உங்கள் இளமையை வெற்றிகரமாக்குதல்
அழகு, செல்வம், இளமை—இவற்றில் எதை தெரிந்தெடுப்பீர்கள் என ஓர் ஐரோப்பிய நாட்டில் வாழும் மக்களிடம் கேட்கப்பட்டது. இவற்றில் முதலிடம் வகித்தது இளமை. ஆம், எந்த வயதினராக இருந்தாலும் அனைவரும் இளமைப் பருவத்தையும் 20-களின் ஆரம்ப காலத்தையும் வாழ்க்கையில் வசந்தமாக கருதுகிறார்கள். பிள்ளைப் பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு இளைஞர்கள் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க வேண்டுமென்றே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் எப்படி?
பைபிள் உதவி செய்ய முடியுமா? நிச்சயமாக முடியும் என்பதே பதில். இளைஞருக்கு—ஒருவேளை வேறெந்த வயதினரையும்விட இப்படிப்பட்ட இளம் பிராயத்தினருக்கு—கடவுளுடைய வார்த்தை விசேஷித்த உதவி அளிக்கும் இரண்டு அம்சங்களை இப்பொழுது நாம் ஆராயலாம்.
மற்றவர்களுடன் ஒத்துப்போதல்
யுஜென்ட் 2000 என்பது ஜெர்மனியில் 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் மனப்பான்மைகள், ஒழுக்க நெறிகள், நடத்தை ஆகியவற்றைப் பற்றி விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சுற்றாய்வு அறிக்கை. இளைஞர்கள் பொழுதுபோக்குகளை நாடுகையில்—அதாவது பாட்டு கேட்டல், போட்டி விளையாட்டுகளில் ஈடுபடுதல், அல்லது வெட்டியாக நேரத்தை செலவிடுதல் போன்றவற்றை நாடுகையில்—அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் மற்றவர்களோடுதான் இருக்கிறார்கள் என்பதை அந்தச் சுற்றாய்வு காட்டுகிறது. ஒருவேளை வேறெந்த வயதினரைக் காட்டிலும், இளைஞர்கள் தங்களுடைய சகாக்களுடன் இருப்பதற்கே விரும்புகிறார்கள். ஆகவே, இளமையில் வெற்றிபெறுவதற்குரிய இரகசியங்களில் ஒன்று மற்றவர்களோடு ஒத்துப்போவதாகும்.
ஆனால் மற்றவர்களோடு ஒத்துப்போவது எப்பொழுதும் எளிதல்ல. சொல்லப்போனால், வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினைகள் உண்டாவது மனித உறவுகளிலேயே என்பதை இளம் ஆண்களும் பெண்களும் ஒத்துக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் பைபிள் உண்மையிலேயே அதிக உதவியாக இருக்கிறது. சமநிலையான உறவுகளை வளர்ப்பதற்கு கடவுளுடைய வார்த்தை இளைஞருக்கு அடிப்படை வழிநடத்துதலை அளிக்கிறது. பைபிள் என்ன சொல்கிறது?
மனித உறவுகளில் கடைப்பிடிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நியமங்களில் ஒன்று பொன் விதி என அழைக்கப்படுகிறது: “மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களும் அவர்களை நடத்துங்கள்.” மற்றவர்களை மரியாதையோடும் கண்ணியத்தோடும் தயவோடும் நடத்துவது உங்களையும் அதேபோல நடத்துவதற்கு அவர்களைத் தூண்டுகிறது. அன்பான நடத்தை சச்சரவுகளையும் கவலைகளையும் தணித்துவிடும். நீங்கள் மற்றவர்களுடன் கரிசனையோடு நடந்துகொள்பவர் என தெரிந்தால் அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்வதற்கும் வழிநடத்தக்கூடும். மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது உங்களை மகிழ்ச்சியடையச் செய்வதில்லையா?—மத்தேயு 7:12, ரிவைஸ்டு இங்லிஷ் பைபிள்.
“உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என பைபிள் அறிவுரை கூறுகிறது. உங்களிடம் அன்புகூருவது என்பது உங்களையே கவனித்துக்கொள்வதையும், ஓரளவு—அதிகமாகவும் அல்ல கொஞ்சமாகவும் அல்ல—சுயமரியாதையோடு இருப்பதையும் குறிக்கிறது. இது எப்படி உதவுகிறது? உங்களைப் பற்றி உங்களுக்கே நல்ல அபிப்பிராயம் இல்லையென்றால், நீங்கள் மற்றவர்களிடம் அதிக குறைகாண்பவர்களாக இருக்கலாம். அது நல்ல உறவுகளைப் பாதிக்கிறது. ஆனால் பலமான நட்புறவுகளை வளர்ப்பதற்கு சமநிலையான சுயமரியாதை அடிப்படையாக இருக்கிறது.—மத்தேயு 22:39.
