உலகத்தைக் கவனித்தல்
ஆசியாவில் போதமருந்தைச் சார்ந்திருப்பவர்கள் அதிகம்
அநேக ஆசிய தேசங்களில், ஹெராய்ன் போதமருந்தைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை வானளாவ உயர்ந்திருக்கிறது. உதாரணமாக, 1980-ல், இலங்கையில் ஹெராய்ன் போதமருந்தைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது அவர்களின் எண்ணிக்கை சுமார் 40,000. அதே காலப்பகுதியில், பாகிஸ்தானில் போத மருந்தைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை வெறுமென ஒருசில ஆயிரங்களிலிருந்து 18 இலட்சத்தைச் சென்றெட்டியது. ஏசியாவீக் பத்திரிகை சொல்வதாவது, “கடுமையான தண்டனைகள் போதமருந்து வியாபாரத்தின் அதிகரித்துவரும் போக்கைக் குறைக்க தவறிவிட்டிருக்கின்றன. போதமருந்து வைத்திருந்ததற்காக விதிக்கப்படும் உலகத்தின் கடுமையான தண்டனைகளில் ஒன்று இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கிறது: இரண்டு கிராம் [0.07 oz] ஹெராய்ன் அல்லது கோகய்ன் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுட்கால சிறையிருப்பு விதிக்கப்படுகிறது.” போதமருந்து வியாபாரத்தில் கிடைக்கின்ற பணம் சம்பந்தமான லாபமானது மற்ற பயிர்களை பயிரிடுவதிலிருந்து ஹெராய்ன் உற்பத்தி செய்யும் செடிகளை வளர்ப்பதற்கு மாறிச்செல்ல விவசாயிகளுக்கு தீவிரத் தூண்டுதலாக இருக்கிறது. கொலம்போவிலுள்ள அபாயகரமான போதமருந்துகள் கட்டுப்பாடு தேசிய வாரியத்தின் டாக்டர் ரவி பெரெய்ரா குறிப்பிட்டதாவது: “நாளைக்கு சர்க்கரை இல்லையென்றால், அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் ஹெராய்ன் இல்லையென்றால், ஜனங்கள் அதற்காக கடைவிட்டு கடைத் தேடி அலைவார்கள். அதைப் பெற்றுக்கொள்ள அவர்கள் எவ்வளவும் செலவு செய்வார்கள்.” (g91 7/22)
பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்கள்
கடந்த பத்தாண்டுகள் முழுவதும் பூமியதிர்ச்சிகளால் ஏற்பட்ட மரண எண்ணிக்கைக்குச் சமமான அளவில் மரணம் 1990-ல் பூமியதிர்ச்சியால் ஏற்பட்டது. ஐ.மா. புவியமைப்பு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியின் பிரகாரம், 1980 முதல் 1989 வரை சம்பவித்த பூமியதிர்ச்சிகளில் மரணமடைந்தவர்கள் சுமார் 57,500 என்ற எண்ணிக்கையோடு ஒப்பிட, 1990-ல் பூமியதிர்ச்சியினால் 52,000-ற்கும் மேற்பட்ட மரணங்கள் அறிக்கைச் செய்யப்பட்டிருக்கின்றன. இது 1976 முதற்கொண்டு பார்க்கையில் மிக உயர்ந்த வருடாந்தர மரண எண்ணிக்கையாகும். பெரும்பாலான மரணங்கள் ஜூன் மாதம் ஈரானைத் தாக்கிய 7.7 என்ற அளவைக் கொண்ட ஒரே பூமியதிர்ச்சியில் சம்பவித்தன; அதில் 50,000 பேர் கொல்லப்பட்டதாகவும் 60,000 பேர் காயமடைந்ததாகவும் கணக்கிடப்பட்டது. 1990-ல் 68 பெரிய பூமியதிர்ச்சிகள் சம்பவித்ததாக அந்த அறிக்கைக் குறிப்பட்டது; இது அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 8 கூடுதலாகும். (g91 8⁄8)
