சர்வதேச கட்டுதலில் புதியதோர் அம்சம்
எகிப்திய பிரமிடுகள் மற்றும் சீனப் பெருஞ்சுவர் போன்ற கட்டமைப்புகளைக் கண்டு பலர் அதிசயிக்கின்றனர். நவீன 400 மீட்டர் உயர விண்தொடு கட்டிடங்களும் ஆச்சரியமூட்டுபவை ஆகும். இருப்பினும், இன்னொரு கட்டிடத் திட்டத்தின் அம்சங்கள் அதேயளவு வியப்புண்டாக்குவதாய் இருக்கின்றன.
மனமுவந்த தொண்டர்கள் உலகளாவிய பல மிகப்பெரிய கட்டிடத் திட்டங்களைக் கட்டுகிறார்கள். இவர்களில் அநேகர், கட்டிடங்கள் கட்டப்படும் நாடுகளில் உள்ளவர்கள். ஆனால் அடிக்கடி கூடுதலுதவி தேவைப்படுவதால், மற்ற நாடுகளிலிருந்து வேலையாட்கள் லட்சக்கணக்கான டாலர் பணத்தை பயணத்துக்காக செலவிட்டு தூரத்திலுள்ள கட்டுமிடங்களுக்கு வந்திருக்கின்றனர். இந்தத் தொண்டர்களில் அநேகர் இவ்வேலைக்காகத் தங்கள் விடுமுறைகளை தியாகம் செய்கின்றனர்; இன்னும் பலர் தங்கள் ஒழுங்கான வேலையிலிருந்து விடுப்பெடுப்பதன் மூலம் ஒரு கணிசமான வருவாயை விட்டுக்கொடுக்கின்றனர்.
இந்தக் குறிப்பிடத்தக்க உதவிபெறும் முயற்சியானது, ஒரு சர்வதேச கட்டுதல் திட்டம்; அது நியூ யார்க்கின் புரூக்லினில் உள்ள, யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அலுவலகத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படுகிறது. நவம்பர் 1985-ல் இந்தக் கட்டுதல் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 3,000 பேருக்கதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா இன்னும் அநேக தீவுகளிலுமுள்ள 30-க்குமதிகமான கட்டும் இடங்களுக்குத் தங்கள் சொந்தச் செலவில் சென்றிருக்கின்றனர்.
தற்போது, ஏறக்குறைய 600 சர்வதேச தொண்டர்கள் சுமார் 25 நாடுகளில் வேலை செய்கின்றனர். அவர்களில் 400-க்கும் மேற்பட்டோர் ஓராண்டு அல்லது அதிகத்தை உட்படுத்தும் நீண்டகால வேலை நியமிப்புகளில் உள்ளனர்; அவர்கள் “சர்வதேச ஊழியர்” எனப்படுகின்றனர். மற்றவர்கள் இரண்டு வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரையுள்ள குறுகியகால வேலை நியமிப்புகளில் உள்ளனர்.
இந்த வேலையாட்கள் ஏன் தங்கள் திறமைகளையும் உழைப்பையும் இலவசமாகக் கொடுக்கின்றனர்? இந்தச் சுயதியாகங்களைச் செய்யுமளவிற்கு எதை அவர்கள் அத்தனை முக்கியமாய் கருதுகின்றனர்?
பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக
சர்வதேச கட்டுதல் திட்டத்திற்கு இத்தகைய அதிசயிக்கத்தக்க பிரதிபலிப்பின் காரணம் ஒரு கேள்வியின் பதிலில் காணப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் அவரிடம், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன,” என்று 1900-ற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன் கேட்டனர். மிகப்பரவலாயுள்ள யுத்தங்கள், உணவு பற்றாக்குறைகள், கொள்ளைநோய்கள் மற்றும் பூமியதிர்ச்சிகள் போன்ற காரியங்களை விவரித்த பின்னர் இயேசு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:3, 14.
இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருக்கிற காலம் இதுவே என்று இந்தத் தொண்டர்கள் உறுதியாய் நம்புகின்றனர். ஆகையால் இந்த ஒழுங்குமுறை முடிவதற்குள் ராஜ்ய அறிவிப்பை முன்னேற்றுவிக்க தங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்வதில் அவர்கள் மகிழ்கின்றனர். ராஜ்ய செய்தியை அச்சிட்டு விநியோகிக்கும்படியான வசதிகளைக் கட்டுவதற்காக, அத்தகைய ஆட்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்க இந்தக் கட்டுதல் திட்டம் நிறுவப்பட்டது.
