பெரிய தோல்முதுகு கடலாமைகளின் வருடாந்தர விஜயம்
மலேசியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
அது கிட்டத்தட்ட நடுராத்திரியாக இருக்கிறது. முழு நிலா, கொந்தளிப்பற்ற, அமைதியான கடலின்மீது ஒரு பொன்னிற வெளிச்சத்தை வீசுகிறது. ராண்டாவ் ஆபாங் கடற்கரையில் தொகுதிகளாலான ஜனங்கள் இருக்கின்றனர், இதமான, மென்மையான மணலில் சிலர் நின்றுகொண்டிருக்கிறார்கள், மற்றவர்கள் குந்தியிருக்கிறார்கள் அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரங்கெட்ட வேளையிலே அவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள்? அவர்கள் நான்கு துடுப்புறுப்புகளைக் கொண்ட பெரிய ஓட்டின்—கட்டைத் தோல் கடலாமை, அல்லது தோல்முதுகு கடலாமையின் (leatherback)—விஜயத்திற்காக அமைதலாக காத்திருக்கின்றனர்.
இந்த அற்புதமான நிலநீர் வாழும் விஜயம்செய்வோர், மற்றபடி அசட்டைசெய்யப்படும் இந்தக் கடற்கரையை சர்வதேசப் புகழ்பெற்றதாக ஆக்கியிருக்கின்றனர். டூங்கூனின் சற்று வடக்கே, தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில், சிங்கப்பூரிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் ராண்டாவ் ஆபாங் அமைந்திருக்கிறது. உலகிலேயே, ஒரு உயரிய பணிசெய்வதற்காக தோல்முதுகு கடலாமைகள் ஆண்டுதோறும் விஜயம் செய்யும் வெகுசில இடங்களில் ஒரு இடமாக அது இருக்கிறது.
முட்டையிடும் காலம் ஏறக்குறைய மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை தொடர்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற உச்சநிலை மாதங்களில், முட்டையிடும் முறையை பார்ப்பது மிக எளிது. பெரும்பாலும் இருட்டினபின் கடலாமைகள் நீரிலிருந்து வெளியே வருகின்றன. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மேற்குப் பகுதிகளிலிருந்து வருகை தந்தோர் காத்திருந்ததெல்லாம் வீணாகிப்போகுமோ?
கடலுக்கு வெளியே அவை வருகின்றன!
கடற்கரையிலிருந்து சிறிது தூரத்திலேயே, மினுமினுக்கும் தண்ணீருக்கிடையே திண் நிழல் உருவாக ஏதோவொன்று மேலும்கீழும் மிதந்துகொண்டு வருவது திடீரென்று கண்ணில் படுகிறது. கூட்டம் கிளர்ச்சியடைகிறது! அது கரையோரமாக வரும்போது, தண்ணீரிலிருந்து மாடம்போன்ற வடிவுடைய பொருள் வெளிவர ஆரம்பிக்கிறது. கடலாமை ஒன்று கரைமேல் வருகிறது! எவ்வளவு அமைதலாக இருக்க முடியுமோ அவ்வளவு அமைதலாகப் பார்க்கும்படி அங்கிருந்த எல்லாருக்கும் சில வழிகாட்டிகள் எச்சரிக்கை கொடுத்தனர். ஏனென்றால் சப்தம் அதைப் பயமுறுத்தி அனுப்பிவிடக்கூடும்.
முதலாவது தலை தோன்றுகிறது, பின்னர் கழுத்து, ஓட்டின் முன் பாகமும் முன் துடுப்புறுப்புகளும் பின்தொடர்கின்றன, கடைசியாக முழு கடலாமையும் கரையில் தோன்ற ஆரம்பிக்கிறது. மிருதுவான அலை அதன் வாலையும் பின் துடுப்புறுப்புகளையும் தழுவிவிட்டுப் போகிறது. மூக்கிலிருந்து வாலின் முனைவரை ஏறக்குறைய இரண்டு மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்டதாய் இருக்கும் அதன் உருவம் உண்மையிலேயே எவ்வளவு பெரிது! கடற்கரையில் அது அசையாமல் கிடக்கிறது.
