உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 2/8 பக். 16-17
  • “மனிதனின் மிக பயனுள்ள மரம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மனிதனின் மிக பயனுள்ள மரம்”
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தேங்காயால் செய்யப்பட்டவை
  • “ஒயினைவிட அதிக சுவைமிக்கது”
  • தேங்காய் பதார்த்தங்கள்
  • உலகிலேயே மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று
    விழித்தெழு!—2003
  • விசித்திர சுவையுடைய நண்டு
    விழித்தெழு!—1995
  • பணம் மரத்திலேயே இருக்குமிடம்
    விழித்தெழு!—1995
விழித்தெழு!—1994
g94 2/8 பக். 16-17

“மனிதனின் மிக பயனுள்ள மரம்”

கென்யாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

தென்னை மரம் அநேகருக்கு ஒரு சோம்பேறித்தனமாகத் தோற்றமளிக்கும் மரமாக—ஓய்வு மற்றும் தளர்ச்சியின் அடையாளமாகவே இருக்கலாம். ஆனால் கென்யாவின் கடற்கரை ஓரத்தில் இருக்கும் மொம்பாஸா தீவில் வாழும் ஜனங்களுக்கு, அது மிக அதிகத்தைக் குறிக்கிறது. இந்த அமைதியான இராட்சதத்தைச் சிலர் “ஜீவ மரம்” என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கடற்கரைவாசிகளுக்கு, தென்னை அழகூட்டுவதற்கு மட்டுமல்லாமல் மனித வாழ்க்கையின் அநேக அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் அதிசயிக்கத்தக்க திறம்படைத்ததாய் இருக்கிறது.

தென்னை மரம் நடைமுறையான பல்வேறு உபயோகங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, தென்னை “அபரிமிதத்தின் மரம்,” “மனிதவர்க்கத்தின் வாயிற்படியிலுள்ள பால்புட்டி,” மற்றும் “மனிதனின் மிக பயனுள்ள மரம்” என்றெல்லாம் அழைக்கப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை. தென்னை மரம்—ஒரு தனிநூல் (The Coconut Palm—A Monograph) குறிப்பிடுகிறது: “இது ஒருவேளை வேறெந்த மரத்தையும்விட மனிதவர்க்கத்திற்கு பயனுள்ள அதிக பொருட்களைத் தருகிறது.”

தேங்காயால் செய்யப்பட்டவை

கென்யக் கடற்கரையிலுள்ள ஜனங்கள் தென்னையை அநேக ஞானமான வழிகளில் பயன்படுத்தியிருக்கின்றனர். உதாரணமாக, கடி என்ற ஓர் உள்ளூர் குடும்பப் பெண்ணைக் கவனியுங்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் இந்த வெப்பச் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வந்திருக்கிறாள். “உங்களுடைய வீட்டில் தென்னை எப்போதும் ஒரு முக்கிய பாகம் வகித்துவந்திருக்கிறதா?” என்று நாங்கள் கேட்கிறோம்.

“நான் ஒரு சிறுமியாய் இருந்தபோது எங்கள் சமையலறையில் தேங்காயை பயன்படுத்தியதை என்னால் தெளிவாக ஞாபகப்படுத்திப் பார்க்கமுடிகிறது. ஓடு நன்கு கடினமானதாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருப்பதால், அது கோப்பைகளாகவும் கரண்டிகளாகவும் அகப்பைகளாகவும் நன்கு பயன்பட்டது. பெரிய ஓடுகள் சூப் கிண்ணங்களாகவும் மற்றும் கோப்பைக் கரண்டிகளாகவும் பயன்படுத்தப்பட்டன. வீட்டு உபயோகத்திற்காக இந்தச் சாமான்களை எவ்வாறு வடிவமைத்து உண்டாக்குவது என்று கற்றுக்கொள்வது பள்ளியில் எங்கள் பாடத்தின் ஒரு பாகமாக இருந்தது,” என்று பதிலளிக்கிறாள் கடி.

கடியின் கணவர், ம்பாகாவும் கடற்கரைப் பகுதியில் வளர்ந்தவர். சமையலறைக்கு வெளியே தென்னையின் பயன்களைப்பற்றி சொல்வதற்கு இவருக்கு ஏராளம் இருந்தன. “வளர்ந்துவரும் ஒரு சிறுவனாக,” ம்பாகா நினைவுகூருகிறார், “நான் இந்த மரத்தை வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பாகமாகக் கண்டேன்.”

உதாரணமாக, கடினமானதாகவும் உறுதிவாய்ந்ததாகவும் இருக்கிற தென்னை மரக் கட்டையைப்பற்றி அவர் சொல்கிறார்: “அதை நாங்கள் குறுக்குச் சட்டங்களாகவும் முட்டுக்கட்டைகளாகவும் குத்துக்கழிகளாகவும் தூண்களாகவும் மற்றும் பல்வேறு கட்டடப் பொருட்களாகவும் பயன்படுத்துகிறோம்.”