இராஜ்ய வேலையின் விஸ்தரிப்பு
கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்துக்குரிய ஒரே நம்பிக்கையென விளம்பரப்படுத்தும் 67,85,09,507 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள், 1990-ல் யெகோவாவின் சாட்சிகளின் அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டன. அதாவது, ஒவ்வொரு வேலைநாளிலும்—நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பதைப் போன்ற—இருபது லட்சத்துக்கும் அதிகமான பத்திரிகைகள் அச்சியந்திரங்களிலிருந்து வெளிவருகின்றன! கூடுதலாக, ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான பைபிள்கள், புத்தகங்கள், சிறு புத்தகங்கள் மற்றும் புரோஷுர்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
மிகவும் பெரிய அச்சாலைகள், நியூ யார்க்கின் புரூக்லினிலுள்ள, யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அலுவலகத்திலும் மற்றும் நியூ யார்க்கின் வடபகுதியில் உவால்கில்லுக்கு அருகிலும் உள்ளது. ஆயினும், 1950 மற்றும் 1960-களில் பல அச்சாலைகள் ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியிலும் கட்டப்பட்டன. இவ்வாறாக, 1970-ல் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! யெகோவாவின் சாட்சிகளின் அச்சகங்களில் ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கானடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், சுவீடன், பின்லாந்து மற்றும் ஃபிரான்ஸில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
பின்னர், 1972 மற்றும் 1973-ல், இந்தப் பத்திரிகைகள் இன்னும் ஆறு நாடுகளில் வெளியிடப்படத் தொடங்கியது: ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, கானா, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ். இதைப் பின்தொடர்ந்த ஆண்டுகளில், ராஜ்ய வேலையின் அதிகரிப்போடு, புதிய கிளை அலுவலகங்களில் இன்னுமதிக அச்சுத்திறமைகளோடு கட்டுதல் துவங்கியது. விரிவான விஸ்தரிப்பு பற்றிய ஒரு தெளிவானக் கருத்தைப்பெற, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான புதிய அச்சாலைகளை உடைய கிளைக் கட்டிடத் தொகுதிகள் கீழ்க்கண்ட தேதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டதை கவனியுங்கள்:
கிரீஸ், ஜனவரி 16, 1979; சுவீடன், டிசம்பர் 23, 1980; பிரேசில், மார்ச் 21, 1981; கானடா, அக்டோபர் 10, 1981; இத்தாலி, ஏப்ரல் 24, 1982; கொரியா குடியரசு, மே 8, 1982; ஜப்பான், மே 15, 1982; ஆஸ்திரேலியா, மார்ச் 19, 1983; டென்மார்க், மே 21, 1983; ஸ்பெயின், அக்டோபர் 9, 1983; நெதர்லாந்து, அக்டோபர் 29, 1983; ஜெர்மனி, ஏப்ரல் 21, 1984; இந்தியா, ஜனவரி 20, 1985; மற்றும் தென் ஆப்பிரிக்கா, மார்ச் 21, 1987.
இன்னும், புதிய கிளை அலுவலகங்கள் அல்லது முன்னிருப்பவற்றோடு கூடுதலான சேர்க்கைகள், கோட் டி ஐவரி, பிப்ரவரி 27, 1982; தஹித்தி, ஏப்ரல் 15, 1983; இங்கிலாந்து, அக்டோபர் 2, 1983; பின்லாந்து, மே 5, 1984; நார்வே, மே 19, 1984; மார்டினிக், ஆகஸ்ட் 22, 1984; பெரு, ஜனவரி 27, 1985; மெக்ஸிகோ, ஏப்ரல் 13, 1985; வெனிசுவேலா, ஏப்ரல் 21, 1985; மற்றும் ஃபிரான்ஸ், மே 4, 1985-லும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சில கிளைகளில், கட்டும் வேலையின் சில பாகங்கள் ஊதியம் பெறும் சாட்சிகளல்லாத தொழிலாளிகளால் செய்யப்பட்டபோதிலும், பொதுவாக யெகோவாவின் சாட்சிகள் அதன் பெரும்பாகத்தைத் தாங்களாகவே செய்தனர். அவர்களில் அநேகர் கட்டும் தொழிலில் தேர்ச்சியற்றோராயினும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் சேவைகளை மனமுவந்தளித்தனர்.
யெகோவாவின் சாட்சிகளின் பிரசங்கிப்பு வேலை தொடர்ந்து அதிகரித்த போது, விரிவான வசதிகள் தேவைப்பட்டன. இவை எவ்வாறு அதிக திறம்பட்ட விதத்தில் கட்டப்பட முடியும்?
