மலைகள்—படைப்பின் அருவேலைப்பாடுகள்
ஆண்டிஸ் மலைத்தொடர், காஸ்கேட் தொடர், இமயமலை, ராக்கி மலைகள், ஆல்ப்ஸ், யூரல் மலைகள் ஆகியவை கிரக பூமியில் உள்ள ஒருசில மலைகளே. இந்த மலைகளின் பிரமாண்டமான அளவு உங்களை அசத்த வைக்கும்.
எவரெஸ்ட் மலைக்கு முன்பு நிற்பதாக கற்பனை செய்துபாருங்கள். 8,848 மீட்டர் உயரத்தையுடையதாய் பூமியின் கண்காட்சியாக திகழக்கூடிய, ஒன்பது கிலோமீட்டர் உயரமுள்ள நினைவுச் சின்னம்! மேலும் இந்த ஒரு சிகரந்தானே கண்ணைப்பறிக்கும் இமயமலையின் சிறிய பாகமாகத் திகழ்கிறது. 70 சிகரங்களுக்கும் மேலாக ஒவ்வொன்றும் திகைக்கச் செய்யுமளவுக்கு 6,400 மீட்டரை எட்டுவதாக, இந்த மலைத்தொடர் ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸைவிட அளவில் இரட்டிப்பாக இருக்கிறது!
தனித்தன்மை வாய்ந்த உயிர்வாழ் மண்டலங்கள்
பெரும்பான்மையான மலைகள் பலவாறான உயிர்வாழ் மண்டலங்களை அல்லது சூழ்நிலை மண்டலங்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் இது ஏனென்றால் ஒவ்வொரு 300 மீட்டர் உயரத்திற்கும் சீதோஷ்ண நிலை 1.8 டிகிரி செல்சியஸ் குறைகிறது. மழை, நிலம், காற்று ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பதுங்கூட ஒவ்வொரு மண்டலத்தையும் தனித்தன்மை வாய்ந்ததாக்குகிறது.
அத்தகைய வெவ்வேறான சூழ்நிலைகளுக்கு எடுத்துக்காட்டாக அ.ஐ.மா.-வின் அரிஜோனாவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ சிகரங்களாகும். அந்த நாட்டில் அவையே அதியுயர்வான மலைகளாகும். கோகனினோ பீடபூமியண்டையிலுள்ள மலைகளின் அடிவாரத்திலிருந்து துவங்கி சான் பிரான்ஸிஸ்கோ சிகரங்களிலுள்ள ஓர் உச்சிக்கு ஏறினால், பாலைவன சூழலில் பல்லிகளையும் கற்றாழைகளையும் உள்ளடக்கும் சூழலிய சமுதாயத்தை முதலில் நீங்கள் காண்பீர்கள். போகப்போக உயிர்வாழ் குளிர்மண்டலங்களுக்குள் பிரவேசிப்பீர்கள், மலைவாழ் வெள்ளாடுகளுக்கும் ஊசியிலை மரங்களுக்கும் இது உசிதமானதாக இருக்கிறது. முடிவில் அந்த உச்சியின் ஆர்க்டிக் ஆல்பைன் நிலைமைகளை எட்டிவிடுவீர்கள். இந்த ஏற்றத்திலேயே, மெக்ஸிகோவிலிருந்து கனடாவிற்கு, கடல் மட்டத்திற்கு அருகாமையிலுள்ள உள்நாட்டுக்குப் பயணஞ்செய்தால் மாத்திரமே காணப்படக்கூடிய ஒரே வகையான வெவ்வேறான ஜீவராசிகளையும் சூழ்நிலைகளையும் நீங்கள் எதிர்ப்படக்கூடும்!
