அவதிப்படுவோருக்கு ஆறுதல்
கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற கேள்வி காலங்காலமாக தத்துவஞானிகளுக்கும் இறையியலாளர்களுக்கும் புரியாப் புதிராகவே இருந்திருக்கிறது. கடவுளுக்கு எல்லா வல்லமையும் இருப்பதால், துன்பத்திற்கும்கூட மூலகாரணர் அவரே என சிலர் அடித்துக் கூறியிருக்கின்றனர். கடவுள் இந்த உலகை இருகரங்களால் ஆளுகிறார் என தி கிளமென்டைன் ஹோமிலிஸ் என்ற இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நூலின் எழுத்தாளர் வாதாடினார். தமது “இடது கரத்தால்,” அதாவது பிசாசின் மூலம் துன்பத்தையும் துயரத்தையும் உண்டுபண்ணுகிறார் என்றும்; தமது “வலது கரத்தால்,” அதாவது இயேசுவின் மூலம் இரட்சித்து ஆசீர்வதிக்கிறார் என்றும் கூறினார்.
கடவுளால் துன்பம் வருவதில்லை, அதை அவர் வெறுமென அனுமதிக்கவே செய்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், வேறு சிலரோ, துன்பம் நிலவுவதையே ஒட்டுமொத்தமாக மறுதலிக்கிறார்கள். “தீமை என்பது வெறும் பிரமை, அதற்கு எந்த அடிப்படை ஆதாரமுமில்லை” என மாரி பேக்கர் எடி எழுதினார். “பாவம், நோய், மரணம் ஆகியவற்றை ஒன்றுமில்லாத காரியங்களாக கருதினால், அவை மாயமாக மறைந்தேவிடும்.”—வேதாகமத்தைப் புரிந்துகொள்ள உதவும் விஞ்ஞானம், ஆரோக்கியம், (ஆங்கிலம்).
சரித்திரத்தில், முக்கியமாக முதல் உலகப் போர் நடந்தது முதல் நம்முடைய நாள் வரை, பயங்கரமான துயர சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதைப் பார்த்து, கடவுளால் துன்பத்தை தடுத்து நிறுத்தவே முடியாது என்ற முடிவுக்கே பலர் வந்திருக்கின்றனர். “நாசி படுகொலைகள் கடவுள் சர்வசக்தி படைத்தவர் என்று நினைப்பதையே அபத்தமாக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன்” என டேவிட் உவுல்ஃப் சில்வர்மேன் என்ற யூத அறிஞர் எழுதினார். “கடவுள் சர்வ வல்லமை படைத்தவராக இல்லை என்றால்தான் அவருடைய நற்குணத்தையும் தீமை நிலவுவதற்கான காரணத்தையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்க முடியும்; இப்படி ஏதாவதொரு வகையில்தான் கடவுளை புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.
என்றபோதிலும், துன்பத்திற்கு கடவுள் ஏதோவொரு விதத்தில் துணைபோகிறார், அதை அவரால் தடுக்க முடியவில்லை என்ற கருத்துக்களும் துன்பம் என்பது வெறும் மாயையே என்ற வாதங்களும் துன்பப்படுவோருக்கு போதிய ஆறுதலை தருவதில்லை. மிக முக்கியமாக, நீதியும் வல்லமையும் அக்கறையும் நிறைந்த கடவுள் என பைபிளில் வர்ணிக்கப்பட்டவருடைய குணாதிசயத்திற்கு முற்றிலும் முரணாகவே இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. (யோபு 34:10, 12; எரேமியா 32:17; 1 யோவான் 4:8) அப்படியானால், துன்பம் அனுமதிக்கப்பட்டிருப்பதற்குரிய காரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
துன்பம் எப்படி தலைதூக்க ஆரம்பித்தது?