புதிய திட்டம் ஒரு தேவையைப் பூர்த்திசெய்கிறது
இந்தச் சர்வதேச கட்டும் வேலையின் அதிசயிக்கத்தக்க அதிகரிப்பில் உதவவும் ஒழுங்கமைக்கவும், விசேஷித்த தொண்டர் திட்டம் உருவாக்கப்பட்டு வளர்ச்சியடையச் செய்யப்பட்டது. “ஒரு கட்டுதல் திட்டத்தில், குறிப்பிட்ட கட்டும் திறமைகள் குறிப்பிட்ட சமயங்களில் தேவைப்படுகின்றன,” என்று அத்திட்டத்தின் கண்காணிகளில் ஒருவர் விவரிக்கிறார். “அஸ்திபாரம் போடப்படுகையில் கூரையமைப்பவரின் தேவையில்லை. ஆகவே காரியங்களை ஒருங்கிணைக்க, சர்வதேச வேலைக்குரிய செயல்முறை திட்ட அலுவலகம், நியூ யார்க்கின் புரூக்லினில் ஸ்தாபிக்கப்பட்டது.”
இவ்வாறாக, பொறித்துறை வினைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் போது, புரூக்லின் அலுவலகம் ஓர் “ஒத்திசைவாளராக” செயல்படுகிறது. அது உலகமுழுவதிலும் உள்ள கட்டுதல் திட்டங்களின் தேவைகளை, கட்டும்தேவைக்கேற்ற உரிய வேலையாட்களால் பூர்த்திச்செய்து பொருந்த அமைக்கிறது. எடுத்துக்காட்டாக, 1988-ல் மெக்ஸிகோ கிளையில் புதிய குடியிருப்புச் சேர்க்கை கட்டிமுடிக்கப் போகும் தருவாயில், திறம்பட்ட கம்பள விரிப்பாளர்களுக்காக புரூக்லினிடம் கேட்கப்பட்டது. சில நிமிடங்களுக்குள், இந்த அலுவலகம் சந்தோஷத்துடன் மனமுவந்து சேவைசெய்ய விரும்பிய அனுபவமுள்ள நான்குபேரைக் கண்டுபிடித்தது. ஜனவரி 1989-ல் கிளையின் சேர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது கம்பளங்கள் விரிக்கப்பட்டு அழகாகக் காட்சியளித்தது.
சேவிக்கத் தகுதிபெறுதல்
சர்வதேச தொண்டர் திட்டத்தில் பங்குபெற, முதலில் ஒரு வேலையாள் தகுதிபெற வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சியாக இருக்க வேண்டும். ஐக்கிய மாகாணங்களில் ஒரு வருங்கால தொண்டர், நியூ யார்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் அலுவலகங்கள் ஒன்றில் முதலில் சேவிக்க வேண்டும். இது அவருடைய வேலை பழக்கங்களையும் திறமைகளையும் கணிப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. பின்னர் இத்திட்டத்திற்கு அவர் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்படி அழைக்கப்படலாம். பொதுவாக வருங்கால வாலன்டியர்களின் மனைவிகள், சேவைசெய்ய நியூ யார்க்கிற்கு அழைக்கப்படாவிட்டாலும், இந்தத் திட்டத்திற்கு தகுதிபெறலாம்; எனவே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மற்ற நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளும் தங்கள் நாட்டு கிளைக்கு விண்ணப்பத்திற்குக் கோரி இத்திட்டத்தில் பங்கெடுக்க விண்ணப்பிக்கலாம். சர்வதேச ஊழியர்களையும் மற்ற சர்வதேச தொண்டர்களையும் மேற்பார்வை செய்யும் புரூக்லின் தலைமைக் காரியாலயத்திலுள்ள அலுவலகத்திற்கு இந்த விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த விண்ணப்பதாரர், அவருடைய வேலைத்திறமைகள் எப்போது தேவை என்பதுபற்றி தெரிவிக்கப்படுகிறார்.
மனைவிகளின் பங்கு
சாதாரணமாக, கட்டும் தொழில் வேலையாட்களின் மனைவிகள் தொழில்களில் தேர்ச்சியற்றோராய் இருப்பினும், அநேகர் காரைக்கட்டை பலப்படுத்தும் இரும்புக் கம்பிகளைக் கட்டவும், ஓடுகளுக்கிடையில் அரைச்சாந்திட்டு பூசவும், மணலிடவும், வர்ணந்தீட்டவும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றனர். மற்றவர்கள் தேவைப்படும் வீட்டுவேலைகளை கவனிக்கின்றனர். அதன்மூலம் அவர்கள் அனைவரும் உலகம் முழுவதிலுமுள்ள கட்டுமிடங்களில் நடக்கும் வேலைக்கு நல்ல முறையில் பங்களிக்கின்றனர்.
