கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் ஒரு கொலையாளி
எகிப்தின் பார்வோன் ராம்சீஸ் V ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரித்தார். அவரது மரணத்திற்கானக் காரணத்தை எவரும் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்நாள் வரையாக அவரது பதப்படுத்தப்பட்ட உடல் ஒரு விசித்திரக் கொலையாளியின் மறைக்கப்படமுடியாத அச்சுகளைக் கொண்டுள்ளது. மேலும் இதே மூர்க்கன் தன் பாழாக்கும் தழும்புகளைப் பண்டைய இந்தியா, சீனா, கிரீஸ், மேலும் மற்றெல்லா தேசங்களிலும் விட்டிருக்கிறது.
இது அதிக சக்திவாய்ந்த ஒரு கொலையாளியாயிருந்ததால், வரலாற்றின் போக்கையே அது மாற்றியிருக்கிறது. ஓர் ஆதாரத்தின்படி, தாழ்வான சிந்து பள்ளத்தாக்கில் அது மகா அலெக்சாண்டரின் பெரும் படைக்குக்கூட ஒரு கடுமையான அடியைக் கொடுத்தது. மெக்ஸிக்கோவுக்கு, கண்டுபிடிப்புப் பயணி கோர்டெசுடன் அது உடன் சென்றது. அவ்விடத்து மக்கள்தொகையை பேரளவில் குறைத்தது. அந்த ஸ்பானிய வீரனுக்குப் பெரும்பாலும் ஒரு சுலபமான வெற்றியை உத்தரவாதமளித்தது. 18-ம் நூற்றாண்டு ஐரோப்பாவில், சில ஆண்டுகளில் 6,00,000 பேர் இந்தக் கொலையாளியின் பிடிகளில் மரித்தனர். அவர்கள் அனைவருமே தங்கள் பார்க்க முடியாத ஓர் எதிரியின் பலியாட்கள்—நுண்ணிய, செங்கல் வடிவுடைய வைரஸ்—பெரிய அம்மை வைரஸ்.
நவீன காலங்களிலுங்கூட, பெரிய அம்மையைப் பற்றிய குறிப்பு, பலரின் இருதயங்களுக்குள் அச்சத்தை எழுப்பியிருக்கிறது. உதாரணமாக, 1947-ல், நியூ யார்க் நகரத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டதால், அதன் குடிமக்களில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அம்மைத் தடுப்பு ஊசி போடப்பட்டனர். 1967-ல்கூட பெரிய அம்மை 20 லட்சம் உயிர்களைப் பறித்ததாய் மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏன் இந்நோய் இவ்வளவு அச்சுறுத்துவதாயிருக்கிறது? இன்னும் அது ஓர் அச்சுறுத்தலாயிருக்கிறதா?
அஞ்ச வேண்டிய ஒரு கொலையாளி
நம்மில் பெரும்பாலோருக்கு, அந்த நோயோடு நமது ஒரே அறிமுகம், ஒரு புதியவர் மீதுள்ள குறிப்பிடத்தக்கத் தழும்புகளின் தோற்றமாகும். அவரது அம்மைத் தழும்புள்ள முகம், அந்தக் கொலையாளியின் சந்திப்பிலிருந்து அவர் தப்பிப்பிழைத்திருக்கும் கதையைக் கூறுகிறது. இருந்தும், பலர் தப்பிப்பிழைக்கவில்லை, சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இரு நபர்களில் ஒருவர் வரையாக மரித்தனர்.
