முதியோரைக் கவனித்தல்—வளர்ந்துவரும் ஒரு பிரச்னை
தன்னுடைய தாயிடம் இப்படியாகக் கேட்ட ஒரு சிறுமியைப் பற்றிய ஒரு கதை: “நாம் எல்லாரும் அழகிய கோப்பைகளிலே சாப்பிடுகிறோம், ஆனால் பாட்டி மட்டும் ஏன் மரக் கோப்பையிலே சார்ப்பிடுகிறார்கள்?” அவளுடைய தாய் கொடுத்த விளக்கம்: “அம்மாவின் கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது, நம்முடைய நல்ல பாத்திரங்களை அவர்கள் கீழே போட்டு உடைத்துவிடக்கூடும், எனவேதான் இவற்றிற்குப் பதில் மரக் கோப்பையை உபயோகிக்கிறார்கள்.” இதைக் குறித்துச் சற்று யோசித்துவிட்டு, அந்தச் சிறுமி கேட்டாள்: “அப்படியென்றால் நான் பெரியவளாக ஆகும்போது, உங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அந்த மரப் கோப்பையை எனக்காகப் பத்திரமாக வைப்பீர்களா?” வருங்கால சம்பவங்களைக் குறித்த இந்த முன்னோட்டம் தாய்க்கு வியப்பாக இருந்திருக்கக்கூடும், அவர்களைச் சற்று அதிரச்செய்திருக்கக்கூடும். ஆனால், அதைக் குறித்துச் சற்று யோசித்துப் பார்க்கும்போது, அது அவளுக்கு ஓர் உறுதியையும் அளித்திருக்கக்கூடும்—தன்னுடைய சிறிய மகள் தன்னைக் கவனித்துக்கொள்ள திட்டமிட்டுக்கொண்டிருந்தாள்!
முதியோர் பலருக்கு எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாய் இல்லாமலிருக்கக்கூடும். உலகின் அநேக பகுதியில் அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு பகுதியினராக ஆகியிருக்கின்றனர். ஆகஸ்ட் 1987 உவர்ல்டு பிரஸ் ரிவ்யு என்ற பத்திரிகை, அந்தச் சமயத்தில் ஏறக்குறைய 60 கோடி மக்கள், பூகோளத்தின் மக்கள் தொகையில் 12 சதவீதம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அறிக்கை செய்தது.
ஐக்கிய மாகாணங்களில், முதியோர் எண்ணிக்கை முதல் முறையாக பருவ வயதினர் எண்ணிக்கையை மிஞ்சியிருக்கிறது. நியு யார்க் மாநகரின் ஒரு செய்தி இதழின் அறிவியல் எழுத்தாசிரியர் இப்படியாக அறிக்கைசெய்தார்: “மூன்று கோடி அமெரிக்கர் இப்பொழுது 65 வயதில் அல்லது அதற்கும் அதிக வயதானவர்களாக இருக்கின்றனர்—எட்டு பேருக்கு ஒருவர், இதுவரை இருந்திராதளவுக்கு அதிகம், மற்றும்: “முதியோர் தொகை மக்கள் தொகையின் மற்ற பகுதியினரைவிட இரட்டிப்பு வேகத்தில் வளர்ந்துவருகிறது. . . . 1786-ல் அமெரிக்கரின் ஆயுள் காலம் சராசரியாக 35 வயதாக இருந்தது. 1989-ல் பிறக்கும் ஓர் அமெரிக்க குழந்தைக்கு அது 75-ஆக இருக்கிறது.”
கானடாவில் அதிக வயோதிபராயிருப்பவர்களின், அதாவது 85 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமானவர்களின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் முடிவுக்குள்ளாக மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, முதியோர் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதமாக மட்டுமே இருந்தது. இன்று அவர்களுடைய எண்ணிக்கை 17 சதவீதத்துக்கு உயர்ந்துவிட்டது.
“மூன்றாம் உலகில் முதுமை” என்பதன் பேரில் ஐ.மா. மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை ஒன்று இப்படியாகக் கூறியது: “முதுமை அடைந்துவரும் மக்கள் தொகையில் ஐந்துக்கு நான்கு என்ற அதிகரிப்பு வீதம் மூன்றாம் உலகில் காணப்படுகிறது.”
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சீன மக்களின் ஆயுள் காலம் ஏறக்குறை 35-ஆக இருந்தது. 1982-க்குள் அது 68 வயதுக்குத் தாண்டிவிட்டது. இன்று 9 கோடி சீனர் முதியோராகக் கணக்கிடப்படுகின்றனர்; இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் அந்த எண்ணிக்கை 13 கோடியாக உயர்ந்துவிடும், அல்லது மக்கள் தொகையில் 11 சதவீதமாக ஆகிவிடும்.
