கிளிமஞ் சாரோ—ஆப்பிரிக்காவின் கூரை
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஆப்பிரிக்காவின் உட்பகுதி கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்புக்கூட பெருமளவில் அறியப்படாமல் இருந்தது. வெளி உலகத்திற்கு இந்த மாபெரும் கண்டம் ஆய்வு செய்யப்படாததாகவும் விளங்கா புதிராகவும் இருந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வெளிவந்த அநேக கதைகளில் ஒன்று, விசேஷமாக ஐரோப்பியர்களுக்கு விசித்திரமாக தோன்றியது. அது ஜெர்மன் மிஷனரிகளான யோஹான்னஸ் ரேப்மான் மற்றும் யோஹன் எல். கிராஃப் என்பவர்கள் 1848-ல் பூமத்தியரேகைக்கு அருகே பனி அடர்ந்த வெண்மையான சிகரத்தை உடைய மிக உயரமான ஒரு மலையைப் பார்த்ததாக சொன்ன அறிக்கையே அதற்கான காரணம்.
வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் பனிமூடிய மலை ஒன்று இருக்கிறது என்ற கதை, சந்தேகத்திற்குரியதாக மட்டுமல்ல கேலிக்குரியதாகவும் கருதப்பட்டது. இருப்பினும் ஒரு பிரமாண்டமான மலையைப் பற்றிய விவரங்கள் புவியியல் நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆர்வத்தையும் அக்கறையையும் தூண்டின. காலப்போக்கில் அவர்கள் அந்த மிஷனரிகளின் அறிக்கையை உறுதிப்படுத்தினார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் கிளிமஞ்சாரோ என்றழைக்கப்பட்ட பனிமூடிய எரிமலை ஒன்று உண்மையில் இருந்தது. அது, “மாபெரும் மலை” என்று அர்த்தப்படுவதாக சில மக்கள் புரிந்துகொண்டனர்.
ஆப்பிரிக்காவின் “கூரை”
இந்த மாபெரும் கிளிமஞ்சாரோ, கண்ணைப் பறிக்கும் அதனுடைய அழகிற்காகவும் பிரமாண்டமான உயரத்திற்காகவும் இன்று புகழ்பெற்று விளங்குகிறது. மேய்ந்து திரியும் யானைக்கூட்டம் ஒன்று வறண்ட, புழுதிநிறைந்த ஆப்பிரிக்க சமவெளிகளை கடந்து செல்கையில் பின்னே தூரத்தில் பிரமாண்டமான கம்பீரத்துடன் பனிமூடிய “கிளி” கவர்ச்சியூட்டும் பின்திரை போன்று இருப்பது நினைவில் நிற்கும் கண்ணுக்கினிய சில காட்சிகளில் ஒன்றாகும்.
கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயரமான மலையாகவும், உலகிலுள்ள உறங்கிக்கொண்டிருக்கும் மிகப் பெரிய எரிமலைகளில் ஒன்றாகவும் உள்ளது. அது டான்ஜானியாவில் பூமத்தியரேகைக்கு சற்று தெற்கேயும் கென்யாவின் எல்லைப்பகுதிக்கு அடுத்ததாகவும் அமைந்துள்ளது. இங்கே பூமி 400 கோடி கனசதுரமீட்டர் அளவாக எரிமலைத் துகள்களை வெளியேற்றி, மேகத்துக்குள் உறவாடும் சிகரங்களை இந்த மலை உருவாக்கியுள்ளது.
இந்த மலை தனித்து நிற்பதால், அதனுடைய பிரமாண்டமான அளவு சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. கடல்மட்டத்திற்கு மேலே சுமார் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வறட்சியான மாஸய் அடர்ந்த குறுங்காட்டிலிருந்து எழும்பி, பிரமாண்டமான 5,895 மீட்டர் உயரத்தில், அது தன்னந்தனியாக ஒட்டாமல் நிற்கிறது! கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் கூரை என்று சிலசமயங்களில் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல.