எனினும் பலருக்கு அதன் அருவருக்கத்தக்க நோய்க்குறிகள் அதன் கூடுதலான இறப்பு விகிதத்தைப் போன்று அச்சுறுத்துவதாயிருந்தது. பொதுவாக, அந்த வைரஸை ஒரு நபர் பெற்ற இரு வாரங்களுக்குள், உண்மையான பிரச்னைகளை விளைவிக்கத் துவங்க அது போதுமான அளவு பெருகியிருக்கும் மிகக் கடுமையான ஜுரம், தலைவலி, மற்றும் குளிர் நடுக்கங்கள் ஆரம்பித்து, முதுகுத்தண்டில் இழுப்பு மற்றும் குத்தும் வலிகள் விரைவில் தொடர்ந்தன. ஒரு சில நாட்களுக்குப் பின் முதலில் முகத்திலும், பின் கைகள், மார்பு, முதுகு மற்றும் இறுதியாகக் கால்களில் சிறிய சிவந்த புள்ளிகள் தென்படுகின்றன. இவை சீழ் நிறைந்த கொப்புளங்கள் அல்லது பருக்களாக விரைவாகப் பெரிதாகி, அவதியுறுபவருக்கு ஓர் அச்சமூட்டும் தோற்றத்தைக் கொடுக்கிறது. அதைவிட கவலைக்குரிய காரியம், உடலின் உயிர் நிலை ஊறுப்புகளின் மீதான தாக்குதல். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பால் அதன் பாதுகாப்புச் சக்திகளைப் போதுமான அளவு ஒருங்குதிரட்ட இய லாவிட்டால், இவ்வுறுப்புகளில் ஒன்று அல்லது அதற்கும் அதிகமானவை செயலிழந்து, நோயாளியின் மரணத்திற்கு வழிநடத்தும்.
அதிகமாய்த் தொற்றக்கூடியதாய் கருதப்படாவிடினும், வெளியே ஒரு கணிசமான காலப்பகுதிக்குப் பிழைத்திருக்கும் பெரிய அம்மையின் ஆற்றல், அவதியுறுபவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு அல்லது, மாசுபடுத்தப்பட்ட படுக்கை மற்றும் உடைகளைக் கையாண்டவருக்கு அது எளிதில் பரவ முடியும் என்பதை அர்த்தப்படுத்தியது. அதன் முந்தின நோயாளியின் உடைந்த கொப்புளங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட கொலைக்கார வைரஸ், தூசித்துகள் அல்லது நீரின் சிறுதுளிகள் மேல் மிதந்து சென்று இன்னொருவரின் தொண்டை அல்லது சுவாசக்குழயானினுள் எளிதாக உட்புகுந்து அதன் தொற்றும் சுழற்சியைத் திரும்பவும் ஆரம்பிக்க முடிகின்றது.
பெரிய அம்மை பரவுதலைத் தடுக்கமுடிந்த அறியப்பட்ட இரசாயனமோ மருந்தோ இருக்கவில்லை. இப்போதுங்கூட எதுவுமில்லை. மருத்துவர்களும், தாதிகளும் இயன்றவரை வெறுமென நோயாளியைச் செளகரியமாக இருக்கச் செய்ய முயல்வர். மேலும் தொற்றுநோய் பரவுகின்ற அபாயத்தைக் குறைக்க மருந்துகளைக் கொடுப்பர். குணமடைதலின் ஒரே நம்பிக்கை மனித உடலினுள்தானே வியப்புறும்வகையில் வடிவமைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அமைப்பிலிருந்து வந்தது. அங்குதான், ஈவிரக்கமற்ற இக்கொடிய கொலையாளியை அடக்கு ஆயுதம் அளிப்பதாய், நவீன மருத்துவத்தின் உன்னத கண்டுபிடிப்புகளில் ஒன்று உருவாக்கப்பட்டது.
கொலையாளியைக் கொன்றுபோட ஓர் ஆயுதம்
“எதிர்கால மக்கள் வரலாற்றின் மூலமாய் மட்டுமே வெறுக்கத்தக்க பெரிய அம்மை இருந்திருக்கிறது என அறிவார்கள்,” என ஐக்கிய மாகாணங்களின் அப்போதைய ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சன் 1806-ல் எழுதினார். பெரிய அம்மையை அகற்றிட செய்த கண்டுபிடிப்புக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் எட்வர்டு ஜென்னர் எனும் ஒரு பிரிட்டிஷ் நாட்டு வைத்தியம் மற்றும் உயிரின் ஆராய்ச்சியாளருக்குத் தான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். பின்னர் அம்மைக் குத்துதல் என அழைக்கப்பட்ட ஜென்னரின் சிகிச்சை முறை, அடிப்படையில், இந்நூற்றாண்டில் பயணிகள் பழக்கப்பட்டிருக்கும் ஒன்று.
