெளியேறிவிடக்கூடாது?
அந்தமான் தீவுகளா? ஜாரவா மக்களா? அவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லை என்பதால் சங்கடப்படவேண்டாம், ஏனென்றால் அவர்கள் மக்கள் தடயங்களால் உறுதிப்பட்ட உலக சுற்றுலாப் பாதைக்கு வெகுதூரத்தில் இருக்கின்றனர். நீங்கள் உலக வரைப்படத்தில் பார்ப்பீர்களானால், இந்தியாவுக்கும் மியான்மாருக்கும் (முன்னர் பர்மா) இடையில் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளைக் காண்பீர்கள். ஏறக்குறைய 300 தீவுகளடங்கிய இந்தப் பகுதி இப்பொழுது இந்திய குடியரசின் கடைசி பகுதியாக இருக்கிறது.
நாகரிகமற்ற மக்களா?
இந்தத் தீவுகள் நான்கு நெக்ரீட்டோ இனத்தவரின்—மகா அந்தமானியர், ஜாரவா மக்கள், சென்டிநேலியர், மற்றும் ஓங்கெஸ் இனத்தவரின் வீடு. “குற்றுருவ நீக்ரோக்கள்” என்ற அர்த்தமுடைய நெக்ரீட்டோக்கள் ஒரு காலத்தில் தென் ஆசியா மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பூர்வீக, கருப்பு நிறமுடைய குற்றுருவ இனத்தவரில் எஞ்சியவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் தனித்து இருப்பதால், “கற்கால மனிதனின்” அல்லது ஒருகாலத்தில் இந்தத் தீவைத் தன் ஆதிக்கத்தில் கொண்டிருந்த பிரிட்டிஷ் படைத் தளபதி கோல்புரூக் கூறியது போல் “உலகில் நாகரிகமில்லாதவர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
1858-ல் பிரிட்டிஷ் அவ்விடத்தில் கைதிகளுக்கான ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தியபோது, மகா அந்தமானியர் எண்ணிக்கையில் ஒரு சில ஆயிரங்களாக இருந்தனர். விரைவில், குடியேறியவர்களுக்கு ஏற்பட்ட நோய்கள்—விளையாட்டம்மை, மேக நோய் போன்ற மற்ற நோய்கள்—கஞ்சா மற்றும் மதுபானத்துக்கு அடிமைப்படுதல் உட்பட இவ்வனைத்துக் காரியங்களும் அந்த இனத்தவரை அழித்தது. இப்பொழுது கலப்புக் குருதியினராய் அவர்களில் ஒருசிலரே சிறிய கடற்கால் தீவில் வசிக்கின்றனர். ஓங்கெஸ் இனத்தவரும் அதுபோன்ற நிலைமைக்குள் வந்தனர்.
ஜாரவா மக்களும் சென்டிநேலியரும் தங்களுக்குப் புறம்பானவர்களுடன் தொடர்பு கொள்வதையும் அவர்களால் பயன்படுத்தப்படுவதையும் எதிர்த்துப்போராடினர். அவர்களுடைய விரோதம்தானே அவர்களைத் தனிமைப்படுத்துவதில் வெற்றிகண்டது, ஆனால் நாகரிகமற்றவர்கள், இரத்த வெறிபிடித்த மனிதரைக் கொன்று உண்ணும் மக்கள் என்ற பெயரையும் அவர்களுக்குத் தேடித்தந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதானே, அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் மனித இன ஆய்வுத் துறையின் அதிகாரிகள் வடக்கு சென்டினல் தீவின் ஒரு மலைவாழ் மரபினருடன் தொடர்பு கொள்ள முற்பட்டபோது, அவர்களை அம்புத் திரள்தானே சந்தித்தது, அவற்றில் ஒன்று படம்பிடிக்கும் ஒருவரின் காலில் பாய்ந்தது.
அவர்களை அந்தளவுக்கு விரோதிகளாக்கியது எது? கடந்த நூற்றாண்டின் முடிவில் அந்தத் தீவுகளை நிர்வகித்து வந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரி M.V. போர்ட்மென் கூறினார்: “நாங்கள் வந்தபோது, ஜாரவா மக்கள் அமைதலாயும், எங்களை எதிர்க்காதவர்களாயும் இருந்தார்கள், அவர்கள் எங்களைத் தொந்தரவு செய்யவுமில்லை. கடலோரப்பகுதியில் வாழ்ந்த அந்தமானியரை அவர்களுக்கு எதிராகச் செயல்படும்படி அவர்களைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தும்வரை அவர்கள் அப்படியில்லை. இந்தக் குழப்பத்திற்குப் பின் ஒரு சில ஆண்டுகள் கழித்து, ஜாரவா மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்றாகியது, அவர்கள் எங்களைத் தாக்க ஆரம்பித்தனர். ஜாரவா மக்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள் என்றால், அது எங்களுடைய குற்றமாயிருந்தது.”
