வீண்பேச்சு—உங்களையும் மற்றவர்களையும் புண்படுத்துவதை எவ்வாறு தவிர்ப்பது
மக்கள் இருக்கும் வரையில் வீண்பேச்சு இருக்கத்தான் செய்யும். பைபிளில் முன்னுரைக்கப்பட்டுள்ள பரிபூரணமான புதிய உலகும்கூட ஒருவேளை வீண்பேச்சிலிருந்து விடுபட்டதாக இராது.a (2 பேதுரு 3:13) நாம் ஒருவரோடொருவர் பேச்சுத் தொடர்பு கொண்டு ஆரோக்கியமான உறவுகளை காத்துக்கொள்வதில் நண்பர்களையும் பழக்கமானவர்களையும் பற்றிய முறைப்படி அமையாத, திட்டமிடப்படாத பேச்சு இன்றியமையாத ஒரு பாகமாகும்.
என்றபோதிலும், புண்படுத்துகின்ற, கெட்ட எண்ணத்துடன் கூடிய வீண்பேச்சுக்கு அல்லது பழிதூற்றுதலுக்கு மன்னிப்பு ஒருபோதும் இல்லை! அவ்வகையான பேச்சு காயப்படுத்துகிறது, பங்கப்படுத்துகிறது; அது வாழ்க்கையை, உறவுகளை, நற்பெயர்களையும்கூட நாசப்படுத்திவிடக்கூடும். ஆகவே நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைப் போக்கின் எல்லையைத் தாண்டி, தீங்கிழைக்கும் வீண்பேச்சில் ஈடுபடுவதை எவ்வாறு தவிர்க்கமுடியும்? அதிலிருந்து உங்களை எவ்வாறு நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்? இந்த விஷயத்தின் பேரில் எக்காலத்திலும் கொடுக்கப்பட்டிருப்பவற்றுள் மிகச் சிறந்த ஆலோசனை பைபிளில் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளில் ஒரு சிலவற்றை நாம் பார்ப்போமாக.
உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள்: “உரையாடல் மனதுக்கு பயிற்சியாக இருக்கையில், வீண்பேச்சு வெறுமென நாவுக்கு பயிற்சியாக இருக்கிறது,” என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில், அதிகமாக காயப்படுத்தும் பேச்சு, கெட்ட எண்ணத்தை அல்ல, ஆனால் பேசுவதற்கு முன் சிந்திக்கத் தவறுவதையே காட்டுகிறது. சிலர் மற்றவர்களுடைய விஷயங்களை வெளியிடுகிறார்கள்; அவர்கள் விளைவுகளைக் குறித்து கவலைப்படாமல், விறுவிறுப்பூட்டி, மிகைப்படுத்தி, திரித்துப் பேசுகிறார்கள். அவை ஏற்படுத்தக்கூடிய சேதத்தையும்கூட பகுத்துணராமல் அவர்கள் தங்கள் நண்பர்கள், துணைவர்கள் மற்றும் பிள்ளைகளின் குறைகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்துகிறார்கள்.
இதன் காரணமாக பைபிள் இந்த ஆலோசனையைத் தருகிறது: “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” (நீதிமொழிகள் 10:19) வேறு வார்த்தைகளில் சொன்னால், பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். வேறு ஒருவரைப் பற்றி எதையாவது சொல்வதற்கு முன் சிந்தியுங்கள். உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அந்த நபர் இருக்கையில் இதை நான் திரும்பச் சொல்வேனா? என்னைக் குறித்து இது சொல்லப்பட்டால் நான் எவ்வாறு உணருவேன்?’ (மத்தேயு 7:12) சங்கீதம் 39:1 சொல்கிறது: “என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன்.”
