பைபிளின் கருத்து
விஞ்ஞானம் பைபிளை வழக்கற்று போனதாக்கிவிட்டதா?
பிரபஞ்சத்தைப் பற்றிய முன்னேற்றமடைந்த புரிந்துகொள்ளுதலோடு விஞ்ஞானம், பைபிளை கட்டுக்கதைகளும் பழங்கதைகளும் அடங்கிய ஒரு நூலாக மாற்றிவிட்டதா? அநேக ஆட்கள் இன்று அவ்விதமாக நினைக்கிறார்கள். நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒருவேளை, அநேகரைப் போல, உங்கள் இளமைப் பருவம் முதற்கொண்டே அவ்விதமாக நினைக்கும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டு, ஒருவேளை உண்மையில் அந்தக் கருத்தை ஒருபோதும் ஆராயாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை இப்பொழுது ஆராயும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். இயற்கையான பிரபஞ்சத்தைப் பற்றி பைபிளில் கூறப்பட்டுள்ள ஒரு கூற்றை, ஓர் உதாரணத்தை மாத்திரம் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கூற்று, அந்நாளில் வல்லுநர்கள் சொல்லிக் கொண்டிருந்ததற்கு நேர் எதிர்மாறாக இருந்தது மட்டுமல்லாமல், ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னால் இன்னும் விஞ்ஞானிகள் சொல்லிக்கொண்டிருந்ததற்கும் அது எதிர்மாறாகவே இருந்தது.
ஈர்ப்பு சக்தி பற்றிய விஷயம்
பூமியை எது தாங்கிக்கொண்டிருக்கிறது? சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது எது? இந்தக் கேள்விகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதரின் அக்கறையை தூண்டி வந்திருக்கிறது. பூமியைப் பற்றியதில், பைபிள் எளிமையான ஒரு பதிலைக் கொண்டிருக்கிறது. யோபு 26:7-ல் கடவுள், “பூமியை அந்தரத்திலே தொங்க” வைக்கிறார் என்பதாகச் சொல்கிறது. மூல எபிரெயுவில் அந்தரத்திலே (பெலிமா) என்பதற்குரிய வார்த்தையின் நேர்பொருள் “எதன் மீதும் அல்ல” என்பதாகும். இது பைபிளில் ஒரே ஒரு முறையே வருகிறது. பூமியை வெறுமையான இடைவெளி சூழ்ந்துகொண்டிருப்பதாக இது அளிக்கும் வருணனை விசேஷமாக அதன் காலத்துக்கு “குறிப்பிடத்தக்க ஒரு காட்சி”யாக நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது.a
அந்நாட்களில் பெரும்பாலான ஆட்கள் இயலுலகை இப்படியாக கற்பனை செய்து பார்க்கவில்லை. ஓர் இராட்சத ஆமையின் முதுகின் மீது நின்றுகொண்டிருந்த யானைகள் பூமியைத் தாங்கிக்கொண்டிருந்தது என்பது ஒரு பழங்கால கருத்தாக இருந்தது.
புகழ்பெற்ற கிதேக்க தத்துவஞானியும் பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டின் விஞ்ஞானியுமான அரிஸ்டாட்டில், பூமி வெறுமையான விண்வெளியில் ஒருபோதும் தொங்கிக் கொண்டிருக்கமுடியாது என்பதாக கற்பித்தார். மாறாக, வானொளிக் கோளங்கள் ஒவ்வொன்றும் உறுதியான ஒளி ஊடுருவத்தக்க கோளங்களின் மேற்பரப்பின் மீது ஒட்ட வைக்கப்பட்டிருப்பதாக அவர் கற்பித்தார். கோளம் கோளத்துக்குள்ளேயே நெருங்கி இருந்தது. பூமி உள்தொலைவில் இருந்தது. வெளித்தொலைவு கோளம் நட்சத்திரங்களை பிடித்திருந்தது. கோளம் ஒன்றுக்குள் ஒன்று சுற்றியபோது, அவைகளின் மீதிருந்த பொருட்கள்—சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள்—வானத்தின் குறுக்காக சுற்றி வந்தது.
