யெகோவாவுடைய படைப்பின் மகத்துவம்
“மலைகளைப் பார்க்கிலும் நீர் கம்பீரமானவர்”
ஃப்யூஜி மலையின் உச்சியில் சூரியன் முகங்காட்டுவது கண்கொள்ளாக் காட்சியாகும். நெருப்புப் பந்துபோல் அடிவானிலிருந்து மேலெழும்பும் சூரியனின் ஒளி வெண்பனி மீதும் சாம்பல் நிற லாவா பாறை மீதும் பட, அவை தகதகக்கின்றன. புதிய நாள் பிறக்கையில், அந்த மலையின் பளிச்சென்ற நிழல், குன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகள் மீதும் கிலோமீட்டர் கணக்கில் வேகமாக படருகிறது.
முன்பு எழுதப்பட்ட சீன எழுத்துக்களின்படி “நிகரற்றது” என்ற அர்த்தங்கொண்ட ஃப்யூஜியைப் போன்ற எல்லா கம்பீரமான மலைகளும் நம்மை மலைக்க வைக்கின்றன. அவற்றின் இமாலய உருவத்திற்கு பக்கத்தில் நாம் வெறும் துரும்பாக அல்லவா தோன்றுகிறோம்! மலைகளுக்கு அப்படியொரு கம்பீரம் இருப்பதால், பனிமூட்டமும் மேகமூட்டமும் காணப்படும் மிக உயர்ந்த மலை உச்சிகளில் தெய்வங்கள் குடியிருப்பதாக அநேகர் நம்பியிருக்கின்றனர்.
மலைமுகடுகள் உண்மையில் ஒரே கடவுளுக்குத்தான் துதி சேர்க்கின்றன; அவற்றை திறமையாக படைத்த யெகோவாவே அந்தக் கடவுள். அவரே “மலைகளை உருவாக்கியவர்.” (ஆமோஸ் 4:13, பொது மொழிபெயர்ப்பு) பூமியின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருப்பவை மலைகளே. கடவுள் நம் கிரகத்தைப் படைத்தபோது ஏற்படுத்திய சில இயற்கை சக்திகள் இறுதியில் கண்கவர் மலை உச்சிகளையும் மலைத் தொடர்களையும் உருவாக்கின. (சங்கீதம் 95:4) உதாரணத்திற்கு, இமய மலைத் தொடர்களும் ஆண்டிஸ் மலைத் தொடர்களும் பூமியின் அடி ஆழத்தில் ஏற்பட்ட மாபெரும் எழுச்சிகளாலும் புவியோட்டுப் பகுதிகளின் அசைவுகளாலும் உருவானதாக நம்பப்படுகிறது.
மலைகள் எவ்வாறு உருவாயின, ஏன் உருவாயின என்பது இன்னும் மனித அறிவுக்கு முழுமையாக எட்டவில்லை. சொல்லப்போனால், நீதிமானாகிய யோபுவிடம் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு நம்மால் இன்னும் விடை காண முடியவில்லை: “நான் [யெகோவா] பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? . . . அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?”—யோபு 38:4-6.
ஆனால் மலைகள்மீது நம் உயிர் சார்ந்திருப்பது நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். இயற்கையின் நீர்க் களஞ்சியங்கள் என அவை அழைக்கப்பட்டிருக்கின்றன; ஏனென்றால் மகா நதிகள் அனைத்தின் தண்ணீரும் மலைகளிலிருந்தே வருகிறது; பூமியிலுள்ள மக்களில் பாதிப்பேர் தண்ணீருக்காக மலைகளையே நோக்கியிருக்கிறார்கள். (சங்கீதம் 104:13) நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகையின்படி, “உலகிலுள்ள 20 முக்கிய உணவுத் தாவர வகைகளில் 6 வகைகள் மலைகளில்தான் வளர்கின்றன.” கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகில் கச்சிதமான சூழியல் நிலைமைகளில் “பூமியிலே ஏராளமான தானியம் இருக்கும்; மலைகளின் உச்சிகளில் அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16, NW; 2 பேதுரு 3:13.
