தனிச்சிறப்புள்ள மாட்டர்ஹார்ன்
ஸ்விட்ஸர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
“பூமி முழுவதிலும் ஒரே ஒரு மாட்டர்ஹார்ன்தான் இருக்கிறது; ஒரே ஒரு மலைதான் அப்பேர்ப்பட்ட சமநிலையான அளவுகளை உடையதாக இருக்கிறது. என்னே ஓர் அற்புதமான காட்சி!” இத்தாலியைச் சேர்ந்த மலையேறுபவராகிய க்வீடோ ரே இவ்வாறு சொன்னார்.
உண்மையில், மாட்டர்ஹார்ன் என்பது ஒரு அசாதாரணமான சிகரமாக, உலகிலேயே நன்கு அறியப்பட்ட மலைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பக்கங்களில் நீங்கள் காண்கிற நிழற்படம், இந்தக் கண்கவர் மலையை நீங்கள் கண்டிருக்கிற முதல் படமாக ஒருவேளை இருக்காது.
இத்தாலி-ஸ்விட்ஸர்லாந்து எல்லையில் இந்தக் கூம்புவடிவ மாட்டர்ஹார்ன் அமைந்திருக்கிறது; ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஸெர்மாட் என்ற கிராமத்திற்கு பத்து கிலோமீட்டர் தென்மேற்கில் இது இருக்கிறது; இந்தக் கிராமத்தின் பெயரை வைத்தே அந்தச் சிகரம் பெயரிடப்பட்டிருக்கிறது. அது 4,478 மீட்டர் உயரம் வரையாக வானில் சென்றெட்டுகிறது; மேலும் ஒன்றுக்கொன்று சுமார் 100 மீட்டர் விலகியுள்ள தொலைவில் இரு உச்சிகளைக் கொண்டிருக்கிறது.
சென்ட்ரல் ஆல்ப்ஸ் மலையின் பாகமாக இருந்தாலும், மாட்டர்ஹார்ன் தன்னருகே அயலார் யாருமின்றி தனித்து நிற்கிறது. எல்லா திசைகளிலிருந்தும் அந்த மலை பகட்டாகக் காட்சியளிப்பதற்கும் நிழற்படம் எடுக்க மிகவும் சாதகமான நிலையில் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது.
மாட்டர்ஹார்னை நாற்கட்டக் கம்பவடிவான மலை என்று சிலர் சரியாகவே விவரித்திருக்கின்றனர். ஒவ்வொரு பக்கமும் ஒரு உச்சியைக் கொண்டிருந்து தனியாகப் பிரிந்து நிற்பதாய், அது அந்த நான்கு பக்கங்களையும் நாற்றிசை முனைகளை நோக்கி வெளிக்காட்டுகிறது.
மாட்டர்ஹார்ன் அவ்வளவு உயரமாக இருக்கிறபோதிலும், எப்போதுமே பனியால் மூடப்பட்டதாக இல்லை. இளவேனிற்காலத்தின் பிற்பகுதியில் அதன் மேற்பகுதியிலுள்ள செங்குத்தான பாறையாலான சுவர்கள், தங்களது வெண்பனித்திரை மற்றும் பனிக்கட்டி மூடலைக் கதிரவனின் வெப்பத்திற்கு விட்டுக்கொடுத்துவிடுகின்றன. கீழே தாழ்ந்த பகுதியில், கிழக்கிலும் வடமேற்கிலுமுள்ள பனியாறுகள் அந்த மலையைச் சுற்றி அதன் இடுப்பில் ஓர் வெள்ளை அரைக்கச்சையைப்போல வருடம் முழுவதும் அணைத்து நிற்கின்றன.
