மாயமான காட்டுப் பூனை
சூரினாமிலுள்ள “விழித்தெழு!” நிருபர் கூறியது
நானும் என் மனைவியும் ஒரு காட்டு வழியாக பயணம் செய்தபோது முதல் முறையாக இந்த மாயமான பூனையைப் பார்த்தோம். எங்கள் ஜீப் ஒரு வளைவில் சுற்றி வரும்போது “இங்கே பார்!” என்று நான் கத்தினேன். பெனிடைகிரி, அல்லது புள்ளிகள் நிரம்பிய புலி ஒன்றை நேருக்கு நேர் நாங்கள் எதிர்ப்பட்டோம், சூரினாமில் சிறுத்தைப்புலியை நாங்கள் அப்படி அழைப்பதுண்டு. அதன் பழுப்பு மஞ்சள் நிறமான மேல் தோல் புதிதாகச் சாயம் பூசப்பட்டதைப் போன்று பிரகாசித்தது. அஸ்தமனமாகும் சூரியன் அதன் நிறங்களை அழுத்தமாக எடுத்துக்காட்டியது: பொன்னிற மஞ்சள் நிறத்திலிருந்து சிவந்த காவி நிறமாகவும், அதன் கன்னங்கள், மார்பு மற்றும் வயிறு போன்றவைகள் மங்கலான மஞ்சள் நிறமாக வெளிறியதாயும் தோன்றின. ஆகிலும், மிகவும் கண்ணைக்கவருவது யாதெனில், பெரும்பாலும் அதன் உடல் முழுவதும் அங்கங்கு காணப்படும் கறுப்புக் குறிகள் அல்லது ரோசா வடிவ வரியமைவுகள் பரவி இருந்ததேயாகும்.
முந்தைய கொலம்பிய இந்தியர்கள் இப்பூனையின் கண்கவரும் தோற்றத்தால் திணறடிக்கப்பட்டதன் விளைவாக, அதை ஒரு கடவுளாகவுங்கூட அழைத்தனர்! புள்ளிகள்கொண்ட அதன் மேல்தோல், நட்சத்திரங்கள் பதிக்கப்பெற்ற இரவு வானத்தைக் குறித்ததாக அவர்கள் கூறினர். இன்றுங்கூட, சிலர் இந்தச் சிறுத்தைப்புலியை தென் அமெரிக்காவின் விலங்குகளில் போட்டியிடமுடியாத அரசன் என்பதாகக் கருதுகின்றனர். ஓர் ஆண் சிறுத்தைப்புலியானது—அதன் வாலைச் சேர்க்காமல், எப்போதும் 1.8 மீட்டர் நீளமானது,—சுமார் 110 கிலோகிராம் எடையுள்ளதாய் இருக்கக்கூடும்!a அதன் உருண்டையான தலையும் சதைப்பற்றுள்ள கழுத்தும்; அதன் பீப்பாய் போன்ற உடலும்; அதன் குட்டையான, தடித்த கால்களும்; பெரிய பாதங்கள் ஆகிய இவை யாவும் தனிப்பெருஞ் சிறப்புடைய வலிமையை வெளிக்காட்டுகின்றன.
என்றபோதிலும், நாங்கள் பார்த்த இந்தச் சிறுத்தைப்புலியானது—கறுத்த முனை கொண்ட வால் மேல் நோக்கி வளைந்ததாய்—மெதுவாக நடந்துசென்று புதர்க்காட்டில் தங்கியது. அதன் புள்ளிகள் நிழலின் பட்டைகளை ஒத்ததாய் சூரியக் கதிர்களின் பலநிறப் பட்டைகளின் சூழலோடு வித்தியாசம் காணாத விதத்தில் ஒன்றாக இணைந்தபோது “என்னே ஏமாற்றுவித்தை!” என்று நாங்கள் முணுமுணுத்துக்கொண்டோம்.
சிறுத்தைப்புலியானது மறைவான இடங்களை விரும்பித் தெரிந்துகொள்வதால் அரிதாகக் காணப்படுகிறது. சூரினாமில் 80 சதவீதம் மழைக்காடாக இருப்பதால், அது சிறுத்தைப்புலிகள் நிறைந்த நாடாக உள்ளது.