திடீரென்று, கடலாமை தன் முன் துடுப்புறுப்புகளை உயர்த்தி, தன் உடம்பை முன்னோக்கி எறிந்து, பொத்தென்ற ஒலியுடன் நிலத்தில் விழுகிறது. அசையாமல் இன்னும் கொஞ்சம் நேரம் கிடக்கிறது. அடுத்துத் தன்னை உயர்த்தி, எறிவதற்கு தேவையான மூச்சையும், பலத்தையும் பெறுவதற்காக காத்திருப்பதுபோல் அவ்வாறு செய்கிறது. இப்படித்தான் அது நிலத்தில் நடந்துசெல்கிறது. அதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள கூட்டம் தூரத்தில் நிறுத்தப்படுகிறது. வழிகாட்டிகள் இதைக் குறித்து மிகவும் கண்டிப்பாய் செயல்படுகின்றனர். ஒவ்வொரு முன்னோக்கி நகர்தலுக்கும் கூட்டமும் சறுக்கி முன்னோக்கி நகருகிறது—ஆனால் மிகவும் அமைதலாக.
தோல்முதுகு கடலாமை கடற்கரையில் குதித்துக் குதித்து போகும்போது, அது தான் போகவேண்டிய இடத்தை இயல்புணர்ச்சியால் அறிந்திருக்கிறது. அதனுடைய இயல்புணர்ச்சியான அறிவு தன் முட்டைகள் வெற்றிகரமாக பொரிக்கும் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும்படி அதற்கு உதவுகிறது. அந்த இடத்தில் ஒரு குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறது. பின்துடுப்புறுப்புகள் மண்வெட்டிகளாகின்றன, மண்ணை வாரியெடுக்கின்றன.
நீண்ட காலம் போல் தோன்றுகிறது கடந்தபின்பு, உரிமம்பெற்ற முட்டை சேகரிப்பவராக இருக்கும் வழிகாட்டிகளில் ஒருவர் முன்வந்து, அந்தக் குழியினுள் தன் கையைவிடுகின்றார். அவருடைய முழங்கை குழிக்குள் மறைந்துபோகும் அளவிற்கு குழி அவ்வளவு ஆழமாக இருக்கிறது. குழியிலிருந்து அவர் தன் கையை எடுக்கும்போது அனைவரும் ஆச்சரியப்பட்டு, கிளர்ச்சியுற்று, மலைத்துப்போய் நிற்கின்றனர். ஒரு முட்டையை அவர் வெளியில் எடுக்கிறார்!
தோல்முதுகு கடலாமையின் முட்டை, மங்கலான வெண்ணிறமுடையது. மேசைப் பந்தாட்ட (டேபிள் டென்னிஸ்) பந்தின் அளவிலிருந்து டென்னிஸ் பந்தளவுக்கு அதன் அளவு வித்தியாசப்படுகிறது. குழியில் கடைசியாக இருக்கும் ஒருசில முட்டைகள் பெரும்பாலும் ஒரு கோலிக்குண்டு அளவுக்கு இருக்கின்றன. கோழிமுட்டைகளைப் போல் இல்லாமல், ஓடு மிகக் கெட்டியான தோலாக இருக்கிறது, அது அழுத்தப்படும்போது அதில் எளிதில் பள்ளம் உண்டாகிறது. அக்கறையைத் தூண்டும் வகையில், முட்டையின் வெள்ளைக்கரு (அல்பியூமன்) சமைக்கப்பட்டாலும்கூட திரவ வடிவில் தொடர்ந்திருக்கிறது. சமைக்கப்பட்ட முட்டை ஓரளவுக்குக் காரமானதாயும், மீன்சுவையுடையதாயும் இருக்கிறதென சொல்லப்படுகிறது. ஒரு கடலாமை ஒரு சமயத்தில் சராசரியாகச் சுமார் 85 முட்டைகளையிடுகிறது. ஆனால் 1967-ல் உச்சநிலை பதிவாகிய 140 முட்டைகளை ஒரு முட்டைக்குழி கொண்டிருந்தது அறிக்கைசெய்யப்பட்டது.