வியந்து பாராட்டுகிறவர்கள் எத்தனையோ பேர், இந்த ஈடற்ற மலை எவ்வாறு தோன்றியது என்று வியந்திருக்கின்றனர். அது செதுக்கப்பட்டிருந்த பொருளின் மீதி என்று சொல்வதற்கு பாறைத்துண்டு குவியல்களொன்றையும் அதன் அடிவாரத்தில் காண முடியாது. அது நிலைத்திருக்கிற கணக்கற்ற ஆயிரக்கணக்கான வருடங்களின்போது, அப்பேர்ப்பட்ட பாறைத்துண்டுகள் ஏதாவது இருந்திருந்தால் அவை அடித்துச்செல்லப்பட்டிருக்கும். இந்த அழகிய காட்சிக்கு எப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள இயற்கை சக்திகள் காரணமாக இருந்திருக்குமோ!
ஆரம்ப குடியேற்றங்கள்
மாட்டர்ஹார்னின் அடிவாரத்துக்கு வழிநடத்துகிற ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்கு ஏற்கெனவே ரோம பேரரசாட்சியின் காலத்தில் குடியேற்றப்பட்டிருந்தது. பொ.ச.மு. 100-ல், ரோம தளபதி மாரியஸ் என்பவர் மாட்டர்ஹார்னின் கிழக்கே, 3,322 மீட்டர் உயரத்தில் டேயோடூல் கணவாயைக் கடந்தார். தெற்கிலிருந்து வடக்கிற்குச் சரக்குகளை அனுப்புவதற்கும் இந்த மலைப்பாதை இடைக்காலங்களில் பயன்படுத்தப்பட்டது.
அந்தக் காலங்களில் அங்கு குடியிருந்தவர்கள் மாட்டர்ஹார்னை பெரும் மதிப்புடனும், மூட நம்பிக்கை சார்ந்த பயத்துடனும்கூட நோக்கினர். பிசாசுதானே குடிகொண்டிருந்ததாக அவர்கள் எண்ணிய அந்த மலையில் ஏற அவர்கள் ஒருபோதும் முயலமாட்டார்கள்! வேறு யார்தான் பனிக்கட்டி மற்றும் உறைபனி சரிவுகளையும், வீடுகளையொத்த பெரிய பாறைகளையும் கீழே எறிந்துவிட முடியும்?
இயற்கை அறிவியலில் அதிகரித்துவரும் ஆர்வம்
பயத்தின் காரணமாக அந்தத் தாழ்மையுள்ள மக்கள் தவிர்த்த காரியம் பின்னர் இங்கிலாந்தின் உயர்குடி வகுப்பினர் மத்தியில் மிகவும் புதுப்பாணியானது. அறிவியல் ஆர்வம் வளர ஆரம்பித்து, நிலவியல், இடத்தியல்பு, தாவரவியல் போன்ற அறிவுத் துறைகளில் ஆய்வுகள் நடத்துவதற்காக ஆய்வாளர்களை மலைகளில் ஏற வைத்திருக்கிறது.
உண்மையில், 1857-ல் லண்டனில் ஆல்பைன் க்ளப் ஸ்தாபிக்கப்பட்டது; செல்வந்தராக இருந்த ஆங்கிலேயர் அநேகர், ஆல்ப்ஸ் மலையை ஏறுவதில் பங்கெடுப்பதற்காக இத்தாலி, பிரான்ஸ், அல்லது ஸ்விட்ஸர்லாந்துக்குப் பயணம்செய்தனர். துணிச்சலுள்ள வீரர்கள், மான் ப்ளாங் உட்பட, ஒவ்வொரு சிகரமாக ஏறினார்கள். 4,807 மீட்டர் உயரத்திலிருக்கும் இந்த மலை ஐரோப்பாவிலேயே மிகவும் உயர்ந்ததாக இருந்தாலும், மலையேறுகிறவர்களுக்கு மாட்டர்ஹார்னைவிட குறைந்தளவு கஷ்டத்தையே அளிக்கிறது.
