உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 7/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சாட்சிகள் மொசாம்பிக்கில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர்
  • U.S.S.R.-லிருந்து நற்செய்தி
  • “அதிக வன்முறையான இத்தாலி”
  • ஆப்பிரிக்காவின் இராட்சதர்களை பாதுகாத்தல்
  • ஹங்கேரியில் சாத்தானிய வழிபாடுகள்
  • பெரிய பவளத்திட்டு—அவ்வளவு பழமையானதாய் இல்லை
  • பிளாஸ்டிக் காடுகள்
  • பழுப்பு-நிற கரடிகளுக்கு பிரிவுரையா?
  • சமாதானமான கூட்டுவாழ்வு
  • புத்தகத் திருடர்கள்
  • அலுவலகத்தினூடே ‘வாகன சாலை’
  • யார் தீர்மானிப்பது?
  • மக்கள் ஏன் புகை பிடிக்கிறார்கள், ஏன் அவர்கள் புகை பிடிக்கக்கூடாது?
    விழித்தெழு!—1987
  • புகைபிடிப்போருக்கும் புகைபிடிக்காதோருக்கும் புகையிலையின் அபாயம்
    விழித்தெழு!—1988
  • சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா?
    விழித்தெழு!—1996
  • லட்சக்கணக்கான உயிர்கள் புகையோடு போகின்றன
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 7/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

சாட்சிகள் மொசாம்பிக்கில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர்

தென்கிழக்கு ஆப்பிரிக்க தேசமாகிய மொசாம்பிக்கில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற அமைச்சரவையிலிருந்து பிப்ரவரி 11, 1991 என்று தேதியிடப்பட்டு வந்த கடிதம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மற்ற மத அமைப்புகளைப் போன்று யெகோவாவின் சாட்சிகள் மொசாம்பிக் குடியரசின் அரசியல் சட்டத்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் உத்தரவாதங்களையும் அனுபவிக்கின்றனர்.” அதில் அத்தேசத்தின் மத அலுவல்கள் இயக்குநர் கையொப்பமிட்டிருந்தார். இந்த நற்செய்தியை 5,235 சாட்சிகள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். கடந்த ஜனவரி மாதத்தின்போது பைபிளின் செய்தியை அவர்கள் அங்கு பிரசங்கித்ததை அறிக்கை செய்தனர். மொசாம்பிக்கில் நடைபெற்ற மூன்று “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜரான 13,971 பிரதிநிதிகளும் கூட சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்ததற்கு நன்றி கூறினர். அங்கு 357 பேர் முழுக்காட்டப்பட்டனர். (g91 6⁄22)

U.S.S.R.-லிருந்து நற்செய்தி

சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கத்துக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கும் பத்திரத்தை மார்ச் 28, 1991 அன்று நீதித்துறை அமைச்சர் அச்சங்கத்து பிரதிநிதிகளிடம் கொடுத்தார்.

“அதிக வன்முறையான இத்தாலி”

இத்தாலி தேசத்தில் 1990-ம் ஆண்டில் நடைபெற்ற குற்றச்செயல் பற்றிய செய்திக்குறிப்புகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. கொர்ரேரி டெல்லா செரா (Corriere della Sera) என்ற இத்தாலிய தினசரியின்படி: “செய்திக்குறிப்புகள் வெகு தெளிவாக இருக்கின்றன. எச்சரிப்பதற்கான காரணத்தை அது கொடுக்கிறது.” குற்றச்செயல் சென்ற வருடத்தை விட 21.8 சதவீதம் அதிகரித்தது. 1990-ம் ஆண்டின்போது இஸ்டாட் (ISTAT) என்ற இத்தாலிய புள்ளிவிவர அமைப்பு கொடுத்த எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, 25,01,640 குற்றச்செயல்கள் நீதிமன்ற அதிகாரிகளிடம் அறிக்கை செய்யப்பட்டன. ஆக, சராசரியாக 6,854 குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் செய்யப்பட்டன. திகிலடையச் செய்யும் வேகத்தில் கொள்ளைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. இதில் ஏதாவது முன்னேற்றம் இருக்குமா என்பது அநிச்சயமாக இருக்கிறது. ஏனென்றால் இளைஞர் 1990-ல் 24,817 குற்றச்செயல்களை செய்திருக்கின்றனர். 1989-ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது 17.9 சதவீத அதிகரிப்பாக இருக்கிறது. “அதிக வன்முறையான இத்தாலி” 1990-களுக்குள் நுழைகிறது என்று லா ரிப்பப்லிகா (La Repubblica) என்ற தினசரி சொல்கிறது. (g91 7⁄8)

