நீங்கள் பெறும் செய்திகளை நீங்கள் நம்பலாமா?
1927, மே 10-ம் தேதி, ஃபிரெஞ்சு செய்தித்தாள் லா பிரஸி-யின் விசேஷ பதிப்பு, இரண்டு ஃபிரெஞ்சு வானோடிகளான நங்கஸரும் கோலியும் இடையில் நிற்காமல் அட்லான்டிக்கை விமானத்தில் முதல் முறையாக வெற்றிகரமாக கடந்துவிட்டதாக அறிவிப்பு செய்திருந்தது. முதல் பக்கத்தில் வானில் பறந்த இருவரின் படங்களையும் போட்டு, நியு யார்க்கில் அவர்கள் வந்து சேர்ந்தது பற்றிய விவரங்களை அது பிரசுரித்திருந்தது. ஆனால் இது ஒரு கட்டுக்கதையாக இருந்தது. உண்மையில் விமானம் காணாமற் போயிருந்தது, விமானத்தில் சென்றவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
என்றபோதிலும், பொய் செய்தி அறிக்கைகள் ஒருவேளை பெரும்பாலான மக்கள் ஊகிப்பதைவிட அதிக சாதாரணமாக இருக்கின்றன. 1983-ல் ஹிட்லரினுடையதாகச் சொல்லப்படும் இரகசிய கடித குறிப்புகள், விசேஷமாக ஃபிரான்சிலும் மேற்கு ஜெர்மனியிலும் முக்கியமான வாராந்தர பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. அவை ஜோடிப்பு அறிக்கை என்பது தெரிய வந்தது.
அவ்வாறே, 1980-ல் போத மருந்துக்கு இளவயதில் அடிமையான நபரைப் பற்றிய ஒரு கதை வாஷிங்டன் போஸ்ட்-ல் வெளியானது. அந்த விவரப்பதிவு, ஆசிரியைக்கு ஐக்கிய மாகாணங்களில் எழுத்தாளருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகிய புலிட்ஸர் பரிசை பெற்று தந்தது. ஆனால் பின்னால், கதை போலியான, ஒரு கட்டுக்கதை என்பது வெளிப்படுத்தப்பட்டது. விசாரணை செய்தவர்களிடமிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், ஆசிரியை தன் விலகல் கடிதத்தை சமர்ப்பித்தாள்: “என்னுடைய செய்தித்தாள், என் வாழ்க்கைப் பணி, புலிட்ஸர் குழு மற்றும் உண்மையை நாடும் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.”
என்றபோதிலும், உலகில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் அல்லது பொய் அறிக்கைகள் மாத்திரமே இடையூறாக இல்லை.
செய்தி தேர்ந்தெடுப்பும் அளிப்பும்
பத்திரிகை ஆசிரியர்களும் பதிப்பாசிரியர்களும் அநேகமாக பொது மக்களை கவரக்கூடிய செய்திகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் முக்கியத்துவமற்றதாக இருக்கலாம். செய்தித்தாள் விற்பனையையும் மதிப்பீடுகளையும் அதிகரிக்க பரபரப்பூட்டுகிறவைகளுக்கு அல்லது கண்ணைப் பறிக்கிறவைகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உலகின் நட்சத்திரங்கள், அவர்கள் இளைஞருக்கு என்னவகையான முன்மாதிரியை அளிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் முதன்மைப்படுத்திக் காட்டப்படுகிறார்கள். ஆகவே, அவர்களில் ஒருவர் காதலித்தால், திருமணம் செய்தால், அல்லது மரித்துப் போனால் அநேகமாக அது செய்தியாகிவிடுகிறது.
தொலைக்காட்சி செய்திகள் பொதுவாக, பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் விஷயங்களை முதன்மைப்படுத்திக் காண்பிக்கின்றன. டிவி கைட் பத்திரிகையில் அறிவிக்கப்பட்டிருந்தபடி ஒரு முக்கிய தொலைக்காட்சி ஒளிப்பரப்பு நிறுவனத் தலைவர், “ஒவ்வொரு கதையிலும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் சமயங்களை—குடலை பிழியக்கூடிய பரபரப்பூட்டும் சமயங்களைக் கொண்டிருக்க தாம் விரும்புவதாக தெரிவித்தார்.” ஆம், பொதுமக்களுக்கு கல்வி புகட்டுவதைவிட பார்வையாளர்களைக் கவருவதே பொதுவாக முக்கிய அக்கறைக்குரியதாக இருக்கிறது.