பியூர்டோ ரிகோவில் புதிய கிளை கட்டும் வேலையில் தன் கணவனைச் சேர்ந்து கொண்ட ஒரு மனைவி சமீபத்தில் புரூக்லின் அலுவலகத்திற்கு எழுதினாள்: “நாங்கள் ஜனவரி 1, 1991 அன்று, எங்கள் ஒருமாத வேலை நியமிப்பிற்காக வந்து சேர்ந்தோம். பலப்படுத்தும் இரும்பை கம்பி பிணைப்புகளாக கட்டிய குழுவோடு நான் வேலை செய்தேன். நான் எப்போதும் செய்திருப்பதில் இதுவே மிகக் கடினமான சரீர வேலையாக இருந்தது. அடிப்படையாக, அது இரும்பு கம்பிகளை வளைத்து ஒன்றுசேர்த்துக் கட்டுவதையும் குறடுகள் மற்றும் கம்பிக்கண்டை பயன்படுத்துவதையும் உட்படுத்தியது—நாள் முழுவதும்!
“முதல் கொஞ்ச நாட்கள், என்னுடைய கடினமான தொப்பி விழுந்து கொண்டே இருந்தது; மேலும் என்னுடைய பெரியளவு கையுறைகளை கம்பி பிணைப்புகளோடு சேர்த்துக் கட்டிக்கொண்டே இருந்தேன். ஆனால் முடிவில் நான் கிரமமாக செயல்பட்டேன். ஐந்து அல்லது ஆறு பேன்ட்-எய்ட்கள் என்னுடைய கொப்புளங்களை கட்டுப்படுத்துகின்றன. வரைபடங்களிலிருந்து அளவுகளெடுக்கவும், சுண்ணாம்பு கட்டிகளால் கோடுகள் கிழித்து தரையில் ஒவ்வொரு பிணைப்புக்கான இரும்பைச் சரியாக திட்டவட்டமாக அமைக்கவும் கற்றுக்கொண்டேன். அது உண்மையிலே திருப்திகரமான வேலையாக இருந்தது. நான் பொதுவாக தினசரி செய்யும் வேலைகளில் பல திரும்பவும் திரும்பவும் செய்யப்பட வேண்டியவை—சுத்தப்படுத்தல், சமைத்தல், சலவை செய்தல் போன்றவை. ஆனால், அந்த இரும்புப் பிணைப்புகள் கிளை அலுவலகக் கட்டிடம் நிலைக்கும்வரை நிற்கும் சுவர்களினுள் செல்கின்றன. அந்த எண்ணம் பயனளிப்பதாயிருக்கிறது!”
வேலை சிலாக்கியத்திற்கு நன்றியுடனிருத்தல்
இந்தச் சர்வதேச கட்டும் வேலையின் கண்காணி ஒருவர் கூறினார்: “இது நீங்கள் நினைத்துப் பார்க்கக் கூடியவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க காரியமாயிருக்கிறது. மக்கள் தங்கள் சொந்த செலவில் தூரத்திலுள்ள வேலை இடங்களுக்குச் செல்ல தங்கள் விடுமுறைகளை பயன்படுத்துகின்றனர். முழு வருடத்தில் வேலை செய்ததைவிட கடினமாகவும் அதிக மணிநேரங்களும் வேலை செய்யக்கூடும். மேலும் அவர்கள் வீடு சென்றடைந்ததும் அந்தச் சிலாக்கியத்திற்கு நன்றி கூறி எங்களுக்கு எழுதுகின்றனர்!”
எடுத்துக்காட்டாக, சமீபத்திய கடிதம் ஒன்று கூறுகிறது: “பிலிப்பைன்ஸில் உள்ள கிளையில் மூன்று மாதம் வேலைசெய்து மகிழ்ச்சியனுபவித்த மகத்தான சிலாக்கியத்திற்கு நன்றிகூற இக்கடிதத்தை எழுதுகிறோம். ஒவ்வொரு வேலை நாளின் முடிவிலும், நாங்கள் எதிர்பார்த்தபடியே சரீரப்பிரகாரமாக தளர்ச்சியடைந்தோம்; ஆனால் எங்களுடைய நல்ல கூட்டுறவினால் ஆவிக்குரியவிதத்தில் மிகவும் கட்டியெழுப்பப்பட்டோம். அங்கிருந்த மற்றும் அநேக தொண்டர்களிடம் பழக முடிந்ததில் மகிழ்ச்சி அடைந்தோம்; நாங்கள் சேர்ந்து வேலை செய்த உள்ளூர் சாட்சிகள் எங்கள் மனதில் இடம் கொண்டனர். உண்மையில் அவர்கள் எங்களுக்கு மிகவும் அருமையானவர்களாக, எங்கள் குடும்பத்தின் ஒரு தொடர்ச்சியாக ஆகிவிட்டனர்.”