இதமான, புத்துணர்ச்சியூட்டும் மலைக் காற்றை சுவாசித்து, கிளர்ச்சியூட்டும் உணர்வை நீங்கள் அனுபவித்ததுண்டா? இத்தகைய உணர்வுக்குக் காற்றின் குறைவான சீதோஷ்ணம் ஒரு விளக்கமாகும். ஆனால் அருகாமையில் நகரங்கள் இல்லாத இடங்களில் மலைக் காற்றானது தெளிவாகவும் சுத்தமாகவும் இருக்கவுங்கூடும். 2,000 மீட்டர் உயரத்தில் ஒவ்வொரு கன சென்டிமீட்டர் காற்றிலும் தூசி, மகரந்தத்தூள் இத்யாதி 2,500 நுண்ணிய துகள்களே இருக்கலாம். அந்தக் காற்றை பெரிய நகரங்களிலுள்ள காற்றோடு ஒத்துப்பாருங்கள், அங்கு இந்தத் துகள்களில் கிட்டத்தட்ட 1,50,000 துகள்கள் அதே அளவான காற்றிடத்தில் இருக்கக்கூடும்! நவீன வானிலை ஆய்வுக்கூடங்கள் ஏன் அடிக்கடி மலைகளில் கட்டப்படுகின்றன என்பதை இது விவரிக்கிறது, அங்குத்தானே வானிலை ஆய்வுக்கு தெளிவான, உலர்ந்த காற்று முழுநிறைவான நிலைமைகளை அளிக்கிறது.
உயர்வான ஏற்றங்களில் மலைகள் அந்தளவு இதமானவையாக இல்லை என்பது உண்மைதான், அங்கு வளிமண்டல அழுத்த நிலைகளும் ஆக்சிஜன் நிலைகளும் குறைகின்றன, சூரிய வெப்பம் அதிகரிக்கிறது, கடும்பலமான காற்றுகள் சீதோஷ்ணநிலைகளைத் திடீரென இறங்கச் செய்கின்றன. ஆச்சரியகரமாக, அத்தகைய சூழ்நிலைமைகள் மத்தியிலும், சில ஜீவராசிகள் தொடர்ந்து நன்கு வளமுறுகின்றன. உதாரணமாக, சால்ட்டிசிட் என்ற சிறிய எட்டுக்கால் பூச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மலைவாழ் பூச்சி 6,000 மீட்டருக்கும் மிக மேலான இமயமலை சூழலில் செளகரியமாக வாழ்கிறது. எவ்வாறு அந்தப் பூச்சி உயிர்வாழ்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு முற்றிலுமாக தெளிவாயில்லை.
மனிதன்மீது பாதிப்புகள்
மலைகள் முழு மனிதவர்க்கம் மீதும் பாதிப்பைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, உலக மேப்பை சற்று கவனியுங்கள். 3,000 மீட்டருக்கும் மேலாக எட்டும் சிகரங்களையுடைய பிரெனீஸ் மலைகள், பிரான்ஸிலிருந்தும் ஏனைய ஐரோப்பாவிலிருந்தும் எவ்வாறு ஸ்பெய்னைப் பிரிக்கின்றன என்பதை கவனியுங்கள். அதேபோல, பல்வேறு ஆட்சி எல்லைகள் பெரிய மலை சங்கிலித் தொடர்புகளினூடே வரையப்பட்டிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். வித்தியாசப்பட்ட மொழிகளும் பண்பாடுகளும் உடைய ஜனங்களுக்கு இடையே இந்தத் தகர்க்கமுடியா தடைகள் பயணத்தையும் வாணிகத்தையும் மட்டுப்படுத்தியிருக்கின்றன. ஆகவே, பெரும்பாலும் மலைகள் இருப்பதானது நீங்கள் வாழும் நாட்டின் வடிவத்தின் பேரிலும் அளவின் பேரிலும் பேசும் மொழியின் பேரிலும் உங்கள் நாட்டின் பழக்கவழக்கங்கள் பேரிலும் மாற்றியமைக்கும் செல்வாக்கைக் கொண்டதாக இருந்திருக்கிறது.
