இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் சங்கடமான நிலையிலிருந்து மீளுவது எப்படி?
ஆஞ்சி கால்களை முழுமையாக மூடும் ஓர் உடையைப் பள்ளிக்கு அணிந்து செல்வதற்கே கஷ்டப்பட்டாள். ஆனால் பள்ளி இடைவேளையின்போது சேற்றில் விழுந்துவிட்டது நிலைமையை அவளுக்குப் படுமோசமாக்கியது. இச்சம்பவத்தைக் குறித்து ஆஞ்சியின் பழைய ஞாபகம்: “என்னை அது வெகு சங்கடமான நிலைக்குள்ளாக்கியது! என்னால் எழுந்திருக்க முடியவில்லை, சேறு என்னை முழுவதுமாக மூடியது.”
சங்கடமான நிலையின் அந்த வெட்க உணர்வை நீ நன்றாகவே அறிந்திருக்கிறாய். பொதுவாக நம்முடைய சொந்த கவலைக்கிடமான நிலைக்கு நாம் தாமே ஆசிரியர்கள். பதினேழு (Seventeen) என்ற பத்திரிகை குறிப்பிடுகிறபடி, நாம் “நம்மையே மறந்து செயல்படுகிறோம், ஒரு வினாடிக்குள் நாம் நம்பமுடியாத, விளக்கமுடியாத முட்டாள்தனமான காரியத்தைச் செய்துவிடுகிறோம். பின்பு, ‘உண்மையிலேயே நானா அதைச் செய்தேன்,’ என்று திடீரென்று உணரவருகிறோம்.”
என்றபோதிலும் வாழ்க்கையின் வேறு எந்தப் பருவத்தையும்விட இந்த இளமைப் பருவத்தில்தான் அநேகமாய் நீ சங்கடமான நிலைக்குள்ளாகிறாய். இதற்குக் காரணம் என்ன?
வாழ்க்கையில் சங்கடமான சமயங்கள்
புத்திக்கூர்மையின் திறம் வளருவதால், வளரிளம் வயதினர் தங்களைக் குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அதிகமாகக் சிந்திக்கும் சாத்தியம் இருக்கிறது. இந்த அளவுகடந்த சுய-உணர்வு “தங்களுடைய செயல்களை உற்று ஆராய்ந்து விமர்சிக்கும்” ஒரு “கற்பனைக் கூட்டத்தைப் பார்வையாளர்களாகக்” கொண்டிருப்பது போன்றிருக்கிறது. (வளரிளம்பருவ வளர்ச்சி, Adolescent Development) இப்படியாக ஓர் இளம் பெண் இளமையை “மற்றவர்கள் உன்னைக் குறித்து நினைப்பது உனக்கு அதிகத்தைக் குறித்திடும் ஒரு வாழ்க்கைப் பருவம்,” என்கிறாள்.
எதிர்பாராத விதத்திலே, மற்றவர்களைக் கவர்ந்திட வேண்டும் என்பதற்கான உன்னுடைய முயற்சிகள் அநேக சமயங்களில் வீணாகப் போய்விடுகிறது. நீ உன்னுடைய உணர்ச்சிகளை—சமுதாயத்தின் தயையையும்—ஆண்டுகொள்ள இன்னும் முயன்றுகொண்டிருப்பதால் ‘ஏற்றகாலத்தில் சொல்லும் வார்த்தை’ உனக்குக் கிடைப்பதற்கு அரியதாகிவிடும். (நீதிமொழிகள் 15:23) உன்னுடைய உணர்வுகளை வார்த்தையில் மொழிய நினைக்கிறாய், அது சாதுரியத்துக்கும் அல்லது பொருத்தமானதற்கும் முரணாக இருக்கக்கூடுமாதலால், உன்னைத் தடுமாற்றத்தில் ஆழ்த்திடும் தேவையற்ற தவறுகளைச் செய்திடுவாய். மேலும், நீ பெற்றோருடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், நீ செய்ய விரும்பாத காரியத்தைச் செய்ய வேண்டியதாக இருக்கலாம். “நான் பள்ளிக்கு எப்பொழுதுமே அந்தப் பழங்கால பாணியிலான உடையைத்தான் அணிந்து செல்ல வேண்டும் என்கிறாள் என் தாய்,” என்று ஓர் இளம் பெண் புலம்புகிறாள். “எல்லாரும் ஜீன்ஸ் உடை அணிகிறார்கள், நானோ சிறிய பள்ளி உடையை அணிந்து செல்ல எதிர்பார்க்கப்படுகிறேன்.”