துன்பப்படுவதற்காக மானிடரை கடவுள் படைக்கவில்லை. மாறாக, முதல் தம்பதியினராகிய ஆதாம் ஏவாளுக்கு அவர் பரிபூரண மனதையும் உடலையும் தந்தார்; அவர்களுக்கு வீடாக ஓர் அழகிய பூங்காவனத்தை ஆயத்தம் செய்தார்; அர்த்தமுள்ள, திருப்தியளிக்கும் வேலையையும் கொடுத்தார். (ஆதியாகமம் 1:27, 28, 31; 2:8) ஆனால், ஆட்சி செய்ய கடவுளுக்கு இருக்கும் அதிகாரத்தையும், எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்க அவருக்கு இருக்கும் உரிமையையும் அங்கீகரிப்பதன் பேரிலேயே அவர்களுடைய நீடித்த மகிழ்ச்சி சார்ந்திருந்தது. ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்’ என்ற ஒரு மரத்தினால் அந்தக் கட்டளை பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. (ஆதியாகமம் 2:17) அந்த மரத்தின் கனியை புசிக்கக் கூடாது என்ற கட்டளைக்கு ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படிந்திருந்தால், கடவுளுக்கு தாங்கள் கட்டுப்பட்டிருப்பதை காட்டியிருக்கலாம்.a
ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியத் தவறிவிட்டது வருந்தத்தக்கது. கலகத்தனமான ஓர் ஆவி சிருஷ்டி, கடவுளுக்குக் கீழ்ப்படிவது எந்த நன்மையையும் தராது என சொல்லி ஏவாளை நம்ப வைத்தான். பிசாசாகிய சாத்தான் என பிற்பாடு அறியப்பட்ட அவன், மிக மிக விரும்பத்தக்க ஒன்றை, அதாவது எது நன்மை எது தீமை என்பதை அவளே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கடவுள் கொடுக்காதது போல் பேசினான். அந்த மரத்தின் கனியைப் பறித்துப் புசித்தால், ‘அவளுடைய கண்கள் திறக்கப்படும் என்றும், அவள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பாள் என்றும்’ சொன்னான். (ஆதியாகமம் 3:1-6; வெளிப்படுத்துதல் 12:9) சுதந்திரம் கிடைக்கும் என நம்பி, தடைசெய்யப்பட்ட கனியை ஏவாள் புசித்தாள், ஆதாமும் அதையே செய்தான்.
அந்த நாளிலேயே ஆதாமும் ஏவாளும் தங்களுடைய கலகத்தனத்தின் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். கடவுளுடைய அரசதிகாரத்தை நிராகரித்ததன் விளைவாக அவருக்குக் கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் இழந்துவிட்டார்கள். கடவுள் அவர்களை பரதீஸிலிருந்து வெளியே விரட்டி ஆதாமிடம் இவ்வாறு கூறினார்: “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்.” (ஆதியாகமம் 3:17, 19) ஆதாமும் ஏவாளும் வியாதியையும் வேதனையையும் வயோதிகத்தையும் சாவையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. துன்பம் மனித வாழ்க்கையில் தலைதூக்க ஆரம்பித்தது.—ஆதியாகமம் 5:29.
விவாதத்தை தீர்த்தல்
‘ஆதாம் ஏவாளுடைய பாவத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டிருக்க முடியாதா?’ என சிலர் கேட்கலாம். முடியாது, ஏனென்றால் அது அவருடைய அதிகாரத்திற்கான மரியாதையை இன்னும் கெடுத்திருக்கும். வருங்காலத்தில் இன்னும் அநேகர் கலகம் செய்யவும் துன்பம் மிகுதியாகவும் வழிவகுத்திருக்கும். (பிரசங்கி 8:11) அதோடு, இப்படிப்பட்ட கீழ்ப்படியாமையை கண்டும் காணாமல் விட்டுவிட்டால் தப்பு செய்வதற்கு கடவுள் உடந்தையாக இருப்பது போலாகிவிடும். பைபிள் எழுத்தாளராகிய மோசே நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறார்: “அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:4) அகவே, இந்தப் பண்புகளுக்கு இசைவாக அவர் செயல்படுவதற்கு, கீழ்ப்படியாமையின் விளைவுகளை ஆதாமும் ஏவாளும் அறுவடை செய்யும்படி விட்டுவிட வேண்டியிருந்தது.
