உலகை கவனித்தல்
குற்றச்செயல்—ஒரு லாபகரமான தொழில்
இத்தாலியில் கூட்டு குற்றச்செயலின் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் 20,000-24,000 கோடி டாலர் கிடைக்கிறது என கணக்கிடப்பட்டிருப்பதாக இத்தாலிய தொழில் அதிபர் கூட்டுச்சங்கமான கூட்டு வணிகத்தின் 1997-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. குறைந்தபட்சம், போதைப்பொருள் கடத்தலின் மூலம் 1,800 கோடி டாலரும், விபசாரத்தின் மூலம் 1,100 கோடி டாலரும், அதிக வட்டி, மோசடிகள் ஆகியவற்றின் மூலமாக 1,500-1,800 கோடி டாலரும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. “பத்துக்கு மூன்று வணிக நிறுவனங்கள், தனிநபர்களாலோ குற்ற அமைப்புகளுடன் தொடர்புடைய நிறுவனங்களாலோ நிர்வகிக்கப்படுகின்றன; ஒவ்வொரு நாளும் நடைபெறும் வங்கி கொடுக்கல் வாங்கல்களில் 20 முதல் 25 சதவீத பணம் எங்கிருந்து வருகிறதென்றே சொல்ல முடியவில்லை” என்று லா ரேப்பூப்ளிக்கா என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
புத்தகம் வாசித்தல் பிரபலமாகவே இருக்கிறது
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், ஆங்கிலேய வாசிப்புப் பழக்கங்களை மாற்றிவிடவில்லை என கொள்கை ஆய்வு ஸ்தாபனத்தால் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. த டைம்ஸ் செய்தித்தாளில் அறிக்கை செய்யப்பட்டபடி, “சுற்றாய்வு நடத்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிபேர், தங்களுடைய மகிழ்ச்சிக்காகவே தற்போது ஒரு புத்தகத்தை வாசித்து வருவதாகக் கூறினர்; இந்த விகிதம் 1989 முதல் சற்றே மாறியிருக்கிறது.” ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வாசிக்கின்றனர்; 55 வயதுக்கு மேற்பட்டவர்களே பெரும் வாசகர்களாய் இருக்கின்றனர். சமையல் குறிப்புப் புத்தகங்களே மிகவும் பிரபலமானவை; அவற்றை அடுத்து, க்ரைம் அல்லது திகில் கதைகளும், காதல் நாவல்களும், 20-ம் நூற்றாண்டு புனைகதையும் பிரபலமானவை. 30 சதவீதத்தினருடைய வீட்டில் சொந்தக் கம்ப்யூட்டர் இருந்தபோதிலும், 7 சதவீதத்தினர் மட்டுமே புத்தகத்திற்குப் போட்டியாக இருக்கும் சிடி-ராம் (CD-ROM) புரோகிராம்களைப் பயன்படுத்த அறிந்திருக்கின்றனர். மேலும் கையடக்கமான கம்ப்யூட்டரைப் போல் அல்லாமல், ஒரு சுவாரஸ்யமான புத்தகம், காற்றுவாங்கச் செல்லும் கடற்கரை மணலாலோ, கூட்டம் நிறைந்த ரயில் பயணத்தாலோ பாதிக்கப்படுவதில்லை; மேலும், ஒரு சுவாரஸ்யமான புத்தகம், “பார்ப்பதற்கு நன்றாய் இருப்பதைப் போலவே அவற்றின் விஷயங்களும் அறிவொளியூட்டுபவையாய் இருக்கின்றன” என்று த டைம்ஸ் கூறுகிறது.