உங்கள் நாவை கட்டுப்படுத்துவது பெரும்பாலும் சாத்தியமற்றதாக இருக்கக்கூடிய சூழ்நிலைமைகள் இருக்கலாம். உதாரணமாக உங்களுக்கோ உங்கள் குடும்பத்துக்கோ எதிராக செய்யப்பட்ட வினைமையான தவறைக் குறித்து உங்களுக்கு பலமான சந்தேகங்கள் இருக்கலாம். எந்த அத்தாட்சியும் உங்களிடம் இல்லாமலிருக்கலாம், ஆனால் அதைக் குறித்து ஏதாவது ஒன்று செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதைக் குறித்து நம்பகமான ஒரு நண்பனிடம் அல்லது அதிகாரத்தையுடைய ஒருவரிடம் பேசுவது பழிதூற்றுவதாக இருக்குமா? ஆலோசனைக்காக நீங்கள் ஒருவரை அணுகும்போது கெட்ட எண்ணமுள்ள வீண்பேச்சாளராக நீங்கள் இருக்கிறீர்களா? தெளிவாகவே இல்லை. இரகசியமாக அறிவிக்கப்படும் பேச்சின் ஞானத்தை பைபிள் ஒப்புக்கொள்கிறது. நிச்சயமாகவே இப்படிப்பட்ட சாதுரியமாக கையாளப்பட வேண்டிய நிலைமைகளின் போது, நல்ல நிதானமும் சமநிலையும் அத்தியாவசியமாகும்.—நீதிமொழிகள் 15:22.
தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு செவிகொடுக்க வேண்டாம்: ‘பெரிய காதுகள்’ இல்லையென்றால் ‘பெரிய வாய்’களுக்கு என்ன நேரிடும்? முட்டாள்தனமான பேச்சில் இடைவிடாமல் ஈடுபடுகிறவர்கள் பிரச்னையின் ஒரு பாகமாக மாத்திரமே இருக்கின்றனர்; கவனித்துக் கேட்பதில் மகிழ்ச்சி காண்கிறவர்களும்கூட பதில் சொல்லும் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர். வெறுமென செவிகொடுத்துக் கொண்டிருப்பது, உங்கள் மெளனமான அங்கீகாரமாக அமைந்து, தீங்கிழைக்கும் வீண்பேச்சு பரவுவதற்கு உதவக்கூடும். நீதிமொழிகள் 17:4 சொல்கிறது: “துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.”
ஒருவரைப் பற்றிய பேச்சு கைமீறிப் போனால், நீங்கள் கொஞ்சம் தைரியத்தை காண்பித்து, ‘வேறு விஷயம் பற்றி பேசலாமே’ என்று சொல்ல வேண்டியிருக்கலாம். தற்போதைய உங்கள் நண்பர்களின் வட்டம் திருத்த முடியாதபடி தீங்கிழைக்கும் வீண்பேச்சில் ஈடுபடும் மனச்சாய்வுள்ளதாக நிரூபித்தால், புதிய தோழர்களை நீங்கள் தேடுவது குறித்தும்கூட சிந்திக்க வேண்டியதாக இருக்கலாம். பைபிள் சொல்கிறது: “வீண்பேச்சு பேசுகிறவன் ஒரு இரகசியத்தை ஒருபோதும் காத்துக்கொள்ள முடியாது. அதிகம் பேசுகிறவர்களிடமிருந்து விலகியிரு.” (நீதிமொழிகள் 20:19, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகவே சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளாக நீங்கள் ஆவது வெறும் காலம் பற்றிய ஒரு விஷயமாகும்.
வீண்பேச்சுக்கு அளவுக்கு அதிகமாக பிரதிபலிக்காதீர்கள்: அநேக ஆட்கள், வீண்பேச்சு தங்களைப் பற்றியதாக இல்லாத வரையில், வீண்பேச்சை அனுபவிக்கிறார்கள். மறுபட்சத்தில், அருவருப்பான வதந்தி அல்லது பொய்யான ஒரு கதை உங்களைப் பற்றியதாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். சில சமயங்களில் கதையினுடைய ஆரம்பத்தின் விவரத்தைக் கண்டுபிடித்து அமைதியாக காரியங்களை சரிசெய்வது சாத்தியமாக இருக்கிறது. ஆனால் உங்களால் முடியவில்லையென்றால் அப்போது என்ன?