ஈக்வடார் சென்ற தம்பதிகள் எழுதியதாவது: “நாங்கள் நொறுக்குத் தின்பண்டங்கள் இல்லாமல் வாழவும், குறைந்தளவு தண்ணீரில், மேல் கழுவிக் கொள்ளவும், குளிர்ந்த நீரில் சவரம் செய்து குளிக்கவும் கற்றுக் கொண்டோம். விளம்பரத்தில் எங்களுடைய சிந்தனைகள் எந்தளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதுபற்றி எந்த ஒரு கருத்தும் எங்களுக்கு இருக்கவில்லை. வேலையிடத்தில் எங்களுக்கு இருந்ததில் மிகச் சிறந்ததை கொடுத்தோம்; ஆனால் நாங்கள் கொடுத்ததற்கும் மிக அதிகத்தோடு திரும்பி வந்தோம். ஐ. மா. தராதரங்களின்படி, நம் ஈக்வடாரின் சகோதரர்கள் பொருள் சம்பந்தப்பட்டவிதத்தில் ஏழ்மையானோர்; ஆனால் அவர்களுடைய ஆவிக்குரியதன்மையும் பிரசங்க வேலைக்கான போற்றுதலும் தனிப்பட்ட கவனத்திற்குரியது. இந்தச் சிலாக்கியத்தைக் குறித்து நாங்கள் எப்படி உணருகிறோம் என்பதை உண்மையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.”
தூக்கி நிறுத்திவைத்துக் கட்டும் முறை
சர்வதேச கட்டும் வேலையில், தூக்கி நிறுத்திவைத்துக் கட்டும் முறை ஒரு தனிப்பட்ட அம்சமாகும். இந்த முறை, வேலைநடக்கும் அந்த இடத்திலேயே வார்க்கப்படும் பெரிய, இரும்பால் பலப்படுத்தப்பட்ட காரைக்கட்டாலான சுவர் சட்டங்களைக் கொண்டுள்ளது. இவை மூன்று மாடி உயரமும் 20 டன் எடையுடையதாகவும் இருக்கக்கூடும். இந்தச் சட்டங்கள் கட்டிடத்தின் தரைதளத்தில் அல்லது அருகிலுள்ள ஒரு வார்க்கும் தளத்தில் உருவாக்கப்படுகிறது.
ஆறு அல்லது எட்டு சட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படக்கூடும். சட்டங்கள் போதுமான பலமடைந்ததும்—பொதுவாக ஏழு நாட்களுக்குப் பின்—அவற்றைத் தூக்கி அவற்றிற்குரிய இடத்தில் நிறுத்தவும் பாரந்தூக்கி ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சட்டங்கள் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்கள் இவ்விரண்டிற்கும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கும்கூட பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பிலிப்பைன்ஸ் கிளையின் 11 மாடி வீட்டில் நூற்றுக்கணக்கான இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. இச்சமதள முன்வார்க்கப்பட்டக் காரைச் சட்டங்கள் வெறுமென வர்ணம் தீட்டப்பட வேண்டும்.
இந்தக் கட்டும் முறை நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் கைதேர்ந்த வேலையாட்களை திறம்படவும் உபயோகிக்கிறது. இத்தொழில் சார்ந்த ஒரு பிரசுரமாகிய கான்கிரீட், இங்கிலாந்தில் யெகோவாவின் சாட்சிகள் புதிய தொழிற்சாலை கட்டியதுபற்றி: “தூக்கி நிறுத்திவைத்துக் கட்டுதல் அதனுடைய எளிய கட்டுதல் முறை காரணமாக, குறிப்பாக அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்றதாயிருந்தது. . . . நேரம் மற்றும் செலவின் சேமிப்பு எப்போதுமே அந்த அமைப்புமுறையின் முக்கிய நன்மைகளாகும்,” என்று கூறுகிறது.
தூக்கி நிறுத்திவைத்துக் கட்டுதல் குறித்து அந்தப் பத்திரிகை தொடர்ந்து கூறுகிறது: “பெரிய பரப்பளவைக் கொண்டிருக்கும் சுவர், கூரை மற்றும் இரண்டாம் மாடியின் (பாரத்தைத் தாங்கும் சுமைதாங்கி மற்றும் சுமைதாங்கும் திறனில்லாத) சுவர்களை குறுகிய காலத்தில் கட்டும் திறமையும் விசேஷித்த மேற்பார்வை தேவைப்படாத உள்ளூர் வேலையாட்களை பயன்படுத்துவதும் சேர்ந்து இம்முறைக்கு வேகத்தையும் சிக்கனத்தையும் கொடுக்கிறது.” அப்படியென்றால், புதிய கட்டுதல் திட்டம் இந்த எளிய திறம்பட்ட கட்டும் முறையை உபயோகிக்க வேண்டும் என்பது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!