ஆப்பிரிக்காவின் இராட்சதர்களை பாதுகாத்தல்

ஆப்பிரிக்காவின் யானை தொகை பத்தாண்டுக்குள் முதன்முறையாக அதிகரித்திருக்கிறது என்று ஜெர்மன் வல்லுநர் குழு ஒன்று அறிவித்தது என்று தி ஸ்டார் (The Star) என்ற தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. இப்போது ஆப்பிரிக்காவில் 6,09,000 யானைகள் இருப்பதாக அந்தக் குழு மதிப்பிடுகிறது. 1979-ல் உயிரோடிருந்த எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக அது இருக்கிறது. ஆனால் கீழ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரிவு கடைசியாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அந்த குழு நம்புகிறது. தந்தத்தின் மீது பரவலாக விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை அவர்கள் பாராட்டுகின்றனர். ஏனென்றால் இதன் காரணமாக தந்தத்தின் விலைகள் குறைந்து, அந்த வியாபாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கிடையில், ஆப்பிரிக்க காண்டாமிருகங்களை பாதுகாப்பதற்கும் கூட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமீபியாவில் பாதுகாப்பாளர்கள் காண்டாமிருகங்களின் கொம்புகளை நீக்கிவிடுகின்றனர். அப்போது வேட்டையாடுபவர்களுக்கு மிருகங்களைக் கொல்வதற்கு எந்தக் காரணமும் இருக்காது. என்றபோதிலும், தி ஸ்டார் (The Star) என்ற பத்திரிகையில் ஸ்வாசிலாந்து பாதுகாப்பாளர் டெட் ரீலி என்பவர் இந்த நடவடிக்கை பயனற்றது என்று குறிப்பிடுகிறார். வேட்டையாடுபவர்கள் இளம் காண்டாமிருகங்களை கூட அவைகளின் சிறு கொம்புகளுக்காக கொல்லுவதை அவர் பார்த்திருக்கிறார். (g91 7⁄8)

ஹங்கேரியில் சாத்தானிய வழிபாடுகள்

ஹங்கேரியில் இருக்கும் இளைஞர் மத்தியில் சாத்தான் வழிபாடு அவ்வளவு பரவலாக ஆகியுள்ளதால் அது தேசத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. “பருவவயதினர் செய்திருக்கும் சடங்கு வெறி கொலைகளை விசாரணை செய்தபோது, சூனியக்காரர் செய்யும் வித்தைகளை பற்றிய சமீபத்திய பத்திரிகைகளை படித்த பின்னர் அநேக இளைஞர் சாத்தான் வணக்கத்தில் ஈடுபடுவதற்கு தூண்டப்பட்டதாக நூற்றுக்கணக்கான வழக்குகளை கண்டுபிடித்திருக்கின்றனர் என்று லண்டனில் பிரசுரிக்கப்பட்ட தி யுரோப்பியன் (The European) என்ற ஒரு வாராந்தர பத்திரிகை அறிக்கை செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு சடங்கு வெறி கொலையில் 17 வயது பையன் தன் 13 வயது சகோதரியை குத்தி, உறுப்பு உறுப்பாகப் பிரித்தெடுத்து, அவளுடைய உறுப்புக்களை அறையைச் சுற்றி பிரித்து வைத்தான். அதிர்ச்சியூட்டும் பிரசுரங்கள், திரைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை விளம்பரம் செய்வதன் பேரில் தடையுத்தரவு போட வேண்டும் என்று கிறிஸ்தவ மக்களாட்சி கட்சியின் உபதலைவரான பெலா செப் என்பவர் வேண்டுகோள் விடுத்திருப்பது ஆச்சரியப்படுவதிற்கில்லை. (g91 7⁄8)