மீண்டும் தண்ணீர்
ஓசோன் அடுக்குக்குச் சேதமுண்டாக்காமலே நெருப்பை அணைக்கும் இயல்புடைய கெமிக்கல் ஒன்றைத் தயாரிக்க நீண்ட நாள் செய்த ஆய்வு, . . . முடிவில் தண்ணீரைப் பயன்படுத்தும்படி வழிநடத்தியிருக்கிறது” என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. “பரிசோதனையாக நடத்தப்பட்ட தீப்பிடித்தல் நிகழ்ச்சிகள் நூறில், தண்ணீரை தூறலாகப் பெய்யச் செய்வது, தீயணைப்புச் சாதனங்களில் இன்னும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருபவையான ஓசோன் அடுக்கைச் சேதப்படுத்தும் ஹலோஜன்களுக்குப் பொருத்தமான மாற்றீடாய் இருக்கிறது என்ற முடிவுக்கு டிரான்ஹேம் நகரிலுள்ள நார்வேஜியன் ஃபயர் ரிசர்ச் லேபரட்டரி வந்திருக்கிறது.” ஹலோஜன்கள்—கார்பன், புரோமின், ஃபுளூரின் சேர்மங்கள்—ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வதன் மூலம் நெருப்பை அணைக்கின்றன. தண்ணீர்த்துகள்களும் அதையே செய்கின்றன; அவை ஆவியாகி, ஆக்ஸிஜனை வெளியேற்றுகையில், அவற்றின் ஆரம்ப கன அளவைக் காட்டிலும் 1,700 மடங்கு விரிவடைகின்றன. அவை ஹலோஜன்களைக் காட்டிலும் குறைந்த பலனளித்ததாகக் காணப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பமானது, சிறியளவில் பற்ற வைக்கப்பட்ட, மங்கலான நெருப்புகளை அணைக்க முற்பட்டபோதுதான். அப்போது தண்ணீரை ஆவியாக்குவதற்குப் போதியளவான வெப்பநிலையை அவை எட்டவில்லை. ஆனால், ஹலோஜன்களுக்கு மாற்றீடான பொருட்கள் இன்னும் கண்டுபிடிப்பில் இருக்கின்றன; ஏனெனில், தண்ணீரால் மற்றொரு பிரச்சினை இருக்கிறது: அதை விற்பதன் மூலம் அதிக லாபம் பெற முடிவதில்லை.
இப்போது—ஹெப்படைட்டஸ் ஜி
இரத்தமேற்றுதலைப் பெற்ற ஒரே மாதத்திற்குள், நோயாளிகளுக்கு ஹெப்படைட்டஸ் ஜி வைரஸ் தொற்றியது என்று ஜப்பான் டாக்டர்கள் உறுதியாகக் கூறியிருக்கின்றனர்; இது, ஐக்கிய மாகாணங்களில் 1995-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதுவிதமான வைரஸ் ஆகும். டோக்கியோவிலுள்ள டோரானோமான் ஆஸ்பத்திரியில் 1992-க்கும் 1994-க்கும் இடையில் அறுவை மருத்துவம் செய்யப்பட்ட ஈரல் புற்றுநோய் கண்ட நோயாளிகளை மறு பரிசோதனை செய்தபோது, 55 நோயாளிகளில் இருவருக்கு அறுவை மருத்துவத்துக்கு முன்பும், மற்ற ஏழு பேருக்கு அதற்குப் பின்பும் நோய் தொற்றியிருந்ததாக டாக்டர்கள் கண்டறிந்தனர். 7 நோயாளிகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் நோய் தொற்றியிருந்த இரத்தம் ஏற்றப்பட்டதானது, சராசரியாக 71 கொடையாளர்களிடமிருந்து வந்தது என்று டாக்டர்கள் சொன்னார்கள்; இது, பயன்படுத்தப்பட்ட இரத்த வழங்கீட்டில் 1.4 சதவிகிதம் இந்தப் புதிய வைரஸால் தொற்றப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த ஹெப்படைட்டஸ் ஜி வைரஸைப் பற்றியோ, அல்லது இந்த வைரஸ் தொற்றுக்களில் எத்தனை சதவீதம் இன்னும் ஹெப்படைட்டஸ் நோயை, அல்லது புற்றுநோயை பரவச் செய்யும் என்பதைப் பற்றியோ சிறிதளவே அறியப்பட்டுள்ளது என்பதாக ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் கூறுகிறது.