பலூன் தொழிற்சாலை வீழ்ச்சியடைகிறது
ஆயிரக்கணக்கில் பிரகாசமான வண்ண பலூன்கள் மெதுவாக விண்ணில் கிளம்பிச் செல்வதையும் பார்வையிலிருந்து மறைந்துபோவதையும் கவனிப்பது அநேகருக்கு ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கலாம். ஆனால் ஐக்கிய மாகாணங்களில் அது இனிமேலும் சாதாரணமாக காணப்படும் ஒன்றாக இருப்பதில்லை. 1985-ல் நியூ ஜெர்ஸியில் கரைக்கு ஒதுக்கப்பட்ட மரித்த திமிங்கலம் ஒன்றின் வயிற்றில் ஒரு பலூனும் மற்றும் மரித்த கடல் ஆமை ஒன்றில் இன்னொரு பலூனும் காணப்பட்டது முதற்கொண்டு, சிதறிக்கிடக்கின்ற பலூன்களைச் சாப்பிடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான மிருகங்கள் கொல்லப்படுகின்றன என்று நம்புகின்ற குழந்தைகள் பலூன்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்று புகார் செய்துவந்திருக்கின்றனர். சட்டம் இயற்றுபவர்கள் குழந்தைகளின் கூக்குரலுக்குச் செவிசாய்த்திருக்கின்றனர். அநேக மாகாணங்களும் நகரங்களும் பலூன் விடுவதற்கு எதிராக ஏற்கெனவே தடை விதித்திருக்கின்றன அல்லது கட்டுப்பாட்டைப் போட்டிருக்கின்றன. மிருக மரணங்களைப் பற்றிய கூற்றுகளைப் பலூன் தொழிற்சாலை எதிர்த்து வாதிட்டபோதிலும், பலூன் விற்பவர்கள் விற்பனையில் ஓர் ஆண்டிற்கு 60 இலட்சம் டாலர்கள் இழப்பதாகச் சொல்லப்படுகிறது. (g91 7/22)
டால்ஃபின் மரணம்
“உலகிலுள்ள 65 வகை கடல்வாழ் பாலூட்டிகள் அதிகரித்துவரும் எண்ணிக்கையில் அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன” என்று ஆராய்ச்சியொன்று காட்டுகிறது என்பதாக சர்வதேசிய சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பெர்ஸ்பெக்டிவ்ஸ் என்ற செய்தி அறிக்கைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5,00,000-ற்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் கொல்லப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர். சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரகாரம், அது நடத்திய ஆராய்ச்சியின்படி, ஜப்பான், மெக்சிக்கோ, பெரு, தென் கொரியா, இலங்கை மற்றும் தாய்வான் போன்ற தேசங்களில் இருப்பவர்கள் மிக மோசமாக ஊறுவிளைவிப்பவர்களாக இருக்கிறார்கள்; “ஜப்பானில் அதிகளவாக ஒவ்வொரு ஆண்டும் 1,00,000-க்கும் அதிகமாக கடல்வாழ் பாலூட்டிகள் அழிக்கப்படுகின்றன.” அலைகளில் அடிக்கப்பட்டுச் செல்லும் பெரிய மீன்பிடிக்கும் வலைகளே மரணத்திற்குப் பிரதான காரணம். இருந்தபோதிலும், டால்ஃபின்கள் “சுடப்படுகின்றன, ஆயுதங்களால் தாக்கப்படுகின்றன, ஈட்டியால் குத்தப்படுகின்றன, பெரிய கொக்கிபோட்டு இழுக்கப்படுகின்றன, தூண்டிலிட்டு இழுக்கப்படுகின்றன, மூழ்கடித்து கொல்லப்படுகின்றன, கரையோரத்திற்கு இழுக்கப்படுகின்றன, மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்படுகின்றன, முட்கம்பி சுற்றப்பட்ட விசேஷ ஈட்டிகளால் இழுக்கப்படுகின்றன, வெடிகுண்டு வீசி தாக்கப்படுகின்றன மற்றும் உருக்குலைக்கப்படுகின்றன.” (g91 7/22)
