உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 4/15 பக். 25-28
  • தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • முதியோர் இல்லங்களில் முதியோர் சந்திக்கும் சவால்கள்
  • சபை தரும் ஆதரவு
  • பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்
  • நீங்கள் அவர்களைச் சந்திப்பது முக்கியம்
  • பரஸ்பர பயன்கள்
  • முதியோரைக் கவனித்தல்—வளர்ந்துவரும் ஒரு பிரச்னை
    விழித்தெழு!—1992
  • கிறிஸ்தவக் குடும்பம் வயதானவர்களுக்கு உதவுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • முதியோரை கவனித்தல்—கிறிஸ்தவ கடமை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • முதியோரின் அக்கறைகளில் கண்ணுங் கருத்துமாய் இருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 4/15 பக். 25-28

தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை

‘யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்யக்கடவோம்.’ இதுவே அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களுக்குத் தந்த அறிவுரை. (கலா. 6:10) கடவுளுடைய ஆவியால் அருளப்பட்ட இந்த அறிவுரைப்படி இன்றும் நாம் நடக்கிறோம். எனவே, நம்முடைய சக விசுவாசிகளுக்கு நன்மை செய்வதற்கான வாய்ப்புகளை நாம் தேடுகிறோம். விசேஷமாக, முதியோர் இல்லங்களில் வாழும் நம் அருமை சகோதர சகோதரிகளுக்குக் கிறிஸ்தவ சபையின் அன்பான கவனிப்பு தேவை; அதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களும்கூட.

உண்மைதான், சில நாடுகளில் வயதான பெற்றோர்களைப் பொதுவாக அவர்களது குடும்பத்தாரே வீட்டில் வைத்து கவனித்துக் கொள்கிறார்கள். என்றாலும், மற்ற நாடுகளில் வயதானவர்கள் பலர், முதியோர் இல்லங்களின் பராமரிப்பில் வாழும் நிலை உள்ளது. அப்படியென்றால் இத்தகைய இல்லங்களில் வாழும் நம்முடைய வயதான கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்? குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் அவர்கள் எப்படி இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கலாம்? கிறிஸ்தவ சபை அவர்களுக்கு எப்படி உதவிக்கரம் நீட்டலாம்? அவர்களைத் தவறாமல் சந்திப்பது நமக்கு என்னென்ன விதங்களில் நன்மை அளிக்கும்?

முதியோர் இல்லங்களில் முதியோர் சந்திக்கும் சவால்கள்

முதியோர் இல்லங்களில் குடிபுகும் வயதான கிறிஸ்தவர்கள், அத்தகைய இல்லங்கள் தங்களுக்குப் பழக்கமில்லாத ஒரு சபையின் பிராந்தியத்தில் இருப்பதைக் காணலாம். இதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள சகோதர சகோதரிகள் இவர்களை அடிக்கடி சந்திக்கும் எண்ணமின்றி இருக்கலாம். அதுமட்டுமின்றி அந்த இல்லத்தில் இருப்பவர்களும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இது நம்முடைய வயதான சகோதர சகோதரிகளுக்குச் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கலாம்.

உதாரணமாக, சில பகுதிகளிலுள்ள முதியோர் இல்லங்கள், தங்களுடைய வளாகத்திலேயே மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். முதியோர் இல்லத்தில் பணிபுரியும் ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “தாங்கள் நினைப்பதைத் தெரிவிக்க இயலாத நிலையிலுள்ள சில வயதான சாட்சிகளை, அவர்களுடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்ளாமலேயே ‘வீல்சேர்களில்’ வைத்து ஜெபக்கூட்டங்களுக்கு [பணியாளர்கள்] அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.” அன்றாட வாழ்க்கை அலுத்துப் போகாமல் இருப்பதற்காக இல்லத்தில் வேலை செய்பவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். இப்படிப்பட்ட இல்லங்களில் வசிக்கிற சில வயதான சாட்சிகளுக்கு அவர்களுடைய மனசாட்சி சாப்பிட அனுமதிக்காத சில உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. (அப். 15:28, 29) நம்முடைய வயதான சகோதர சகோதரிகளை நாம் தவறாமல் சென்று சந்தித்தால் இதுபோன்ற சவால்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவ முடியும், அல்லவா?