நீங்கள் கோபப்படுவது எதையும் சாதிக்கப்போவதில்லை. ஆம், “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்,” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:17) சாலொமோன் இவ்விதமாக ஆலோசனை தருகிறார்: “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; . . . அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.” (பிரசங்கி 7:21, 22) வீண்பேச்சு வாழ்க்கையின் உண்மையாகும். எப்போதாவது ஒருசமயம் ஒருவேளை நீங்கள் தாமேயும் அதில் சுறுசுறுப்பாக பங்குகொண்டவர்களாக இருந்திருக்கிறீர்கள். இது உண்மையில் நிலைகுலைந்து போக தகுதியுள்ள ஒரு விஷயமா? கொஞ்ச காலத்துக்குப் பிறகு அது மறைந்துவிடுமா? “நகைக்க ஒரு காலமுண்டு,” ஒருவேளை உங்களுக்கு நகைச்சுவையுணர்வு இருப்பதை காண்பித்து, அதை விளையாட்டாக எடுத்துக் கொள்வதே வதந்தியை அடக்க சிறந்த வழியாக இருக்கும்.—பிரசங்கி 3:4.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றாதீர்கள்: செய்தி மறைந்து போக மறுக்குமானால் உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ‘வீண்பேச்சு பேச மற்றவர்களுக்கு நான் ஒரு காரணத்தைக் கொடுக்கிறேனா? தவறு செய்கின்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்து கேள்விக்குரிய முறையில் நான் ஒருவேளை நடந்துகொள்கிறேனா?’ பின்வரும் நிலைமைகளைச் சிந்தித்துப் பாருங்கள்:
◻ ஒரு பெண்ணின் சகவேலையாட்கள், அவள் தன் கடமைகளை திருப்திகரமாக நிறைவேற்றிய போதிலும்கூட அவளை சோம்பேறி என்றும் நம்பத்தகாதவள் என்றும் அவளுக்குப் பின்னால் பேசுகிறார்கள். ஏன் இந்தக் கெட்டப் பெயர்? ஒரு காரியமானது, அவள் கவலையற்ற சொகுசான வாழ்க்கையை விரும்பும் மனநிலையை வெளிப்படுத்துவது அது எளிதில் சோம்பல் என்று தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. அவள் வேலை செய்யும் அந்த வியாபார அமைப்புக்கு ஏற்ப அவள் சிகை அலங்காரம் அதிக அக்கறையோடு செய்யப்படாததாக இருக்கிறது. கடைசியாக அவள் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை கையாளுவதில் முழு அலுவலக பணியாளர்களின் கவனத்தையும் கவரும் வகையில் சப்தமாக பேசுவதில் அவள் அஜாக்கிரதையாக இருக்கிறாள். விளைவோ, வீண்பேச்சு!
◻ உள்ளூர் கடைக்காரர் ஒருவரைப் பற்றி அவருடைய சிறிய சமுதாயத்தில் எங்கும் பேசப்படுகிறது. அவர் தன் மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறார் என்பதே வதந்தியாக இருந்தது. அந்த மனிதன் பொய்க் குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்கிறார். வதந்திக்குக் காரணம்? பெண் வாடிக்கையாளர்களிடம் அனாவசியமான அவருடைய நெருங்கிய பழக்கத்துக்கு அவர் பெயர்பெற்றிருந்தார்.
◻ ஒரு பருவவயது பெண் ஒழுக்கமற்ற நடத்தையுள்ளவளாக பேசப்படுகிறாள். அவளுக்கு பல காதலர்கள் உண்டு என்றும் அவள் கொக்கேய்ன் பயன்படுத்துகிறவள் என்றும் சிலர் சொல்கிறார்கள். கதைகள் அனைத்தும் பொய்யாகும். ஆனால் போதை மருந்து பழக்கமுள்ளவர்களோடு அவள் கூட்டுறவு கொள்வது அறியப்பட்டிருந்தது. அவள் தன் உடையிலும், சிகை அலங்காரத்திலும் ஒப்பனையிலும் அளவுக்கு அதிகமாக இருக்கிறாள்.
