துன்பத்தைச் சகிப்பதன்மூலம் நாம் பயன் அடையலாம்
“சகித்திருப்பவர்களை சந்தோஷமுள்ளவர்கள் என்கிறோமே!”—யாக்கோபு 5:11, NW.
1, 2. மனிதன் துன்பப்பட வேண்டுமென்பது யெகோவாவின் நோக்கமல்ல என்பதை எது காட்டுகிறது?
சா தாரணமாக யாருமே துன்பப்பட விரும்புவதில்லை; மனிதர்கள் துன்பப்படுவதை நம் படைப்பாளரான யெகோவா தேவனும் விரும்புவதில்லை. இதை, முதல் மனிதனையும் மனுஷியையும் அவர் படைத்த பிறகு என்ன நடந்தது என்பதை அவருடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட பைபிளை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கடவுள் முதலாவதாக மனிதனைப் படைத்தார். “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) உடலிலும் உள்ளத்திலும் ஆதாம் பரிபூரணமாக இருந்தான்; வியாதிப்பட்டு, இறக்க வேண்டிய நிலை அவனுக்கு இருக்கவில்லை.
2 ஆதாமின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருந்தது? “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் . . . பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.” (ஆதியாகமம் 2:8, 9) உண்மையில், ஆதாமுக்கு அழகான, அற்புதமான வீடு இருந்தது. ஏதேனில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லாதிருந்தது.
3. முதல் மனித ஜோடிக்கு என்னென்ன வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன?
3 ஆதியாகமம் 2:18 இவ்வாறு நமக்குச் சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.” ஆதாமுக்காக பரிபூரண மனைவியை யெகோவா படைத்தார்; இவ்வாறு சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழியைத் திறந்து வைத்தார். (ஆதியாகமம் 2:21-23) “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி[க்கொள்ளுங்கள்] . . . என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” என்றும் பைபிள் நமக்குச் சொல்கிறது. (ஆதியாகமம் 1:28) பூங்காவனமாய் இருந்த ஏதேன் தோட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி, கடைசியில் முழு பூமியையுமே பூஞ்சோலையாய் மாற்றும் பொன்னான வாய்ப்பு முதல் மனித ஜோடிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. துன்பத்தை அறியாமல் சந்தோஷத்தை மட்டுமே ருசிக்கிற தலைமுறையினரைப் பிறப்பிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அது எப்பேர்ப்பட்ட மெச்சத்தக்க ஆரம்பம்!—ஆதியாகமம் 1:31.
துன்பம் ஆரம்பமாகிறது
4. சரித்திரம் முழுவதிலும், மனித குலத்தைக் குறித்ததில் எது தெள்ளத் தெளிவாய் தெரிகிறது?
4 எனினும், சரித்திரம் முழுவதிலும் மனித குடும்பத்தின் நிலையைப் பார்த்தால், எங்கோ ஏதோ படுமோசமான தவறு நடந்திருப்பது தெள்ளத் தெளிவாய் தெரிகிறது. தீய செயல்கள் நடந்திருக்கின்றன, மனித குடும்பம் பெருமளவு துன்பப்பட்டிருக்கிறது. கடந்தோடிய நூற்றாண்டுகளில், ஆதாம் ஏவாளின் தலைமுறையினர் அனைவருமே வியாதிப்பட்டிருக்கிறார்கள், முதுமை அடைந்திருக்கிறார்கள், கடைசியில் இறந்துபோயிருக்கிறார்கள். ஜனங்கள் சந்தோஷமாய் குடியிருக்கும் பூங்காவனமாய் இந்தப் பூமி இல்லை, அதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நிலை ரோமர் 8:22-ல் பின்வருமாறு துல்லியமாய் விவரிக்கப்படுகிறது: “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.”
5. மனித குடும்பத்திற்குத் துன்பத்தை அறிமுகப்படுத்துவதில் நம்முடைய முதல் பெற்றோர் எப்படிக் காரணமானார்கள்?