பொறியியல் அலுவலகங்கள்
இந்தச் சர்வதேச கட்டுதல் திட்டத்திற்கான வழிநடத்துதல், நியூ யார்க்கின் புரூக்லினிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் தலைமைக் காரியாலயத்திலுள்ள ஒரு பெரிய பொறியியல் அலுவலகத்தால் கொடுக்கப்படுகிறது. அங்கு நூற்றுக்குமதிகமான பொறியாளர்கள், கட்டிட திட்டமைப்பாளர், வரைபடங்களமைப்போர்—அனைவரும் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றுவோர்—கட்டிடங்களின் திட்டங்கள் மற்றும் வரைபடங்கள் பேரில் தொடர்ந்து வேலை செய்கின்றனர். அதிகரிக்கும் வேலைப் பளுவை சமாளிக்க, சமீபத்தில் மண்டல பொறியியல் அலுவலகங்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வரைபடங்களை தயாரிக்க 1987-ல் CAD (கம்ப்யூட்டர் உதவியால் திட்ட அமைப்பு) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு CAD நிலையம், சாதனத்தின் பல உபகரணங்களைக் கொண்டிருக்கிறது. இவை சேர்த்து உபயோகிக்கப்படும்போது, வரைபலகையின்மேல் கையால் வரைவதைவிட கம்ப்யூட்டரில் படங்களை தயாரிப்பதை சாத்தியமாக்குகிறது. தற்போது, புரூக்லினிலும் மற்ற கிளைகளிலும் 65-ற்கும் மேற்பட்ட CAD நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கம்ப்யூட்டரின் நினைவகத்தில் வரைபடங்களை சேர்த்து வைக்கமுடியுமாதலால், முந்திய திட்ட அமைப்புகள் கம்ப்யூட்டர் நினைவகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தற்போதைய வரைபடங்களினுள் இணைக்கப்படலாம். இது செயல்திறனை அதிகரிக்கவும் திட்டமைப்பு மற்றும் கட்டுதலை தர-அளவுப்படுத்தவும் உதவுகிறது.
சமீபத்திய கட்டுதல் திட்டங்கள்
புரூக்லின் பொறியியல் அலுவலகம் விரிவடைந்தது போலவே, வேலைக்கு தொண்டர்களை ஒழுங்கமைக்கும் எண்ணமும் விரிவடைந்தது. பனாமாவில் புதிய கிளையைக் கட்டுவதற்கு உதவிசெய்ய மற்ற நாடுகளிலிருந்து வேலையாட்கள் பிரதிபலித்தபோது, 1985-ல் இத்திட்டம் துவங்கியதாக சொல்லப்படலாம். அது பெரு கிளையில் ஒரு பெரிய சேர்க்கை கட்டுவதற்கு உதவி தேவைப்பட்டபோது மேலுமான வளர்ச்சியை அடைந்தது. கோஸ்டா ரிகா மற்றும் நைஜீரியாவின் கிளைகள் கட்டப்பட்டதோடு இத்திட்டம் உண்மையிலேயே ஒழுங்குமுறைப்படுத்தப்பட ஆரம்பித்தது. விரைவில் முக்கிய பணியாளர் தொகுதி உலகமுழுவதிலுமுள்ள கட்டிடத்திட்டங்களில் உதவிசெய்ய அனுப்பப்பட்டனர்.
சர்வதேச ஊழியர்களும் மற்ற தொண்டர்களும், 1986-ன் ஆரம்பம் முதற்கொண்டு முடிக்கப்பட்டவை உட்பட அநேக புதிய கிளைகள் மற்றும் முன்னிருப்பவற்றோடு சேர்க்கைகளும் கட்டுவதற்கு இப்போது உதவிசெய்திருக்கின்றனர். கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளில், பனாமா, கோஸ்டா ரிகா, சிலி, மெக்ஸிகோ, நியூ ஸிலாந்து, ஹைதி, லைபீரியா, ஆஸ்டிரியா, ஈக்வடார், பாப்வா நியூ கினியா, கயானா, கானா, ஹவாய், போர்ச்சுகல், ஹாங்காங், சைப்ரஸ், பெரு, எல் சால்வடார், மொரிஷியஸ், ஜப்பான், ஹோண்டுராஸ், குவாதிமாலா, நைஜீரியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, நியூ கலிடோனியா, ஃபிஜி, ஃபிலிப்பைன்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய இடங்களில் கட்டிட திட்டங்கள் முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.
