சர்வதேச அளவில் கிறிஸ்தவ சகோதரர்களுக்காக சேவிக்கிறார்கள்
“சர்வதேச ஊழியர்கள்,” “சர்வதேச தொண்டர்கள்”—இந்த வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பைபிளிலுள்ள ராஜ்ய செய்தியை அச்சிட்டு விநியோகிப்பதற்கு பயன்படுத்தப்படும் கட்டடங்களைக் கட்டுவதற்காக நேரத்தையும் திறமைகளையும் மனமுவந்து அளிக்கிற யெகோவாவின் சாட்சிகள் இவர்கள். பைபிளைப் போதிப்பதற்கு மையங்களாக விளங்கும் மாநாட்டு மன்றங்கள், ராஜ்ய மன்றங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கும் இந்தத் தொண்டர்கள் உதவுகிறார்கள். தற்போது, முக்கியமாக அதிக வள ஆதாரங்கள் இல்லாத 34 நாடுகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு இந்தத் தொண்டர்கள் தோள் கொடுக்கிறார்கள். சர்வதேச அளவில் கிறிஸ்தவ சகோதரர்களுக்காக சேவிக்கையில் பிரத்தியேகமான என்ன சில சவால்களை இந்த ஊழியர்கள் எதிர்ப்படுகிறார்கள்? எத்தகைய சந்தோஷங்களை அனுபவிக்கிறார்கள்? தாங்கள் செய்யும் “பரிசுத்த சேவையைப்” பற்றி எப்படி உணருகிறார்கள்? (வெளிப்படுத்துதல் 7:9, 15, NW) இதையெல்லாம், மெக்சிகோவில் சேவை செய்த சில தொண்டர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
அயல்நாட்டு தொண்டர்கள் முதன்முதலாக மே 1992-ல் மெக்சிகோவுக்கு வந்தார்கள். வந்த உடனேயே, கிளை அலுவலகத்தின்—மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளை கண்காணிக்கும் அலுவலகத்தின்—விரிவாக்க வேலையில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தார்கள். கிளை அலுவலக அங்கத்தினர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள், அச்சகம், அலுவலக கட்டடம் உள்ளிட்ட 14 புதிய கட்டடங்களை எழுப்ப வேண்டியிருந்தது.
இந்தக் கட்டுமானப் பணிக்கு உதவ கனடா, பிரிட்டன், ஐக்கிய மாகாணங்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த 730-க்கும் மேலான தொண்டர்கள், மெக்சிகோவின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்தார்கள். அதுபோக, கிளை அலுவலகத்துக்கு அருகிலுள்ள சுமார் 1,600 சபைகளைச் சேர்ந்த 28,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளும் வார இறுதி நாட்களில் கட்டுமான வேலைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எல்லாருமே காசு பணம் ஏதும் கேட்காமல் மனப்பூர்வமாக தங்கள் திறமைகளை அர்ப்பணித்தார்கள். இவ்வகையில் யெகோவாவை சேவிப்பதை ஒரு பாக்கியமாக அவர்கள் கருதினார்கள். அந்தக் கட்டுமான வேலை நடைபெற்றபோது, சங்கீதம் 127:1-ல் காணப்படும் வார்த்தைகள் அவர்கள் மனதில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தன. ‘[யெகோவா] வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா’ என அது சொல்கிறது.
எதிர்ப்படும் சவால்கள்
அயல்நாடுகளில் சேவை செய்கையில் இந்தச் சர்வதேச தொண்டர்கள் என்னென்ன கஷ்டங்களை எதிர்ப்படுகிறார்கள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த கர்டஸ், ஸாலி என்ற தம்பதியினர் இந்தியா, செனிகல், பராகுவே, மெக்சிகோ, ரஷ்யா, ருமேனியா, ஜாம்பியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கட்டுமான பணிகளுக்கு உதவியிருக்கிறார்கள். “பயனியராக [முழுநேர ஊழியராக] சேவித்து வந்த எங்கள் மகளையும் மினிசோடாவிலிருந்த எங்கள் சபையையும் விட்டுப் பிரிவதுதான் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. 24 வருஷமாக நானும் என் மனைவியும் அந்த ஒரே சபையில் சேவை செய்து வந்ததால், அது எங்களுடைய வீடு போல் இருந்தது” என கூறுகிறார் கர்டஸ்.
