மனிதனும் ஆமையும் சந்திக்குமிடத்தில்
ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
பழக்கப்படாத ஒரு கடலாமையைச் சந்திக்க மிகச் சிறந்த சமயம், மணலில் புதிதாக உருவாக்கப்பட்ட தனது கூட்டில் அவள் முட்டையிடும்போதேயாகும். ஆகவே ஆஸ்திரேலியாவின், சூரியன் பிரகாசிக்கும் நகரமாகிய க்வீன்ஸ்லாந்தின் கடலோரத்திலுள்ள 1.5 கிலோமீட்டர் நீள மான் ரிப்போ கடற்கரைக்கு நாங்கள் போகும்போது, நீங்களும் என்னுடன் வர விரும்புகிறீர்களா? மிதவெப்பமண்டலத்தின் உஷ்ணத்தினால் வாதிக்கப்படுவீர்களோ என்று பயப்படாதீர்கள். ஏனென்றால் நாம் செல்வது இரவு நேரத்திலாகும். கிளர்ச்சியூட்டும் அத்தகைய சுற்றுலாவுக்கு ஏற்ற மிகச் சிறந்த நேரம் இரவு எட்டு மணியிலிருந்து நள்ளிரவு வரை.
பெரிய தாய் ஆமை ஒன்றை நாம் பார்க்கவும், தொடவும்வேண்டுமானால், செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத அநேகக் காரியங்கள் இருக்கின்றன. எனவே பயிற்சிபெற்ற ஒரு வழிகாட்டியோடு, ஒரு சிறு கூட்டமாக செல்வது மிகவும் நல்லது. நாங்கள் கடலேற்ற அடையாளத்திற்கும் உயர கடற்கரையோரமாக நடந்துகொண்டிருக்கும்போது, எங்களுடைய கைவிளக்கை அணைத்துவைத்திருக்கும்படி வழிகாட்டி கேட்டுக்கொள்கிறார். ஏனென்றால் வெளிச்சம் ஆமைகளைப் பயப்படுத்துகிறதாம். மணலில் பதிந்திருந்த ஒரு மீட்டர் அகல [ஆமைகளின்] கால்தடப்பாதையின் அடையாளத்தை, வெளிச்சமே இல்லாமல்கூட எவ்வளவு தெளிவாக காணமுடிகிறது என ஆச்சரியப்பட்டோம்.
அடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கடல் ஆமைகளைப்பற்றிய ஆர்வமூட்டக்கூடிய சில உண்மைகளை வழிகாட்டி எங்களுக்குக் கூறுகிறார். ஆஸ்திரேலிய கடலில் வித்தியாசமான ஆறு ஆமை இனங்கள் வாழ்கின்றன. ஆனால் அவற்றில் நான்கு இனங்கள் மட்டுமே மான் ரிப்போவில் காணப்படுகின்றன. மான் ரிப்போ, பன்டபர்க் கடற்கரையிலுள்ள முக்கிய இனப்பெருக்க பகுதியாகும். இந்த நான்கு இனங்களும் பரவியுள்ள எண்ணிக்கை வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன: பெருந்தலை ஆமைகள் (loggerhead turtles: Caretta caretta), தட்டையோட்டு ஆமைகள் (flatback turtles: Natator depressa), பச்சை ஆமைகள் (green turtles: Chelonia mydas), தோல்ஓட்டு ஆமைகள் (leatherback turtles: Dermochelys coriacea).
எங்களது முதல் காட்சி
ஒரு பெரிய ஆமையைக் கண்டுபிடித்தபோது அதிகக் கிளர்ச்சியுண்டாகிறது. அவள் நாங்கள் பட்டியலிட்ட வகைகளில் முதல் இனத்தைச் சேர்ந்தவள்—ஒரு பெருந்தலை ஆமை. நாங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவள் அலையிலிருந்து வெளியே கடலேற்ற அடையாளத்தைக் கடந்து மணலில் தொடர்ந்து நகர்கிறாள். இறுதியில் நாங்கள் அருகே சென்று பார்த்தபோது, அவள் தன்னைச் சுற்றியிருந்த மணலையும் தாவரங்களையும் சுரண்டி அப்புறப்படுத்துவதன்மூலம், குழிவான தட்டு வடிவில் ஒரு குழியைத் தோண்டிவைத்திருந்ததைக் காண்கிறோம். இது 7-லிருந்து 12 வாரங்களில் பொறித்த குஞ்சுகள் வெளிவந்த பிறகு, கூட்டுக்குமேல் புல் வளர்ந்து அவற்றைச் சிக்கவைப்பதைத் தடுக்கிறது. மணலைத் தனது பின்புற நீந்து கால்களினால்—வலதுபக்கம் அள்ளி, இடதுபக்கம் வீசுதல்; இடதுபக்கம் அள்ளி, வலதுபக்கம் வீசுதல்—போன்று அள்ளுதலையும் வீசுதலையும் மாறிமாறி செய்வதன்மூலம் பேரிக்காய் வடிவ கூட்டையுங்கூட தோண்டி முடித்திருந்தாள். இதற்கெல்லாம் சுமார் 45 நிமிடம் தேவைப்படுகிறது.