கிளிமஞ்சாரோ “வாணிகக் கூட்டத்தார் மலை” என்பதாகவும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அதனுடைய மிகப்பெரிய பனிமூடிகளும், பனிப்பாறைகளும் வெண்மையாக பிரகாசிக்கும் கலங்கரை விளக்கத்தைப்போல, எந்த திசையிலிருந்தும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கும் அப்பால் காணப்படக்கூடியதாக உள்ளது. கடந்த நூற்றாண்டுகளில், ஆப்பிரிக்காவின் உட்புற வனப்பகுதிக்குள்ளிருந்து தந்தம், பொன், அடிமைகள் போன்ற சரக்குகளை கொண்டுசென்ற வாணிகக் கூட்டத்தினரின் பாதையை அதனுடைய பனிமூடிய உச்சி அதிகமாக வழிநடத்தி வந்தது.
அதன் பிரமாண்டமான சிகரங்கள்
கிளிமஞ்சாரோ இரண்டு எரிமலைச் சிகரங்களால் ஆனது. கிபோ அதன் முக்கியமான எரிமலைச் சிகரமாக உள்ளது; அதன் அழகிய, ஒரே சீரான அமைப்பைக் கொண்ட கூம்பு எப்போதுமே பனிக்கட்டியாலும் உறைபனியாலும் மூடப்பட்டுள்ளது. கிழக்கேயுள்ள மாவென்சி என்ற பெயருடைய இரண்டாவது சிகரம், 5,150 மீட்டர் உயரமாக எழும்பி நிற்கிறது, மேலும் அதுதானே கிபோ மற்றும் மவுண்ட் கென்யாவுக்கு அடுத்ததாக ஆப்பிரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய சிகரமாக இருக்கிறது. மென்மையாகவும் சரிவாகவும் உள்ள கிபோவின் பக்கங்களுக்கு மாறாக, மாவென்சி சொரசொரப்பான, அழகாக செதுக்கப்பட்ட உச்சியுடன் எல்லா பக்கங்களிலும் செங்குத்தான, கூர்மையான பாறைச் சுவர்களைக் கொண்டுள்ளது. கிபோ மற்றும் மாவென்சியின் சிகரங்கள் 4,600 மீட்டரில், பரந்த, கற்பாளங்கள் சிதறியுள்ள சரிவான சமவெளியில் இணைக்கப்பட்டுள்ளன. கிபோவுக்கு மேற்கே நிற்கும் ஷீரா, அதிக காலமாக நீராலும் காற்றாலும் அரிக்கப்பட்டுவரும் ஒரு பழைய எரிமலையின் தகர்ந்த மீதிபாகமாக இருக்கிறது. இப்போது, கடல்மட்டத்திற்கு 4,000 மீட்டருக்கு மேலே, திகைக்கவைக்கும் தரிசுநிலப் பீடபூமியை உருவாக்கியுள்ளது.
வாழ்க்கைச்சூழலுக்கேற்ற ஒரு சிறந்த படைப்பு
கிளிமஞ்சாரோவின் சூழலியல் உயரம், மழைபொழிவு, மற்றும் தாவரவளர்ச்சியால் வேறுபட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்படுகிறது. அதன் தாழ்ந்த சரிவுகள் மாசுபடாத வெப்பமண்டலக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. அங்கே யானைக் கூட்டங்களும், கேப் எருமைகளும் சுற்றித்திரிகின்றன. காட்டு மரங்களின் மேலே உயரத்தில் பலதரப்பட்ட குரங்கு வகைகள் வசிக்கின்றன, மேலும் சில சமயங்களில், ஒரு பயந்த மலைப்புதர் மானோ, மறிமானோ திடீரென்று தோன்றி அடர்ந்த புதர்க்காடுகளுக்குள் வேகமாக ஓடி மறைவதை அங்கு செல்பவரால் காணமுடியும்.
காட்டுப்பகுதிக்கு மேலே குட்டைப் புதர்ச்செடி பிரதேசம் (heather zone) உள்ளது. பழைய வைரம்பாய்ந்த மரங்கள், காலத்தாலும் கடுமையான காற்றாலும் திருகி நிற்கிறது. திரைகளைப்போல தொங்கிக் கொண்டிருக்கும் அவற்றின் மரப்பாசிகள் வயதானவர்களின் நீண்ட நரைத்த தாடிகளைப்போல தோற்றமளிக்கின்றன. இங்கே இந்த மலைப்பகுதி விரிவடைவதால், இராட்சத குட்டை மரங்கள் செழித்து வளருகின்றன. பளிச்சிடும் நிறமுள்ள பூங்கொத்துக்கள் புல்திடல்களின் மீது சிதறியிருப்பது, அந்த நாட்டுப்புறப்பகுதியை அழகுபொங்கும் காட்சியாக தோற்றமளிக்கச் செய்கிறது.