இந்த முயற்சிகள் அத்தனையுமே இயற்கை அறிவியல் என்ற பெயரில் மட்டுமே செய்யப்படவில்லை. புகழார்வமும் மெதுவாக வர ஆரம்பித்தது. முதன்மையாக, மிகவும் தைரியமாக, மிகவும் கடினமாக இருப்பதற்கான புகழ் ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில், “விளையாட்டு” என்ற வார்த்தை பிரதானமாக மலையேறுதலையே குறித்தது.
1865-ன் கோடைகாலம், மலை ஏறுதலில், விசேஷமாக மாட்டர்ஹார்னைக் குறித்ததில் மிகவும் சுறுசுறுப்பான ஒன்றாக இருந்தது. வெல்லமுடியாததாக இருந்த இறுதியான சிகரங்களில் ஒன்று, ஈர்க்கக்கூடிய இந்தக் கூம்புவடிவ சிகரமாகும். இது சென்றெட்டப்பட முடியாததாகக் கருதப்பட்டது; உள்ளூர் வழிகாட்டிகள் முயலுவதற்குக்கூட மறுத்தார்கள். அவர்களுடைய மனநிலை இவ்வாறு இருந்தது, ‘எந்தவொரு சிகரத்தையும் ஏறிவிடலாம்—ஆனால் அந்த ஹார்னை அல்ல.’
என்றபோதிலும், மாட்டர்ஹார்ன் மீது வெற்றி தவிர்க்கமுடியாததாக இருந்தது. ஆரம்ப 1860-களில், ஆல்ப்ஸைச் சேர்ந்த அநேக மலைச் சிகரங்கள் மீது வெற்றி காணப்பட்டது. மலையேறுகிறவர்கள் அனுபவத்தின் மூலமாகக் கற்றுக்கொண்டு, புதிய வழிமுறைகளை உருவாக்கினர். ஆல்ப்ஸ் மலைப்பற்றிய பொருளையுடைய ஒரு புத்தகத்தில் சித்தரிப்பதற்காக அக்காட்சிகளின் படங்களை வரையும்படி இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் விம்பர், 20 வயதில், லண்டனிலுள்ள பதிப்பாசிரியர் ஒருவரால் ஸ்விட்ஸர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். விம்பர் மலைகளால் ஈர்க்கப்பட்டார்; மேலும் மலை ஏறுதல் அவருக்கு பேரார்வத்திற்குரியதாக ஆனது. பிரான்ஸிலும் ஸ்விட்ஸர்லாந்திலும் அவர் அநேக சிகரங்களை ஏறுவதில் வெற்றி கண்டார்; மாட்டர்ஹார்னை ஏறுவதற்கும் பல முயற்சிளை மேற்கொண்டார். ஆனால் ஹார்னை ஏற முடியவில்லை.
மாட்டர்ஹார்ன் மீது வெற்றி!
முடிவாக, ஜூலை 1865-ல் மூன்று வித்தியாசப்பட்ட மலையேறும் தொகுதிகள் ஸெர்மாட்டில் சந்திக்க நேர்ந்தது—இவை மூன்றுமே மாட்டர்ஹார்ன் மீது ஏறும் தீர்மானத்துடன் இருந்தவை. இத்தாலிய தொகுதி ஒன்று அவர்களை முந்திக்கொண்டு சென்றுவிடக்கூடும் என்பதால் அதிக நேரம் இல்லாதவர்களாக, அந்த மூன்று தொகுதிகளும் ஒரு கார்டேயாக, அல்லது கயிறால் ஒன்றிணைக்கப்படும் மலையேறுகிறவர்களின் ஒரு தொகுதியாகும்படி தீர்மானித்தனர். அந்தத் தொகுதி ஏழு பேராலானது—எட்வர்ட் விம்பரும் ப்ரான்ஸிஸ் டக்லஸ் பிரபுவும், சார்ல்ஸ் ஹட்ஸனும் அவருடைய இளம் நண்பர் ஹாடோவும்—இவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்—அவர்களுடன் அவர்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்வதில் வெற்றி அடைந்த, ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த இரண்டு வழிகாட்டிகள் மற்றும் பிரெஞ்சு வழிகாட்டி ஒருவர் ஆகியோர்.
