போட்டிவிளையாட்டுகளோடு இன்றுள்ள பிரச்னைகள்
போட்டிவிளையாட்டுகள் நற்பண்புகளை வளர்ப்பதனால் அவை பயனுள்ளவையென மக்கள் வாதாடியதுண்டு. விளையாட்டுகள் கடின வேலை, விளையாட்டு வீரர்களுக்கான தன்மைகள், விளையாடுவதால் வரும் மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான போற்றுதலை வளர்த்திருப்பதாக அவர்கள் வலியுறுத்திக் கூறினர். ஆனால் இன்று அநேகருக்கு, அதைப்போன்ற விவாதங்கள் பொருளற்றதாகவும், போலியாகவும்கூட தோன்றுகின்றன.
வெற்றிபெறுதலின் மேலுள்ள முக்கியத்துவம் குறிப்பாக ஒரு பிரச்னையாக இருக்கிறது. செவன்டீன் பத்திரிகை இதைப் “போட்டிவிளையாட்டுகளின் இருண்ட பக்கம்” என்று அழைக்கிறது. ஏன்? ஏனென்றால், பத்திரிகையிலிருந்து மேற்கோள் காட்ட, “வெற்றிபெறுவது, உண்மைத்தன்மை, பள்ளிவேலை, ஆரோக்கியம், சந்தோஷம், மற்றும் வாழ்க்கையின் மற்ற முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைப் பற்றியுள்ள அக்கறைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளுகிறது. வெற்றிப்பெறுவது எல்லாமுமாகிவிடுகிறது.”
விளையாட்டு சாதனை புரிவதில் அளவுக்கதிக முக்கியத்துவம் கொடுத்தலின் வருந்தத்தக்க விளைவுகளை எடுத்துக் காட்ட, கேதி ஆர்ம்ஸ்பி என்ற ஒரு தலைச்சிறந்த ஐ.மா. கல்லூரி ஓட்ட வீராங்கனையின் அனுபவம் பயன்படுத்தப்பட்டது. 1986, ஜூன் 4-ம் தேதி, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசீய கல்லூரிப் பெண்களுக்கான ஒரு பதிவை ஏற்படுத்தி சில வாரங்களுக்குப் பிறகு, NCAA (நேஷனல் காலேஜியேட் அத்லிட்டிக் அசோசியேஷன்) வீராங்கனைகளுக்கான பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போது, கேதி ஓடும் பாதையிலிருந்து திசைமாறி அருகேயுள்ள பாலத்திற்கு ஓடி, தற்கொலை செய்துகொள்ளும் ஒரு முயற்சியில் குதித்தாள். அவள் தப்பிப்பிழைத்தாள், ஆனால் அவள் இடுப்பிலிருந்து கீழே முடமாக்கப்பட்டாள்.
விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவம் பார்க்கும் ஒரு மனநோய் நிபுணர், ஸ்காட் பெங்கெலி, கேதி மட்டும் தனித்தில்லை என்று கூறுகிறார். கேதியின் தற்கொலை முயற்சிக்குப் பிறகு, பெங்கெலி அறிக்கை செய்தார்: “‘கேதி உணர்ந்தது போலவே நானும் உணர்கிறேன்’ என்று சொல்லிய தொலபேசி அழைப்புகளைப் பெற்றேன்.” மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின், மேரி வாஸட்டர் என்ற தேசீய வயது வரம்புக்குட்பட்டோருக்கான அரை மாரத்தான் ஓட்டத்தில் பதிவு ஏற்படுத்திய வேறொரு வீராங்கனையும் ஒரு பாலத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்து, வாழ்க்கை முழுவதும் முடமாக்கப்பட்டவளானாள்.
வெற்றிபெறுவதற்கான மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் மிக அதிகமாகவும், மற்றும் தோல்வியின் விளைவுகள் அழிவுக்கேற்றவையாகவும் இருக்கும். கலிஃபோர்னியா ஏஞ்சல்ஸ் அணியின் தலைச்சிறந்த பந்து வீச்சாளர், டானி மோர், தன்னுடைய அணியை 1986-ம் உலகத் தளக்கட்டுப் பந்தாட்டத்தொடரில் பங்கேற்க வைக்க, எதிரணியின் பந்தடிப்பவரை இன்னும் ஒரேஒரு முறை பந்தடிக்க வைக்க வேண்டியவராயிருந்தார். ஆனால் போஸ்டன் அணியின் பந்தடிப்பவர் வெற்றிபெறவைக்கும் அடியை அடித்து, போஸ்டன் வெற்றிபெற்று அமெரிக்க சாம்பியன்ஷிப் லீக் ஆட்டத்தையும் வென்றது. டானி, அவனுடைய நண்பர்களின்படி, தோல்வியினால் வெறுப்பூட்டப்பட்டு, தன்னையே சுட்டுக் கொன்றான்.
