எமது வாசகரிடமிருந்து
நம்பிக்கை சில நண்பர்களாலும் உறவினர்களாலும் நம்பிக்கைத்துரோகம் செய்யப்பட்டதன் காரணமாக நான் சோர்வுற்றிருந்தேன். என்னைச் சுற்றியிருந்த அனைவரது நம்பகத்தன்மையையும் நான் சந்தேகிக்க ஆரம்பித்தேன். ஆனால் “நீங்கள் யாரை நம்பலாம்?” (பிப்ரவரி 8, 1996) என்ற கட்டுரைத் தொடர், நம்பிக்கையைப் பற்றி அதிக சமநிலையான கருத்தை எனக்கு அளித்தது. அப்படிப்பட்ட காலத்துக்கேற்ற தகவலுக்காக நன்றி.
ஈ. ஐ., கொரியா
பல வருடங்களாக, என்னை துர்ப்பிரயோகம் செய்த என் அப்பாவும், இரண்டு கணவர்களும், ஒரு கிறிஸ்தவ சகோதரரும் எனக்கு நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார்கள். இனி எவரையும் நம்பக்கூடாது என்ற தீர்மானம் எடுக்கும் நிலையை நான் எட்டினேன். எனக்கு ஜனங்கள் தேவையில்லை என்று என்னையே திருப்திப்படுத்திக்கொண்டேன். ஆனால் அதிக சமநிலையுள்ளவளாவதற்கு அந்தக் கட்டுரை எனக்கு உதவியது. நம்பிக்கை வைப்பது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தாலும், நான் தொடர்ந்து முயற்சி செய்யப்போகிறேன். இந்த முறை, நான் யார்மீது நம்பிக்கை வைக்கிறேன் என்பதில் அதிக ஜாக்கிரதையாக இருப்பேன்.
சி. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
மாட்டர்ஹார்ன் “தனிச்சிறப்புள்ள மாட்டர்ஹார்ன்” (பிப்ரவரி 8, 1996) என்ற கட்டுரையை நான் வாசித்தேன். இந்த அழகிய மலையின் ஃபோட்டோ உண்மையிலேயே என் கவனத்தை ஈர்த்தது! இந்தக் கட்டுரை கடவுளுடைய சிருஷ்டிப்பை இன்னுமதிகமாக நான் போற்றும்படி செய்தது.
ஜே. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்
ஆப்பிள்கள் ‘ஒரு நாளுக்கு ஓர் ஆப்பிள் மருத்துவரைத் தவிர்க்கிறது’ (பிப்ரவரி 8, 1996) என்ற கட்டுரைக்காக மிக்க நன்றி. எங்கள் சிறிய தோட்டத்தில் 100-க்கும் அதிகமான ஆப்பிள் மரங்கள் இருப்பதன் காரணமாக, அது என் அக்கறையை தூண்டியது. நல்ல விளைச்சலை கொடுக்க செய்வதற்கு அந்த மரங்களை கத்தரித்து பண்படுத்துவதை நாங்கள் மகிழ்ந்து அனுபவிக்கிறோம். உங்களது அனைத்து கட்டுரைகளின் துல்லியத்தையும் நாங்கள் போற்றுகிறோம். அவை புத்துணர்ச்சியூட்டும், நம்பத்தகுந்த தகவலை அளிக்கின்றன.
பி. பி., ஐக்கிய மாகாணங்கள்
கட்டுப்படுத்த இயலா நடத்தை “கட்டுப்படுத்த இயலா நடத்தை—அது உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறதா?” (பிப்ரவரி 8, 1996) என்ற அருமையான கட்டுரைக்காக நன்றி. எனக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது, நான் கட்டுப்படுத்த இயலா நடத்தையால் அவதிப்படுகிறேன். எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி தகவலை அளிக்குமாறு அடிக்கடி நான் ஜெபத்தில் யெகோவாவிடம் கேட்டிருக்கிறேன்.
எம். ஏ. சி., ஸ்பெயின்
ஒரு பயனியராக, முழுநேர ஊழியக்காரனாக சேவிக்க ஆரம்பித்த காலத்தில், கடவுளைப் பற்றிய தன்னோக்கமற்ற, அவமரியாதையான எண்ணங்கள் என்னை தொந்தரவுபடுத்த ஆரம்பித்தன. நான் மன்னிக்க முடியாத பாவத்தை செய்துவிட்டதாக எண்ணி, அநேக முறை அழுதிருக்கிறேன். எழுத்தில் விளக்கப்பட்டிருக்கும் என் உணர்ச்சிகளைப் பார்த்து, நான் இப்போது எவ்வாறு உணருகிறேன் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடியாது. இதேபோன்று இன்னொரு நபர் துன்பப்பட்டுக்கொண்டிருப்பார் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை. சகோதரர்களே, எங்களுக்காக எப்போதும் இருப்பதற்கு நன்றி.
சி. பி., நைஜீரியா
நான் அந்தக் கட்டுரையை மறுபடியும் மறுபடியுமாக கண்ணீரோடு வாசித்தேன். அது என் நிலையை அவ்வளவு விவரமாக விளக்கியது! நான் பைத்தியம் பிடித்து அலைகிறேனா அல்லது பேய்கள் என் மனதை கட்டுப்படுத்துகின்றனவா என்று நான் யோசித்திருக்கிறேன். சகோதரர்கள் மத்தியில் மற்றவர்களும் அதே கோளாறினால் அவதிப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டது பளுவைக் குறைத்தது.
கே. டி., ஜப்பான்
இந்தப் பிரச்சினையோடு நான் அடிக்கடி யெகோவாவை அணுகியிருக்கிறேன். ஆனால் அது பயனற்றது என்பதாகவும் எதுவும் எனக்கு உதவ முடியாது என்பதாகவும் நான் நினைத்ததால் அதை நிறுத்திவிட தீர்மானித்தேன். இப்போது என்னை நானே புரிந்துகொள்கிறேன், நிம்மதியாகவும் உணருகிறேன். மிகவும் அன்பான விதத்தில் கட்டுரை எழுதப்பட்டிருந்ததை என்னால் தெளிவாக காண முடிகிறது. யெகோவா உண்மையிலேயே நம்மீது அக்கறை கொள்கிறார் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன்.
ஜே. எஃப்., செக் குடியரசு
கடந்த ஏழு வருடங்களாக கட்டுப்படுத்த இயலா யோசனைகளால் நான் மனச் சித்திரவதையை அனுபவித்து வந்திருக்கிறேன். அது என்னை களைப்பாகவும் சோர்வாகவும் உணரச் செய்திருக்கிறது. அதை எவருடனாவது கலந்துபேச முடியாதபடி நான் மிக வெட்கமாகவும் குற்றமுள்ளவனாகவும் உணர்ந்திருக்கிறேன். எனக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிட்டதாக நினைத்தேன். நான் இந்தக் கட்டுரையை வாசித்தபோது, என்னால் நம்ப முடியவில்லை. நான் அனுபவித்துக்கொண்டிருந்ததையே மற்றவர்களும் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டதில் ஆச்சரியமடைந்தேன்! என் கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் இனியும் தனிமையாக இல்லை. மன்னிக்கமுடியாத பாவத்தை நான் செய்துவிடவில்லை; மேலும், யெகோவா என்மீது கோபமாக இருக்கவில்லை.
எஸ். பி., தென் ஆப்பிரிக்கா