முதல் மானிட ஜோடியையும் இந்தக் கலகத்தனத்தைத் தூண்டிய காணக்கூடாத ஆவி சிருஷ்டியாகிய சாத்தானையும் கடவுள் ஏன் உடனடியாக அழிக்கவில்லை? அழிப்பதற்கு அவரிடம் வல்லமை இருந்தது. அப்படிச் செய்திருந்தால் துன்பத்தையும் மரணத்தையும் பரம்பரை சொத்தாக பெறப்போகும் சந்ததியாரை ஆதாமும் ஏவாளும் பிறப்பிக்காமல் இருந்திருக்கலாம். என்றபோதிலும், இத்தகைய வல்லமையை வெளிக்காட்டுவதன் மூலம் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளின் மீது அதிகாரம் செலுத்த தமக்கு உரிமை இருப்பதை கடவுளால் நிரூபிக்க முடியாது. மேலும், ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பிறப்பிக்காமல் மரித்திருந்தால், அவர்களுடைய பரிபூரண சந்ததியாரால் இந்தப் பூமியை நிரப்ப வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் தோல்வியடைந்ததாக அர்த்தப்படுத்தியிருக்கும். (ஆதியாகமம் 1:28) “கடவுள் மனிதன் அல்லர்; . . . அவர் சொல்லியதைச் செய்யாமலிருப்பாரா? அல்லது உரைத்ததை நிறைவேற்றாமலிருப்பாரா?”—எண்ணாகமம் [எண்ணிக்கை] 23:19, பொது மொழிபெயர்ப்பு.
யெகோவா தேவன் தம்முடைய பரிபூரண ஞானத்தால், கலகத்தை ஒரு குறிப்பிட்ட சமயம் வரை அனுமதிக்க தீர்மானித்தார். இதனால், கடவுளிடமிருந்து விலகி தன்னிச்சையாக செயல்படுவதால் வரும் விளைவுகளையெல்லாம் அனுபவிக்க கலகக்காரர்களுக்கு போதுமான வாய்ப்பு இருக்கும். கடவுளுடைய வழிநடத்துதல் அவசியம் என்பதையும் மனிதனது அல்லது சாத்தானது ஆட்சியைக் காட்டிலும் அவரது ஆட்சி மிக மேலானது என்பதையும் சரித்திரம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டும். அதே சமயத்தில், இந்தப் பூமிக்காக தாம் கொண்டிருந்த ஆதி நோக்கம் நிறைவேறுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் கடவுள் நடவடிக்கைகள் எடுத்தார். ஒரு “வித்து” வரும் என்றும், அது ‘சாத்தானுடைய தலையை நசுக்கி’ அவனுடைய கலகத்தனத்திற்கும் அதன் தீய விளைவுகளுக்கும் ஒட்டுமொத்தமாக முடிவுகட்டும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.—ஆதியாகமம் 3:15.
இயேசு கிறிஸ்துவே வாக்கு பண்ணப்பட்ட அந்த வித்து. “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” என 1 யோவான் 3:8-ல் நாம் வாசிக்கிறோம். ஆதாமின் பிள்ளைகளை சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்கு தம்முடைய பரிபூரண மனித உயிரை கிரய பலியாகச் செலுத்துவதன் மூலம் இதை அவர் செய்தார். (யோவான் 1:29; 1 தீமோத்தேயு 2:5, 6) இயேசுவின் பலியில் உண்மையிலேயே விசுவாசம் வைப்பவர்களுக்கு துன்பத்திலிருந்து நிரந்தர விடுதலை வாக்குறுதியாக கொடுக்கப்படுகிறது. (யோவான் 3:16; வெளிப்படுத்துதல் 7:17) இது எப்பொழுது சம்பவிக்கும்?
