போட்டிவிளையாட்டுகளை அவற்றிற்குரிய சரியான இடத்தில் வைத்தல்
மக்கள் தங்களுக்கு விருப்பமான போட்டி விளையாட்டுகளை விளையாடும்போது, தங்கள் உடல்கள் இடங்கொடுத்து, தேர்ச்சி அல்லது பொறுமையை உட்படுத்தும் சாதனைகளைச் செய்ய அவர்கள் கிளர்ச்சியுற்றவர்களாய் உணர்கின்றனர். கடவுள் நாம் உடல்சார்ந்த செயல்களை அனுபவித்துமகிழும்படி சிருஷ்டித்தார். ஒருவேளை, இன்னும் அநேக மக்கள் மற்றவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகையால் போட்டிவிளையாட்டுகள் பல காரியங்களைப்போல அவற்றிற்குரிய சரியான இடத்தில் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மக்கள் சூரியனை அனுபவித்து மகிழ கடற்கரைக்குச் செல்லும்போது, அதிகமான அளவில் அதற்கு வெளிப்படுத்தப்பட்டால் என்ன சம்பவிக்கும்? அந்த நல்ல நேரத்தை கெடுத்து இன்னும் கொடிய அபாயங்களை தோற்றுவிக்கும் வேதனைமிக்க வெங்குருவால் துன்புறுவர். போட்டிவிளையாட்டுகளைக் குறித்ததிலும் இவ்வாறே இருக்கிறது. சிறிதளவு நல்லது, ஆனால் அதிக ஈடுபாடு கேடுவிளைவிக்கலாம்.
போட்டிவிளையாட்டுகள் சிறந்த பொழுதுபோக்கு ஓய்வாகவும் கேளிக்கையாகவும் இருக்கலாம்; இருப்பினும் அவையே முக்கிய இலக்காக இருக்கக்கூடாது. அவை உண்மையான திருப்தியையும் நிரந்தரமான மகிழ்ச்சியையும் கொண்டுவருவதில்லை. கவலைக்குரியவிதமாக, ஓர் ஆள் இதை உணருவதற்குள் சில நேரங்களில் ஒரு விசனகரமான சம்பவத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. “என்னுடைய எல்லா கோப்பைகளும் பதக்கங்களும் முக்கியமானவையாக இல்லை,” என்று ஒரு பாலத்திலிருந்து குதித்து முடமான வீராங்கனையாகிய மேரி உவாஸ்டர் விவரிக்கிறார்.
“நான் வாழ்க்கையைப் பற்றி பல உண்மைகளைக் கற்றுக் கொண்டேன்,” என்று அவள் அறிக்கை செய்தாள். “பரிபூரணத்திற்காகவும் சாதனைகள் செய்யவும் மக்கள் முயலும் பல வழிகளால் உண்மையான திருப்தியை அடைய முடிவதில்லை என்பது ஒன்றாகும். ஒரு முதல் மாணவியாக, மாநில ஓட்ட வீராங்கனையாக அல்லது கவர்ச்சிகரமான உடலமைப்பை உடையவளாக இருந்ததில் எனக்கு திருப்தி கிடைக்கவில்லை.”
காரியங்களை ஓரளவு கடுமையாக கவனத்துக்குக் கொண்டு வருகையில், “விளையாட்டின் முடிவில், நீங்கள் கொண்டிருப்பதெல்லாம் ஒரு புள்ளிவிவர பட்டியல். அவை எல்லாமே வேரில்லாததாய் தோன்றுகிறது. இருந்தாலும், அது நம் மேலோட்டமான இயல்பையுடைய சமுதாயத்திற்கு பொருந்துவதாக நான் நினைக்கிறேன்,” என்று சமூகவியல் வல்லுநர் ஜான் உவிட்வர்த் குறிப்பிட்டார். போட்டிவிளையாட்டுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அளவிற்கதிக முக்கியத்துவம், உண்மையில் முக்கியத்துவம் உடையவைகளைக்குறித்து ஒரு நடைமுறையற்ற நோக்குநிலையைக் கொண்டிருப்பதில் விளைவடைகிறது.