“ஆயிரமாண்டுப் பிழை”
“ஆயிரமாண்டுப் பிழை என்று அறியப்பட்ட 2000-வது ஆண்டுப் பிரச்சினை, அல்லது வெறுமனே ‘Y2K’ என்று அழைக்கப்படுவது, நவீன முறையில் கணக்குப் போடுவதில் அறியப்பட்டுள்ள மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் குறைபாடுகளில் ஒன்று” என்பதாக யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் கூறுகிறது. இது, 1960-களில் ஆரம்பித்தது. அப்போது கம்ப்யூட்டர்களின் விலை அதிகமாகவும், அவற்றிலுள்ள நினைவாற்றல் மட்டுப்படுத்தப்பட்டதாயும் இருந்தன. டிஸ்க் ஸ்பேஸைக் குறைப்பதற்காக, கம்ப்யூட்டர் புரோகிராம் தயாரிப்பாளர்கள், அந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டும் கடைசி இரண்டு எண்களை மட்டுமே பயன்படுத்தி தேதிகளை எழுதினர். கம்ப்யூட்டர், 1997-ம் ஆண்டை வெறுமனே “97” என்று புரிந்துகொண்டது. இதனால் வந்த பிரச்சினை? “ஜன. 1, 2000 என்ற தேதியில், உலகின் சுமார் 90 சதவிகித கம்ப்யூட்டர் ஹார்டுவேரும் ஸாஃப்ட்வேரும், அது 1900-வது ஆண்டின் முதல் நாள் என்று ‘நினைக்கும்.’ இந்தத் தவறுகள் ஏற்கெனவே நேரிட்டிருக்கின்றன. “மாநில சிறைச்சாலை ஒன்றில், அப்போது விடுதலை செய்யப்பட்டிருந்த பல சிறைவாசிகளின் தண்டனைக் காலப்பகுதியைத் தவறாக கணக்கிடும்படிசெய்துவிட்டது இந்தப் பிழை” என நியூஸ்வீக் பத்திரிகை கூறுகிறது. “கடைகளிலும் உணவகங்களிலும், கடன் அட்டைகளில் குறிப்பிடப்பட்டிருந்த ‘00’ என்ற காலக்கெடு தேதிகள் கம்ப்யூட்டர்களைக் குழப்பிவிட்டபோது, அவை மறுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பல மாநிலங்களில், ஆயிரமாவது ஆண்டைத் தாண்டியிருக்கும் தேதிகளையுடைய புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை கம்ப்யூட்டர்கள் கையாள முடியாதபோது, மாநிலம்விட்டு மாநிலம் செல்வதற்கான தங்களுடைய லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதாக லாரி ஓட்டுநர்கள் கண்டிருக்கின்றனர்.” இந்தத் தேதிக் குறியீட்டு எண்களை மாற்றுவதற்காக, உலகளவிலுள்ள கார்ப்பரேஷன்கள், 60,000 கோடி டாலர் செலவிட வேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.—மீந்திருக்கும் இரண்டு ஆண்டுகளில் இதைச் சரிப்படுத்திவிடலாம் என்று அவை நம்புகின்றன.
பதிவை விஞ்சும் பிராணிகள்
1996-ம் ஆண்டு கோடைகாலத்தின்போது, கடல் தூக்கணாங்குருவி எனப்படும் பொதுவான டெர்ன் பறவை, “இடப்பெயர்ச்சி செய்யும்போது, இதுவரையாக மிக நீண்ட தூரம் பறந்திருக்கும் ஒரு பிராணி” என்ற ஒரு பதிவை நிலைநாட்டியது; இதற்கான நிரூபணம் எங்களிடம் இருக்கிறது என்பதாக இத்தாலிய செய்தித்தாள் கோரீரே டேல்லா ஸேரா கூறுகிறது. வளையம் கட்டப்பட்ட இடமான பின்லாந்திலிருந்து பறக்கத் தொடங்கிய பிறகு, 18 வாரங்கள் கழித்து தென்கிழக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் அந்த டெர்ன் பறவை பிடிக்கப்பட்டது; சராசரியாக, நாளொன்றுக்கு 200 கிலோமீட்டர் என்ற வேகத்தில் மொத்தம் 24,400 கிலோமீட்டர் தூரம் அது பயணம் செய்திருந்தது. இதற்கு முந்திய பதிவு, 1955-ல் ரஷ்யாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 22,530 கிலோமீட்டர் தூரம் பறந்து சென்ற ஓர் ஆர்க்டிக் டெர்ன் பறவையால் ஏற்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யும் வேறு சில பிராணிகள், சிவப்பு சால்மன் மீன், விலாங்கு மீன்கள், மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், பச்சை ஆமைகள், திமில் முதுகு திமிங்கிலங்கள்.
