தொலைக்காட்சி உங்களை கட்டுப்படுத்துவதற்கு முன் நீங்கள் அதை கட்டுப்படுத்துங்கள்
தொலைக்காட்சி தடுமாற்றம் அடையச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகள் டிவி-யை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்க நாட்டு டிவி தொழிற்சாலை தூண்டிய போது, டிவி கற்பனை உலகின் காட்சிகளை கொடுக்க முன்வந்தது. முழு தேசங்களும் வகுப்பறைகளாக மாற்றப்படும், விவசாய செய்முறைத் திறம், மண் வள பாதுகாப்பு, குடும்ப நலத்திட்டம் போன்ற முக்கியமான பொருள்களின் பேரில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நெடுங்தொலைவில் உள்ள இடங்களும்கூட காண முடியும். இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை பிள்ளைகள் கற்க முடியும், மேலும் விரிவாகிக்கொண்டே செல்லும் கலாச்சார பரிமாற்றத்திலிருந்து பயனடைய முடியும்.
அதைத் தொடர்ந்து வந்த வணிகத்துறை தொலைக்காட்சியின் மெய்ம்மையால் அப்படிப்பட்ட காட்சிகள் பெருமளவில் மறைந்து போயின—ஆனால் முழுமையாக அல்ல. தொலைக்காட்சியை “ஒரு பரந்த பாழ்நிலம்” என்று பெயரிட்டு அழைத்த கூட்டிணைப்பு செய்தித் தொடர்பு குழுவின் தலைவர் நியூட்டன் மினோ என்பவரும்கூட அதே 1961 சொற்பொழிவில், டிவி சில பெரிய சாதனைகளையும், மகிழ்ச்சி நிரம்பிய பொழுதுபோக்குக் காட்சிகளையும் கொண்டிருந்தது என்று ஒத்துக்கொண்டார்.
நிச்சயமாகவே அது இன்று வரை உண்மையாயிருக்கிறது. டிவி செய்தி ஒளிபரப்புகள் உலக சம்பவங்களைப் பற்றி நமக்கு தகவல் கொடுக்கின்றன. டிவி-யின் இயற்கை நிகழ்ச்சிகள், மற்றப்படி நாம் ஒருபோதும் பார்க்க முடியாத காரியங்கள் நம் காட்சிக்குப் புலனாகும்படி செய்கின்றன: மெதுவாக அசையும் நிலையில் ஹம்மிங் (humming) பறவை துல்லியமான அழகு, அது காற்றினூடே நீந்திச் செல்வதைப் போன்ற தோற்றம்; மெதுவாக இயங்கும் புகைப்படத்தில் ஒரு மலர்ப் படுக்கையின் விசித்திரமான நடனம், அது பகட்டாகக் காட்சியளிக்கும் வண்ணத்தில் மண்ணிலிருந்து வெடித்துச் சிதறுவது. பின்பு கூட்டு நடனம், இசை நாடகங்கள், பண்ணிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் இருக்கின்றன. மேலும் நாடகங்கள், திரைப்படங்கள், மற்ற நிகழ்ச்சிகளும் இருக்கின்றன—அதில் சில மிகவும் ஆழ்ந்ததாகவும் உட்பார்வையுடையதாகவும் இருக்கின்றன, மற்றவை வெறும் நல்ல பொழுதுபோக்காக இருக்கின்றன.
பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. தேசிய மனநல ஆரோக்கிய நிறுவனம் அறிக்கை செய்கிறது: வன்முறையான டிவி-யிலிருந்து பிள்ளைகள் வலுச்சண்டை செய்ய கற்றுக்கொள்வது போல டிவி-யில் காணும் நல்ல உதாரணங்களிலிருந்து, பிறருடைய நலனில் அக்கறை காண்பிக்கிறவர்களாயும், சிநேகப்பான்மையாயும், தன்னடக்கம் உள்ளவர்களாக இருக்கவும்கூட அவர்கள் கற்றுக்கொள்ளலாம். எதிர்பாரா நிகழ்ச்சிகளின் போது எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்பதைப் பற்றிய நிகழ்ச்சிகள் பிள்ளைகளுடைய உயிரையும்கூட பாதுகாத்திருக்கின்றன. “தங்கள் பிள்ளைகளோடு கட்டுக்கு அடங்காத சூழ்நிலையை கொண்டிருந்தாலொழிய பரணையில் தங்கள் டிவி பெட்டிகளை ஒருபுறம் வைத்துவிடும் கோபமான அல்லது கவலையுள்ள பெற்றோர்கள் அளவுக்கு மீறி பிரதிபலிக்கின்றனர்” என்று வான்ஸ் பாக்கார்ட் என்பவர் ஆபத்தில் இருக்கும் நம் பிள்ளைகள் என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
கட்டுப்பாடு செய்தல்
பெரியவர்களைப் பற்றி பேசினாலும் சரி அல்லது பிள்ளைகளைப் பற்றி பேசினாலும் சரி கட்டுப்பாடு தான் அதற்குத் திறவுகோலாயிருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. நாம் டிவி-யை கட்டுப்படுத்துகிறோமா, அல்லது டிவி நம்மை கட்டுப்படுத்துகிறதா? திரு. பாக்கார்ட் என்பவர் சொல்வது போல், டிவி-யை கட்டுப்படுத்துவதற்கு சிலருக்கு ஒரே வழி, அந்தப் பொருளை ஒழித்துவிடுவதாகும். ஆனால் அநேகர் அதனுடைய அனுகூலங்களை பயன்படுத்திக் கொண்டு, டிவி-யை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடித்திருக்கின்றனர். சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
✔ ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு உங்களுடைய குடும்பம் டிவி பார்க்கும் நேரத்தை கவனமாக பதிவு செய்து வையுங்கள். அக்காலப்பகுதியின் முடிவில் மணிநேரங்களை கூட்டுங்கள். டிவி எடுத்துக் கொள்ளும் நேரம் அதற்குத் தகுதியானதாக இருக்கிறதா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
✔ டிவி நிகழ்ச்சிகளைப் பாருங்கள்—வெறும் டிவி-யை மட்டுமல்ல. பார்ப்பதற்கு தகுதியான நிகழ்ச்சி ஏதாவது இருக்கிறதா என்று டிவி நிகழ்ச்சிநிரலைப் பாருங்கள்.
✔ குடும்பம் ஒன்றாக இருப்பதற்கும், குடும்ப கலந்தாலோசிப்புக்கும் சில நேரங்களை ஒதுக்கி வையுங்கள்.
✔ பிள்ளைகளோ அல்லது பருவவயதினரோ தங்கள் சொந்த அறையில் ஒரு தொலைக்காட்சி பெட்டியை கொண்டிருப்பதற்கு எதிராக சில வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு பிள்ளை எதை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை கவனிப்பதற்கு பெற்றோர்களுக்கு அதிக கடினமாயிருக்கும்.
✔ ஒரு விசிஆர் (வீடியோ கேசட் ரெக்கார்டர்), உங்களால் வாங்க முடிந்தால், அது உதவியாயிருக்கும். நல்ல வீடியோ டேப்புகளை வாடகைக்கு எடுப்பதன் மூலமாகவோ அல்லது நல்ல தரமுள்ள நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொள்வதன் மூலமாகவோ உங்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தில் அவைகளைப் பார்க்கலாம். டிவி-யில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்போது, உங்களுடைய டிவி திரையில் காணப்படும் காட்சியை விசிஆர்-ஐ உபயோகித்து நீங்கள் கட்டுப்படுத்தலாம். ஆனால் எச்சரிப்பதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. கட்டுப்பாட்டை மீறினால், டிவி-க்கு முன்னால் செலவழிக்கப்படும் நேரத்தை விசிஆர் அதிகரிக்கச் செய்யும் அல்லது ஒழுக்கக்கேடான வீடியோ டேப்புகளை பார்ப்பதற்கு வழியை திறந்து வைக்கும்.
யார் உங்களுடைய ஆசிரியர்?
மனிதன் நடைமுறையில் ஒரு கற்கும் இயந்திரமாக இருக்கிறான். நம்முடைய புலன்கள் எப்போதுமே தகவலை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன, நம்முடைய மூளைக்கு பேரளவில் ஒவ்வொரு நொடியும் 10,00,00,000-க்கும் மேலான செய்திக் குறிப்பு துண்டுகளை அனுப்புகின்றன. நம்முடைய புலன்களுக்கு எதை போஷிக்க கொடுக்கலாம் என்பதை தீர்மானிப்பதன் மூலம் அந்தப் பேரளவான செய்திக் குறிப்பு துண்டுகளின் பொருளடக்கத்தை நாம் ஓரளவுக்கு செல்வாக்கு செலுத்தலாம். டிவி-யைப் பற்றிய கதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறபடி நாம் உண்பவற்றால் அல்லது குடிப்பவற்றால் நம் உடல் எளிதில் மாசுபடுத்தப்படுவது போல மனித மனமும் ஆவியும் நாம் பார்க்கும் காரியங்களின் மூலம் மாசுபடுத்தப்படலாம்.