5 காலங்காலமாய் இருந்து வருகிற அளவிலா துன்பத்திற்கு யெகோவாவைக் குறைகூறக் கூடாது; அதற்கு அவர் காரணரல்ல. (2 சாமுவேல் 22:31) அதற்கு மனிதரைத்தான் ஓரளவு குறைகூற வேண்டும். “அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்.” (சங்கீதம் 14:1) ஆரம்பத்தில் நம் முதல் பெற்றோருக்குக் கொடுக்கப்பட்ட எல்லாமே நல்லவையாய் இருந்தன. தொடர்ந்து எல்லாமே நல்லவையாய் இருப்பதற்கு அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், அவ்வளவுதான்; ஆனால், யெகோவாவைவிட்டு விலகி சுதந்திரமாய் செயல்படும் போக்கை ஆதாமும் ஏவாளும் தேர்ந்தெடுத்தார்கள். நம்முடைய முதல் பெற்றோர் யெகோவாவைப் புறக்கணித்தது முதற்கொண்டு பரிபூரணத்தை இழந்தார்கள். இறந்துபோகும்வரை கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அழியத் தொடங்கினார்கள். அவர்களிடமிருந்து அபூரணத்தை நாம் சொத்தாகப் பெற்றிருக்கிறோம்.—ஆதியாகமம் 3:17-19; ரோமர் 5:12.
6. துன்பம் ஆரம்பமாவதற்கு சாத்தான் எந்த விதத்தில் காரணமானான்?
6 துன்பங்கள் அனைத்தும் ஆரம்பமாவதற்கு, பிசாசாகிய சாத்தானாய் மாறிய ஆவி சிருஷ்டியும் காரணமாய் இருக்கிறான். சுதந்திரமாய் தெரிவுசெய்வதற்கான திறன் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும், கடவுளுக்குரிய வழிபாட்டை தனக்குரியதாக ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் அவன் அந்தத் திறனைத் தவறாகப் பயன்படுத்தினான். சொல்லப்போனால், யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவருடைய படைப்புகளை அல்ல. ‘நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பார்கள்’ என்ற ஆசையை ஆதாம் ஏவாளின் மனதில் சாத்தான் தூண்டிவிட்டான்; இவ்வாறு, யெகோவாவைவிட்டு விலகி அவர்களைச் சுதந்திரமாய் செயல்பட வைத்தவன் அவனே.—ஆதியாகமம் 3:5.
யெகோவாவுக்கு மட்டுமே ஆளும் உரிமை உள்ளது
7. யெகோவாவுக்கு எதிரான கலகத்தின் விளைவுகள் எதையெல்லாம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றன?
7 சர்வலோகப் பேரரசராகிய யெகோவாவுக்கு மட்டுமே ஆளுவதற்கான உரிமை இருக்கிறது என்பதையும் அவருடைய ஆட்சி மட்டுமே நீதியானது என்பதையும் இந்தக் கலகத்தின் விளைவுகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. ‘உலகத்தின் அதிபதியான’ சாத்தானின் ஆட்சி, துளிகூட திருப்தி அளிக்காததாயும் கொடுமை, அநீதி, வன்முறை நிறைந்ததாயும் இருப்பதைக் கடந்தோடிய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றன. (யோவான் 12:31) நீதியாய் ஆட்சி செய்ய மனிதர்களுக்குத் திறமையில்லை என்பதையும்கூட சாத்தானின் கட்டுப்பாட்டிலுள்ளதும் மனிதர்களை நீண்ட காலமாய் துயரக் கடலில் ஆழ்த்தியிருப்பதுமான மனித ஆட்சி மெய்ப்பித்துக் காட்டுகிறது. (எரேமியா 10:23) இவ்வாறு, யெகோவாவைவிட்டு விலகி சுயமாய் முயற்சி செய்து பார்க்கிற எந்தவொரு ஆட்சியும் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம். இதைச் சந்தேகத்திற்கு இடமின்றி சரித்திரம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
8. பல்வேறு ஆட்சிமுறைகளுக்கு யெகோவா என்ன செய்யப்போகிறார், அதை அவர் எவ்வாறு செய்யப்போகிறார்?
8 தம்முடைய தலையீடு இல்லாமல் பல்வேறு ஆட்சி முறைகளை மக்கள் முயற்சி செய்து பார்க்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளை யெகோவா அனுமதித்திருக்கிறார்; இப்போது, இந்த எல்லா விதமான ஆட்சி முறைகளையும் பூமியிலிருந்து நீக்கிவிட்டு அவற்றின் இடத்தில் தம்முடைய அரசாங்கத்தை ஏற்படுத்துவது நியாயமானது, அல்லவா? இதைக் குறித்து ஒரு தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “அந்த ராஜாக்களின் [மனித அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [கிறிஸ்து ஆளுகை செய்கிற தம்முடைய பரலோக அரசாங்கத்தை] எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) பேய்களின் ஆட்சியும் மனிதர்களின் ஆட்சியும் முடிவுக்கு வரும், கடவுளுடைய பரலோக ராஜ்யம் மட்டுமே நிலைத்திருந்து பூமியை ஆட்சி செய்யும். கிறிஸ்துவே அதன் அரசராய் இருப்பார், பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட 1,44,000 உண்மையுள்ளவர்கள் அவருடைய உடன் ஆட்சியாளர்களாய் இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 14:1.
