வலிக்கும் பாதங்களுக்கு—நிவாரணம்
“என் காலில் வலி உயிர் போகிறது!” தெளிவாகவே, இப்படி சொல்வது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றுதான். இருந்தபோதிலும், பாதங்களில் வலி என்ற பிரச்சினை ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஆயிரக்கணக்கான பாதவியல் மருத்துவர்களுக்கு (foot specialists) வாழ்க்கைத் தொழிலை அளிக்குமளவுக்கு முத்தியிருக்கிறது.
டாக்டர் மைக்கேல் காஃப்லின், 14 ஆண்டுகளுக்கும் மேலாக, தான் செய்திருக்கும் 2,000-க்கும் மேற்பட்ட பாத அறுவை சிகிச்சைகளை மறுபார்வை செய்தபிறகு, திடுக்கிடவைக்கும் ஒன்றைக் கண்டுபிடித்தார். அவர் சொல்கிறார்: “பெரும்பாலும் இந்த அறுவை சிகிச்சைகள் எல்லாம் பெண்களுக்கே செய்யப்பட்டதை நான் கண்டேன். இதை என்னால் நம்பமுடியவில்லை.” பாதத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு குறிப்பாக பெண்கள் ஏன் எளிதில் ஆளாகிறார்கள்?
அளவு, பாணி, பாதம்
ஏறக்குறைய பத்தில் ஒன்பதுபேர், பொதுவாக, தங்கள் பாதங்களைக் காட்டிலும் அகலம் குறுகிய ஷூக்களை அணிந்துள்ளனர் என்று 356 பெண்களை வைத்து செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டுகிறது! பெண்களின் ஷூக்கள் தயாரிக்கப்படும் விதத்தில்தான் ஓரளவு பிரச்சினை இருக்கிறது. “குறுகலான ஹீல்ஸும் அகலமான முற்பகுதியும் கொண்ட ஷூ அச்சுக்களை ஷூ தயாரிப்பாளர்கள் இப்போதெல்லாம் பயன்படுத்துவதில்லை” என்று எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் பிரான்ஸிஸ்கா தாம்சன் விளக்குகிறார். a
எனவே, ஷூக்களை போட்டு பார்க்கும்போது, முன்பகுதி சரியாக பொருந்தினால், ஹீல்ஸ் லூஸாக இருக்கிறது; ஆனால் ஹீல்ஸ் சரியாக பொருந்தும்போது, முன்பகுதி இறுக்கமாக இருக்கிறது என்று அதிகமான பெண்கள் காண்கின்றனர். மற்றவர்கள் ஹீல்ஸ் சரியாகவும் முன்பகுதி இறுக்கமாகவும் உள்ள ஷூக்களையே தெரிந்தெடுக்கின்றனர். ஏனென்றால் இதற்கு எதிர்மாறாக இருப்பது, ஒவ்வொரு அடிக்கும் காலை ஹீல்ஸிலிருந்து நழுவ செய்யும்.
இறுக்கமான ஷூ-விற்குள் பாதங்களை நுழைப்பது மிகவும் அசெளகரியமானதாக இருக்கும். போதாக்குறைக்கு ஷூக்களை வடிவமைப்பவர்கள் ஹீல்ஸை இன்னும் சில சென்டிமீட்டருக்கு உயர்த்துகிறார்கள். இது நாகரிக பாணியாக கருதப்பட்டாலும், உயரமான ஹீல்ஸ், உள்ளங்காலின் மேல்பகுதியில் (ball) முழு பாரத்தையும் வைக்கிறது. இதனால் ஒருவேளை ஏற்கெனவே குறுகலாக இருக்கும் ஷூவுக்குள்ளே பாதத்தை வலுக்கட்டாயமாக நுழைக்க வேண்டியிருக்கிறது. “உயரமான ஹீல்ஸைக்கொண்ட, தொந்தரவளிக்காத ஷூ என்ற ஒன்று இல்லவேயில்லை” என்று பாதவியல் மருத்துவராகிய டேவிட் காரட் வலியுறுத்துகிறார். உயரமான ஹீல்ஸ், அணிபவரின் பாதம், கணுக்கால், கெண்டைக்கால், முழங்கால், முதுகு போன்றவற்றை படிப்படியாக சேதப்படுத்திவிடும் என்று சிலர் சொல்லுகின்றனர். இவை கால் தசைகளையும், தசைநாண்களையும் குட்டையாக்கக்கூடும்; இது, குறிப்பாக ஓடுபவர்களை பயங்கரமான காயங்களுக்கு எளிதில் ஆளாகும் நிலையில் வைக்கிறது.