“பழக்கமில்லாத சூழ்நிலைகளில் வாழ்வது மற்றொரு கஷ்டம்; ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அது ஒருவேளை ரொம்ப சிரமமாக இருக்கலாம். ஆனால் முடியாதது எதுவுமில்லை என்பதை கற்றுக்கொண்டேன். பூச்சிகளை அதுவும் எக்கச்சக்கமான பூச்சிகளை சமாளிப்பது இப்போதெல்லாம் பழகிப் போய்விட்டது!” என ஸாலி கூறுகிறார். “ஒரு நாட்டில், 10 வாலண்டியர்கள் ஓர் அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தோம். அங்கு சமையல்கட்டு இல்லை. இரண்டே இரண்டு பாத்ரூம்தான் இருந்தது. அங்குதான் நான் நிறைய பொறுமையை கற்றுக்கொண்டேன்” என்றும் அவர் கூறுகிறார்.
வேறொரு பாஷையை கற்றுக்கொள்வது இன்னொரு சவால்; அதற்கு முயற்சியும் பணிவும் அவசியம். பல நாடுகளிலும் கட்டுமான திட்டங்களில் தன் கணவரோடு சேவை செய்திருக்கிற ஷேரன் சொல்வதாவது: “நீங்கள் போகும் நாட்டின் பாஷை தெரியாமலிருந்தால் ரொம்ப கஷ்டம். ஆரம்பத்தில், சொல்ல நினைப்பதை சரளமாக சொல்ல முடியாது, ஆகவே ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடம் நெருங்கிப் பழகுவது கஷ்டமாக இருக்கும். அதனால் வெறுப்பாக இருக்கும். ஆனால், அயல்நாடுகளிலுள்ள சகோதரர்கள் எங்களிடம் ரொம்ப பொறுமையாக நடந்து கொள்கிறார்கள், எங்கள் மேல் ரொம்ப கரிசனை காட்டுகிறார்கள். எப்படியோ சீக்கிரத்திலேயே அவர்களிடம் பேச ஆரம்பித்து விடுகிறோம்.”
ஊழியத்தில் பங்கெடுப்பதற்கு தைரியம்
சுயதியாக மனப்பான்மை கொண்ட இந்தத் தொண்டர்கள் கட்டட வேலையின் வளர்ச்சிக்காக பெருமளவு உழைக்கிறார்கள். அதே சமயத்தில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதே அவர்களுடைய மிக முக்கியமான வேலை என்பதையும் அறிந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் கூட்டுறவு கொள்ளும் சபைகளோடு சேர்ந்து பிரசங்க வேலையில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். ஆக்கே, இங்-மாரி என்ற தம்பதியினர், குவாடலூப், நைஜீரியா, மலாவி, மெக்சிகோ ஆகிய இடங்களுக்கு சென்று கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டார்கள். வெளிநாட்டில் ஊழியம் செய்யும்போது அங்குள்ள பாஷையில் பேச தைரியம் வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள்.
இங்-மாரி இவ்வாறு சொல்கிறார்: “ஆரம்பத்தில் நாங்கள் ஊழியத்தில் அதிகமாக வாய்திறக்கவில்லை; எப்போதுமே அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுடன் சென்றதால் அவர்களுக்கு முன்பாக பேசுவதற்கு எங்களுக்கு கூச்சமாக இருந்தது. ஆகவே அவர்களையே பேச விட்டுவிட்டோம். ஆனால் ஒரு நாள் காலையில் நாங்களாகவே ஊழியத்திற்கு போக தீர்மானித்தோம். கால் வெடவெடவென்று நடுங்கியது, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனாலும் சென்றோம். அன்று ஓர் இளம் பெண்ணை சந்தித்தோம். நான் தயாரித்து வைத்திருந்த பிரசங்கத்தை அவள் கேட்டாள். ஒரு வசனத்தை அவளுக்கு வாசித்துக் காட்டி சில பிரசுரங்களையும் கொடுத்தேன். அதற்குப்பின் அந்தப் பெண் இவ்வாறு கேட்டாள்: ‘என்னோட சொந்தக்காரங்க ஒருத்தங்க யெகோவாவின் சாட்சிகளோட பைபிள் படிக்கிறாங்க. நானும் படிக்கணும். அதுக்கு என்ன செய்யணும்னு கொஞ்சம் சொல்லுவீங்களா?’ ஆச்சரியத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. பிறகு எப்படியோ சமாளித்துக்கொண்டு, பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொன்னேன்.”
“நான் அடைந்த சந்தோஷத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்! எங்களுடைய முயற்சியையும் சத்தியத்தைப் பற்றி பேச வேண்டும் என்ற ஆசையையும் ஆசீர்வதித்ததுக்காக யெகோவாவுக்கு எவ்வளவு நன்றி சொல்லியிருப்போம் என்று நினைத்துப் பாருங்கள்” என்கிறார் இங்-மாரி. அந்தப் பெண் படித்து நன்கு முன்னேறினாள், மெக்சிகோ நகரில் நடந்த மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதலும் பெற்று யெகோவாவின் சாட்சி ஆனாள். ஆக்கேவும் இங்-மாரியும் தங்களுடைய ஊழியத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்கள்: “பல நாடுகளில் கட்டுமான வேலை செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாக நினைக்கிறோம். ஆனால், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள ஒருவருக்கு உதவுவதால் கிடைக்கும் சந்தோஷத்தையும் திருப்தியையும்விட மேலானது எதுவுமில்லை.”
