புத்திக்கூர்மையுள்ள பொறியாளர்கள்
தென் ஆப்பிரிக்காவில் உள்ள விழித்தெழு! நிருபர்
இந்தப் பக்கத்தில் உள்ள படத்தில் விளக்கப்பட்டிருப்பதைப் போன்ற இயற்கை அமைப்புகளை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கறையான் புற்றுகள் ஆப்பிரிக்காவின் புல்வெளியில் உள்ள ஒரு பொதுவான காட்சியாக இருக்கின்றன. சில குறுகிய புகைப்போக்கிகளைப் போன்று வடிவமைக்கப்பட்டு சிலசமயங்களில் 6 மீட்டருக்கும் அதிக உயரமானதாக இருக்கின்றன. மற்றவையோ மண்ணினால் ஆன பெரிய வளைவு கூடாரங்களாகும். இவை சிங்கங்களைப் போன்ற கொன்று திண்ணும் விலங்குகளுக்குப் பதுங்கிக்கொள்வதற்கு வசதியான ஒரு மறைவிடத்தை அளிக்கின்றன.
ஒவ்வொரு புற்றின் உள்ளேயும் எண்ணற்ற பல நடைக்கூடங்களும் அறைகளும் இருக்கின்றன. இவற்றில் பல லட்சக்கணக்கான சிறு கறையான்கள் குடியிருக்கின்றன. சில கறையான்கள் தங்களுடைய சொந்த காளான் தோட்டங்களைப் பேணி பராமரிக்கின்றன. வறட்சியான ஆண்டுகளிலும்கூட அவற்றிற்கு நன்கு நீர்ப்பாய்ச்சி வைத்திருப்பதை சமாளிக்கின்றன. அது எப்படி முடிகிறது? 1930-களின் போது கடுமையான ஒரு வறட்சி தென் ஆப்பிரிக்கப் பகுதிகளைப் பாழாக்கின சமயம், இயற்கை நிபுணர் டாக்டர் யூஜீன் மாரே இரண்டு கறையான் வரிசைகளைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் ஒரு வரிசை இறங்குவதையும் மற்றொன்று ஏறுவதையும் கண்டார். அந்தச் சிறு படைப்புகள் சுமார் 30 மீட்டர் ஆழத்திற்குத் தோண்டியிருந்தன! அவை இயற்கை கிணறு ஒன்றைச் சென்றெட்டியிருந்தன. இவ்வாறு மாரே அவை தங்களுடைய காளான் தோட்டங்களை வறட்சிமிகுந்த ஆண்டுகளினூடே எவ்வாறு ஈரமாகவே வைத்திருப்பதைச் சமாளிக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.
கலஹாரி என்ற தனது புத்தகத்தில் மைக்கேல் மேன் விவரிக்கிறார், வழக்கமான ஒரு கறையான் புற்று “இந்த உலகில் எந்த விலங்கினால் கட்டப்பட்டதைப் பார்க்கிலும் மிகவும் முன்னேற்றமடைந்த உறைவிடம் என்று நம்பப்படுகிறது. . . . 100 சதவீத ஈரப்பதத்தையும் 29°C மற்றும் 31°C-க்கும் இடைப்பட்ட சுற்றுப்புற தட்பவெப்பநிலையையும் அடைந்து, காப்பதற்கு அவை அனைத்தும் முயற்சிக்கின்றன. இச்சீதோஷ்ண நிலையே காளான்களுக்கும் கறையான்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது. . . . ஒவ்வொரு புற்றும் திறம்பட்ட விதத்தில் பரிபூரணமாக குளிர்வசதி செய்யப்பட்ட ஓர் உறைவிடமாகும்.”
இப்போது இந்த உறைவிடங்கள் எவ்வாறு கட்டப்படுகின்றன என்பதைக் கவனியுங்கள். கறையான்கள் ஒரு சிறிய மணற்துகளைப் பாலீஷ் செய்து மற்றொன்றோடு ஒட்டிவைக்கின்றன. ஒரு புற்றை உருவாக்க எத்தனை லட்சம் மணற்துகள்கள் உபயோகிக்கப்படுகின்றன என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! “எகிப்தின் பிரமிடுகள், லண்டனின் நிலத்தடி இரயில்பாதை அமைப்பு, நியூ யார்க்கின் விண்தொடு கட்டடங்கள் போன்ற, இப்பூமியில் மனிதனால் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான கட்டடங்கள் . . . , இந்தக் கறையானின் படைப்புகளோடு ஒப்பிடுகையில், . . . மலைகளோடு ஒப்பிடப்பட்ட எலிப் புற்றுகளைப் போலவே இருக்கின்றன,” என்று தி சோல் ஆஃப் தி உவைட் ஆண்ட் என்ற தனது புத்தகத்தில் எழுதினார் மாரே. “அளவைக் கவனிக்கையில், மனிதனுடைய படைப்பு நாற்பது அடி உயரமுள்ள ஒரு கறையான் புற்றுக்கு நிகராக வேண்டுமானால், அவன் மேட்டர்ஹார்ன் [ஸ்விட்ஸர்லாந்திலுள்ள 14,692-அடி உயரமுள்ள ஒரு மலையுச்சி] உயரத்திற்கு ஒரு கட்டடத்தை எழுப்பவேண்டும்,” என்று அவர் தொடர்ந்து எழுதுகிறார்.
ஆனால் கறையான்கள் மனிதனுக்கு எவ்வகையில் பயனளிக்கின்றன? ஒரு பயன் என்னவென்றால் கறையான்கள் செத்த தாவரங்களை உட்கொண்டு இவ்வாறு அதிகமான கழிவுகளை அகற்றுகின்றன. “உலர்ந்த பொருளை நிலத்திற்கடியில் இழுத்துச் செல்வதன்மூலம் அவை தீ விபத்தைக் குறைப்பதுமட்டுமல்லாமல் நிலத்திற்கடியில் உள்ள மண்ணையும் வளமுள்ளதாக்குகின்றன,” என்பதாக க்ரூகர் தேசிய பூங்காவில் உள்ள ஓர் அறிவிப்புப் பலகை குறிப்பிடுகிறது.
சாதாரண அந்தக் கறையான்கள் புத்திக்கூர்மையுள்ள பொறியாளர்கள் என்றழைக்கப்பட தகுதிவாய்ந்தவைதான் என்று நீங்களும் ஒப்புக்கொள்ளலாம். (g93 11/08)