பெண்ணின் பாதம், ஷூவால் உண்டாகும் துன்பத்திற்கு ஏற்ப வளைந்து கொடுப்பதில்லை. உண்மையில், ஆண்டுகள் செல்லச்செல்ல—ஒருநபர் முழுவளர்ச்சியை அடைந்தபிறகும்கூட—பாதத்தின் முன்பாகம் மாத்திரம் விரிவடைகிறது. ஆனால் குதிகாலில் அவ்விதம் ஏற்படுவதில்லை. “குதிகால் ஒரேவொரு எலும்பைத்தான் கொண்டுள்ளது; 14 வயதில் அது எப்படி குறுகியிருந்ததோ, அப்படியேதான் 84 வயதிலும் இருக்கிறது” என்று டாக்டர் தாம்ஸன் சொல்லுகிறார். இது, ஒரு பெண் தன்னுடைய குதிகாலில் இருந்து கால்விரல்வரை செளகரியமாக பொருந்தக்கூடிய ஷூவை கண்டுபிடிப்பதை இன்னும் அதிக கடினமாக்குகிறது.
ஷூ வாங்குவோருக்கு சில ஆலோசனைகள்
பெண்களுடைய ஷூக்களின் அளவும், பாணியும் அவர்களுக்கு அசெளகரியமாக இருந்தால், பாதத்தின் வலியை அவர்கள் எப்படி தவிர்க்கலாம்? இதற்கான நிவாரணம் ஷூ கடையிலிருந்து தொடங்குகிறது. சில நிபுணர்கள் பின்வருபவற்றை சிபாரிசு செய்கின்றனர்:
● ஷூக்களை வாங்குவதற்கு மாலை பொழுதில் செல்லுங்கள்; அப்போது உங்கள் பாதங்கள் சற்று வீக்கமாக இருக்கும்.
● ஒரு காலில் மட்டுமல்ல, இரண்டு கால்களிலுமே ஷூக்களைப் போட்டு பாருங்கள்.
● ஷூவின் ஹீல்ஸ் நேர்த்தியாக பொருந்துகிறதா என்றும் ஷூவுக்குள் உங்கள் கால்விரல்களை வைக்கும் இடத்தின் நீளம், அகலம், உயரம் ஆகியவை போதுமானதாக உள்ளதா என்று பாருங்கள்.
● அந்த ஷூ கடையில் கனமான குஷன் விரிப்பு இருக்கிறதா என்பதைப் பாருங்கள்; இவை நன்றாக பொருந்தாத ஷூக்களைக்கூட அச்சமயத்திற்கு செளகரியமாக இருப்பதைப்போல உணரச்செய்யும்.
● கடினமான, வழுவழுப்பான மேற்பரப்பைக் கொண்ட தோல் ஷூக்களையோ, ஸின்தடிக் பொருட்களாலான ஷூக்களையோ தவிர்த்துவிடுங்கள். இத்தகைய பொருட்கள், மிருதுவான தோலை அல்லது பதனிடப்படாத மிருதுவான தோலைப் போன்றில்லாமல், நடந்து செல்லும்போது ஏற்படும் அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்காது.
● நீங்கள் உயரமான ஹீல்ஸ் உள்ள ஷூவை வாங்கியிருக்கிறீர்களென்றால், மெத்தென்று இருக்க தோலால் ஆன இன்ஸோல்களை தேர்ந்தெடுங்கள். நாள் முழுவதும் உயரமான ஹீல்ஸ் உள்ள ஷூவை பயன்படுத்துவதற்கு பதிலாக, சில மணிநேரங்கள் மட்டுமே பயன்படுத்துங்கள். அவ்வப்போது குட்டையான ஹீல்ஸ் உள்ள ஷூவை அணிந்து கொள்ளுங்கள்.
இவற்றுடன்கூட, ஷூக்கள், நீங்கள் அவற்றை வாங்கும் சமயத்திலும் செளகரியமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புதிதாக இருக்கையில் இப்படித்தான் இருக்கும், பயன்படுத்த தொடங்கிவிட்டால் சரியாகிவிடும் என்ற எண்ணம் பரவலாக இருந்தாலும், அது உண்மையில் அவ்விதம் இல்லை. “புது ஷூக்கள் கடிக்கத்தான் செய்யும், நாளாக நாளாக சரியாகிவிடும் என்று சொல்லி, விற்பனையாள் உங்களை நம்ப வைக்க முயலும்போது, அதற்கு ஒருபோதும் இணங்கிவிடாதீர்கள். உங்கள் பாதம்தான் புண்ணாகிவிடும்” என்று டாக்டர் காஃப்லின் எச்சரிக்கிறார்.
