தொலைக்காட்சி உங்களை மாற்றியிருக்கிறதா?
“உலகத்தின் ஜன்னல்.” அவ்வாறுதான் தொலைக்காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. 1960-களின் ஆரம்பப் பகுதிக்குள் “அநேக ஜனங்களுக்கு [தொலைக்காட்சி] உலகத்தின் ஜன்னலாக ஆகியிருந்தது. அது அளித்த காட்சிதான் இந்த உலகம் என்பதாக அவர்கள் கருதினர். அவர்கள் அதன் முழுமையையும் நேர்மைத் தகுதியையும் நம்பினர்” என்று டியூப் ஆஃப் பிளென்ட்டி—தி எவலூஷன் ஆஃப் அமெரிக்கன் டெலிவிஷன் (Tube of plenty—The Evolution of American Television) என்ற புத்தகத்தில் நூலாசிரியர் எரிக் பார்னோ குறிப்பிடுகிறார்.
என்றபோதிலும், எந்தக் காட்சி உங்கள் கண்ணில் தோன்ற வேண்டும் என்று வெறும் ஒரு ஜன்னல் தேர்ந்தெடுக்க முடியாது; அது வெளிச்சத்தையோ அல்லது காட்சியின் கோணத்தையோ நிர்ணயிக்க முடியாது; அல்லது உங்களுடைய ஆர்வத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்காக அது திடீரென காட்சியை மாற்றவும் முடியாது. ஆனால் டிவி அவ்வாறு செய்யமுடியும். இப்படிப்பட்ட காரணங்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பவைகளைப் பற்றி உங்களுடைய உணர்ச்சிகளையும் முடிவுகளையும் மனதில் உருவாக்கும், என்றாலும் அவைகள் டிவி காட்சிகளை உருவாக்கும் ஆட்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாரபட்சமற்ற செய்திகளும், மெய் நிகழ்ச்சிகளை மட்டும் காட்டும் திரைப்படங்களும்கூட அப்படிப்பட்ட செல்வாக்கின் கட்டுப்பாட்டுக்குள், அவ்வாறு செய்ய வேண்டும் என்று எண்ணி செய்யாவிட்டாலும்கூட கொண்டுவரப்படுகின்றன.a
வஞ்சிப்பதில் ஒரு நிபுணன்
தொலைக்காட்சியை கட்டுப்படுத்தும் ஆட்கள், காட்சியை காண்கிறவர்களின் மீது நேரடியாக செல்வாக்குச் செலுத்த முயற்சி செய்கின்றனர். உதாரணமாக, வாங்குவதற்கான மனநிலைக்குள் உங்களை ஆசைக்காட்டி இழுப்பதற்கு, விளம்பரத்தில் எல்லா கவர்ச்சிமிக்க வழிகளையும் உபயோகிப்பதற்கு நடைமுறையான எல்லா ஆற்றலையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். நிறம். இசை. அழகான ஆட்கள். காமம். பகட்டான உள்ளூர் பின்னணிகள். அவர்களுடைய பட்டியல் மிகப் பெரியதாக இருக்கிறது. அதை அவர்கள் திறமையாய் உபயோகிக்கின்றனர்.
முன்னாள் விளம்பரத் துறைத் தலைவர் ஒருவர் தனது 15 ஆண்டுகால அனுபவத்தைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “[டிவி போன்ற] தொடர்புகொள்ளக்கூடிய சாதனங்கள் மூலம் ஜனங்களின் தலைக்குள் நேராகப் பேசமுடியும் என்பதையும், பிறகு சில உலகப்பிரகாரமான மந்திரவாதிப்போல் உருவங்களை தலைக்குள் கொண்டுவந்து, ஜனங்கள் முன்பு நினைத்திராத காரியங்களை செய்யும்படி செய்விக்கும் என்பதையும் நான் கற்றறிந்தேன்.”