துன்பத்திலிருந்து பயன் அடைதல்
9, 10. தாம் பட்ட பாடுகளிலிருந்து இயேசு எப்படிப் பயன் அடைந்தார்?
9 பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்யப் போகிறவர்களின் தகுதிகளை ஆராய்வது ஆர்வத்துக்குரியதாய் இருக்கிறது. முதலாவதாக, இயேசுவை எடுத்துக்கொள்வோம்; ராஜாவாக ஆட்சி செய்வதற்கு தாம் எந்தளவு தகுதி பெற்றிருக்கிறார் என்பதை அவர் வெளிக்காட்டினார். தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்கிறவராக, ‘கைதேர்ந்த வேலையாளாக,’ எல்லையில்லா வருடங்களை யெகோவா தேவனோடு செலவழித்திருந்தார். (நீதிமொழிகள் 8:22-31, NW) பூமிக்கு வரும்படியான ஏற்பாட்டை யெகோவா செய்தபோது இயேசு மனப்பூர்வமாய் கீழ்ப்படிந்தார். பூமியிலிருக்கையில், யெகோவாவின் அரசதிகாரத்தையும் ராஜ்யத்தையும்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதிலேயே தம் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். அந்த அரசதிகாரத்திற்கு முற்றும் முழுமையாய்க் கீழ்ப்பட்டிருப்பதன்மூலம் நம் அனைவருக்கும் அருமையான முன்மாதிரியை அவர் வைத்தார்.—மத்தேயு 4:17; 6:9.
10 இயேசு துன்புறுத்தலைச் சகித்தார், இறுதியில் கொல்லப்பட்டார். தம்முடைய ஊழிய காலத்திலோ, தம்மைச் சுற்றியிருந்த மனிதர்களின் பரிதாபமான நிலையைக் கவனித்தார். அவர் கண்ணாரக் கண்டதாலும், அவரே துன்பத்தை அனுபவித்ததாலும் ஏதேனும் பயன் அடைந்தாரா? அடைந்தார். எபிரெயர் 5:8 இவ்வாறு சொல்கிறது: ‘அவர் [தேவனுடைய] குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.’ பூமியிலிருக்கும்போது இயேசு பெற்ற அனுபவம், இன்னும் நன்கு புரிந்துகொள்கிறவராகவும் இரக்கமுள்ளவராகவும் அவரை ஆக்கின. மனித குடும்பத்தின் நிலையை அவர் நேரடியாகவே கண்டுணர்ந்தார். அதனால், துன்பப்படுகிறவர்களுக்காக அவர் அனுதாபப்பட முடியும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தம்முடைய பங்கை நன்கு புரிந்துகொள்ள முடியும். இதை, எபிரெயருக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு வலியுறுத்திய விதத்தைக் கவனியுங்கள்: “அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.” “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”—எபிரெயர் 2:17, 18; 4:15, 16; மத்தேயு 9:36; 11:28-30.
11. எதிர்காலத்தில் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவை செய்யப் போகிறவர்கள் பூமியிலிருக்கையில் பெறுகிற அனுபவம், அவர்களுக்கு ஆட்சி செய்கையில் எப்படி உதவும்?
11 பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்து இயேசுவோடு சேர்ந்து ஆளுவதற்காக பூமியிலிருந்து “மீட்டுக்கொள்ளப்பட்ட” 1,44,000 பேரைக் குறித்ததிலும் இதுவே உண்மையாயிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:4; 20:6) இவர்கள் எல்லாரும் பூமியிலே மனிதர்களாய் பிறந்தார்கள், துயர் நிறைந்த உலகில் வளர்ந்தார்கள், துன்பத்தையும் அனுபவித்தார்கள். யெகோவாவுக்கு உண்மை தவறாதவர்களாய் இருந்ததற்காகவும், இயேசுவைப் பின்பற்ற மனமுள்ளவர்களாய் இருந்ததற்காகவும் இவர்களில் அநேகர் துன்புறுத்தப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். ஆனால், ‘தங்களுடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக் குறித்து . . . வெட்கப்படாமல் . . . சுவிசேஷத்திற்காக தீங்கநுபவித்தார்கள்.’ (2 தீமோத்தேயு 1:8) பூமியில் அவர்கள் பெறுகிற அனுபவம், பரலோகத்திலிருந்து மனித குடும்பத்தை நியாயந்தீர்க்க முக்கியமாய் அவர்களைத் தகுதியுள்ளவர்களாய் ஆக்குகிறது. அதிக அனுதாபப்படுகிறவர்களாகவும் கனிவானவர்களாகவும் மனிதருக்கு உதவ மனமுள்ளவர்களாகவும் இருக்க அவர்கள் கற்றிருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 5:10; 14:2-5; 20:6.
