மனிதனும் மிருகமும் சமாதானத்துடன் வாழ முடியுமா?
“பரதீஸின் வாசற்படியில் நான் இருந்ததுபோல் உணர்ந்தேன்; மனிதனும் மிருகமும் நம்பிக்கைக்கொண்ட ஒத்திசைவில்.” இவ்வாறு ஜாய் ஆடம்சன் கெனியாவின் யூரா நதியோரத்தில் பல்வேறு வகைப்பட்ட பறவைகளும் மிருகங்களும் தண்ணீர் குடிக்க வருவதைத் தான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கையில் கண்ட ஒரு காட்சியை விவரித்தாள். அந்தக் காட்சியின் கவர்ச்சியூட்டின பாகம் அவளுக்குப் பக்கத்தில் சமாதானமாய் உட்கார்ந்திருந்த அந்த மிருகம்—முழு வளர்ச்சியடைந்திருந்த ஒரு பெண் சிங்கமாகும்!
ஜாய் ஆடம்சன் எழுதின சுயாதீனப் பிறப்பு என்ற புத்தகத்தின்மூலம் லட்சக்கணக்கானார் அறியவந்த, அந்தக் குறிப்பிட்ட பெண் சிங்கமான, எல்ஸாவைக் குறித்ததில் ஏதாவது பொதுநிலைமீறியதாயிருந்ததா? இல்லை, அது ஒரு சாதாரண பெண் சிங்கமே. வேறுபாடு யாதெனில், மனிதரோடு சமாதானமாய் வாழ அது கற்றிருந்ததேயாகும்.
பின்னால் சுயாதீனப் பிறப்பு என்ற திரைப்படம் உண்டாக்கப்பட்டபோது, எல்ஸாவை விளக்கமாக வருணிப்பதற்கு பழக்கி இணக்குவிக்கப்பட்ட பல பெண் சிங்கங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று மாரா என அழைக்கப்பட்டது. முதன்முதலில் அது சந்தேகப் பான்மையுடன் இருந்தது, பின்பு அது, தன் புதிய மனித நண்பர்களைத் தன் பார்வைக்கு மறைவாய்ச் செல்லவிடாமல், மிகுந்த பற்றுதலுடன் இருந்தது. அதை அமர்த்தி அமைதிப்படுத்த, ஜாயின் கணவர் ஜார்ஜ் ஆடம்சன், தன் கூடாரத்தை மாராவின் அடைப்புக்கு எதிராக மாற்றி அமைத்தார். முடிவில், தன் கூடாரத்தை நேரே அடைப்புக்குள்தானே மாற்றிக்கொண்டார்! “அடுத்த மூன்று மாதங்கள், அது தவறாமல் உள்ளே [என் கூடாரத்துக்குள்] தூங்கினது, பொதுவாய் தரையில் என் படுக்கைக்கு அருகிலும் சிலசமயங்களில் அதன்மீதும் நீண்டு படுத்துக்கொண்டு தூங்கினது. . . . என் சொந்த பாதுகாப்பைக் குறித்தக் கவலைக்கு அது ஒருபோதும் காரணத்தை அளிக்கவில்லை,” என்று அவர் பவானா விளையாட்டு, என்ற தன் புத்தகத்தில் எழுதினார்.
“எங்களுடைய மிக விருப்பமான விளையாட்டுகளில் ஒன்று, வளர்ந்த புற்களுக்குப் பின்னால் நான் மறைந்து தரையில் மட்டமாய்ப் படுத்துக் கிடப்பதாகும். மாரா மிகக் கவனத்துடன் மெதுவாய்ச் சிங்கம் பதுங்கிவரும் முறையில் வயிற்றில் நகர்ந்து வந்து பின்பு கடைசி மின்விசைப் பாய்ச்சலில் என்மீது வந்து விழும். அதன் பயங்கர நகங்களை அது எப்பொழுதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது எனக்கு ஒருபோதும் தீங்குண்டாக்கவில்லை,” என திரு. ஆடம்சன் எழுதினார்.
