பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகள்
உங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு சமயம் நீங்கள் இப்படியாகக் கேட்டிருக்கலாம்: ‘கடவுள் இருக்கிறார் என்றால், அவர் ஏன் இவ்வளவு துன்பத்தை அனுமதித்திருக்கிறார்? மனித சரித்திரம் முழுவதும் இவ்வளவு நீண்டகாலமாக அவர் துன்பத்தை ஏன் அனுமதித்திருக்கிறார்? துன்பத்திற்கு எப்பொழுதாவது முடிவு வருமா?’
இப்படிப்பட்ட கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் இல்லாததால் பலர் கசந்துகொள்கின்றனர். சிலர் கடவுள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையிலிருந்தும் விலகிச்செல்கின்றனர், அல்லது தங்களுக்கு நேரிடும் எதிர்பாரா துர்ச்சம்பவங்களுக்கு அவரையே குற்றப்படுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு, இரண்டாவது உலக மகா யுத்தத்தில் நாசியரால் பல லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அந்தப் படுகொலையில் உயிர்த்தப்பிய ஒருவர் மிகுந்த மனக்கசப்புடன், “நீ என்னுடைய இருதயத்தை நக்குவாயானால் அது உனக்கு விஷமாயிருந்து உன்னைக் கொன்று விடும்,” என்றார். முதல் உலக மகா யுத்தத்தின் போது தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினரில் பலரைக் கொன்ற இனக் கலவரம் சார்ந்த துன்புறுத்தலால் துன்பப்பட்ட இன்னொருவர், “எங்களுக்கு அவசியமாயிருந்த போது கடவுள் எங்கே இருந்தார்?” என்று எரிச்சலுடன் கேட்டார்.
இப்படியாகப் பலர் ஒரே குழப்பத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய நோக்குநிலையில், நற்குணமும் அன்பும் உடைய ஒரு கடவுள் கெட்ட காரியங்களை இவ்வளவு நீண்ட காலத்திற்கு அனுமதித்திருப்பதைப் பொருத்தமற்றதாய்க் காண்கின்றனர்.
மக்கள் என்ன செய்திருக்கின்றனர்
கடந்த நூற்றாண்டுகளினூடே—உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளினூடே—மக்கள் மற்றவர்களுக்கு எதிராக ஏராளமான பொல்லாப்பைச் செய்திருக்கின்றனர் என்பது உண்மை. இந்த அனைத்துக் காரியங்களின் அளவும் பயங்கரமும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது.
நாகரிகம் பேரளவுக்கு முன்னேறுகையில், மற்றவர்களை அழிப்பதற்கு அல்லது ஊனப்படுத்துவதற்கு இன்னும் அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களை மனிதர் கண்டுபிடித்திருக்கின்றனர்: தரைப்படைக் கருவிகள், இயந்திர துப்பாக்கிகள், போர் விமானங்கள், டாங்கிகள், ஏவுகணைகள், எரிகணைகள், இரசாயன மற்றும் அணு ஆயுதங்கள். இதனால் இந்த நூற்றாண்டில் தேசங்களுக்கு இடையிலே நடந்த போர்கள் மட்டும் பத்து கோடி மக்களைக் கொன்றிருக்கிறது! பல கோடி மக்கள் காயமுற்றிருக்கின்றனர் அல்லது மற்ற வழிகளில் துன்பம் அனுபவித்திருக்கின்றனர். மற்றும் வீடுகள், உடைமைகள் போன்ற பொருள் சேதத்தின் அளவு கணக்கிடப்படமுடியாதளவுக்கு மிகுதியாக இருந்திருக்கின்றது.
போர் ஏற்படுத்தியிருக்கும் ஆழ்ந்த துயரத்தையும் வேதனையையும் கண்ணீரையும் எண்ணிப் பாருங்கள்! பெரும்பாலும் அப்பாவி மக்கள்தாமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்: வயதுசென்ற ஆண்களும் பெண்களும், பிள்ளைகளும், குழந்தைகளுமே. அநேக சமயங்களில் இந்தப் பொல்லாப்புகளைச் செய்தவர்களிடம் கணக்குக் கேட்கப்படவில்லை.
உலகமுழுவதும், துன்பம் இந்நேரம் வரையுமாக தொடர்ந்துவந்திருக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர் அல்லது குற்றச்செயலின் பலியாட்களாகின்றனர். அவர்கள் விபத்துகளில் காயப்படுத்தப்படுகின்றனர் அல்லது மரிக்கின்றனர். இதில் புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கங்களாகிய ‘இயற்கையின் செயல்களும்’ உட்படுகின்றன. அவர்கள் அநீதி, தப்பெண்ணம், ஏழ்மை, பசிபட்டினி, அல்லது நோய், அல்லது இன்னும் அநேக வழிகளில் துன்பப்படுகின்றனர்.