ஜாரவா மக்களின் வாழ்க்கை முறை
ஜாரவா மக்கள் ஓரளவுக்குப் பரதேசிய வாழ்க்கையை வாழ்கிறவர்கள். அவர்கள் ஏறக்குறைய 30 பேர்கொண்ட தொகுதிகளில் வாழ்கின்றனர், இப்படியாக அண்மையிலிருக்கும் பல தொகுதிகள் சேர்ந்து ஒரு மரபினராவர். ஒவ்வொரு தொகுதியும் நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிக்குள்ளாகவே இடம் மாறுகின்றனர், மற்ற தொகுதியினரின் பிராந்தியங்களுக்குள் அத்துமீறுவதில்லை. பசுமையான வெப்பமண்டல சூழலில் வாழ்கிறவர்களாக, அவர்கள் விவசாயம் செய்வதுமில்லை, வீட்டு விலங்குகளை அல்லது கால்நடைகளைக் கொண்டிருப்பதுமில்லை. அவர்களுடைய பிழைப்பு அவர்களுடைய வில், அம்பு மற்றும் ஈட்டிகளைச் சார்ந்திருக்கிறது—வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும்.
உணவு பொதுவில் பரிமாரிக்கொள்ளப்படுவது அவர்களுடைய வாழ்க்கை வழியின் ஒரு பாகமாயிருக்கிறது. எனவே அந்தத் தொகுதியிலிருக்கும் ஒருவர் ஒரு கடல் ஆமையைப் பிடித்தால், எல்லாருமே அதைப் புசிக்கிறார்கள். ஒருவர் பன்றி பிடித்தால், எல்லாருமே பன்றி இறைச்சி புசிக்கிறார்கள். அவர்களுடைய சமுதாய முறைப்படி, இருக்கிறது, இல்லை என்ற அடிப்படையில் எந்த ஒரு வகுப்பு பேதமும் கிடையாது. “ஜாரவா மக்கள் ஏழைகள் என்று கருதப்படமுடியாது,” என்கிறார் மக்கள் இன ஆய்வு அதிகாரிகளில் ஒருவர். “அவர்கள் விரும்புகிற அனைத்துமே அவர்களிடம் ஏராளமாகக் கிடைக்கிறது.”
ஜாரவா மக்களைப் பற்றிய ஓர் அபூர்வமான காரியம் என்னவெனில், உலகில் நெருப்பு பற்றவைக்கத் தெரியாத மக்களில் இவர்களும் உட்படுகின்றனர். அடிக்கடி ஏற்படக்கூடிய மின்னல்களால் காடுகளில் உண்டாகும் தீயிலிருந்து தீ மூட்டுகிறார்கள். தங்களுடைய தீயை மிகவும் கவனமாகக் காத்துக்கொள்கிறார்கள், அவற்றை எரியும் நிலையிலேயே வைத்து, இடம் விட்டு செல்லும்போதெல்லாம் உடன் எடுத்துச்செல்கிறார்கள்.
நவீன நாகரிகத்தின் கேட்டில் ஒன்று ஒழுக்க மதிப்பீடுகளில் முறிவு. “ஜாரவா மக்களின் மத்தியில் விவாகத்துக்கு முன் பாலுறவு கொள்ளுதல் என்பது கிடையாது,” என்கிறார் மேற்குறிப்பிடப்பட்ட அதிகாரி. “விபசாரம் என்பது மிகவும் அரிது. குற்றமிழைத்தவர் சமுதாயத்தின் கடுமையான வெறுப்பை சந்திக்க வேண்டும். அந்த நபர் அவ்வளவு மோசமாக உணருவதால், திரும்பிவரவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதற்கு முன்பு திரும்பிவருவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.” உங்களுடைய “நாகரிக” சமுதாயத்தில் வாழும் மக்களில் அப்படிப்பட்ட ஆழ்ந்த ஒழுக்க உணர்வு இருக்கிறதா?
நவீன நாகரிகம் இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஜாரவா மக்கள் அப்படிப்பட்ட நோய்களால் வாதிக்கப்பட்டில்லை. அவர்கள் உருவில் சிறுத்திருந்தாலும்—ஆண்கள் ஐந்து அடி உயரத்தை மிஞ்சாதவர்களும் பெண்கள் அதைவிட குட்டையாகவும் இருந்தாலும்—அவர்கள் “உயிருடனிருப்பவர்களில் மிகப் பூரணமாக அமைந்த குற்றுருவிகள்” என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய சொந்த சூழலில் அவர்கள் நோய்ப்படுவது அரிது.