இப்போது கூட்டம், அதிகமான சுதந்திரத்தை உடையதாக இருக்கிறது. சிலர் அச்சத்துடன் கடலாமையைத் தொட்டு, ஆராய்கின்றனர். சிலர் அதன்மேல் ஏறி அல்லது அதன்மேல் சாய்ந்து தங்கள் குடும்ப ஆல்பத்தில் ஃபோட்டோக்களாக வைப்பதற்காக போஸ் கொடுக்கின்றனர். கடலாமையை கொஞ்சம் கூர்ந்து நோக்கும்பொழுது, மண்துணுக்குகளால் குமிழடைந்த கண்களிலிருந்து கட்டியான சிறிது ஒளி ஊடுருவும் கோழை சொட்டுச் சொட்டாய் வடிவது வெளிப்படுகிறது. தண்ணீரிலிருந்து காற்றுக்கு வந்தது இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்போதைக்கப்போது கடலாமை சுவாசிப்பதற்காகத் தன் வாயை உரத்தச் சத்தத்தோடு திறக்கிறது.
முட்டைகளைப் புதைத்தல்
சற்றுப் பின்பு, இந்தப் பிராணி குழிக்குள் மண்ணை மறுபடியும் போடுவதற்கு தன் பின்துடுப்புறுப்புகளை நகர்த்த ஆரம்பிக்கிறது. குழி மூடப்பட்டவுடன், பாதிவட்டமிட்டுத் துடைக்கும் பலமான துடைப்பானுக்கான நடவடிக்கைக்கு தன் பின்துடுப்புறுப்புகளைத் தோல்முதுகு கடலாமை உட்படுத்துகிறது. மண் எல்லா பக்கமும் பறக்கிறது! கூட்டத்தினர் தங்கள் முகங்களையும் உடல்களையும் பாதுகாக்கும்படி விரைவாகப் பின்வாங்குகின்றனர். இங்குமங்கும் ஆடும் துடுப்புறுப்புகள் கொஞ்ச நேரத்துக்கு வாரி அடிப்பதை தொடர்கின்றன. என்னே ஓர் அடிவலுவும், பலமும் வெளிக்காட்டப்படுகின்றன! துடுப்புறுப்புகள் இறுதியில் அடிப்பதை நிறுத்துகிறபோது, தோல்முதுகு கடலாமை தோண்டின குழி இருந்தது என்பதற்கு சிறிதுகூட தடயத்தை கூட்டம் காணமுடியாது. நிஜமாகவே இயல்புணர்ச்சி ஞானமே! ஆனால் இந்தக் கடலாமையைப் படைத்தவரின் ஞானம் எவ்வளவு அளவிட முடியாதளவுக்கு மகத்தானதாக இருக்கிறது!
தோல்முதுகு கடலாமை தான் கடலுக்குத் திரும்புவதற்கு முன், உரிமம்பெற்ற முட்டை சேகரிப்பவர் ஒருவர், அதன் முன்துடுப்புறுப்புகள் ஒன்றில் அடையாளக் குறியைக் கட்டிவிடுகிறார். இது ஏன் செய்யப்படுகிறதென்றால், பின்னான அதன் நில விஜயங்களையும் கடலில் அதனுடைய இடப்பெயர்ச்சிகளையும் கண்காணிப்பதற்காகும். ஒவ்வொரு பருவத்திலும் அது ஆறு முதல் ஒன்பது தடவை முட்டையிடுகிறது. முட்டையிடும் காலங்களுக்கு இடையே உள்ள இடைவெளிக் காலம் 9 முதல் 14 நாட்கள்.
திடீரென்று தோல்முதுகு கடலாமை தன்னை உயர்த்திக்கொண்டு, முன்னோக்கி தன்னையே தள்ளிக்கொண்டு உருளுகிறது. அது திசைதிரும்பி, கடலுக்குள் இருந்து அது வெளிவந்ததைவிட ஓரளவு விரைவாகக் கடலுக்குள் செல்கிறது. அது தண்ணீரை அடைந்தவுடன், தலை உள்ளே செல்கிறது, பின்னர் ஓடும் செல்கிறது. கடைசியாக அது மறைந்துவிடுகிறது. தலை இறுதியில் தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்க்கும்போது, அது அதிகமான தூரத்தைக் கடந்திருக்கிறது. கடல் வழியே அது விரைவாக நீந்திச்செல்கிறது, அதனுடைய மூக்கின் நுனியில் நிலா வெளிச்சம் பிரதிபலிக்கிறது. எவ்வளவு விரைவியக்கத்தோடும் வேகமாகவும் அது தண்ணீரில் நீந்துகிறது! நிலத்தில் அலங்கோலமானதாகவும் மெதுவாக நகர்வதிலிருந்தும் அதிக வித்தியாசமாக இருக்கிறது.