ஆனால் முன்பகுதி இறுக்கமாக உள்ள சௌகரியமான ஹீல்ஸ் அல்லது சௌகரியமான முன்பகுதியுள்ள லூசான ஹீல்ஸ் என்ற இரண்டில், ஒன்றை நீங்கள் தெரிவு செய்ய வேண்டியிருந்தால் அப்பொழுது என்ன? சரிசெய்து கொள்வதற்கு எது உங்களுக்கு எளிதாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுங்கள் என்று டாக்டர் ஆனு கொயல் சொல்கிறார். “இதை செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முன்பகுதி தேவையான அளவு விரிவாக இருக்கும் ஷூவை வாங்கி, அதற்குள் தடித்த தோலைத் திணித்து ஹீல்ஸுக்கு நேர்த்தியாக பொருத்திவிடுங்கள். . . . இரண்டாவது உத்தியானது பொருத்தமான ஹீல்ஸைக் கொண்ட ஷூவை வாங்கி அதன் முன்பகுதியை விரிவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் பொதுவாக, தோலாலான ஷூக்களில் மட்டுமே இவ்விதம் செய்யமுடிகிறது” என்று அவர் சொல்கிறார்.
பெண்களில் அதிகமானோர் குத்துமதிப்பாக ஒரு நாளுக்கு 15 கிலோமீட்டர் நடப்பதால், தங்களுடைய காலணிகள் எப்படிப்பட்டவை என்று அவர்கள் நன்கு பரிசோதிக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கன் ஹெல்த் என்ற பத்திரிகை சொல்லுகிற பிரகாரம், “உங்கள் பாதத்தை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதன்மூலம்—விசேஷமாக, சரியான அளவுள்ள ஷூக்களை அணிவதன்மூலம்—பாதங்களில் பிரச்சினை ஏற்படுவதை என்றுமாக உங்களால் தடுக்க முடியும்.”
[பக்கம் 26-ன் பெட்டி]
பாதத்தில் ஏற்படும் நான்கு பொதுவான தொந்தரவுகள்
முண்டுகள். முண்டு என்பது பெருவிரலின் அடியில் ஏற்படும் வீக்கமாகும். பெருவிரல் முண்டு, வழிவழியாக வந்ததாக இல்லாதபோது, இறுக்கமான ஷூக்களாலோ அல்லது உயரமான ஹீல்ஸ் உள்ள ஷூக்களாலோ ஏற்படலாம். அதன்மீது சூட்டு ஒத்தடம் அல்லது ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பது வலியிலிருந்து தற்காலிகமான நிவாரணத்தை அளிக்கலாம்; ஆனால் பெருவிரல் முண்டுவை நிரந்தரமாக நீக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.
வளைந்த கால்விரல். கால்விரல்கள் கீழ்நோக்கி வளைவது ஒருவேளை பாதங்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் ஷூக்களால் ஏற்படுகிறது. இந்த உருக்குலைவை சரிசெய்வதற்கு அறுவை சிகிச்சைத் தேவைப்படலாம்.
தோல் காய்ப்பு. இது உராய்வினாலும் அழுத்தத்தாலும் கால்விரல்களில் ஏற்படும் கூம்பு வடிவிலான தடிப்பு; சில சமயங்களில் மிகவும் குறுகலான ஷூக்களை அணிவதால் இது ஏற்படுகிறது. கைவைத்தியம் தற்காலிகமான நிவாரணத்தை தரலாம், ஆனால் உராய்வை ஏற்படுத்தும் உருச்சிதைந்த கால்விரல்களைச் சரிசெய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வது வழக்கமாக அவசியப்படுகிறது.
தோலின் மேல்தடிப்பு. பாதங்கள் மீண்டும் மீண்டுமாக உராய்வதை தடித்த மரத்துப்போன தோல் அடுக்குகள் தடுக்கின்றன. வெதுவெதுப்பான நீரிலும், எப்ஸம் உப்பிலும் தோல்தடிப்பை நனைப்பது அவற்றை மென்மையாக ஆக்கும். ஆனால் அவற்றை வெட்டிவிட முயற்சிக்காதீர்கள், ஏனென்றால் இது நோய் தொற்றிக்கொள்வதற்கு வழிவகுக்கும்.
[அடிக்குறிப்பு]
a “ஷூ அச்சு” என்பது ஷூக்கள் வடிவமைக்கப்படுவதற்காக பயன்படுத்தப்படும் பாதங்களின் உருவ அமைப்பைக் கொண்ட அச்சு.
[படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/ ஜே. ஜி. ஹெக்