அவர்களுடைய வாழ்க்கையில் மதம் பிரதான இடத்தைப் பெற்றிடாவிட்டாலும், மரித்தவர்கள் சம்பந்தமாக ஜாரவா மக்கள் சில சடங்குகளைக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மரிக்கும்போது, உடல் அடக்கம் செய்யப்படுகிறது, மரித்தவர் குடியிருந்த குடிசை கைவிடப்படுகிறது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், புதைக்கப்பட்ட உடல் மீண்டும் எடுக்கப்படுகிறது. மண்டை ஓடு, அல்லது அநேக சமயங்களில் கீழ்த்தாடை மரித்தவருக்கு நெருங்கிய உறவில் இருக்கும் அடுத்த நபரால் அணியப்படுகிறது. சில காலத்திற்குப் பிறகு அவர்களுடைய மற்ற உறவினர்கள் அதை அணிகின்றனர். இந்தப் பழக்கம் மரித்தவருக்குக் காண்பிக்கும் மரியாதையாகக் கருதப்படுகிறது, மற்றும் மரித்தோரைப் பற்றிய அவர்களுடைய கருத்துகளோடு சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாயிருக்கிறது. மற்றொரு உலகில் வாழும் ஓர் ஆத்துமா, ஜீவனைத் தாங்கியிருக்கும் ஒன்று இருக்கிறது என்று ஜாரவா மக்கள் நம்புகின்றனர். அந்த ஆத்துமா அவர்களில் இன்னும் அக்கறை காண்பிக்கிறது என்றும் நம்புகிறார்கள், எனவே அதைக் கோபப்படுத்தும் வகையில் அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்.
நிறைவான ஒரு வீடு
ஜாரவா மக்கள் நிறைய காரியங்களைக் கொண்டிருக்கும் ஒரு வீட்டை அனுபவித்து மகிழ்கிறார்கள். அந்தத் தீவுகளை அழகுபடுத்தும் பல தாவரங்களில் அருமையான வண்ணமலர்த் தாவரங்களும் இருக்கின்றன, அவற்றில் சில இந்தத் தீவில் மட்டுமே காணப்படக்கூடியவை. பிராந்திய தாவரவியலர் டாக்டர் N.P. பாலகிருஷ்ணன் கருத்துப்படி, 1880-ல் “அரிதாயிருக்கும் வைரம் போன்ற” இந்த வண்ண மலர்த் தாவரங்களில் சில “இங்கிலாந்தில் உச்ச விலை கண்டன.”
அண்மையில் சென்டினல் தீவில் ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி, ஒரு விரல் இழப்பில், திருட்டு நண்டைக் கண்டுபிடித்தார். அந்தமான் தீவுகளில் போர்ட் பிளேரில் நடந்த அரசு மீன்துறை கண்காட்சி திருட்டு நண்டைப் பற்றிய ஒரு விவரப் பலகையைக் கொண்டிருந்தது. அது பின்வருமாறு உரிமைபாராட்டியது: ‘தென்னை சாகுபடிக்கு ஆபத்தானவை. தென்னை மரங்களில் ஏறுகின்றன. தேங்காயைப் பறிக்கின்றன. அதன் பெரிய கால் நகங்களால் தேங்காயை உரித்து உடைக்கின்றன. இனிய தேங்காய்த் தண்ணீரைக் குடித்துவிட்டு தேங்காயைத் தின்று விடுகின்றன.’ என்றபோதிலும் இந்த நண்டு இதையெல்லாம் செய்கிறதா என்பது குறித்து மற்றவர்கள் சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றனர். இந்த நண்டு மரம் ஏறுகிறது என்பதைத் திறனாய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறபோதிலும், அது தரையில் விழுந்துகிடக்கும் கெட்டுப்போன தேங்காயைத்தான் திறந்து புசிக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது
நவீன நாகரிகத்தின் செல்வாக்கின்கீழ் ஜாரவா மக்கள் மகா அந்தமானியர் மற்றும் ஓங்கெஸ் வழியில்—மெதுமெதுவாக வீழ்ச்சியுற்று கடைசியில் இல்லாமற் போகும் நிலைக்குள்ளாகிவிடுவார்களா? காலந்தான் பதில் சொல்லும். ஆனால் வெளியாட்கள் வருவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக அவர்கள் கடவுள் கொடுத்த வீட்டைக் கவனித்தும் அதில் தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த காரியங்களைத் தன்னலமற்ற விதத்தில் பயன்படுத்தியும் வந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் ஓர் எளிய, சமாதான வாழ்க்கை வழியாகும். ஜாரவா மக்களிடமிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்ளக்கூடுமா? (g90 2/22)
மரமேறும் நண்டு தேங்காய்களைச் சாப்பிடுகிறது