சபை தரும் ஆதரவு

ஆதரவற்ற முதியவர்களை கவனிக்கவேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். (1 தீ. 5:9, 10) அதுபோலவே, இன்றுள்ள கண்காணிகளும், தங்களுடைய பகுதியிலுள்ள முதியோர் இல்லங்களில் வாழும் சகோதர சகோதரிகளைக் கவனிக்கவேண்டிய பொறுப்பு தங்களுக்கிருப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.a ராபெர் என்ற மூப்பர் சொல்வதாவது: “வயதானவர்கள் எப்படிப்பட்ட சூழலில் வசிக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கும் அவர்களுடன் சேர்ந்து ஜெபிப்பதற்கும் கிறிஸ்தவ கண்காணிகள் நேரில் சென்று சந்திப்பது பயனுள்ளதாகவும் உற்சாகமளிப்பதாகவும் இருக்கும். அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய சபையினரும் தாராளமாக உதவமுடியும்.” வயதானவர்களைச் சந்திப்பதற்கு நாம் நேரம் ஒதுக்கினால், திக்கற்றவர்களுக்கு உதவுவதை யெகோவா எவ்வளவு முக்கியமானதாய் கருதுகிறார் என நாம் புரிந்திருப்பதைக் காட்டுகிறோம்—யாக். 1:27.

அவசியம் ஏற்பட்டால், உள்ளூர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு நடைமுறையான உதவி அளிப்பதற்கும் மூப்பர்கள் மனமுவந்து ஏற்பாடு செய்கிறார்கள். வயதானவர்களுக்குத் தேவைப்படுகிற ஒரு உதவியைக் குறித்து ராபெர் இவ்வாறு சொல்கிறார்: “ஓரளவுக்கு நடமாடும் நிலையில் இருந்தால், கூட்டங்களுக்கு வரும்படி அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.” ஆனால், ராஜ்ய மன்றங்களுக்கு வர இயலாத நிலையில் அவர்கள் இருந்தால் மூப்பர்கள் வேறு ஏதாவது ஏற்பாடுகளைச் செய்யலாம். கிட்டத்தட்ட 85 வயதான ஜாக்லின் மூட்டுத் தேய்வினால் அவதிப்படுகிறார்; அவர் தொலைபேசியின் மூலமாக கூட்டங்களைக் கவனிக்கிறார். “கூட்டங்கள் நடைபெறுகிற சமயத்திலேயே அதைக் கேட்பது எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, கூட்டங்களை இப்படிக் கவனிப்பதுதான் எனக்கு முக்கியம்!” என்கிறார் ஜாக்லின்.

வயதான கிறிஸ்தவர் ஒருவர் கூட்டங்களில் நடப்பவற்றை தொலைபேசிமூலம் கேட்க முடியாத நிலையில் இருந்தால் அவற்றை ‘காஸட்டில்’ பதிவு செய்வதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம். பதிவு செய்த ‘காஸட்டை’ கொடுக்கச் செல்லும் நபர், அந்த சகோதரரை அல்லது சகோதரியை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசிவிட்டு வரலாம். “சபை அங்கத்தினர்களைப் பற்றிய விஷயங்களை அவர்களிடம் நாம் பகிர்ந்துக்கொள்ளும்போது தாங்கள் இன்னும் இந்தப் பெரிய ஆன்மீக குடும்பத்தின் பாகமாக இருக்கிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும்” என்கிறார் ஒரு மூப்பர்.

பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்

முதியோர் இல்லத்திற்குச் செல்லும் அநேக முதியோர் விரக்தியின் விளிம்பிற்கே சென்று விடுகிறார்கள். இதன் காரணமாக சிலர் யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கியிருப்பார்கள். எனவே, முதியோர் இல்லத்திற்கு அவர்கள் சென்றவுடனேயே நாம் அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நாம் எப்போதும் பக்கபலமாக இருப்போம் என்பதைத் தெரிவிக்கலாம். அவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் மனநிம்மதியையும் சந்தோஷத்தையும் பெறுவதற்கு நம்மால் பெரிதும் உதவ முடியும்.—நீதி. 17:22.