துன்பத்திற்கு முடிவு
கடவுளுடைய அதிகாரத்தை ஒதுக்கித் தள்ளியது சொல்லிமாளா துன்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், மனிதர் படும் அவஸ்தைக்கு முடிவுகட்டி, பூமிக்கான தமது ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு கடவுள் தம்முடைய அதிகாரத்தை விசேஷித்த முறையில் வெளிக்காட்ட வேண்டும். ‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, . . . உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என தமது சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தபோது கடவுள் இதற்காக செய்திருக்கும் விசேஷ ஏற்பாட்டை இயேசு குறிப்பிட்டார்.—மத்தேயு 6:9, 10.
சுயாட்சியை பரிசோதனை செய்து பார்க்க மனிதருக்கு கடவுள் அனுமதித்த காலம் முடிவடையப் போகிறது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட அவருடைய ராஜ்யம் பரலோகத்தில் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது.b வெகு சீக்கிரத்தில் அது அனைத்து மனித அரசாங்கங்களையும் நொறுக்கி நிர்மூலமாக்கிவிடும்.—தானியேல் 2:44.
பூமியில் தம்முடைய குறுகியகால ஊழியத்தின்போது, தேவாட்சியால் மனிதகுலத்திற்குக் கிடைக்கவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றிய முற்காட்சியை இயேசு அளித்தார். வறுமையில் வாடிய, அநியாயமாக நடத்தப்பட்ட மனிதர்களிடம் இயேசு காண்பித்த இரக்கத்திற்கு சுவிசேஷங்கள் அத்தாட்சி அளிக்கின்றன. நோய்நொடியால் அவதியுற்றவர்களை அவர் குணப்படுத்தினார், பசிபட்டினியால் வாடியோருக்கு உணவளித்தார், மரண நித்திரையில் ஆழ்ந்தவர்களை உயிர்த்தெழுப்பினார். ஏன், இயற்கை சக்திகளும் அவருடைய சத்தத்திற்கு கட்டுப்பட்டதே! (மத்தேயு 11:5; மாற்கு 4:37-39; லூக்கா 9:11-16) கீழ்ப்படியும் மனிதகுலத்தினர் அனைவரும் பயனடைய இயேசு தமது கிரய பலியின் சுத்திகரிக்கும் வல்லமையை பயன்படுத்தி எதையெல்லாம் சாதிக்கப்போகிறார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! “அவர்களுடைய [மனிதருடைய] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்ற வாக்குறுதியை கிறிஸ்துவுடைய ஆட்சியின் மூலமாக பைபிள் தருகிறது.—வெளிப்படுத்துதல் 21:4.
அவதிப்படுவோருக்கு ஆறுதல்
அன்பும் சர்வ வல்லமையும் பொருந்திய நமது கடவுளாகிய யெகோவா நம்மீது அக்கறை கொள்கிறார், வெகு விரைவில் மனிதகுலத்திற்கு விடுதலையையும் அளிக்கப்போகிறார் என்பதை அறிவது எவ்வளவு உற்சாகமூட்டுகிறது! பொதுவாக, மிகவும் வியாதிப்பட்டு கிடக்கும் ஒரு நோயாளி தனக்கு சுகமளிக்கும் சிகிச்சையை—அது மிகவும் வேதனை தரும் ஒன்றாக இருந்தாலும்கூட—மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார். அதைப் போலவே, எல்லா காரியங்களிலும் கடவுள் கையாளும் முறை நித்திய ஆசீர்வாதங்களையே தரும் என்பதை அறிந்திருந்தால், தற்காலிகமாக படும் எந்த கஷ்டங்களையும் நாம் பெரிதுபடுத்த மாட்டோம்; மாறாக அவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்வோம்.