சம்பவங்கள் வருணிக்கப்படும் விதம் முழுக்காட்சியையும் அளிக்க தவறிவிடக்கூடும். ஓர் உதாரணத்துக்கு ஃபிரெஞ்சு தினசரி லி மாண்டி-ன் சிறப்பு மலர், “பதினைந்தே நாட்களில் [ஃபிரான்சில்] மூன்று தொலைக்காட்சி பெட்டிகள் வெடித்ததைப் பற்றி” குறிப்பிட்டிருந்தது. இது அசாதாரணமான ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அந்த பதினைந்து நாள் காலப்பகுதிக்கு, தொலைக்காட்சிப் பெட்டிகளின் வெடிப்பு எண்ணிக்கை உண்மையில் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது.
மேலுமாக முக்கிய செய்திகள் ஒருபுறச் சாய்வோடு அறிமுகப்படுத்தப்படலாம். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் “தங்கள் ஏமாற்று வேலைகளை செய்தி சாதனங்களின் வழியாகச் செய்து உங்கள் சிந்தனையின் மீது செல்வாக்கு செலுத்துவதற்காக செய்திகளை திரித்துக் கூறுகிறார்கள். முழு உண்மைக்குப் பதிலாக குறிப்பாக தெரிந்துகொள்ளப்பட்ட உண்மைகளைப் பற்றியே பேசுகிறார்கள்,” என்று பரேட் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
இது செய்தி கருத்துரையாளர்களுக்குக் கவலை உண்டுபண்ணுகிறது. ஃபிரெஞ்சு என்சைக்ளோப்பீடியா யூனிவர்சாலிஸ் இப்படியாக குறிப்பிடுகிறது: “1980-களின் முடிவு முதற்கொண்டு முக்கிய செய்தி சாதனம், விசேஷமாக தொலைக்காட்சி என்ன சொல்லப்படுகிறது என்பதற்கும், என்ன சொல்லாமல் விடப்படுகிறது என்பதற்கும், அது சொல்லப்படும் விதத்திற்கும், பல்வேறு மறைமுகமான குறிப்புகளுக்காகவும் எல்லா பக்கங்களிலும், வாழ்க்கைத் தொழிலர்களாலும், பாமர மக்களாலும் தெருவிலுள்ள மனிதனாலும் பொதுப் பணிச் சார்ந்த மனிதர்களாலும் கண்டனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.”
உலகளாவிய அளவில் செய்திகள் தாராளமாகப் பரிமாற்றம் செய்துகொள்வதும்கூட பிரச்னையாக உள்ளது. இது (UNESCO) உலக நாடுகள் கல்வி, விஞ்ஞான பண்பாட்டுக் கழகத்தில் பரபரப்பான வாக்குவாதத்தின் பொருளாக இருந்தது. வளர்ந்துவரும் தேசங்கள், பெருஞ்சேதமோ அல்லது வினைமையான அரசியல் பிரச்னைகளோ ஏற்படும் போது மாத்திரமே செய்திகளில் தாங்கள் இடம் பெறுவதாக குறைப்பட்டுக் கொண்டன. ஒருசில மேற்கத்திய பத்திரிகை ஏஜென்ஸிக்கள், நிலவுலகின் தென் அரை கோளத்திலுள்ளவைகளைவிட நிலவுலகின் வட அரை கோளத்திலுள்ள தேசங்களைப் பற்றிய செய்தியை அதிகமாகக் கொண்டிருக்கின்றன என்பதாக குறிப்பிட்ட பின்பு ஃபிரெஞ்சு தினசரி லி மாண்டி-யின் ஒரு கட்டுரை மேலும் இவ்விதமாகச் சொன்னது: “வளர்ந்து வரும் தேசங்களைப் போலவே தொழிற் துறையில் முன்னேறியுள்ள தேசங்களிலும் பொதுமக்கள் கருத்தைப் பாதிக்கும் கவலைக்குரிய சமநிலையின்மைக்கு இது காரணமாயிருந்திருக்கிறது.”
