இளைஞர் கேட்கின்றனர்
என் பெற்றோர் ஏன் என்னைத் தர்மசங்கடமடையச் செய்கிறார்கள்?
உயிரியல் வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது, நீங்கள் உடல்நலம் குன்றியவராக உணருகிறீர்கள். உங்கள் மனச்சோர்வை அதிகரிக்கும் வகையில், உங்களுடைய வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, சீக்கிரமாக உங்கள் தாய் அங்கே வந்துவிடுகிறாள்—தளர்ந்த செருப்புகள் அணிந்து, வெளிர் சிவப்புநிற மயிர்சுருள்களை தலையில் குத்திக்கொண்டு, வீட்டிலிருக்கையில் அவள் உடுத்துகின்ற வியர்வை உறிஞ்சும் சிவப்புநிற தளர்ந்த சொக்காயை உடுத்திக்கொண்டு அங்கே வந்துவிடுகிறாள். நீங்கள் அதிக கஷ்டமான நிலையில் இருப்பதாக நம்பி, தன்னுடைய தோற்றத்தைக் குறித்து எவ்வித அக்கறையும் எடுக்காமல் உங்களிடமாக ஓடி வந்திருக்கிறாள். ஆனால் நீங்கள் அவள் உதவிசெய்ய எடுக்கும் முயற்சிகளை போற்றுவதில்லை. உங்களுடைய தாய் உடுத்தியுள்ள விதத்தில் எவ்வளவு புத்திகெட்டவளாகவும் கவனக்குறைவுள்ளவராகவும் தோன்றுகிறாள் என்பதன் பேரிலேயே நீங்கள் சிந்திக்கக்கூடும். உங்களுடைய சகாக்களுக்கு முன்பாக உங்களைக் குறித்து அவள் பரபரப்பை உண்டாக்க ஆரம்பிக்கையில், நீங்கள் அங்கிருந்து ஓடிவிடலாமா என்று விரும்புவீர்கள். நீங்கள் அவ்வளவு தர்மசங்கடமடைகிறீர்கள்!
இதுபோன்ற சம்பவங்கள் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் உங்களுக்கு அது வேடிக்கையாக இல்லை. நீங்கள் ஒரு சங்கடமான நிலையை உணருகிறீர்கள், மரித்துவிடலாமா என்று நீங்கள் உணருமளவிற்கு அது ஒரு பெரிய அழுத்தமாக இருக்கிறது. உண்மையில், பழமொழி ஒன்று உருவானது: ‘தர்மசங்கடத்தினால் உயிர் நீப்பது.’ அவ்விதமாக உணரும் முதல் ஆள் நீங்கள் அல்ல. உதாரணமாக, பூர்வ யூதர்கள் தர்மசங்கடமடையச் செய்வதினால் வரும் நாசம் விளைவிக்கின்ற சாத்தியக்கூறுகளை கண்டுணர்ந்துகொண்டார்கள். எபிரெய டால்முட் பொது இடத்தில் ஒருவரை அவமானப்படுத்துவதை அவருடைய இரத்தம் சிந்தப்படுவதற்கு ஒப்பிட்டது!
தர்மசங்கடமடையச் செய்யும் அநேக வழிமூலங்கள் இருக்கின்றன, ஆனால் அநேக இளைஞர்கள் தங்களுடைய பெற்றோர் உண்டாக்கும் தர்மசங்கடமான சூழ்நிலைகளே மிகவும் சங்கடமானது என்று ஒப்புக்கொள்கிறார்கள். உங்களை அவமானப்படுத்தும் வகையில் பெற்றோர் செய்யக்கூடிய காரியங்களின் பட்டியலுக்கு முடிவில்லாமலிருப்பதாக தோன்றுகிறது: வெளிப்படையாக பாசத்தை வெளிக்காட்டுதல், உங்களுடைய சாதனைகளைக் குறித்து பெருமைப்பாராட்டுதல், உங்களுடைய நண்பர்களுக்கு முன்பாக பிள்ளைத்தனமாக நடந்துகொள்ளுதல், விருந்தினருக்கு முன்பாக “எதையாவது செய்துகாட்டும்படி” உங்களை வற்புறுத்துதல் போன்ற காரியங்கள். ஏன், உங்களுடைய பெற்றோர் தோற்றமளிக்கும் விதம்தானேயும் உங்களை வெட்கமடையச் செய்யலாம்! தங்கள் பெற்றோர் மத்தியில் தாங்கள் இருப்பதை எண்ணிப்பார்க்கவே சில இளைஞர்கள் பயப்படுகிறார்கள் என்பதில் ஆச்சரியமேதுமில்லை.
