காலணி நாகரிகங்களை உண்மையிலேயே பார்வையிடுதல்
சமீபத்தில் ஒரு காலணி கடையின் காட்சி ஜன்னலை நீங்கள் பார்வையிட்டீர்களா? நீங்கள் பார்ப்பதை விரும்புகிறீர்களோ இல்லையோ, ஒன்று மட்டும் நிச்சயம்: காலணி நாகரிகங்கள் பலவிதம், விசேஷமாக, பெண்களுக்கானவைகள் எண்ணற்றவை.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 காலணி வண்ணமாதிரிகள் ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே உண்டாக்கப்படுகின்றன, அதிகம் இல்லையென்றாலும் அதே எண்ணிக்கை ஐரோப்பிய வடிவமைப்பாளர்களால் உண்டாக்கப்படுகின்றன. ஆனால் சந்தையை எட்டுவதற்கு முன்னதாகவே, அவற்றில் பாதி வேண்டாததாக ஒதுக்கிவிடப்படுகின்றன. எஞ்சியிருக்கும் பாதியில் சுமார் 25,000 மட்டுமே பயனுள்ளவையாகின்றன. இருப்பினும், அதுவும் மனதிற்கு மலைப்பூட்டும் எண்ணிக்கைதான். எனவே, காலணிகள் வாங்கச் செல்வது சிலருக்கு சந்தோஷத்தைத்தருவதாகவும் மற்றவர்களுக்கு களைப்படையச் செய்வதாகவும் இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை.
சில அடிப்படை மாதிரிகளில் மாறுபாடுகள்
காலணி நாகரிகங்களின் முடிவில்லா அணிவகுப்பைக் குறித்து நீங்கள் எப்படியாக உணர்ந்தாலும், அநேக ஆயிரக்கணக்கான காலணி வடிவமைப்புகளும், உண்மையில், ஒரு சில அடிப்படை காலணி வகைகளின் மீதான பல்வேறு வகையான மாற்றங்களே என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
இங்கே கொடுக்கப்பட்டுள்ள விளக்கப்படங்கள் காலணிகளின் ஏழு அடிப்படை மாதிரிகள் என்ன என்பதைப் பற்றிய ஒரு நல்ல கருத்தை உங்களுக்கு கொடுக்கும். அவைகள்: ஆக்ஸ்ஃபோர்டு, பூட், பம்ப், கிளாக், மியூல், சாண்டல், மொக்காசின். ஒவ்வொரு ஆண்டும் நம்மை ஆயிரக்கணக்கான புதிய வடிவமைப்புகள் சூழ்ந்துகொண்டாலும்—மற்றும் பாணி உணர்வுள்ள ஆட்கள் நவீன பாணிகளை கொள்வதன் மூலம் பெருமிதம்கொண்டாலும்—உண்மையென்னவெனில் கடந்த 350 ஆண்டுகளில் ஆக்ஸ்ஃபோர்டுக்குப் பிறகு எந்த ஒரு புதிய அடிப்படை காலணி மாதிரியும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அடிப்படை மாதிரிகளில் பழமையானவைகளான சாண்டல், மொக்காசின் போன்றவை உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியவை.
இன்று, பெண்களின் காலணிகள் ஆண்களின் காலணிகளைக்காட்டிலும் விதங்களிலும், எண்ணிக்கையிலும், மிக அதிகமானவைகளாக இருக்கின்றன. இருப்பினும், இந்த எல்லா ஏழு அடிப்படை மாதிரிகளும் ஆண்களுக்காகத்தான் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டன. ஆண்களே அவற்றை வடிவமைத்தனர். தோற்றமும், வேலைப்பாடும், மூலப்பொருளும் காலங்களினூடே கணிசமான அளவு மாற்றம் அடைந்திருப்பது உண்மைதான், ஆனால், இந்த சில அடிப்படை மாதிரிகளிலிருந்துதான் நாகரிகங்களில் ஆயிரக்கணக்கான மாற்றங்கள், ஒவ்வொரு சுவை மற்றும் வாழ்க்கைப்பாணிக்கும் ஏற்ற வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஏழு அடிப்படை மாதிரிகள் எவ்வாறு தோன்றின?