நட்பு வளர ஆரம்பித்தப் பிறகு, அதை பலப்படுத்த இருவருடைய பங்கிலும் முயற்சி தேவை. நட்பிற்காக நேரத்தை செலவழிப்பது உங்களை மகிழ்ச்சிகொள்ள செய்ய வேண்டும், ஏனென்றால் “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது.” கொடுத்தலில் ஒரு வகைதான் மன்னித்தல், சிறுசிறு தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் மற்றவர்களிடம் பரிபூரணத்தை எதிர்பார்க்காமல் இருப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உங்கள் சாந்தகுணம் [“நியாயத்தன்மை,” NW] எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.” சொல்லப்போனால், “கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” உங்களுடைய பலவீனத்தை நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டும்போது நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள்? பைபிள் தரும் நடைமுறையான அறிவுரையை கவனியுங்கள்: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே,” ஏனென்றால் “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்.” உங்களுடைய எண்ணங்கள், பேச்சு, நடத்தை ஆகியவற்றின் மீது நண்பர்கள் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பது உண்மையல்லவா? ஆகவே, பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “தகாத கூட்டுறவு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” மறுபட்சத்தில், “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.”—அப்போஸ்தலர் 20:35, NW; பிலிப்பியர் 4:5; ரோமர் 12:17, 18; பிரசங்கி 7:9; நீதிமொழிகள் 13:20; 27:6; 1 கொரிந்தியர் 15:33, NW.
மற்றனேக இளம் ஆண்கள் பெண்கள் சார்பாக பேசும் மார்கோ இவ்வாறு கூறுகிறார்: “மற்றவர்களோடு ஒத்துப்போவதற்கு பைபிள் தரும் நியமங்கள் பேருதவியாக இருக்கின்றன. வாழ்க்கையில் ஆதாயம் தேடி அலையும் சுயநலவாதிகள் சிலரை எனக்குத் தெரியும். எப்பொழுதும் நம்மைப் பற்றியே அல்ல, மற்றவர்களைப் பற்றி நினைக்கும்படி பைபிள் நமக்கு கற்பிக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, நல்ல மானிட உறவுகளுக்கு இதுவே சிறந்த அணுகுமுறை.”
மார்கோவைப் போல இளைஞர்கள் பைபிளிலிருந்து கற்றுக்கொள்வது இளமையில் மட்டுமல்ல, பிற்பட்ட காலங்களிலும் அவர்களுக்கு உதவுகிறது. எதிர்காலத்தைப் பொறுத்தவரை, இளம் தலைமுறையினருக்கு விசேஷ உதவியாக இருக்கும் மற்றொன்றையும் பைபிளில் நாம் காண்கிறோம்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலை
அநேக இளைஞர்களுக்கு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற துடிப்பு இருக்கிறது. ஒருவேளை வேறெந்த வயதினரையும்விட, என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். வேறெந்த புத்தகத்தையும்விட பைபிள் உலக நிலைமைகளுக்கான காரணங்களை விளக்குகிறது, எதிர்காலத்தில் எதை எதிர்பார்க்கலாம் என்பதை சொல்கிறது. இதைத்தான் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். எப்படி நாம் அவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்?
இளைஞர்கள் இன்றைக்காகவே வாழ்கிறார்கள் என பொதுவாக நம்பப்படுகிறபோதிலும், சற்று வித்தியாசமான கருத்தை சில சுற்றாய்வுகள் காட்டுகின்றன. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இளைஞர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள், பெரும்பாலும் எதிர்காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றி தாங்களாகவே முடிவு எடுக்கிறார்கள். இளம் ஆண்கள் பெண்களில், நான்கு பேரில் மூவர், எதிர்காலத்தைப் பற்றி “அடிக்கடி” அல்லது “மிகவும் அடிக்கடி” சிந்திக்கிறார்கள் என்பதை அத்தாட்சி காட்டுகிறது. பொதுவாக, பெரும்பாலான இளைஞர்கள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறபோதிலும், இளைஞர்கள் அநேகர் எதிர்காலத்தை சற்று கவலையோடுதான் நோக்குகிறார்கள்.