இருப்பினும், உங்களுடைய பெற்றோர் ஏன் உங்களை அதிகமாக தர்மசங்கடமடையச் செய்கிறார்கள்? ‘இதைக் காட்டிலும் ஏதாவது நல்ல காரியங்களை அவர்கள் அறிந்தில்லையா?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.
அவர்கள் ஏன் உங்களைத் தர்மசங்கடமடையச் செய்கிறார்கள்
இது சம்பந்தமாக உங்களுடைய உணர்வுகளை நாம் ஆராய்ந்து பார்ப்போம். இளைஞராயிருப்பதால், நீங்கள் தர்மசங்கடமடையச் செய்யும் காரியத்தால் எளிதில் தாக்கப்படும் நிலையில் இருக்கிறீர்கள்; உங்களுடைய குடும்ப அங்கத்தினரைக் காட்டிலும் அதிக ஆட்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அதிகமாக அறிய வந்திருக்கிறீர்கள். மற்றவர்கள் உங்களை—விசேஷமாக உங்களுடைய சகாக்கள்—ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் மற்றும் “சரியான விதத்தில்” நடந்துகொள்ள நீங்கள் கடினமாக முயற்சி செய்கிறீர்கள். இயல்பாகவே, இவ்விதமாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதானது, உங்களுடைய பெற்றோரின் பங்கில் செய்யப்படும் தர்மசங்கடத்தைக் கொண்டுவரும் நடத்தையால் அடியரித்துவிட நீங்கள் விரும்புவதில்லை. லிண்டா என்ற இளம் பெண் சொன்னவிதமாக: ‘உங்கள் பெற்றோர் எதையாவது செய்து, அது உங்களை தர்மசங்கடமடையச் செய்கிறதென்றால், நீங்கள் இவ்வாறு கவலைப்படுவீர்கள்: “என்னுடைய நண்பர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?”’ அப்படியென்றால், உங்களுடைய உணர்வுகளைக் குறித்து உங்கள் பெற்றோர் ஏன் அதிக அக்கறையுள்ளவர்களாக இருக்க முடிவதில்லை?
ஒரு தாய் தன்னுடைய உணர்ச்சிவசப்படுகின்ற வளரிளமைப் பருவத்திலுள்ள மகனுக்கு சொன்னதை உளநூல் வல்லுநர் பெர்நிஸ் பெர்க் இவ்வாறு விவரிக்கிறார்: “உன்னை தர்மசங்கடமடையச் செய்வதே என்னுடைய வேலையாக இருக்கிறது. என்னுடைய தாய் என்னை தர்ம சங்கடமடையச் செய்தாள். நீயும் உன்னுடைய பிள்ளைகளைத் தர்மசங்கடமடையச் செய்ய வேண்டியதாக இருக்கும்.” இது வெறும் ஒரு கூற்று அல்ல, ஓர் உண்மை அதில் அடங்கியிருக்கிறது. இல்லை, தர்மசங்கடமடையச் செய்கிறவர்களாக இருப்பது பரம்பரையாக கடத்தப்படும் ஒரு குணம் அல்ல, ஆனால் வேறொன்று பரம்பரையாக கடத்தப்படுகிறது: அபூரணம்.