அடிப்படை மாதிரிகளை அறிந்துகொள்ளுதல்
ஏழு மாதிரிகளிலும் ஆக்ஸ்ஃபோர்டே அதிக சமீபத்தில் வந்தது. இந்தப் பெயர் பொருத்தமாகவே இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு என்ற இடத்திலிருந்து தோன்றியது. அங்கேதான் முதன்முதலில் இந்த நாடாக்கள் உள்ள காலணி 1600-களின் மத்திபத்தில் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரபலமாகியது. பூட், ஆக்ஸ்ஃபோர்டுக்கு முந்தியது. அது இரண்டு பாக காலணியாக, கீழே காலணியையும், மேலே காலுறையையும் கொண்டதாக ஆரம்பித்தது. அது பார்ப்பதற்கு ஓரளவு ஒரு வாளியைப் போல் இருந்ததால், பிரான்ஸ் நாட்டினர் அதை “தண்ணீர் வாளி” எனப் பொருள்படும் பட் என்றழைத்தனர் என்பது ஒரு வாதம். அந்த வார்த்தை மெதுவாக மருவி வழங்கி, பெளட்டே என்று மாறியது, ஆங்கிலேயர் அந்தப் பாணியை 11-வது நூற்றாண்டில் நார்மண்டி இனத்தாரிடமிருந்து பெற்றுக்கொண்டபோது அதை பூட் என்றழைத்தனர்.
பம்ப் என்பது இன்று, நாகரிகமான, சாதாரணமான முன்பகுதியும், தாழ்வாக வெட்டப்பட்டதும், மெலிந்த அடி அட்டை உடையதும், தாழ்ந்த குதியையுடையதாயிருக்கிறது. அது எலிசபெத் காலத்தில் வழக்கத்திற்கு வந்த ஒன்றாக தெரிகிறது. சிலர், இந்தப் பம்ப், வண்டி ஓட்டுநர்களால் ஆரம்பத்தில் அணியப்பட்டன என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் வண்டியில் உள்ள பெடல்களை தங்களுடைய கால்களால் இயக்க வேண்டியதாய் இருந்தது. அது படிப்படியாக பெண்களுக்கான காலணியாக முன்னேற்றம் அடைந்தது, மற்றும் பிரபலமான பாணியாக மாறியது, அது முறைப்படியான, ஆடம்பரமான சமுதாய நிகழ்ச்சிகளில் அணியப்பட்டது. இதன் காரணமாக சில ஆய்வாளர்கள், இந்தப் பெயர், ஃபிரஞ்சு வார்த்தையாகிய போம்ப்பே என்பதிலிருந்து வந்தது என்று சொல்லுகின்றனர். அதின் அர்த்தம், “பகட்டு, ஆடம்பரம், பவித்திரம், மகத்துவம், டம்பம்” என்பதாகும்.
இன்னும் பூர்வ காலத்திற்குரிய, கிளாக், “ஒரு மரக்கட்டை” என்று அர்த்தமுள்ள ஆங்கில வார்த்தையிலிருந்து தன் பெயரைப் பெறுகிறது. இதேனென்றால், ஆரம்பத்தில் கிளாக் காலணிகள் மரத்திலிருந்து உண்டாக்கப்பட்டன. அவைகள் விலை மலிவாக தயாரிக்கப்பட்டதால் உழவர்களாலும், தொழிலாளர்களாலும் அணியப்பட்டன. இன்று அநேகர், மேலே தோலலும், அடியில் மரக்கட்டை அல்லது வேறு பொருட்களாலும் செய்யப்பட்ட கிளாக்குகளை அணிவதில் மகிழ்கின்றனர். பின்புறம் திறந்திருக்கும் கிளாக்குகளைப் போன்று மியூல் இருக்கிறது, ஆனால் அது அதிக நேர்த்தியாகவும் வழக்கமாக வீட்டிற்குள் அணியப்படுமொன்றாகவும் இருக்கிறது. இதின் வடிவமைப்பு சுமேரியர்களின் மியூலுவின் அடிப்படையிலானது என்று சொல்லப்படுகிறது. அது சுருக்கில்லாத தளர்ந்த செருப்பின் வகையாக அல்லது சமமான அடி அட்டை செருப்பின் ஒரு வகையாக இருந்தது. நவீன வடிவமைப்பில், குதிகள் பொருத்தப்பட்டு, ஒரு நாகரிகமான காலணியாக மாறியிருக்கிறது.
இந்த ஏழு மாதிரிகளிலும் மிகப்பழமையானவை சாண்டல் மற்றும் மொக்காசின் ஆகும். இவை இரண்டில், சாண்டல் மிகப் பரவலாக உபயோகத்தில் இருந்துவந்தது, பைபிள் காலங்களில் இதுதான் பொதுவாக உபயோகிக்கப்பட்ட காலணியாக இருந்தது, இது வெறுமென ஒரு மரத்துண்டு அல்லது தோல், வார்களைக்கொண்டு பாதங்களில் கட்டப்பட்டதாக இருந்தது. மறுபட்சத்தில் மொக்காசின் வட அமெரிக்க இந்தியர்களால் நன்கு பிரபலமாக்கப்பட்டது, அவர்களே இந்தப் பெயரை அதற்கு கொடுத்தனர், வெறுமென “பாதத்தை மறைப்பது” என்பதே அதன் அர்த்தமாகும்.