அதன் ‘வருகைச்சீட்டை’ விட்டுச்செல்லுதல்
என்றபோதிலும், சிறுத்தைப்புலியானது நாடு முழுவதும் அதன் ‘வருகைச்சீட்டை’ விட்டுச்செல்கிறது. “அவைகளின் பாத தடங்களை களிமண் நிறைந்த அட்லாண்டிக் கடற்கரைகளில் நான் பார்த்திருக்கிறேன்,” என்று புதர்க்காடு காப்பவர் ஒருவர் பின்னர் என்னிடம் கூறினார். “பிரேஸிலின் எல்லைப் பகுதியில் பிறாண்டப்பட்ட அடி மரங்களையும் பார்த்திருக்கிறேன்.” சிறுத்தைப்புலிகள் தங்கள் பிராந்திய எல்லைகளை அடையாளங்காட்டுவதற்கு இது ஒரு வழியாக இருக்கலாம் என்பதாகக் கருதப்படுகிறது.
“அது உண்மைதான்,” என ஒரு முன்னாள் காட்டுப் பயண வழிகாட்டியான 83 வயது ஜேம்ஸ் பிரெளன் உறுதிப்படுத்துகிறார். “எங்களுக்கு முன் ஒரு பெனிடைகிரி சென்றிருக்கிறது என்பதை அறிவிக்கும் வகையில் அங்கங்கு பிறாண்டப்பட்ட மரங்களை கண்டு நாங்கள் கடந்து சென்றோம்.” நகங்களைக் கூர்மையாக்குவதற்காகவும் சிறுத்தைப்புலிகள் மரங்களில் பிறாண்டுகின்றன.
‘நான் இங்கு வந்துசென்றேன்’ என்பதைக் காட்டும் மற்றொரு வழியானது சிறுத்தைப்புலிகள் மோப்பக் குறிகளையும் சாணத்தையும் விட்டுச் செல்கின்றன. டாக்டர் ஆலன் ராபினோயிட்ஸ் சமீபத்தில் சிறுத்தைப்புலிகள் பற்றிய இரண்டாண்டு ஆராய்ச்சிப் படிப்பினை முடித்தார். பொதுவாக ஒரு சிறுத்தைப்புலி, அடர்ந்த காட்டில் 40-100 சதுர கிலோமீட்டர்கள் வரையான நிலப்பரப்பை எல்லையாகக் குறித்துக்காட்டுகிறது என்பதாக அவர் என்னிடம் கூறினார். ஆய்வுப் பயணம் செய்பவர்கள் சிறுத்தைப்புலிகளின் வாழ்வை அரைகுறையாக மட்டுமே பார்த்திருக்கின்றனர் என்பதில் வியப்பொன்றும் இல்லை! ஆனால் இந்தக் காட்சிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நாம் பார்க்கையில், ஒரு கவர்ச்சியூட்டும் படக்காட்சி தெரிகிறது. அது வெளிப்படுத்திக் காட்டப்படும் விதத்தை கவனியுங்கள்.
சிறுத்தைப்புலிகளின் உலகத்தைப் பார்வையிடுதல்
மாலைப்பொழுது நெருங்குகிறது. இரையும் பூச்சிகள், மென்குரலில் பாடும் பறவைகள், மற்றும் கிறீச்சொலி எழுப்பும் குரங்குகள் ஆகியவற்றின் ஒலி நம்மைச் சுற்றிக்கேட்கப்படுகின்றன. இதைக் கேளுங்கள்! அச்சுறுத்தும், கடுமையான உறுமுதல்கள் மரங்களினூடேயிருந்து வருகின்றன. பிறகு ஆபத்துக்கு அறிகுறியான அமைதி. எழுச்சியுடன் பாய்ந்து செல்லும் மிருகங்களும் இரைச்சலிடும் நிலவாழ் பறவைகளும் சிதறுண்டு ஓடிப்போகின்றன. இப்போது சிங்கம் கெர்ச்சிப்பதைப் போன்று பயமுறுத்தும் மற்றொரு முறை ஆழ்ந்த உரத்த குரலில் உறுமுதல் சத்தம் கேட்கிறது! ஒரு வலிமையான ஆண் சிறுத்தைப்புலி வெளிவருகிறது.