அநேகருக்கு மலைகள் என்று சொன்னாலே ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலைத்தொடர்தான் ஞாபகத்திற்கு வரும். சிவட்டா மலை உட்பட, இங்கே காட்டப்பட்டிருக்கும் இந்த முகடுகள் படைப்பாளர் ஒருவர் இருப்பதை அருமையாக பறைசாற்றுகின்றன. (சங்கீதம் 98:8) ‘தமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகிற’ யெகோவாவை அவை துதிக்கின்றன.—சங்கீதம் 65:6, பொ.மொ.a
ஆல்ப்ஸ் மலையின் பனிக்கட்டிகள் மூடிய சிகரங்களையும் தொடர்களையும், பனி போர்த்திய சரிவுகளையும், பள்ளத்தாக்குகளையும் ஏரிகளையும் பசும் புல்வெளிகளையும் பார்க்கப் பார்க்க அவற்றின் கொள்ளை அழகில் மலைத்துப் போகிறோம். யெகோவாவே ‘மலைகளில் புல்லை முளைப்பிக்கிறவர்’ என தாவீது ராஜா சொன்னார்.—சங்கீதம் 147:8.
சீனாவின் குய்லினிலுள்ள இதுபோன்ற குன்றுகள் ஆல்ப்ஸ் மலைத்தொடர் போல் அத்தனை கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவற்றிற்கென்று தனி அழகு உண்டு. லை ஆறு நெடுக வரிசை வரிசையாக நீட்டிக்கொண்டிருக்கும் சுண்ணாம்புக்கல் கோபுர முகடுகள் பார்வையாளர்களின் கண்களைக் ‘கொத்துகின்றன.’ மூடுபனி நிறைந்த இந்தக் குன்றுகளிடையே கண்ணாடி போல் வழிந்தோடும் தெளிந்த தண்ணீரைப் பார்க்கையில் சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகள்தான் நம் நினைவுக்கு வரும்: “அவர் [யெகோவா] பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.”—சங்கீதம் 104:10.
மனிதனின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் படைப்பாளர் செய்திருக்கும் அன்பான ஏற்பாட்டின் மாட்சிமைமிக்க ஓர் அம்சமே மலைகள் என்பதை நாம் உணருவதால் அவற்றிடம் நாம் ஈர்க்கப்படுவது நியாயமானதே. ஆனால் மலைகள் பிரமிக்கத்தக்கவையாக இருந்தாலும் யெகோவாவின் கம்பீரத்திற்குப் பக்கத்தில் அவை ஒன்றுமேயில்லை. யெகோவா உண்மையில் “மலைகளைப் பார்க்கிலும் கம்பீரமானவர்.”—சங்கீதம் 76:4, NW.
[அடிக்குறிப்பு]
a 2004 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர், மார்ச்/ஏப்ரல்-ஐக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
உலக மக்களில் பத்து சதவீதத்தினர் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு அது பெரிய தடையாக இல்லை. அநேக மலைப்பிரதேசங்களில் இந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மும்முரமாக ஊழியம் செய்து வருகிறார்கள். ‘சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தும் . . . சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன!’—ஏசாயா 52:7.
“உயர்ந்த மலைகள் மலை ஆடுகளுக்கு” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதங்கள் 103:18, தமிழ் கத்தோலிக்க பைபிள்) எடுப்பான கொம்புகள் கொண்ட நியூபியன் ஐபெக்ஸ் போன்ற மலை ஆடுகள், மலைவாழ் ஜீவராசிகளிலேயே அதிக பிடிப்புள்ள பாதங்கள் கொண்டவை. நடக்கவே முடியாதளவுக்கு குறுகலாக தோன்றும் விளிம்புகளில் அவை துணிந்து நடக்கின்றன. சுலபமாக செல்ல முடியாத இடங்களில் வாழ்வதற்கு ஏற்ற வடிவத்தை ஐபெக்ஸ் ஆடுகள் பெற்றிருக்கின்றன. அவற்றின் குளம்புகளுடைய வடிவு ஒரு உதாரணம். இந்த ஆட்டின் எடை காரணமாக குளம்புகளின் பிளவு விரிவடைகிறது; இதனால் குறுகலான பாறை விளிம்புகளில் நிற்கையில் அல்லது நடக்கையில் அதற்கு உறுதியான பிடிப்பு கிடைக்கிறது. உண்மையில் ஐபெக்ஸ் ஆடுகள் தலைசிறந்த வடிவமைப்பு பெற்றவை!
[பக்கம் 9-ன் படம்]
ஃப்யூஜி மலை, ஹான்ஷு, ஜப்பான்