உங்களுக்குச் சொந்தமானவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு விசேஷ முயற்சி
அதிக முதியோராயிருப்பவர்களின் எண்ணிக்கை உலகமுழுவதும் அதிகரித்துக்கொண்டிருப்பதால், அவர்களைக் கவனிப்பது எப்படி என்பது அதிக சிக்கலாயிருக்கிறது. பைபிள் காலங்களில், இந்தப் பிரச்னை இவ்வளவு கடினமானதாய் இருக்கவில்லை. அவர்கள் பெரிய குடும்பத்தைக் கொண்டிருந்தார்கள்; பிள்ளைகள், பெற்றோர், தாத்தா பாட்டி ஆகிய அனைவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். பிள்ளைகளும், தாத்தா பாட்டிமாரும் ஒருவருக்கொருவர் நன்மையுண்டாக தொடர்புடையவர்களாக இருந்தனர். மற்றும் பெற்றோர் தேவைப்பட்ட பொருள்சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை அளிக்க முடிந்ததோடு, குடும்பத்திலுள்ள முதியோருக்குத் தேவையான விசேஷ கவனிப்பையும் கொடுக்க முடிந்தது. இப்படியாக முதியோருக்குக் கவனிப்பை உட்படுத்திய கூட்டுக் குடும்ப வாழ்க்கை இன்னும் சில நாடுகளில் விதிமுறையாக அமைந்திருக்கிறது. (உதாரணங்களுக்கு, பக்கம் 8-லுள்ள பெட்டியைப் பார்க்கவும்.) ஆனால் அதிக செல்வ செழிப்புள்ள நாடுகளில் காரியம் இப்படியாக இல்லை, இவ்விடங்களில் குடும்ப வட்டாரம் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. பிள்ளைகள் பெரியவர்களாகி, விவாகம் செய்து, தங்களுக்கென்று பிள்ளைகளைக் கொண்டிருக்கும்போது, அவர்கள் பெரும்பாலும் தங்களுடைய வயதான, பலவீனமான மற்றும் தீரா நோய்க்குட்பட்ட பெற்றோரைக் கவனிக்கும் பிரச்னையை எதிர்ப்பட வேண்டியதாயிருக்கிறது.
இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையில் இதைச் செய்வது ஒரு பெரும் பிரச்னையாக இருக்கக்கூடும்! விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும், தற்போதைய பொருளாதார நிலைமைகளின் கீழ் இரு பெற்றோருமே வேலை செய்ய வேண்டியதாயிருக்கலாம். உணவு பொருட்களின் விலையோ அதிகம், வீட்டு வாடகையும் அதிகம், செலவுகளும் கூடுகிறது. சம்பளம் மாதத்துக்கு இருமுறையாக இருந்தாலும், அவை வேகமாகத் தீர்ந்துவிடுகிறது. வீட்டுப் பெண் வெளி வேலை செய்யாமலிருந்தால், அவள் பிள்ளைகளோடிருப்பதிலும். கடைக்குப் போவதிலும், சுத்தம் செய்வதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறாள்—இதுவே முழுநேர வேலையாக இருக்கிறது. வயதான பெற்றோர் அல்லது பெற்றோர்கள் வீட்டில் கவனிக்கப்படக்கூடாது என்று சொல்வதாக இல்லை. இது குறிப்பிடுவது என்னவென்றால், இது அதிக கடுமையான பொறுப்பாக இருக்கக்கூடும். வயதானவர்கள் தங்களுக்குரிய வேதனைகளையும் வலிகளையும் கொண்டிருக்கின்றனர், சில சமயங்களில் அவர்கள் குறைகூறுகிறவர்களாக, நிலையில்லாதவர்களாக, எல்லாச் சமயத்திலும் ஒத்துப்போகும் அல்லது இன்புறும் தன்மையற்றவர்ளாக இருக்கின்றனர். வீட்டிலுள்ள வயோதிபரைக் கவனிப்பதற்குக் கடுமையான முயற்சி அவசியமில்லை என்பதை எதுவுமே குறிக்காது.
பெரும்பாலும், பொறுப்பு மரணத்தில் இழக்கப்பட்டவர்களின் பெண் பிள்ளைகளில் மேல் விழுகிறது. ஆண்கள் பொருளாதார உதவி அளிப்பவர்களாய் இருந்தாலும், தனிப்பட்ட நேரடியான கவனிப்பை அடிப்படையில் கொடுப்பது பெண்களே என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன. அவர்கள் முதியோருக்கு உணவைத் தயாரித்தளிக்கின்றனர்—அநேக சமயங்களில் உணவை ஊட்டிவிடுகின்றனர்—அவர்களைக் குளிப்பாட்டி, உடை மாற்றி, மருத்துவர்களிடமும் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று, அவர்களுடைய மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதைக் கவனித்துக்கொள்கின்றனர். பெரும்பாலும் அவர்களே வயதான பெற்றோரின் கண்களும், செவிகளும், மனதுகளுமாய்ச் சேவிக்கின்றனர். அவர்களுடைய வேலை பெருத்ததொன்று, அவர்களுக்குக் கஷ்டமாய் இருந்தபோதிலும், மனமுவந்து பணியாற்றுவது உண்மையிலேயே போற்றுதற்குரியதும் யெகோவாவுக்குப் பிரியமானதாயும் இருக்கின்றன.