நம்மைச் சுற்றியிருக்கும் உலகைப் பற்றி நாம் எவ்வாறு கற்றறிவோம்? என்ன தகவல் ஊற்றுமூலங்களை நாம் தேர்ந்தெடுப்போம்? யார் அல்லது எது நம்முடைய ஆசிரியராக இருக்கும்? இதைக் குறித்து இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் சிந்தனையை கொடுக்கிறது: “சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, ஆனால் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்டவன் எவனும் தன் குருவைப் போலிருப்பான்.” (லூக்கா 6:40, புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு) தொலைக்காட்சியை நம்முடைய குருவாக எண்ணி நாம் அதிக நேரம் செலவழித்தால், நாம் அதைப் பார்த்து பின்பற்ற ஆரம்பிக்கக்கூடும்—அது பிரதிநிதித்துவம் செய்யும் மதிப்பீடுகளுக்கும் தராதரங்களுக்கும் ஆதரவு கொடுக்கக்கூடும். நீதிமொழிகள் 13:20 அதை சொல்லுகிறபடி: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”
டிவி நம்முடைய வீடுகளுக்குள் முட்டாள்களையோ அல்லது ஒழுக்கக்கேடான நடத்தையுடையவர்களையோ கொண்டுவராவிட்டாலும், அது மிக முக்கியமான ஏதோவொன்றை தவறவிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவாக தேவைப்படும் ஒரு காரியத்தைப் பற்றி டிவி-யில் சிறிதளவும் காணப்படுகிறதில்லை: ஆவிக்குரிய தேவை. இந்த உலகம் எவ்வாறு வருந்தத்தக்க குழப்பத்தில் இருக்கிறது என்பதை டிவி மிகவும் நன்றாக காண்பிக்கலாம், ஆனால் மனிதன் ஏன் தன்னையே ஆண்டுகொள்ள முடியவில்லை என்பதைக் குறித்து நமக்கு சொல்வதற்கு அது என்ன செய்கிறது? படைப்பின் அழகுகளை அது நன்றாக எடுத்துக் காட்டலாம்; ஆனால் நம்முடைய சிருஷ்டிகரிடமாக நம்மை நெருங்கச் செய்வதற்கு அது என்ன செய்கிறது? உலகின் நான்கு மூலைகளுக்கும் அது நம்மை எடுத்துச் செல்லலாம், ஆனால் மனிதன் எப்போதாவது சமாதானத்தோடு அதில் வாழ முடியுமா என்பதை அது நமக்கு சொல்ல முடியுமா?
இப்படிப்பட்ட முக்கியமான ஆவிக்குரிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எந்த ஒரு “உலகத்தின் ஜன்னலும்” முழுமையாக இருக்க முடியாது. துல்லியமாக அதுதானே பைபிளை அவ்வளவு மதிப்புவாய்ந்ததாக ஆக்குகிறது. நம்மை படைத்தவரின் நோக்குநிலையிலிருந்து அது “உலகத்தின் ஜன்னலாக” வாழ்க்கையில் நம்முடைய நோக்கத்தைப் பற்றி புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்வதற்கு ஏற்றாற்போல் அது அமைக்கப்பட்டிருக்கிறது, எதிர்காலத்துக்கான ஓர் உறுதியான நம்பிக்கையையும் அது நமக்கு கொடுக்கிறது. வாழ்க்கையின் அதிக கவலையூட்டும் கேள்விகளுக்கு திருப்தியளிக்கும் பதில்கள் அதில் தயாராக இருக்கின்றன. பைபிளின் முடிவற்ற ஈர்த்துப் பிடிக்கும் தன்மையுள்ள பக்கங்களில் வாசிக்கப்பட அவை காத்திருக்கின்றன.
ஆனால் நாம் டிவி-யை கட்டுப்படுத்தவில்லையென்றால், நமக்கு எப்படி நேரம் கிடைக்கும்? (g91 5/22)