சுயதியாக மனப்பான்மை
குடும்பத்தாரையும் நண்பர்களையும் விட்டுவிட்டு அயல் நாட்டு சகோதரர்களுக்கு உதவுவதற்காக செல்லும் தொண்டர்கள் பல தியாகங்கள் செய்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் பல சந்தோஷங்களையும் அனுபவிக்கிறார்கள். என்ன சந்தோஷங்களை?
அங்கோலா, ஈக்வடார், எல் சால்வடார், கயானா, கொலம்பியா, பியூர்டோ ரிகோ, மெக்சிகோ ஆகிய இடங்களில் தன் மனைவி பமலாவுடன் சேவை செய்திருக்கிற ஹாவுர்ட் இவ்வாறு கூறுகிறார்: “பல நாடுகளிலுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்தித்து, நமது சர்வதேச சகோதரத்துவத்தில் நிலவும் அன்பின் பிணைப்பை நேரடியாக ருசிப்பது பெரும் பாக்கியமே. நம் அருமையான சகோதரத்துவத்தைப் பற்றி நாம் அடிக்கடி வாசிக்கிறோம், ஆனால் பலவித கலாச்சாரங்களையும், பின்னணிகளையும் சேர்ந்தவர்களோடு வாழ்ந்து அவர்களுக்கு சேவை செய்யும்போது அதை இன்னும் உயர்வாக மதிக்கத் தோன்றும்.”
கட்டுமானப் பணி தனக்கு அதிக நன்மையளித்திருப்பதாக ஈக்வடார், கொலம்பியா, கோஸ்டா ரிகா, மெக்சிகோ, ஜாம்பியா ஆகிய இடங்களில் உதவிய காரியும் உணருகிறார். “இவ்வளவு ஆண்டுகளாக, பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கிளை அலுவலகங்களில் சேவித்து வரும் முதிர்ச்சியுள்ள சகோதரர்களோடு கூட்டுறவு கொண்டதால் எனக்கு நல்ல பயிற்சி கிடைத்திருக்கிறது. என்னுடைய நியமிப்புகளில் வரும் கஷ்டங்களை சிறந்த விதத்தில் சமாளிக்க அந்தப் பயிற்சி உதவியிருக்கிறது. அது என் விசுவாசத்தையும் பலப்படுத்தியிருக்கிறது; காரணம், யெகோவாவின் உலகளாவிய அமைப்புக்கே உரிய ஒற்றுமையை—மொழி, இனம், கலாச்சாரம் என்ற வேற்றுமைகளை மீறிவிடும் ஒற்றுமையை—அனுபவித்து மகிழுவதற்கான வாய்ப்பை அது அளித்திருக்கிறது” என்கிறார் அவர்.
மெக்சிகோவிலுள்ள கட்டுமானப் பணி இப்போது முடிந்துவிட்டது, புதிய கிளை அலுவலக கட்டடங்களின் பிரதிஷ்டையும் இந்த ஆண்டு முடிந்துவிட்டது. கடவுள் பேரிலான அன்பால் தூண்டப்பட்டவர்களாய் இந்த சர்வதேச ஊழியர்களும் சர்வதேச தொண்டர்களும், மெக்சிகோவிலும் பிற நாடுகளிலும் மெய் வணக்கம் தழைக்க பெருமளவில் உதவியிருக்கிறார்கள். அவர்கள் சுயதியாக மனப்பான்மையோடு, பிற நாடுகளிலுள்ள கிறிஸ்தவ சகோதரர்களுக்கு மனமுவந்து உதவுவதை உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பெரிதும் போற்றுகிறார்கள்.
[பக்கம் 25-ன் படம்]
ஈக்வடார்
[பக்கம் 25-ன் படம்]
கொலம்பியா
[பக்கம் 25-ன் படம்]
அங்கோலா
[பக்கம் 26-ன் படம்]
மெக்சிகோ கிளை அலுவலகத்தில் புதிய கட்டட வேலை ஆரம்பமாகிறது
[பக்கம் 26-ன் படம்]
கிளை அலுவலக தோட்டம்
[பக்கம் 26-ன் படம்]
கீழே: கட்டட இலாகாவிலுள்ள சிலர், ஒரு புதிய கட்டடத்தின் முன்
[பக்கம் 27-ன் படம்]
சர்வதேச தொண்டர்கள் உள்ளூர் சபைகளுடன் சேர்ந்து சந்தோஷமாக பிரசங்கிக்கின்றனர்