ஜனங்கள் மீது தடுத்துநிறுத்த முடியாத வல்லமையை தொலைக்காட்சி கொண்டிருக்கிறது என்பது 1950-களில் தெளிவாக இருந்தது. ஒரு வருடத்துக்கு 50,000 டாலர்கள் சம்பாதித்த ஓர் உதட்டுச்சாய நிறுவனம், ஐக்கிய மாகாண தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. இரண்டு வருடங்களுக்குள், ஒரு வருடத்துக்கு 45,00,000 டாலர்கள் என விற்பனை உயர்ந்தது! பெண்களுக்கு பிரபலமாயிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு வங்கி அதன் சேவைகளை விளம்பரப்படுத்திய பிறகு, திடீரென சமாளிக்க முடியாத அளவுக்கு 1,50,00,000 டாலர்கள் மதிப்புள்ள சேமிப்புகள் வந்து குவிந்தன.
இன்று சராசரி அமெரிக்கன் 32,000-க்கும் மேலான விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் காண்கிறான். விளம்பரங்கள் உணர்ச்சிகளின் மீது வஞ்சனையோடு செயல்படுகின்றன. பாக்ஸ்டு இன்—தி கல்ச்சர் ஆஃப் டிவி (Boxed In—The Culture of TV) என்ற புத்தகத்தில் மார்க் கிரிஸ்பின் மில்லர் இவ்வாறு எழுதினார்: “காணக்கூடிய காட்சிகளின் மூலம் நாம் மாற்றியமைக்கப்படுகிறோம் என்பது உண்மைதான். அன்றாடக வாழ்க்கையை ஊடுருவிப் பரவும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் இடைவிடாது நம்மை பாதிக்கின்றன.” இப்படிப்பட்ட செல்வாக்கு “முற்றிலும் அபாயகரமானதாய் இருக்கிறது. ஏனென்றால் அநேகமாய் அது தெளிவாக அறிந்துகொள்வதற்கு கடினமாய் இருக்கிறது, ஆகையால் அதை நாம் எவ்வாறு மனதால் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றறியும் வரை அது தோல்வியடையாது” என்று அவர் கூடுதலாகச் சொன்னார்.
ஆனால் உதட்டுச்சாயம், அரசியல் நோக்குநிலைகள், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு மேலாக அதிகத்தை தொலைக்காட்சி விற்பனை செய்கிறது. அது ஒழுக்கப்பண்புகளையும்கூட விற்பனை செய்கிறது—அல்லது அவைகள் அற்றுப்போவதை விற்பனை செய்கிறது.
டிவியும் ஒழுக்கப்பண்புகளும்
அமெரிக்க நாட்டு டிவி-யில் அடிக்கடி பால் சம்பந்தப்பட்ட நடத்தை அதிகமதிகமாக விளக்கிக் காட்டப்படுகிறது என்பதை அறிய வெகு சில ஜனங்களே ஆச்சரியப்படுவர். சிறந்த-நேர டிவி ஒளிபரப்பு நிலையக் கோவையின் 66 மணிநேரங்களில், மொத்தமாக 722 இன சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்தன, அவைகள் மறைமுகமாகவோ, சொற்களால் குறிப்பிட்டோ அல்லது படமாக்கியோ காட்டப்பட்டது என்று ஜர்னலிஸம் குவார்ட்டர்லி (Journalism Quarterly) என்ற பத்திரிகையில் 1989-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டிருந்த ஓர் ஆராய்ச்சி கண்டுபிடித்தது. காம உணர்ச்சியோடு தொடுவதிலிருந்து பாலுறவு வரை, தற்புணர்ச்சி, ஓரினப்புணர்ச்சி, முறைதகாப்புணர்ச்சி போன்ற சம்பவங்கள் அதில் அடங்கியிருந்தன. ஒவ்வொரு மணிநேரமும் 10.94 சம்பவங்கள் சராசரியாக இருந்தன!