ஜூலை 13 அன்று காலை ஸெர்மாட்டை விட்டு புறப்பட்டு, கிழக்கு திசையிலிருந்து அந்த மலையை அவர்கள் அவசரமின்றி வந்தடைந்து, அதன் கீழ் பாகங்கள் ஏறுவதற்கு ஓரளவு சுலபமாக இருப்பதைக் கண்டார்கள். சுமார் 3,300 மீட்டர் உயரத்தில் அவர்கள் கூடாரம் போட்டு, சூரியவொளி வீசிய அந்த நாளின் மீதி பொழுதை சாவகாசமாக அனுபவித்தார்கள்.
அடுத்த நாள் காலை, ஜூலை 14 அன்று, பொழுது விடியும் முன்னர் அவர்கள் ஏறத் தொடங்கினார்கள். அவ்வப்போது மட்டுமே கயிறு தேவைப்பட்டது. சில பாகங்கள் மற்றவற்றைவிட அதிக கடினமாக இருந்தன, ஆனால் மிகக் கடுமையான தடங்கல்களை மேற்கொள்வதற்கு பெரும்பாலும் அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். இருமுறை இடையில் ஓய்வெடுத்தப் பின்னர், அவர்கள் மிகவும் முடிவுக்கட்டமான பகுதியைச் சென்றெட்டினார்கள். கடைசி 70 மீட்டர் ஒரு பனிவயலைக் கொண்டிருந்தது; பிற்பகல் 1:45-க்கு அவர்கள் உச்சியை அடைந்தார்கள். மாட்டர்ஹார்ன்மீது வெற்றிசிறக்கப்பட்டது!
அந்த உச்சி, மனிதர்கள் அங்கு சென்றிருந்ததாக எவ்விதத் தடயங்களையும் கொண்டிருக்கவில்லை; ஆகவே அவர்கள்தான் முதலாவதாக இருக்கவேண்டும். எப்பேர்ப்பட்டதோர் உணர்ச்சி! வெற்றிசிறந்த அந்தத் தொகுதி, சுமார் ஒரு மணிநேரத்திற்கு, ஒவ்வொரு திசையிலிருந்தும் கிளர்ச்சியூட்டக்கூடிய காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்; பின்னர் அவர்கள் இறங்குவதற்குத் தயாரானார்கள். அதே நாளில் அந்த ஏற்றத்தை ஏற முயன்றுகொண்டிருந்த இத்தாலிய மலையேறும் வீரர்கள் மிகவும் பின்னால் இருந்து, தாங்கள் பந்தயத்தில் தோற்றுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததும் மேலுமாகத் தொடரவில்லை.
மிகவும் அதிக விலை
ஆயினும், அந்த மலையேறியவர்களின் வெற்றி அவர்களிடம் மிகவும் அதிக விலையைக் கேட்கப்போவதாக இருந்தது. இறக்கத்தில் ஒரு கடுமையான வழியை வந்தடைந்ததும், அவர்கள் கயிறால் ஒன்றிணைக்கப்பட்டனர்; மிகவும் அனுபவமுள்ள வழிகாட்டி முன்னால் செல்பவராக இருந்தார். அவர்கள் எச்சரிக்கையாய் இருந்தபோதிலும், அவர்களில் இளையவர் சறுக்கி தனக்குக் கீழே சென்றவர்மீது விழுந்து, தனக்குப் பின்னால் மேலே வந்துகொண்டிருந்தவர்களையும் தன்னுடன் இழுத்துச் சென்றார். ஒரு அலறல் ஒலியால் எச்சரிப்பூட்டப்பட்டவர்களாக, கடைசியில் வந்த மூன்று பேரும் சில பாறைகளைப் பிடித்து நிற்க முடிந்தது. ஆனால் அந்த கயிறு அறுந்து, ஒரு நொடியில் அந்த முதல் நான்கு பேரும் செங்குத்தான பாறை வழியாகக் கீழே விழுந்து மறைந்துவிட்டனர்.
