எமது வாசகரிடமிருந்து
பிள்ளை வளர்ப்பு “உங்கள் பிள்ளைகள்—அவர்களுக்கு மிகச் சிறந்ததைச் செய்தல்” (ஜனவரி 8, 1993) என்ற தொடர்கட்டுரைகள், ஒரு பெற்றோராக என்னுடைய பாகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தின. என் மூன்று வயது மகனைப் புறக்கணிக்கும்வகையில், எனது கவனம் சொந்த காரியங்களிலும், சபை நடவடிக்கைகளிலுமே செலுத்தப்பட்டது. அவன் அமைதியற்ற ஒரு குழந்தையாகிவிட்டான். நானும் முன்கோபியாகவும், எரிச்சலடைபவளாகவும், அன்பை வெளிக்காட்ட சங்கோஜப்படும் மனநிலையை உடையவளாகவும் இருந்தேன். என் குழந்தையைக் கட்டியணைப்பதை விட்டுவிட்டு, மிகவும் கண்டிப்பாக இருக்க முயற்சிப்பதில் நெடுந்தூரம் சென்றுவிட்டேன். யெகோவா தமது அன்பைத் தாராளமாக நம்மீது பொழிவதனால், சுதந்தரமாக யெகோவாவிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட அன்பை இப்போது நானும் பொழிய முயற்சிப்பேன்.
T. T., ஜப்பான்
நான் ஒரு பெற்றோராக இல்லையென்றாலும், நான் குழந்தைகளை விரும்பும் ஓர் ஆள். இந்த இதழ் என் இருதயத்தைத் தொட்டது. இன்று குழந்தைகள் எதிர்ப்படும் கவலைதரும் பிரச்னைகளைப்பற்றி அறியும்போது நான் கதறினேன். உங்களுடைய கட்டுரையும் தகவல் மிக்க ஒன்றாக இருந்தது. இது அவர்கள் வளர்ந்த பிறகு வரும் பயங்கரமான பிரச்னைகளைத் தவிர்க்கும்பொருட்டு, மிகவும் சிறு வயதிலேயே இப்பிரச்னைகளை எவ்வாறு கையாளலாம் என காண்பிக்கிறது.
L. B., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கட்டுரைகள் ஒரு தகப்பனாக என்னையே சோதித்துப் பார்க்கும்படி செய்தன. நான் திருமணமானபோது மிகவும் இளவயதினனாய் இருந்தேன். இதனால் குடும்பத்தோடு இருப்பதைவிட நண்பர்களோடு இருப்பதையே அதிகம் விரும்பினேன். இந்தக் கட்டுரைகளைப் படித்தது, நான் என் மகளுக்கு என்னுடைய நேரத்தைப் போதுமானளவு கொடுக்கவில்லை என்று உணரச்செய்தது. இந்தக் கட்டுரைகள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததெதுவோ அதைச் செய்யும்படி பெற்றோரைத் தூண்டுவதாக.
A. V., இத்தாலி
விலங்கு கதைகள் “கேப்பிபெரே—படைப்பின் கோளாறா அல்லது அதிசயமா?” (ஜனவரி 8, 1993) என்ற உங்களுடைய கட்டுரைக்காக நன்றி. அடிக்கடி விலங்குகளைப்பற்றிய கட்டுரைகளை நான் என் குழந்தைக்கு வாசிப்பதுண்டு. திருவாளர் கேப்பிபெரேயே பேசும் அந்தக் கட்டுரை என் குழந்தையை திளைக்கச்செய்தது!
C. T., ஜப்பான்
அநேக பத்திரிகைகளில் வெளியிடப்படும் உபயோகமற்ற கட்டுரைகளிலிருந்து, புத்துணர்ச்சியூட்டும் ஒரு மாற்றம்! நானும் என் குழந்தைகளும் சேர்ந்து படித்தோம். புதிய வித்தியாசமான விலங்குகளைப்பற்றி அறிவது மகிழ்ச்சிக்குரியதாகும்!
C. H., ஐக்கிய மாகாணங்கள்
கண்ணீர் எங்களுடைய சபையில் ஒரு மூப்பராக அநேக வருடங்கள் சேவித்த உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவரின் சவஅடக்கத்திற்குச் சமீபத்தில் போயிருந்தேன். சவப்பெட்டியை மன்றத்திற்கு வெளியே வண்டியில் தள்ளிக்கொண்டுவந்தபோது, நான் மிகவும் அழுதேன். இருப்பினும், அங்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர், தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். ஒரே ஒரு நாளுக்குப் பிறகு, “இந்தக் கண்ணீரெல்லாம் ஏன்?” என்ற கட்டுரையைத் தாங்கி வந்த, விழித்தெழு!-வின் ஜனவரி 8, 1993 இதழ் எனக்குக் கிடைக்கப்பெற்றது. அது கண்ணீர் பலவீனத்தின் ஓர் அடையாளம் அல்ல, ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகளின் ஒரு வெளிக்காட்டுதல் என புரிந்துகொள்ள உதவிற்று. தகவல் நிறைந்த அந்தக் கட்டுரைக்காக மிகவும் நன்றி.
S. Z., ஜெர்மனி
ஜெபம் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கிறாரா?” (ஜனவரி 8, 1993) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. அந்தக் கட்டுரை மிகவும் உதவிசெய்யக்கூடியதாக கண்டேன். என்னுடைய ஜெபம் பொருளாதாரத் தேவைகளுக்கான அற்பமான வேண்டுதல்களால் ஆனதாக இருக்கக்கூடாது என்பதை அது எனக்குக் கற்றுக்கொடுத்தது. யெகோவா எப்போதுமே உடனடியாக பதில் அளிக்காததால், ஜெபத்தில் நிலைத்திருக்கும் தேவை இருக்கிறது எனவும் நான் கற்றுக்கொண்டேன். மேலும் நமக்கு விருப்பமான பதிலை அவர் கொடுக்காமலிருக்கலாம்.
B. G., ஐக்கிய மாகாணங்கள்