எல்ஸாவின் பாகத்தை நடித்த மற்றொரு பெண் சிங்கம் கெர்ள் எனப் பெயரிடப்பட்டது. அந்தப் படக்காட்சி எடுத்து முடித்தப் பின்பு, கெர்ள் காட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டது, அங்கே அது கருத்தரித்து இரண்டு குட்டிகளைப் பிறப்பித்தது. ஆடம்சனின் நண்பர்கள் இருவர் அந்தச் சிங்கக் குகையைக் கண்டுபிடித்தனர். ஆடம்சன் பின்வருமாறு எழுதினார்: “அந்தப் பிறப்புக்குரிய இடத்துக்கு ஏறக்குறைய ஒரு மீட்டர் தூரத்துக்குள் அணுக, பேரளவு அபாயத்தைத் துணிந்து மேற்கொண்ட அந்த இரண்டு மனிதர்களை, கெர்ள், மிக அதிகத் தனிச் சிறப்பான நம்பிக்கையுடனும் நல்ல சுபாவத்துடனும் அனுமதித்தது . . . [அந்த மனிதரில் ஒருவர்] பெரும்பாலும் அதற்கு அநநியராயிருந்தபோதிலும் கெர்ள் நடந்துகொண்ட முறை மிக அதிகம் கவனிக்கத்தக்கது.” ஆடம்சனைக் குறித்ததில், கெர்ள் தன் குட்டிகளை அவர் தொடவுங்கூட அனுமதித்தது, அதேசமயத்தில் மற்ற சிங்கங்களை வரவிடாமற் துரத்தினது.
மூர்க்கமான சிங்கத்தைப் பழக்கி இணக்குவித்தல்
சிங்கத்துக்குச் சிங்கம் பண்பியல்புகள் வேறுபடுகின்றன. ஜாய் ஆடம்சன் எல்ஸாவை பயிற்றுவித்து வளர்க்கையில், தெற்கே தொலைவில் (இப்பொழுது ஸாம்பியாவான) வட ரோடீஷியாவில், நார்மன் கார் என்ற ஒரு வேட்டைக்காட்டுக் காவலர், அவ்வாறே இரண்டு ஆண் குட்டிகளைப் பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அந்தக் குட்டிகளில் ஒன்றான பெரிய பையன் என்பது மிகவும் சிநேகப் பான்மையுடன் இருந்தது. மற்றொன்றான, சிறிய பையன் என்பது, சிடுசிடுப்பான போக்குடையதாக இருந்தது. பின்குறிப்பிடப்பட்டதைக் குறித்து, கார் காட்டுக்குத் திரும்புதல் என்ற தன் புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார்:
“சிறிய பையன் இத்தகைய மனப்பான்மை ஒன்றில் இருக்கையில், அது என்னை நோக்கி உறுமுகையில், நான் அதன் அருகில், அதன் காலடிகள் எட்டாதளவு தூரத்தில் உட்காருகிறேன், இரண்டு அங்குல நீள சவரக்கத்தி போன்ற நகங்கள் வெளியில் நீண்டிருக்க அவற்றை மூர்க்கத்துடன் கொக்கிப்போன்ற தாக்கலில் அது பயன்படுத்தக்கூடியது. அதனிடம் சாந்தப்படுத்தும் வகையில் பேசி ஒவ்வொரு அங்குலமாக மெதுவாய் நெருங்குவதால் அதை நட்புக்குள்ளாக்க நான் முயற்சி செய்கிறேன்; கடைசியில் நான் அதைத் தொடுகையில் அது இன்னும் உறுமுகிறது ஆனால் குறைந்த உறுதியான முறையில். அதன் மயிரடர்ந்த தோள்களைச் சுற்றி என் புயத்தை நான் போட்டு அதன் மார்பைத் தடவிகொடுக்கையில், அது விறைப்பாக்கப்பட்ட தன் எல்லா தசைகளும் சுருங்கித் தளர்ந்ததுபோல் காணக்கூடிய முறையில் தணிந்து அமரும். . . . தன்னை அன்பாகத் தடவிகொடுக்கும்படி என்னை அழைத்து, அது தன் தலையை என் மடியில் வைக்கிறது.”