பெரும்பாலான பிள்ளைகள் தங்களுடைய வயதான பெற்றோரை அவர்களுடைய கடைசிக் காலத்தை ஒரு முதியோர் இல்லத்தில் செலவழிக்கும்படியாக அனுப்பிவிடுகின்றனர் என்ற நம்பிக்கை உண்மை அல்ல என்கிறார் ஐக்கிய மாகாணங்களில் ஃப்ளாரிடாவிலுள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பெரியவர்களாக வளர்வது மற்றும் முதுமையின் மையத்தின் இயக்குநர் கார்ல் ஐஸ்டார்ஃபர், M.D., Ph.D. “முதியோரைப் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த குடும்பத்தினரே கவனித்துவருகின்றனர் என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன,” என்றார்.
அவர் சொல்வதைப் புள்ளிவிவரங்கள் ஆதரிக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், பேட்டி காணப்பட்டவர்களில் 75 சதவீதத்தினர், தங்களுடைய பெற்றோர் தனியாகத் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாதவர்களாயிருந்தால், அவர்கள் தங்களோடு இருப்பதையே விரும்புகின்றனர் என்றனர். “குடும்பங்கள் தங்களுக்குச் சொந்தமானவர்களைக் கவனிக்க நிச்சயமாகவே விரும்புகின்றனர் என்பதை இது உறுதிபடுத்துகிறது,” என்றார் டாக்டர் ஐஸ்டார்ஃபர். Ms. பத்திரிகையில் ஓர் அறிக்கை இப்படியாகச் சொன்னது: “எந்த ஒரு சமயத்திலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே முதியோர் இல்லங்களில் இருக்கின்றனர், ஏனென்றால் வயதானவர்களும், அவர்களுடைய உறவினர்களில் பெரும்பகுதியினரும் நிறுவனங்களின் கவனிப்புக்குப் பதிலாக வீட்டுக் கவனிப்பையே விரும்புகின்றனர்.”
ஒரு வயதான பெற்றோரைக் கவனிப்பதற்குச் சிலர் எடுத்துக் கொள்ளும் முயற்சியைப் பின்வரும் காரியம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை ஐக்கிய மாகாணங்களிலுள்ள சபைகளையெல்லாம் சந்திக்கும் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு பயணப் பிரதிநிதியிடமிருந்து வந்தது. தன் மனைவியின் 83 வயது தாயை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதற்குப் பதிலாகத் தங்களோடு வைத்துக் கொள்வதற்குத் தானும் தன் மனைவியும் எவ்விதம் தீர்மானித்தனர் என்று விளக்குகிறார். “ஒரு தாய் 11 பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள முடியும், ஆனால் 11 பிள்ளைகள் ஒரு தாயைக் கவனிக்க முடியாது” என்ற வழக்கச் சொல் என் நினைவுக்கு வந்தது. சரி, ஒரு வயதான தாயை நாங்கள் இருவரும் கவனித்துக்கொள்ள தீர்மானித்தோம். அவர்கள் அல்ஷீமர்ஸ் என்ற நரம்பு மைய மண்டலம் பாதிக்கப்படும் நோயின் ஆரம்பத்தில் இருந்த போதிலும் அவர்கள் எங்களோடு ஊர்திமனையில் பயணம் செய்தார்கள்.
“நாங்கள் ராஜ்ய செய்தியை வீடுவீடாகப் பிரசங்கிக்கையில் அவர்கள் ஆரம்பத்தில் எங்களோடு வந்தார்கள். பின்னர் நாங்கள் அவர்களை ஒரு சக்கர நாற்காலியில் கூட்டிச்செல்ல வேண்டியிருந்தது. அவர்களை நாங்கள் எவ்விதம் கவனித்துக்கொண்டோம் என்பதை வீட்டுக்காரர்கள் போற்றினார்கள். சில சமயங்களில் அம்மா சரியாக இல்லாத காரியங்களைப் பேசுவார்கள், ஆனால் அவர்களைத் திருத்துவதன் மூலம் நாங்கள் அவர்களை சங்கோஜப்படுத்த மாட்டோம். என்றபோதிலும், அவர்கள் இன்னும் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மரித்த 90-ம் வயது வரை நாங்கள் அவர்களைக் கவனித்துக் கொண்டோம்.
முதியோர் மருத்துவ இல்லங்கள் தேவைப்படும்போது
ஐக்கிய மாகாணங்களில் ஏறக்குறைய இருபது லட்சம் முதியோர் வாழ்கின்றனர். என்றபோதிலும், அநேகருடைய விஷயத்தில், முதியோர் இல்லத்தில் சேர்ப்பதைச் சிலர் “முதியோரின் உணர்ச்சியற்ற சரக்குக்கிடங்கில்” சேர்ப்பதாயிருக்கிறது என்று சொல்லும் ஒரு காரியமாக இல்லை. மாறாக, தங்களைக் கவனித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ளவர்களுக்கு விடப்பட்டிருக்கும் ஒரே வழியாக அது அமைந்திருக்கிறது. அநேக சமயங்களில், முதியோரின் பிள்ளைகள் தங்களுடைய வயதான பெற்றோரைக் கவனிக்கும் நிலையில் இல்லை, அவர்களில் பலர் ஆல்ஷீமர் நோயால் அல்லது கை கால் தளர்ந்திடும் ஒரு சில நோயால் பாதிக்கப்பட்டு படுகிடக்கையாகிவிடக்கூடும்; இது இருபத்துநான்கு மணிநேர கவனிப்பை உட்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட சமயங்களில், முதியோர் மருத்துவ இல்லங்களே இந்த விசேஷ தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரே இடமாக இருக்கக்கூடும்.