பெரிய பவளத்திட்டு—அவ்வளவு பழமையானதாய் இல்லை

உலகின் மிகப்பெரிய பவள அடுக்கு அமைவு—பெரிய பவளத்திட்டு—ஒரு சமயம் நினைத்தது போல் அவ்வளவு பழமையானதாக இருக்காது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கரையோரமாய் சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் நீண்டு கிடக்கும் பவளப் பாறைகளின் பரந்த அமைவு சுமார் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்டது. என்றபோதிலும், பவளத்திட்டை ஆராய்ச்சி செய்யும் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பவள அமைவுகளுக்குள் துளையிட்டு பார்த்திருக்கின்றனர். பவளத்திட்டின் வயதைப் பற்றிய கேள்வியை மறுபடியும் ஆராய்ச்சி செய்து பார்க்கும்படி அவர்களுடைய கண்டுபிடிப்புகள் விஞ்ஞானிகளை தூண்டியிருக்கின்றன. அதன் வயது 500 ஆயிரம் மற்றும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே தான் இருக்கும் என்று அவர்கள் இப்போது நம்புகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞான சமுதாயத்தில் சலசலப்பை உண்டாக்கக்கூடும் என்று டெர்ரி சாவேஜ் (Terre Sauvage) என்ற ஃபிரெஞ்சு பத்திரிகை சொல்கிறது. ஏனென்றால் வித்தியாசமான உயிர் வகைகள் பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக தோன்றின என்ற பாரம்பரிய பரிணாமக் கோட்பாட்டுக்கு இது முரணாக இருக்கிறது. டெர்ரி சாவேஜ் (Terre Sauvage) விவரிக்கிறபடி, “ஒரு மிகப்பெரிய பிறப்பு மூல வெடிப்பிலிருந்து” உயிர் தோன்றியது என்பதை பவளத்திட்டிலிருந்து வரும் அத்தாட்சி குறிப்பிடுவதாகத் தெரிகிறது. (g91 7⁄8)

பிளாஸ்டிக் காடுகள்

“நாம் செயற்கை காடுகளை நட்டால், பயிர் செய்வதற்காக பாலைவனங்களின் நிலத்தை பத்து வருடங்களுக்குள் பண்படுத்தலாம்” என்று அன்ட்டோனியோ இபானெஸ் அல்பா என்ற கண்டுபிடிப்பாளர் கூறுகிறார். இயல்பாக நிகழக்கூடாததாக இது தொனித்தாலும், இந்தக் கருத்து அநேக வட ஆப்பிரிக்க தேசங்களால் நன்கு வரவேற்கப்பட்டிருக்கின்றன என்று டையரியோ 16 (Diario 16) என்ற மட்ரிட்-ன் தினசரி அறிக்கை செய்கிறது. இரவு நேர காற்றில் இருக்கும் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு, பகல் நேரத்தின் போது அதை வெளியிடுவது என்ற காடுகளின் இயற்கையான வேலையை, லட்சக்கணக்கான பிளாஸ்டிக் மரங்கள் அதே வேலையை செய்யும்படியான திட்டம் இது. பத்து-வருட காலத்தில் இந்தச் செயற்கை மரங்கள் போதுமான மழையை வரப்பண்ணி இயற்கையான மரங்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கும்படி செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பாலியூரிதேன் மரங்களின் தோற்றம் எதைப் போல் இருக்கிறது? “இயற்கையின் உருவமைப்புகள் மிகச் சிறந்தவையாக இருக்கிறபடியால், பனிநீரை சேமித்து பிறகு அது ஆவியாக மாறச் செய்வதற்கு வசதியாக உள்ள பனைமரங்களைப் போன்று இவை தோற்றமளிக்கின்றன” என்று அவைகளின் உருவமைப்பாளர் விளக்குகிறார். இவற்றின் பிரதான பயன்கள்? இவைகளுக்கு நீர்ப்பாசனம் தேவையில்லை. விறகுக்காக எவரும் இதை வெட்டவுமாட்டார்கள். (g91 7⁄8)

பழுப்பு-நிற கரடிகளுக்கு பிரிவுரையா?