இவ்விஷயத்தில் ஐக்கிய மாகாணங்கள் மட்டும் தனித்தன்மை வாய்ந்ததாக இல்லை. ஃபிரெஞ்சு டிவி திரைப்படங்கள் வெளிப்படையான பால் சம்பந்தப்பட்ட கொடுவெறிக் காமத்தை படமாக்கிக் காட்டுகின்றன. இத்தாலிய டிவி-யில் துகிலுரி காட்சிகள் காட்டப்படுகின்றன. நள்ளிரவு ஸ்பானிய டிவி வன்முறை, காமவெறி சார்ந்த திரைப்படங்களை காட்டுகிறது. இப்படிப்பட்ட பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
டிவி ஒழுக்கக்கேட்டின் மற்றொரு வகை வன்முறை. ஐக்கிய மாகாணங்களில், பேரச்சம் தரும் நிகழ்ச்சிகளில் இருந்த “பேரச்சமூட்டும் நல்ல நகைச்சுவை”யை டைம் பத்திரிகையின் டிவி விமர்சகர் சமீபத்தில் புகழ்ந்து பேசினார். தலையை வெட்டுதல், முடமாக்குவது, உடலில் குத்தி ஊடுருவச் செய்வது, பேய்கள் ஆட்களைப் பிடித்தாட்டுவது போன்ற காட்சிகளை இத்தொடர் நிகழ்ச்சிகள் சிறப்பித்துக் காட்டின. பெரும்பாலான டிவி வன்முறை அவ்வளவு கொடிதானதாக இல்லை—அவைகள் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கோட் டி வார் என்ற தொலைக்கோடியான கிராமத்தில் மேற்கத்திய தொலைக்காட்சி சமீபத்தில் காட்டப்பட்டபோது, மனங்குழம்பிய ஒரு வயதான மனிதனால் இப்படி மட்டும் தான் கேட்க முடிந்தது: “வெள்ளையர்கள் ஏன் எப்போதும் ஒருவரையொருவர் குத்திக் கொண்டும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் இடித்துக் கொண்டும் இருக்கின்றனர்?”
தொலைக்காட்சி உற்பத்தியாளர்களும், ஆதரவாளர்களும் பார்வையாளர்கள் பார்க்க விரும்பும் காரியங்களை அளிக்க விரும்புகின்றனர் என்பதுதான் இதற்குப் பதில். வன்முறை பார்வையாளர்களைக் கவருகிறது. பால் சம்பந்தப்பட்ட காரியங்களும் அவ்வாறே செய்கிறது. ஆகையால் டிவி இவை இரண்டையும் தாராளமாக அளிக்கிறது—ஆனால் அதிகமான அளவு அதிக விரைவாக கொடுப்பதில்லை அல்லது பார்வையாளர்கள் வெறுத்துவிடுவர். பிரைம் டைம், அவர் டைம் (Prime Time, Our Time) என்ற புத்தகத்தில் டானா மெக்ரோஹன் என்பவர் அதை இவ்வாறு சொன்னார்: “அநேக புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் மொழி, பால், வன்முறை அல்லது பொருளடக்கம் ஆகியவற்றோடு அவர்களால் செல்லக்கூடிய அளவுக்குச் செல்கின்றனர்; பின்னர், உச்சக்கட்டத்துக்கு சென்ற பின்பு, அதன் உக்கிரத்தை தணிக்கின்றனர். அடுத்து, ஒரு புதிய உச்சக்கட்டத்துக்கு பொதுமக்கள் தயாராயிருக்கின்றனர்.”