ஆப்பிரிக்காவில், சியேரா லியோனாவிலுள்ள காவற்கோபுர சங்கத்தின் ஒரு மிஷனரி, தன் தாய் அவர்களுடைய தாயை முதியோர் மருத்துவ இல்லத்தில் சேர்க்கவேண்டியிருந்த போது, அவர்களுக்கு இருந்த வேதனையைக் குறித்து இப்படியாகச் சொன்னார்: “அண்மையில் ஃப்ளாரிடாவிலிருக்கும் என் தாய் தன்னுடைய தாயாகிய ஹெலனை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். அப்படிச் செய்ய தீர்மானிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் ஹெலனை நான்கு ஆண்டுகள் கவனித்தார்கள், இப்பொழுதோ ஹெலனுக்கு முழு நேர கவனிப்புத் தேவைப்படுகிறது. என்னுடைய அம்மாவின் நண்பர்கள், குடும்பம், மற்றும் பல சமூக நல தொண்டர்களும் மருத்துவர்களும் ஹெலனை முதியோர் மருத்துவ இல்லத்தில் சேர்க்க வேண்டிய தீர்மானத்தை ஆதரித்தார்கள், இருந்தாலும் அது மிகவும் கடினமான தீர்மானமாக இருந்தது. தான் குழந்தையாக இருந்தபோது, தன்னுடைய தாய் தன்னைக் கவனித்ததால், அவர்களுடைய வயதான காலத்தில் அவர்களைக் கவனிப்பது சரியே—பதில் செய்ய, அல்லது அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டது போல, “பதில் நன்மைகளைச் செய்”தலாகும். என்றபோதிலும், ஹெலன் என்னுடைய தாய் வீட்டில் கவனிக்கப்பட்டிருப்பதைக் காட்டிலும் நல்ல விதத்தில் முதியோர் மருத்துவ இல்லத்தில் கவனிக்கப்பட்டார்கள்.—1 தீமோத்தேயு 5:4.
யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு சாட்சி, புற்றுநோயால் கஷ்டப்பட்ட தன் தகப்பனைக் குறித்து இப்படியாகச் சொன்னார்: “என்னுடைய தந்தை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வைராக்கியமுள்ள சாட்சியாக இருந்தார். தன்னுடைய வாழ்க்கையின் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவருக்குப் புற்றுநோய் இருந்தது. என்னுடைய மனைவியும் நானும் எங்கள் விடுமுறைகளை அவரோடு கழித்தோம், மற்றும் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்து அவருக்கு உதவி செய்ய அவரோடு இருந்தோம். மற்ற உறவினர்களும் அநேக வழிகளில் உதவி செய்தார்கள். ஆனால், அந்தச் சமயங்களில் அநேகமாகத் தன்னுடைய மனைவியும் பக்கத்து வீட்டில் இருந்த விவாகமான ஒரு மகளும் அவரைக் கவனித்தார்கள். அவர் சென்றுவந்த சாட்சிகளின் சபையிலிருந்தும் சபை அங்கத்தினர் அவரை விசாரித்து வந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகள் அவர் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்றுவந்தார். கடைசி ஐந்து மாதங்கள், அவருக்குத் தேவையான விசேஷ கவனிப்பு கிடைக்கக்கூடிய இடத்தில் கூடுதல் மருத்துவ கவனிப்பைப் பெற்றார்.
“வீட்டிலிருந்து முதியோர் மருத்துவ இல்லத்தில் அவரைச் சேர்ப்பது குறித்த தீர்மானம் குடும்பமாக எடுக்கப்பட்ட ஒன்று, அதில் அவரும் கலந்துகொண்டார். குடும்பத்தார் தன்னைக் கவனிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது, முடியாததுமாக இருக்கிறது என்பதாக அவர் தீர்மானித்தார். ‘இது உங்கள் எல்லாரையுமே கொன்றுவிடும்!’ என்றார். ‘இந்தக் கூடுதல் கவனிப்பு வசதி இருக்கும் இடத்திற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. இது உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது.’
“ஆகவே அவர் சென்றார். ஒன்பது வருடங்களாகப் பெருமளவுக்குக் குடும்பம் அவரைக் கவனித்துவந்தது, கடைசி கட்டமாகத்தான் அவர் கூடுதல் மருத்துவ கவனிப்பு இருக்கும் வசதியை, தேவைப்பட்ட 24 மணி நேர கவனிப்பைத் தெரிந்துகொண்டார்.”