இவற்றில் பல பெரிய கட்டுதல் திட்டங்களாகும். இதன் விளைவாக, நைஜீரியாவில் ஒரு 57 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஒரு சிறிய பட்டணமே எழுப்பப்பட்டது. ஒரு 140 மீட்டர் நீள, 70 மீட்டர் அகல தொழிற்சாலையோடு 400-க்குமதிக மக்களுக்கு இடமளிக்கும் குடியிருப்புகள், ஓர் அலுவலகம், ஒரு வாகனநிறுத்துமிடம் இன்னும் மற்ற கட்டிடங்களும் கட்டப்பட்டன. ஐக்கிய மாகாணங்களிலிருந்து மட்டும் அனுப்பப்பட்ட கட்டுமான பொருட்கள் 347 சரக்கேற்றும் பெட்டிகளை நிரப்ப போதுமானதாயும் அவை ஒருமுனை துவக்கி மற்றொரு முனைவரை வைக்கப்பட்டால் 3.5 கிலோமீட்டர் நீண்டுமிருக்கும்.
சில சமயங்களில், கட்டிடத் திட்டங்களுக்கு மதகுருமார்களிடமிருந்து எதிர்ப்பு இருக்கிறது. கிரீஸில் மார்ச் 1989-ல் மதகுருமார் 40 பேருந்துகள் நிறைய எதிர்ப்போரை ஏற்பாடு செய்தனர்; ஆனால் சாட்சிகள் அவர்களுடைய கிளையை கட்டுவதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கு காவல் துறையினர் ஆதரவளித்தனர்; அந்த எதிர்ப்பு அபத்தமாயிற்று. புதிய கிளை, ஒரு பெரிய, புதிய தொழிற்சாலை மற்றும் 170-ற்கும் மேற்பட்டோருக்கு இடமளிக்கும் 22 குடியிருப்புக் கட்டிடங்கள் முடிக்கப்பட்டு இந்த வசந்த காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஃபிரான்ஸில் ஏவ்ராவிலுள்ள பிஷப் ஸாக் கையோ, லூவியாவில் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு பெரிய புதிய கிளைக்கான திட்டத்தை எதிர்த்தார். சாட்சிகளின் பொது ஊழியம் “மனித கெளரவத்தை மதிப்பது” இல்லை என்று கூறுகிறார். ஆனால் லூவியாவின் மேயர் ஒடீல் ப்ரூஸ்ட் ஒத்துக்கொள்ளவில்லை. “இந்தக் கட்டிட திட்டத்தை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை” என்று அவள் கூறினாள். பிஷப்பின் எதிர்ப்பைக் குறித்து, “ஒரு வியாபார நோக்குநிலையிலிருந்து, நீங்கள் உங்களுடன் போட்டியிடுபவரால் அச்சுறுத்தப்பட்டால் உங்களுடைய உற்பத்திப் பொருளை விருத்தி செய்வதுதான் ஒரே வழி,” என்று பதிலளிக்கிறாள்.
தற்போது, சர்வதேச கட்டுதல் வாலன்டியர்கள், கொலம்பியா, பியூர்டோ ரிகோ, சாம்பியா, பிரேஸில், இங்கிலாந்து, கானடா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வாடர், போலந்து, குவாடிலோப், தாய்லாந்து, லீவார்ட் தீவுகள், பஹாமாஸ், மேற்கு சமோவா, தஹித்தி, சாலமன் தீவுகள், வெனிசுவேலா, கொரிய குடியரசு, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜெர்மனியில் கிளைகள் கட்டும் திட்டங்களில் வேலை செய்கின்றனர். புதிய கிளைகள் அல்லது ஃபிரான்ஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ, இலங்கை, தைவான் மற்றும் சுரினாமில் தற்போதையவற்றோடு சேர்க்கைகளும் உட்பட மற்ற திட்டங்கள் வரைபட பலகைகளில் உள்ளன.
ஒரு தேவையை எதிர்நோக்கி
யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு 1988-ல் ஜெர்மனி கிளையை 50 சதவீதம் பெரிதாக்க அதிகாரமளித்தபோது, சில பார்வையாளர்கள் இந்தச் சேர்க்கை அளவுக்கதிகமானதென கருதினர். ஆனால் 1989 மற்றும் 1990-ல், போலந்து, ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, ருமேனியா ஆகிய இடங்களில் யெகோவாவின் சாட்சிகளின் பிரசங்க வேலை சட்டப்பூர்வமாக்கப்பட்டது; அல்லது தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது. மேலும் கடந்த வருடம் மார்ச் 27 அன்று, சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டனர்.