இதுவே அதன் ராஜ்யம்—ஆற்றோரமான காடுகளும் சதுப்பு நிலங்களும். எல்லாப் பெரிய பூனைகளிலும் சிறுத்தைப்புலியே பெரும்பாலும் நீரில் வாழ்வதை வசதியாகக் கருதும் வகையாகும். உண்மையில், விளையாட்டிற்காகவும் தொழிலுக்காகவும் அதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது—அந்தத் தொழில் மீன் பிடிக்கும் தொழிலாகும். ஆற்றைக் கடந்து மீன்பிடிக்கும் பகுதிக்காகத் தொல தூரம் செல்கிறது. அது சாமர்த்தியமாக ஓரளவான நேர்கோட்டிலே நீரில் தவழ்ந்து செல்கிறது, அப்படிச் செல்கையில் தன் தலையையும், முதுகையும் அதன் வாலின் நுனியையும் நீர்ப்பரப்பிற்கு மேலே வைத்துச் செல்கிறது. “சிறுத்தைப்புலிகள் மிகச் சிறப்பாக நீந்துபவை” என்று காட்டு ஆய்வுப் பயணம் செய்யும் ஹைன்ஸ் ஹைடு என்னிடம் கூறினார். “அவை வளைவு அலைகளை உண்டாக்கும் அளவிற்கு வேகமாக நீந்துகின்றன. அவைகள் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து செல்வதையும் நான் பார்த்திருக்கிறேன்!”
சிறுத்தைப்புலி மறுபக்கத்திலுள்ள கரையை அடைந்ததும், வெளியேறி தன் உடலின் மேலுள்ள தண்ணீரை வேகமாகக் குலுக்கி நீக்குகிறது. ஆற்றை நோக்கி வளைந்துள்ள மரக் கட்டையில் பதுங்கிக்கொண்டு, ஆழத்தின் அடியில் ஊடுருவிச் செல்ல விரும்புவதைப் போன்று தன் கண்களை நீர்ப்பரப்பின் மீதே நிலைகொள்ளச் செய்கிறது. பிறகு, மின்னல் வேகத்தில், அதன் கூரிய நகங்களைக் கொண்ட பாதம் மீன்கள் நிறைந்த இரையை வாரி எடுக்கிறது.
“ஒரு நிலவொளி இரவில்,” என்று திரு. ஹைடு நினைவுகூருகிறார், “ஒரு சிறுத்தைப்புலி ஒரு மீட்டர் நீளமுள்ள அன்ஜோமரா என்ற மீனை அத்துணை சக்தியுடன் அடித்ததால் அவை ஆகாயத்தில் பறந்து சென்று பூனையிலிருந்து 5 மீட்டர் பின்னால் நொறுங்கி விழுந்தன. சிறுத்தைப்புலிகள் வியக்கத்தக்க வலிமை கொண்டவை!” காட்டிலுள்ள சிறுத்தைப்புலிகளை உற்று நோக்கியிருந்தவருமான உயிரியல் அறிஞர் பீட்டர் டியூனிசன் கூறுகிறார்: “கடற்கரையில் இழுத்துக் கொண்டு செல்லப்பட்ட அடையாளங்களிலிருந்து சிறுத்தைப்புலி ஒன்று பெருத்த ஓர் ஐட்கான்டியை (தோல் முதுகைக் கொண்ட ஆமையை) 4 மீட்டர் ஆகாயத்து மார்க்கமாகச் சுழற்றி எறிந்ததாக நான் கண்டுபிடித்தேன்.”
சிறுத்தைப்புலி வலிமை வாய்ந்தது மட்டுமல்ல, பல்திறப் புலமையும் கொண்டது. அது நீரிலும், நிலத்திலும், மரங்களிலும், இம்மூன்று சூழலிலும் திறம்பட்ட விதத்தில் வேட்டையாடுகிறது. தண்ணீரில் கடந்து செல்லும்போதோ மரங்களில் ஏறும்போதோ அதன் வளைநகங்கள், மலையேறுபவரின் ஆணி கொண்ட பாதணிகளைப் போன்று தடுமாறாது ஊன்றி வைக்க உதவுகின்றன. நிலத்திருக்கையில், அது தன் வளைநகங்களைப் பின்னிழுத்துக் கொண்டு, ஒலி எழுப்பாதவாறு செய்யும் காலுறைகள் கொண்டு நடப்பதைப் போல—பதுங்கி வேட்டையாடுவதற்காகக் கால்களைப் பரப்பி வைத்து நடக்கிறது.