உதாரணமாக, ஓரினப்புணர்ச்சி பற்றிய விஷயம் தொலைக்காட்சிக்கு நல்ல சுவைத்திறனின் “உச்சக்கட்ட”த்துக்கு அப்பாற்பட்டது என்று ஒரு சமயம் கருதப்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் அதற்கு பழகிவிட்ட பிறகு, அவர்கள் அதிகத்தை ஏற்றுக்கொள்ள தயாராயிருந்தனர். “இன்று எந்தத் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் ஓரினப்புணர்ச்சியை தவறாக காண்பிக்க தைரியமில்லை . . . மாறாக சமுதாயமும் அதன் பொறுக்க இயலாத தன்மையும்தான் விசித்திரமாய் இருக்கிறது” என்று ஒரு ஃபிரெஞ்சு பத்திரிகை எழுத்தாளர் உறுதியாகக் கூறினார். அமெரிக்காவின் கேபிள் தொலைக்காட்சியில், ‘ஓரினப்புணர்ச்சி சம்பந்தமான ஒரு தொடர்நாடக நிகழ்ச்சி’ 1990-ல் 11 நகரங்களில் வெளியிடப்பட்டது. ஆண்கள் படுக்கையில் ஒன்றாக இருக்கும் காட்சிகளை அந்த நிகழ்ச்சி சிறப்பித்துக் காட்டியது. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அப்படிப்பட்ட காட்சிகள் ஓரினப்புணர்ச்சிக்காரரால் உருவாக்கப்பட்டது, “பார்வையாளர்களின் கூர் உணர்ச்சியைக் குறைப்பதற்கு அவ்வாறு செய்யப்பட்டது, அப்போதுதான் நாங்களும் மற்றவர்களைப் போன்றே இருக்கின்றனர் என்பதை ஜனங்கள் உணருவார்கள்” என்று நியூஸ்வீக் பத்திரிகையிடம் சொன்னார்.
உண்மைக்கு எதிராக கற்பனை
தவறான பால் சம்பந்தமான நடத்தையின் விளைவுகளை டிவி எப்போதும் காண்பிக்காததால், தன் “சிறு மகிழ்வூட்டும் பால் சம்பந்தமான கற்பனையின் அநேக காரியங்களை ஒரே சமயத்தில் தொடர்ந்து காண்பித்துக் கொண்டிருப்பது” தவறான தகவலை பரப்புவதற்கு ஒத்ததாய் இருக்கிறது என்று ஜர்னலிஸம் குவார்டர்லி (Journalism Quarterly) என்ற பத்திரிகையில் ஆராய்ச்சி செய்த நூலாசிரியர்கள் குறிப்பிட்டனர். டிவி தொடர்நாடக நிகழ்ச்சி எல்லாவற்றுக்கும் மேலாக இந்தச் செய்தியை வழங்குகிறது என்று மற்றொரு ஆராய்ச்சி முடிவுக்கு வந்ததாக அவர்கள் மேற்கோள் காட்டினர்: பாலுறவு திருமணமாகாதவர்களுக்கே, அதிலிருந்து எவரும் நோய் அடைவதில்லை.
உங்களுக்குத் தெரிந்தபடி, உலகம் இவ்வாறு தான் இருக்கிறதா? மணமாவதற்கு முன்பே பருவவயது கர்ப்பங்கள் அல்லது பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள் இல்லாத பாலுறவா? எய்ட்ஸ் நோய் தொற்றிக்கொள்ளும் என்ற பயமில்லா ஓரினப்புணர்ச்சியும், இருபால் புணர்ச்சியுமா? வன்முறையும், ஒருவரை முடமாக்கும் குற்றமும், வீரர்கள் வெற்றியடையவும், போக்கிரிகள் அவமானப்படுத்தப்படவும் செய்கின்றன—ஆனால் விசித்திரமாக இருவருமே காயப்படாமல் இருப்பதிலா? செய்யும் செயல்களுக்கு சிறிதளவு கவலையும் இல்லாத விளைவுகளையுடைய ஓர் உலகத்தை டிவி உருவாக்குகிறது. மனச்சாட்சி, ஒழுக்கம், தன்னடக்கம் ஆகியவற்றின் சட்டங்களுக்குப் பதிலாக உடனடியாக விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சட்டம் வைக்கப்படுகிறது.