மட்டுமீறிய போட்டிமனப்பான்மை
போட்டிவிளையாட்டுகளினால் வரும் ஒரு சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமீறிய போட்டிமனப்பான்மையாகும். போட்டியாளர்கள் கொடியவர்களாக மாற்றப்படுகிறார்களென்று சொன்னால் அது மிகையாகாது. பலமான குத்துச்சண்டை வீரர்களுக்கான போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, லேரி ஹோம்ஸ், தான் வளையத்திற்குள் நுழையும்போது மாறவேண்டியவராய் இருக்கிறார் என்றார். அவர் விவரிக்கிறார்: “டாக்டர் ஜெகில் மற்றும் திரு. ஹைட் போல, நான் நற்குணங்களையெல்லாம் வெளியே விட்டு எல்லாக் கெட்டவைகளையும் உள்ளே கொண்டுவரவேண்டியவனாய் இருக்கிறேன்.” விளையாட்டு வீரர்கள், சமமான திறமையுடைய மற்றவர்கள் தங்களைத் தோற்கடிப்பதைத் தவிர்க்கும் முயற்சியில் கட்டாயத்துடன் கூடிய வெறுப்பை வளர்க்கின்றனர்.
“உங்களுக்குள் அந்தத் தீ இருக்க வேண்டும்,” ஒரு முன்னாள் கால்பந்தாட்டப் பயிற்சியாளர் ஒருமுறை கூறினார், “மேலும் வெறுப்புணர்ச்சியைப் போல அந்தத் தீயை எரியச் செய்வது வேறொன்றுமில்லை.” ஐ.மா.-வின் முன்னாள் ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் ஒரு கல்லூரி கால்பந்தாட்ட அணியிடம் ஒருமுறை இவ்வாறு கூறியதாக அறிக்கை செய்யப்பட்டது: “நீங்கள் உங்கள் எதிரணிக்காக ஒரு நல்ல வெறுப்புணர்ச்சியை உணர வேண்டும். அது ஒரு நல்ல வெறுப்புணர்ச்சி, ஏனென்றால் நீங்கள் கால்பந்தாட்ட உடையில் இருக்கையில் அது அடையாளமானதாகவே இருக்கிறது.” ஆனால் எதிராளிகளுக்காக வெறுப்பை வளர்ப்பது உண்மையிலேயே நல்லதா?
போஸ்டன் செல்டிக்ஸ் அணியின் முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் பாப் கூஸி, டிக் பார்னட் என்ற அதிக புள்ளிகள் எடுக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் அணியைச் சேர்ந்தவரைப் புள்ளிகள் எடுக்கவிடாமல் தடுக்கும் தன்னுடைய வேலையைப் பற்றிக் கூறுகிறார்: “காலை முதல் இரவு வரையாக என் அறையிலே உட்கார்ந்தேன். நான் செய்ததெல்லாம், பார்னட்டைப் பற்றி சிந்திப்பதாகும், பாதி அவனை எதிர்த்து விளையாடப்போகும் விதத்தையும், பாதி அவன்மீது வெறுப்புணர்ச்சியை உருவாக்கிக்கொண்டிருத்தலும். மைதானத்திற்குள் செல்லும்போது, பார்னட் நட்புடன் ‘ஹலோ’ என்று சொல்லியிருந்தால் ஒருவேளை நான் அவனை பல்லிலே உதைத்திருக்குமளவுக்கு வெறுப்புற்றிருந்தேன்.”