காரின் புத்தகத்துக்கு எழுதின முன்னுரையில், அந்நாட்டின் தேசாதிபதியாயிருந்த டல்ஹெளஸியின் கோமன், அந்தச் சிங்கங்கள் இரண்டுக்கு மேற்பட்ட வயதானவையாக இருந்து காரின் முகாமுக்கு அருகிலிருந்த சமவெளியில் காவலில்லாமல் சுற்றித்திரிந்துகொண்டிருந்தபோது தான் கண்ணால் கண்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். கார் விசிலடித்தார், அதற்குப் பதிலைக் கோமன் பின்வருமாறு விவரித்தார்: “அவை தங்கள் எஜமானின் விசிலைக்கேட்டு துள்ளிப் பாய்ந்து வந்து தங்கள் பலத்தத் தலைகளை அவர்மீது தேய்த்தன, அதேசமயத்தில் தங்கள் சந்தோஷ ஆனால் பயங்கரமூட்டும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவிப்பை முழங்கின. நிச்சயமாகவே அவர்மீதிருந்த அவற்றின் பாசம் குறைந்துவிடவில்லை.”
சிங்கங்கள் மனிதனைக் குறித்த இயற்கையான பயமுடையவை. பொதுவாய் அவனைத் தவிர்க்கவே நாடுகின்றன. சிங்கங்களிலும் மற்ற மிருகங்களிலும் காணப்படுகிற இந்த இயல்புணர்ச்சி போக்கு பைபிளில் திருத்தமாய் விவரிக்கப்பட்டுள்ளது. (ஆதியாகமம் 9:2) இது இல்லையெனில், மனிதன் மிக அதிக எளிதில் தாக்கப்படும் இரையாயிருப்பான். எனினும் சில மிருகங்கள் மனிதரை உண்பவையாகின்றன.
“விதிவிலக்குகள்”
இந்தப் பொருளின்பேரில் நிபுணரான, ரோஜர் காரஸ், பின்வருமாறு விளக்குகிறார்: “பெரும் பூனைகளின் ஏறக்குறைய எல்லா இனவகைகளுக்குள்ளும் மனிதனை உணவாகத் தேடும் இயல்புமீறிய தனி மிருகங்கள் காணப்படுவதாகத் தோன்றுகிறது. அவை விதிவிலக்குகளாயுள்ளன . . . மனிதன் பொதுவாய்ப் [பெரும் பூனைகளுடன்] பேரளவில் சமாதானமாய் வாழ முடியும்.”
மனிதன் ஓர் ஊர்தியில் மறைந்து உட்கார்ந்திருக்கையில் மிருகங்கள் பல அவனைத் தெரிந்துகொள்கிறதில்லையெனத் தோன்றுகிறது. இம்முறையில் மனிதர்கள் மிக அருகிலிருந்து சிங்கங்களின் நிழற்படத்தை எடுக்க முடிந்துள்ளது. தென் ஆப்பிரிக்க மேபெர்லீயின் பாலூட்டும் மிருகங்கள் என்ற புத்தகம் எச்சரிப்பதாவது, “ஆனால், நீங்கள் கதவைத் திறந்தால், அல்லது சிங்கத்துக்கு அருகில் வெளியில் இறங்க முயற்சி செய்தால், மிகுந்த ஆபத்து வரவழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை மனிதன் அங்கிருப்பதைக் கண்டுணர்ந்துகொள்கின்றன, மேலும் அந்தத் திடீர்த் தோற்றம் திடீர்க்கிலி அதிர்ச்சியோடு கூட்டுகிறது இது தற்காப்பு செய்யும் முறையில் திடீர்த்தாக்குதலை வெகு எளிதில் தூண்டிவிடலாம். . . . ஒரு மோட்டார் காரிலிருந்து வெளிவந்து திடீரென ஒரு சிங்கத்தின் முன் தோன்றுவதைப் பார்க்கிலும் ஒரு புதரில் ஒரு சிங்கத்தை நேருக்குநேர் எதிர்ப்படுவதில் குறைந்த ஆபத்துள்ளது!”
சிறுத்தைப்புலிகளைப் பற்றியதென்ன?