இந்தளவுக்கு மோசமாக, இந்தளவுக்கு அடிக்கடி, நூற்றாண்டுக்குப் பின் நூற்றாண்டாக துன்பப்பட்டுவந்திருக்கும் ஒன்றை—மனிதவர்க்கத்தை—ஒரு நல்ல கடவுள் எப்படி படைத்திருக்க முடியும்?
மனித உடலில் ஒரு சிக்கல்
இந்தச் சிக்கல் மனித உடலிலும் பிரதிபலிக்கப்படுகிறது. மனித உடல் அதிசயமாக ஆச்சரியத்துக்குரிய விதத்தில் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை இதை ஆராய்ந்திருக்கும் அறிவியல் வல்லுநரும் மற்றவர்களும் ஒப்புக்கொள்ளுகின்றனர்.
இதன் அதிசய அம்சங்களில் சிலவற்றைக் கவனியுங்கள்: எந்த ஒரு நிழற்படக் கருவியும் ஈடுசெய்யமுடியாத ஒப்பில்லா மனித கண்; அதிசய மூளை, மிகவும் முன்னேறிய கம்ப்யூட்டர்களுங்கூட இதற்கு முன்னால் அற்பமானவையாகக் காணப்படுகின்றன; நம்முடைய வெளிப்படையான முயற்சியேதுமின்றி உடலின் புதிராயிருக்கும் உறுப்புகள் இயங்கும் விதம்; பிறப்பின் அற்புதம், அன்புக்குரிய ஒரு குழந்தையைப் பிறப்பிப்பது—அதன் பெற்றோரின் ஒரு நகல்—அதுவும் ஒன்பதே மாதத்தில். இந்தச் சிறந்த வடிவமைப்பு, மனித உடல், ஒரு தலைசிறந்த வடிவமைப்பாளரால்—சிருஷ்டிகரால், சர்வவல்லவரால் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்குப் பலர் வந்திருக்கின்றனர்.
என்றபோதிலும், வருத்தத்துக்குரிய காரியம் என்னவெனில், அதே அற்புதமான உடல் சீரழிகிறது. காலப்போக்கில் அது நோய், முதுமை, மற்றும் மரணத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கடைசியில் அது மண்ணாகிவிடுகிறது. என்னே பரிதாபம்! பல பத்தாண்டு அனுபவங்களிலிருந்து நன்மை பெற்று ஞானவானாகும் தருவாயில் அந்த உடல் மாய்ந்துவிடுகிறது. உடலுக்கு ஆரம்பத்தில் இருந்த ஆரோக்கியம், பெலன், மற்றும் அழகின் வாய்ப்பு வளத்திற்கும் முடிவில் அதற்கு ஏற்படும் நிலைக்கும் இடையே என்னே ஒரு முரண்!
அன்புள்ள சிருஷ்டிகர் மனித உடல் போன்ற மேம்பட்ட ஒன்றைப் படைத்து அவ்வளவு பரிதாபமான ஒரு முடிவைக் கொண்டிருக்கும்படியாக ஏன் செய்ய வேண்டும்? அவ்வளவு நன்றாக இயங்க ஆரம்பிக்கும் மற்றும் அவ்வளவு திறனை உள்ளடக்கியதாயிருக்கும், ஆனால் அவ்வளவு மோசமான முடிவைக் காணும் ஓர் இயந்திரத்தை அவர் ஏன் உண்டாக்க வேண்டும்?
அதைச் சிலர் எவ்விதம் விளக்குகின்றனர்
நம்முடைய குணத்தை பெருஞ்சேதங்கள் மூலம் முன்னேற்றுவிப்பதற்குக் கடவுள் பயன்படுத்தும் கருவிகள்தான் துன்மார்க்கமும் துன்பமும் என்று சிலர் கூறியிருக்கின்றனர். ஒரு மெத்தடிஸ்ட் பாதிரி இப்படியாகச் சொன்னார்: “கெட்டவர்களுக்கு நல்லதைக் கொடுப்பது இரட்சிப்புக்கான கடவுளுடைய திட்டத்தின் ஒரு பாகம்.” நல்ல பண்பை வளர்த்து இரட்சிப்படைவதற்கு கடவுளுடைய திட்டத்தின் ஒரு பாகமாக நல்ல மக்கள் கெட்ட மக்களுடைய செயல்களால் துன்பப்படவேண்டும் என்பதையே அவர் அர்த்தப்படுத்தினார்.