பைபிளின் வாக்குறுதிகளிலிருந்து ஆறுதலைப் பெறுவதற்கான வழியைக் கண்டடைந்தவர்களில் முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ரிக்கார்டூவும் ஒருவர். “என் மனைவி இறந்த பிறகு, எல்லாரையும்விட்டு ஒதுங்கியிருக்கனும்னு தீர்மானிச்சிருந்தேன். ஆனா அப்படியிருக்கிறதனால அவ எனக்கு திரும்ப கிடைச்சுட மாட்டா, உணர்ச்சி ரீதியில் அது என்னை இன்னும் மோசமாக்கத்தான் செய்யும்னு சீக்கிரத்தில் உணர்ந்துகிட்டேன்” என்கிறார். ஆகவே கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வது, பைபிள் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வது போன்ற அன்றாட காரியங்களில் ரிக்கார்டூ தொடர்ந்து ஈடுபட்டார். “யெகோவாவோட அன்பான ஆதரவை உணர்ந்தபோதும், சின்னச் சின்ன விஷயங்களிலும் என்னோட ஜெபங்களுக்கு அவர் பதிலளிச்சதைக் கவனிச்சபோதும் நான் அவர் கிட்ட நெருங்கிவந்தேன்” என ரிக்கார்டூ கூறுகிறார். “கடவுளுக்கு என்மேல அன்பு இருக்குங்கற உணர்வு எப்பவும் இருந்ததால்தான் படுபயங்கரமான சோதனையையும் என்னால் சகிச்சுக்க முடிஞ்சுது. மனைவி இல்லாத குறை இப்பவும் உண்டு, ஆனா யெகோவா அனுமதிக்கிற எதுவுமே நிரந்தரமா கெடுதல் ஏற்படுத்தாதுன்னு இப்போ நான் உறுதியா நம்பறேன்” என அவர் ஒத்துக்கொள்கிறார்.
ரிக்கார்டூவையும் லட்சக்கணக்கான மற்றவர்களையும் போல, மனிதகுலத்தின் தற்போதைய துன்பங்கள் ‘இனி நினைக்கப்படாத, மனதிலே தோன்றாத’ காலத்திற்காக நீங்கள் ஏங்குகிறீர்களா? (ஏசாயா 65:17) “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” என்ற பைபிளின் அறிவுரையை பின்பற்றினால், கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரும் ஆசீர்வாதங்களை நீங்களும் அனுபவிக்க முடியும் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்.—ஏசாயா 55:6.
இதற்காக, கடவுளுடைய வார்த்தையை வாசித்து கவனமாக ஆராய்வதை உங்களுடைய வாழ்க்கையில் பிரதானமாக வையுங்கள். கடவுளையும் அவரால் அனுப்பப்பட்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள். கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக வாழ முயலுங்கள், இதன் மூலம் அவருடைய அரசுரிமைக்குக் கீழ்ப்படிய மனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள். இவ்வாறெல்லாம் செய்தீர்களென்றால், நீங்கள் எதிர்ப்படும் சோதனைகளுக்கு மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பீர்கள். அத்துடன் எதிர்காலத்தில், துன்பமில்லா ஓர் உலகில் வாழ்க்கையை அனுபவித்துக் களிப்பீர்கள்.—யோவான் 17:3.
[அடிக்குறிப்புகள்]
a ஆதியாகமம் 2:17-ன் அடிக்குறிப்பில், “நன்மை தீமையைப் பற்றிய அறிவு” என்பது “எது நன்மை எது தீமை என்று . . . தீர்மானித்து அதற்கேற்ப செயல்படும் சக்தி, ஒழுக்கநெறி விஷயத்தில் முழு சுதந்திரத்தைக் கேட்பதன் மூலம் தான் ஒரு சிருஷ்டி என்ற நிலையை மனிதன் ஒத்துக்கொள்ள மறுப்பது” என த ஜெரூசலம் பைபிள் குறிப்பிடுகிறது. “முதல் பாவம், கடவுளுடைய பேரரசுரிமையை எதிர்ப்பதாக இருந்தது” என்றும் அது குறிப்பிடுகிறது.
b 1914 சம்பந்தமான பைபிள் தீர்க்கதரிசனத்தின் விரிவான விளக்கத்திற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 10, 11-ஐக் காண்க.