அடுத்து முறை நீங்கள் ஒரு ஜோடு காலணிகளைப் பார்ப்பீர்களானால், அது இந்த ஏழு வகைகளில் எந்த வகையைச் சேர்ந்தது என்று உங்களால் அடையாளங் கண்டுகொள்ளக்கூடுமா? முதல் பார்வையில் அது ஒருவேளை அவ்வளவு எளிதாக இருக்காது. இதேனென்றால், இந்த அடிப்படை மாதிரிகள், ஆண்டுகளினூடே மாறிக்கொண்டே போகும் சுவைகளுக்கும் பாணிகளுக்கும் ஏற்ப தாராளமாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு நெருங்கிய ஆய்வு அதை சரியாக அடையாளங்கண்டுகொள்ள உங்களுக்கு உதவும். உதாரணமாக, மெதுவாக ஓடுவதற்கு உபயோகிக்கப்படும் காலணிகள் இந்த ஏழு அடிப்படை மாதிரிகளில் ஏதாவது ஒன்றைப்போல இல்லாதிப்பதாக பார்ப்பதற்கு இருக்கலாம். ஆனால், அவைகள் வித்தியாசமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டுகளே ஆகும். பெண்களின் பின்புறம்-திறந்த காலணி, உண்மையில், வார்கள் சேர்க்கப்பட்ட மியூல் வகையே ஆகும். லோஃபர், உண்மையில் பலமான அடி அட்டைகொண்ட மொக்காசின் வகையே ஆகும்.
காலணிபாணிகள் எவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டன
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, காலணிபாணிகளை செல்வந்தரும், பிரபுக்களும் தவிர வேறு எவருமே உபயோகிக்க மாட்டார்கள். சாதாரண ஜனங்களுக்கு, காலணிகள், வெறுமென, காலணிகளாகவே இருந்தது—பாதங்களை மறைப்பதும் பாதுகாப்பதும்—அதன் பயன்பாடுதானே முக்கியமாய் இருந்தது; அவை எவ்வாறு தோற்றமளித்தன என்பதற்கு எந்த ஒரு கவனமும் செலுத்தப்படவில்லை. நாம் இன்றைக்கு அறிந்திருக்கும் நவீன பாணி காலணிகளின் முழுக் கருத்தும் வியாபாரமும் சமீப கால ஆரம்பத்தையுடையவை.
நூற்றாண்டுகளாக, காலணிகள் கைகளால் செய்யப்பட்டவையாக இருந்ததன் காரணமாக, காலணிகளின் வியாபாரம் தழைக்க அது ஒரு தடையாக இருந்தது. அவைகள் செய்ய நேரம் எடுத்தது மற்றும் அவைகள் விலையுயர்ந்ததாகவும் இருந்தன. பெரும்பாலான மக்கள் ஒரு புது ஜோடு காலணிகள் வாங்க தீவிர ஆவலுள்ள சமயங்களிலெல்லாம் அதை வாங்க திறணற்றவர்களாக இருந்தனர். 1800-களின் மத்திப ஆண்டுகளில் ஐக்கிய மாகாணங்களில் காலணி செய்யும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவையெல்லாம் மாறிவிட்டது. வெகுவிரைவில், கைத்தொழில், இயந்திரத் தொழில்மயமானது. காலணிகள் எங்கும் கிடைப்பதோடு குறைந்த விலையில் எளிதில் வாங்கவும் முடிந்தது. இருப்பினும், வேறு இரண்டு நிகழ்ச்சிகள் காலணி நாகரிகங்களுக்குபெருத்த ஆதரவாக இருந்தன: 1919-வது ஆண்டின் வொல்ஸ்டெட் சட்டம் (தடை சட்டம் என்றும் அறியப்பட்டது) மற்றும் 1920-ன் பெண்கள் வாக்குரிமையை உறுதிச்செய்த அரசியல் சாசனதிருத்தத்திற்கான உடன்பாடாகும்.