பூமிக்குரிய நம்பிக்கை உள்ளவர்களின் சந்தோஷம்
12, 13. பூமியில் நித்தியத்திற்கும் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படித் துன்பத்திலிருந்து பயன் அடையலாம்?
12 வியாதி, துக்கம், மரணம் இல்லாத பூங்காவன பூமியில் நித்தியத்திற்கும் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள் இன்று அனுபவிக்கிற துன்பத்திலிருந்து பயன் அடைய முடியுமா? துன்பத்தால் வரும் வலியும் வேதனையும் உண்மையிலேயே விரும்பத்தகாதவைதான். ஆனால், அத்தகைய துன்பத்தைச் சகிக்கும்போது நம்முடைய பொன்னான குணங்கள் பட்டை தீட்டப்பட்டு, மெருகூட்டப்படுகின்றன, சந்தோஷத்தைத் தருகின்றன.
13 இதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்வதைக் கவனியுங்கள்: “நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.” “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்.” (1 பேதுரு 3:14; 4:14) “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (மத்தேயு 5:11, 12) “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு . . . ஜீவகிரீடத்தைப் பெறுவான்.”—யாக்கோபு 1:12.
14. எந்த அர்த்தத்தில் துன்பம் யெகோவாவின் வணக்கத்தாருக்கு சந்தோஷத்தை அளிக்கலாம்?
14 நாம் சகித்திருக்கிற துன்பமே நம்மை சந்தோஷமுள்ளவர்களாய் நிச்சயம் ஆக்கப்போவதில்லை. ஆனால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதாலும் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதாலுமே துன்பப்படுகிறோம் என்பதை அறியும்போது சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது. உதாரணத்திற்கு, இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்ததால் அப்போஸ்தலர்களில் சிலர் முதல் நூற்றாண்டில் சிறையிலிடப்பட்டார்கள்; பிறகு யூத உயர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள், பகிரங்கமாய் குற்றம் சாட்டப்பட்டார்கள். சாட்டையால் அடித்து, பிறகு விடுதலை செய்யப்பட்டார்கள். அப்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருந்தது? ‘அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்கள்’ என்பதாக பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 5:17-41) அடிக்கப்பட்டதையும் அதன் பிறகு அனுபவித்த உடல் வேதனையையும் குறித்து அவர்கள் சந்தோஷப்படவில்லை. யெகோவாவுக்கு முன் உத்தமர்களாய் இருந்ததற்காகவும் இயேசுவின் அடிச்சுவடிகளில் நடந்ததற்காகவும் இப்படித் துன்பம் அனுபவித்ததைப் புரிந்துகொண்டதால் சந்தோஷப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 16:25; 2 கொரிந்தியர் 12:10; 1 பேதுரு 4:13.
15. இப்போது துன்பத்தைச் சகிப்பது எதிர்காலத்தில் எப்படி உதவும்?
15 எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் நாம் சரியான மனோபாவத்துடன் சகிக்கும்போது அது நமக்குள் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. இது இனிவரும் துன்பங்களைச் சகிக்க நமக்கு உதவுகிறது. “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை [“சகிப்புத்தன்மையை” NW] உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” (யாக்கோபு 1:2, 3) அதேபோல், ரோமர் 5:3-5 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “உபத்திரவம் பொறுமையையும் [“சகிப்புத்தன்மையையும்,” NW], பொறுமை [“சகிப்புத்தன்மை,” NW] பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். . . . அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” எனவே, உண்மைக் கிறிஸ்தவர்களாய் இப்போது எந்தளவுக்கு நாம் சோதனைகளைச் சகிக்கிறோமோ அந்தளவுக்கு இந்த துன்மார்க்க உலகில் இனிவரும் சோதனைகளைச் சகிக்க நாம் இன்னும் நன்கு தயாராய் இருப்போம்.
யெகோவா பலன் அளிப்பார்
16. எதிர்கால ராஜாக்களும் ஆசாரியர்களும் இப்போது படுகிற துன்பத்திற்கு பலன் அளிப்பவராக யெகோவா என்ன செய்வார்?