கடைசித் தெரிவாகத் தேவையான கவனிப்புக்கு முதியோர் கவனிப்பு இல்லம் தேவைப்படும்போது, குடும்பம் சுத்தமான, தயவான திறம்பட்ட கவனிப்பாளர்களைக் கொண்ட ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். வயதான நபர் கைவிடப்பட்டவராக, மறக்கப்பட்டவராக, முற்றிலும் தனிமையில் இருப்பவராக மற்றும் ஒருவரும் தன்னில் அக்கறையாய் இல்லை என்று உணருபவராக இல்லாதிருக்கக் கூடுமானால், ஒவ்வொரு நாளும் ஒருவர் அவரைச் சென்று பார்ப்பதற்காக—குடும்ப அங்கத்தினர், சபையிலிருந்து ஒருவர் சென்று பார்ப்பதற்காக, குறைந்தபட்சம் தொலைப்பேசியில் ஒரு விசாரிப்பு செய்வதற்காக—ஏற்பாடு செய்யுங்கள். முதியோர் மருத்துவ இல்லத்தில் இருக்கும் மற்றவர்களைச் சந்திக்க ஆட்கள் வரும்போது, உங்கள் அன்பானவர்களைப் பார்க்க எவரும் வராதிருப்பது அவர்களை அதிக சோர்வுறச் செய்யும். எனவே அவரை ஒழுங்காகச் சென்று பார்க்க முயலுங்கள். அவரைச் சந்தித்துப் பேசுங்கள். அவர் சொல்வதைக் கேளுங்கள். அவரோடு சேர்ந்து ஜெபியுங்கள். இது மிகவும் முக்கியம். அவர் அனைத்து உணர்ச்சியும் இழந்த மயக்க நிலையில் இருந்தாலும், ஜெபம் செய்யுங்கள். ஏதாவதொன்றை அவர் எந்தளவுக்குக் கேட்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது!
பெற்றோரைக் குறித்து தீர்மானங்கள் எடுக்கையில், தீர்மானங்களை அவர்களுக்காக செய்வதற்குப் பதில் அவர்களோடு தீர்மானியுங்கள். அவர்கள் இன்னும் வாழ்க்கையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரட்டும். தேவையான உதவியை கூடிய எல்லா அன்போடும், பொறுமையோடும், நிலையைப் புரிந்தும் அளியுங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபடி, நம்முடைய பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் கைமாறாகச் செய்ய வேண்டியதைச் செய்வதற்குரிய சமயம் அதுதான்.
“எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை”
இந்த நவீன உலகின் அவசரக் காலத்தில், முதியோரை வாழ்க்கையின் பின்னோட்டத்திற்குத் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. விசேஷமாக, இளைஞர்கள் இந்தப் பந்தயத்தில் சேர்ந்து ஓட ஆரம்பித்திருப்பதாலும், தங்களுடைய வாழ்க்கையைத் தொடரும் அவசரத்தில் இருப்பதாலும், முதியோர் குறுக்கே நிற்பதாகவும், அவர்கள் பிரயோஜனமாக இருந்த காலம் கடந்துவிட்டது என உணர ஆரம்பிக்கின்றனர். நாம் எல்லாருமே சற்று நின்று இப்படியாக யோசிக்கவேண்டியதாய் இருக்கலாம்: வாழ்க்கையை அதிக பிரயோஜனமாக ஆக்குவது என்ன? வயதில் இளமையாயிருப்பவர்கள் வயதானவர்களின் வாழ்க்கையின் மதிப்பைக் குறைத்து தங்களுடைய வாழ்க்கையின் மதிப்பைப் பெரிதுபடுத்துவது எளிது.
என்றபோதிலும், வயதானவர்களின் அல்லது உடல் வலிமையற்றவர்களின் பங்கு ஓரளவே, அல்லது ஒன்றுமில்லை என்பது ஒரு பொருட்டல்ல. பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் அரசன் பொதுவாக மக்களின் செயல்களை வீண் என்பதாக அடிக்கடி குறிப்பிடுகிறார். ஆண்டுகள் உருண்டோடுகையில், லட்சக்கணக்கானவர்களின் உடலை வயது நாசப்படுத்தியிருப்பது போன்று இளைஞர்களுடைய உடல்களையும் நாசப்படுத்தும் என்று அவர் இளைஞரைக் குறித்தும், அவர்களுடைய தற்காலிக பெலத்தையும் குறித்துப் பேசினார். எல்லாருமே மண்ணாகின்றனர், இந்த முடிவையே காண்கின்றனர்: “மாயை, மாயை,” என்கிறார் பிரசங்கி. “எல்லாம் மாயை.”—பிரசங்கி 12:8.
ஆனால் ஞானிகளின் வார்த்தைகளை அவர் உயர்வாகப் பேசினார், மற்றும் வாழ்க்கையின் பேரில் தன் கருத்தை இந்த வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறுகிறார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகைளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.” (பிரசங்கி 12:13) ஒரு பிரயோஜனமான வாழ்க்கைக்கு அதுவே வாசகம், நீங்கள் எவ்வளவு இளமையாக, அல்லது எவ்வளவு முதியவராக இருக்கிறீர்கள் என்பதல்ல, அல்லது கடந்து போகும் பொருளாசை மிகுந்த இந்தப் பழைய உலகில் நீங்கள் என்ன அடையாளத்தை விட்டுச் செல்கிறீர்கள் என்பதல்ல.