அழுத்தத்தைத் தரும் தொகுதிகள்
விளம்பரதாரர்கள் செய்தி பதிப்பாசிரியர்கள் மீது கொண்டுவரும் அழுத்தம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் செய்தியை மேலுமாக பாதிக்கிறது. 1940-களில் அ.ஐ.மா. பத்திரிகை ஒன்று பாடலுக்கு இணையாக கிட்டாரை பயன்படுத்துவதிலிருக்கும் அனுகூலங்களைக் காண்பிக்கும் ஒரு கட்டுரையை பிரசுரித்த போது, அது பியானோ உற்பத்தியாளர்களிடமிருந்து விளம்பரங்களை இழந்தது. பின்னர் பியானோவை மிக உயர்வாக போற்றிய ஒரு தலையங்க கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது! இதன் காரணமாக, பெரும்பாலான பத்திரிகைகளுக்கு சிகரெட் விளம்பரங்களே முக்கிய பண வருவாயாக இருப்பதை முன்னிட்டுப் பார்க்கையில் புகைபிடிப்பதினால் வரும் ஆபத்துக்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளின் பற்றாக்குறை, ஒருவருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது.
அழுத்தத்தின் மற்றொரு பகுதி, வாசகர்கள் அல்லது பார்வையாளர்களை உட்படுத்துகிறது. பிரபல ஃபிரெஞ்சு வானொலி நிலைய முன்னாள் நிர்வாகி ரேமாண்ட் காஸ்டன்ஸ், நேயர்கள் பெரும்பாலும் பழமைப் பற்றுள்ளவர்களாக இருப்பதால் அவர்களுடைய மனஅமைதி குலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள கவனமாயிருக்க வேண்டியிருக்கிறது என்பதாக விளக்கினார். குறிப்பிட்ட ஒரு மதத்தினர் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரு தேசத்தில், அதைப் பற்றிய சுவையற்ற உண்மைகள், இரகசியமாக வைக்கப்பட்டிருப்பது அல்லது அத்தனை உறுத்தலாக தோன்றச் செய்யாதிருப்பது ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கிறதா?
செய்தி துறையில் தங்கள் கருத்துகளுக்குப் போதிய கவனம் கொடுக்கப்படுவதில்லை என்பதாக உணரும் தீவிரவாத தொகுதிகளாலும் அல்லது தனி நபர்களாலும்கூட அழுத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஒருசில ஆண்டுகளுக்கு முன்பாக, இத்தாலியின் முன்னாள் பிரதமர் அல்டோ மோராவை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், அவர்களுடைய கோரிக்கைகள் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் இத்தாலிய செய்தித்தாள்களிலும் முழுமையாக இடம்பெற வேண்டும் என வற்புறுத்தினர். அதேவிதமாக விமானங்களைக் கடத்திச் சென்று பயணிகளை பிணையாகக் கொள்ளும் பயங்கரவாதிகள் தொலைக்காட்சியில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று இவ்விதமாக அவர்கள் நாடும் விளம்பரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
செய்தித்தாள் விற்பனையாளர்கள் சில சமயங்களில், ஸ்தபிக்கப்பட்ட அமைப்புகளையும் கருத்துக்களையும் அழியாமல் பாதுகாப்பவர்களாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். ஆனால் அதிக பட்ச வாசகர்களை அல்லது நேயர்களை சம்பாதித்துக் கொள்ள நாடும் ஒரு தொழில் அவை சேவை செய்யும் பெரும்பாலான ஆட்களுடையதற்கு முரணாக இருக்கும் எண்ணங்களையும் கருத்துக்களையும் பரப்பும் என்பதாக நாம் எதிர்பார்க்க முடியுமா?
அநேக தேசங்களின் விலைவாசி உயர்வு, தினசரிகள் ஒன்றாகச் சேர்ந்து இணைந்துவிட காரணமாயிருந்து இவ்விதமாக சிறிய தொகுதிகள் அல்லது ஒரு நபரின் கைக்குள்ளிருக்கும் சொல்லர்த்தமான “பத்திரிகை சாம்ராஜ்யங்கள்” ஏற்பட்டிருப்பது இதோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையாக இருக்கிறது. உரிமையாளரின் எண்ணிக்கை தொடர்ந்து குறையுமேயானால், இது பிரசுரிக்கப்படும் பல்வேறு கருத்துகளை மட்டுப்படுத்துவதாக இருக்கும்.