அலாஸ்காவிலிருந்து ஹவாய்க்கு இடப்பெயர்ச்சி செய்ய, திமில் முதுகு திமிங்கிலங்கள் பொதுவாக சுமார் 102 நாட்கள் எடுக்கின்றன; ஆனால், 4,465 கிலோமீட்டர் தூரம் நீந்துவதற்கு வெறும் 39 நாட்களே எடுத்த திமில் முதுகு திமிங்கிலத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்! இந்தப் பயணம், சராசரியாக மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தைக் குறித்துக் காட்டுகிறது. அதே திமிங்கிலம் மெக்ஸிகோவிலும் காணப்பட்டிருக்கிறது. குட்டிகளை ஈன்றெடுக்க திமில் முதுகு திமிங்கிலங்கள் ஹவாய்க்கு இடப்பெயர்ச்சி செய்கின்றன. ஏனெனில், குட்டிகளின் உடலில் அலாஸ்காவின் உறைந்த தண்ணீரைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கொழுப்புச்சத்து குறைவாக இருக்கிறது. அவற்றின் இடப்பெயர்ச்சி, கடல்வாழ் பாலூட்டிகள் மேற்கொள்ளுவதிலேயே நீண்டதாய் இருக்கிறது என்பதாக லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.
நழுவிச்சென்றுவிடும் அந்த ஈ!
ஓர் ஈயை அடிப்பது ஏன் அவ்வளவு சிரமமாய் இருக்கிறது? அவ்வளவு சீக்கிரமாய் அதனால் எப்படி தப்பிச்செல்ல முடிகிறது? இதன் இரகசியம், அதன் மூளையிலிருக்கும் பெரிய நார் (giant fiber) என்றழைக்கப்படும் ஓர் அமைப்பில் இருக்கிறது. இது, ரிப்பனைப் போன்ற ஒரு செல்; இது, வேதியல் ரீதியில் அல்லாமல், மின்னியல் ரீதியில் ஈயின் மூளையின் பிற பகுதிகளுடன் தகவலைப் பரிமாறிக்கொள்கிறது. இதன் விளைவாக, மூளையின் இந்தப் பகுதியில் மின்சாரம் வேகமாய்ப் பாய்கிறது; இது, குதிக்கவும் பறக்கவும் தூண்டிவிடுவதன் மூலம், ஒரு நொடியின் ஆயிரத்தில் சில பகுதி நேரத்திற்குள் ஆபத்திலிருந்து தப்பி, பறந்துசென்றுவிட அந்த ஈக்கு உதவுகிறது. உதாரணமாக, ஒரு மனிதனில், கண் பார்க்கும் ஏதோவொன்றுக்கு ஏற்றவாறு செயல்படும் வகையில் கை வேலைசெய்ய ஆரம்பிப்பதற்கு, சுமார் கால் நொடி எடுக்கிறது. ஈக்கள் பெற்றிருக்கும் இந்த உணர்வின் அடிப்படையில், பிரிட்டனின் சூசக்ஸ் பல்கலைக்கழகம், ஈக்களின் பிரதிசெயலை முறியடிப்பதில் வெற்றிகரமாக வேலை செய்யும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரிக்க எதிர்பார்க்கின்றனர் என்று த டைம்ஸ் ஆஃப் லண்டன் அறிக்கை செய்கிறது.