வயதான சகோதரரோ சகோதரியோ ஒருவேளை நினைவாற்றல் இழந்திருக்கலாம், கேட்கும் திறன் குறைந்திருக்கலாம் அல்லது தெளிவாக பேச முடியாதளவிற்கு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால், அவர்களைச் சந்திப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். அவர்களோடு பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வது நமக்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும்சரி அவர்களைத் தொடர்ந்து சந்திப்பதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் தொடர்ந்து சக விசுவாசிகளைக் ‘கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுகிறோம்’ என்பதைக் காட்டுகிறோம். (ரோ. 12:10) வயதான சகோதரர் ஒருவருக்கு ஞாபக சக்தி குறைந்துகொண்டே வந்தால் அவருடைய கடந்த கால அனுபவங்களைச் சொல்லுமாறு கேட்கலாம். உதாரணமாக, குழந்தைப் பருவ அனுபவத்தை அல்லது சத்தியத்திற்கு வந்த அனுபவத்தைச் சொல்லுமாறு கேட்கலாம். ஒருவேளை பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் அவர் திணறினால் நாம் என்ன செய்யலாம்? அவர் சொல்வதைப் பொறுமையாக கேட்கவேண்டும்; தேவைப்பட்டால் அவர் சொல்ல நினைக்கிற இரண்டு மூன்று வார்த்தைகளை அவருக்கு நினைவுபடுத்தலாம். அல்லது இதுவரை அவர் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்லி தொடர்ந்து பேசும்படி அவரை ஊக்குவிக்கலாம். அவர் தெளிவற்ற விதமாக பேசுவதாலோ அவருடைய பேச்சு குழறுவதாலோ அதைப் புரிந்துகொள்வது நமக்கு கஷ்டமாக இருந்தால் அவருடைய குரலின் தொனியை கூர்ந்து கவனிப்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முயலலாம்.

வயதான ஒருவரால் சரியாக பேச முடியவில்லை என்றால் அவருடன் பேசுவதற்கு நாம் வேறு வழிகளைக் கையாளலாம். லாரன்ஸ் என்ற பயனியர் சகோதரி மாடலென் என்ற 80 வயது சகோதரியை தவறாமல் சந்தித்துவருகிறார். சகோதரி மாடலென் பேச்சுத் திறனை இழந்தவர். எனவே, தான் பேச்சுத்தொடர்பு கொள்ளும் விதத்தை லாரன்ஸ் விளக்குகிறார்: “நாங்கள் இருவரும் சேர்ந்து ஜெபிக்கையில் மாடலெனின் கையை நான் பிடித்துக்கொள்வேன். அச்சமயத்தில், அவர் தன்னுடைய மனதில் பொங்கும் சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவிப்பதற்காக என் கையை மெதுவாக அழுத்தி கண்களை சிமிட்டுவார்.” ஆம், நம்முடைய வயதான நண்பர்களுடைய கையைப் பிடித்துக்கொண்டால் அல்லது அவர்களை பாசத்துடன் அரவணைத்துக்கொண்டால் அது அவர்களுக்கு எவ்வளவு தெம்பூட்டுவதாக இருக்கும்!

நீங்கள் அவர்களைச் சந்திப்பது முக்கியம்

நீங்கள் வயதானவர்களை அடிக்கடி சந்தித்து வந்தால் முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு நல்ல கவனிப்பு கிடைக்கலாம். முதியோர் இல்லத்திலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளைச் சுமார் 20 வருடங்களாகச் சந்தித்துவரும் டான்யெல் சொல்வதைக் கேளுங்கள்: “வயதான ஒருவரைச் சந்திக்க அடிக்கடி ஆட்கள் வருவதை அங்குள்ள பணியாளர்கள் கவனிக்கும்போது, அவரை நன்கு கவனித்துக்கொள்வார்கள்.” முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள ராபெர் சொல்கிறார்: “வயதானவர்களை அடிக்கடிச் சந்திக்க வரும் நபர்கள் சொல்வதை முதியோர் இல்லப் பணியாளர்கள் மதிப்புக் கொடுத்துக் கேட்கலாம். ஆனால், அத்திபூத்தாற்போல் வருகிற நபருடைய கருத்துக்கு அந்தளவிற்கு முக்கியத்தும் தராமல் இருக்கலாம்.” தொட்டதற்கெல்லாம் குறை சொல்லுகிற குடும்பத்தாரையே பணியாளர்கள் பெரும்பாலும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் சொல்லிலோ செயலிலோ நன்றி தெரிவித்தால் அவர்கள் உச்சிகுளிர்ந்து போகிறார்கள். அதோடு, முதியோர் இல்லப் பணியாளர்களுடன் நாம் சுமுகமான உறவை வைத்துக் கொண்டால், அவர்களுடைய பராமரிப்பில் இருக்கிற வயதான சாட்சியின் வாழ்க்கை நெறிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்புக்கொடுக்க அவர்கள் அதிக மனமுள்ளவர்களாக இருக்கலாம்.