பொது மக்கள் மீது பாதிப்பு
சமுதாய மதிப்பீடுகளை உருப்படுத்துவதில் செய்தி சாதனமும்கூட உதவியிருக்கிறது என்பதைப் பற்றியதில் சந்தேகமேயில்லை. ஒருசில ஆண்டுகளுக்கு முன்புதானே ஏற்க முடியாததென தள்ளி வைக்கப்பட்டிருக்கக் கூடிய ஒழுக்க தராதரங்களையும் வாழ்க்கைப் பாணியையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அறிமுகப்படுத்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது.
உதாரணமாக, 1980-களின் ஆரம்பத்தில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக இருந்த ஒரு நடுத்தர வயது மனிதன், கலிஃபோர்னியாவிலுள்ள சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு அருகில் அந்தச் சமயத்தில் வாழ்ந்துவந்த தன் தந்தையோடு ஆண்புணர்ச்சியைக் குறித்து ஓர் உரையாடலைக் கொண்டிருந்தான். அவனுடைய இளமைப் பருவத்தில், ஆண்புணர்ச்சி நடத்தை அதிர்ச்சியூட்டுவது என்ற தன்னுடைய கருத்தை தந்தை மகனிடம் சொல்லியிருந்தார். ஆனால் பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், செய்தி சாதனங்களின் செல்வாக்கினால், வயதான தந்தை ஆண்புணர்ச்சியை ஏற்றுக்கொள்ளப்படத்தக்க மாற்று வாழ்க்கைப் பாணி என்பதாக அதை ஆதரித்துப் பேசினார்.
சமூகவியலின் கலைக்களஞ்சியம் (ஃபிரெஞ்சு) இவ்வாறு உறுதியாக சொல்கிறது: “வானொலியும் தொலைக்காட்சியும் . . . புதிய கருத்துக்களை மனதில் ஆழமாக பதிய வைத்து புது மாறுதலுடைய அல்லது தொல்லை உண்டுபண்ணும் போக்குகளை போதுமான அளவில் ஊக்குவிக்கக்கூடும். பரபரப்பான செய்திகளுக்கான விருப்பத்தின் காரணமாக, இப்படிப்பட்ட செய்தி சாதனங்கள் ஆரம்பத்திலிருந்தே அவைகளை விளம்பரம் செய்து அவைகளின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துகின்றன.”
செய்தி சாதனத்தினால் நம்முடைய மதிப்பீடுகள் உருப்படுத்தப்படுவதை நாம் விரும்புவதில்லையென்றால், நாம் என்ன செய்யலாம்? பைபிளில் காணப்படும் ஞானமான புத்திமதியை நாம் பின்பற்ற வேண்டும். இது ஏனென்றால் அதன் தராதரங்களும் நியமங்களும் எந்தச் சமுதாயத்துக்கும், சரித்திரத்தின் எந்தச் சமயத்திலும் செல்லத்தக்கதாக இருக்கின்றன. மேலுமாக, நவீன உலகின் பிரபலமான கருத்துக்களினால் அல்லாமல், கடவுளுடைய தராதரங்களினால் உருவாக்கப்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள அவை நமக்கு உதவிசெய்கின்றன.—ஏசாயா 48:17; ரோமர் 12:2; எபேசியர் 4:22–24.
மேலுமாக, வேதாகமம் பொதுவாக செய்தி சாதனத்தின் கவனத்தைத் தப்பிடும் செய்திகளின் ஒரு முக்கிய அம்சத்துக்கு விளக்கமளிக்கிறது. அடுத்தக் கட்டுரையில் இந்த அம்சத்தை நாம் ஆராய்வோமாக. (g90 8/22)
[பக்கம் 26-ன் படம்]
தீவிரவாத இயக்கங்கள் தாங்கள் விரும்பும் பொது விளம்பரத்தைப் பெற்றுக்கொள்கின்றன