மனிதரைத் தின்பவையாகும் சிறுத்தைப்புலிகளும் விதிவிலக்கானவை. சிறுத்தைப்புலியின் கதை என்ற தன் புத்தகத்தில் ஜோனத்தான் ஸ்காட் விளக்குவதாவது: “தொந்தரவுப்படுத்தப்படாமல் மற்றும் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கையில், சிறுத்தைப்புலி தானாக விலகிச்சென்று ஒதுங்கும் இயல்புடைய சிருஷ்டியாக மனிதனுக்கு இயல்பாய் பயப்படும் குறியைக் காட்டுகின்றன. எதிர்ப்பட்டால் அது பொதுவாய் மிக அருகில் கிடைக்கக்கூடிய மறைவிடத்துக்கு ஓடிப்போகும்.”
கெனியாவின் மாசாய் மாரா வேட்டைக்காட்டு ஒதுக்கிடத்தில் ஸ்காட், சூய் என்று பெயரிடப்பட்ட ஒரு பெண் சிறுத்தைப்புலியின் இயக்கங்களை ஆராய்வதில் பல மாதங்கள் செலவிட்டார். சூய் படிப்படியாய் ஸ்காட்டின் மோட்டார் ஊர்தியின் இருப்புக்குப் பழக்கமாகிவிட்டது, மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் குட்டிகளான, இருள் மற்றும் ஒளி எனப் பெயரிடப்பட்டவை, நேரே வந்து அவருடைய காரை ஆராய்ந்து பார்த்தன. சிறுத்தைப்புலியின் பாசமற்ற வெளிப்புறத்துக்குப் பின்னால் இயல்பாய்க் கூடிய பாச இயல்பு மறைந்துகிடக்கிறதென ஸ்காட் நம்புகிறார்.
மற்றவர்கள் சிறுத்தைப்புலியின் பாச இயல்பை அனுபவித்துள்ளனர். உதாரணமாக ஜாய் ஆடம்சன் பெற்றோரை இழந்த ஒரு சிறுத்தைப்புலிக் குட்டியை வளர்த்தாள் அதைப் பென்னி என அழைத்தாள். அதைக் காட்டுக்குத் திரும்பக் கொண்டுசென்று விட்டபின், பென்னி கருத்தரித்து ஒரு குட்டியைப் பிறப்பித்தது. தன் மனித நண்பர்கள் அந்தச் சுற்றுப்புறத்தில் இருந்தபோது, பென்னி தன்னை வெளிப்படுத்தி தன் புதிதாகப் பிறந்த குட்டிகளை வந்து பார்க்கும்படி அவர்களைத் துரிதப்படுத்தியது. அந்தக் கெபியில், அந்தப் பெருமையான தாய்க்கு அருகில் உட்கார்ந்துகொண்டிருந்த அந்த இன்பமான காட்சியை ஆடம்சன் பின்வருமாறு விவரித்தாள்: “அதன் முன்னங் கால்களுக்கிடையில் அந்தக் குட்டிகள் அரவணைப்பில் கிடக்கையில் அது எங்கள் கைகளை நக்கிக் கொண்டிருந்தது, எல்லாம் அவ்வளவு கம்பீர சந்தோஷமாயிருந்தது. ஆப்பிரிக்க மிருகங்கள் எல்லாவற்றிலும் சிறுத்தைப்புலிகளே மிக அதிக ஆபத்தானவை என்பது பொதுக் கருத்தாகும். மேலும் குட்டிகளையுடைய பெண்சிறுத்தைப்புலிகள் முக்கியமாய் மூர்க்கமானவை.” ஆனால் “ஏற்கப்பட்ட கருத்துக்களில் பெரும்பான்மையானவை தவறான விவாதம்,” என்று பென்னியுடன் தனக்கிருந்த அனுபவம் நிரூபிக்கலாமென ஆடம்சன் கூறினாள்.