ஏன் இந்தக் கவலை? இந்தக் கால இளைஞரில் அநேகர் ஏற்கெனவே குற்றச்செயல், வன்முறை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளில் உழல்கிறார்கள். மிகவும் போட்டி நிறைந்த இந்தச் சமுதாயத்தில் நிலையான வேலையை கண்டுபிடிப்பதைப் பற்றி இளைஞர்கள் கவலைப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் நல்ல மார்க் எடுக்க வேண்டும், வேலையில் சிறந்த சாதனையாளராக விளங்க வேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்கு இருக்கிறது. 17 வயது பெண் இவ்வாறு புலம்பினாள்: “மற்றவர்களைப் பற்றி துளியும் ஈவிரக்கமில்லாத சுயநலமிக்க சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். எல்லாரும் தங்களுக்கு பிடித்ததையே செய்ய விரும்புகிறார்கள். உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் எப்பொழுதும் நிரூபித்துக் காட்ட வேண்டும், இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.” 22 வயதுடைய மற்றொருவர் சொல்கிறார்: “வாழ்க்கையில் சாதனை படைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள், திருப்தியாக வாழ்கிறார்கள். துரதிர்ஷ்டமானவர்களோ பல்வேறு காரணங்களால் மற்றவர்களைப் போல வெற்றிபெற முடிவதில்லை, பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்.” ஏன் வாழ்க்கை அவ்வளவு போட்டி நிறைந்ததாக இருக்கிறது? வாழ்க்கை எப்பொழுதும் இப்படியேதான் இருக்குமா?
யதார்த்தமான விளக்கம்
சமுதாயத்தை இளைஞர்கள் குழப்பத்தோடு அல்லது கவலையோடு பார்க்கையில், அவர்கள்—அறிந்தோ அறியாமலோ—பைபிளுடன் ஒத்துப்போகிறார்கள். ‘மற்றவர்களைப் பற்றி துளியும் ஈவிரக்கமில்லாத சுயநலமிக்க இந்தச் சமுதாயம்’ நம்முடைய காலத்திற்கு ஓர் அடையாளமாக இருக்கிறது என்பதை கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. தீமோத்தேயு என்ற இளைஞருக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதுகையில், நம்முடைய நாளைப் பற்றி கூறினார்: “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள் வரும்.” (NW) ஏன் கொடிய காலங்கள், ஏன் கையாளுவதற்கு கடினம்? ஏனென்றால் பவுல் தொடர்ந்து எழுதியபடி, ஜனங்கள் “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், . . . நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், . . . கொடுமையுள்ளவர்களாயும் . . . இருப்பார்கள்.” இன்று அநேகர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அச்சுப்பிசகாமல் படம்பிடித்துக் காட்டுகிறதல்லவா?—2 தீமோத்தேயு 3:1-5.
இந்தக் கொடிய காலங்கள் “கடைசி நாட்களில்,” மனித சமுதாயம் முழுவதும் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பு உண்டாகும் என பைபிள் சொல்கிறது. இளைஞராக இருந்தாலும் முதியோராக இருந்தாலும் இந்த மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கும். எப்படிப்பட்ட மாற்றங்கள்? பரலோக அரசாங்கம் வெகு சீக்கிரத்தில் மனித அரசாங்கத்தை நீக்கிவிட்டு அதுவே ஆட்சி செய்யும், அதன் குடிமக்கள் எங்கும் ‘மிகுந்த சமாதானத்தை’ அனுபவிப்பார்கள். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” கவலையும் பயமும் கடந்தகால வாழ்க்கையாகவே இருக்கும்.—சங்கீதம் 37:11, 29.
எதிர்காலத்தைப் பற்றி பைபிள் மாத்திரமே நம்பகமான தகவலை தருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் எதை எதிர்பார்க்கலாம் என்பதை ஓர் இளைஞர் அறிந்துகொள்ளும்போது, அதற்காக அவர் தயாராகலாம், பாதுகாப்பான உணர்வோடு இருக்கலாம், மேலும் தன்னுடைய வாழ்க்கையை அதிக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். இந்த உணர்வு கவலையையும் கஷ்டத்தையும் தணிக்கிறது. இந்த முறையில், இளைய தலைமுறையினருக்குரிய விசேஷ தேவையை—அதாவது சமுதாயத்தைப் புரிந்துகொள்ளவும் எதிர்காலத்தை அறிந்துகொள்ளவும் வேண்டிய விசேஷ தேவையை—பைபிள் பூர்த்தி செய்கிறது.
இளமையில் வெற்றியடைதல்
இளமையில் வெற்றிபெற வைக்கும் பரீட்சை எது? மேம்பட்ட கல்வி, பொருளுடமைகள், புடைசூழ நண்பர்கள்—இதுவா? அநேகர் அப்படி நினைக்கலாம். டீனேஜ் பருவமும் 20-களின் ஆரம்ப பருவமும் ஒருவருடைய பிற்கால வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரமாக அமைய வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், இளமையில் வெற்றி பெறுவது என்பது பிற்கால வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு ஓர் அறிகுறியாக இருக்கலாம்.