தென்னை ஓலைகளைப் பற்றியதென்ன? “பெரும்பாலான கிராமங்களில் இந்த ஓலைகளைக் கைகளால் பிண்ணி அவற்றைக் கூரை வேய்வதற்கான பெரிய பலகைப்போன்ற கீற்றுகளாக முடைந்து பிழைப்பு நடத்தும் பெண்கள் இருக்கின்றனர்,” என்று ம்பாகா விவரிக்கிறார். ஒரு வீடு அனல்பறக்கும் வெப்பமண்டல வெயிலில் முழுக்க காய்ந்தாலும், குடியிருப்பவர்கள் வீட்டிற்குள் குளிர்ச்சியுடனும் சுகமாகவும் உணருகின்றனர். வேயப்பட்ட அந்தக் கூரை அவர்களை வெயிலிலிருந்து பாதுகாப்பது மட்டுமன்றி, வீட்டைக் குளிர்ச்சிப்படுத்த ஒரு தென்றலையும் உள்ளே செல்லும்படி அனுமதிக்கிறது. இதைவிட அதிக உறுதி வாய்ந்த ஒரு கூரையைக் கற்பனை செய்துபார்ப்பது கடினமாகும். முடையப்பட்ட தென்னை ஓலைகள் சுவர்களாகவும் வேலிகளாகவும் கதவுகளாகவும் நன்கு பயன்படுகின்றன.

“தேங்காய் மட்டைகளை நாம் மறந்துவிடவேண்டாம்,” என்று ஒரு பெருமித புன்சிரிப்புடன் மேலும் சொல்கிறார் ம்பாகா. “தரையில் பதித்துவைக்கப்பட்ட கூரான ஒரு மரத்தால் அல்லது இரும்பாலான பெரிய ஆணியின் மேல் தேங்காயைக் குத்துவதால் இவை கிடைக்கப்பெறுகின்றன. நாம் இரு கைகளாலும் தேங்காயை எடுத்து, அதைக் கீழ்நோக்கி அந்தப் பெரிய ஆணிக்கெதிராக குத்துகிறோம். குத்தினபின்பு மட்டையானது தேங்காயிலிருந்து தளர்த்தப்படும்படி திருப்புகிறோம்.” அந்த மட்டை அழகான ஒரு தங்கநிற நாரைக் கொடுக்கிறது. இந்த நாரைத் தரையில் விரிக்கும் பாய்கள், விரிப்புகள், கம்பளங்கள், ப்ரஷ்கள், துடைப்பங்கள் போன்றவை தயாரிப்பதற்கும் மெத்தைகளுக்குத் திணிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.

“ஒயினைவிட அதிக சுவைமிக்கது”

தேங்காய் உணவின் ஒரு முக்கிய பாகமாகவும் இருக்கிறது. அது பெரும்பாலும் வளரும் அதன் எல்லா பருவங்களிலும் உட்கொள்ளப்படுகிறது. இளநீர் (உள்ளூர் மொழியாகிய கிஸ்வாஹிலியில் டாஃபு என்று அழைக்கப்படுவது) சுத்தமான, முழுமையான, ஊட்டச்சத்து நிறைந்த, இதமான ஒரு சுவையுள்ள பானத்தைக் கொண்டுள்ளது. தேங்காயின் உச்சியில் வெறுமனே ஒரு துளையிடுவதன் மூலம் அந்தப் பானம் அதன் இயற்கைப் பாத்திரத்திலேயே பரிமாறப்படலாம்—வெப்பமண்டல தாகத்திற்கு சரியான ஒரு பானம்! புகழ்மிக்க கடற்பயணி மார்க்கோ போலோ, இந்தப் பானத்தைப்பற்றி இவ்வாறு சொன்னதாக அறிக்கைசெய்யப்படுகிறார்: “இந்தத் திரவம் தண்ணீரைப் போல தெளிவானதாகவும், குளிர்ந்ததாகவும் நல்ல நறுமணச்சுவை உடையதாகவும் ஒயினைவிட அல்லது வேறு எந்தவகை பானத்தையும்விட அதிக சுவைமிக்கதாகவும் இருக்கிறது.”

முதன்முறையாக இந்த உள்ளூர் பானத்தைப் பருகும்போது சுற்றுலாப் பயணிகள் அதே கருத்தைத்தான் அடிக்கடி வெளிப்படுத்துகின்றனர். அந்தத் திரவம் தீர்ந்ததும் உடைந்துபோன ஓட்டின் ஒரு பகுதியைப் பசைபோன்ற கதுப்பை சுரண்டியெடுக்க பயன்படுத்தலாம். இது மென்மையாக, இனிப்பாக, புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இளநீரின் அந்தச் சுவைமிக்க பண்டங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதுமையாக இருந்தாலும், கடற்கரைவாசிகளுக்கு அந்தப் பானம் ஓர் அனுதின பானமாக இருக்கிறது. குடிநீர் பஞ்சம் ஏற்படுகையில் அது பெரிதும் போற்றப்படுகிறது.