தெளிவாகவே, தொலைக்காட்சி “உலகத்தின் ஜன்னல்” ஆக இல்லை—மெய்யான உலகின் ஜன்னல் அல்ல. உண்மையில், தொலைக்காட்சியைப் பற்றி சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் போலித்தோற்றமான தொழிற்சாலை என்றழைக்கப்படுகிறது. டிவி “நம்முடைய வாழ்க்கையில் அதிக வல்லமைவாய்ந்த சக்திகளில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. அதன் விளைவு என்னவென்றால், மெய்ம்மை எது என்பதை டிவி விளக்குவது மட்டுமல்லாமல், அதிக முக்கியமான விதத்திலும் கலக்கமடையச் செய்யும் விதத்திலும் மெய்ம்மைக்கும் மெய்ம்மையற்ற காரியத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டையே, வித்தியாசத்தையே டிவி துடைத்தழித்துவிடுகிறது” என்று அதனுடைய ஆசிரியர்கள் உரிமைபாராட்டுகின்றனர்.
தொலைக்காட்சியின் செல்வாக்குக்கு தாங்கள் இடங்கொடுப்பதில்லை என்று எண்ணும் நபர்களுக்கு இப்படிப்பட்ட வார்த்தைகள் வீண் பீதி பரப்புவது போல் ஒருவேளை தொனிக்கலாம். ‘நான் பார்க்கும் எல்லாவற்றையும் நம்புவதில்லை’ என்று சிலர் வாதாடலாம். டிவி-யின் மீது அவநம்பிக்கை கொள்ளும் போக்கை நாம் கொண்டிருக்கலாம். உடனடியாக கருத்து தெரிவிக்கும் இந்த அவநம்பிக்கையான மனநிலை, நம்முடைய உணர்ச்சிகள் மீது டிவி கொண்டிருக்கும் சூழ்ச்சியான வழிகளிலிருந்து நம்மை பாதுகாக்காது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஓர் எழுத்தாளர் அதை இவ்விதமாகச் சொன்னார்: “டிவி-யின் சிறந்த சூழ்ச்சிகளில் ஒன்று, நம்முடைய உள்ளம் சார்ந்த இயக்க ஏற்பாட்டை அது எவ்வளவு பாதிக்கிறது என்பதை உணர முடியாமல் செய்வது ஆகும்.”
செல்வாக்கு செலுத்தும் ஓர் இயந்திரம்
அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஏழு மணி, இரண்டு நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கின்றனர் என்று 1990 பிரிட்டானிக்கா புக் ஆஃப் தி இயர் (1990 Brittannica Book of the Year) சொல்கிறது. அதிக மிதமான மதிப்பீடு ஒன்று அந்த எண்ணிக்கையை ஒரு நாளுக்கு சுமார் இரண்டு மணிநேரங்கள் என்று கணக்கிடுகிறது, ஆனால், அப்படியென்றாலும்கூட ஒரு வாழ்நாட்காலத்தில் ஏழு வருடங்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அது ஈடாக இருக்கிறது! அப்படிப்பட்ட பெரும்படியான அளவு டிவி பார்ப்பது ஜனங்கள் மீது பாதிப்பைக் கொண்டிருக்க எவ்வாறு தவற முடியும்?
டிவி-க்கும் மெய்ம்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பதில் குழப்பமுடைய ஜனங்களைப் பற்றி நாம் வாசிக்கும் போது அது நமக்கு ஆச்சரியமூட்டுவதாயில்லை. “மெய்யான உலகத்தைப் பற்றி ஒரு மாற்று வகையான காட்சியை” நிலைநாட்டுவதற்கு டிவி சில ஜனங்களை உண்மையிலேயே தூண்டுகிறது என்று மீடியா, கல்ச்சர் அன்டு சொஸயிட்டி (Media, Culture and Society) என்ற பிரிட்டிஷ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆராய்ச்சி கண்டுபிடித்தது. மெய்ம்மையை குறித்து அவர்களுடைய விருப்பங்கள் மெய்ம்மையையே உருவாக்குகிறது என்ற எண்ணத்தை அவர்களுக்குள் கொடுக்கிறது என்றும் காட்டியது. மற்ற ஆராய்ச்சிகள், ஐ.மா. மனநல தேசிய நிறுவனத்தால் தொகுக்கப்பட்டவைகள் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதாக தோன்றுகிறது.