விலங்கின உடல்நல பாதுகாப்பு
வளர்ப்பு மிருகங்களுக்கான மருத்துவ உலகம் “முன்னேறிய சிக்கலான அறுவைச் சிகிச்சை முதற்கொண்டு உடல் எடையைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள், பல் சம்பந்தமான கவனிப்பு மற்றும் நடத்தைச் சம்பந்தமான ஆலோசனை வரை” எல்லாவற்றையும் உள்ளடக்குகிறது என்பதாக தி டொரொன்டோ ஸ்டார் அறிக்கைச் செய்கிறது. “இன்று ஒரு மிருகத்தை வைத்திருப்பது என்பது அதிகச் செலவை உட்படுத்துகிறது” என்று ஒரு தாதி சொன்னாள். ஒரு பெரிய நாயின் உடைந்த காலுக்குச் சிகிச்சையளிக்க 700 டாலருக்கும் (கானடா நாட்டு டாலர்) கூடுதலாக செலவாகக்கூடும். வீங்கிய கல்லீரல் ஒன்றிற்கு சிகிச்சையளிக்க 800 டாலர் மற்றும் அதற்கு மேலாகவும் செலவழிக்கத் தயாராயிருங்கள். மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கு 5,000 டாலருக்கும் கூடுதலாக செலவாகக்கூடும். நடத்தைச் சம்பந்தப்பட்ட ஆலோசனைக் கொடுக்க ஒரு மணிநேரத்திற்கு 100 டாலர் செலவாகிறது. விலங்கின உடல்நல சேவைகள், பிரசவ பிரிவுகள், தீவிர கவனிப்பு வசதிகள், அக்குபன்சர் சிகிச்சைமுறை உபயோகம், மின்னணு இருதய சோதனைக் கருவி உபயோகங்கள், கண் பார்வையை மறைக்கும் சதை வளர்ச்சி நீக்கம், விசேஷித்த பல்வேர் மற்றும் பற்சொத்தை பராமரிப்புகள், மற்றும் மிருகங்களுக்கான காப்பீட்டு திட்டத்தையும் கூட உள்ளடக்குகின்றன. (g91 8⁄8)
காடுகள் வேகமாக மறைந்துபோகின்றன
“பூமியின் உஷ்ண மண்டல காடுகள் முன்பு கணக்கிட்டதைவிட 50% அதிக வேகமாக மறைந்து வருகின்றன,” என்பதாக சர்வதேசிய சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் செய்தி அறிக்கையாகிய பெர்ஸ்பெக்டிவ்ஸ் அறிக்கைச் செய்கிறது. ஓர் ஆண்டிற்கு 1.1 கோடி ஹெக்டேர் என்று கணக்கிட்டதற்கு மாறாக, “ஒவ்வொரு ஆண்டும் 1.6 முதல் 2 கோடி ஹெக்டேர் [4 முதல் 5 கோடி ஏக்கர்] உஷ்ண மண்டல காடுகள் அழிக்கப்படலாம்” என்று உலக வளஆதாரங்கள் நிறுவனத்தால் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் இப்பொழுது காட்டுகின்றன. (g91 8/8)
எண் 666-ன் முடிவு
“சாத்தானிய எண்ணாகிய 666-ஐ வாகன உரிமத் தகடுகளில் போடுவதை பிரிட்டன் நிறுத்திவிட்டது” என்று லீடர்ஸ் என்ற பிரசுரம் அறிக்கைச் செய்கிறது. பிரிட்டிஷ் போக்குவரத்து இலாகாவின் சார்பாக பேசுபவராகிய அனெட்டே வெல்ஸின் பிரகாரம், ஓட்டுநர்கள் அவர்கள் எதிர்ப்பட்ட விபத்துக்களுக்கு அந்த எண் காரணமாக இருந்தது என்று முறையிட்டிருக்கின்றனர். வேல்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த எண் அவருக்குக் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு, அவருடைய