உண்மையென்னவென்றால், விளையாட்டு வீரர்கள் அடிக்கடி எதிராளிகளைத் திறமையற்றவர்களாகச் செய்ய, வேண்டுமென்றே முயற்சிசெய்கிறார்கள், அவ்வாறு செய்வதற்கு அவர்கள் பரிசளிக்கப்படுகிறார்கள். ஐரா பர்க்காவ் என்ற விளையாட்டுகளைப்பற்றி எழுதும் செய்தித்தாள் எழுத்தாளர், எதிர்த்து விளையாடும் வீரனை, விளையாட முடியாதளவுக்கு காயப்படுத்தக்கூடிய ஒரு கால்பந்தாட்ட வீரன், “செய்த நல்ல செயலுக்காக (தன் அணியினரால்) கட்டிப்பிடிக்கப்பட்டு, வழியுண்டாக்கிக் கொண்டுசெல்லப்படுகிறான். அவன் அப்படிப்பட்ட கெடுதி விளைவிக்கும் தாக்குதல்களை போதுமானளவு கொடுப்பானாகில், . . . விளையாட்டுக் காலம் முடிந்த பிறகு சம்பள அதிகரிப்பினாலோ, அல்லது துணை விளையாட்டு வீரனாகவோ, தொடர்ந்த வேலைவாய்ப்பு ஆகியவற்றால் சன்மானமளிக்கப்படுகிறான். இதனால் விளையாட்டு வீரர்கள் கொடூர ஜோ க்ரீன், ஜாக் (கொலயாளி) டேட்டம்” போன்ற மற்றுமநேக “விளையாட்டுப் பெயர்கள் வடிவில் சிறப்புக் குறியீடுகளைப் பெருமையோடு தாங்கியிருக்கிறார்கள்.”—தி நியூ யார்க் டைம்ஸ், டிசம்பர் 12, 1989.
கால்பந்தாட்ட மைதானத்தின் தற்காப்பு எல்லைக்குள் நின்று விளையாடும் (defensive tackle) செயின்ட் லூயிஸ் கால்பந்தாட்ட அணியின் ஒரு வீரன் ஃப்ரெட் ஹெரான் கூறினான்: “(க்ளீவ்லேண்டு ப்ரவுன்ஸ் அணியின்) முன்னேறத் தாக்கும் நிலையிலிருப்பவன் காயப்படுத்தப்பட்ட கழுத்துடையவனாய் இருந்தான் என்பதாக பயிற்சியாசிரியர் எங்களுக்குக் கூறினார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அவனை மேலும் காயப்படுத்தி விளையாட்டிலிருந்து வெளியேற்ற நான் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆலோசனைக் கூறினர். எனவே விளையாட்டின்போது நான் கோட்டைக் கடந்து, மையம் மற்றும் தற்காப்பு நிலைகளில் விளையாடுபவர்களை கடந்து சென்றுவிட்டேன், அங்கு அவன் நின்றான். நான் என்னுடைய கையினால் அவனுடைய தலையை பிடித்து காயப்படுத்த முயன்றேன், அவன் நிலைத் தடுமாறிப்போய் பந்தை கீழே விட்டுவிட்டான். என்னுடைய அணியினர் என்னைப் புகழ்ந்துகொண்டிருந்தனர். ஆனால் முன்னேறித் தாக்கும் நிலையிலிருப்பவன் வெளிப்படையான வேதனையில் தரையில் கிடப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் திடீரென எனக்குள் சிந்தித்தேன், ‘நான் என்ன, ஒரு வகை மிருகமாக மாறிவிட்டேனா? இது ஒரு விளையாட்டு, ஆனால் சிலரை ஊனமாக்க முயற்சிசெய்து கொண்டிருக்கிறேன்.’” இருப்பினும், ஹெரான் குறிப்பிட்டான்: “பார்வையாளர் கூட்டம் எனக்கு ஆரவாரத்தோடு கூடிய வரவேற்பு கொடுத்தனர்.”
மட்டுமீறிய போட்டிமனப்பான்மையினால் விளையும் தீமைகள் போட்டிவிளையாட்டுகளில் இன்றுள்ள பெரிய பிரச்னையென அநேகர் வருந்தியிருக்கின்றனர். விசனகரமாகவே, லட்சக்கணக்கான இந்தத் தீமைகள், வாழ்க்கையின் தொடக்கத்திலேயே போட்டி மனப்பான்மை நிறைந்த விளையாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கியிருக்கிறது. ஐ.மா. நுகர்வோர் பொருள் பாதுகாப்பு ஆணையம் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் போட்டி விளையாட்டுக் காயங்களுக்காக நாற்பது லட்சம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறையில் சிகிச்சை பெறுகின்றனர், மற்றும் மதிப்பிடப்பட்ட எண்பது லட்சத்திற்கும் அதிகம்பேர் குடும்ப மருத்துவர்களால் மருத்துவம் பார்க்கப்படுகின்றனர்.