ஹாரியட் என்று பெயரிடப்பட்ட மற்றொரு “நல்ல சுபாவமுள்ள” பெண்சிறுத்தைப்புலி, வட இந்தியாவைச் சேர்ந்த அர்ஜன் சிங் என்பவருக்கு அதைப்பார்க்கிலும் மிகத் தனிச் சிறப்புக்குரிய அனுபவத்தை அளித்தது. சிங் ஹாரியட்டைச் சிறு குட்டியிலிருந்து வளர்த்து அது அவருடைய பண்ணைக்கு அடுத்துள்ள காட்டில் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கேதுவாக அதைப் பயிற்றுவித்தார். பயிற்றுவிப்பின் பாகமாக, எதிர்த்துத் தாக்கும்படி அவர் அதைச் சில சமயங்களில் ஊக்குவிப்பார். “நான் கால்களை மடக்கி குனிந்து அதைத் தாக்கும்படி தூண்டுகையில், அது நேரே என் தலைமீது மோதும் முறையில் பாய்ந்தது. . . . ஆனால் என்மீது குதித்தபோது என் தலைக்குமேலே தாண்டிசென்று என் முதுகின்மீது சரிந்து விழுந்து, மூடப்பட்டிராத என் வெறும் தோள்களின்மீது ஒரு கீறலுங்கூட உண்டாக்காமல் சென்றது,” என்று அவர் பூனைகளின் இளவரசன் என்ற தன் புத்தகத்தில் விளக்குகிறார்.
சிங் உடைய நாயான ஈலியுடன் இந்தச் சிறுத்தைப்புலி விளையாடின முறையும் தனிக் கவனிப்புக்குரியது. “[இந்தச் சிறுத்தைப்புலி] நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு அந்த நாய் தன்னைத் தாக்குகையில் குத்துச்சண்டை போடுவதாக நிழற்படக்காட்சி காட்டுகிறது—ஆனால் தாக்கும் அதை குத்திக் கீழே தள்ள அது எந்த முயற்சியும் செய்கிறதில்லை. அதன் பெரிய பாதங்கள் ஈலியின் கழுத்தின் ஒரு புறத்திலிருந்து மேலெழும்பி, தலைமீது சென்று மறுபுறத்தில் கீழே தூசி துடைக்கும் துணிகளைப்போல் மென்மையாக இறங்குகின்றன,” என்று சிங் குறிப்பிடுகிறார்.
மனிதன், நாய், மற்றும் சிறுத்தைப்புலிக்கு இடையிலிருந்த இந்த நட்பியல்பான உறவு, ஹாரியட் அருகிலிருந்த காட்டில் வாழ்க்கையை மேற்கொண்டு நடத்த வீட்டைவிட்டுச் சென்ற பின்னும் தொடர்ந்திருந்தது. “சிறுத்தைப்புலிகளை நம்பக்கூடாதென எவராவது சொன்னால், ஹாரியட் [என் பண்ணைக்கு] நள்ளிரவில் வந்து, நான் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருக்கையில் என்னுடன் வரவேற்பு மகிழ்ச்சி தெரிவிப்புகளைப் பரிமாற்றம் செய்துகொள்ள மெதுவாய் என்னை எழுப்பின பல சமயங்களைத்தானே நான் சிந்திக்க வேண்டியுள்ளது,” என்று சிங் முடிக்கிறார்.
முடிவில், ஹாரியட் கருத்தரித்து இரண்டு குட்டிகளைப் பிறப்பித்தது. வெள்ளப்பெருக்கால் அதன் கெபி மூழ்கும் பயமுண்டானபோது, இந்தச் சிறுத்தைப்புலி தன் குட்டிகளை ஒவ்வொன்றாய்த் தன் வாயில் கெளவி சிங் உடைய வீட்டின் பாதுகாப்புக்குக் கொண்டுவந்து சேர்த்தது. வெள்ளப்பெருக்கு வற்றினபோது ஹாரியட் சிங் உடைய படகில் ஏறிக்கொண்டு, அது தன் குட்டிகளை, ஒரு சமயத்துக்கு ஒன்றாக ஒவ்வொன்றாய்ப் புதிய காட்டுக் கெபிக்கு எடுத்துச் செல்கையில் தன்னை நதியின் குறுக்கே மேலும் கீழும் திரும்பத்திரும்ப படகில் ஓட்டிச் செல்லும்படி அவரைத் தூண்டுவித்தது.