பெற்றோர் அபூரணராக இருக்கிறார்கள். (ரோமர் 3:23) அவர்கள் நவநாகரிக மாதிரிகளாக தோற்றமளிக்க எதிர்பார்க்க முடியாது; அவர்கள் சொல்லும் அல்லது செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், எல்லாச் சமயங்களிலும் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதில்லை, நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அவ்வப்போது இளைப்பாறவும் மற்றும் கேளிக்கையில் ஈடுபடவும் அவர்களுக்கும்கூட உரிமை இருக்கிறது. சில சமயங்களில் தங்களுடைய வயதிற்கும் குறைந்த வயதில் உள்ளவர்களைப்போன்று நடந்துகொள்வது—அல்லது முழு அளவில் புத்தியற்றவர்களாக நடந்துகொள்வது—வயோதிபமடைந்து செல்வதைச் சமாளிப்பதற்கான அவர்களுடைய வழியாக இருக்கலாம். இது உங்கள்மீது கொண்டுவரும் பாதிப்பை அறியாதவர்களாக உங்களுடைய நண்பர்களோடு தற்காலத்திய நடன அடிகளை எடுத்து நடனமாட முயற்சி செய்வதன்மூலம் அம்மா உங்களை மானங்கெடச் செய்யலாம்; கூடைப்பந்து மைதானத்தில் வளரிளமைப் பருவத்தினரோடு அவர் போட்டியிடக்கூடும் என்பதை நிரூபிக்க அப்பா முயற்சி செய்யலாம். தர்மசங்கடமாக இருக்கிறதா? ஒருவேளை அப்படி இருக்கலாம். ஆனால், நிச்சயமாகவே, உங்களைப் புண்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்காது.
உங்கள் பெற்றோர் உங்களுடைய சிறந்த அக்கறைகளையும்கூட இருதயத்தில் வைத்திருக்கிறார்கள். அபூரணத்தின் காரணமாக, உங்களுடைய பொதுநலம் ஆபத்திற்குள்ளாவதாக தோன்றும்போது அவர்கள் மிகுதியான விதத்தில் பிரதிபலித்துவிடலாம். உதாரணமாக, 12 வயதான இயேசு தன்னுடைய குடும்பத்தோடு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் கலந்துகொண்ட சமயத்தைப் பைபிள் எழுத்தாளராகிய லூக்கா குறிப்பிடுகிறார். இயேசுவின் பெற்றோர் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், அவர் காணாமற்போய்விட்டிருப்பதை அறியவந்தார்கள். அவரை ஊக்கமாக தேடினார்கள். “மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.” சந்தேகமின்றி தன்னைவிட வயதில் மூத்தவர்களோடு இந்த உரையாடலை இயேசு அனுபவித்துக்கொண்டிருந்தார். இருப்பினும், அவருடைய தாய் அவ்விடத்திற்கு வந்தபோது, ஒருவேளை தேசத்தின் இருந்த பிரதான மனிதர்களுக்கு முன்பாக, அவள் சொன்னாள்: “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே.”—லூக்கா 2:41-48.
கவனிக்கவேண்டிய இன்னொரு அம்சம் உங்களுடைய பெற்றோருக்கு தங்களுடைய சொந்த பிரச்னைகள் இருக்கின்றன என்பதை, அவற்றில் சிலவற்றை நீங்கள் அறியாமலும் இருக்கலாம். அவர்கள் அப்படி நடந்துகொள்வதற்கான காரணம் ஒருவேளை பொருளாதார கவலைகள், நோய், அல்லது மற்ற அழுத்தங்களாக இருக்கலாம்.
முடிவாக, அநேக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைக் குறித்து பெருமிதம்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பகட்டாக காண்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இருப்பினும், இது, உங்களுடைய தாயாரின் நண்பர்களுக்கு முன்பாக பியானோ இசைக்கருவியை வாசிக்கும்படி உங்களிடம் கேட்கப்படுவது அல்லது நீங்கள் எவ்வளவு “புத்திக்கூர்மையுள்ளவராக” இருக்கிறீர்கள் என்பதாக உங்களுடைய தகப்பன், கேட்கிற எவருக்கும் சொல்லுவதை நீங்கள் சகிக்க வேண்டியதாக இருப்பது போன்ற எல்லாவிதமான நிலைகுலையவைக்கும் சூழ்நிலைமைகளுக்கும் வழிநடத்தலாம்!