நாம் பார்த்தபடி, இளமை பருவத்தை வெற்றிகரமாக்க ஓர் இளைஞருக்கு பைபிள் உதவ முடியும். இப்படி உதவி செய்திருப்பதை அநேக இளைஞர்கள் ஏற்கெனவே அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை அவர்கள் அனுதினமும் வாசித்து வாழ்க்கையில் அதை கடைப்பிடிக்கிறார்கள். (“யெகோவாவின் இளம் ஊழியர் தரும் ஆலோசனை” என்ற பெட்டியை பக்கம் 6-ல் பார்க்கவும்.) சொல்லப்போனால், பைபிள் உண்மையிலேயே இன்றைய இளைஞருக்கு ஏற்ற புத்தகம், ஏனென்றால் ‘தேறினவர்களாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்’ இருப்பதற்கு அது அவர்களுக்கு உதவிசெய்ய முடியும்.—2 தீமோத்தேயு 3:16, 17.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
இளமையில் வெற்றி பெறுவதற்குரிய இரகசியங்களில் ஒன்று மற்றவர்களோடு ஒத்துப்போவதாகும்
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
வேறெந்த வயதினரையும்விட, என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை இளைஞர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்
[பக்கம் 6, 7-ன் பெட்டி]
யெகோவாவின் இளம் ஊழியர் தரும் ஆலோசனை
அலெக்ஸாண்டர் என்பவருக்கு 19 வயது. யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் வளர்ந்துவந்தார். தன்னுடைய மத நம்பிக்கைகளை முழு இருதயத்தோடு பின்பற்றுவதில் அதிக மகிழ்ச்சி காண்கிறார். ஆனால் முன்பு அவர் இப்படி இருந்ததில்லை. அலெக்ஸாண்டரே சொல்கிறார், வாசித்துப் பாருங்கள்:
“சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள், முழுக்காட்டப்படாத இளைஞனாக யெகோவாவின் சாட்சிகளுடன் ஏழு வருஷத்திற்கும் மேலாக கூட்டுறவு வைத்திருந்தேன். அந்தச் சமயத்தில், அரை மனசோடுதான் கடவுளை வணங்கி வந்தேன், ஏதோ கடமைக்காக செய்வது போல இருந்தது. என்னை நானே நேர்மையோடு ஆராய்ந்து பார்க்க எனக்கு தைரியமிருக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.”
பிற்பாடு அலெக்ஸாண்டரின் மனப்பான்மை மாறிவிட்டது. அவர் தொடர்ந்து சொல்கிறார்:
“தினமும் பைபிள் படி, யெகோவாவைப் பற்றி தனிப்பட்ட விதமாக அறிந்துகொள் என்று என்னுடைய அப்பா அம்மாவும், சபையிலுள்ள நண்பர்களும் எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்தி வந்தார்கள். கடைசியில், நான் முயற்சி செய்து பார்க்க முடிவு செய்தேன். டிவி பார்ப்பதை குறைத்துவிட்டேன், விடியற்காலையிலேயே பைபிள் படிப்பது என்னுடைய பழக்கமானது. கடைசியில், பைபிள் என்ன சொல்கிறது என்பதை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். தனி நபராக எனக்கு அது எப்படி உதவி செய்ய முடியும் என்பதை உணர ஆரம்பித்தேன். எல்லாவற்றையும்விட, யெகோவாவைப் பற்றி நான் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார் என்பதை புரிந்துகொண்டேன். அதற்கு நான் செவிசாய்த்தபோது, அவருடன் என்னுடைய தனிப்பட்ட உறவு வளர ஆரம்பித்தது, சபைக்குள் என்னுடைய நட்புறவும் முன்னேறியது. பைபிள் என்னுடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது! யெகோவாவை சேவிக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பைபிளை தினமும் வாசிக்கும்படி நான் சிபாரிசு செய்கிறேன்.”
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா? நீங்கள் பைபிளை தவறாமல் வாசித்து பயனடைய விரும்புகிறீர்களா? நீங்களும் அலெக்ஸாண்டருடைய முன்மாதிரியை பின்பற்றலாம் அல்லவா? அதிக முக்கியத்துவமில்லாத காரியங்களை குறைத்து விடுங்கள், பைபிள் வாசிப்பதை உங்களுடைய அன்றாட பழக்கமாக்குங்கள். நீங்கள் நிச்சயமாகவே பயனடைவீர்கள்.