அறிவியலும் பைபிளும் உண்மையில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவா?
கோபர்னிகஸும் கலீலியோவும் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கலீலியோவுக்கும் கத்தோலிக்க சர்ச்சுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கான விதைகள் விதைக்கப்பட்டன. அண்டத்தின் மையமாக இருப்பது பூமியே என்ற கோட்பாட்டை பூர்வ கிரேக்கர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். தத்துவஞானியான அரிஸ்டாட்டில் (பொ.ச.மு. 384-322), வானவியல் நிபுணரும் ஜோதிடருமான தாலமி (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு) ஆகியோர் இக்கோட்பாட்டைப் பரப்பியிருந்தனர்.a
அண்டத்தைப் பற்றிய அரிஸ்டாட்டிலின் கோட்பாடு, கிரேக்க கணித நிபுணரும் தத்துவ ஞானியுமான பித்தகோரஸுடைய (பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டு) கருத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. வட்டமும் கோளமும் முழுநிறைவான வடிவங்கள் என்ற பித்தகோரஸின் கண்ணோட்டத்தை அரிஸ்டாட்டில் ஏற்றுக்கொண்டார். அதன் அடிப்படையில், வானங்கள் என்பது அடுக்கடுக்கான வெங்காயத் தோல்கள் போல அடுக்கடுக்கான கோளங்களைக் கொண்டவை; ஒவ்வொரு அடுக்கும் படிகக் கற்பாறையால் ஆனது; மையத்தில் பூமி இருக்கிறது; நட்சத்திரங்கள் வட்டப் பாதைகளில் நகர்கின்றன; கடைசி கோளத்தில் இருக்கிற மீமானிட சக்தி அவற்றை சுழற்றி விடுகிறது என்றெல்லாம் அரிஸ்டாட்டில் நம்பினார். சூரியனும் மற்ற வான் கோள்களும் குறைபாடற்றவை, எவ்வித களங்கமோ கறைகளோ இல்லாதவை, மாற்றத்துக்கு உட்படாதவை என்றும் அவர் நம்பினார்.
அரிஸ்டாட்டிலின் கோட்பாடு தத்துவஞானத்தின் வெளிப்பாடாக இருந்தது, அது அறிவியல் சார்பற்றது. பூமி சுற்றுகிறது என்ற கருத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என அவர் கருதினார். அதுமட்டுமல்ல, வெற்றிடம் அல்லது வெட்டவெளி ஒன்று இருக்கிறது என்ற கருத்தையும் அவர் மறுத்தார். காரணம், பூமி சுற்றினால் அது உராய்வினால் பாதிக்கப்படும்; அதோடு, தொடர்ச்சியாக விசை அளிக்கப்படாவிட்டால் அது சுற்றுவதை நிறுத்திவிடும் என்று அவர் நம்பினார். அந்தக் காலத்தில் அறியப்பட்டிருந்த விஷயங்களுக்குப் பொருத்தமாக இருந்ததால் அரிஸ்டாட்டிலின் கோட்பாடு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 16-ம் நூற்றாண்டில்கூட, பிரெஞ்சு தத்துவஞானியான ஷான் பாடன் அந்தப் பிரபல கருத்து சம்பந்தமாக இவ்வாறு கூறினார்: “அதிக கனமாகவும், பெரிதாகவும் உள்ள பூமி . . . தன்னைத் தானேயும், சூரியனையும் சுற்றி வருகிறதென பகுத்தறிவுள்ள அல்லது கொஞ்சமாவது இயற்பியல் அறிவுள்ள எவரும் நம்ப மாட்டார்; ஏனென்றால் பூமி லேசாக அசைந்தால் கூட, நகரங்களும் கோட்டைகளும் பட்டணங்களும் மலைகளும் தகர்ந்து விழுந்து அழிந்துவிடும்.”