தேங்காய் பதார்த்தங்கள்

முதிர்ந்த தேங்காயின் மிக விலையுயர்ந்த பாகம் அதன் பருப்பு அல்லது கனியே ஆகும். அதை ஓட்டிலிருந்து எடுத்து அப்படியே சாப்பிடலாம், பல உணவுகளில் துருவிப்போடலாம், அல்லது அதன் மதிப்புள்ள பாலைப் பிரித்தெடுக்க பிழியலாம்.

கடி ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள்: “சிறுமியாயிருக்கையில், சமைப்பதற்கு எப்பொழுதும் தேங்காய்ப்பால் இருக்கும்படி நான் பார்த்துக்கொள்ளவேண்டும்.” பாரம்பரியமாகவே, மீன், கோழி, அவரைக்காய், அரிசி, உருளைக் கிழங்குகள், மரவள்ளிக் கிழங்குவகை, ரொட்டி போன்றவற்றின் நறுமணச்சுவையை அதிகரிப்பதற்காக தேங்காய்ப்பால் சேர்க்கப்பட்டுவருகிறது. இது குழம்பின் சுவையையும் முன்னேற்றுகிறது. ஆனால் கடி எவ்வாறு அந்தப் பாலைப் பெற்றாள் என்பதை அறிந்துகொள்ள நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம்.

“நாங்கள் ம்பூஸியைப் பயன்படுத்துவோம்,” கடி விளக்குகிறாள். ம்பூஸி என்பது கிஸ்வாஹிலியில் உள்ள ஒரு பேச்சு வழக்குச் சொல்லாகும். இது நிலத்திற்கு மேல் சுமார் 15 செட்டிமீட்டர் உயரத்திற்கு இருக்கும் ஒரு சிறிய மரப் பலகையைக் குறிக்கிறது. அதிலிருந்து நீண்டுகொண்டிருக்கும் ஒரு கூரான ரம்பத்தைப்போன்ற விளிம்பை அது கொண்டிருக்கிறது. இது கையினால் தேங்காயைத் துருவுவதற்கென்றே குறிப்பிட்டவகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. “அந்த ம்பூஸியின்மேல் உட்காருவது பிள்ளைகளுக்கு விளையாட்டாக இருக்கும். இரண்டாக உடைக்கப்பட்ட மூடித் தேங்காய் ஒன்றை எடுத்து, பருப்பு அத்தனையும் ஓட்டிலிருந்து வரும்வரை, அதன் உட்புறத்தை ரம்ப விளிம்பிற்கெதிரே நாங்கள் சுரண்டுவோம். அடுத்த படி என்னவென்றால் துருவிய தேங்காயை எடுத்து, தென்னை ஓலைகளால் செய்யப்பட்ட நீண்ட புணலைப் போன்ற ஒரு சல்லடையில் போடவேண்டும். அதன் பின்னர் அந்தச் சுவைமிக்க பாலை நாங்கள் பிழிந்தெடுப்போம்.”

தேங்காய் உண்மையிலேயே ஒரு கனிதான். இது மற்ற வெப்பமண்டல கனிகளுக்கு சரிசமமாக இருக்கும் ஒன்றாகும். புதிதாக நறுக்கப்பட்ட பப்பாளி, அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு, பேஷன் பழம் போன்ற கனிகளின்மேல் தூவப்பட்ட புதிதாக துருவிய தேங்காய் அல்லது கெட்டியாக்கப்பட்ட தேங்காய்ப்பாலைக் கொண்ட ஒரு பழவுணவை வெறுமனே கற்பனை செய்து பார்க்கும்போதே ஒருவருடைய சுவை மொட்டுகளில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

“ஒரு தென்னை மரத்தை நடுகிறவன் . . . தனக்கு உணவையும் பானத்தையும் ஓர் உறைவிடத்தையும் தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒரு சுதந்தரத்தையும் நடுகிறான்,” என்று ஒரு பழைய பழமொழி சொல்கிறது. சோம்பேறித்தனமாகத் தோற்றமளிக்கும் தென்னை மரம் இவ்வாறு சோம்பேறியாகவே இல்லை. அது உண்மையிலேயே மனிதனின் மிகப் பயனுள்ள மரமா இல்லையா என்று சர்ச்சை செய்யப்படலாம்; ஆனால் அது இந்த ஆப்பிரிக்கத் தேசத்தில் நிச்சயமாகவே ஒரு வளமார் கொம்பாக (horn of plenty) திகழ்கிறது! (g93 10/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்