உணர்ச்சியிழந்தவராக, எட்வர்ட் விம்பரும் ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் இருவரும் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தனர். அவர்கள் வெட்டவெளியில் இரவைக் கழித்துவிட்டு, அடுத்த நாள் ஸெர்மாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறாக அந்நாளின் மகிமை சீக்கிரத்தில் ஒரு பேரழிவாக மாறியது; தப்பிப்பிழைத்தவர்களை அவர்களுடைய மீதி வாழ்க்கை முழுவதும் பாதித்த ஒரு தழும்பை அது ஏற்படுத்தியது.
அந்த விபத்து சம்பவித்த இடத்திலிருந்து 1,200 மீட்டர் கீழே ஒரு பனியாறிலிருந்து நான்கு பிணங்களில் மூன்று பின்னர் கண்டெடுக்கப்பட்டன. நான்காவது, டக்ளஸ் பிரபுவுடையது ஒருபோதும் கண்டெடுக்கப்படவில்லை.
மாட்டர்ஹார்ன் சரிவுகளின் இறுதியான பலியாட்கள் இவர்கள் மட்டுமல்லர். பாறையாலான சுவர்கள் மற்றும் இடுக்கமான பிளவுகளின் வழியாக அல்லது அவற்றின் குறுக்கே செல்லும் பல்வேறு பாதைகளில் அநேக கயிறுகள் பாறையில் உறுதியாகப் பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறபோதிலும், மலை ஏறுகிறவர்கள் அதிகப்படியான அனுபவத்தையும் பெரிதும் முன்னேற்றுவிக்கப்பட்ட சாதனங்களையும் கொண்டிருக்கிறபோதிலும், இந்த மலையில் மட்டுமே சுமார் 600 மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அபாயங்கள்
அபாயத்திற்குப் பெரிதும் காரணமாயிருக்கும் ஒரு காரியம், வானிலையாகும். அது மிகவும் விரைவாக மாறக்கூடும். ஒரு நாள் இனிய ஒன்றாகப் புலரக்கூடும்; ஆனால் அதைக் குறித்து ஒருவர் உணர்வதற்குள், அடர்த்தியான மூடுபனி அல்லது கனத்த இருண்ட மேகங்கள் அந்த கூம்புவடிவ மலையைச் சூழ்ந்துகொள்ளலாம், அச்சுறுத்தும் புயலும் ஏற்படலாம். இது பயமுறுத்தக்கூடிய மின்னலோடும் இடியோடும் கூடவும், பனிப்புயல் மழையுடனும் சேர்ந்துவந்து, பலத்த பனி பெய்வதில் விளைவடையக்கூடும். இவையனைத்தும் ஓர் இனிய கோடைகால நாளில் சம்பவிக்கக்கூடும்!
மலை ஏறுகிறவர்கள் அப்படிப்பட்ட சூழ்நிலை மாற்றங்களால் எதிர்பாராமல் தாக்கப்பட்டால், அவர்கள் அன்றிரவை வெட்டவெளியில் கழிக்கவேண்டியிருக்கலாம்; நிற்கவே முடியாத ஒரு சிறிய திட்டில் ஒருவேளை நிற்க வேண்டியிருக்கலாம். வெப்பநிலை உறைநிலைக்கு மிகவும் குறைவாக சென்றுவிடலாம். கீழே படுபாதாளம் இருக்கிறது. அப்போது தூரத்திலிருந்து மட்டும் மாட்டர்ஹார்னைக் கண்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்குமென்று ஒருவர் விரும்பக்கூடும்!