இதுவரை, அவள் எளிதில் தொந்தரவு செய்யப்பட்டுத் தண்ணீருக்குள் சென்றிருக்கலாம். ஆனால் அவள் முட்டைகளிடத் தொடங்கிவிட்டால், அதன்பிறகு நாங்கள் அவளைத் தொடலாம். வனச் சரக அலுவலர் அவள் மீது வெளிச்சம் காட்டுகிறார், விரும்பினால் நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அந்த ஆமை 10-லிருந்து 20 நிமிடம் வரை தொடர்ந்து முட்டைகளிட்டுக்கொண்டிருக்கிறது. இந்த முட்டைகள் தெளிவான சளித்திரவத்தோடு வெளிவந்தன. இது முட்டைகள் அடைகாக்கப்படும்போது காளான்களிலிருந்தும் பூச்சுகளிலிருந்தும் பாதுகாக்கிறது. பெருந்தலை ஆமைகள், ஓர் ஈட்டுக்கு மேசை வரிப் பந்தளவிலுள்ள 120 முட்டைகளைச் சராசரியாக இடுகிறது. பருவங்களுக்கு இடையில் இரண்டு முதல் நான்கு வருட இடைவெளியுடன், இவை ஒரு பருவத்திற்கு 14 நாட்கள் இடைவெளிவிட்டு அநேகமுறைகள் முட்டையிடுகின்றன.
நாங்கள் அந்த ஆமையை உண்மையில் தொடும்போது, அவளுடைய தோல் எவ்வளவு மிருதுவாய் இருக்கிறது என வியந்தோம். ஆமைத்தோல் விரும்பப்படுவதற்கும் ஆமைகள் தொடர்ந்து வாழ்ந்திருப்பதை ஆபத்திற்குள்ளாக்குவதற்கும் இதுவே ஒரு காரணமாக இருக்கிறது. தட்டுகளாலான அவளுடைய ஓடு அல்லது மேல்தகடு, ஒரு முதுகெலும்புக்கும், விலா எலும்புகளுக்கும் ஒப்பிடலாம். இப்போது தனது முட்டைகளை மூட ஆரம்பிக்கிறாள். ஆனால் அவள் அவற்றை அலைக் கோட்டுக்கு அருகில் இட்டதனால், அவை தப்பிப்பிழைக்கவேண்டுமானால் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யவேண்டும். எங்கள் குழுவோடு சேர்ந்து வந்திருந்த ஆராய்ச்சிக்குழு அங்கத்தினர் இருவரால் இது செய்யப்படும்.
ஆமைகளுக்கு அடையாளக் குறியிடுதல்
கடல் ஆமைகளைப்பற்றிய ஆராய்ச்சியில் உதவ, நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஆமை தனது முன்புற நீந்து கால்கள் ஒன்றில் அடையாளக் குறி (Tagging) இடப்படுவாள். அவள் சுறுசுறுப்பாக இங்குமங்கும் வீசிக்கொண்டிருந்த அத்தனை மணலின் காரணமாக இது அவ்வளவு எளிதான ஒரு வேலை அல்ல. இந்த அடையாளக் குறிகள் துருப்பிடிக்காத டைட்டானியம் உலோகக் கலவையால் செய்யப்பட்டவை. அவற்றின் பின்புறத்தில் ஒரு விலாசம் இருக்கிறது. மக்களால் காணப்படும், குறியிடப்பட்ட எல்லா ஆமைகளுமே அவற்றின் எண்களால் அறிவிக்கப்படவேண்டியது இந்த ஆராய்ச்சித் திட்டத்திற்கு மிக முக்கியமாகும். அந்த ஆமை இறந்தால் மட்டும்தான் அந்த அடையாளக் குறிகள் எடுக்கப்பட்டு, அந்த ஆமை இருந்த இடத்தின் விவரங்களோடு சென்று ஒப்படைக்கப்படவேண்டும். அடையாளக்குறியின் முன்பக்கம் ஆமையின் அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பார்த்த ஆமையின் அடையாள எண் T54239, ஆனால் நாங்கள் அவளை தபீதா என்று அழைக்கலாமென தீர்மானிக்கிறோம்.
