இகுவாக்கு நீர்வீழ்ச்சிகள்—ஒரு பச்சை விதானத்தின் மேல் அணிகலன்கள்
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
“தென் அமெரிக்காவின் மிகவும் குறிப்பிடத்தக்க இயற்கை அதிசயங்களில் ஒன்று” என்று ஆர்ஜென்டீனா, பிரேசில் மற்றும் பராகுவேயின் எல்லைகள் சந்திக்குமிடத்திற்கு அருகேயமைந்துள்ள இப்பிரபலமான நீர்வீழ்ச்சிகளை ஒரு கலைக்களஞ்சியம் வர்ணிக்கத் துவங்குகிறது. அவற்றை விசேஷமாகக் கவர்ச்சியுள்ளதாக்குவது அவற்றின் இயற்கைச் சூழல்—கன்னிமைக் கெடாத ஒரு வெப்பமண்டலக் காடு. உண்மையிலேயே பசுமைப் பின்னணியில் அமைக்கப்பட்ட அணிகலன்கள். தென் அமெரிக்காவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இங்கு கண்டிப்பாய் விஜயம் செய்ய வேண்டும் என்பதில் ஆச்சரியமேதுமில்லை!
குவாரானி மொழியில் “இகுவாக்கு” என்பது “மகா தண்ணீர்” எனப் பொருள்படுகிறது. அது மகத்துவமானது, ஏனெனில் இடிமுழக்கமிடும் நீர்வீழ்ச்சிகள் 30 கிலோமீட்டர் தொலைவில் கேட்கப்பட முடியும். வருடத்தின் பருவகாலத்தைப் பொறுத்து, ஒரு மிகப் பரந்த, செங்குத்துப் பாறை மீது பாயும் ஏறக்குறைய 300 வெவ்வேறு நீர்வீழ்ச்சிகளை ஒருவர் எண்ணக்கூடும். இவற்றில் சில ஒரே சமயத்தில் விழுகின்றன, மற்றவை கீழே பாதி வழியில் ஒரு பாறை விளிம்பிற்கு இறங்கி அதன் பின் மலைச்சந்தின் கீழ்ப்பகுதிக்கு இன்னொரு பாய்ச்சலை எடுக்கின்றன. மழைக்காலத்தில் வினாடிக்கு ஏறக்குறைய 10,000 கன மீட்டர் தண்ணீர் விழுகின்றது என மதிப்பிடப்படுகிறது. அதன் விளைவாக, கீழிருக்கும் பெரும் கொப்பரை மூடுபனி மற்றும் நீர்த்திவலையாலான ஒரு பரப்பை உண்டுபண்ணுகிறது; அது ஒரு சூரியனின் ஒளிபரவிய நாளில் வண்ணமயமான வானவில்களின் தொடரை நாள் முழுவதும் தருகின்றது.
இவ்வியத்தகு காட்சித்தொகுப்பின் பிரதான பாகம் பிரசித்திபெற்ற கர்கன்டா டோ டையபோ (பிசாசின் தொண்டை, அல்லது மிடறு) ஆகும். ஒரு சுற்றுலா சிற்றேட்டில் “அது அனைத்துக் காட்சியிலும் மிகவும் கம்பீரமான பரந்த காட்சி, சுமார் 300 அடி உயரமான செங்குத்துப் பாறை மீது பாய்ந்து விழும் பதினான்கு நீர்வீழ்ச்சிகளின் ஒரு வட்டம்” என விவரிக்கப்படுகிறது.
ஒருவேளை, அந்த நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிட மிகச்சிறந்த வழி ஹெலிகாப்டரிலிருந்திருக்கலாம். இத்தகு ஒரு சவாரிக்குப் பின் ஒரு சுற்றுப்பயணி கூறினார்: ‘எங்கள் விமானி, கீழிருக்கும் அழகிய காட்சிக்கு எங்கள் போற்றுதலை உணருபவராய்த் தோன்றினார். மேலும் அவர் அடிக்கடி செய்வது போன்று வெகு தொலைவு செல்வதற்கு மாறாக, அவர், அப்பள்ளத்தாக்கின் முழு நீளப்பகுதியின் மீது, முன்னும் பின்னும் பல முறை கடந்துசென்றார். யெகோவா தேவனின் சிருஷ்டிப்பு வேலைகளான இவ்வியத்தகு காட்சித்தொகுப்பை மனதில் பதியச் செய்ய எங்களுடைய காமராக்களும் வீடியோக்களும் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டன.’