இந்தச் சம்பவங்கள் அமெரிக்க சமுதாயத்தில் பேரளவான மாற்றங்களைத் துரிதப்படுத்தியது. தடை சட்டம் புதுவிதமான பொழுதுபோக்குகளை, நடனம் மற்றும் இசையைக் கொண்டுவந்தது. தங்களுடைய புதிதாய்ப் பெற்ற சுயாதீனத்தின் மூலம், சுய-விடுதலை நடவடிக்கைகள் என்று உரிமைப்பாராட்டப்பட்டவைகளில் பெண்கள் ஈடுபாடு கொண்டனர். மேலும், புதியதும் வித்தியாசமுமானதும் எதுவாயினும், அதையே நாடிச் சென்றனர். அழகு சாதனப்பொருட்கள், நீளம் குறைந்த பாவாடைகள், மற்றும் புதிய சிகை அலங்காரம் ஆகியவற்றோடு காலணி நாகரிகங்களின் மீதும் மோகம் ஏற்பட்டது. அகங்காரமான “படபடக்கும் காலம்” அதனுடைய பெயரைத் தங்கள் காலணிகளின் வார்களை கட்டாமல் வேண்டுமென்றே விட்டுவிடக்கூடிய இளம் பெண்களிடமிருந்து பெற்றுக்கொண்டது. அவர்கள் நடக்கும்போது, அவர்களுடைய காலணிகள் சத்தமாக “சிறகடிப்பதுபோல் படபடக்கும்,” இவ்வாறாக, அவை பெண்கள் மற்றும் அவர்களின் நோக்கத்திற்கு கவனத்தை ஈர்க்கும்.
இவை எல்லாமே, எடுப்பான மற்றும் மலிவான காலணிகளுக்கு பேரளவிலான தேவையை ஏற்படுத்தியது. இதுவும் மற்றும் காலணி தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்களும், பொருட்களும் ஒன்றுசேர்ந்து இன்றைக்கு உள்ள நிலைக்கு காலணி நாகரிகங்களை முன்னேற்றுவித்திருக்கிறது. சரித்திரத்திலேயே முதன்முறையாக இப்போதுநவநாகரிகமான காலணிகள் செல்வந்தருக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே தனிப்பட இல்லாமல், பெரும்பாலும் எல்லாருமே வாங்கி உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறது.
வியப்பூட்டும் வகையில், கடந்த நூற்றாண்டுகளில் காலணிகளில் உள்ள பாணிகள், வடிவமைப்புகள் பற்றியதில் அமளி நிலவினாலும், அடிப்படையான ஏழு மாதிரிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படவில்லை. இருப்பினும், இன்றைக்குக் கிடைக்கக்கூடிய காலணிகளில் எண்ணற்ற வகைமாதிரிகளும், ஆயிரக்கணக்கான வடிவமைப்புகளும் தோற்றங்களும் வியாபாரத்தில் இருக்கிறவர்களின் சாதுரியத்திற்கு அத்தாட்சியைக் கொடுக்கின்றன. மேலும் சுவைகளும் நாகரிகங்களும் அவ்வளவு நிலையற்றவையாக இருப்பதால், இத்தகைய காரியங்களை பின்பற்றித்தொடரும் ஆட்களின் விருப்பங்களுக்கு உடன்படுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதையும் இந்த அநேக வகைமாதிரிகள் எடுத்துக்காட்டுகின்றன. (g90 12/8)
[பக்கம் 24-ன் பெட்டி]
காலணிகள் பற்றிய பழங்கதைகள்
▫ தலைவலியைப் போக்க, பூர்வ எகிப்தியர்கள், ஒரு சாண்டலை எரித்து அதின் புகையை சுவாசிப்பார்கள்.
▫ வயிற்று வலியைக் குணமாக்க, பூர்வத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்கள் சிலர், படுத்துக்கொண்டு தங்கள் வயிற்றின் மீது பாரமான ஒரு ஜோடு பூட்களை வைப்பார்கள்.
▫ ஒரு காலத்தில், ஓர் அரேபியன் தன்னுடைய மனைவியின் காலணிகளை வெறுமென வெளியே தூக்கி எறிவதன் மூலம் அவளை விவாகரத்து செய்யக்கூடும், பழுதடைந்த செருப்புகளை வேண்டாமென தள்ளிவிடுவதுபோல அவன் செய்வான்.
▫ நன்கு அறியப்பட்ட காலணி கதை, உண்மையில் சிண்டெரெல்லாவின் கதையே ஆகும். இந்தக் கதையின் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உலகெங்கிலும் மக்களால் சொல்லப்படுகின்றன. இவைகளில் அச்சு வடிவில் காணப்படும் மிகப் பழமையானது சீனா நாட்டினுடையது. அது ஒன்பதாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டது. பிரபலமான மேற்கத்திய வடிவம் தோன்றுவதற்கு 800 ஆண்டுகள் முற்பட்டது.
[பக்கம் 24-ன் படங்கள்]
சாண்டல்
பம்ப்
பூட்
ஆக்ஸ்ஃபோர்டு
கிளாக்
மியூல்
மொக்காசின்