வீட்டின் தண்ணீர் விநியோகத்திற்கு விஷம் கலக்கப்பட்டது, அவருடைய வீடு களவாடப்பட்டது மற்றும் சுமை வண்டியொன்று அவருடைய கார் மீது மோதி அதைச் சேதப்படுத்தியது என்பதாக சொன்னார். உண்மையில், வெளிப்படுத்துதல் 13:18 உலக அரசியல் ஒழுங்குமுறையைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அடையாள குறிப்பான மூர்க்க மிருகம் ஒன்றிற்கு 666 என்ற எண்ணைப் பொருத்துகிறது. ஆனால் விபத்துக்களோடோ அல்லது அதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்களோடோ அதைச் சம்பந்தப்படுத்துவதில்லை. (g91 8/8)
எய்ட்ஸ் அதிகரித்துக்கொண்டேபோகிறது
இதுவரைச் செய்யப்பட்ட கணிப்புகளில், மிக பயங்கரமான எய்ட்ஸ் நோய் கணிப்பு உலக சுகாதார அமைப்பினால் (WHO) வெளியிடப்பட்டிருக்கிறது. 2000-வது ஆண்டிற்குள்ளாக, உலகளாவிய விதத்தில் எய்ட்ஸ் நோய்க் கிருமியால் 1 கோடி குழந்தைகளும் 3 கோடி பெரியவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. அதற்குள் ஒரு கோடி மக்கள் முழு வளர்ச்சியடைந்த எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் இந்த நோய் உண்டாக்கிய மரணங்கள் சுமார் ஒரு கோடி குழந்தைகளை அனாதைகளாக்கும் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோயால் 50 இலட்சம் குழந்தைகளும் 2 கோடியே 50 இலட்சம் பெரியவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று இரண்டாண்டிற்கு முன் WHO கணக்கிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள சகாராவின் உட்பகுதிகளிலும் ஆசியாவிலும் இந்த நோய்கிருமி திடுக்கிடவைக்கும் வேகத்தில் பரவிக்கொண்டிருந்ததாக ஆராய்ச்சிகள் காட்டியபோது கணிப்புகள் திருத்தியமைக்கப்பட்டன. (g91 8/8)
உபயோகமற்ற துப்பாக்கிகள்
தொடர்ந்திருக்கும் குற்றச்செயல் ஆபத்தின் காரணமாக, ரோமிலுள்ள அநேகர் பல்வேறு விதமான தற்காப்பு கருவிகளை நாடிச் செல்கின்றனர். லா ரிபப்லிக்காவின் பிரகாரம், தாக்குபவர்களை முடமாக்க பயிற்றுவிக்கப்பட்ட தாக்கும் நாய்கள், இராணுவ சம்பந்தப்பட்ட தற்காப்புச் செயல்கள், இரசாயன திரவம் அடங்கிய தெளிப்பான்கள், பிச்சுவாக்கள், வில்கள், மற்றும் கத்திப் பிரம்புகளை மக்கள் உபயோகிக்கின்றனர். 15,000-ற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் துப்பாக்கிகளை ஏந்திச்செல்ல காவல்துறையிலிருந்து அனுமதிபெற்றிருக்கின்றனர். இத்தாலிய யூனியனிலுள்ள மார்க்ஸ்மெனில் இருக்கும் ரோமின் பிரதிநிதியாகிய ஜியன்ஃப்ரான்கோ ரோடோலிகோவின் பிரகாரம், சாதாரண மனிதன் ஒரு துப்பாக்கியை ஏந்திச் செல்வது உபயோகமற்றது என்பதாக லா ரிபப்லிக்கா குறிப்பிட்டது. அவர் சொன்னார்: “நீங்கள் எல்லாச் சமயங்களிலும் கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுற்றித்திரிய முடியாது. எவராவது என்னைத் தாக்கினால், அதை உறையிலிருந்து எடுத்து உபயோகிப்பதற்கு நிச்சயமாகவே எனக்கு நேரம் இருக்காது.” (g91 7/22)
