உடற்பயிற்சி உங்களுக்கு செய்வது
ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலுள்ள 17,000 பழைய மாணவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியானது, விரைவில் மரணமடையும் பிறவி இயல்பை உடற்பயிற்சி எதிர்க்க இயலுமென்று எடுத்துக்காட்டியது, இது நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த புதிய இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையில் (ஆங்கிலம்) விவரமாக கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆராய்ச்சியின் இயக்குநரான டாக்டர் ரால்ப் S. பாப்பன்பர்கர், ஜுனியர், “நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதால் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்” என்று சொல்லி முடித்தார்.
ஜுன் 1989-ல் அமெரிக்க மருத்துவக் குழு பத்திரிகை (ஆங்கிலம்) கூறியதாவது: “இருதயத்திற்கு இரத்தம் எடுத்துச்செல்லும் நாடி சம்பந்தப்பட்ட இருதய நோய் (CHD), மட்டுமீறிய இரத்த அழுத்தம், . . . மேலும் மனநல சம்பந்தப்பட்ட பிரச்னைகள் போன்ற பல்வேறு மருத்துவ நிலைகளைத் தடுப்பதோடும் கட்டுப்படுத்துவதோடும் சரீரப்பிரகாரமான வேலை சம்பந்தப்பட்டிருக்கிறது.” அது மேலும் கூறியது: “சரீரப்பிரகாரமான வேலைசெய்கிற ஒருவனைவிட சரீரப்பிரகாரமான வேலை செய்யாத ஒருவனில் CHD வளருவதற்கு 1.9 தடவைகள் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தவிதமான தொடர்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.”
நவம்பர் 1989-ல், இதே மருத்துவ பத்திரிகை 13,344 ஆட்களை உட்படுத்திய ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டது, உடற்பயிற்சியின் மதிப்பை இது மேலுமாக விளக்கிக்காட்டியது. சிறிது உடற்பயிற்சி செய்வதுங்கூட—அதாவது நாளுக்கு ஒரு முறை விறுவிறுப்பாக அரை மணிநேரம் நடப்பது போன்ற உடற்பயிற்சி—பல்வேறு காரணங்களால் வரக்கூடிய மரணத்தினின்று குறிப்பிடத்தக்க விதத்தில் பாதுகாப்பு அளிப்பதில் விளைவடைகிறது என்று இந்த விரிவான ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
மட்டுமீறிய இரத்த அழுத்தத்தைப் பற்றியதில் வல்லுநரான, டாலஸிலுள்ள தென்மேற்கு மருத்துவ பள்ளியின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நார்மன் M. கப்லன், அதிகமான இரத்த அழுத்த சிகிச்சையில் உடற்பயிற்சியின் பலனைக் குறித்து அவர் தன் எண்ணத்தை மாற்றியிருப்பதாக கூறுகிறார். “கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் வந்து சேர்ந்த ஆதாரங்களை நான் பார்த்தபோது, ஜனங்களிடம் உடற்பயிற்சியைக் குறித்து நான் அதிகம் உற்சாகப்படுத்துபவனாக ஆகியுள்ளேன்.”
அதிக இரத்த அழுத்தமுள்ள நோயாளிகளுக்கு டாக்டர் கப்லன் பிராணவாயுவைத் தேவைப்படுத்துகிற உடற்பயிற்சியைச் செய்யும்படி இப்போது சொல்கிறார். “நான் நோயாளிகளிடம் தங்களுடைய நாடி துடிப்பு விகிதத்தை அதிகப்படுத்தும்படி சொல்கிறேன்,” என்று அவர் விளக்குகிறார். “நான் ஜனங்களிடம் நிதானமாக ஆரம்பிக்க சொல்கிறேன். இதை உடனடியாக செய்ய வேண்டாம். முதலில் நடக்க ஆரம்பித்து பிறகு மெதுவாக ஓடுவது என்று படிப்படியாக அதிகரியுங்கள். பிரச்னைகள் ஏதாவது எதிர்ப்பட்டால் குறைத்துவிடுங்கள்.” ஓர் உண்மையான ஆரோக்கிய பலனாக இருக்க, உடற்பயிற்சி ஒழுங்காக செய்யப்பட வேண்டும், வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையோ செய்வது நல்லது, ஒவ்வொரு முறையும் 20-லிருந்து 30 நிமிடங்களோ அல்லது அதற்கு அதிகமான நேரத்திற்கோ செய்ய வேண்டும். (g90 10/22)