ஆனால் ஒரு வேட்டைக்காரனுக்குப் பொறுமையும், வேகமும், நேரக் கணிப்பும் தேவைப்படுகிறது. இளம் சிறுத்தைப்புலிகள் தங்களைச் சார்ந்து தாங்களாகவே வாழ்வதற்கு முன்பாகத் தாயிடம் பயிற்சியைப் பெற்றுக்கொள்ள இரண்டாண்டுகள் எடுக்கிறது என்பதில் வியப்பொன்றும் இல்லை! ஆறு வாரங்களுக்குப் பிறகு இளங்குட்டிகள் தங்கள் தாய்க்குப் பின்னாலேயே செல்லும். என்றபோதிலும், அவள் வேட்டையாடுகையில், அவை ஓர் அடர்ந்த மறைவிற்குள் தங்கியிருக்கின்றன.
முன்னெச்சரிக்கையுடன், உலகின் மிகப் பெரிய கொறிக்கும் விலங்கின வகையாகிய கேப்பிபாராக்களின் ஒரு தொகுதியைப் பார்க்கும் வரை, அவள் ஆற்றின் கரையோரமாக நகர்ந்து செல்கிறாள். குறிக்கப்பட்ட நேரத்திற்கு இசைவாக அவள் அங்குலம் அங்குலமாக முன் அசைந்து, இரையின் மீது கண்களை ஊன்றவைத்தவளாய் சிறிது நேரம் நிற்கிறாள். அவளுடைய முழு உடலும் அசைவின்றி இருக்கிறது, வாலின் நுனி மட்டும் வேகமாக அசைகிறது. ஆனாலும், கேப்பிபாராக்கள் அவள் இருப்பதை உணர்ந்துகொண்டு தண்ணீர் அடியில் மூழ்கிவிடுகின்றன. என்றபோதிலும், இந்தச் சிறுத்தைப்புலி ஏமாற்றமடைவதில்லை. உண்மையில், இந்தப் பூனையே அடிக்கடி இதில் வெற்றி பெறுவதால் கேப்பிபாரா “சிறுத்தைப்புலியின் அன்றாடக ஆகாரம்” என்றழைக்கப்படுகிறது.
துணை உணவு வகைகள்? ஏராளமாய் இருக்கின்றன. சிறிய வகை சீமைப்பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரினம் முதல் பெரிய காண்டா மிருகத்தைப் போன்ற பன்றி விலங்கு வகைகள் வரை. முள்ளம் பன்றிகள், ஆமைகள் மற்றும் முதலைகளுங்கூட பாதுகாப்பாக இல்லை. சில சமயங்களில் இந்தப் பூனை காட்டிற்கு அப்பால் சென்று புல்வெளிகளிலும் நோக்குகிறது. “அன்று ஒரு நாள் ஒரு பசுவும், கன்றுக்குட்டியும் ஒரு சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டன” என்று விலங்கு மருத்துவர் ரோனி கிரேனன்பர்க் கூறுகிறார். “நகரத்திலிருந்து வெறும் சில கிலோமீட்டர்கள் தொலவில் அது சம்பவித்தது.” ஆனால் இத்தாக்குதல்கள் பெரும்பாலும் இளம் போட்டியாளர்களால் விரட்டப்பட்ட வயதான சிறுத்தைப்புலிகளை அல்லது முன்பு துப்பாக்கியால் தாக்கப்பட்டு காயமடைந்த விலங்குகளை உட்படுத்துகிறது.
சிறுத்தைப்புலிகள் மனிதரைத் தாக்குவதைப் பற்றியென்ன? “இல்லை, அது மிகவும் அரிதாக இருக்க வேண்டும்” என்று விலங்கு மருத்துவர் கூறுகிறார். உயிரியல் அறிஞர் டியூனிசனும் அதே கருத்தையே கூறுகிறார். அவர் கடல் ஆமை ஆய்வு வேலை ஒன்றிற்கு உதவுகையில், ஓர் இரவில் கடற்கரையோரமாக நடந்து சென்றதை நினைவுகூருகிறார். அவர் திரும்பிவருகையில், அவருடைய கால் தடங்களுக்கு மேல் சிறுத்தைப் புலியின் பாத தடங்கள் பதிந்திருந்ததை அவருடைய ஒளிவீசும் கைவிளக்கு வெளிப்படுத்திக் காட்டியது. ஒரு பூனை அவரைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது! இந்த உயிரியல் அறிஞருக்கு தீங்கிழைப்பதற்கு மாறாக, அவர் திரும்பி வருவதற்குள் அந்தப் பூனை மறைந்துபோய்விட்டது.