ஆப்பிரிக்க யானை
ஆப்பிரிக்க யானையை வீட்டுமிருகமாகப் பழக்குவிப்பதற்கு அது மட்டுக்குமீறி மூர்க்கமுள்ளதென சொல்லப்பட்டுள்ளது. எனினும், பல ஆட்கள் இந்தக் காரியங்களை மாறுபட்டவையாக நிரூபித்துள்ளனர். ஓர் உதாரணம் மூன்று ஆப்பிரிக்க யானைகளுக்கும் ரான்டல் மூர் என்ற பெயருடைய ஓர் அமெரிக்கருக்கும் இடையில் உண்டான உள்ளங்கனிவிக்கும் உறவாகும். இந்த யானைகள் தென் ஆப்பிரிக்காவின் குரூகர் நாஷனல் பார்க்கில் பிடிக்கப்பட்டு ஐக்கிய மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகுதி யானைக் குட்டிகளின் பாகமாகும். காலப்போக்கில் அவை ஒரு விளையாட்டுக் காட்சிக் கொட்டகை நடிப்புக்காகப் பயிற்றுவிக்கப்பட்டு நன்றாய்ச் செய்து காட்டின. அவற்றின் சொந்தக்காரன் மரித்தபோது, மூரிடம் அந்த மூன்றையும் கொடுத்து அவற்றை ஆப்பிரிக்காவுக்குத் திரும்ப அனுப்பினர்.
ஓவாலா மற்றும் துர்காவென பெயரிடப்பட்ட இரண்டு பெண் யானைகள், போஃபுத்தாட்ஸ்வானாவின் பிலேன்ஸ்பர்க் காட்டு ஒதுக்கீட்டுக்கு 1982-ல் அனுப்பப்பட்டன. அச்சமயத்தில் அந்தப் பார்க்கில் பெற்றோரில்லாத யானைக்குட்டிகள் பல இருந்தன அவை மோசமான நிலையில் இருந்தன முதிர்ந்த பெண் யானைகளின் மேற்பார்வை அவற்றிற்குத் தேவைப்பட்டது. விளையாட்டுக் காட்சிக்காகப் பயிற்றுவிக்கப்பட்ட ஓவாலாவும் துர்காவும் இந்தப் பாகத்தை ஏற்க முடியுமா?
ஓர் ஆண்டுக்குப் பின், தன் யானைகள் பெற்றோரிழந்த அந்த எல்லா 14 குட்டிகளையும் தங்களுடையவையாக ஏற்றிருக்கின்றன மேலும் இன்னுமதிக அனாதைக் குட்டிகள் அந்தப் பார்க்குக்கு கொண்டுவரப்படவிருக்கின்றன என்ற செய்திகள் மூருக்குக் கிடைத்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பின், மூர் தானே நேரில் காணும்படி திரும்பி சென்றார். பிலேன்ஸ்பர்க் மலைகளில் நீண்டகாலம் தேடித்திரிவதை எதிர்பார்த்த அவர், தான் வந்து சேர்ந்தவுடனே, ஓவாலாவையும் துர்காவையும் ஒரு பெரிய மந்தைக்குள் காண்பதில் வியப்படைந்தார். “பணித்துறைக்கு முரணிய என் முதல் உள்ளத்தூண்டுதல், அவற்றினிடம் ஓடி, கட்டியணைத்துக்கொண்டு புகழ்ச் சொற்களால் நிரப்ப வேண்டுமென்பதாகும். அந்த அவாத் தூண்டுதலை நான் தடுத்து அதற்குப் பதில் மேலும் அறிவாராய்ச்சிமுறை சார்ந்த அணுகுதலை மேற்கொண்டேன்,” என்று ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிச் சென்றது, என்ற தன் புத்தகத்தில் அவர் எழுதினார்.