மற்ற பார்வையாளர்கள், அவர்களுக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகளில் வெறுமென உல்லாசமாக உலாவுவதில் மனநிறைவடைகின்றனர். பிரேஸில் திசையிலிருந்து பார்க்கும்போது நீர்வீழ்ச்சிகளின் ஒரு முழு பரந்த காட்சி கிடைக்கிறது; ஆனால் ஆர்ஜென்டீனா திசையிலிருந்து பார்க்கையில் ஒவ்வொரு தனிப்பட்ட நீர்வீழ்ச்சியின் பக்கஓரமாக நடந்து செல்ல முடியும், சில இடங்களில் கான்கிரீட்டாலான நடைபாதைகளில் ஒரு தீவிலிருந்து மற்றொன்றிற்கு கடந்து செல்லவும் முடிகிறது. அநேக பார்வையாளர்கள் இரண்டு காரியங்களையும் செய்கிறார்கள், தங்கள் கண்களுக்கும் விருந்தளித்து, தங்கள் காமராக்களை, நெடுந்தூரக் காட்சி எல்லையிடமாகப் பரவும் அடர்த்தியான மழைக் காடுகளின் செழும் பச்சையால் சூழப்பட்ட நீர்வீழ்ச்சியின் அருங்காட்சியைக் காண மையப்படுத்துகிறார்கள்.
விழிப்புடனிருப்பவர்கள், தூக்கணாங்குருவிகள் நீர்த்திவலைகளில் உள்ளும் வெளியிலுமாக விரைந்து பாய்வதையும், இன்னொரு முறை மூழ்குவதற்குள் மரங்களின் உச்சிகளுக்கும் செல்வதையும் பார்க்கலாம். அல்லது, தண்ணீர் அதிக ஆழமற்ற மேற்பகுதியருகே நீர்வீழ்ச்சிகளினுள் கிறீச்சிடும் பச்சை நிறக் கிளிகளின் கூட்டம் மூழ்குவதையும், அதன்பின் பாறையின் விளிம்பில் வெறுமென எட்டியிருந்து, திடீரெனத் திரும்பத்தோன்றி, மர உச்சிகளுக்குப் பறந்து, அங்கே தங்களைத்தாங்களே அழகுபடுத்திக்கொள்வதையும் அவர்கள் பார்க்கலாம். மேலும், பார்வையாளர்கள் இன்னும் நெருங்கக் கவனித்தால், தூக்கணாங்குருவி இனத்தைச் சேர்ந்த கூச்சலிடும் சிகப்பு பிட்டமுடைய கேசிக்கின் பெரிய தொங்கும் கூடுகளை அவர்கள் காண்பார்கள். அந்தப் பறவைகள் கூட்டமாக வசிக்கின்றன. அவற்றின் நீண்ட புல் நார்களிலிருந்து செய்யப்பட்ட கூடுகள், மரங்களின் கீழ் கிளைகளிலிருந்து தொங்குகின்றன. இவையனைத்தும், வண்ணத்துப்பூச்சிகளின் பல வகைகளும், நீர்வீழ்ச்சிகளுக்கு விஜயம் செய்பவருக்கு ஒரு வண்ணமயமான சாயலை அளிக்கிறது.
உண்மையாகவே, முழுவதுமாகப் போற்றப்படுவதற்கு இகுவாக்கு நீர்வீழ்ச்சிகளை நேரில் காணவும் கேட்கவும் வேண்டும். இயற்கையழகின் இந்த மிகப்பெரிய காட்சியின் சூழமைவாகிய 1939-ல் அமைக்கப்பட்ட பிரேசிலின் இகுவாக்கு தேசிய பூங்கா, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளால் விஜயம் செய்யப்படுகிறது. அவர்கள் ஏமாற்றமடைகிறதில்லை, தென்னமெரிக்காவிற்கான உங்கள் அடுத்தப் பயணத்தில் அதை நீங்கள் சேர்த்துக்கொண்டால் நீங்களும் ஏமாற்றமடையமாட்டீர்கள். (g91 1/22)
[பக்கம் 10, 11-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பராகுவே
இகுவாக்கு நீர்வீழ்ச்சி
ஆர்ஜன்டீனா
பிரேஸில்