எதிர்காலத்தைப் பற்றியதென்ன?
மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையில் சமாதானம் ஏன் அவ்வளவு கவர்ச்சியூட்டுவதாயுள்ளது? ஏனெனில் மனிதர் மிருகங்களுடன், மூர்க்கமானவையென வகைப்படுத்தப்பட்டுள்ளவற்றுடனுங்கூட சமாதானமாக இருக்கும்படி தொடக்கத்தில் படைக்கப்பட்டனர்.
கடவுள் முதல் ஆணையும் பெண்ணையும் உண்டாக்கினபோது, அவர்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழும்படி அவர்களைப் பூமியின் ஒரு பரதீஸானப் பகுதியில் வைத்தார். அவர்கள் பிள்ளைகளைப் பிறப்பித்து அந்த முதல் பரதீஸ் முழு பூமியையும் சூழ்ந்ததாகும் வரையில் அதன் எல்லைகளை விரிவாக்க வேண்டுமென்பது அவர்களுக்கான அவருடைய நோக்கமாயிருந்தது. அந்த முழு நிலப்பகுதியிலும் மனிதவர்க்கம் மிருகங்களைச் சமாதானமாய்க் கீழடங்கியிருக்கும்படி கொண்டிருக்க வேண்டும்.
ஆதியாகம விவரப் பதிவு பின்வருமாறு கூறுகிறது: “அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். . . . அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”—ஆதியாகமம் 1:26-31; 2:9.
இவ்வாறு மிருகங்களை ஆளுவது கொடுமையினால் செய்யப்படக்கூடாது. மனிதரும் மிருகங்களும் ஒன்றாய்ச் சமாதானத்துடன் வாழும்படி கருதப்பட்டது. இதை, மிருகங்கள் பெயரிடப்படுவதற்கு மனிதன் முன்பாகக் கடந்துசென்றபோது, அவன் ஆயுதந்தரித்திருக்கவில்லை என்ற உண்மையில் காணலாம். மேலும் மனிதனோ மிருகமோ பயத்தை வெளிப்படுத்தினதைப்பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.—ஆதியாகமம் 2:19, 20.
முதல் நோக்கம் நிறைவேற்றப்படவிருக்கிறது
மகிழ்ச்சியுண்டாக, கடவுளுடைய அந்த முதல் நோக்கம், சீக்கிரத்தில், பரலோகத்திலிருந்து ஆளும் கடவுளுடைய ராஜ்யம் மனிதன் உண்டாக்கின எல்லா அரசாங்கங்களையும் நீக்கி அதனிடத்தை ஏற்கையில், நிறைவேற்றப்படும். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) கடவுளுடைய ஆட்சி பூமி முழுவதன்மீதும் முற்றிலும் திரும்ப ஸ்தாபிக்கப்பட்டிருக்க, பூமிக்கும் அதன் மனித மற்றும் மிருக வாசிகளுக்குமுரிய கடவுளுடைய முதல் நோக்கம் நிறைவேற்றமடைவதில் முன்னேறும்.
கடவுளுடைய நீதியுள்ள ஆட்சியின் மாற்றஞ்செய்யும் பலன்கள் பைபிள் தீர்க்கதரிசனங்கள் பலவற்றில் மிக இனிய முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தேவாவியின் ஏவுதலின்கீழ் ஏசாயா எழுதினதைக் கவனியுங்கள்: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [யெகோவாவை, தி.மொ.] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:6, 7, 9.
மற்றத் தீர்க்கதரிசனங்களும் கடவுளுடைய புதிய உலகத்தில் இருக்கப்போகும் அந்த அளவிடமுடியாத சமாதானத்தைக் காட்டுகின்றன. இதன் சம்பந்தமாக மீகா முன்னறிவித்ததாவது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:3, 4.
அப்பொழுது மூர்க்க மிருகங்கள் எதுவும் மனிதனின் சமாதானத்தைக் கெடுக்காது, எப்படியெனில் கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள். . . . அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள் [பயமின்றியிருப்பார்கள், தி.மொ.].”—எசேக்கியேல் 34:25, 27.
ஆகவே திரும்பப் புதுப்பிக்கப்பட்ட அந்தப் பரதீஸ் முழுவதிலும் சமாதானமும் ஒத்திசைவும் பூரணமாயிருக்கும். இதனிமித்தம் அங்கே இருக்கப்போகிற நிலைமைகளை பைபிளின் கடைசி புத்தகத்தில் பின்வரும் முறையில் விவரிக்க முடிந்தது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:4, 5.
ஆம், சத்தியமும் உண்மையுமானவை. இது நாம் கடவுளுடைய வாக்குகளில் நம்பியிருக்கலாமென குறிக்கிறது, ஏனெனில் அபூரண மனிதரைப்போலிராமல், அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வல்லமையும், ஞானமும், திடத்தீர்மானமும் உடையவர். பூர்வகாலங்களில் இருந்த, கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களில் ஒருவர் சொன்னதுபோல்: “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைப்பற்றிச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; அவைகளெல்லாம் உங்கள் விஷயத்தில் நிறைவேறின; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போனதில்லை.”—யோசுவா 23:14, தி.மொ.; ஏசாயா 55:11-ஐயும் பாருங்கள்.
சீக்கிரத்தில் கடவுளுடைய புதிய உலகத்தில், இந்தப் பூமிக்கும், மனிதருக்கும், மிருகங்களுக்கும் கடவுள் கொண்டிருந்த முதல் நோக்கம் நிறைவேற்றமடையுமென்ற அதே திடநம்பிக்கையை நாம் கொண்டிருக்கலாம். கடவுளால் கொடுக்கப்படும் சமாதானம் பூமியெங்கும் நடைமுறையில் மெய்ம்மையாகும். அத்தகைய சமாதானம் மனிதருக்குள் மேலோங்கியிருப்பது மட்டுமல்லாமல் மிருகங்கள் வாழும் பகுதியிலும் பிரதிபலிக்கும். (g91 4/8)