ஜென்னரின் ஆய்வுகளுக்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஓரளவு அதே வகையான ஒரு பெரியம்மைக்கான சிகிச்சைமுறை ஏற்கெனவே உபயோகத்திலிருந்தது. எடுத்துக்காட்டாக, பெரிய அம்மையின் கடுமைகுறைந்த நோயாளிகளிலிருந்து நோய் பற்றிய பொருளைச் சேகரித்து, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் இதை ஆரோக்கியமான நபர்களுக்குள் செலுத்துவது, இந்தியாவில், வங்காளத்தில், ஷிட்டால மாதாவின் பண்டைய பூசாரிகளின் வழக்கமாயிருந்திருக்கிறது. இந்தப் பக்குவப்படாத அம்மைத் தடுப்பூசி போடுதல் சற்றே குறைந்த வன்மையுடைய இந்நோய் வகையிலிருந்து அநேகமாய் விளைவடைந்தது. ஆனால் ஒரு முறை அதைப் பெற்றுக்கொண்டவரின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்நோயைக் கீழடக்கிவிட்டபின், கூடுதலான தாக்குதல்களுக்கு அந்நபர் முழுவதுமான எதிர்ப்புச் சக்தியுடையவராக விடப்பட்டிருப்பார்.
இதனால் ஏற்படும் ஆபத்துகளின் மத்தியிலும், இச்சிகிச்சைமுறை, ஐரோப்பாவில் ஜென்னருக்கு முற்பட்டக் காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1757-ல், எட்டு வயது சிறுவனாக, ஜென்னர்தானே இவ்விடர்களை அறிந்தவராய் இருந்தபோது, அவரை வளர்த்தவர்கள், பொதுவாக இருந்த இந்த நோயிலிருந்து பாதுகாக்கக் கவலைப்பட்டு, அந்நாளில் வழக்கமான தடுப்பூசிப்போடும் கொட்டில்கள் ஒன்றுக்கு அவரைக் கூட்டிச்சென்றார்கள். அவருடைய அசைவுகளை மட்டுப்படுத்த அவர் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு, உடனிருந்த பிறரைப்போன்று, ஒரு எளிய வைக்கோலால் மூடப்பட்ட பலகையின் மேல் படுக்கவைக்கப்பட்டார். அங்கு அவர், மிகப் பழமையான வைத்திய கவனிப்பின்கீழ் தடுப்பூசியால் தூண்டப்படும் பெரிய அம்மையின் வேதனையளிக்கும் பாதிப்புகளை அனுபவித்தார்.
ஜென்னர் தப்பிப்பிழைத்தாலும், பல ஆண்டுகளுக்கு அவர் முழுவதுமாகக் குணமடையவில்லை. இவ்வனுபவந்தானே, ஒரு மேம்பட்ட நோய்த்தடுப்பு முறையைக் கண்டுபிடிக்க, பிந்திய வாழ்க்கையில் அவரது வைராக்கியத்தை ஓரளவிற்கு விளக்குகிறது. இதற்கான வாய்ப்பு இங்கிலாந்தில், சாட்பரியின் கிராமப்புற மருத்துவராக வேலை செய்ய ஆரம்பித்தபோது வந்தது. பசு வைசூரி என அறியப்பட்ட ஒரு நோயைப் பெற்ற பால்காரிகள் ஒருபோதும் பெரிய அம்மை நோயைப் பெறமாட்டார்கள் என்ற பழைய நாட்டுப்புற வழக்கின் உண்மையால் அவர் கவரப்பட்டார். 1796-ல் பல்லாண்டு ஆய்வுகளுக்குப் பின் ஜேம்ஸ் பிலிப் என்ற ஓர் இளம் சிறுவனை மிகவும் கடுமை குறைந்த பசு வைசூரி வைரஸைக் கொண்டு வேண்டுமென்றே நோய் தொற்றச் செய்து, அவரதுகண்டுபிடிப்புகளைச் சோதித்தார். வெறுமனே குறைந்த அளவு அசெளகரியத்துடன் ஜேம்ஸ் குணமடைவான், பின்பு கொடிய பெரிய அம்மைக்கு முழுநிறைவாக எதிர்ப்புசக்தியைப் பெற்றிருப்பான் என்பது அவரது கருத்து.