அநேக குழந்தைகள் அளவுக்கதிக ஈடுபாட்டினால் ஏற்படும் காயங்களினால் துன்பப்படுகிறார்கள். இது முற்காலத்தில் அரிதாகக் காணப்பட்டது. வருடங்களுக்குமுன் குழந்தைகள் கேளிக்கைக்காக மாத்திரமே விளையாடினார்கள், காயமடைந்தபோது அவர்கள் வீட்டிற்குத் திரும்பிப் போனர்கள். இரத்தக் கசிவு அல்லது வலி நிற்கும் வரை விளையாடவில்லை. ஆனால், அதிக போட்டிமனப்பான்மையுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட போட்டிவிளையாட்டுகளில், குழந்தைகள் அடிக்கடி தொடர்ந்து விளையாடிக்கொண்டேயிருந்து ஏற்கெனவே புண்பட்ட அல்லது வலித்துக்கொண்டிருக்கும் உடலுறுப்புகளைச் சேதமடையச்செய்கின்றனர். தளக்கட்டுப் பந்தாட்டத்தின் முன்னாள் பந்து வீச்சாளர் ராபின் ராபர்ட்ஸ் பிரகாரம், வயதுவந்தவர்களே பிரச்னையின் முக்கிய காரணமாகும். “அவர்கள், குழந்தைகள் தயாராகுவதற்கு வெகுகாலத்திற்கு முன்னே, அவர்களின் மீது அதிக—சரீர மற்றும் மன—அழுத்தங்களை சுமத்துகிறார்கள்.”
பணமும் ஏமாற்றுதலும்
போட்டிவிளையாட்டுகளோடுள்ள மற்றொரு பிரச்னை பணத்தின்மீதான அளவுக்குமீறிய அக்கறையாகும். விளையாட்டு வீரர்களுக்கான தன்மை மற்றும் தரமுள்ள ஆட்டம் ஆகியவற்றைவிட, இன்று பேராசை போட்டிவிளையாட்டுகளை ஆதிக்கம் செய்வதாகத் தோன்றுகிறது. “விளையாட்டுகளில் தீங்கற்றிருத்தல் 1980-களில் முழுவதும் மறைந்துபோய்விட்டது என்றறிக்கை செய்வது கவலைக்குரியது,” என்று தி டென்வர் போஸ்ட் பத்திரிகையாளர் ஜே மரியாட்டீ புலம்புகிறார். “அவை வியக்கத்தக்க, பெரிய, அளவிடப்படமுடியாத வாணிபமாக, (உண்மையில், 6,310 கோடி டாலர்கள் மதிப்புள்ள, அமெரிக்காவில் உள்ள பெரிய வாணிபஸ்தாபனங்களில் 22-வதாகும்) சிலசமயங்களில் அநியாயக் கொள்ளை என நன்கு விவரிக்கப்படுகிற ஒரு மிருக சக்தியாக ’90-களின் பண்பாட்டில் நுழைந்திருக்கின்றன.”
அமெரிக்காவில், 1990-ல், 162 பெரிய தளக்கட்டுப் பந்தாட்டத் தொடர் வீரர்கள்—அவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்—ஒவ்வொருவரும் பத்து லட்சம் டாலருக்கு மேலாக சம்பாதித்தனர், அதில் முப்பது லட்சம் டாலர் உச்சநிலை சம்பளமாகும். இப்போது, ஒரு வருடத்திற்குப் பிறகு, 30 லட்சம் டாலருக்குமேல் வாங்கவிருக்கும் 32 பேர் மற்றும் 50 லட்சம் டாலருக்குமேல் வாங்கவிருக்கும் ஒருவர் உட்பட 120 வீரர்களுக்குமேல் ஒவ்வொருவரும் 20 லட்சம் டாலருக்கும் அதிகமாக 1992-லிருந்து 1995 வரை கொடுக்கப்படப்போகிறார்கள்! பணத்தை நாடிச்செல்லுதல் மற்றும் அதிக சம்பளங்கள் மற்ற போட்டிவிளையாட்டுகளிலும் பொதுவானதாகிவிட்டன.