தபீதா இதற்குமுன் அடையாளக் குறியிடப்படாததன் காரணமாக, இதற்குமுன் கூடுகட்டியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே தென் பசிபிக் பகுதிகளில் ஆமைகளையும் அவற்றின் முட்டைகளையும் பாதுகாத்தலை நடைமுறைப்படுத்த உதவும் சில முக்கிய தகவல்களைக் கொடுக்கக்கூடும். இப்போது, அந்தத் தகவல்களைப் பெற, கடற்கரையிலேயே நடத்தும் எளிய ஆமை அறுவை மருத்துவத்தைக் காண்கிறோம்! மனிதர்களுக்கும் பொதுவாக செய்யப்படும் இச்செயல்முறை வயிற்றறை நோக்கல் (laparoscopy) என்றழைக்கப்படுகிறது. தபீதா மெதுவாக கவிழ்த்துவிடப்பட்டு, சக்கரம் பொருத்தப்பட்ட ஒரு தூக்குப்படுக்கையில் கிடத்தப்படுகிறாள். அவளுக்காக நாங்கள் வருந்துகிறோம். அவளுடைய தொண்டையைத் தடவிக்கொடுப்பது அவளை அமைதிப்படுத்துவதாகக் காண்கிறோம். நாங்கள் காண்பது கண்ணீரல்ல, ஆனால் அவளுடைய கண்களிலுள்ள மணலைக் கழுவவும், அவள் கடல் நீரைக் குடிப்பதனால் சேரும் மிகுதியான உப்பை நீக்கவும் வெளியேற்றும் ஓர் உப்புத் திரவமாகும். அவை வேதனையோடு சம்பந்தப்பட்டவை அல்ல. அவளுடைய கீழ் நீந்து காலுக்கு மேற்பகுதியில் அவளுடைய தோல் அழுத்தித் தேய்த்துவிடப்படுகிறது; அதன் பிறகு ஒரு சிறிய கீறல் வழியாக ஒரு குழாய் உட்செலுத்தப்பட்டு, சிறிது காற்று உள்ளே ஊதப்படுகிறது. அவளுடைய கருப்பையினுள் பார்ப்பதன் மூலம், இதுதான் அவளுடைய முதல் இனப்பெருக்க பருவம் எனவும், வளர்ந்துகொண்டுவரும் இன்னுமநேக முட்டைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறாள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். இந்த எல்லா தகவல்களுமே பதிவுசெய்யப்படுகின்றன. பின்னர் குழாயிலுள்ள ஓர் அடைப்பின் வழியாக காற்று வெளியேற்றப்பட்டு, கீறல் தைத்துவிடப்படுகிறது.
திரும்ப மணலில் விடப்பட்டதும், தபீதா அனிச்சையாகவே தண்ணீரை நோக்கி செல்கிறாள். அலைகள் அவள்மீது வந்து பாய்ந்து விடுதலையடைந்த தபீத்தாவைக் கடலுக்குள் அழைத்துச் செல்கின்றன.