16 உண்மை கிறிஸ்தவர்களாய் வாழ்வதன் காரணமாக எதிர்ப்பையோ துன்புறுத்தலையோ நாம் சந்திக்கலாம்; இதனால், பொருள் சம்பந்தமானவற்றை இழந்தாலும்கூட யெகோவா நமக்கு முழுமையாய் பலன் அளிப்பார் என அறிந்து திருப்தியாய் இருக்கலாம். உதாரணத்திற்கு, பரலோகத்திற்குச் செல்லும் நம்பிக்கையோடிருந்த சிலருக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர்களாக, “பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.” (எபிரெயர் 10:34) யெகோவாவோடும் கிறிஸ்துவோடும் சேர்ந்து அவர்களுடைய வழிநடத்துதலின் கீழ், பூமியில் குடியிருப்பவர்களுக்கு அருமையான ஆசீர்வாதங்களைப் புதிய உலகில் அவர்கள் அள்ளித் தரப்போகிறார்கள்; அப்போது அவர்கள் அடையும் ஆனந்தத்தை சற்று எண்ணிப்பாருங்கள். உண்மைத்தன்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு நிஜமாய் உள்ளன: “இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.”—ரோமர் 8:18.
17. பூமியில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையோடு இப்போது உத்தமமாய் தம்மைச் சேவிக்கிறவர்களுக்கு யெகோவா என்ன செய்வார்?
17 அதேபோல், பூமியில் நித்தியமாய் வாழும் நம்பிக்கை உடையவர்கள் இப்போது யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக எதை இழந்தாலும் அல்லது எதை மனப்பூர்வமாய் விட்டுக்கொடுத்தாலும் அவர் எதிர்காலத்தில் செய்யவிருக்கும் காரியங்களின்மூலம் அபரிமிதமாய் பலன் அளிப்பார். பரிபூரணத்தையும், பூங்காவன பூமியில் முடிவில்லா வாழ்க்கையையும் அவர் அளிப்பார். அந்தப் புதிய உலகில், யெகோவா “அவர்களுடைய கண்ணீர் யாவையும் . . . துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” (வெளிப்படுத்துதல் 21:4) நெஞ்சை நெகிழ வைக்கும் எப்பேர்ப்பட்ட வாக்குறுதி! யெகோவாவுக்காக இந்த உலகில் மனமுவந்து கொடுக்கிற அல்லது மனமில்லாமல் விட்டுக்கொடுக்கிற எதுவும் வரவிருக்கிற மகத்தான வாழ்க்கைக்கு ஈடாகாது. துன்பத்தைச் சகித்திருக்கும் தம் உண்மை ஊழியர்களுக்கு இத்தகைய வாழ்க்கையை அவர் அளிப்பார்.
18. ஆறுதல் அளிக்கும் என்ன வாக்குறுதியை தம்முடைய வார்த்தையில் யெகோவா அளிக்கிறார்?
18 இனியும் ஏதாவது துன்பத்தை நாம் சகிக்க வேண்டியிருந்தாலும் அது, கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனை அனுபவிப்பதை நிச்சயமாய் பாதிக்காது. புதிய உலகின் ஒப்பற்ற நிலைமைகள் இப்போது அனுபவிக்கிற எல்லாத் துன்பங்களையும் முற்றும் முழுமையாய் மூடி மறைத்துவிடும். ஏசாயா 65:17, 18 இவ்வாறு சொல்கிறது; “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” எனவே, இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு இவ்வாறு அறிவிப்பது பொருத்தமானதே: “இதோ, சகித்திருப்பவர்களை சந்தோஷமுள்ளவர்கள் என்கிறோமே!” (யாக்கோபு 5:11, NW) ஆம், இப்போது எதிர்ப்படும் துன்பங்களை நாம் உண்மைத்தன்மையோடு சகித்திருந்தால் இன்றும் எதிர்காலத்திலும் நாம் பயன் அடைவோம்.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• மனிதர்கள் எப்படித் துன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்கள்?
• எதிர்கால அரசர்களுக்கும் பூமியின் குடிகளுக்கும் துன்பம் என்னென்ன பலன்களை அளிக்கலாம்?
• நாம் ஏன் இப்போது சந்தோஷமாய் இருக்கலாம்?
[பக்கம் 27-ன் படம்]
நம் முதல் பெற்றோருக்கு முன் ஒளிமயமான எதிர்காலம் இருந்தது
[பக்கம் 29-ன் படம்]
துன்பத்தை இயேசு நேரில் கண்டது அருமையான ராஜாவாகவும் பிரதான ஆசாரியராகவும் அவரைத் தயார்படுத்துவதில் உதவியது
[பக்கம் 31-ன் படம்]
தங்கள் விசுவாசத்திற்காக ‘அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியால்’ அப்போஸ்தலர்கள் ‘சந்தோஷப்பட்டார்கள்’