அதிவேக 200 மீட்டர் ஓட்டத்தில் 1964 ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றபின் ஹென்றி கார் விவரிக்கிறார்: “நான் ஒலிம்பிய கிராமங்களுக்கு திரும்பியபோது, அந்தத் தங்கப்பதக்கத்தை முதல் முறையாக பார்த்தேன் . . . என்னை நானே கேட்டுக் கொண்டேன்: ‘இது என்ன! இதை சம்பாதிக்கத்தான் இத்தனை வருடங்களும் நான் கடினமாக உழைத்துக்கொண்டிருந்தேனா?’ நான் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டிய நேரத்தில் கோபவேசத்தோடு இருந்தேன். அது உண்மையிலேயே ஓர் ஏமாற்றமாக இருந்தது.” 1987-ல் உலக குத்துச்சண்டை சங்கத்தின் கட்டளைப் பளுவுடைய குத்துச் சண்டையாளராக வெற்றிபெற்றபின் மார்லன் ஸ்டார்லிங்கும் அதேவிதமாகவே உணர்ந்தார். “அந்தப் பட்டப்பெயர், என் குழந்தை, ‘அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்,’ என்று சொல்வதற்கு எவ்வளவும் ஈடாக இல்லை” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆகவே ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்: பலனளிக்கும் வேலை, குடும்பம், மேலும் முக்கியமாக கடவுளை வணங்குதல், ஆகியவை சரியாகவே முதலிடத்தை வகிக்க வேண்டும். பைபிள் இவ்வாறு சொல்லும்போது சரியாகவே இருக்கிறது: “சரீர முயற்சி [பயிற்சி, NW] [இதை விளையாட்டுகள் கொடுக்கின்றன] அற்ப பிரயோஜனமுள்ளது.” (1 தீமோத்தேயு 4:8) அது நம் வாழ்க்கையில் விளையாட்டுகள் வகிக்க வேண்டிய சரியான இடத்தைக் குறிப்பிடுகின்றது. அது இரண்டாவதாகவே இருக்க வேண்டும். விளையாட்டுகள் அந்தளவிற்கு கவனத்தை ஈர்ப்பதாயிருப்பதால், ஒருவர் அதிக முக்கியமான காரியங்கள் புறக்கணிக்கப்படாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
எனவே, ஞானமாகவே, நீங்கள் அதிக நேரம் போட்டிவிளையாட்டுகளைப்பற்றி பேசுவதிலும், பார்ப்பதிலும் அல்லது விளையாடுவதிலும் ஈடுபடுவதாக உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் குறைகூறினால் அதற்கு கவனம் செலுத்துங்கள். போட்டிவிளையாட்டுகளுக்கு கவனம் செலுத்துவதில் சரிப்படுத்தல்களைச் செய்த கணவனையுடைய ஒரு பெண் நன்றியுணர்வுடன் குறிப்பிடுகிறாள்: “அவர் இப்போது குழந்தைகளோடும் என்னோடும் அதிக நேரத்தை செலவிடுகிறார். சிலசமயங்களில் எங்கள் குடும்பம் தொலைக்காட்சியில் ஒரு விளையாட்டை பார்க்கிறோம், ஆனால் அநேக சமயங்களில் மாலைநேரங்களில் சேர்ந்து உலாவச்சென்று அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளைப்பற்றி பேசுகிறோம். இது மிக இன்பமாக இருக்கிறது, எங்களை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது.”
நிகழக்கூடிய பிரச்னைகளின் காரணமாக, ஏன் நேர்மையாக இந்தக் கேள்வியை எதிர்ப்படக்கூடாது: நான் தேவைக்கதிகமான நேரத்தையும் கவனத்தையும் போட்டிவிளையாட்டுகளினிடமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்க முடியுமா? இருப்பினும், போட்டிவிளையாட்டுகளை ஒரு சரியான இடத்தில் வைக்கும் காரியத்தில் வேறு அம்சங்களும் உள்ளன.
போட்டிமனப்பான்மை பற்றியதென்ன?