நம்முடைய மனித உறவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு, பொன் விதி என்று அழைக்கப்படும் ஒரு நியமத்தை இயேசு தந்தார்: “மற்றவர்கள் உங்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவ்விதமே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.” (மத்தேயு 7:12, தி நியு இங்லீஷ் பைபிள்) அந்த விதியைப் பொருத்துவதற்கு, நாம் அவர்களுடைய இடத்தில் இருந்தால், அவர்களால் நாம் எவ்விதம் நடத்தப்பட விரும்புகிறோம் என்பதைப் பார்ப்பதற்கு நம்மை மற்றவருடைய இடத்தில் வைத்துப் பார்க்க முடிய வேண்டும். நாம் வயதானவர்களாய், பலவீனராய் உதவி தேவைப்படுகிறவர்களாய் இருந்தால், நம்முடைய பிள்ளைகளில் ஒருவரால் நாம் எவ்விதம் நடத்தப்படுவதை விரும்புவோம்? நாம் உதவியற்ற பிள்ளைகளாக இருக்கும்போது நம்முடைய பெற்றோர் நமக்கு 20 ஆண்டுகளாகக் கொடுத்துவந்த ஆதரவுக்கும் கவனிப்புக்கும் கைமாறாக, நாம் நம்முடைய பெற்றோருக்கு அவர்களுடைய வயதான காலத்தில் இப்பொழுது திருப்பி கொடுப்பவர்களாய் இருப்போமா?
தேவையில் இருக்கும் நம்முடைய வயதான பெற்றோரை நாம் கவனிக்கும்போது, ஒருவேளை நம்முடைய சிறு பிராயத்தை எண்ணிப்பார்ப்பதும் நாம் குழந்தைகளாக, சிறு பிள்ளைகளாக இருந்தபோது அவர்கள் நமக்குச் செய்த எல்லாவற்றையும், நாம் வியாதியாயிருந்தபோது அவர்கள் நமக்குப் பாலூட்டி, போஷித்து, உடை உடுத்தி, சிறுவர்களாக நம்மை மகிழ்விக்க நம்மை வெளியே அழைத்துச் சென்றது ஆகியவற்றை எல்லாம் எண்ணிப்பாருங்கள். பின்னர், அவர்களுடைய நலனில் அன்பான அக்கறையுடையவர்களாய், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறந்தது என்ன என்பதை எண்ணிப்பாருங்கள்.
கூடுமானால், அவர்களை வீட்டில் வைத்துக் கவனிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக இருக்கலாம். மறுபட்சத்தில், வயதான பெற்றோர் உட்பட எல்லாருக்கும் மிகச் சிறந்த ஏற்பாடு, கூடுதல் கவனிப்பு வசதி அல்லது முதியோர் மருத்துவ இல்லமாக இருக்கலாம். தீர்மானம் என்னவாக இருந்தாலுஞ்சரி, அதை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். நமக்கு இவ்விதம் சொல்லப்படுகிறது: “நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன?” மீண்டும்: “மற்றவர்களைக் குற்றப்படுத்துவதற்கு நீ யார்?”—ரோமர் 14:10; யாக்கோபு 4:12.
வயதான பெற்றோருக்கு எது நன்மையாக செயல்படுவதாயிருந்தாலும், பிள்ளைகளோடு வாழ்வதாயிருந்தாலுஞ்சரி, அல்லது ஒரு முதியோர் மருத்துவ இல்லத்தில் இருப்பதாயிருந்தாலுஞ்சரி, அவர்ளுடைய மன திறமைகள் சரியாக இயங்குவதாயிருந்தால், அவர்கள் இன்னமும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழக்கூடும். கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் ஒரு பரதீஸான பூமியில் நல்ல ஆரோக்கியத்துடன் என்றென்றுமாக வாழும் யெகோவாவின் நோக்கத்தைக் குறித்து அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடும். அவர்கள் தங்களுடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனை சேவிக்கும் ஒரு மகிழ்ச்சியானதும் நிறைவானதுமான ஒரு புதிய வாழ்க்கைப் பணியைக் காணக்கூடும். இதுதானே அவர்களுடைய வாழ்க்கையின் மிகுந்த நோக்கமுள்ள, மகிழ்ச்சியான காலக்கட்டமாக இது அமைகிறது. வாழ்க்கை முடிந்து விட்டது என்பதாக மற்றவர்கள் நினைத்திட, முடிவில்லா நீதியான ஒரு புதிய உலகில் நித்திய ஜீவன் பற்றிய யெகோவாவின் வாக்குத்தத்தத்தைச் சிலர் தங்களுடைய வயதான ஆண்டுகளில் அறிய வந்திருக்கின்றனர், இதனால் அந்த நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களுடன் பேசும் ஒரு புதிய மகிழ்ச்சியைக் கண்டிருக்கின்றனர்.