சுறா-உண்ணும் மனிதர்
சுறா மீன்கள் முக்கியமாக ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஐக்கிய மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் ஆபத்திற்குள்ளாகின்றன. உணவிற்காக உபயோகிப்பதில் சுறா மீன்களின் இறைச்சி அவ்வளவு பிரபலமாக இருப்பதன் காரணமாக இந்தப் பகுதிகளிலுள்ள சுறா மீன்களின் தொக படிப்படியாக குறைந்துபோகிறது. டைம் பத்திரிகையின் பிரகாரம், “வியாபாரத்திற்காக சுறா மீன்களைப் பிடிப்பது ஐ.மா.-வில் 1980-ல் 500 டன்களுக்கும் குறைவாக இருந்ததிலிருந்து 1989-ல் 7,144 டன்களைச் சென்றெட்டியது.” சுறா மீன்களின் செதில்கள் ஆசியாவில் சுவையுள்ள ஆகாரமாக கருதப்படும் ஒருவித சூப் தயாரிக்க உபயோகிக்கப்படுகின்றன. சில உணவு விடுதிகள் ஒரு கிண்ண அளவு பாகு போன்ற சூப்பிற்கு 50 டாலர் (ஐ.மா.) என்றும் கூட விலைப் போகின்றன. மீன் செதில்களை எடுத்துக்கொள்வதற்கு மீனவர்கள் “சுறா மீன்களைப் பிடித்து, அவற்றின் துடுப்புகளை வெட்டியெடுத்து, குற்றுடலான உயிரினங்களை அவை மரிக்கும் வகையில் மறுபடியும் கடலுக்குள் எறிந்துவிடும் கொடூரமான பழக்கத்தில்” ஈடுபடுகின்றனர் என்பதாக டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது. (g91 7/22)
குறைவான உப்பு பிரயோஜனமுள்ளது
உட்கொள்ளும் உப்பின் அளவை ஒரு நாளுக்கு மூன்று கிராம் குறைத்துக்கொள்வது மேற்கத்திய நாடுகளில் இருதய நோய் உண்டாவதை 16 விழுக்காடாகவும் பக்க வாதம் நேரிடுவதை 22 விழுக்காடாகவும் குறைக்கக்கூடும் என்று லண்டனின் ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். இவ்வாறு குறைத்துக்கொள்வது மருந்து சிகிச்சையைக் காட்டிலும் அதிக பலன் தருகிறது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற பிரசுரத்தில் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகையில், லண்டனிலுள்ள புனித பார்தொலோமியூ மருத்துவமனை மருத்துவ பள்ளியின் ஆய்வாளர்கள், உணவு தயாரிப்பவர்கள் தங்களுடைய உணவுப் பொருட்களில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளும்படி ஆலோசனைக் கொடுக்கின்றனர். பதனிடப்பட்ட உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படாமல் இருந்தால், மாரடைப்பு 30 விழுக்காடு அளவிற்கும் மற்றும் பக்கவாதத்தினால் ஏற்படும் மரணத்தை 39 விழுக்காடு அளவிற்கும் குறைக்கக்கூடும், பிரிட்டனில் மட்டும் ஓர் ஆண்டிற்கு 65,000 மரணங்களைத் தடுக்கலாம் என்று அவர்கள் சொல்கின்றனர். சாப்பாடு மேஜையிலிருக்கும்பொழுது மறுபடியும் உப்பைச் சேர்த்துகொள்ளாமலிருப்பதன் மூலமும் உப்புள்ள உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலமும் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளும்படி மக்களுக்கு ஆலோசனைச் சொல்லப்படுகிறது. (g91 8/8)