எல்லாருமே ஜென்னரின் நம்பிக்கையைக் கொண்டில்லை. அவர் ஒரு கொடிய புதிய கொள்ளை நோயை ஆரம்பித்து வைப்பார் அல்லது அவர் சிகிச்சை அளிக்கும் பிள்ளைகள் மந்தமாகிவிடுவார்கள் என்று அந்தக் கிராமவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் புயலையும் அவர் எதிர்த்து நின்றார். ஜேம்ஸ் எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் சுகமானபோது, அதிலும் மிகச் சிறந்த அம்சமாக அவன் பெரிய அம்மைக்கு முழுநிறைவான எதிர்ப்புச் சக்தியைப் பெற்றவனாகிவிட்ட போது, உள்ளூர் எதிர்ப்பு அடங்கிவிட்டது. 1798 வரை ஆராய்ச்சி தொடர்ந்தது, தன்னுடைய ஆராய்ச்சியின் பலன்களை ஜென்னர் உலகுக்கு வெளியிட்டார். அவருடைய கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டது. கடைசியில் அந்தக் கொலையாளியைக் கொல்லுவதற்கான ஆயுதம் கையில் கிடைத்து விட்டது.
கொல்லுவதற்காக நெருங்கிவருதல்
ஜென்னரின் பயனியர் வேலையைத் தொடர்ந்து, மற்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். தடுப்பூசிக்குரிய மருந்தை உற்பத்தி செய்தலில் நல்ல முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, இப்படியாகக் கொல்லுவதற்கான இந்தப் புதிய ஆயுதத்தின் திறனைத் தீட்டுவதற்கு முடிந்தது. முன்னேற்றம் இருந்தபோதிலும், பெரிய அம்மை வைரஸ் ஆட்களைக் கொன்றுகொண்டிருந்தது. 1966-ல் கூட, பெரிய அம்மை நோயாளிகள் 44 நாடுகளில் இருந்ததாக அறிக்கை செய்யப்பட்டது, மற்றும் வளரும் நாடுகளில் அச்சுறுத்தும் தொற்றுநோய்கள் சர்வசாதாரணமாகிவிட்டது.
அதே ஆண்டின் பிற்பகுதியில், 19-வது உலக சுகாதார மாநாட்டில், இந்தக் கொலையாளியைப் பிடித்துக் கொல்லுவதற்கு உடன்பாடான நடவடிக்கையில் தேசங்கள் கடைசியில் ஒன்றுபட தீர்மானித்தது. பெரிய அம்மை வைரஸ் மனித உடலுக்கு வெளியே இருக்கும்போது மரிக்கும் என்ற உண்மையில்தான் அதன் வெற்றி சார்ந்திருந்தது. மறுவார்த்தையில், மனிதர்தாமே அதைக் கடத்துபவர்கள். மனிதனுக்கு மனிதன் தொற்றுவது தடைசெய்யப்பட்டால், அந்த வைரஸ் இறந்துவிடும். இப்படியாக, ஒரு பத்தாண்டு பெரிய அம்மை ஒழிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்த நோய் தோன்றுவது குறித்து, இந்நோய் எந்த ஒரு நபருக்கு ஏற்படுமாயின் அதை அறிக்கை செய்ய பொது மக்களை ஊக்குவிப்பது உட்பட, இந்த வில்லன் பரவாதபடிக்கு அதைக் கட்டுப்படுத்திடுவதற்கு மொத்தமாகத் தடுப்பூசி போடும் திட்டத்தை உட்படுத்தியது.