பாதுகாப்பு முயற்சிகள்
அதிகரிக்கும் எண்ணிக்கையான மற்ற விலங்குகளுக்கு நிகழ்வதுபோலவே, தோல்முதுகு கடலாமைகளும் அசுத்தமான சூழலாலும் மனிதனின் பேராசையாலும் நிகழும் அழிவுகளினால் பயமுறுத்தப்படுகின்றன. 1970-ன் மையத்தில், நூற்றுக்கணக்கான, முற்றிலும் வளர்ந்திராத கடலாமைகள் பக்கத்து நாடாகிய பாஹங்ஙின் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டு மரித்துக் கிடந்தன! விநோதமான சுவைக்காக கடலாமைகளின் முட்டைகள் ஈவிரக்கமின்றி சேகரிக்கப்படுகின்றன.
நல்லவேளை இந்தக் கடலாமைகளுக்காக, இவை எண்ணிக்கையில் குறைந்துவருவதன்மீதான மலேசியாவின் அதிக அக்கறை 1951-ல் கடலாமை சட்டம் (Turtle Enactment) என்ற ஒன்றை ஏற்படுத்தும்படி செய்தது. தனிப்பட்டவர்கள் முட்டையைச் சேகரிப்பது சட்டத்துக்கு விரோதமானது. எனினும், லாபம் அதிகம் இருப்பது ஒரு பெரும் சோதனையாக இருப்பதால், பணப் பேராசைமிக்கவர்கள் இந்தச் சட்டத்தை அவமதிக்கின்றனர். ஆனாலும், பாதுகாப்பு முயற்சிகள் பலனில்லாமல் போகவில்லை.
ராண்டாவ் ஆபாங்ஙில் உள்ள கடற்கரையில், மண்ணில் சிறிய அறிவிப்பு அட்டைகள் குத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது சந்தோஷமளிக்கிறது. ஒவ்வொன்றும் தோல்முதுகு கடலாமைகளின் ஒரு சிறு தொகுதி முட்டைகள் புதைக்கப்பட்ட இடத்தைக் குறிக்கின்றன. அறிவிப்பு அட்டைகள், முட்டைகளின் எண்ணிக்கை, புதைக்கப்பட்ட நாள், முட்டைகளின் மூலத் தொகுதியை அடையாளம் காட்டும் ஒரு குறியீட்டு எண் ஆகியவற்றைக் காட்டுகின்றன. புதைக்கப்பட்டு சுமார் 45 நாட்கள் கழித்து, ஒவ்வொரு அறிவிப்பு அட்டைகளையும் சுற்றி ஒரு கம்பிவலை அமைக்கப்பட்டிருக்கிறது. பொரித்த குஞ்சுகள் தப்பி ஓடாதபடி இருக்க அது அமைக்கப்பட்டிருக்கிறது. குஞ்சு பொரிப்புக் காலம் 52-லிருந்து 61 நாட்கள் வரை ஆகின்றன. பெரும்பாலும் மாலையில் சூரிய மறைவுக்குப் பின்பு, பொரிக்கும் குஞ்சுகள் வெளியேறும்போது, ஒவ்வொரு குழியிலுமுள்ள எண்ணிக்கைகள் பதிவுசெய்யப்படுகின்றன. அவை கொள்கலங்களில் வைக்கப்பட்டு, பின்னர் கடலோரங்களில் விடப்படுகின்றன.
பாதுகாப்புத் திட்டம் பல ஆயிரக்கணக்கான குஞ்சுகளை வெற்றிகரமாக வளர்த்து, அவற்றினுடைய தண்ணீர்வீட்டில் திரும்ப அவற்றை விட்டிருக்கிறது. ஆனால் இந்தக் குறைந்த உயிர்ப்பிழைத்தல் வீதம், மேலும் ராண்டாவ் ஆபாங்ஙிற்கு வரும் தோல்முதுகு கடலாமைகளின் எண்ணிக்கை குறைதல், தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது.
[பக்கம் 18-ன் படம்]
தலையிலிருந்து வால்வரை சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள தோல்முதுகு கடலாமை டஜன்கணக்காக முட்டைகளை இடுகிறது. சுமார் எட்டு வாரங்களுக்குப் பிறகு, பொரித்த குஞ்சுகள் வெளிவருகின்றன
[படத்திற்கான நன்றி]
Leathery turtle. Lydekker
C. Allen Morgan/Peter Arnold
David Harvey/SUPERSTOCK
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
C. Allen Morgan/Peter Arnold