மக்கள் கூட்டத்தைத் தீ அச்சுறுத்தும்போது
பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களுக்குத் தீ என்பது மன அமைதியைக் குலைக்கும் ஒரு வார்த்தையாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மரணங்களுக்கும் பயங்கரமான காயங்களுக்கும் தீ காரணமாக இருக்கிறது. அடைப்புள்ள ஓரிடத்தில் கூட்டமாய்க் கூடும்போது ஆபத்து விசேஷமாக அச்சுறுத்தலாக இருக்கிறது. தீயின் ஆபத்தைக் கூடியவரை குறைப்பதற்கு இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மாநாடுகள் மற்றும் மற்ற பெரிய கூட்டங்களுக்குப் பொறுப்புள்ளவராயிருப்பவர்கள் என்ன செய்யலாம்? இப்படிப்பட்ட கூட்டத்தின் பாகமாயிருப்பவர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க என்ன செய்யலாம்? உண்மையில் திடீரென்று தீ பிடிக்குமேயானால், உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்க என்ன செய்யப்படலாம்?
இந்த விஷயங்களின் பேரில் கொஞ்சம் தகவலைப் பெற்றுக்கொள்ள, விழித்தெழு! ஐயர்லாந்திலுள்ள தீயணைப்பு அதிகாரி ஒருவரை பேட்டிக் கண்டது. அவர் தீயணைக்கும் படைவீரர்களுக்கு பயிற்சியளிக்கிறார், தீயணைப்பதில் அதிக அனுபவம் பெற்றவர்.
ஒரு நிகழ்ச்சிக்காக கூட்டம் எதிர்பார்க்கப்படுகையில், பொறுப்புள்ளவர்களாயிருப்பவர்கள் காரியங்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கும் கட்டிடம் பாதுகாப்பானது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது முதல் படியாகும். தேவை ஏற்படுமேயானால் வேகமாக தப்பித்துக் கொள்ள கட்டிடத்தில் அனைவருக்கும் போதிய வெளியேறும் வழிகள் இருக்க வேண்டும். மேலுமாக, ஒவ்வொரு வெளியேறும் வழியும் தெளிவாக குறியிடப்பட்டு எந்த வழியடைப்புமில்லாமல் இருத்தல் வேண்டும். எல்லா நடைகூடங்களும் படிக்கட்டு வழியும் எல்லாச் சமயங்களிலும் வழியடைப்புகளில்லாமல் இருத்தல் வேண்டும். அவசர நிலை கதவுகள் வெளிப்பக்கமாகவும் எளிதில் திறப்பதாகவும் இருத்தல் வேண்டும்.
உறுதியாக பொருத்தப்பட்ட இருக்கைகள் இல்லாத கட்டிடங்களில் இருக்கை ஏற்பாடுகள் ஒரு சவாலாக இருக்கக்கூடும். உள்ளூர் தீயணைப்பு விதிமுறைகளுக்கு இசைவாக நாற்காலிகளை வரிசையாகப் போடுவது இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எல்லா அட்டென்டென்டுகளும் வரவேற்பாளர்களும் அவசர நிலை ஏற்படுகையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும் பாதுகாப்புக்குப் பொறுப்புள்ளவர்கள், எல்லாத் தீயணைப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் அவைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். தீ ஏற்பட்ட பின்பு, செயல்முறைகளை வாசிப்பது மிகவும் பிந்தியதாகிவிடும். வெளியேற்றும் செயல்முறைகளை மேற்கொண்ட பின்பு முதல் முக்கியமான காரியம், தீயணைப்புத் துறையை அழைப்பதாகும் என்பதையும்கூட மனதில் வைக்கவும்.
பாதுகாப்பை முன்னேற்றுவிக்க இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆஜராகிறவர்கள் செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
ஆம் நிச்சயமாகவே! பழக்கப்பட்டில்லாத சூழ்நிலைமைகளில் மக்கள் அதிக எளிதில் மருண்டுவிடுகிறார்கள். ஆகவே கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில் கட்டிடத்தின் பொது அமைப்புத் திட்டத்தோடு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும். வெளியேறும் வழிகளும், அவசரநிலை கதவுகளும் இருக்குமிடத்தைக் கவனித்து வைத்துக் கொள்ளவும். மருண்டு விடாதீர்கள். கட்டுப்பாட்டைக் காத்துக்கொள்ளவும். கொடுக்கப்படும் எந்த அறிவுரைகளுக்கும் கவனமாக செவிசாய்த்து அவைகளைப் பின்பற்றவும். கட்டிடத்தைக் காலி செய்கையில் வேகமாக நடக்கவும், ஓடவோ அல்லது தள்ளவோ வேண்டாம்.