ஃபிரான்ஸ் சீக்கிரத்தில் அதன் பழுப்பு-நிற கரடிகளை இழந்து விடக்கூடும் என்று பாரிஸ் செய்தித்தாளான லி ஃபிகேரோ (Le Figaro) அறிவிக்கிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து ஸ்பெய்ன் மட்டுமாக தன் வாசஸ்தலத்தை கொண்டிருந்த ஐரோப்பிய பழுப்பு நிறக் கரடி மேற்கு ஐரோப்பாவிலிருந்து முற்றிலுமாக மறைந்து விட்டிருக்கிறது. 1962 முதல் ஃபிரான்சில் இந்தக் கரடிகள் அதிகாரப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட இனங்களாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால் வேட்டையாடுதலும், விஷத்தின் மூலம் கொல்லுதலும், ஃபிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே உள்ள இக்கரடியின் இயற்கையான வாசஸ்தலமான பிரனீஸ் மலைகள் மறைந்து விட்டதும், இப்பொழுது உயிருள்ள கரடிகளின் எண்ணிக்கையை சுமார் பத்து என குறைத்திருக்கிறது—இந்த இனங்கள் நீடித்திருப்பதற்கு வெகு குறைவானவையே இருக்கின்றன—என்று சுற்றுப்புறச் சூழல் அறிஞர்கள் அஞ்சுகின்றனர். கரடிகளை காப்பதற்கான முயற்சிகளின் தோல்வியைக் குறித்து சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் ஜார்ஜஸ் எரோம் கூறுவதாவது: “சுற்றுப்புறத்தை சரிவர நிர்வகிப்பதில் நாம் முற்றிலும் தகுதியற்றவர்கள் என இது நிரூபிக்கிறது. ஆயினும் இன்று நம் சுற்றுப்புறச் சூழல் தான் உயிர் என்று நாம் உணர்வுக்கு வந்திருக்கிறோம்.” (g91 7⁄8)

சமாதானமான கூட்டுவாழ்வு

காகங்களுக்கும் மனிதர்களுக்கும் நடந்த போராட்டத்தில் காகங்கள் வென்றுவிட்டன—ஜப்பானில் உள்ள ஓட்டா பட்டணத்தில். அநேக வருடங்களாக காகங்கள் மின்சார கம்பங்கள் மீது தங்கள் கூடுகளை கட்டுவதற்கு இரும்பு மற்றும் செம்பு கம்பித் துண்டுகளை பயன்படுத்தியிருக்கின்றன. தங்கள் உலோக கூடுகள் மின்தடங்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதை பற்றி காகங்களுக்கு கவலையில்லை. டோக்கியோ மின்சார கம்பெனி இந்தக் கூடுகளை எப்போதும் நீக்க வேண்டிய வேலையில் சலித்துப் போய் கூடு கட்டும் இக்காகங்களுக்கு உதவி செய்ய தீர்மானித்தது. இந்த மின்சார கம்பெனியின் புதிய கொள்கையின் முதல் வருடத்தின் போது மின் தடங்கல் பிரச்னைகளை ஏற்படுத்தாத வகையில் கூடைகளைப் போன்ற நூற்றுக்கணக்கான கூடுகள் மின் கம்பங்களின் மேல் கட்டப்பட்டன என்று டோக்கியோவின் அசாஹி ஈவ்னிங் நியுஸ் (Asahi Evening News) அறிக்கை செய்கிறது. இப்புதிய கூடைகள் காகங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. இறுதியாக இப்போது காகங்களும் ஓட்டாவிலுள்ள மின்சார கம்பெனியும் சமாதானமான கூட்டுவாழ்வு நடத்துகின்றனர். (g91 7⁄8)