முதலாவது, ஓவாலாவும் துர்காவும் தங்கள் பழைய நண்பர் வந்திருப்பதைப் பற்றி நிச்சயமாயிருக்க வேண்டும். அவை அவர் நீட்டின கையைத் தங்கள் தும்பிக்கைகளைக்கொண்டு சோதித்துப் பார்த்தன. “ஓவாலா, அடுத்தக் கட்டளைக்குக் காத்திருப்பதுபோல் எனக்கு மேலாக எழும்பினது. மீதியான மந்தை விறைத்துப்போன தோற்ற நிலையில் என்னைச் சுற்றிக்கொண்டன. நான் இணங்கினேன். ‘ஓவாலா . . . தும்பிக்கை மேலே மற்றும் பாதம்!’ உடனடியாக ஓவாலா அந்த வெகு கால காட்சிவிளையாட்டு நாட்களில் செய்ததுபோல் தன் முன் பாதத்தை உயர ஆகாயத்தில் தூக்கி தன் தும்பிக்கையைப் பண்டைய வணக்கந்தெரிவிப்பு நிலையில் வானத்துக்கு நேராக உயர்த்தி வளைத்தது. யானைகள் ஒருபோதும் மறப்பதில்லையென முதல் சொன்னவர் யார்?” என்று மூர் எழுதுகிறார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின், அக்டோபர் 1989-ல், ஓவாலாவின் நினைவாற்றலுக்கு மற்றொரு சோதனை கொடுக்கப்பட்டது. இந்தச் சமயம் மூர் ஏழு ஆண்டுகளுக்குமுன் அந்த யானைகளை அந்தக் காட்டுக்கு அனுப்பினதுமுதற்கொண்டு தான் செய்திராத ஒன்றை முயற்சி செய்துபார்க்கும்படி தீர்மானித்தார். கீழே நீண்டு படுக்கும்படியான அவருடைய கட்டளைக்கு ஓவாலா கீழ்ப்படிந்து அவர் அதன் முதுகில் ஏறுவதற்கு அனுமதித்தது. தென் ஆப்பிரிக்காவில் தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர் காட்டு யானைகள் 30-க்கு மேற்பட்டவற்றிற்கு மத்தியில் சவாரி செய்ததைக் கண்டு வியந்து சிலிர்ப்புற்றனர். “இதை நான் பிரசித்திப்பெறும் செயலுக்காகச் செய்யவில்லை, ஆனால் ஒரு யானையில் கூடியதாயுள்ள அன்பிணைப்பையும் அறிவுத்திறமையையும் அறிய ஆர்வங்கொண்டதனால் செய்தேன்,” என்று மூர் விழித்தெழு! பிரசுரத்தாரிடம் பேட்டியில் விளக்கினார். பிலேன்ஸ்பர்க் அனாதைக் குட்டிகள் ஓவாலா மற்றும் துர்காவின் அறிவுத்திறமையுள்ள கவனிப்பின்கீழ் செழித்து வளர்ந்தன.
மனிதனுக்கும் மூர்க்க மிருகத்துக்கும் இடையில் நட்புறவின் சந்தர்ப்பங்கள் இன்று நடைமுறை ஒழுங்கல்லவென்பது உண்மையே; அவற்றிற்குக் கவனமான பண்பாட்டு முயற்சி தேவை. பொதுநிலையிலுள்ள ஒருவர் காட்டுக்குள் துணிந்துசென்று சிங்கங்களை, சிறுத்தைப்புலிகளை, மற்றும் யானைகளை அணுக முயற்சி செய்வது நிச்சயமாகவே மடத்தனமாயிருக்கும். ஆனால் மூர்க்க மிருகங்களுக்கும் மனிதருக்கும் இடையில் அத்தகைய நட்புறவு இன்று பெரும்பாலும் அரிதாயினும், எதிர்காலத்தைப் பற்றியதென்ன? இதுவே வழக்கமுறையாயிருக்குமா? (g91 4/8)
[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]
சிங்கங்களை வீட்டுச்சூழ்நிலைக்குப் பழக்குவிக்க முடியும்!
““வாருங்கள் என் சிங்கங்களோடு என்னைச் சில நிழற்படங்கள் எடுங்கள்,” என தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஹார்ட்பீஸ்பூர்டம் பாம்பு மற்றும் மிருக பூங்காமனையின் கண்காணிப்பாளர், ஜாக் சீல் கூறினார். நடுக்கத்துடன், நான் சிங்கங்களின் அடைப்பிடத்துக்கு அவரைப் பின்தொடர்ந்து சென்றேன், அந்தப் பாதுகாப்பான வேலியடைப்புக்கு வெளியிலிருந்து படமெடுக்க அவர் என்னை அனுமதிப்பாரென்று எதிர்பார்த்தேன்.