ஆனால் அன்புள்ள ஒரு மனித தகப்பன் தன்னுடைய பிள்ளைகளின் பண்பை முன்னேற்றுவிப்பதற்காக அவர்கள் ஒரு கொடிய குற்றவாளியின் தாக்குதலுக்கு இறையாவதற்கு அனுமதிப்பாரா? அநேக இளம் ஆட்கள் விபத்துகளில் கொல்லப்படுகிறார்கள், அல்லது போர்களில் கொல்லப்படுகிறார்கள் அல்லது மரிக்கிறார்கள் என்பதையும் எண்ணிப்பாருங்கள். அந்த இளம் பலியாட்கள் தங்களுடைய பண்பை விருத்தி செய்வதற்குக் கூடுதல் வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மரித்துவிடுவார்கள். எனவே பண்பை முன்னேற்றுவிப்பதற்காகத் துன்பம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்து அர்த்தமற்றதாயிருக்கிறது.
நியாயமும் அன்புமுள்ள எந்தத் தகப்பனுமே தான் நேசிப்பவர்களுக்குத் துன்பமோ அல்லது பெரும் சேதமோ வருவதை விரும்பமாட்டான். உண்மை என்னவெனில், ‘நற்பண்பை வளர்ப்பதற்காக’ தன்னுடைய அன்பானவர்கள் துன்பத்தை அனுபவிப்பதற்காகத் திட்டமிடும் எந்த ஒரு தந்தையும் தகுதியற்றவனாக, மனோநிலைக் கெட்டவனாகக் கருதப்படுவான்.
அப்படியென்றால், அன்பான உன்னதப் பிதாவும், சர்வலோகத்தையும் படைத்த சகல ஞானமுமுள்ள சிருஷ்டிகருமாகிய கடவுள் ‘இரட்சிப்புக்கான அவருடைய திட்டத்தின்’ பாகமாக துன்பமனுபவிப்பதை வேண்டுமென்றே ஏற்படுத்தினார் என்று சொல்வது நியாயமாக இருக்க முடியுமா? அது அவரைக் கொடிய, பேய்த்தன பண்புடையவராக்கும்; அந்தப் பண்பை கீழ்த்தர மனிதரில் காண்பதுகூட நம்மெல்லாருக்கும் ஏற்கத்தகாதது.
விடைகளைக் கண்டுபிடித்தல்
துன்பத்தையும் துன்மார்க்கத்தையும் கடவுள் அனுமதித்திருப்பது சம்பந்தமான கேள்விகளுக்கு பதில்கள் பெற்றிட நாம் எங்கே திரும்ப வேண்டும்? கேள்விகள் கடவுளை உட்படுத்துவதால், அவர் என்ன பதில்களை அளிக்கிறார் என்பதைக் காண்பது அறிவுள்ள காரியம்.
அவருடைய பதில்களை நாம் எப்படி தெரிந்துகொள்கிறோம்? மனிதருக்கு வழிகாட்டியாகத் தாம் கொடுத்திருக்கும் அந்த ஊற்றுமூலத்தினிடம்—பரிசுத்த பைபிளிடம், பரிசுத்த வேதாகமத்தினிடம்—செல்வதன் மூலமே. அந்த ஊற்றுமூலத்தைக் குறித்து ஒருவர் என்ன நினைத்தாலுஞ்சரி, அதை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் . . . சீர்திருத்தலுக்கும் . . . பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) அவன் மேலும் எழுதினான்: “ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . . . அது மெய்யாகவே தேவ வசனந்தான்.”a—1 தெசலோனிக்கேயர் 2:13.
துன்பம் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டடைவது புத்திக்கூர்மைக்குப் பயிற்சியளிப்பதைவிட மேலானது. உலக காட்சியில் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் காரியங்கள், அண்மை எதிர்காலத்தில் சம்பவிக்கப் போகும் காரியங்கள், நாம் ஒவ்வொருவரும் எவ்விதம் பாதிக்கப்படுகிறோம் என்பவற்றைப் புரிந்துகொள்வதற்கு அந்த விடைகள் மிகவும் அவசியம்.
மானிட குடும்பத்துடன் கடவுள் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தும் பைபிள் தாமே பேசுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும். அப்படியென்றால், துன்பம் எவ்விதம் ஆரம்பித்தது, கடவுள் ஏன் அதை அனுமதித்திருக்கிறார் என்பது குறித்து அது என்ன சொல்லுகிறது?
பதிலை விளங்கிக்கொள்வதற்கு ஓர் அடிப்படை, நாம் மனதிலும் உணர்ச்சியிலும் எவ்விதம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. மனிதராக நம்முடைய வடிவமைப்பில் சிருஷ்டிகர் இந்த முக்கியமான தன்மையைப் பொருத்தினார் என்று பைபிள் காட்டுகிறது: சுயாதீனத்துக்கான ஆசை. மனிதருக்கு சுயாதீனத்தில் என்ன உட்பட்டிருக்கிறது, கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பதுடன் இது எவ்விதம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் சுருக்கமாகச் சிந்திப்போம். (g90 10/8)
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் தெய்வீக ஏவுதலால் எழுதப்பட்டது என்ற அத்தாட்சியின்பேரில் ஒரு கலந்தாராய்வுக்கு, உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தைப் பாருங்கள்.