அரிஸ்டாட்டிலை சர்ச் ஆதரிக்கிறது
கலீலியோவுக்கும் சர்ச்சுக்கும் இடையேயான மோதலுக்கு மற்றொரு சம்பவமும் காரணமாக இருந்தது. இது 13-ம் நூற்றாண்டில் நடந்தது. கத்தோலிக்க அதிகாரியான தாமஸ் அக்வினாஸ் (1225-74) அதில் உட்பட்டிருந்தார். அரிஸ்டாட்டில் மீது அக்வினாஸ் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ஆகவே அவரை மிகச் சிறந்த தத்துவஞானி என்றழைத்தார். அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை சர்ச் போதனையோடு ஒன்றிணைக்க அக்வினாஸ் ஐந்து வருடங்கள் அரும்பாடுபட்டார். இவ்வாறு, கலீலியோவின் காலத்திற்குள்ளாக, “அரிஸ்டாட்டிலின் கொள்கையும், சர்ச் போதனையும் சேர்ந்த கலவையான அக்வினாஸின் இறையியலே ரோம சர்ச்சுக்கு அடிப்படையாக ஆனது” என கலீலியோவின் தவறு (ஆங்கிலம்) என்ற நூலை எழுதிய வாட் ரோலாண்ட் குறிப்பிடுகிறார். அந்தக் காலத்தில் விஞ்ஞான சமுதாயம் என்று தனியாக எதுவும் இல்லை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். கல்வி, மதம், அறிவியல் ஆகியவற்றின் மொத்த அதிகாரமும் சர்ச்சிடம் இருந்தது.
சர்ச்சுக்கும் கலீலியோவுக்கும் இடையேயான மோதலுக்கு முக்கிய காரணம் இதுதான். வானவியலில் ஆர்வம் காட்டுவதற்கு முன்னரே கலீலியோ அசைவியக்கத்தைக் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தார். பெரிதும் மதிக்கப்பட்ட அரிஸ்டாட்டிலின் ஊகங்கள் பலவற்றின் பேரில் அது சந்தேகத்தை எழுப்பியது. இதெல்லாவற்றையும் விட, அண்டத்தின் மையத்தில் சூரியன் இருக்கிறது என்ற கோட்பாட்டை கலீலியோ விடாமுயற்சியோடு ஆதரித்ததும், அது வேதப்பூர்வமானது என்று உறுதிப்படுத்தியதும்தான் 1633-ல் கத்தோலிக்க நீதிமன்றத்தால் அவர் விசாரிக்கப்படுவதற்கு வழிநடத்தியது.
தன் வாதத்தை நிரூபிக்கையில், கலீலியோ கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிள் மீது தனக்கிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். பைபிள் சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது என்றும், சூரியன் நகர்வதைப் பற்றி குறிப்பிடுவதைப் போல தோன்றும் பைபிள் வசனங்களை எல்லாம் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வாதாடினார். அவருடைய வாதங்களால் எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. கிரேக்க தத்துவஞானத்தின் அடிப்படையில் பைபிளுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்க மறுத்ததால் அவர் கண்டனம் செய்யப்பட்டார்! 1992 வரை கலீலியோவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கத்தோலிக்க சர்ச் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
இந்தச் சம்பவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கலீலியோவுக்கு பைபிள் மீது எந்த சந்தேகமும் இருக்கவில்லை. மாறாக, அவர் சர்ச் போதனைகளின் மீதுதான் சந்தேகத்தை எழுப்பினார். மத எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “கலீலியோவின் விஷயத்திலிருந்து, பைபிள் சத்தியங்களை சர்ச் மிக உறுதியாகப் பின்பற்றியது போல் தோன்றவில்லை; மாறாக, அந்தளவு உறுதியாகப் பின்பற்றாதது போலவே தோன்றுகிறது.” இறையியல் கோட்பாடுகள் மீது கிரேக்க தத்துவம் செல்வாக்கு செலுத்த சர்ச் அனுமதித்தது; இவ்வாறு, பைபிள் போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு பாரம்பரியத்திற்கு தலைவணங்கியது.
இவை அனைத்தும் பைபிளின் எச்சரிக்கையை நம் மனதிற்குக் கொண்டு வருகிறது: “லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”—கொலோசெயர் 2:8.