விளையாட்டுகள் கேடுவிளைவிப்பதற்கு மாறாக பயனளிக்க வேண்டுமானால், போட்டியைப்பற்றி ஒரு சரியான மனநிலை முக்கியமானது. “விளையாட்டு பயிற்சியாசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் குழந்தைகள்தாமேயும் வெற்றிபெறுவதில் அவ்வளவு குறியாயிருப்பதால் அவர்கள் போட்டிவிளையாட்டுகளின் [இளைஞருக்கான] நோக்கத்தை மறந்துவிடுகின்றனர்,” என்று ஒரு தொழில்முறை ஹாக்கி அணியின் ஒரு மருத்துவர் வருத்தமாக கூறினார். போட்டிவிளையாட்டுகளின் நோக்கம், “அணியாக செயல்படுவதை மற்றும் கட்டுப்பாட்டை வளர்க்கவும், உடல்தகுதியை கட்டியமைக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக கேளிக்கையாகவும் இருக்கவேண்டும்,” என்று அவர் சொன்னார்.
எனினும், கவலைக்குரியவிதமாக, வெற்றிபெறுவதற்கான அழுத்தம் அநேகருடைய கேளிக்கையை கெடுத்துவிட்டது. போட்டிவிளையாட்டு மனோதத்துவ நிபுணர் ப்ரூஸ் ஓகில்வீ குறிப்பிட்டார்: “நான் ஒருமுறை 10 முக்கிய கூட்டிணைவு பேஸ்பந்து முகாம்களிலுள்ளவர்களை [முதல் வருட ஆட்டக்காரர்களை] பேட்டி கண்டேன்; அதில் 87 சதவீதத்தினர் அவர்கள் இளவயதினருக்கான கூட்டிணைவு பேஸ்பந்து விளையாட்டுகளிலும் விளையாடாமல் இருந்திருந்தால் நன்றாயிருக்கும், ஏனென்றால் ஒரு கேளிக்கை விளையாட்டில் இருந்த சந்தோஷத்தை அது எடுத்துப்போட்டது என்று கூறினார்.” இதோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை என்னவெனில், மட்டுக்குமீறிய போட்டி அதிக எண்ணிக்கையான காயங்களுக்கு இடமளிக்கிறது.
பைபிள், “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், [போட்டிமனப்பான்மையைத் தூண்டாமலும், NW], ஒருவர்மேல் ஒருவர் பொறமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்,” என்று சொல்வதன்மூலம் வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது. (கலாத்தியர் 5:26) கிரேக்க ஆங்கில அகராதிகளின்படி, “போட்டியைத் தூண்டுதல்” என்று கொடுக்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “அறைகூவுதல்,” “ஒரு சண்டையில் சவாலிடுதல் அல்லது ஒருவரோடு போட்டியிடுதல்” என பொருள்படுகிறது. இவ்வாறாக ஓர் அமெரிக்க மொழிபெயர்ப்பு மொழிபெயர்க்கிறது: “நம்முடைய வீண் தற்பெருமையில் ஒருவருக்கொருவர் சவாலிடாதிருப்போமாக.” புதிய உலக மொழிபெயர்ப்பு அடிக்குறிப்பு மற்றொரு விதமான அளிப்பைக் கொடுக்கிறது: “திறமையை வெளிக்காட்டுவதற்காக ஒருவரையொருவர் வற்புறுத்தல்.”
அப்படியானால், தெளிவாகவே, போட்டிமனப்பான்மையைத் தூண்டிவிடுதல் ஞானமானது அல்ல. அது நல்ல உறவுகளை உண்டுபண்ணுவதில்லை. உங்கள் திறமைகளை வெளிக்காட்ட வற்புறுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டு, மேலும் வெற்றிபெற்றவர் அந்த விளைவைக்குறித்து பெருமைபாராட்டினால், அந்த அனுபவம் தாழ்வுபடுத்துவதாக இருக்கும். ஓர் ஆழ்ந்த போட்டிமனப்பான்மை அன்பற்றதாகும். (மத்தேயு 22:39) அதே நேரத்தில், போட்டி ஒரு சிநேகப்பான்மையான, நல்லியல்பான நிலையில் வைக்கப்பட்டால், அது அந்த விளையாட்டின் நலனுக்கும் அதை அனுபவித்துமகிழ்வதற்கும் உதவலாம்.