பூமி உண்மையில் ‘அந்தரத்திலே தொங்குகிறது’ என்ற பைபிள் கூற்று அரிஸ்டாட்டிலுக்கு 1,100-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகச் சொல்லப்பட்டது. என்றபோதிலும் அரிஸ்டாட்டிலே அவருடைய நாளில் முன்னணி சிந்தனையாளராக கருதப்பட்டார். அவருடைய மரணத்துக்குப் பின் சுமார் 2,000 ஆண்டுகளாக அவருடைய கருத்துக்களே உண்மையாக இன்னும் போதிக்கப்பட்டு வந்தன! தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வது போல பொ.ச. 16-வது மற்றும் 17-வது நூற்றாண்டுகளில், அரிஸ்டாட்டிலின் போதகங்கள் சர்ச்சின் பார்வையில் “சமய கொள்கையின் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.”
பதினாறாவது–நூற்றாண்டு தத்துவஞானி கியார்டானோ ப்ரூனோ, நட்சத்திரங்கள் “ஒற்றை தூபி மாடத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கின்றன” என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க துணிந்தார். “இது [நட்சத்திரங்கள்] விண்ணுலக மேற்பரப்போடு ஒரு நல்ல பசைப்பொருளினால் ஒட்ட வைக்கப்படாவிட்டாலோ அல்லது மிக தடித்த ஆணியால் அடிக்கப்படாவிட்டாலோ அவை நம் மீது கல்மழை மாதிரி வந்து விழும் என்பதாக பிள்ளைகள் ஒருவேளை கற்பனை செய்துகொள்ளக்கூடிய ஒரு முட்டாள்தனமான கருத்து” என்பதாக அவர் எழுதினார். ஆனால் அரிஸ்டாட்டிலோடு அபிப்பிராய பேதம் கொள்வது அந்நாட்களில் ஆபத்தான விளையாட்டாக இருந்தது—பிரபஞ்சத்தைப் பற்றிய சமய மாறுபாடான கருத்துக்களை பரப்பியதற்காக சர்ச் ப்ரூனோவை உயிரோடு எரிக்கும்படிச் செய்தது.
இயலுலக குழம்பில்
தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதோடு, அதிகமான வானாய்வாளர்கள் அரிஸ்டாட்டிலை கேள்வி கேட்க ஆரம்பித்தனர். பூமியைச் சுற்றி சுழலும் கோளங்களோடு சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் இணைக்கப்படாவிட்டால், எது அவைகளை இழுத்துப் பிடிக்கவும் சுற்றிவரவும் செய்யக்கூடும்? பதினேழாவது–நூற்றாண்டு கணித வல்லுநர் ரெனி டிஸ்கார்டிஸ் தன்னிடம் விடை இருப்பதாக நினைத்தார். நமக்கும் மற்ற வானொளி கோளங்களுக்குமிடையே உள்ள இடைவெளி காலியாக இருக்க முடியாது என்ற அரிஸ்டாட்டிலின் கருத்தை அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே பிரபஞ்சம் ஒளிபுகும் தன்மையுள்ள திரவத்தால்—ஒருவிதமான இயலுலக குழம்பினால் நிறைந்திருக்கிறது என்பதாக அவர் உரிமைப் பாராட்டினார்.
இந்தத் தத்துவம் இரண்டு பிரச்னைகளை தீர்ப்பதாக தோன்றியது. ஒன்று, வானொளி கோளங்களை ‘இழுத்துப் பிடித்திருக்க’ எதையோ அளிப்பதாய் இருந்தது. அவை அனைத்தும் ஒரு குழம்பினால் அந்தரத்திலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன! மற்றொன்று இது கோளங்களின் இயக்கங்களை விளக்க உதவியது. கோள்கள், திரவத்தால் பெருநீர்ச்சுழிகள் அல்லது நீர்ச்சுழற்சியின் பிடிப்பில் சிக்கிக்கொண்டிருக்கின்றன, இது அவைகளை தங்கள் கோள்வீதியில் சுழன்றுவரும்படிச் செய்தது என்பதாக டிஸ்கார்டிஸ் கருதினார். “நீர்சுழற்சியின் தத்துவம்” என்பதாக அழைக்கப்பட்ட இது இன்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் சில தேசங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வில் இதுவே ஆதிக்கம் செலுத்தி வந்த தத்துவமாக இருந்திருக்கிறது.