சமாளித்துச்செல்ல கற்றுக்கொள்ளுதல்
டோனியா என்ற இளம் பெண், அவளுடைய பெற்றோர் அவளை தர்மசங்கடமடையச் செய்கையில், “நான் அதிகமாக வெட்கமடைகிறேன்,” என்று சொல்கிறாள். இது ஓர் இயல்பான பிரதிபலிப்பாக இருந்தபோதிலும், அதைச் சமாளித்துச் செல்ல பலன்தரக்கூடிய அநேக வழிகள் இருக்கின்றன. இதுவரைச் சொல்லப்பட்ட குறிப்புகளில் சிலவற்றை ஞாபகத்திற்குக் கொண்டுவருவதுதானே உங்களுடைய ஆரம்ப அசெளகரிய உணர்வை அடக்கிக்கொள்ள உதவலாம். (நீதிமொழிகள் 19:11) பின்வரும் ஆலோசனைகளையும் கவனியுங்கள்:
கவலைப்படுவதை நிறுத்திவிடுங்கள்: இவ்வுலகத்தின் எல்லா கவலைகளும் அநேகமாக காரியங்களை எவ்விதத்திலும் மாற்ற இயலாதவையாக இருக்கும். (மத்தேயு 6:27-ஐ ஒப்பிடுக.) உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பொறுப்புள்ளவர்களாக இல்லை; ஒரு தனி ஆளாக இருக்கிறீர்கள். ‘அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே’ என்று கலாத்தியர் 6:5 சொல்லுகிறது. மேலுமாக, உங்களுடைய சங்கடமான நிலை நீங்கள் கற்பனைச் செய்யுமளவிற்கு அவ்வளவு மோசமானதாக இல்லாமல் இருக்கலாம். ‘தர்மசங்கட நிலைக்குள்ளாக ஒவ்வொரு வளரிளமைப் பருவத்தினரும் தன்னை கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தினர் இருப்பதாக கற்பனைச் செய்துகொள்கிறார்கள்’ என்பதை டாக்டர் ஜாய்ஸி L. வெட்ரால் கவனிக்கிறார். இருந்தபோதிலும், அநேக ஆட்கள் அந்தளவிற்கு மற்றவர்கள் பேரில் அக்கறையுள்ளவர்களாக இல்லை. வெட்ரால் மேலுமாக சொல்வதாவது: “அநேக ஆட்கள் உங்களுடைய முழு குடும்ப வரலாற்றில் அக்கறைக்கொண்டிருப்பதைக் காட்டிலும் தங்களுடைய மூக்கின் மீதுள்ள ஒரு பருவைக் குறித்தே அதிக அக்கறைக்கொண்டிருக்கிறார்கள்.” உங்களுடைய சகாக்களும்கூட தங்களுடைய பெற்றோர் ஏற்படுத்துகின்ற பாதிப்பைக் குறித்து கவலையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்!
மோசமான நிலைமையை அதிக மோசமாக்கிவிடாதீர்கள்: நீதிமொழிகள் 27:12 சொல்லுகிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்.” (தி நியு இங்கிலிஷ் பைபிள்) உங்களிடமாக கவனத்தைத் திருப்பும் வகையில், ‘ஐயோ, அம்மா!’ என்று கூச்சலிடுவது நிலைமையை மோசமாக்கிவிடவே செய்யும். ஒன்றும் சொல்லாமல் ‘மறைந்துகொள்வது’ ஞானமாக இருக்கலாம்.—பிரசங்கி 3:7.
தேவையான சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்: மற்றவர்களுக்கு முன்பாக உங்களை கடிந்துகொள்வது உங்களுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கலாம். ஆனால் அநேக சமயங்களில் சிட்சைப் பொருத்தமாக இருக்கும்போது, தர்மசங்கடமடைதல் வெறுமென அதின் பாகமாகவே இருக்கிறது. (எபிரெயர் 12:11) ஆனால் சிட்சை அவசியமில்லாததாக தோன்றினால் என்ன செய்வது? இயேசு தன்னுடைய தாயாரின் குறிக்கிடுதலை எவ்வாறு கையாண்டார் என்பதை நினைவுகூருங்கள். அவர் அமைதியாக இருந்து தன்னுடைய நிலைமையை விவரித்துச் சொன்னார். உண்மையில், அவர் தன்னுடைய பெற்றோருக்கு தொடர்ந்து “கீழ்ப்படிந்திருந்தார்” என்று பைபிள் சொல்லுகிறது. (லூக்கா 2:49, 51) இதையே செய்ய ஏன் முயற்சி எடுக்கக்கூடாது?