ஓரளவு மருத்துவ வசதி இருக்கும் நாடுகளிலுங்கூட உடனடியாகவே ஊக்கமளிக்கும் பலன்கள் பெறப்பட்டன. உதாரணமாக, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் மருத்துவ உபகரணங்களும், ஆலோசகர்களும், தடுப்பூசி மருந்துகளும் கிடைக்கப்பெறும்போது, மூன்றரை வருடத்துக்குள் இந்நோயை 20 தேசங்கள் முற்றிலுமாய் ஒழிக்க முடிந்தது. ஆப்பிரிக்காவிலும் வெற்றி கிடைத்தது கண்டு, ஆசியா தனது பெரிய அம்மை ஒழிப்புக்குரிய முயற்சிகளைக் கூட்டியது. அக்டோபர் 16, 1975 போல், இயல்பாகவே ஏற்பட்ட இந்த நோய் கடைசியாக ஏற்பட்ட நபர் பங்ளாதேஷில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதானே இறுதிக்கட்டமாக இல்லை, ஏனென்றால், 1976-ல் சோமாலியாவில் சற்றே குறைந்த வன்மையுடைய இரண்டு வைரஸுகளில் ஒரு வைரஸ் இருந்ததாக சோமாலியாவில் அறிக்கை செய்யப்பட்டது. 13 மாத போராட்டம் தொடங்கியது; சுகாதார அதிகாரிகள் அந்த மூர்க்கனைத் துரத்திச் சென்று, கடைசியில் அக்டோபர் 1977-ல் முடக்கித் தடுத்து நிறுத்தினர். அது கடைசியாகத் தாக்கியவர் அலி மாவோ மாலின். அலி குணமான போது, இயல்பாகவே ஏற்படும் பெரிய அம்மை ஏற்படுவது முடிவுக்கு வந்தது. கடைசியாக, ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜென்னரின் கனவு நனவானது. மனித குலத்தின் மிகப் பயங்கரமான வாதையாகிய பெரிய அம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
அது மீண்டும் தாக்கக்கூடுமா?
1980-ல் உலகம் பெரிய அம்மையிலிருந்து விடுபட்டுவிட்டது என்று சட்டப்பூர்வமாக அறிக்கை செய்யப்பட்டது. கட்டாய தடுப்பூசி போடுதல் நின்றுவிட்டது, அந்த நோயிலிருந்து பாதுகாக்கப்படவேண்டிய அவசியமில்லாதவர்களாய் ஒரு புதிய தலைமுறையினர் வளருகின்றனர். என்றபோதிலும், இப்படியாக தடுப்பூசி போடப்படாத அந்த மக்கள்தொகையினரை அந்தக் கொலையாளி மீண்டும் தாக்கினால் என்ன ஏற்படும்? அனைத்துக் கண்டங்களையும் அது அழித்துவிடும் என்ற பயம்தானே அப்படித் திரும்பிவரக்கூடுமா என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது.
“இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன,” என்று கல்கத்தாவின் உஷ்ண மண்டல மருத்துவப் பள்ளியில் ஒரு வைரஸ் ஆய்வு மருத்துவ நிபுணர் கூறினார். ஒன்று மருத்துவக் கூடத்திலிருந்து கசிவு; மற்றொன்று மனிதனின் கெட்ட எண்ணம்.