கல்லூரி போட்டிவிளையாட்டுகளிலும்கூட, பெரும்பாலும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெற்றிபெறும் அணியின் பயிற்சியாளர்கள், கணிசமாக பரிசளிக்கப்படுகின்றனர், சம்பளமாகவும் மற்றும் வாணிபப்பொருட்களை சிபாரிசு செய்வதற்கான கட்டணமாகவும் வருடம் ஒன்றுக்கு பத்து லட்சம் டாலர் அளவுக்கு கொடுக்கப்படுகின்றனர். ஐக்கிய மாகாணங்களில், வருட கடைசியில் விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்கிடையே நடத்தப்படும் கால்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெறும் அணிகளின் பள்ளிகள் அநேக லட்சக்கணக்கான டாலர்களை—ஒரு சமீப வருடத்தில் 5.5 கோடி டாலர்களைப் பெறுகின்றன. “கல்லூரி கால்பந்தாட்ட மற்றும் கூடைப்பந்தாட்ட அணிகள் பணம் சம்பாதிக்க வேண்டும் மற்றும் அவை பணம் சம்பாதிக்க வெற்றி பெற வேண்டும்,” என்பதாக கல்லூரித் தலைவர் ஜான் ஸ்லாட்டர் விவரிக்கிறார். இது அழிவுக்குரிய விளைவுகளோடு—வெற்றிபெறும் எண்ணம் ஆட்டிப்படைக்கும் ஆற்றலாகியிருக்கும் ஒரு கொடிய சுழற்சியில் முடிகிறது.
தொழில்முறைப் பந்தாட்ட வீரர்களின் வேலைகள் வெற்றிபெறுவதைச் சார்ந்திருப்பதனால், அடிக்கடி அவர்கள் வெற்றியடைய எதையும் செய்கிறார்கள். “அது இனிமேலும் ஒரு விளையாட்டல்ல,” என்று கூறுகிறார் முன்னாள் தளக்கட்டுப் பந்தாட்ட வீரர் ரஸ்டி ஸ்டாப். “அது ஒரு கொடிய வியாபாரம்.” ஏமாற்றுதல் பரவக்கூடியது. “நீங்கள் ஏமாற்றவில்லையென்றால், நீங்கள் வெற்றிபெற முயற்சிக்கவில்லை,” தளக்கட்டுப் பந்தாட்ட வீரர் சிலி டேவிஸ் விவரிக்கிறார். “தப்பித்துக்கொள்ள முடியுமானால், உங்களால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள்” என்று நியூயார்க்கின் மெட்ஸ் தளக்கட்டு பந்தாட்ட அணியின் வீரர் ஹாவர்ட் ஜான்ஸன் சொல்லுகிறார்.
இவ்வாறு ஒழுக்கத் தன்மை அரிக்கப்படுகிறது, இது கல்லூரி போட்டிவிளையாட்டுகளோடும் ஒரு பெரிய பிரச்னையாயிருக்கிறது. “சில பயிற்சியாளர்களும் விளையாட்டு இயக்குநர்களும் ஏமாற்றுகிறார்கள்,” என்று ஒஹையோ மாகாண பல்கலைக்கழக முன்னாள் தலைவர் ஹெரல்டு L. எனார்ஸன் ஒப்புக்கொள்கிறார், “தலைவர்களும் மற்றும் தருமகர்த்தாக்களும் வேண்டுமென்றே அசட்டை செய்கிறார்கள்.” ஒரு சமீப வருடத்தில், ஐக்கிய மாகாணங்களில் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் சட்ட மீறுதலுக்காக நேஷனல் காலேஜியேட் அத்லிட்டிக் அசோஷியேஷனால் தண்டிக்கப்பட்டன, மற்றும் 28 வேறு பல்கலைக்கழகங்கள் விசாரணையின் கீழிருக்கின்றன.