உங்களுடைய பெற்றோரிடம் பேசுங்கள்: உங்களை எது சங்கடப்படுத்துகிறது என்பதை அன்போடும் மரியாதையோடும் அவர்களுக்கும் சொல்லுங்கள். அது பலன் தருகிறது! ரோசலீ தன்னுடைய அனுபவத்தைச் சொல்லும்போது, “நீங்கள் எவ்விதமாக உணருகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னால், அவர்கள் இதை நியாயமானதாக நினைத்தால், அப்பொழுது அவர்கள் தங்களைத் தாங்களே சரிபடுத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள்,” என்றாள். பிரச்னையில் உங்கள் சார்பாக காண உங்களுடைய பெற்றோருக்கு உதவி செய்ய ஒரு வழியானது அவர்கள் இளைஞராக இருக்கையில் அவர்கள் அனுபவித்த தர்மசங்கடமான அனுபவங்களைப்பற்றி அவர்களிடம் கேட்பதாகும். இது உங்களுடைய நிலைமையை அவர்கள் சிந்தித்துப்பார்க்கும்படி செய்யலாம்.
நல்லெண்ண உணர்வைக் காட்டுங்கள்: உங்களுடைய பெற்றோரை நீங்கள் தர்மசங்கடத்திற்குள்ளாக்கின எல்லா சமயங்களையும் நினைத்துப்பாருங்கள்! தீய எண்ணத்தோடே அதை நீங்கள் செய்தீர்களா? நிச்சயமாகவே இல்லை! அப்படியிருக்க, உங்களை தர்மசங்கடமடையச் செய்ய உங்கள் பெற்றோர் வேண்டுமென்றே திட்டமிடுகிறார்கள் என்று ஏன் உணருகிறீர்கள்?
உங்களுடைய நகைச்சுவை மனநிலையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்: வளரிளமைப் பருவத்திலுள்ள ஓர் இளைஞர் ஒப்புக்கொண்டதாவது: “சில காரியங்களை இலேசாக எடுத்துக்கொண்டு நீங்கள் அதை எண்ணி சிரித்து விட்டுவிட வேண்டும்; பிற்பாடு அவை நகைச்சுவைக்கான காரியங்களாக தோன்றும்.” ஆம், எப்போதாவது நேரிடும் ஒன்றை ஏன் அவ்வளவு வினைமையானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்? “நகைக்க ஒரு காலமுண்டு” என்பதை ஞாபகத்தில் வையுங்கள். சில சமயங்களில் ஒரு நகைச்சுவை மனநிலையைக் காட்டுவதுதானே வெட்கத்தினால் வரும் வருத்த நிலையை நீக்கிவிடும்.—பிரசங்கி 3:4.
இருப்பினும், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தபோதிலும், தர்மசங்கடமடையச் செய்யும் நிலையை நீங்கள் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் முன்கூறப்பட்ட தகவலைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம், தர்மசங்கடமடையச் செய்கின்ற நிலைமைகள் என்பதாக நீங்கள் கருதுகின்ற விதத்தை மாற்றியமைக்கக் கூடியவர்களாக இருக்கலாம்.
உதாரணமாக, ஜாமி பெர்னார்ட் என்ற நூலாசிரியர் இவ்வாறு விவரிக்கிறார்: “என் தாய் நாங்கள் வீதியைக் கடந்துசெல்லும் எல்லாச் சமயத்திலும் என்னுடைய கையைப் பிடித்துக்கொள்வார், நான் பெரியவனாக வளர்ந்தபோதும்கூட அப்படியே செய்தார். ஒரு நாள், நான் இவளுடைய கையை விட்டு விலகி, ‘அம்மா, இனிமேலும் என்னை இப்படி நடத்திச்செல்ல தேவையில்லை’ என்று புலம்பினேன். அவள் என்னைப் பார்த்து, ‘எனக்கு தேவையிருக்கிறது’ என்று சொன்னாள். அவள் குறிப்பிட்டது, தங்களை சார்ந்திருக்க ஒருவர் தேவைப்படுகிறார் என்பதா, அல்லது நான் அவளுடைய ‘குழந்தையாக’ இருந்த சமயம் அவளுக்கு இப்பொழுது ஓர் இழப்பாக இருக்கிறதா அல்லது அவள் என்னோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார் ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதை அறியாமலிருக்கிறாரா போன்ற காரியங்களைக் குறித்து நான் அறியவில்லை. ஆனால் இப்பொழுது நான் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு வீதியைக் கடந்தபோது, என் முகம் சிவந்தது—தர்மசங்கடத்தினால் அல்ல, அன்பினாலேயே.”—செவென்டீன் பத்திரிகை, டிசம்பர் 1985. (g90 2/22)