[பக்கம் 6, 7-ன் பெட்டி]
நாம் எவ்வாறு துன்பத்தை சமாளிக்கலாம்?
‘உங்கள் கவலைகளையெல்லாம் [கடவுள்] மேல் வைத்துவிடுங்கள்.’ (1 பேதுரு 5:7) துன்பத்தை சகித்திருக்கும்போதோ நமக்கு அன்பானவர் ஒருவர் அவதியுறும்போதோ குழப்பமும் கோபமும் கைவிடப்பட்ட உணர்வும் உண்டாவது இயல்பானதே. இருந்தாலும், யெகோவா நம்முடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார் என்பதில் நம்பிக்கையோடிருங்கள். (யாத்திராகமம் 3:7; ஏசாயா 63:9) முற்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்கள் செய்தது போல், இதயம் திறந்து நம்முடைய சந்தேகங்களையும் கவலைகளையும் அவரிடம் கொட்டலாம். (யாத்திராகமம் 5:22; யோபு 10:1-3; எரேமியா 14:19; ஆபகூக் 1:13) அவர் நம்முடைய சோதனைகளை அற்புதகரமாக அகற்றாவிட்டாலும், நம்முடைய இதயப்பூர்வமான ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சோதனைகளை சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் தருவார்.—யாக்கோபு 1:5, 6.
“துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள்.” (1 பேதுரு 4:12, பொது மொழிபெயர்ப்பு) துன்புறுத்தப்படுவதைப் பற்றி பேதுரு இங்கே பேசிக் கொண்டிருக்கிறார், ஆனால் ஒரு விசுவாசி சகிக்க வேண்டிய எவ்வித துன்பத்திற்கும் அவருடைய வார்த்தைகள் பொருந்தும். வறுமை, வியாதி, அன்பானவரை இழத்தல் ஆகியவற்றை மனிதர் அனுபவிக்கின்றனர். “சமயமும் எதிர்பாரா சம்பவங்களும் அனைவருக்கும் நேரிடுகின்றன” என பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:11, NW) இப்பொழுது மனித வாழ்க்கையில் இத்தகைய காரியங்கள் சகஜமானவை. இதை உணர்ந்துகொள்வது துன்பமும் துயரமும் உண்டாகும்போது சமாளிப்பதற்கு நமக்கு உதவும். (1 பேதுரு 5:9) முக்கியமாக, “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது” என்ற உறுதியை நினைவுகூருவது ஆறுதலின் ஊற்றாக விளங்கலாம்.—சங்கீதம் 34:15; நீதிமொழிகள் 15:3; 1 பேதுரு 3:12.
“நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்.” (ரோமர் 12:12) பறிபோன சந்தோஷத்தைப் பற்றியே எப்பொழுதும் எண்ணிக்கொண்டிராமல், எல்லா துயரங்களுக்கும் முடிவுகட்டுவதாக கடவுள் கொடுத்துள்ள வாக்குறுதியைப் பற்றி நாம் தியானிக்கலாம். (பிரசங்கி 7:10) தலைக்கவசம் தலையை பாதுகாப்பது போல ஆணித்தரமான இந்த நம்பிக்கை நம்மை பாதுகாக்கும். வாழ்க்கையில் படும் காயங்களுக்கு நம்பிக்கை ஓர் அருமருந்தாக இருந்து, மனோ ரீதியிலான, உணர்ச்சி ரீதியிலான, அல்லது ஆவிக்குரிய ரீதியிலான ஆரோக்கியத்தை அக்காயங்கள் அடியோடு அழிக்காதபடி பார்த்துக்கொள்கிறது.—1 தெசலோனிக்கேயர் 5:8.
[பக்கம் 5-ன் படம்]
ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய அரசதிகாரத்தை நிராகரித்தனர்
[பக்கம் 7-ன் படம்]
துன்பமில்லா ஓர் உலகே கடவுள் தரும் வாக்குறுதி