மரங்களடங்கிய இப்பகுதிக்கு மேலே இன்னும் உயரத்தில், தரிசுநிலங்கள் காட்சியளிக்கின்றன. அங்கே, மரங்களுக்குப் பதிலாக, அசாதாரணமாக காட்சியளிக்கும் நான்கு மீட்டர் உயரத்திற்கு வளரும் சூரியகாந்தி குடும்ப வகையைச்சேர்ந்த இராட்சத செடிகளும் (giant groundsels), பெரிய முட்டைக்கோஸ் அல்லது முள்ளினக்கிழங்கு வகையைப் போலத்தோன்றும் காட்டுப் புகையிலைச் செடிகளும் (lobelias) இருக்கின்றன. சிதைந்த பாறைகள் மற்றும் வெளித்தெரியும் பாறைகளைச் சுற்றிலும் வளரும் என்றும் வாடா மலர்கள், வைக்கோலைப் போலவும் தொட்டால் வறண்டும் இருக்கும். பளிச்சிடும் வெண்சாம்பல் நிறத்தில் காட்சியளித்து நிற்கும் இடத்திற்கு இவை ஒருவித நிறத்தைக் கூட்டுகின்றன.
தரிசுநிலங்களுக்கு இன்னும் மேலே உயரத்தில் ஆல்ப்ஸ்மலை செடியின பிரதேசங்கள் உருவாகியுள்ளன. அந்தப் பகுதி மங்கலான நிறத்தில் கறும்பழுப்பும் சாம்பலும் கலந்த வண்ணத்தில் இருக்கிறது. அடர்த்தியற்ற வறண்ட இந்தச் சூழலில் சிலவகைச் செடிகள் மட்டுமே வளரமுடியும். இந்த இடத்தில் இரண்டு முக்கியமான சிகரங்களான கிபோவும் மாவென்சியும், வறட்சியானதும் பாறைகளடங்கியதுமான அதிக உயரமுள்ள வறண்ட நிலப்பரப்பின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வெப்பநிலை உச்ச அளவாக உள்ளது, பகலில் 38 டிகிரி செல்ஸியஸ் வரையிலுமாக எட்டியும் இரவிலோ திடீரென உறைநிலைக்கும் கீழே சென்றுவிடுகிறது.
முடிவாக நாம் உச்சி பிரதேசத்தை அடைவோம். இங்கேயுள்ள காற்று குளிர்ச்சியாகவும் சுத்தமாகவும் உள்ளது. கருநீலமான வானங்களுக்கு நேராக, வெண்மையாகவும் தெளிவாகவும் நிற்கும் உயர்ந்த பனிக்கட்டிப்பாளங்களும் பனிப்பரப்புகளும் அந்த மலையின் கருமையான தரிசுநிலத்திற்கு மாறாக அழகு கொழிக்கின்றன. காற்று ஈரப்பதமுள்ளதாகவும் கடல்மட்டத்தில் காணப்படும் பிராணவாயுவின் அளவில் பாதியை மட்டுமே கொண்டுள்ளது. கிபோவின் தட்டையான சிகரத்தின் உச்சியில் எரிமலைவாயில் உள்ளது, அது ஏறக்குறைய முழுவட்டமாகவும் 2.5 கிலோமீட்டர் விட்டத்தையும் கொண்டுள்ளது. எரிமலைவாயிலின் உள்ளுக்குள்ளே, மலையின் மையப்பகுதியிலேயே ஒரு பெரிய சாம்பல் குழி உள்ளது. அது குறுக்கே 300 மீட்டர் அளவுக்கு மேலாகவும் எரிமலையின் நுழைவுப் பகுதிக்குள்ளிருந்து 120 மீட்டர் ஆழமாகவும் உள்ளது. அனலான கந்தகப்புகை சிறிய சந்துகள் (புகைப்போக்கிகள்) வழியாக வெளிவந்து குளிர்ந்த காற்றுக்குள் மெதுவாக எழும்பும்போது, தூங்கிக்கொண்டிருக்கும் எரிமலை உள்ளே ஆழத்தில் குமைந்து கொண்டிருப்பதற்கு சான்றளிக்கிறது.