புத்தகத் திருடர்கள்

புத்தகத் திருடுகள் அதிகரித்து வருவதைக் குறித்து நூலகர்களும், புத்தகத் தொழிலில் உள்ள பிறரும் கவலைப்படுகின்றனர். சிக்காகோ பொது நூலகத்தின் இயக்குநரான மேரி எல்லன் க்வின் ‘இந்த நூலக அமைப்பு, ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தகங்கள் திருடப்படுகின்றனவோ அத்தனை புத்தகங்களை வாங்குகிறது என சொல்வதாக’ தி நியு யார்க் டைம்ஸ் புக் ரிவ்யு (The New York Times Book Review) சொல்கிறது. இந்தப் புத்தகத் திருடர்களின் பட்டியலில் சில மருத்துவர்களும், நிருபர்களும், வழக்கறிஞர்களும், இறையியல் மாணவர்களும், ஆசிரியர்களும், நூலகர்களும் கூட அடங்குவர். புத்தகங்களை திருடுபவர்கள் “உலகத்திலுள்ள சில மிகச் சிறந்த மனிதர்கள்” என ஒரு நிபுணர் குறிப்பிட்டார். பைபிள் “வெகு அதிகமாகத் திருடப்படும் ஒரு புத்தகமாக இருப்பது தெளிவாக இருக்கிறது. ஜனங்களால் எல்லாக் காலங்களிலும் விரும்பப்படும் இதை திருடாமலிருக்க முடியாது” என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். (g91 6⁄22)

அலுவலகத்தினூடே ‘வாகன சாலை’

ஓர் உருளை வடிவ கட்டிடத்தின் வழியாக ஒரு நெடுஞ்சாலை செல்வதை ஜப்பானில் உள்ள ஒசாக்கா நகரத்துக்கு விஜயம் செய்பவர்கள் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். “சாலையின் அமைப்பு கட்டிடத்தை தொடுவதில்லை. எனவே எவ்வித அதிர்வும் தெரிவதில்லை. இரைச்சலும், மோட்டார் வாகனப் புகையும் அலுவலகப் பணியாட்களை தொந்தரவு செய்யாதபடி இந்த நெடுஞ்சாலையை சுற்றி மூடுவதற்கு ஒரு சுவரைக் கட்டுவோம்” ஹேன்ஷின் எக்ஸ்பிரஸ்வே பப்ளிக் கார்ப்ரேஷன்-னின் அதிகாரி ஒருவர் விளக்கினதாக மாய்னிச்சி டெய்லி நியுஸ் (Mainichi Daily News) கூறுகிறது. இத்தகைய நிர்மாணிப்புக்கு முக்கியமான காரணம் இப்பகுதிகளில் நிலத்தின் விலை ஒரு சதுர மீட்டருக்கு 75,000 டாலர்கள். இந்த நெடுஞ்சாலையை 16 மாடி கட்டிடத்தினூடே ஐந்திலிருந்து ஏழாவது தளம் வரை கொண்டு செல்வதன் மூலம் ஹேன்ஷின் கார்ப்ரேஷன் சுமார் 1,20,00,000 டாலர்களை மிச்சப்படுத்துகிறது. ஒசாக்காவில் கட்டப்பட இருக்கும் கட்டிடங்களின் வழியாக செல்லும் மூன்று நெடுஞ்சாலைகளில் முதலாவது இது. இது இந்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது. (g91 7⁄8)

யார் தீர்மானிப்பது?

பெற்றோரை வாங்கும்படி செய்வதற்கு பிள்ளைகளை எவ்விதம் கவர்ச்சிப்பது என விளம்பரதாரர்கள் வெகு காலமாக அறிந்திருக்கின்றனர். ஃபிரான்சில் உள்ள பிள்ளைகளின் நிறுவனம் நடத்திய ஒரு கணக்கெடுப்பு “பின்வரும் விஷயங்களில் ஒரு பிள்ளையின் கருத்தே முடிவானதென காட்டுகிறது: உணவு (70%), விடுமுறையை திட்டமிடுதல் (51%), சுத்தமும் அழகு சாதனங்களும் (43%), வீட்டுக்குத் தேவையான சாதனங்கள் (40%), டிவி-ஹை-ஃபை (hi-fi) (33%), கார்கள் (30%)” என்று லி ஃபிகேரோ மேகஸின் (Le Figaro Magazine) அறிக்கை செய்கிறது. ஆனால் ஒரு பெரிய விளம்பர நிறுவனத்தின் அலுவலர் இந்த எளிய நினைப்பூட்டுதலை கொடுத்தார்: “பிள்ளைகள் தங்களை ஆளும்படி பெரியவர்கள் அனுமதிக்கக்கூடாது.” (g91 7⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்