வேகமாக வெளியேறுவதன் அவசியத்தை அளவுக்கு அதிகமாக நான் வற்புறுத்த வேண்டியதில்லை. தீ எத்தனை வேகமாக பரவக்கூடும் என்பதை அநேக ஆட்கள் உணருவதில்லை. வயதானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் பிரச்னை இருப்பதை நீங்கள் கண்டால் அவர்களுக்கு உதவி செய்யவும். கட்டிடத்தைவிட்டு வெளியேறிய பின்னர், உங்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருப்பவர்களுக்கு வழியை அடைத்துவிடாதபடிக்கு வெளியேறும் வழியிலிருந்து அப்பால் சென்று விடவும். நீங்கள் வெளியேறிய பின்னர், பாதுகாப்பானது என்பதாக அறிவிப்பு கொடுக்கப்படும் வரையில் கட்டிடத்திற்குள் மீண்டும் பிரவேசிக்க ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள்.
பெற்றோருக்கு உங்கள் ஆலோசனை என்ன?
பெரிய கூட்டங்களில், பெற்றோர் எப்பொழுதும் தங்கள் சிறுபிள்ளைகளைத் தங்களுடன் வைத்துக் கொள்ளவேண்டும் அல்லது அவர்கள் வயது முதிர்ந்த, நம்பிக்கைக்குரிய ஒரு நபரின் பொறுப்பில் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். தீ நெருக்கடியின் போது, காணாமற்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக கூட்டத்தில் தேடிக்கொண்டிருக்கும் குழம்பிப் போன பெற்றோர் எல்லாவிதமான பிரச்னைகளையும் உண்டு பண்ணக்கூடும்.
தீ ஆபத்து அதன் கடுமையான உஷ்ணத்துக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறதா?
இல்லை. தீயில் பொதுவாக கொல்லுவது புகையும் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களுமே ஆகும். உயிரைப் போக்கத்தக்க செறிவுகளுக்குக் குறைவாக இருக்கையிலும்கூட, மிக அதிகமாக வெப்பமூட்டப்பட்ட வாயுக்கள், அவைகளை சுவாசிப்பவர்களின் சுவாச உறுப்புகளையும் நரம்பு மண்டலங்களையும் தாக்கும். இது பகுத்தறிவுக்கு முரணான முறையில் ஆட்களை நடந்துகொள்ளச் செய்யக்கூடும். புகை அடர்த்தியாக இருக்கையில், உங்கள் மூக்கையும் வாயையும் ஒரு கைக்குட்டையால் மூடிக்கொள்ளவும். அது நச்சுத்தன்மையுள்ள வாயுக்களிலிருந்து பாதுகாப்பளிக்காது, ஆனால் குமட்டல் உணர்ச்சியை உண்டுபண்ணக்கூடிய பெரிதான புகை துகள்களை நுழைய விடாமல் தடுக்க உதவி செய்யும்.
புகை மிகவும் அடர்த்தியாக இருக்குமானால், திசை தெரியாமல் குழம்புவதைத் தவிர்க்க ஒரு சுவரின் பக்கமாக இருக்க முயற்சி செய்யவும். உங்களால் ஒரு சுவரை பார்க்கவோ அல்லது தொட்டுணரவோ முடியாவிட்டால், ஒரு சுவரிடமாக வரும்வரை ஒரே திசையில் நடந்து செல்லவும்; பின்னர் ஒரு கதவு அல்லது ஒரு ஜன்னல் வரும் வரையாக அந்த வழியில் செல்லவும். புகை–நிறைந்த ஓர் அறையில், தரைக்கு அருகில் சுவாசிக்கக்கூடிய காற்று அதிகமாக இருப்பதையும் அங்கே நீங்கள் மேம்பட்ட விதமாக பார்க்கமுடிவதையும்கூட நினைவில் கொள்ளவும்.
ஒரு நபரின் உடையில் தீப் பற்றிக் கொண்டால் என்ன செய்யப்படலாம்?
நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான காரியம் ஓடுவதாகும். இது அனற்கொழுந்தை தூண்டிவிட மட்டுமே செய்யும். மாறாக கீழே விழுந்து புரளவும். இது அனற்கொழுந்தை உங்கள் முகத்துக்கு வராமல் தடுத்து தீயை அணைத்துப் போடச் செய்யும்.
எமது வாசகர்களுக்கு ஏதாவது கடைசி வார்த்தை?
தீயில் ஒருபோதும் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பது என் விருப்பம். அது பயங்கரமான ஓர் அனுபவம். ஆனால் நீங்கள் ஒரு தீயில் சிக்கிக்கொண்டால், இந்த ஒரு சில விதிமுறைகள் பயனுள்ளவையாக இருக்கும். மேலும் தீயின் ஆபத்தைக் கவலையுடன் எடுத்துக் கொள்ளவும். அதை அற்பமாக அல்லது விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது அவ்விதமாக இல்லை. (g90 5/22)
[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]
விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் போது, இரவு படுக்கப் போவதற்கு முன்னால் அருகாமையில் அவசரமாக வெளியேறும் வழி எங்கே இருக்கிறது என்பதை எப்போதும் பார்த்து வைத்துக் கொள்கிறீர்களா?