இளம் விளையாட்டு வீரர்களின் மதிப்பு அழிக்கப்படுகிறது என்பதில் ஆச்சரியமில்லை, இது போட்டிவிளையாட்டுகளோடு இன்றுள்ள மற்றொரு பெரிய பிரச்னையாகும். விளையாட்டு செயல்திறனை அதிகரிக்கப் போத மருந்துகளை உபயோகப்படுத்துவது பொதுவானதாக இருக்கிறது, ஆனால் கல்விப்பயிற்சி பெறுவதோ அநேகமாக அவ்வாறில்லை. கல்வி நிலையங்களில் பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக் காலங்களில் தாங்கள் படிப்பதிலும் மற்றும் வகுப்புக்குச் செல்வதிலும் செலவிடுவதைக் காட்டிலும் தங்களுடைய விளையாட்டுகளை விளையாடுவதில் அதிக நேரம் செலவு செய்கிறார்கள் என ஒரு பெரிய ஆராய்ச்சி உறுதிப்படுத்தியது. ஆண்களுக்கான பெரிய கூடைப்பந்து நிகழ்ச்சிகளைக்கொண்டிருந்த ஐந்தில் ஒரு பாகத்திற்கும் குறைந்த விளையாட்டு வீரர்களே, மூன்றில் ஒரு பகுதி அமெரிக்க கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெறுகிறார்கள் என ஓர் அரசாங்க ஆராய்ச்சி கண்டுபிடித்தது.
போட்டிவிளையாட்டுத் தொழிலில் இறுதியாக வெற்றிபெற்று அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் மாணவர்களாகிய சில விளையாட்டு வீரர்களும்கூட அடிக்கடி துயரத்திற்குள்ளாகும் ஆட்களாகின்றனர். அவர்கள் செயல்திற மனப்பான்மையுடன் தங்கள் பணத்தைக் கையாளவும் மற்றும் வாழ்க்கையை எதிர்ப்படவும் முடியாதவர்களாயிருக்கிறார்கள். பிப்ரவரியில், 1990-ல், தங்குமிடமில்லாமல் 45 வயதில் மரித்துப்போன டிராவிஸ் வில்லியம்ஸின் அனுபவம் ஓர் உதாரணம் மட்டுமே. 1967-ல் கிரீன் பே பேக்கர்ஸ் கால்பந்தாட்ட அணியோடு விளையாடிக்கொண்டிருக்கும்போது, விளையாட்டின் ஆரம்பமாக எதிராளிகள் உதைத்த பந்தை 37.6 மீட்டர் தூரம் தட்டிச் சென்றதில் ஐக்கிய மாகாண தொழில் கால்பந்தாட்டத்தில் இன்றும்கூட நிலைத்து நிற்கக்கூடிய பதிவை ஏற்படுத்தினார். அவன் கல்லூரியிலிருக்கும்போது “அவன் எப்போதும் வகுப்புக்குப் போகவேண்டியிருந்ததில்லை. கால்பந்தாட்டப் பயிற்சிகளுக்கும் விளையாட்டுகளுக்கும் மாத்திரம் போனன்,” என்று ஒருமுறை குறிப்பிட்டான்.
பார்வையாளர்-சம்பந்தப்பட்ட பிரச்னைகள்
இன்று மக்கள் போட்டிவிளையாட்டுகளை விளையாடுவதைக் காட்டிலும், அவற்றைப் பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் குறிப்பிடத்தக்க பிரச்னைகள் விளைந்திருக்கின்றன. ஒரு காரணம், விளையாட்டுகளுக்கு அடிக்கடிப் போவதனால் மற்ற பார்வையாளர்கள் காண்பிக்கும் கீழ்த்தரமான மற்றும் முரட்டுத்தனமான குணத்தின் செல்வாக்குக்குத் திறந்த நிலையிலிருக்கிறார்கள். சில போட்டிவிளையாட்டு நிகழ்ச்சிகளின் உணர்ச்சிவசப்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சண்டைகள் பொதுவானவைகளாகும், மற்றும் ஆஜராயிருக்கும்போது நூற்றுக்கணக்கானோர் காயப்படுத்தப்பட்டும், சிலர் கொல்லப்பட்டுமிருக்கிறார்கள்.
ஆனால், இன்று அநேக பார்வையாளர்கள் போட்டிவிளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரில் ஆஜராகியிருப்பதில்லை, அவற்றை தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில், ஓர் 24 மணிநேர விளையாட்டு அலைவரிசை, வேறு எந்த ஒளிபரப்பு நிலையங்களும் செய்தி ஒலிபரப்ப தினமும் செலவிடும் நேரத்தைவிட போட்டிவிளையாட்டுகளை ஒளிபரப்புவதில் அதிக நேரத்தை செலவிடுகிறது! ஆனால் போட்டிவிளையாட்டுகளை ஒருவருடைய வீட்டில் தனிமையில் பார்ப்பது பிரச்னையில்லாதிருக்குமா?