முடிவாக ஒரு குறிப்பை விளக்கும் சம்பவம். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண், 100 வயதாயிருக்கும்போது, முதியோர் மருத்துவ இல்லத்தில் இருந்த ஒரு செவிலியர் மூலம் வாக்குப்பண்ணப்பட்ட இந்த ஆசீர்வாதங்களைப் பற்றி அறிய வந்தார். அவர்கள் தன்னுடைய பழுத்த வயதில், 102 வயதில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டுதல் பெற்றார்கள். அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை ‘மாயைகளின் மாயையாக இருக்கும் முட்டுச் சந்தில் முடித்திடவில்லை, ஆனால் தன்னுடைய ‘வாழ்க்கையின் கடமை’ ‘தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு’ முடித்தார்கள். (g91 3/22)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாய் 11 பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது; இப்போது 11 பிள்ளைகள் ஒரு தாயைக் கவனிக்க முடியாது
[பக்கம் 8-ன் பெட்டி]
முதியோரைக் கவனிப்பதன் மூலம் கனம்பண்ணுதல்—உலகமுழுவதிலிருந்தும் வரும் அறிக்கை
“ஆப்பிரிக்கா தேசத்தில் முதியோருக்காக அரசு ஏற்பாடுகள் மிகக் குறைவே அல்லது ஒன்றுமில்லை என்று குறிப்பிடலாம்—முதியோர் மருத்துவ இல்லங்கள், மருத்துவ உதவி அல்லது சமூக நலன் பாதுகாப்புத் திட்டங்கள், ஓய்வூதியங்கள் கிடையாது. முதியோர் தங்கள் பிள்ளைகளால் கவனிக்கப்படுகின்றனர்.
“பிள்ளைப்பேறு வளரும் நாடுகளில் முக்கியமாகக் கருதப்படுகிறதற்குக் காரணம், தங்களுடைய பிள்ளைகள் தங்களை முதுமையடையும்போது கவனித்துக்கொள்வார்கள் என்பதே. வறுமையில் இருப்பவர்களுங்கூட நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வார்கள்; தாங்கள் அதிகமான பிள்ளைகளைப் பெற்றிருக்கும்போது, அவர்களில் சிலர் உயிர்பிழைத்துத் தங்களைக் கவனித்துக் கொள்ளும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது என்று அவர்கள் நியாயங்காட்டுகிறார்கள்.
“ஆப்பிரிக்காவில் தராதரங்கள் மாறுகிறபோதிலும், பெரும்பாலும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைக் குடும்பங்கள் மிகவும் முக்கியமானதாய் ஏற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகள் இல்லாவிட்டால், குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வார்கள். பெரும்பாலும் அவ்விதம் கவனிப்பவர்களின் பொருளாதார நிலை பலவீனமாயிருக்கிறது, ஆனால் தங்களுக்கு இருப்பவற்றைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
“தங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள இன்னொரு முறை, தங்களுடைய பிள்ளைகளையே அவர்களுக்குக் கொடுத்துவிடுவது. பெரும்பாலும் பேரப்பிள்ளைகள்தான் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள்.
“வளர்ந்த நாடுகளில், மருத்துவ முன்னேற்றங்களால் மக்கள் ஆயுள் நீடித்திருக்கிறது. வளரும் உலகில், காரியம் இப்படியாக இல்லை. ஏழை எளியோர் மரிக்கின்றனர், காரணம், கிடைக்கக்கூடிய குறைந்த அளவு மருத்துவ உதவியையுங்கூட அவர்கள் பெற்றுக்கொள்ள பண வசதி இல்லாதவர்கள். சியரா லியோனில் சொல்லப்படும் ஒரு பழமொழி: ‘ஏழைக்கு நோய் இல்லை.’ அதாவது, ஏழையாக இருப்பவனுக்குச் சிகிச்சைப் பெற்றிட பணம் இல்லாததால், ஒன்று அவன் அரோக்கியமாக இருப்பான் அல்லது மரித்தவனாய் இருப்பான்.”—ராபர்ட் லான்டிஸ், ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு மிஷனரி.
“மெக்ஸிக்கோ நகரில் மக்கள் வயதான பெற்றோருக்கு உயர்ந்த மதிப்பையுடையவர்கள். மகன்கள் விவாகமாகும்போது, பெற்றோர் தங்கள் வீடுகளில் தனிமையாக இருக்கின்றனர், ஆனால் பெற்றோர் முதுமையடைந்து தேவையில் இருக்கும்போது, பிள்ளைகள் அவர்களைத் தங்கள் வீட்டில் ஏற்று அவர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள். இது தங்களுடைய கடமை என்று அவர்கள் உணருகிறார்கள்.
“தாத்தா பாட்டிமார் ஒரே வீட்டில் மகன்கள், பேரப்பிள்ளைகளுடன் வாழ்வதைப் பொதுவாகக் காணலாம். பேரப்பிள்ளைகள் தங்கள் தாத்தா பாட்டிமாரை நேசித்து மதிக்கிறார்கள். குடும்பம் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறது.
மெக்ஸிக்கோவில் முதியோர் இல்லங்களைப் பார்ப்பது அரிது, ஏனென்றால் வயோதிபரை அவர்களுடைய மகன்களும் மகள்களும் கவனித்துக்கொள்கிறார்கள். அநேக மகன்கள் இருந்தால், சிலசமயங்களில் விவாகமாகும் கடைசி மகன் வீட்டில் தங்கி பெற்றோருடன் வாழ்கிறான்.”—இஷா அலேமான், மெக்ஸிக்கோ.