மற்றொரு அபாயம் வீழ்கற்கள். சில சமயங்களில், யோசிக்காமல் செயலாற்றும் மலை ஏறுகிறவர்கள்தாமே சில கற்களை விழவைக்கலாம். என்றாலும், பெரும்பாலான நேரங்களில் இவை இயற்கையாக ஏற்படுகின்றன. வெப்ப நிலையில் மாற்றங்கள், பனிக்கட்டி, பனி, பலத்த மழை, கடும்வெயில், அவற்றுடன்கூட ஹார்னைச் சுற்றி வீசிக்கொண்டிருக்கும் பலத்த காற்றுகள் ஆகிய அனைத்தும் பாறைகளைத் தாக்கி, பெரிய துண்டுகளைப் பெயர்ந்துவிடச் செய்கின்றன. அவை தகடுகளின் பெரிய குவியலைப் போல வருடக்கணக்காக சிலவேளைகளில் அவற்றின் இடத்திலேயே இருக்கின்றன; ஆனால் பனிப்பாறை சரிவுகள் முடிவில் அவற்றை நகர்ந்து, விழச்செய்யக்கூடும்.
இந்தக் காரியம் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறபோதிலும், வடிவத்தில் எந்த மாற்றத்தின் அறிகுறிகளையும் இந்த மலை காண்பிக்காமல் அதன் ஒடுங்கிய கூம்பு வடிவத்தைக் காத்து வருவதைக் குறித்து மலை ஏறுகிறவர்கள் அநேகர் வியந்திருக்கின்றனர். என்றாலும், 250 கோடி கனசதுர மீட்டர் பாறை என்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள அளவுடன் ஒப்பிடுகையில், வீழ்கற்கள் அதன் வடிவத்தை மாற்றும் அளவுக்கு குறிப்பிடத்தக்கவையாக இல்லை. என்றபோதிலும், அவை சேதத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன.
அதேநேரத்தில், மாட்டர்ஹார்ன் மலையில் ஏறுதல் அநேகர் மத்தியில் பிரபலமாகி வருகிறது. சில வழிகாட்டிகள் நூற்றுக்கணக்கான தடவைகள் அதன் உச்சிக்குச் சென்றிருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பாதையைத் தெரிந்துகொண்டு, அநேக ஆண்களும் பெண்களும் அந்த சாகசத்தை மீண்டும் தொடருகிறார்கள்.
ஆனால் ஏற முயன்று, பின்னர் தங்கள் சூழ்நிலைகள் சாதகமற்றவை என்று அல்லது தங்கள் சொந்த திறமை, உடல் நிலைமை, அல்லது பயிற்சி போதுமானதாக இல்லை என்று உணர வருகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஏறுவதைத் தொடராமல், மாட்டர்ஹார்னை “ஏறிவிட்டோம்” என்ற பெயரைப் பெறுவதற்கும் மேலாக பகுத்தறிவு மேலோங்கி நிற்கும்படி அனுமதிக்கிறார்கள்.
என்னவாயினும், இந்தக் கண்கவர் மலையை நீங்கள் நிழற்படங்களில் அல்லது திரைப்படங்களில் கண்டிருந்தாலும் சரி, அல்லது சூரிய உதயம் அல்லது சூரிய மறைவின்போது அதன் ஒளிவண்ணமிக்க வண்ணக்கலவைகளை ரசித்துக்கொண்டு அதனருகில் நின்றிருந்தாலும் சரி, மகா சிற்பக்கலைஞரைக் குறித்து நீங்கள் நினைவூட்டப்பட்டிருக்கக்கூடும். அவருடைய கைவேலைக்கு ஆழ்ந்த மதிப்புடன், உங்கள் இருதயமும் சங்கீதம் 104:24-ன் வார்த்தைகளை நன்கு எதிரொலித்திருக்கக்கூடும்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.”