இந்த அச்சுறுத்தல்களின் முதல் அம்சத்தின் உண்மை 1978-ல் செயல்விளக்கம் மூலமாகக் காண்பிக்கப்பட்டது. இந்த முறை இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் என்ற இடத்தில் பெரிய அம்மை மீண்டும் தோன்றியிருப்பது பற்றிய காரியம் செய்திகளின் தலையங்கமாக வெளிப்பட்டது. ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்திற்கு மேல் மாடியில் பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு நிழற்படம் பிடிப்பவருக்கு இந்த நோய் தொற்றி, அதனால் பின்னர் மரித்தார், ஆனால் தன்னுடைய வயதான தாய்க்கு அந்த நோய் தொற்றிய பின்னரே மரித்தார். நல்ல வேளையாக, பிரிட்டிஷ் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட வேகமான நடவடிக்கை மீண்டும் அந்த வைரஸைப் பிடித்து கூடுதலான ஆட்கள் அதற்குப் பலியாவதைத் தடுத்தது. அதைப் போன்ற கூடுதல் நிகழ்வுகளைத் தடை செய்வதற்காக பெரிய அம்மை இப்பொழுது மிகுந்த பாதுகாப்புக்குட்பட்ட இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, ஒன்று அ.ஜ.மாகாணங்களின் ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டா, மற்றொன்று யூனியன் சோவியத் சோஷியலிஸ்ட் ரஷ்யாவின் மாஸ்கோ.
‘ஆனால், அப்படிப்பட்ட ஆபத்துகளைத் தடைசெய்யும்வகையில் இந்தக் கொலையாளிக்கு ஏன் மரணதண்டனை வழங்கப்படவில்லை? மனிதனின் கெட்ட எண்ணமாகும். பெரிய அம்மை உயிரியல் சார்ந்த போரில் பயன்படுத்தப்படும் சாத்தியம் எப்பொழுதுமே இருக்கிறது என்பது மிகவும் பயங்கரமான செயலாகத் தோன்றலாம். மனிதன் அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்யும் திறமைபடைத்தவனாய் இருக்கிறான் என்று சரித்திரம் காண்பிக்கிறது. பதினேழாவது நூற்றாண்டின்போது வட அமெரிக்காவில் குடியேறும் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, சில குடிகள் அங்குள்ள இந்தியர் மத்தியில் அந்த நோய் பரவ வேண்டும் என்று வேண்டுமென்றே செயல்பட்டனர். நம்பிக்கைக்குரிய காரியம், நாம் அந்த நிலையைக் கடந்து முன்னேறிவிட்டோம் என்றும், அப்படிப்பட்ட ‘பெரிய அம்மைப் போர்’ ஏற்படும் வாய்ப்பு அரிது என்றும் அநேகர் உணருகின்றனர். இது அப்படி இருக்கவேண்டும் என்று நாம் நம்பியிருக்கத்தான் முடியும். பெரிய அம்மை உண்மையிலேயே ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், ஏதோ அறிப்படாத காரணத்துக்காக அது மீண்டும் தோன்றாது என்றும் நம்பியிருக்கத்தான் முடியும்.
டாக்டர் ஜென்னரின் கண்டுபிடிப்பின் காரணத்தால், சரித்திரத்தில் முதல் முறையாக, மனிதன் மரணத்துக்கேதுவான பயங்கரமான வைரஸ் எதிரிகளில் ஒன்றை நீக்கிப்போடுவதில் வெற்றிகண்டிருக்கிறான். மருத்துவ விஞ்ஞானம், ஜென்னரிடம் இருந்ததைவிட அதிக நுட்பமான உபகரணங்களையும் தெளிந்த அறிவையும் கொண்டிருப்பதால், தொத்தும் தன்மைவாய்ந்த மற்ற நோய்களை வெற்றிகொள்ள கடுமையாக முயலுகிறது. அது வெற்றிகொள்ளுமா? பிரமாண்டமான முன்னேற்ற படிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மொத்த அளவில் இலக்கை எட்டுவது சாத்தியமற்றதாகத் தென்படுகிறது என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர். “வியாதிபட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்”லாதிருக்கும் ஓர் உலகை நிலைநாட்டுவதற்கு மனிதனிலும் மேம்பட்ட ஞானம் அவசியம் என்பது தெளிவாகத் தெரிகிறது.—ஏசாயா 33:24. (g91 3/22)
[பக்கம் 12-ன் படங்கள்]
பெரிய அம்மைக்குத் தடுப்பு அம்மை ஊசி போடுதல் டாக்டர் எட்வர்டு ஜென்னரின் பணியுடன் ஆரம்பித்தது.