நிச்சயமாகவே அப்படியில்லை. “பல வருடங்களாக என் கணவர் விளையாட்டைத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட போட்டிவிளையாட்டு வீரரையும் அறிந்திருக்கிறார்,” என்று ஒரு பெண் விவரிக்கிறாள், “மற்றும் இவர் மாத்திரமல்ல. கிரமமாக போட்டிவிளையாட்டைப் பார்க்காதிருக்கும் நண்பர்கள் இவருக்கு வெகு சிலரே. இந்தச் செயலை உட்படுத்தியிருக்கும் மிகப்பெரிய குற்றம், அது குழந்தைகளின் மீது கொண்டிருக்கும் ஆதிக்கமாகும்,” என்று இந்தப் பெண் கூறுகிறாள். அவள் மேலுமாகக் கூறுகிறாள்: “என்மீதோ அல்லது குழந்தைகள்மீதோ அக்கறையில்லாமல் என் கணவர் விளையாட்டுகளைப் பார்ப்பதற்கு தனது சொந்த நேரத்தை உபயோகப்படுத்துவதைக் குறித்து நான் கோபமுள்ளவளாயிருக்கின்றேன்.”
ஒரு தனிப்படுத்தப்பட்ட முறையீடா? இல்லவேயில்லை. இந்த உலகத்தின் அதிகப்பகுதிகள் முழுவதும், குடும்பங்களில் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களை அசட்டைச் செய்யுமளவுக்கு விளையாட்டுகளைப் பார்ப்பதற்காக அதிக நேரத்தைச் செலவிடும் குடும்ப அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். பிரேஸிலில் ஒரு வீட்டு மனைவி ஓர் ஆபத்தான விளைவைக் குறித்துக்காட்டுகிறாள்: “திருமணத்தை ஆபத்துக்குள்ளாக்கி, ஒரு கணவன் மனைவிக்கிடையிலான அன்பும் நம்பிக்கையும் சிறிது சிறிதாக அரிக்கப்படக்கூடும்.”
போட்டிவிளையாட்டார்வம் உடையவர்கள் அநேக சமயங்களில் மற்ற வழிகளிலும்கூட ஒரு சமநிலையில்லாதவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக விளையாட்டு வீரர்களை வழிபாட்டுப் பொருளாக்குகின்றனர், விளையாட்டு வீரர்களே இதை ஒரு பிரச்னையாகக் காண்கின்றனர். “நான் என் சொந்த ஊருக்குள் நுழைந்தபோது, மக்கள் அங்கு நின்று போப்பிடமிருந்து ஆசீர்வாதத்திற்காகக் காத்திருப்பதுபோல என்னை உற்று நோக்குகிறார்கள்,” என்று ஜெர்மானிய டென்னிஸ் நட்சத்திரம் போரிஸ் பெக்கர் குறிப்பிடுகிறார். “என்னுடைய அபிமானிகளின் கண்களுக்குள் பார்த்தபோது, . . . நான் மிருகங்களினுள் பார்த்துக்கொண்டிருப்பதாக நினைத்தேன். அவர்களுடைய கண்கள் அசையாமலும் அவற்றில் உயிரில்லாமலுமிருந்தன.”
போட்டிவிளையாட்டுகள் கிளர்ச்சியையும் மற்றும் உறுதியானப் பற்றையும் ஏற்படுத்தும் காந்த சக்தியாய் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் விளையாட்டு வீரர்களின் கூட்டு முயற்சி மற்றும் திறமைவாய்ந்த அருஞ்செயலினால் மாத்திரமல்ல, ஆனால் விளையாட்டின் உறுதியாகச் சொல்லமுடியாத முடிவினாலும் கவரப்படுகிறார்கள். யார் வெற்றியடைவார்கள் என்று பார்க்க விரும்புகிறார்கள். மேலும், போட்டிவிளையாட்டுகள் சலிப்பூட்டுவதாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து லட்சக்கணக்கானோருக்கு ஒரு பொழுதுபோக்கு மாற்றத்தைத் தருகிறது.