மற்றவர்களுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தினாலும் சில இளைஞர் கேலி, கிண்டல், ஒதுக்கப்படுதல், அல்லது தோல்வி ஆகிய காரியங்களுக்கு மிகவும் உணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளைக் குறித்து வகுப்புத் தோழர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ பேச வெட்கப்படக்கூடும். மற்றவர்கள் ஓர் ஆசிரியரிடமிருந்து அல்லது பெற்றோரிடமிருந்து வரும் கடிந்துகொள்ளுதலால் தலைகுனியக்கூடும். “ஒரு முறை என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் [என் தாய் என்னைத் திட்டி விட்டாள்], நான் சங்கடமான நிலைக்குள்ளானேன்,” என்கிறாள் இளம் அஞ்சலா.
பின்பு சில இளைஞர்கள் தங்களுடைய சரீரங்களைக் குறித்து அளவுக்கு மிஞ்சி அக்கறையாயிருக்கிறார்கள். மெதுவான வளர்ச்சியையுடைய இளைஞர்கள் தங்களுடைய சிறுபிள்ளைத் தோற்றத்தைக் குறித்து ஒடுங்குகிறார்கள், வேகமான வளர்ச்சியுடைய இளைஞர்கள் வயதுவந்தவர்களாக அமையும் தங்களுடைய சரீரத்தையும் அந்த வளர்ச்சியைத் தொடரும் வெட்க உணர்வையும் கண்டு மனக்குழப்பம் அடைகிறார்கள். “நான் பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் போது, எல்லாரையும்விட நான் உயரமாக இருந்தேன். அது எனக்குச் சங்கடமாக இருந்தது. என்னுடைய சிநேகிதி மிகவும் குட்டையானவளாக இருந்தாள், நான் அவளைப் பார்த்து பொறாமைப்படுவதுண்டு,” என்று ஆனி கூறுகிறாள்.
எழுந்து செயல்படு!
சங்கடமான நிலைக்குள்ளாவது வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஒரு பாகம். உண்மைதான், நீ பின்னால் வருத்தப்படக்கூடிய காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க உன்னால் இயன்றதையெல்லாம் செய்ய வேண்டும். உதாரணமாக, “மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான்.” (பிரசங்கி 10:14) பேசுவதற்கு முன்பு சிந்திப்பது சங்கடமான நிலைக்குள்ளாவதிலிருந்து உன்னைக் காத்திடும். (நீதிமொழிகள் 15:28) ஆனால் உன்னுடைய முழு முயற்சியின் மத்தியிலும் அவ்வப்போது உனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் நிலைகள் உருவாகக்கூடும். நீ எவ்விதம் பிரதிபலிக்கிறாய்? உதாரணமாக: நீ எப்பொழுதாவது பனிமீது சறுக்கிச்செல்ல முயன்றிருக்கிறாயா? அப்படியானால், ஆரம்பத்தில் நீ அநேகமாய் சறுக்கிப் பனியில் விழுந்திருக்கக்கூடும்—ஒருவேளை ஒருமுறக்கு மேல் விழுந்திருக்கக்கூடும். ஆனால் அதுதானே உன்னைத் திரும்பவும் பனிமீது சறுக்கிச்செல்வதிலிருந்து தடுத்துநிறுத்தியதா? நீ பனிமீது சறுக்கிச்செல்வதில் வல்லுனனாக இருக்க விரும்புவாயானால் உன்னை தடுத்துநிறுத்தாது!
மக்களோடு உன்னுடைய தொடர்பைப்பற்றியது என்ன? நீ ஏதாவது ஒரு வழியில் உன்னை சங்கடமான நிலைக்குள் காண்பாயானால், மீண்டும் அந்நிலைக்குள்ளாகிவிடுவாய் என்ற பயத்தில் நீ பின்வாங்கிக்கொண்டு, ஆட்களை அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைத் தவிர்ப்பதன் மூலம் ‘பனிமீதே உட்கார்ந்துகொள்கிறாயா’? அப்படியென்றால், சங்கடம் என்ற நிலை உன்னைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது. நம்பிக்கையிழந்த நிலையில் நீ அமர்ந்துவிட்டிருக்கும்போது அருமையான வாய்ப்புகளும் மகிழ்ச்சி தரும் உறவுகளும் உன்னைக் கடந்து சென்றுவிடுகிறது. பிரசங்கி 11:4 கூறுகிறது: “காற்றைக் கவனிக்கிறவன் [வாழ்க்கையின் அநிச்சயங்களை பயத்தோடு எதிர்பார்ப்பவன்] விதைக்க மாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.”