கிளிமஞ்சாரோவின் பிரமாண்டமான அளவும், பருமனும் அதற்கே உரிய சீதோஷணத்தை உண்டுபண்ணிக்கொள்ள அதை அனுமதிக்கின்றன. குறைந்த மழையுள்ள தாழ்நிலங்களுக்கு குறுக்கே, இந்தியப் பெருங்கடலிலிருந்து நில உட்பகுதியை நோக்கி ஈரப்பதமுள்ள காற்று வீசுகிறது; இக்காற்று மலையின்மீது மோதி, திசையை மேல்நோக்கி மாற்றுகிறது. அங்கே அது உறைநிலையை அடைந்து மழையை பொழிகிறது. இது, அதன் தாழ்ந்த சரிவுகளை காப்பி பயிரிடுவதற்கும், மலையின் அடிவாரத்தை சுற்றிலும் வாழும் மக்களுக்கு வேண்டிய உணவுப்பயிர்களை விளைவிப்பதற்கும் ஏற்றவாறு செழிப்பாக்குகிறது.
‘கிளியை’ சென்றெட்டுதல்
கிளிமஞ்சாரோவின் சுற்றுப்புறங்களில் வாழும் மக்கள் அதனுடைய சரிவுகளை கெட்ட ஆவிகளின் குடியிருப்பு என்றும், அதனுடைய பனிநிறைந்த உச்சியை அடைவதற்கு முயலும் எவருக்கும் கெடுதி விளைவிக்கும் என்றும் மூடநம்பிக்கை கொண்டிருந்தனர். இது அதனுடைய உச்சியை அடைய முயலுவதிலிருந்து உள்ளூர் மக்களைத் தடுத்தது. 1889-ல் இரண்டு ஜெர்மானிய ஆய்வுப்பயணிகள் மலையின் மீது ஏறி, ஆப்பிரிக்காவின் உயரமான சிகரத்தின் உச்சியில் நிற்கும்வரையிலுமாக அவ்வாறே இருந்தது. மலையேற்றத்தில் இன்னும் அதிக அனுபவத்தையும் திறமையையும் தேவைப்படுத்திய இரண்டாவது சிகரமான மாவென்சியை, 1912-ம் ஆண்டு வரையிலுமாக எட்ட முடியவில்லை.
இன்று நல்ல உடல்நிலையிலுள்ள அனைவருக்கும் கிளிமஞ்சாரோவில் ஏறும் அனுபவம் திறந்துள்ளது. மேலும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயணம் செய்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாயுள்ளது. டான்ஜானியாவின் தேசிய பூங்காத்துறை அதிகாரிகள் மலை ஏற விரும்புகிறவர்களுக்காக நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர். உடையும் உபகரணங்களும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம். பயிற்சிபெற்ற கூலியாட்களும் வழிகாட்டிகளும் கிடைக்கின்றனர். மேலும் மலையேற்றப் பயணத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரையிலுமாக அநேக தங்கும் விடுதிகள் வசதியான தங்குமிடங்களை அளிக்கின்றன. நன்கு கட்டப்பட்ட குடிசைகள் மலையின் வித்தியாசப்பட்ட உயரங்களில் அமைந்துள்ளன; இவை ஏறுபவருக்கு தூங்குவதற்கான இடவசதிகளையும் தங்குமிடங்களையும் அளிக்கின்றன.
கிளிமஞ்சாரோவை நேரிலேயே பார்ப்பது, பிரமிப்பூட்டுவதாகவும் சிந்தனையைத் தூண்டியெழுப்புவதாகவும் உள்ளது. கடவுளைப் பற்றிய இந்த வார்த்தைகளை ஒருவர் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடும்: ‘உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்துகிறீர்.’ (சங்கீதம் 65:6) ஆம், ஆப்பிரிக்காவுக்கு மேலே உயரமாகவும் தனித்தும் இருக்கும் கிளிமஞ்சாரோ மகத்தான படைப்பாளரின் வல்லமைக்கு மேன்மையான சாட்சிபகர்ந்துகொண்டு நிற்கிறது.
[பக்கம் 16-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆப்பிரிக்கா
கென்யா
கிளிமஞ்சாரோ
டான்ஜானியா