அந்த அடைப்பு சுத்தமாயிருந்தது, சுற்றிலுமிருந்த மரங்களிலிருந்து மிகுதியான நிழல் இருந்தது. அவர் ஓர் உதவியாளருடன் அந்த அடைப்புக்குள் கால்வைத்தபோது நல்ல ஆரோக்கியமான ஒன்பது சிங்கங்கள் தங்களைப் பயிற்றுவிப்பவரை விரைவில் அடையாளங்கண்டுகொண்டன. அந்தச் சிங்கங்கள் நட்புமுறையில் உறுமிக்கொண்டு உணர்ச்சியார்வத்துடன் அங்குமிங்கும் நடந்தன.
“உள்ளே வாருங்கள்,” என்றார் ஜாக். கேட்காததுபோல் நான் பாசாங்குசெய்தேன். “உள்ளே வாருங்கள்,” என அவர் திரும்பவும் சத்தமாய்க் கூறினார். சிங்கங்களிலிருந்து தங்களைத் தற்காப்பு செய்துகொள்ள அவர்களிடம் இருந்ததெல்லாம் தடிகளே! என் கோழத்தனத்தை எதிர்த்துப் போரடுகையில் என் இருதயம் விரைவாய்த் துடித்தது, கடைசியில் ஏறி உள்ளே சென்றேன். ஜாக் சிறப்புவாய்ந்த தன் சிங்கங்கள் சிலவற்றைத் தடவிகொடுத்துக்கொண்டிருக்கையில் நான் விரைவில் நிழற்படக் கருவியில் படமெடுக்கத் தொடங்கினேன். நாங்களெல்லாரும் பத்திரமாய் வெளியில் இருந்தபோது ஆ, நான் எத்தகைய சாந்தியை உணர்ந்தேன்! ஆனால் நான் பயந்திருக்க வேண்டியதில்லை.
“நாங்கள் தடிகளுடன் உள்ளே போவதன் காரணம் என்னவெனில், அந்தச் சிங்கங்கள் பாசமுள்ளவை அன்பு கடிப்புகளைக் கொடுக்கின்றன. எங்கள் புயங்களுக்குப் பதிலாகத் தடிகளை மெல்லும்படி நாங்கள் அவற்றை நீட்டுகிறோம்,” என்று ஜாக் பின்னால் விளக்கினார். ஜாக்கும் அவருடைய பெருமைக்குரியவையும் அப்போதுதான் நமிபியாவிலுள்ள எட்டோஷா நாஷனல் பார்க்கிலிருந்து திரும்பிவந்திருந்தன. அவர் ஏன் அவற்றை காட்டுக்குள் அவ்வளவு தொலைதூரத்துக்குள் கொண்டு சென்றிருந்தார்? அவர் விளக்கினதாவது:
“நமிபியாவிலுள்ள காட்டில் சிங்கங்களின் எண்ணிக்கையின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி-விஞ்ஞானிகள் செய்பவற்றைப்பற்றிய மெய்ந்நிகழ்ச்சிகளை விளக்கும் திரைப்படமெடுக்க அவை பயன்படுத்தப்பட்டன. ஆனால் என் சிங்கங்கள் அதைப் பார்க்கிலும் இங்கே பழக்கப்பட்டு வளர்ந்துள்ள வாழ்க்கையையே விரும்புகின்றன. நமிபியாவில், அவை என் ஊர்தியைக் கண்டவுடனே, அதனிடம் வந்தன. அவற்றை வீட்டுக்கு வரச்செய்வதில் எவ்வகை கடினமும் இருக்கவில்லை.”—அளிக்கப்பட்டது.
[படத்திற்கான நன்றி]
Courtesy Hartebeespoortdam Snake and Animal Park
[பக்கம் 9-ன் படம்]
ரான்டல் மூர், ஆப்பிரிக்கக் காட்டில் தன் யானைகளுடன்