வாழ்க்கையையும் மற்றவர்களுடன் நல்ல உறவையும் அனுபவித்து மகிழ்வதில் சில ஆபத்துகள் இருக்கின்றன. டாக்டர் வேய்ன் W. டையர் உன்னை நீயே ஆட்டிப்படைத்தல் (Pulling Your Own Strings) எழுதினார்: “பயத்தை சந்திக்கும் நடத்தையிலிருக்கும் ஆபத்தை நீ துணிந்து எதிர்ப்பட்டாலொழிய பயத்தைப் போக்குவதில் ஏற்படும் உணர்வை நீ அறிந்துகொள்ளவே முடியாது! ஆகவே, விழும்போது, அதைப் பெரியதாக எண்ணாமல் நடந்துகொள்.
சங்கடமான சூழ்நிலைகளைக் கையாளுதல்
உன்னை மறைத்துக்கொள்ள விரும்பும் அந்தச் சமயங்களை நீ எவ்விதம் கையாளவேண்டும்? ஒரு சில ஆலோசனைகள்: உன்னைக் குறித்து அதிக கவலைப்படுகிறவனாய் இராதே. பதினேழு என்ற பத்திரிகை கூறியதாவது: “நாம் எல்லாரும் நமக்கே கடுமையான தீர்ப்பளித்துக்கொள்ளக் கூடாது.” அதுமட்டுமல்லாமல், சிறிய தவறுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பது ‘தன்னைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணும்’ ஒரு வகையாக இருக்கிறது. (ரோமர் 12:3) நண்பர்கள் முன்னிலையில் நீ ஏதோ முட்டாள்தனமான காரியத்தைச் செய்துவிட்டதாக கற்பனை செய்துகொள். பெவர்லி என்ற ஓர் இளம் பெண் கூறுகிறாள்: “அவர்கள் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் அதுதான் அவர்களுடைய நினைவுக்கு வரும் என்று நீ கருதக்கூடும்.” ஆனால் உன்னுடைய அந்தச் சிறிய தவறு அவர்களுடைய வாழ்க்கையில் அவ்வளவு பெரிய இடத்தை எடுத்துக்கொள்ளும் என்று நீ நினைக்கிறாயா? அப்படி இருக்காது. எனவே சிறிய தவறுகளை மறந்துவிடுவது சிறந்ததல்லவா?
சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்: ஓர் இளைஞனாக அனுபவக்குறைவினால் நீ தவறிழைப்பாய். என்றபோதிலும், நம்முடைய தவறுகளுக்குச் சிட்சிக்கப்படுவது ‘உட்பார்வை அளித்திடக்கூடும்.’ (நீதிமொழிகள் 1:3) ஓர் ஆசிரியரால் அல்லது பெற்றோரால் அடிக்கடி கடிந்துகொள்ளப்படுவாய். அதன் விளைவாகிய தற்காலிக சங்கட நிலைகுறித்து சோர்ந்துபோவதற்குப் பதிலாக தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதன் மூலம் அந்தச் சிட்சையிலிருந்து நன்மை பெற்றிட செயல்படு.—நீதிமொழிகள் 1:7–9.
உன் நகைச்சுவையைக் காத்துக்கொள்: சில சமயங்களில் 15 வயது ஃப்ராங்க் கொடுக்கும் அறிவுரையைப் பின்பற்றுவது நல்லது: “சிரித்து விடுங்கள்.” எனவே உன்னுடைய பாகத்தில் ஏதாவது நடக்கக்கூடாத காரியம் நடந்துவிட்டால், உடனே அதைப் பெருங்குற்றமாக எடுத்துக்கொள்ளாதே. (பிரசங்கி 7:9) பதினெட்டு வயது டெரி சிபாரிசு செய்வது: “மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அதிக சுய உணர்வு கொண்டவனாய் இராதே.” உனக்கு நேரிட்டிருக்கும் காரியத்தை மற்றவர்களுடைய பார்வையில் பார்க்க முயலவேண்டும். இந்தக் “இக்கட்டு நிலை” உனக்கு நாளை—அல்லது அடுத்த வாரம் எப்படி காணப்படும் என்பதைக் கற்பனை செய்து பார். உன்னைக் குறித்து நீயே சிரித்துக்கொள்வது பெரும்பாலும் சங்கடமான நிலையைச் சமாளிக்க உதவும்.
முதல் படியை எடு: இப்படியாக ஃபேத் என்ற ஓர் இளம் பெண் சிபாரிசு செய்கிறாள். ஒருவருக்கு முன் உன்னை சங்கடமான நிலைக்குள் ஆக்கிக்கொள்வாயானால், அந்த நபர் மத்தியில் மீண்டும் இருப்பதற்கு உனக்குக் கஷ்டமாக இருக்கும் என்பது இயல்பானதே. ஆனால் நீயே அந்த முதல் படியை எடுத்து ஆகுமட்டும் கால தாமதமின்றி அந்த நபரை அணுகு. (மத்தேயு 5:23, 24-ஐ ஒப்பிடவும்.) “நீ மனம் திறந்த நபர், காரியங்களை வேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதை அவர் பார்க்கமுடிந்தால் உன் மத்தியில் அவர் தன்னை வசதியாகக் காண்பார்” என்பதை ஃபேத் கண்டுபிடித்தாள்.
