அறிவியலும் மதமும் ஒரு சச்சரவின் ஆரம்பம்
அந்த 70 வயது வானவியல் நிபுணர் மரணப் படுக்கையில், வாசிப்பதற்குத் திணறிக் கொண்டிருந்தார். அவருடைய கட்டுரையின் கையெழுத்துப் பிரதிகள் அவர் கையில் இருந்தன, அவை வெளியிட தயாராக இருந்தன. அவருக்குத் தெரிந்திருந்ததோ இல்லையோ, அவருடைய கட்டுரை இந்த அண்டத்தைப் பற்றிய மனிதரின் கண்ணோட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவிருந்தது. கிறிஸ்தவ மண்டலத்தில் ஒரு சூடான சர்ச்சை கிளம்புவதற்கும் அது அடிகோலியது. இன்று வரை அதன் பாதிப்புகள் இருந்து வருகின்றன.
நிக்கோலாஸ் கோபர்னிகஸ் என்பவரே மரணப் படுக்கையிலிருந்த அந்த நிபுணர், இவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கர். இது நடந்தது 1543-ம் ஆண்டு. அவர் எழுதிய வான் கோள்களின் சுழற்சி (ஆங்கிலம்) என்ற நூல் சூரியக் குடும்பத்தின் மையத்தில் இருப்பது பூமி அல்ல, ஆனால் சூரியனே என கூறியது. மையத்தில் இருப்பது பூமியே எனக் கூறும் மிகச் சிக்கலான கோட்பாட்டை மிக எளிய விளக்கத்தின் மூலம் கோபர்னிகஸ் நீக்கிப் போட்டார்.
ஆரம்பத்தில், மோதல் ஏற்படுவதற்குப் பெரிதாக எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. அதற்கு ஒரு காரணம், கோபர்னிகஸ் தனது கருத்துக்களை மிக எச்சரிக்கையாக வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்ல, பூமியை மையமாகக் கொண்ட கருத்தை ஆதரித்து வந்த கத்தோலிக்க சர்ச்சும் அந்த சமயம் விஞ்ஞானத்தின் ஊகிப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருந்தது. போப்பே அந்தப் புத்தகத்தை வெளியிடும்படி கோபர்னிகஸை உந்துவித்தார். கடைசியில் கோபர்னிகஸ் அந்தப் புத்தகத்தை வெளியிட்டபோது, பயந்து போயிருந்த பதிப்பாசிரியர் தனது முன்னுரையில், சூரியன் மையத்தில் இருப்பதாக சொல்லும் ஹீலியோசென்டரிக் கோட்பாடு ஒரு கணிதக் கொள்கை மட்டுமே, வானவியல் சார்ந்த உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை என்று எழுதினார்.
சச்சரவு சூடுபிடிக்கிறது
இத்தாலிய வானவியல் நிபுணரும் கணித மேதையும் இயற்பியலாளருமான கலீலியோ கலீலி (1564-1642) என்ற கத்தோலிக்கர் இந்தச் சச்சரவின் அடுத்த காட்சியில் தோன்றுகிறார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த லென்ஸ்களை தான் உருவாக்கிய தொலைநோக்கியில் பொருத்தி, இதுவரை பார்த்திராத அளவிற்கு மிகத் துல்லியமாக வானங்களைப் பார்க்க அவரால் முடிந்தது. அவர் பார்த்தவை, கோபர்னிகஸ் சொன்னது சரிதான் என்பதை உறுதிப்படுத்தின. இன்று சூரிய கரும்புள்ளிகள் என்று அழைக்கப்படுகிற புள்ளிகளையும் கலீலியோ கண்டார். சூரியன் மாற்றத்திற்கோ அழிவிற்கோ அப்பாற்பட்டது என்ற மற்றொரு மிக முக்கியமான தத்துவ மற்றும் சமய நம்பிக்கையை இது சவால் விடுவதாக இருந்தது.
கோபர்னிகஸைப் போலின்றி, கலீலியோ தனது கருத்துகளை தைரியத்தோடும் ஆர்வக் கனலோடும் எடுத்துரைத்தார். அதுவும் பயங்கர மத எதிர்ப்பு நிலவிய சூழலில் எடுத்துரைத்தார். ஏனெனில் கத்தோலிக்க சர்ச் அச்சமயத்தில் கோபர்னிகஸின் கோட்பாட்டிற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆகவே, ஹீலியோசென்டரிக் கோட்பாடு சரியானது மட்டுமல்லாமல், அது வேதப்பூர்வமானதும்கூட என்று கலீலியோ வாதாடியபோது, இது சமய முரண்பாடாக இருக்குமோ என சர்ச் சந்தேகிக்க ஆரம்பித்தது.a
கலீலியோ தான் சொன்னது உண்மையென நிரூபிக்க ரோமுக்குச் சென்றார். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. 1616-ல் கோபர்னிகஸை ஆதரித்துப் பேசுவதை நிறுத்தும்படி சர்ச் அவருக்கு ஆணையிட்டது. சில காலம் கலீலியோ அமைதி காத்தார். 1632-ல் கோபர்னிகஸை ஆதரித்து மற்றொரு புத்தகத்தை அவர் வெளியிட்டார். அடுத்த வருடமே கத்தோலிக்க நீதிமன்றம் கலீலியோவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. என்றாலும், அவருடைய வயதை கருத்தில் கொண்டு அதை வீட்டுக் காவல் தண்டனையாக குறைத்தது.
சர்ச்சோடு கலீலியோவுக்கு ஏற்பட்ட மோதல், மதத்தின் மீதும், சொல்லப்போனால் பைபிளின் மீதும் அறிவியலுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என அநேகர் கருதுகின்றனர். என்றாலும், நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கப் போகிறபடி, இந்தத் தவறான முடிவு அநேக உண்மைகளை அசட்டை செய்திருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a சட்டென எதிர்த்துப் பேசிவிடுவதன் மூலமாகவும், குத்தலாக வசைமாரி பொழிவதன் மூலமாகவும் செல்வாக்குள்ள எதிரிகளை கலீலியோ தேவையின்றி சம்பாதித்துக் கொண்டார். அதோடு, சூரியன் மையத்தில் உள்ளது என்ற கோட்பாடு வேதப்பூர்வமானது என்று வாதாடியதன் மூலம் மதத்தின் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகக் காண்பித்தார். அது சர்ச்சின் கோபத்தை இன்னும் அதிகமாகக் கிளறியது.
[பக்கம் 3-ன் படம்]
கோபர்னிகஸ்
[படத்திற்கான நன்றி]
Giordano Bruno and Galilei (ஜெர்மன் பதிப்பு) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
[பக்கம் 3-ன் படம்]
ரோம நீதிமன்றத்தின் முன்பு கலீலியோ வாதாடுகிறார்
[படத்திற்கான நன்றி]
The Historian’s History of the World, Vol. IX, 1904 என்ற நூலிலிருந்து
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
பின்னணி: Chart depicting Copernicus’ concept of the solar system