இன்றும்கூட, கிறிஸ்தவ மண்டலத்தைச் சேர்ந்த அநேகர் பைபிளுக்கு முரண்படும் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தொடர்ந்து ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்கிறார்கள். படைப்பை பற்றிய ஆதியாகமப் பதிவுக்குப் பதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதை இதற்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். இதன் மூலம் சர்ச்சுகள் டார்வினை நவீன நாளைய அரிஸ்டாட்டிலாகவும் பரிணாமத்தை முக்கிய மத நம்பிக்கையாகவும் ஆக்கியிருக்கின்றன.b
மெய்யான அறிவியல் பைபிளோடு ஒத்துப்போகிறது
முன்குறிப்பிடப்பட்ட விஷயங்கள் நம் அறிவியல் ஆர்வத்தை எவ்விதத்திலும் குலைத்துப் போடக்கூடாது. சொல்லப்போனால், கடவுளுடைய படைப்பிலிருந்து கற்றுக்கொள்ளுமாறும், நாம் பார்ப்பவற்றிலிருந்து அவருடைய மலைக்க வைக்கும் குணங்களைப் பகுத்துணருமாறும் பைபிளே நமக்கு அழைப்பு விடுக்கிறது. (ஏசாயா 40:26; ரோமர் 1:20) ஆனால் அறிவியலைக் கற்றுக்கொடுப்பதற்காக பைபிள் எழுதப்படவில்லை. மாறாக, கடவுளுடைய தராதரங்களையும் படைப்பினால் கற்றுத்தர முடியாத அவருடைய ஆளுமையையும், மனிதர்களுக்கான அவருடைய நோக்கத்தையும் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. (சங்கீதம் 19:7-11; 2 தீமோத்தேயு 3:16) இருப்பினும், இயற்கை நிகழ்வுகளைப் பற்றி பைபிள் எப்போதும் மிகத் துல்லியமாகக் குறிப்பிடுகிறது. கலீலியோகூட இவ்வாறு குறிப்பிட்டார்: “பரிசுத்த வேதாகமம், இயற்கை ஆகிய இவ்விரண்டுமே கடவுளால் உண்டானவை . . . இரண்டு உண்மைகள் ஒன்றோடொன்று ஒருபோதும் முரண்பட முடியாது.” பின்வரும் உதாரணங்களை கவனியுங்கள்.
நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இயக்கத்தைவிட மிக அடிப்படையான விஷயம், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பருப்பொருட்களும் புவியீர்ப்பு விசை போன்ற சட்டங்களால் கட்டுப்பட்டிருப்பதே ஆகும். இயற்கைச் சட்டங்களைப் பற்றிய பைபிள் சாரா கருத்துகளில் அதிக பழமையானது பித்தகோரஸால் குறிப்பிடப்பட்டது. இந்த அண்டத்தில் உள்ள பொருட்களின் இயக்கத்தை கணிதவியல் சார்ந்த கணக்கீடுகள் மூலம் விளக்க முடியும் என அவர் நம்பினார். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கலீலியோ, கெப்லர், நியூட்டன் போன்றவர்கள் பருப்பொருள் என்பது பகுத்தறிவுக்கு ஒத்த சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை நிரூபித்தனர்.
இயற்கைச் சட்டங்களைப் பற்றிய முதல் பைபிள் குறிப்பு யோபு புத்தகத்தில் காணப்படுகிறது. சுமார் பொ.ச.மு. 1600-ல் யோபுவிடம் கடவுள் இவ்வாறு கேட்டார்: ‘வானத்தின் நியமங்களை [சட்டங்களை] நீ அறிவாயோ?’ (யோபு 38:33) பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எரேமியா புத்தகம் யெகோவாவை ‘சந்திர நட்சத்திர நியமங்களையும்’ ‘வானத்துக்கும் பூமிக்குமான நியமங்களையும்’ படைத்தவர் என குறிப்பிடுகிறது. (எரேமியா 31:35; 33:25) இந்தக் குறிப்புகளைப் பற்றி பைபிள் விளக்கவுரையாளர் ஜி. ராலன்சன் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்த சடப்பொருளாலான பூமிக்கே உரிய சட்டங்கள் இருக்கின்றன என்பதை நவீன அறிவியல் உறுதிப்படுத்தும் அதே அளவிற்கு பைபிள் எழுத்தாளர்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.”