பணியாளர்களுக்கு கூடமாட உதவுவதன் மூலமும் அவர்களுடன் நாம் நல்லுறவை காத்துக்கொள்ள முடியும். சில இடங்களில் போதியளவு பணியாளர்கள் இல்லாதிருப்பதால், வயதானவர்களைச் சரியாக பராமரிக்கமுடியாமல் போகலாம். பணியாளர்களுக்கு தேவைப்படும் உதவிகளைப்பற்றி ரேபேக்கா என்ற நர்ஸ் சொல்வதாவது: “சாப்பாடு கொடுக்கும் நேரம்தான் பரபரப்பாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் உங்களுடைய நண்பரைச் சந்தித்து அவரைச் சாப்பிட வைப்பதுதான் சிறந்த உதவியாக இருக்கும்.” எனவே, நாம் எவ்விதத்தில் உதவலாம் என்பதை பணியாளர்களிடம் கேட்பதற்குத் தயங்கக்கூடாது.

ஒரே முதியோர் இல்லத்திற்கு நாம் அடிக்கடி சென்று வந்தால் நம்முடைய வயதான சகோதரருக்கோ சகோதரிக்கோ என்ன தேவைப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். அதற்கேற்றார்போல், இல்லத்திலுள்ளவர்களின் அனுமதியைப் பெற்று அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். உதாரணமாக, வயதானவர்களுடைய அறையில் அவர்களுக்குப் பிரியமானவரின் படத்தை அல்லது சிறு பிள்ளைகள் வரைந்த படங்களை வைப்பதன் மூலம் அந்த அறைக்கு புதுப் பொலிவூட்டலாம். அவர்களுடைய நலனை மனதில் வைத்து கதகதப்பான உடைகளை அல்லது சோப்பு, கிரீம் போன்ற உடல் பராமரிப்பு பொருட்களை வாங்கித் தரலாம். அந்த இல்லத்தில் தோட்டம் இருந்தால் சுகமாக காற்றுவாங்க அவர்களை வெளியே அழைத்துச் செல்லலாம். முன்பு குறிப்பிடப்பட்ட லாரன்ஸ் சொல்வதைக் கேளுங்கள்: “வாராவாரம் நான் வரும் சமயத்திற்காக மாடலென் ஆசை ஆசையாக காத்துக்கொண்டிருப்பார். என்னுடைய பிள்ளைகளை அழைத்துச் சென்றால் அவருடைய முகம் மகிழ்ச்சியில் மலரும், கண்கள் சந்தோஷத்தில் பளிச்சிடும்!” இதுபோன்ற உதவிகள் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.—நீதி. 3:27.

பரஸ்பர பயன்கள்

வயதானவரைத் தவறாமல் சந்திப்பது நம்முடைய ‘அன்பு உண்மையானதாக’ இருக்கிறதா என்பதைச் சோதிக்கலாம். (2 கொ. 8:8) எப்படி? நம் வயதான நண்பரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருவதைப் பார்ப்பது நமக்கு வேதனையாக இருக்கலாம். “ஆரம்பத்தில், மாடலெனின் உடல் பலவீனமடைவதைப் பார்த்துவிட்டு வரும்போதெல்லாம் துக்கம் தாங்காமல் நான் அழுவேன். ஊக்கமாக ஜெபிப்பது இதுபோன்ற பயத்தையெல்லாம் ஓரங்கட்டுவதற்கும் நாம் சந்திப்பவர்களுக்கு அதிக உற்சாகத்தை அளிக்கவும் உதவும் என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என லாரன்ஸ் கூறுகிறார். பார்கின்சன் நோயால் அவதிப்படுகிற லாரி என்ற சகோதரரை ராபெர் பல வருடங்களாக சந்தித்துவருகிறார். ராபெர் சொல்கிறார்: “லாரியுடைய வியாதி அவரை ரொம்பவே பாதித்துவிட்டது. அதனால் அவர் பேசும்போது ஒரு வார்த்தைக்கூட எனக்கு புரியாது. ஆனால், நாங்கள் சேர்ந்து ஜெபிக்கும்போது அவருக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.”