“அவை ஆமைகளைத் தாக்குகின்றன” என்று திரு. டியூனிசன் கூறுகிறார், “ஆகவே நான் இரவு நேரத்தில் ஆமையின் முட்டைகளைத் தோண்டிப்பார்க்க இருக்கையில் நான் சற்று மன அமைதியின்றி உணர்ந்தேன். மணல் கீழே விழும்போது எழுப்பப்படும் ஒலி, ஆமை தோண்டும்போது எழுப்பப்படும் ஒலியைப் போன்றிருக்கிறது. ஆகவே நான் செய்வதெல்லாம்,” அவர் தொடருகிறார், “அவ்வப்போது என் கை விளக்கைச் சுழற்றுவதுதான், ஆமைகள் கைவிளக்குகளோடு வருவதில்லை என்பது சிறுத்தைப்புலிகளுக்குத் தெரியும் என்ற நம்பிக்கையோடு அவ்விதம் செய்தேன்.”
கடத்தல் வியாபாரம்
ஆனால் சிறுத்தைப்புலிகளை பயமுறுத்தும் மனிதரைப் பற்றியதென்ன? ஜாக்ஸ் பெர்னி என்பவர் காட்டுவாழ் உயிரின வியாபாரத்தைக் கட்டுப்படுத்த முயலும் ஒரு நிறுவனமாகிய ஆபத்துக்குள்ளான மிருக வகைகளின் மற்றும் தாவர வகைகளின் அகில உலக வியாபாரத்தின் பேரில் நடத்தப்பட்ட மாநாட்டிற்குத் துணை முதன்மைச் செயலாளர் ஆவார். சிறுத்தைப்புலிகளுடைய இனம் அழிந்துபோய்விடும் அபாயத்தால் பயமுறுத்தப்படுவதாக அவர் என்னிடம் கூறினார். ஆகவே சிறுத்தைப்புலிகளின் வணிகவியல் வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
என்றபோதிலும், ஃபோக்கஸ் என்ற உலகின் வனவாழ்வு நிதியின் செய்திக் கடிதம் (ஐ.மா.) கூறுவதன்படி, சட்டங்களை மீறி விலங்குகளை வேட்டையாடிப் பிடிப்பது இன்னும் நிலவி வரும் கடுஞ்செயலாக உள்ளது. அதற்கு காரணம்? புள்ளிகள் நிரம்பிய பூனையின் மென்மயிர்த்தோல்களுக்கான மிகுந்த தட்டுப்பாடே! வேட்டையாடுவோர் இரவில் அமேஸானின் காடுகளைச் சுற்றித் திரிந்து, அதிக ஒளி வீசு திறனுள்ள கைவிளக்குகளின் ஒளியைக் கொண்டு சிறுத்தைப்புலிகளின் கண்களைக் குருடாக்குகின்றனர், பிறகு பயமுறுத்தப்பட்ட விலங்குகளை அவற்றின் தலையில் சுடுகின்றனர்.
சில மணிநேரங்களுக்குள், சிறுத்தைப்புலியின் தோல், சித்திரவதைக் கருவியின் சட்டத்தில் காய்ந்து கொண்டிருக்கிறது, என்று ஃபோக்கஸ் அறிக்கையிடுகிறது. விரைவில், அது எல்லைகளுக்குக் குறுக்கே கடத்திச் செல்லப்பட்டு, அழிக் கூடைகளில் இறுக்கிக் கட்டப்பட்டு, “காபி” என்று பெயரிடப்பட்டு ஐரோப்பாவிற்குக் கப்பலேற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,000 சிறுத்தைப்புலிகள் இந்த வகையில் கொல்லப்பட்டு பதப்படுத்தப்படுவதாகச் சில அதிகார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
என்றாலும், ஒப்பிடுகையில், இப்போதைக்கு சூரினாம் இச்சிறப்பு வாய்ந்த விலங்குகளின் மிகுதியை அனுபவிக்கிறது. அது அவ்விதமே இருக்கட்டும் என்று நாமும் நம்புவோமாக. அல்லாவிடில், மாயமான புள்ளிகள் நிரம்பிய பூனை இனிமேலும் பார்க்க முடியாதபடி போய்விடும் காலமும் வரலாம். (g90 8/22)
[அடிக்குறிப்புகள்]
a இங்கு சித்தரித்துக் காட்டப்பட்டுள்ள சிறுத்தைப் புலி பான்தெரா ஒன்கா ஒன்கா என்பதாகும்.