மெய்ம்மையின் பிரபலமான உணர்வுகள் பேரில் டிவி செல்வாக்கு செலுத்துகிறது என்றால், ஜனங்களுடைய வாழ்க்கையின் மீதும், செயல்களின் மீதும் செல்வாக்கு செலுத்த அது எவ்வாறு தவறும்? பிரைம் டைம், அவர் டைம் (Prime Time, Our Time) என்ற புத்தகத்தில் டானா மெக்ரோஹன் எழுதுகிறார்: “உயர்ந்த-தரமுள்ள டிவி நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டவைகளையோ அல்லது மொழி தடைகளையோ மீறும்போது, நாமும்கூட அவைகளை மீறுவதற்கு அதிக சுயாதீனம் பெற்றவர்களாக உணருகிறோம். அதே போன்று, வரையறையற்ற ஆண்பெண் கூட்டுறவு இயல்பானது அல்லது ஆண்மைமிக்க பண்புடையவர் தான் கருத்தடை உறைகளை உபயோகிப்பதாக கூறும்போது . . . நாம் பாதிக்கப்படுகிறோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், டிவி செயல்படுகிறது—தாமதமடைந்த-செயல் அடிப்படையின் பேரில்—செயல்பட்டு நாம் எப்படி இருக்கிறோம் எப்படி ஆவோம் என்ற கருத்தை பாதிக்கிறது.” நிச்சயமாகவே, டிவி சகாப்தத்தின் எழுச்சி அதற்கு சரி ஒப்பாய் ஒழுக்கக்கேடு, வன்முறை ஆகியவற்றின் எழுச்சியைக் கண்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா? இல்லவே இல்லை. மூன்று நாடுகளில் டிவி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தானே அங்கே வன்முறை, குற்றச்செயல் ஆகியவை அதிகரித்தன என்று ஓர் ஆராய்ச்சி காண்பித்தது. முன்னதாகவே டிவி அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில், குற்றச்செயலின் அளவு முன்பாகவே அதிகரித்தது.
ஆச்சரியமாகவே, ஓய்வுநேர பொழுதுபோக்காகவுங்கூட டிவி மதிப்பிடப்படுவதில்லை, அநேகர் அது அவ்வாறு இருப்பதாக நினைக்கின்றனர். எல்லா பொழுதுபோக்குகளைக் காட்டிலும் தொலைக்காட்சி பார்ப்பது ஜனங்களை வெகுக்குறைவாக களைப்பாற செய்கிறது என்று 13-வருட காலமாக 1,200 ஆட்களின் பேரில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கண்டுபிடித்தன. மாறாக, அது பார்வையாளர்களை சுறுசுறுப்பில்லாதவர்களாக ஆக்கியது, அவர்களை விறைப்பாகவும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முடியாமலும் ஆக்கியது. குறிப்பாக நீண்ட நேரம் டிவி பார்ப்பது ஜனங்களை மோசமான மனநிலைகளில் விட்டது, அவர்கள் பார்க்க ஆரம்பித்தபோது இருந்த மனநிலையை விட மோசமான நிலையில் விட்டது. அதற்கு நேர் மாறாக, வாசிப்பது ஜனங்களை அதிகக் களைப்பாறியவர்களாகவும், மேலான மனநிலைகளிலும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதில் மேலான நிலையிலும் விட்டது!
ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது எவ்வளவு கட்டியெழுப்புவதாய் இருந்தாலும், நேரத்தை விரைவாக திருடும் அந்தத் திருடனாகிய டிவி புத்தகங்களை எளிதில் பார்வையிலிருந்து தள்ளிவிடக்கூடும். நியு யார்க் நகரத்தில் தொலைக்காட்சி முதலாவது அறிமுகப்படுத்தப்பட்டபோது, நூல்களைப் விநியோகித்துக்கொள்வது குறைந்துபோனதாக பொது நூலகங்கள் அறிக்கைச் செய்தன. என்றாலும் மனிதவர்க்கம் வாசிப்பதையே நிறுத்திவிடும் தறுவாயில் இருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்தாது. இன்று ஜனங்கள் குறைவான பொறுமையுடன்தான் வாசிக்கின்றனர் என்றும் பகட்டான காணக்கூடிய உருவங்களை தொடர்ந்து தீவிரமாக பார்க்கவில்லையென்றால் அவர்களுடைய கவனம் விரைவில் குன்றிவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. புள்ளி விவரங்களும், ஆராய்ச்சிகளும் இப்படிப்பட்ட தெளிவற்ற சந்தேக உணர்ச்சியை காரணங்காட்டி விளக்காமல் இருக்கலாம். என்றாலும், விரைவாகக் கடந்து செல்லும், நம்முடைய குறுகிய நேர கவனத்தைக்கூட ஈர்க்கும் அளவிற்கு திட்டமைக்கப்பட்டிருக்கும், தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காட்டப்படும் டிவி பொழுதுபோக்கு, தொடர்ந்து நம்மை திருப்தி செய்வதில் சார்ந்திருப்போமானால், தனிப்பட்ட ஆழ்ந்த உணர்வு, ஒழுங்கு முறை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் எதை இழக்கிறோம்?
தொலைக்காட்சிப் பெட்டியின் பிள்ளைகள்
பிள்ளைகளுடைய விஷயத்தில் தான் தொலைக்காட்சி என்ற பொருள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. பொதுவாக, டிவி பெரியவர்களுக்கு எதை செய்கிறதோ அதையே அது பிள்ளைகளுக்கும் நிச்சயமாக செய்யக்கூடும்—பிள்ளைகளுக்கு அதிகமாகச் செய்யக்கூடும். பிள்ளைகள் டிவி-யில் பார்க்கும் கற்பனை உலகங்களை அதிகமாக நம்புவதற்கு சாத்தியம் இருக்கிறது. பிள்ளைகள் “திரையில் பார்க்கும் காரியங்களிலிருந்து உண்மையான வாழ்க்கையை வேறுபடுத்திப் பார்க்க முடியாதவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் கற்பனை உலகில் பார்க்கும் காரியங்களை உண்மையான உலகிற்கு மாற்றுகின்றனர்” என்று ரினிஷர் மெர்குர்/கிரைஸ்ட் அன்டு வெல்ட் (Rheinischer Merkur/Christ und Welt) என்ற ஜெர்மன் செய்தித்தாள் சமீபத்திய ஆராய்ச்சி கண்டுபிடித்ததை குறிப்பிட்டுக் காட்டியது.
வன்முறையான தொலைக்காட்சி பிள்ளைகள் மீதும் பருவவயதினர் மீதும் எதிர்மறையான பாதிப்புகளை கொண்டிருக்கிறது என்ற முடிவை பல பத்தாண்டுகளாக செய்த ஆராய்ச்சியின்போது 3,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஆதரித்திருக்கின்றன. தொலைக்காட்சி வன்முறை வலியத்தாக்கும் தன்மையையும், சமுதாயத்தை வெறுக்கும் தன்மையையும் பிள்ளைகளில் ஏற்படுத்துகின்றன என்று அமெரிக்க பிள்ளைகள் மருத்துவக் கழகம், மன ஆரோக்கிய தேசிய நிறுவனமும் அமெரிக்க மருத்துவ கழகமும் ஒத்துக்கொள்கின்றன.