உயரமான மலைகளும் காற்றோட்டத்தைத் தடைசெய்கின்றன. இது மழை, பனி, காற்று, மேலும் சீதோஷ்ணநிலை ஆகியவற்றின்பேரில் பாதிப்பைக் கொண்டிருக்கலாம். இது நீங்கள் சுவைத்துண்ணும் வித்தியாசப்பட்ட ஆகாரங்களையும் அணியும் வித்தியாசப்பட்ட ஆடைகளையும் ஒருவேளை உங்களுடைய வீட்டின் கட்டிட வடிவமைப்பையுங்கூட பாதிக்கிறது.
உதாரணமாக, குன்லுன், டியன் ஷான், ஹிந்து குஷ், இமயமலை, மேலும் மத்திய ஆசியாவிலுள்ள ஏனைய மலைத்தொடர்கள் கிழக்கிலிருந்து மேற்கு வரை நீடிக்கின்றன. இந்தப் பேசா ராட்சச மலைகள் சைபீரியாவிலிருந்து அடித்துக்கொண்டுவரும் குளிரான, உலர்ந்த காற்றுகளைத் தடைசெய்து, இந்தியப் பெருங்கடலிலிருந்து மேலெழும்பி வீசும் அனலான, ஈரமான காற்றுகளை வீசாது தடுக்கின்றன. இவ்வாறு, இந்த மலைகளின் தென்பகுதியைக் காட்டிலும் வடப்பகுதியில் முற்றிலும் வித்தியாசப்பட்ட சீதோஷ்ணநிலை நிலவி, லட்சக்கணக்கானவர்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது.
அச்சுறுத்தப்பட்ட சூழலா?
ஆச்சரியகரமாக, மலைகளின் அழகையும் பொலிவையும் மனிதவர்க்கம் பாழ்ப்படுத்துகிறது. ஆல்ப்ஸில் சுற்றித்திரிந்துகொண்டிருந்த சிவிங்கிகளும் கரடிகளும் கட்டுப்பாடில்லா வேட்டையினால் அற்றுப்போயிருக்கின்றன. காடுகளை அழிப்பதன் விளைவாக அருமையான மேல்மண்ணானது அநேக மலைச்சரிவுகளிலிருந்து துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. சில மலைப்பிரதேசங்களின் நேர்த்தியான சூழ்நிலைமண்டல சமநிலையின்மீது தொழில்சார்ந்த தூய்மைக்கேடும் பெருவாரியான சுற்றுலாவும் கடும் ஊறுபாட்டை ஏற்படுத்தியிருக்கின்றன.
சந்தோஷகரமாக, பூமியின் இயற்கை காட்சியில் மலைகள் நிலையான சிறப்புத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. (ஆதியாகமம் 49:26-ஐ ஒத்துப்பாருங்கள்.) பைபிள், வரப்போகும் புதிய உலக அரசாங்கத்தை ஒரு மலைக்கு ஒப்பிட்டுப் பேசுவது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. பூமியை நிரப்புவதாய், இந்த மலைபோன்ற அரசாங்கம் இந்தக் கிரகத்துக்கு உண்டாகும் எந்தப் பழுதையும் சரிபார்க்கும். (தானியேல் 2:35, 44, 45) இவ்வாறு படைப்பின் அருவேலைப்பாடுகளை என்றும் அனுபவிக்கும் நிச்சயம் நமக்கு இருக்கிறது.
[பக்கம் 16, 17-ன் படம்]
பிரான்ஸில் மான்ட் ப்ளாங்க், 4,810 மீட்டர்
[படத்திற்கான நன்றி]
M. Thonig/H. Armstrong Roberts
[பக்கம் 18-ன் படம்]
ஜப்பானில் மவுன்ட் ஃப்யுஜி, 3,778 மீட்டர்
[படத்திற்கான நன்றி]
A. Tovy/H. Armstrong Roberts