வயதான சகோதர சகோதரிகளை நாம் சந்திப்பதால் அவர்கள் மட்டுமல்ல நாமும் பயனடைவோம். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களின் மத்தியில் வாழ்ந்தாலும் யெகோவாவுடன் நெருங்கியிருக்க வேண்டுமென்பதில் அவர்கள் திடத்தீர்மானமாக இருப்பது, விசுவாசத்தை காத்துக்கொள்ளவும் தைரியமாகச் செயல்படவும் நமக்குக் கற்பிக்கிறது. பார்வையும் கேட்கும் திறனும் மங்கிப்போனாலும் ஆன்மீக உணவைப் பெற்றுக்கொள்ள அவர்கள் துடிப்பது, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்பதற்குச் சான்று பகருகிறது. (மத். 4:4) குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பு, ஒன்று சேர்ந்து சாப்பிடுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களையும் அவர்கள் ரசிக்கிறார்கள்; இதன்மூலம் நம்மிடம் உள்ளதை வைத்து திருப்தியாக இருக்கவேண்டும் என்ற பாடத்தை நமக்குக் கற்பிக்கிறார்கள். கடவுளுடன் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அவர்களுடைய ஆசை முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கு நமக்கு உதவலாம்.

உண்மையில், வயதானவர்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவிலிருந்து முழு சபையுமே நன்மை அடையும். ஏன் அப்படி? சரீரத்தில் பலவீனமாக இருக்கிறவர்கள் சகோதர பாசத்திற்காக ஏங்குகிறார்கள். இதனால், சபையில் இருக்கிறவர்கள் கரிசனையைக் காட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே, நாம் ஒவ்வொருவரும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதை ஒருவருக்கொருவர் செய்யும் சேவையின் பாகமாக கருத வேண்டும். அது ஒருவேளை நீண்ட காலம் நீடித்தாலும்கூட அவ்வாறே கருதவேண்டும். (1 பே. 4:10, 11) இந்த விஷயத்தில் மூப்பர்கள் முன்நின்று செயல்படவேண்டும். அப்படி செய்தால், முதியோர்களைக் கவனித்துக்கொள்வது கிறிஸ்தவ சேவையின் ஒரு பாகம், அதை அலட்சியம் செய்யக் கூடாது என்பதை சபையிலுள்ள மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். (எசே. 34:15, 16) மனப்பூர்வமாகவும் அன்பாகவும் ஆதரவு காட்டுவதன் மூலம் வயதான சக கிறிஸ்தவர்களை நாம் மறந்துவிடவில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறோம்!

[அடிக்குறிப்பு]

a தங்களுடைய சபையிலுள்ள ஒரு சகோதரரோ சகோதரியோ, வேறு பிராந்தியத்திலுள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்றதை சபையின் செயலர் அறிய வந்ததும் அந்தப் பகுதியுள்ள சபையின் மூப்பருக்கு அதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வது அன்பான செயலாகவும் உதவி அளிப்பதாகவும் இருக்கும்.

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

“வயதான ஒருவரைச் சந்திக்க அடிக்கடி ஆட்கள் வருவதை அங்குள்ள பணியாளர்கள் கவனிக்கும்போது, அவரை நன்கு கவனித்துக்கொள்வார்கள்”

[பக்கம் 26-ன் படம்]

வயதான கிறிஸ்தவர் மீண்டும் மன நிம்மதி பெறுவதற்கு நம்முடைய இருதயப்பூர்வமான ஜெபங்கள் உதவலாம்

[பக்கம் 26-ன் படம்]

சொல்லிலும் செயலிலும் நாம் காட்டும் கனிவான பாசத்தால் நம் வயதான சகோதர சகோதரிகள் தெம்படைவார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்