கலக்கமடையச்செய்யும் மற்ற விளைவுகளையும் ஆராய்ச்சிகள் அளித்திருக்கின்றன. உதாரணமாக, குழந்தைப்பருவ உடல் பருமன், அளவுக்கு மீறி டிவி பார்ப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு வெளிப்படையான காரணங்கள் இருக்கின்றன. (1) சுறுசுறுப்பாக விளையாடும் மணிநேரங்களுக்குப் பதிலாக, தொலைக்காட்சி பெட்டிக்கு முன் மந்தமான நிலையில் பல மணிநேரங்கள். (2) குறைவான ஊட்டச்சத்துள்ள கொழுப்பான உணவை குழந்தைகளுக்கு விற்கும் வசதியான வேலையை டிவி விளம்பரதாரர்கள் செய்திருக்கின்றனர். அளவுக்கு மீறி டிவி பார்க்கும் பிள்ளைகள் பள்ளி படிப்பில் மோசமாக இருப்பதாக மற்றொரு ஆராய்ச்சி தெரிவித்திருக்கிறது. முடிவு அதிக கருத்து வேறுபாட்டுக்குரியதாக இருந்தாலும், பிள்ளைகளின் வாசிக்கும் திறமைகளிலும், பள்ளி நடவடிக்கைகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதற்கு அநேக மனநோய் மருத்துவர்களும் ஆசிரியர்களும் டிவி-யை குறைகூறுவதாக டைம் பத்திரிகை சமீபத்தில் அறிக்கை செய்தது.
நேரம் மற்றொரு முக்கிய காரணமாயிருக்கிறது. ஒரு சராசரி அமெரிக்க பிள்ளை உயர்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ச்சியடைவதற்குள், 17,000 மணிநேரங்கள் டிவி-க்கு முன் செலவழித்திருக்கிறான், இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவன் பள்ளியில் 11,000 மணிநேரங்கள் செலவழித்திருக்கிறான். அநேக பிள்ளைகளுக்கு, டிவி முக்கியமான வேலையாக இல்லாவிட்டாலும், அவர்களுடைய முக்கியமான மீதி-நேர வேலையாக அமைகிறது. தி நேஷனல் PTA டாக்ஸ் டு பெரன்ட்ஸ்: ஹவ் டு கெட் தி பெஸ்ட் எஜுகேஷன் ஃபார் யுயர் சைல்டு (The National PTA Talks to Parents: How to Get the Best Education for Your Child) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: ஐந்தாம் வகுப்பு பிள்ளைகளில் (பத்து வயதுள்ள பிள்ளைகளில்) பாதி பேர் வீட்டில் ஒரு நாளுக்கு நான்கு நிமிடங்கள் வாசிப்பதில் செலவிடுகின்றனர், ஆனால் டிவி பார்ப்பதில் 130 நிமிடங்கள் செலவழிக்கின்றனர்.
பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் டிவி உண்மையான அபாயங்களை அளிப்பதில்லை என்று இறுதி ஆராய்ச்சியில் வெகு சிலரே கருத்தார்ந்த விதத்தில் வாதாடுவர். ஆனால் அது எதை அர்த்தப்படுத்துகிறது? பெற்றோர் வீட்டில் டிவி பார்ப்பதை தடை செய்ய வேண்டுமா? அதை வெளியே தூக்கியெறிவதன் மூலமாகவோ அல்லது பரணையில் அதை ஒரு பக்கமாக வைத்துவிடுவதன் மூலமாகவோ அதனுடைய செல்வாக்கிலிருந்து ஜனங்கள் பொதுவாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? (g91 5/22)
[அடிக்குறிப்புகள்]
a “செய்திகளை உண்மையில் நீங்கள் நம்பக்கூடுமா?,” ஆகஸ்ட் 22, 1990, ஆங்கில விழித்தெழு! பத்திரிகையைப் பார்க்கவும்.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“வெள்ளையர்கள் ஏன் எப்போதும் ஒருவரையொருவர் குத்திக் கொண்டும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் இடித்துக் கொண்டும் இருக்கின்றனர்?”
[பக்கம் 9-ன் படம்]
டிவியை மூடிவிடுங்கள், புத்தகத்தை திறவுங்கள்