இருப்பினும், போட்டிவிளையாட்டுகள் மக்களுக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவரமுடியுமா? அவை கொடுக்கக்கூடிய உண்மையான நன்மைகள் இருக்கின்றனவா? மற்றும் அவற்றோடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நீங்கள் எவ்வாறு தவிர்க்க முடியும்? (g91 8⁄22)
[பக்கம் 9-ன் பெட்டி]
மதமாகிய போட்டிவிளையாட்டுகள்
கானடாவைச்சேர்ந்த டாம் சிங்க்ளேர் ஃபாக்னர் “கானடாவில் பனிக்கட்டி வளைதடிப்பந்தாட்டம் விளையாட்டைவிட அதிகமாகும்: பலருக்கு அது மதத்தைப்போல வேலை செய்கிறது,” என்பதாக வாதாடுகிறார். எந்தப் பகுதியில் வசித்து வந்தாலும், அநேக போட்டிவிளையாட்டு ஆர்வமுடையவர்களால் வெளிக்காட்டப்படும் மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் போட்டி விளையாட்டுகள், “ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலைத்து நிற்கும் மதம்” என்ற அடையாளப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. “போட்டி விளையாட்டுகளுக்கும் அகராதி கொடுக்கும் மதத்தின் விளக்கத்திற்கும் இடையே அதிகத் தொடர்புகள் இருக்கின்றன,” என்று விளையாட்டு மனநிலை நிபுணர் டேவிட் காக்ஸ் குறிப்பிடுகிறார். சில “மக்கள் விளையாட்டுகளைக் கடவுள்கள் அல்லது புனிதர்களைப் போல நடத்துகிறார்கள்,” என்று திரு. காக்ஸ் மேலுமாகக் கூறுகிறார்.
போட்டிவிளையாட்டு வெறியர்கள் தங்கள் குடும்பம் துன்பத்திற்குள்ளாகுமளவுக்கு அடிக்கடி தங்கள் விளையாட்டுக்கு நேரம் மற்றும் பணம் போன்றவற்றைத் தியாகம் செய்கிறார்கள். அபிமானிகள் தொலக்காட்சியில் போட்டிவிளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு எண்ணற்ற மணிநேரங்களைச் செலவிடுவார்கள். அவர்கள் தங்கள் அணியின் நிற ஆடைகளைப் பெருமையோடு அணிந்து, போட்டி விளையாட்டுச் சின்னங்களை வெளிப்படையாகக் காட்டுவார்கள். தங்களுடைய போட்டிவிளையாட்டின் பக்தர்கள் என்று அவர்களை அடையாளப்படுத்தும் பாட்டுகளை இன்னிசையோடு, சுவைநயத்தோடு மற்றும் உரக்கப் பாடுவார்கள்.
அநேக விளையாட்டு வீரர்கள் விளையாட்டு தொடங்குமுன் கடவுளுடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபித்து, ஒரு கோல் போட்டவுடன் நன்றி சொல்லும் ஜெபத்திற்காக முழங்காலிடுவர். அர்ஜண்டினாவைச் சேர்ந்த ஒரு கால்பந்தாட்ட வீரர் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான விளையாட்டுகளில் அவர் அடித்த ஒரு கோலுக்கு கடவுளின் கரத்தைக் காரணமாகக் காட்டினார். சில சமய ஆர்வமுடையவர்களைப் போல போட்டிவிளையாட்டு வெறியர்கள் “கொள்கைப் பிடிவாதமான மாறா மரபுக் கோட்பாட்டாளர்கள்” என்ற அடையாளப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளனர். இந்த விளையாட்டு வெறித்தனம் எதிர் அபிமானிகள் மத்தியில் இரத்தம் சிந்தும், சாவுக்கேதுவான சண்டைக்கு வழிநடத்திற்று.
பொய் மதங்களைப்போலவே, “போட்டிவிளையாட்டுகளாகிய நிலைத்து நிற்கும் மதம்” “புனிதர்கள்,” பாரம்பரியங்கள், நினைவுச்சின்னங்கள், மற்றும் சடங்குமுறைகள் ஆகியவைகளைத் தனது ஆர்வமுடைய சீஷர்களுக்குத் தருகிறது, ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கு உண்மையான அல்லது நீடித்திருக்கும் அர்த்தத்தைத் தருவதில்லை. (g91 8/22)
[பக்கம் 7-ன் படம்]
விளையாட்டு வீரர்கள் அடிக்கடி விளையாட முடியாதவர்களாக்கப்பட்டார்கள்
[பக்கம் 8-ன் படம்]
தொலைக்காட்சியில் போட்டி விளையாட்டுகளைப் பார்ப்பது குடும்பத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்