போட்டிமனப்பான்மையை குறைந்த அளவில் கொண்டு விளையாட்டுகளில் விளையாடுவதற்கான வழிமுறைகளை சிலர் கண்டடைய விரும்பலாம். “நான் 13 அல்லது 14 வயதுவரை விளையாட்டை விளையாட்டுக்காகவே பங்கெடுப்பதில் உறுதியாக நம்பினேன்,” என்று ஓர் ஆங்கில உதைபந்தாட்ட பயிற்சியாசிரியர் கூறினார். அவர் முடிவுகள் அல்லது அணிகளின் நிலைகளைப்பற்றிய விவரப்பதிவுகளை வைக்காமல் இருக்கும்படி சிபாரிசு செய்தார்—“அடைய வேண்டிய படிகள் இல்லை, இறுதி ஆட்டம் இல்லை.” ஆம், வெற்றிபெறுவதன் பேரிலுள்ள அழுத்தம் சரியான விதத்தில் குறைக்கப்பட அல்லது முற்றிலுமாக நீக்கப்படவேண்டும்.
விளையாட்டு வீரர்களிடமான மனநிலை
போட்டிவிளையாட்டுகளை அவற்றிற்குரிய சரியான நிலையில் வைப்பது, திறம்பட்ட, நன்கறியப்பட்ட விளையாட்டு வீரர்களிடமாக நம்முடைய மனநிலையையும் உட்படுத்துகிறது. புரிந்துகொள்ளக்கூடிய விதமாகவே, நாம் அவர்களுடைய விளையாட்டுத் திறமைகளையும், வியத்தகு செயல்களையும் பாராட்டக்கூடும். ஆனால் அவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக ஆக்கவேண்டுமா? அடிக்கடி இளைஞர்கள் தங்கள் அறைகளில் அப்பேர்ப்பட்ட விளையாட்டு வீரர்களையுடைய சுவரொட்டிகளை கொண்டிருப்பவர்களாக காணப்படுகிறார்கள். அவ்விதமான ஆட்களின் சாதனைகள் உண்மையிலேயே அவர்களை கனத்தைப்பெற தகுதியுள்ளதாக்குகிறதா? ஒருவேளை உண்மையில் நேர்எதிர்மாறானதே உண்மையாக இருக்கிறது.
தேசீய கால்பந்தாட்ட கூட்டணி வெற்றித் தொகுதியின் புதிய ஆட்டக்காரர் முதலில் அவரது அணியிலுள்ளவர்களை மிகவும் பாராட்டத்தக்கவிதமாக நோக்கினார். ஆனால் அவர்களுடைய நடத்தையையும் மனப்பான்மையையும் பார்த்தபின், “அவர்களுக்காக வைத்திருந்த எல்லா உணர்ச்சிகளும் மரியாதையும் முழுமையாக மறைந்துவிட்டது.” அவர் விவரிக்கிறார்: “உதாரணமாக அவர்கள் சொல்வார்கள்: ‘ஹே, நான் சென்ற வாரம், என் மனைவியை உட்படுத்தாமல், ஐந்து பெண்களுடன் பாலுறவு கொண்டேன்.’ நான் அந்த ஆளைப் பார்த்துவிட்டு எனக்குள் நினைத்தேன்: ‘ஆக இதுதான் நான் வழிபாட்டுக்குரியவராக நினைத்தவர்.’”
உண்மையில், ஒரு மனிதனை வழிபாட்டுக்குரியவராக கொண்டிருப்பது சரியானதல்ல, முக்கியமாக பைபிள் அற்ப அல்லது வரையறுக்கப்பட்ட பிரயோஜனமுடையது என்று சொல்லும் செயலில் சிறந்து விளங்குபவரின் காரியத்தில் இது உண்மையாக இருக்கும். கடவுளின் ஊழியர்கள் “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்,” என்று துரிதப்படுத்தப்படுகிறார்கள்.—1 கொரிந்தியர் 10:14.
விளையாட்டுகள் எவ்வாறு பிரயோஜனமாயிருக்கின்றன
நாம் கவனித்தபடி, விளையாட்டுகளில் கிடைப்பதுபோன்ற சரீர பயிற்சி, “அற்ப பிரயோஜனமுள்ளது.” (1 தீமோத்தேயு 4:8) என்ன வழிகளில் அது அவ்வாறு இருக்கிறது? நீங்கள் எவ்வாறு விளையாட்டுகளிலிருந்து பிரயோஜனமடையலாம்?
இரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க மருத்துவனும், ரோம பேரரசன் மார்க்கஸ் ஆரூலீயஸின் தனிப்பட்ட மருத்துவனுமாயிருந்த காலன், பொதுவான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அழுத்திக் காண்பித்தார். மேலும் முழு உடலுக்கும் தேவையான பயிற்சியை இயற்கையாக கொடுப்பதால் பந்து விளையாட்டுகளை அவர் சிபாரிசு செய்தார். பந்து விளையாட்டுகள் பொதுவாக விளையாடுவதற்கு நல்ல கேளிக்கையாக இருப்பதால், ஓர் ஆள் வேறுவிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைவிட தான் அனுபவித்து மகிழும் இந்த விளையாட்டுகளை விளையாட அதிக சாத்தியமிருக்கிறது.
விளையாட்டுகள் மூலமாக கிடைக்கும் உடற்பயிற்சியானது அவர்களுக்கு ஒரு சுகத்தோடு இருக்கும் உணர்ச்சியை கொடுப்பதாக அநேகர் காண்கின்றனர். ஒரு கிளர்ச்சியூட்டக்கூடிய வேலை அல்லது விளையாட்டிற்குப் பிறகு, அவர்கள் இளமையூட்டப்பட்டவர்களாயும் புத்துணர்ச்சி பெற்றவர்களாயும் உணர்கின்றனர். இருப்பினும், இது நமக்கு ஆச்சரியமூட்டுவதாய் இருக்கக்கூடாது, ஏனென்றால் டாக்டர் டாரதி ஹாரிஸ் “உடற்பயிற்சி இயற்கையின் சிறந்த நோவகற்றும் மருந்து,” என்கிறார்.
கட்டழகு பயிற்சிகள், மென்னோட்டம், மற்றும் விளையாட்டுகளால் கொடுக்கப்பட்ட சரீர பயிற்சிகள் நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்பதாக இன்று பொதுவாக அங்கீகரிக்கப்படுகிறது. “சரீர தகுதியுள்ள ஆட்கள் தங்கள் வழக்கமான வேலைகளை சோர்வடையாமல் செய்வதோடு மற்ற அக்கறைகளுக்காகவும் இன்னும் சக்தியைக் கொண்டிருக்கின்றனர்,” என்று தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா குறிப்பிடுகிறது. “மேலும் சரீர தகுதியற்றவர்களைக் காட்டிலும் வயோதிபத்தின் விளைவுகளை அவர்களால் சிறந்த முறையில் எதிர்க்க முடிகிறது.”
இருப்பினும், விளையாட்டுகள் ஓர் ஆளை எந்த அளவிற்கு சரீர தகுதியுடையவராக ஆக்கினாலும், அதன் பயன் வரையறுக்கப்பட்டதே. வயோதிபத்தையும் மரணத்தையும் மனித முயற்சிகளால் தடுக்க முடியாது. எனினும், “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது,” என்று சொன்ன பின் பைபிள் கூறுகிறது: “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”—1 தீமோத்தேயு 4:8.
நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் மட்டுமே நமக்கு ஜீவனைத் தர முடியும். எனவே, “தேவபக்தி” அதாவது பயபக்தி, வணக்கம், மற்றும் கடவுளுக்கு சேவையைவிட வேறு எதுவும் அதிக முக்கியமானதாக இல்லை. ஆகவே, தேவபக்தியை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்கள் கடவுளுடைய சித்தத்தை செய்வதையே தங்களுக்கு முதன்மையானதாக கொள்வார்கள். கடவுளுடைய சேவைக்காக தங்களை ஈடுபடுத்தி, இயேசு கிறிஸ்து செய்ததுபோல், மற்றவர்களுக்கு கடவுளைப்பற்றிய நற்காரியங்களையும் அவருடைய ராஜ்யத்தைப் பற்றியும் சொல்வதில் தங்கள் இளமையை பயன்படுத்துவார்கள்.
ஆம், கடவுளுடைய அக்கறைகளை முதலாவதாக வைப்பதன் மூலம், மனிதர் அவருடைய தயவைப்பெற்று அவருடைய நீதியான புதிய உலகில் என்றென்றுமாக ஜீவனை அடையலாம். அங்கு மகிழ்ச்சியுள்ள கடவுளாகிய யெகோவா, அவர்களுக்கு உண்மையான, நிரந்தரமான மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பார். (g91 8/22)