இந்த அண்டத்தில் உள்ளவற்றை வழிநடத்தும் சட்டங்களைக் குறித்து பித்தகோரஸ் சொன்னதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யோபு புத்தகத்தில் அது சம்பந்தமாக எழுதப்பட்டுவிட்டது. இயற்பியல் உண்மைகளை வெளிப்படுத்துவது மட்டுமே பைபிளின் நோக்கமல்ல, மாறாக, இயற்பியல் சட்டங்களை ஏற்படுத்த வல்லவரான யெகோவாவே சகலத்தையும் படைத்தவர் என நமக்கு உணர்த்துவதுதான் அதன் முக்கியமான நோக்கம் என்பதை நினைவில் வையுங்கள்.—யோபு 38:4, 13; 42:1, 2.
இப்போது மற்றொரு உதாரணமாகிய தண்ணீரை நாம் சிந்திக்கலாம். பூமியிலுள்ள தண்ணீர் ஒருவகை சுழற்சிக்கு உள்ளாகின்றன. எளிமையாக விளக்க வேண்டுமென்றால், கடல் நீர் ஆவியாகி, மேகங்களாக உருவாகி, மழையாகவோ, பனியாகவோ பூமியில் விழுந்து, கடைசியில் கடலுக்குத் திரும்புகிறது. இந்தச் சுழற்சியைப் பற்றி குறிப்பிடும் பைபிள் சாராத பதிவுகளில் மிகப் பழமையானவை பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பைபிள் இதைப் பற்றி குறிப்பிட்டுவிட்டது. உதாரணமாக, பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டில் சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.”—பிரசங்கி 1:7.
அதேபோல், தாழ்மையான மேய்ப்பராகவும் விவசாயியாகவும் இருந்த ஆமோஸ் தீர்க்கதரிசி, யெகோவா “சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்” என பொ.ச.மு. 800-ல் எழுதினார். (ஆமோஸ் 5:8) சாலொமோன், ஆமோஸ் ஆகிய இருவரும் எந்த சிக்கலான, தொழில்நுட்ப பதங்களையும் பயன்படுத்தாமல் தண்ணீர் சுழற்சியை திருத்தமாக விவரித்தார்கள்; அதேசமயத்தில் இருவரும் சற்று வித்தியாசமான கண்ணோட்டங்களில் விவரித்தார்கள்.
கடவுள் “பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார்,” அல்லது ஈஸி டு ரீட் வர்ஷன் குறிப்பிடுகிறபடி, “வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்க விட்டார்” என பைபிள் சொல்கிறது. (யோபு 26:7) பொ.ச.மு. சுமார் 1600-ல் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட சமயத்தில் அறியப்பட்டிருந்த விஷயங்களை கவனத்தில் கொள்கையில், ஒரு கனமான பொருள் எந்தவித ஆதாரமும் இன்றி வெட்டவெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று உறுதியாக சொன்னவர் கண்டிப்பாக தனிச்சிறப்பானவரே. முன்பு குறிப்பிட்டபடி, அது எழுதப்பட்டு 1,200 ஆண்டுகளுக்குப் பிற்பாடு வாழ்ந்த அரிஸ்டாட்டில்கூட வெற்றிடம் இருக்கிறதென்ற கோட்பாட்டை மறுத்தாரே!
பகுத்தறிவுக்கு ஒத்ததாகத் தோன்றிய தவறான கணிப்புகள் பிரபலமாயிருந்த காலத்திலேயே பைபிள் இப்படிப்பட்ட திருத்தமான குறிப்புகளைச் சொல்லியிருப்பது உங்களை வியப்பில் ஆழ்த்தவில்லையா? சிந்தித்துப் பார்த்தால், பைபிள் கடவுளால் ஏவப்பட்டது என்பதற்கு இது மற்றொரு ஆதாரம். ஆகவே, கடவுளுடைய வார்த்தைக்கு முரண்படுகிற எந்தப் போதனையாலும் கோட்பாட்டாலும் பாதிக்கப்படாமல் இருப்பது ஞானமுள்ள காரியம். வரலாறு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறபடி, மாமேதைகளுடைய தத்துவங்களாக இருந்தாலும், அவை வந்து கொண்டும் போய்க்கொண்டும்தான் இருக்கும், ஆனால் “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.”—1 பேதுரு 1:25.