கொரியா நாட்டில் நாங்கள் முதியோரைக் கனம்பண்ண வேண்டும் என்று வீட்டிலும் பள்ளியிலும் கற்பிக்கப்படுகிறோம். குடும்பத்தில் முதல் மகன் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவன் அவர்களை ஆதரிக்க முடியாவிட்டால், இன்னொரு மகனோ அல்லது மகளோ அதைச் செய்வான். அநேக தம்பதிகள் பெற்றோருடன் ஒரே கூரையின்கீழ் வாழ்கிறவர்களாய்த் தங்களுடைய வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறார்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வாழ்வதை எதிர்பார்க்கின்றனர், மற்றும் அவர்கள் தங்களுடைய பேரப்பிள்ளைகளுக்குப் போதிக்கவும் அவர்களைக் கவனித்துக்கொள்ளவும் விரும்புகின்றனர். இளம் தம்பதிகள் தங்கள் வயதான பெற்றோரை ஒரு முதியோர் மருத்துவ இல்லத்திற்கு அனுப்பிவிடுவது வெட்கங்கெட்டச் செயலாகக் கருதப்படுகிறது.
“என்னுடைய தகப்பனார்தான் மூத்த மகன், நாங்கள் எங்களுடைய தாத்தா பாட்டியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். எப்பொழுதெல்லாம் நாங்கள் வீட்டிலிருந்து வெளியே சென்றோமோ, அப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கே செல்கிறோம், எப்பொழுது திரும்பி வருவோம் என்று அவர்களிடம் சொல்லிச் சென்றோம். நாங்கள் வீடு திரும்புகையில், முதலாவது அவர்களுடைய அறைக்குச் சென்று அவர்களை தலை குனிந்து வாழ்த்துவோம், இப்படியாக நாங்கள் வந்துவிட்டோம் என்பதைத் தெரியப்படுத்துவோம், ஏனென்றால் அவர்கள் முழு குடும்பத்தின் நலனிலும் அக்கறையாக இருந்தார்கள்.
அவர்களிடம் ஏதாவது கொடுக்கும்போது, எங்களுடைய இரண்டு கைகளாலும் அவற்றைப் பிடித்துக் கொடுப்போம். பெற்றோர், தாத்தா பாட்டிமார், ஆசிரியர்கள் அல்லது பொதுப் பணியிலுள்ள உயர் அதிகாரிகள் போன்று மரியாதைக்குரியவர்களுக்கு எந்தப் பொருளையும் ஒரு கையால் கொடுப்பது அவமரியாதையாகக் கருத்ப்படுகிறது. ஏதாவது விசேஷ உணவைக் கொண்டிருக்கும்போது, நாங்கள் முதலில் தாத்தா பாட்டிக்கே அதைப் பரிமாறுவோம்.
முதியோரைக் கனம்பண்ணுவது வெறுமனே குடும்ப அங்கத்தினருக்கு மட்டுப்பட்டதாயில்லை. கீழ்நிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளி வரையிலும், நெறிமுறை சார்ந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. அந்த வகுப்பின்போது, நாங்கள் வனதெய்வக் கதைகள் அல்லது சொற்பொழிவுகள் மூலம் முதியோரை எவ்விதம் மதித்து நடப்பது, கனம்பண்ணுவது என்று கற்றோம்.
“முதியவர் ஒருவர் அறைக்குள் பிரவேசிக்கும்போது, வயதில் இளையோர் எழுந்திருக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். வயதில் இளையவர் பஸ் பயணத்தின்போது இருக்கையில் அமர்ந்திருந்தால், பெரியவர் ஒருவருக்கு அல்லது பெரிய அம்மாவுக்கு உட்கார இடம் இல்லாதிருந்தால், வயதில் இளையவர் தன்னுடைய இருக்கையை அவருக்குக் கொடுத்துவிடுவதுதான் பழக்கம். முதியவர் ஒருவர் அதிக பளுவான ஒரு பொருளைத் தூக்கிக்கொண்டிருந்தால், அவரை நிறுத்தி, அவருக்கு உதவி தேவைப்படுமா, இல்லையா என்று கேட்டுக்கொள்வோம். ஆம் என்று அவர் சொன்னால், அதை அவர் சேரும் இடம் மட்டும் எடுத்துச் சேர்த்திட வேண்டும்.
“பைபிள் முன்னறிவித்ததுபோன்று, இந்தக் காரிய ஒழுங்கு முறையின் கடைசி நாட்களில் ஒழுக்க நெறி தராதரம் குறைந்துகொண்டிருக்கும். இந்தச் செல்வாக்குக்குக் கொரியா விதிவிலக்கல்ல. இருந்தாலும், முதியோரிடமாக மரியாதைக்குரிய இப்படிப்பட்ட மனநிலை பல கொரியர் இருதயங்களில் தங்கியிருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:1-5)—கே கிம், கொரியாவிலிருந்து.
[பக்கம் 7-ன் படம்]
முதியோரைச் சந்திக்கச் செல்வதில் நேரம் நல்ல விதத்தில் செலவழிக்கப்படுகிறது