கடலாமை நெருக்கடி
ஆசிய-பசிபிக் நாடுகளுக்குச் சொந்தமான கடல்நீர் எல்லைகளில் வசிக்கும் கடலாமைகளின் எண்ணிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் குறைந்து வருகிறது என்பதாக தி வீக்கென்ட் ஆஸ்ட்ரேலியன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவும் இந்தோனீஷியாவும் சேர்ந்து ஜாவாவில் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த இது வழிநடத்தியது. கடலாமைகள் இடப்பெயர்ச்சி செய்வதாலும் அவை ஒரு குறிப்பிட்ட தேசத்துக்குச் சொந்தமானவையாய் இராததாலும், வலசை போகும் தடத்தைச் சேர்ந்த மற்றொரு நாட்டில், எதிர்கால இருப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் அவை வேட்டையாடப்பட்டால், ஒரு நாட்டில் இருக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பு திட்டங்களும் பயனின்றி போகலாம். “சுற்றுலா காண வருபவர்களிடம் பொருட்களை விற்று பணம் சம்பாதிப்பதற்காக பாலி என்ற இடத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும், 50,000 கடலாமைகள் கொல்லப்படுகின்றன என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது; லட்சக்கணக்கான கடலாமைகளின் முட்டைகள் உணவுக்காக சேகரிக்கப்படுகின்றன” என்று அந்தச் செய்தித்தாள் கூறுகிறது. பாப்புவா நியூ கினீயும், அருகிவரும் பெருந்தலை ஆமைகள், தாக்குதலுக்குட்படும் தோல்-ஓட்டு ஆமைகள், பச்சை ஆமைகள் ஆகியவை உட்பட, கடல்வாழ் கடலாமையின் பொருட்களை வியாபாரம் செய்யும் தொழிலில் ஈடுபடுகிறது. ஆபத்தில் இருக்கும் மற்ற இனங்கள், கழுகு அலகு ஆமைகள், தட்டையோட்டு ஆமைகள், ஆலிவர் ரிட்லீ ஆமைகள் ஆகியவை.
150 ஆண்டுகளில் மார்ஸ் குறியீடு அழிவை நோக்கி
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சேம்யல் மார்ஸ், எழுத்து வரிசையின் ஒவ்வொரு எழுத்துக்கும் புள்ளிகள் மற்றும் கோடுகள் அடங்கிய ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்ணை நியமித்தார். இது, மார்ஸ் பட்டன் எனப்படும் ஒரு கருவியின் மூலம் தட்டி விடப்பட்டு ரேடியோ அலைகளால் செய்திகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு உதவின. துன்பத்தில் அகப்பட்ட கப்பல்கள் அவசர குறியீட்டுச் சொல்லான SOS-ஐப் பயன்படுத்தியபோது, கடலில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருக்கின்றன. எண்ணற்ற பொழுதுபோக்குக் கலைஞர்கள் இன்பத்துக்காக செய்திகளை ஒலிபரப்பியிருக்கையில், உலக ராணுவங்களும்கூட இந்த எளிய முறையிலான தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்தியிருக்கின்றன; மார்ஸ் குறியீட்டின் மிகச் சிறந்த நன்மை, அதன் தெளிவான தன்மையில் அடங்கியிருக்கிறது; இது ஒரு ரேடியோ ஆப்பரேட்டர் தன் சொந்தப் பேச்சு நடையில் பேசும்போது, அல்லது அவருடைய செய்தி கேட்கப்படும் இடத்தின் மொழியைப் பேச அறியாதிருக்கும்போது முக்கிய அம்சமாய் இருக்கிறது. ஆனால் மார்ஸ் செய்திகள், பேச்சு ரேடியோ தொடர்பாலும் (voice radio contact) செயற்கைக் கோள் தகவல் பரிமாற்ற அமைப்புகளாலும் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. 1993-ல், இந்தக் குறியீட்டுச் சொல், கடலில் செல்லும் கப்பல்களில் இனிமேலும் தேவைப்படவில்லை. மார்ஸ் அமைப்பை இந்த ஆண்டின் முற்பகுதியில் பிரான்ஸ் கைவிட்டுவிட்டது; 1999-ம் ஆண்டு வாக்கில் அது உலகளவிலும் நிறுத்தப்பட்டுவிட்டிருக்கும்.