[அடிக்குறிப்புகள்]
a பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் சாமோஸை சேர்ந்த கிரேக்கரான அரிஸ்தர்கஸ், சூரியன்தான் அண்டத்தின் மையமாக இருக்கிறது என்ற கோட்பாட்டை உருவாக்கினார். ஆனால் இவருடைய கருத்துக்களுக்குப் பதிலாக அரிஸ்டாட்டிலுடைய கருத்துக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
b இவ்விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தில் “அநேகர் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதேன்?” என்ற தலைப்பில் 15-ம் அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி/படங்கள்]
புராட்டஸ்டன்டுகளின் கருத்து
புராட்டஸ்டன்டு சீர்திருத்த தலைவர்களும்கூட, அண்டத்தின் மையத்தில் சூரியன் இருக்கிறது என்ற கோட்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்ட்டின் லூத்தர் (1497-1546), பிலிப் மெலாங்தன் (1497-1560) மற்றும் ஜான் கால்வின் (1509-64) ஆகியோர் அவர்களில் சிலர். கோபர்னிகஸை பற்றி லூத்தர் இவ்வாறு கூறினார்: “இந்த முட்டாள், வானவியல் அறிவியலையே தலைகீழாக்கிப் போட விரும்புகிறான்.”
யோசுவா 10-ம் அதிகாரத்தில் சூரியனும் சந்திரனும் ‘தரித்து நின்றது’ என குறிப்பிடும் சில பைபிள் வசனங்களை இந்தச் சீர்திருத்தவாதிகள் சொல்லர்த்தமாகப் புரிந்து கொண்டு விவாதித்தனர்.c இந்தச் சீர்திருத்தவாதிகள் ஏன் இதில் விடாப்பிடியாக இருந்தனர்? புராட்டஸ்டன்டு சீர்திருத்த இயக்கம் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் பிடியிலிருந்து விடுபட்டபோதிலும், அரிஸ்டாட்டில் மற்றும் அக்வினாஸ் ஆகியோரின் “அதிகாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை,” அவர்களுடைய கருத்துக்கள் “கத்தோலிக்கராலும் புராட்டஸ்டன்டினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என கலீலியோவின் தவறு என்ற நூல் கூறுகிறது.
[அடிக்குறிப்பு]
c “சூரிய உதயம்,” “சூரிய அஸ்தமனம்” போன்ற வார்த்தைகள் விஞ்ஞான ரீதியில் பார்த்தால் தவறானவையே. இருந்தாலும், பூமிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கையில் பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் அப்படிப்பட்ட வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாயும், சரியானதாயும் இருக்கின்றன. அதேபோல, யோசுவாவும் வானவியலைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கவில்லை; தான் பார்த்ததை அப்படியே அவர் அறிக்கை செய்தார், அவ்வளவுதான்.
[படங்கள்]
லூத்தர்
கால்வின்
[படத்திற்கான நன்றி]
Servetus and Calvin, 1877 என்ற நூலிலிருந்து
[பக்கம் 4-ன் படம்]
அரிஸ்டாட்டில்
[படத்திற்கான நன்றி]
A General History for Colleges and High Schools, 1900 என்ற நூலிலிருந்து
[பக்கம் 5-ன் படம்]
தாமஸ் அக்வினாஸ்
[படத்திற்கான நன்றி]
Encyclopedia of Religious Knowledge, 1855 என்ற நூலிலிருந்து
[பக்கம் 6-ன் படம்]
ஐசக் நியூட்டன்
[பக்கம் 7-ன் படம்]
3,000 ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் தண்ணீர் சுழற்சியை பைபிள் விவரித்தது