உன்னை மற்றவர்களோடு ஒப்பிடாதே: உன்னுடைய தோழர்களெல்லாரும் உயரமாக இருக்கும்போது நீ குள்ளமாக இருப்பது உனக்கு அதிகக் கஷ்டமாக இருக்கலாம். அல்லது மாறாக இருக்கும்போதும் அப்படி இருக்கலாம். (பிரசங்கி 3:1) சரீர முதிர்ச்சி அடைவதற்கான உன்னுடைய சமயம் மற்ற நபரிலிருந்து வித்தியாசமாக இருக்கலாம். உன்னுடைய வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது வீண், ஏனென்றால் எதுவுமே வளர்ச்சியைத் துரிதப்படுத்தப்போவதில்லை, அல்லது தாமதப்படுத்தப்போவதுமில்லை. (கலாத்தியர் 6:4-ஐ ஒப்பிடவும்.) மேலும் நீ விரும்பிய அளவுக்கு நீ வளருவாய் என்பதற்கும் அல்லது தகுந்த உடல் கட்டைக் கொண்டிருப்பாய் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை, எனவே உன்னால் மாற்றமுடியாத காரியத்துக்காக ஏன் சோர்வடைய வேண்டும்? அல்லது இயேசு கேட்டவிதமாகவே: “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத்தேயு 6:27) நீ எப்படிப்பட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கிறாய் என்பதை ஏற்று ஒரு கவர்ச்சியான ஆள்தன்மையை விருத்திசெய்வதற்கு நீ செயல்படும்போது அதிகம் சாதிக்கப்படுகிறது.
நீ நடத்தப்பட விரும்பும் வகையில் மற்றவர்களை நடத்து: மற்றவர்கள் தங்களை சங்கடமான சூழ்நிலையில் அமைத்திடும்போது நீ எவ்விதம் பிரதிபலிக்கிறாய்? அவர்களைப் பரிகசிப்பதில் களிகூருவாயானால் அல்லது, அவர்களுக்கு ஏற்படும் அவல நிலையை ஒலிபரப்பிக்கொண்டிருப்பாயானால், உன்னுடைய விஷயத்தில் அந்நிலை ஏற்படும்போது நீ குறை சொல்லாதே. “ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.” (நீதிமொழிகள் 11:13) இதை நீ மற்றவர்களுடைய விஷயத்தில் செய்தால், ஒருவேளை அவர்கள் உன்னுடைய விஷயத்திலும் அப்படிச் செய்ய தூண்டப்படுவார்கள்.—மத்தேயு 7:12.
உன்னுடைய நம்பிக்கைகளுக்காக உறுதியாயிரு: உன்னுடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வெட்கப்படாதே. மாற்கு 8:38-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் சிந்திக்கச் செய்கின்றன: “என்னைக் குறித்து . . . எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் . . . வெட்கப்படுவார்.” நீ ‘கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரராக’ இருப்பதைப் பாக்கியமாகக் கருது. (1 கொரிந்தியர் 4:10) ஓர் இளைஞன் இப்படியாகச் சொன்னான்: “பைபிள் சத்தியங்களை சொந்தமாக ஆக்கிக்கொள்ளுவதை எவ்வளவுக்கு அதிகமாய் விரும்புகிறாயோ, அவ்வளவாய் அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புவாய்.”
வெட்கத்தை ஏற்படுத்தும் சங்கடமான நிலைமைகள் அவ்வப்போது எழும். ஆனால் இது சம்பவிக்கும்போது, அதை உண்மைநிலையில், சமநிலையுடன் நோக்கு, எல்லாமே நல்லவிதத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே. உன்னுடைய நகைச்சுவைத் திறனைக் காத்துக்கொள். உன்னைக் குறித்து அதிக கவலைப்படுகிறவனாய் இராதே. இந்த ஆலோசனையைப் பொருத்தினால், உனக்குச் சங்கடமான நிலை ஏற்படும் சமயங்களில் உன்னை நீ எளிதில் நிலைநிறுத்திட முடியும். (g88 9⁄22)
[பக்கம் 15-ன் படம்]
சங்கடமான நிலைக்குள் வருவது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பங்கை வகிக்கிறது
[பக்கம் 16-ன் படம்]
இளைஞர் சரீரப்பிரகாரமாக முதிர்ச்சியடைவது வித்தியாசமான வேகத்தில் ஏற்படுகிறது