கெட்ட எண்ணமுடைய வீண்பேச்சின் பலியாளாக நீங்கள் இருந்தால், உங்கள் நடத்தை, மற்றவர்களோடு நீங்கள் செயல்தொடர்பு கொள்ளும் முறை, உங்கள் உடை மற்றும் சிகை அலங்காரமும்கூட, ஏதாவது ஒரு வகையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதாக இருக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்கு பிரயோஜனமாக இருக்கும். ஒருவேளை உங்கள் வாழ்க்கைப்பாணியில் ஒரு சில மாற்றங்கள் வதந்தியை அடக்கிவிடும். “விறகில்லாமல் நெருப்பு அவியும்,” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 26:20) தவிர, உங்கள் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தையின் எல்லைக்கு அருகாமையில் இருக்குமானால், தவறான செயலுக்குள் நழுவி விழுவதற்கு எப்போதும் உண்மையான ஆபத்து இருக்கிறது, இது ஒரு சமயம் வதந்தியாக இருந்ததை நிஜமாக்கிவிடுகிறது.—கலாத்தியர் 6:7, 8; 1 கொரிந்தியர் 10:12 ஒப்பிடவும்.
“உங்கள் சொந்த அலுவல்களைப் பாருங்கள்”
வீண்பேச்சு நிலைத்திருக்கிறது. என்றபோதிலும் அதற்கிருக்கக்கூடிய அழிக்கும் வல்லமைக்காக அது கவனிக்கப்பட வேண்டும். பின்வரும் ஞானமுள்ள வார்த்தைகளை வெறுமென பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகுதியான மனவேதனையையும் துயரத்தையும் தவிர்த்துவிடலாம்: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் . . . , அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.”—பிலிப்பியர் 4:8, 9.
ஆம், மற்றவர்களைப் பற்றி நாம் பேசும் விதத்தைக் குறித்து கடவுள்தாமே அக்கறையுள்ளவராக இருக்கிறார். இயேசு கிறிஸ்து எச்சரித்தார்: “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்.”—மத்தேயு 12:36, 37; சங்கீதம் 52:2-5 ஒப்பிடவும்.
மற்றவர்களோடு நல்ல உறவுகளும், மனசமாதானமும் எல்லாவற்றிலும் அதிமுக்கியமாக கடவுளோடு ஒரு நல்ல நிலைநிற்கையும் உங்களுக்கு வேண்டுமா? அப்படியென்றால் கடவுளுடைய வார்த்தையின் ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட புத்திமதியைப் பின்பற்றுங்கள்: “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும் உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும் . . . வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.” (1 தெசலோனிக்கேயர் 4:12) மற்றவர்களில் அக்கறை காண்பியுங்கள், ஆனால் தயவான கண்ணியமான முறையில் அதைச் செய்யுங்கள். இவ்விதமாக கெட்ட எண்ணமுள்ள தீங்கிழைக்கும் வீண்பேச்சிலிருந்து நீங்கள் விலகியிருப்பீர்கள். (g91 6/8)
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, காவற்கோபுரம் சங்கம் வெளியிட்டுள்ள நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரம் 19-ஐ பார்க்கவும்.
[பக்கம் 9-ன் படம்]
புண்படுத்துகின்ற பேச்சிலிருந்து தூர விலகிச்செல்லுங்கள்
[பக்கம் 10-ன் படம்]
உங்களுடைய விவேகமற்ற நடத்தை உங்களைப் பற்றி வீண்பேச்சு பேச மற்றவர்களுக்கு காரணத்தை அளிக்கிறதா?