கோட காலத்தில், 1990-ல், 300,000-த்திற்கதிகம் பேர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளின் மாநாடுகளுக்கு ஆஜராயிருந்தனர்; மேலும் பைபிள் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாயிருந்தனர். 1991 பிரிட்டானிக்கா புக் ஆப் தி இயர், “இரண்டே மாதங்களுக்குள், உவாட்ச்டவர் சங்கத்தின் மேற்கு ஜெர்மனி கிளை காரியாலயம், 1,15,000 பைபிள்கள் உட்பட 275 டன்கள் பைபிளை அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்களை கிழக்கு ஜெர்மனிக்கு மட்டும் அனுப்பியது.” இவ்வாறாக, அனுமதி வழங்கப்பட்ட விரிவாக்கம் முழுவதும் ஜெர்மனி கிளைக்கு தேவைப்பட்டது, அதுவும் விரைவாக என்பது இப்போது தெளிவாயிருக்கிறது!
எதிர்கால தேவைகளுக்குத் தயாரித்தல்
நீங்கள் நினைத்து பார்க்கக்கூடிய விதமாகவே, இயேசுவின் தீர்க்கதரிசன நிறைவேற்றமாக, முடிவு வருமுன் ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்’ பிரசங்கிக்கப்பட மிகப் பேரளவான வேலை தேவைப்படுகிறது. (மத்தேயு 24:14) உலகளாவிய உண்மை கிறிஸ்தவர்கள் அதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். ராஜ்ய செய்தி எல்லா ஜாதிகளுக்கும் கிடைப்பதற்காக தங்களால் முடிந்ததை எல்லாம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்கின்றனர்.
இதை நிறைவேற்றுவதற்கு யெகோவாவின் சாட்சிகள், நியூ யார்க்கின் புரூக்லினிலுள்ள தங்கள் தலைமைக் காரியாலயத்தில் பைபிள் பிரசுரங்களை வெளியிடுவதற்கான கொள்திறனை விஸ்தரிக்கின்றனர். தலைமைக் காரியாலயத்தின் பணியாளரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தங்கவைக்கும் விதத்தில் 90 சான்ட்ஸ் தெருவில், 30 மாடி கட்டிட வேலை ஒன்று இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது; 1993-ல் முடிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஆயினும், மிகப் பெரிய கட்டிட திட்டம், நியூ யார்க், பேட்டர்சனுக்கு அருகில், நியூ யார்க்கிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலவில் நடந்தேறிக் கொண்டிருப்பதேயாகும். ஏப்ரல் 7, 1991-ன் தி நியூ யார்க் டைம்ஸ், “யெகோவாவின் சாட்சிகள் 1996-ல் ஏதோவொரு சமயத்தில் அதை முடித்தபின், அவர்கள் 624 அறைவீடுகளை உடைய 2-லிருந்து 5 மாடி உயர 6 அடுக்கக வீடுகளையும், ஒரு 450-கார் நிறுத்துமிடம், ஒரு 144-அறை விடுதி, ஒரு பெரிய சமையலறை, 1,600 பேருக்கு ஒரே பந்தியில் விளம்பக்கூடிய சாப்பாட்டறை, ஓர் அலுவலக கட்டிடம், ஒரு வகுப்பறை கட்டிடம் மற்றும் அநேக சேவைகளுக்கான கட்டிடங்களையும் கட்டியிருப்பார்கள்.” இப்பெரிய ராஜ்ய கல்வி மையத்தைக் கட்டுவதற்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தங்கள் இலவச உழைப்பை அளிக்கின்றனர்.
உண்மையிலேயே, ஒரு மகத்தான கட்டுதல் திட்டம் பூமியின் ஒவ்வொரு பாகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது—அனைத்தும் மனமுவந்து செய்யும் வேலையாட்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இது மெய்யாகவே சர்வதேச கட்டுதலில் புதியதோர் அம்சமே! (g91 8/22)
[பக்கம் 21-ன் படம்]
பலப்படுத்தும் இரும்பைக் கட்டுவது கட்டுமானப் பணியின் ஒரு பாகமாகும்
[பக்கம் 23-ன் படங்கள்]
தூக்கி நிறுத்திவைத்துக் கட்டும் முறையில், காரையாலான சட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்படுகின்றன. சட்டங்கள் போதுமான பலனடைந்ததும், அவற்றிற்குரிய இடங்களில் தூக்கி நிறுத்திவைக்கப்படுகின்றன
[பக்கம் 24-ன் படங்கள்]
போலாந்தின் புதிய கிளை தொகுதி புரூக்லினில் பார்வையிடப்படுகிறது. கம்ப்யூட்டரில் கட்டிடத்தின் வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன
[பக்கம் 25-ன் படங்கள்]
பியூர்டோ ரிகோ, சாம்பியா மற்றும் லீவார்ட் தீவுகளுக்கு திட்டமைக்கப்பட்டிருக்கும் கிளை தொகுதிகள்
[பக்கம் 27-ன் படம்]
ஓர் ஐரோப்பிய நாட்டிலுள்ள கட்டுதல் திட்டத்தில் வாலன்டியர் வேலையாட்கள்