அநேக விஞ்ஞானிகள் இதைவிட புதிய ஒன்றை விரும்பினார்கள்: 1687-ல் பிரசுரிக்கப்பட்ட சர்வலோக ஈர்ப்பு சக்தியின் ஐசக் நியூட்டனின் விதி. கோளங்களை வானில் இழுத்துப் பிடித்திருக்க இயந்திர நுட்பமுள்ள, தொட்டுணரக்கூடிய பொருட்கள் அல்லது வஸ்துக்கள் தேவையில்லை என்பதாக நியூட்டன் உறுதிப்பட கூறினார். அவைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி கோள் வீதியில் அவைகளை இழுத்துப் பிடித்திருப்பது ஈர்ப்பு சக்தியே. உண்மையில் அவை காலியான இடைவெளியில் அந்தரத்திலே தொங்கிக்கொண்டிருந்தன. நியூட்டனின் கூட்டாளிகளில் அநேகர் ஈர்ப்பு சக்தி கருத்தை ஏளனஞ் செய்தனர். விண்வெளி வெறுமையாக, பெரும்பாலும் காலியாக இருப்பதை நம்புவதை நியூட்டனும்கூட கடினமாகக் கண்டார்.
என்றபோதிலும் நியூட்டனின் கருத்துகளே கடைசியில் வெற்றி பெற்றன. பூமி ‘அந்தரத்திலே தொங்கிக் கொண்டிருக்கிறது’ என்பதாக பைபிள் நேர்த்தியாக எளிமையோடு சொன்னப் பின்பு சுமார் 32 நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கோள்களை இழுத்துப் பிடித்திருப்பது என்ன என்பது பற்றிய இந்தக் கேள்வி படித்து தேர்ந்த மற்றும் புகழ் மிக்க விஞ்ஞானிகள் மத்தியில் சூடான வாக்குவாதங்களை எழுப்பியிருக்கிறது என்பதை மறந்துவிடுவது நமக்கு மிக சுலபமாக இருக்கிறது. காரியங்களை அவ்விதமாக தெரிவிக்க யோபு எவ்விதமாக அறிந்திருந்தான்? எந்த ஒரு பொருளும் பூமியை இழுத்துப் பிடித்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வர “வல்லுநர்களுக்கு” 3,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் எடுத்திருக்கையில், அவன் ஏன் அவ்விதமாக சொல்ல முடிந்தது?
பைபிள் ஏன் அதனுடைய காலத்திற்கு முந்தி இருக்கிறது?
பைபிள் நியாயமான பதிலை தருகிறது. 2 தீமோத்தேயு 3:16-ல் நாம் வாசிக்கிறோம்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது.” ஆக, பைபிள் மனித ஞானத்தின் விளைவாக இல்லாமல், நமக்குத் துல்லிபமாக தெரிவிக்கப்படும் சிருஷ்டிகருடைய எண்ணங்களாக இருக்கின்றன.
பைபிளின் உரிமைப்பாராட்டல் உண்மையா என்பதை நீங்கள்தாமே கண்டுபிடிப்பது இன்றியமையாத முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13) நம்மை வடிவமைத்து சிருஷ்டித்தவருடைய எண்ணங்களை எவ்விதமாக தெரிந்துகொள்ளமுடியும். எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது மற்றும் தொந்தரவுள்ள இந்த உலகில் எவ்விதமாக மகிழ்ச்சியான பலன்தரத்தக்க வாழ்க்கையை நடத்த முடியும் என்பதை நமக்குச் சொல்ல வேறு என்ன மேம்பட்ட ஊற்றுமூலம் இருக்கமுடியும்? (g90 8/8)
[அடிக்குறிப்பு]
a பழைய ஏற்பாட்டின் இறையியல் உலகபுத்தகம் சொல்கிறது: “யோபு 26:7, அப்போது அறியப்பட்டிருந்த உலகை விண்வெளியில் தொங்கிக் கொண்டிருப்பதாக கருத்தைக் கவரும் வகையில் வருணித்து, இவ்விதமாக எதிர்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகளை முன்கூட்டியே குறிப்பிடுகிறது.”