முட்டைகளை இடமாற்றுதல்
நாங்கள் திரும்பி பார்க்கும்போது, முட்டைகள் ஏற்கெனவே கூட்டிலிருந்து அகற்றப்பட்டதைக் காண்கிறோம். நான்கு மணிநேரத்திற்குப் பின் முட்டைகள் ஓட்டின் உட்பக்கத்தில் ஒட்டிக்கொண்டு இரத்தக் குழாய்கள் உருவாகிவிடுகின்றன. இந்த நிலையில் இவற்றை இடமாற்றினால், அவை அழிந்துபோகின்றன. ஆமை இனப்பெருக்கக் கூடத்தில் இந்த இடமாற்றும் முறைக்கு இரண்டு மணிநேரமே கொடுக்கப்படுகிறது. முட்டைகளை இடமாற்றுதல் செய்வதனால் கிடைக்கும் வெற்றிவீதம் மிக அதிகமாக இருக்கிறது. இதன் நோக்கம் கூட்டையும், முட்டைகளையும் தண்ணீர் மற்றும் மண்அரிப்புப் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதே. மணலின் வெப்ப அளவே ஆமைக்குஞ்சுகளின் பாலினத்தைத் தீர்மானிக்கிறது. பெரும்பாலான தீவுகள் குளிர்ந்த மணலைக் கொண்டிருக்கின்றன. ஆகவே பெரும்பாலும் ஆண் ஆமைகளையே உற்பத்தி செய்கின்றன. ஆனால் மான் ரிப்போவின் வெப்பமான மணலோ பெரும்பாலும் பெண் ஆமைகளையே உற்பத்தி செய்கின்றன.
ஜனவரியிலிருந்து மார்ச் வரை ஆமைக்குஞ்சுகள் வெளிவருகின்றன. அவை தங்களுக்கு மேல் உள்ள மணற்கூரையைக் கிளறிவிட்டு, மணல், கூட்டின் அடியில் சென்று அதன் தரையை உயரும்படி செய்கிறது. மணலின் உஷ்ணம் வெகு அதிகம் இல்லையென்றால், கூட்டிலிருந்து வெளியே தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்து, கடலை நோக்கி தட்டித் தடுமாறிச் செல்கிறது. ஆனால் அவற்றிற்கு இது பயணத்தின் தொடக்கமே. அவை இனப்பெருக்க முதிர்ச்சியடைய 50 வருடங்கள் தேவைப்படுகிறதென நம்பப்படுகிறது. ஆனால் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே அந்நிலையை அடைகிறது.
மனிதன் பராமரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்
வருந்தத்தக்கவிதத்தில், மனிதவர்க்கத்தின் அக்கறையின்மையும், யோசனையற்ற தன்மையும், அறியப்பட்டிருக்கும் ஆறுவகை கடலாமை இனங்கள் குறைவதற்கு அதிகத்தைச் செய்கின்றன. கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் அடிக்கடி இழுதுமீன் (jellyfish) என்று தவறாக கருதி ஆமைகளால் உட்கொள்ளப்படுகின்றன. இது அவற்றின் சீரண பாதைகளை அடைத்துக்கொண்டு, அவை பட்டினிகிடந்து சாகும்படி செய்கின்றன. எறியப்படும் மற்ற குப்பைக் கூளங்கள் ஆமைகளை மூச்சுத்திணறி சாகடிக்கின்றன. படகோட்டி கவனமாக இல்லையென்றால், படகுகளின் இயக்குறுப்புகளுங்கூட (propellers) ஆபத்தை விளைவிக்கலாம். இவற்றோடுகூட ஏற்படும் எண்ணெய்க் கசிவுகளும், நச்சுக் கழிவுப் பொருட்களும், ஓர் இனப்பெருக்க காலத்தில், கடற்கரையில் வாழும் அனைத்து உயிர்களையுமே அழித்துவிடலாம். ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒருமுறை ஆமை நீர்மட்டத்திற்குமேல் காற்றுக்காக வரவேண்டியிருப்பதால், ஓர் ஆமையைச் சிக்கவைக்கும் மீன் வலைகள், அவற்றை மூழ்கும்படி செய்யலாம்.
அதிகமதிகமானோர் இந்த ஆபத்துகளையெல்லாம் அறிந்து, சுற்றுச்சூழலை அருமையாகப் பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொள்ளும்போது, மனிதனும் ஆமையும் சந்திக்க சந்தேகமின்றி அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படும்—படைப்பின் வியக்கத்தக்க இனப்பெருக்க சுழற்சியின் இன்னுமோர் அதிசயத்தினால் மனிதவர்க்கம் கவர்ந்திழுக்கப்பட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தப்படும். (g93 3/22)
[பக்கம் 27-ன் படங்கள்]
இடது பக்க மேல் வலஞ்சுழியாக: எளிய அறுவை மருத்துவம், கடலுக்குத் திரும்புதல், முட்டைகளை இடமாற்றம் செய்தல், நீந்து கால் அடையாளக் குறியிடப்படுதல்