ஒரு சிப்பியின் பொறியியலமைப்பு
எழுதுவதற்குப் பயன்படும் ஒரு சுண்ணக்கோலை இரண்டாக உடைப்பது எவ்வளவு எளிது என்பதை நீங்கள் கவனித்ததுண்டா? ஆனால் இப்பொழுது அபலோன் சென்னிற சிப்பியை இரண்டாக உடைக்க முயன்றுபாருங்கள். அதை உடைப்பதற்கு உங்களுக்கு ஒரு சுத்தி அவசியப்படலாம். என்றபோதிலும், அபலோன் சிப்பி சுண்ணக்கோலின் அதே பொருளால்தான் அமைக்கப்பட்டிருக்கிறது—கால்ஷியம் கார்பனேட். இந்தச் சிப்பியின் மேலோடு வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுண்ண எழுதுகோலுடன் ஒப்பிடுகையில் இதன் உடையா தன்மை ஏறக்குறைய 40 மடங்கு அதிகமாக இருக்குமளவுக்கு வித்தியாசப்படுகிறது.
அபலோன் சங்குச்சிப்பி இந்தப் பொறியியல் திறனை எவ்வாறு பெற்றிருக்க முடிகிறது? அ.ஐ.மா.-ல் சீட்டிலில் அமைந்த வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் இந்தக் கடல் நத்தையின் இரகசியங்களில் சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அபலோன் தன் ஒற்றைய மூடி போன்ற சிப்பியை வெளி உலகத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு மதிலாகப் பயன்படுத்துகிறது. உறுதியாயிருக்கும் அடிப்படையில் அந்தச் சிப்பி அடையடையாக வளருகிறது. மேற்பகுதி சொரசொரப்பாக இருக்கிறது. ஆனால் தோட்டின் உள்பகுதி ஒளியூடுருவக்கூடிய அழகைக்கொண்டு ஒளிருகிறது, இதில்தானே சிப்பியின் உறுதி அடங்கியிருக்கிறது.
பகுதிவடிவ அமைப்பு “பளபளப்பான, செங்கல்-சாந்து கொண்ட கட்டிட அமைப்பையுடையதாயிருக்கிறது,” என்று சயன்ஸ் நியூஸ் குறிப்பிடுகிறது. இந்த மிகச் சிறிய செங்கல்கள் ஒரு மீட்டர் நீட்டளவில் (பத்து இலட்சத்தில் ஒரு கூறு) என்ற அளவுடையவைதான். இவை அபலோன்தானே உற்பத்திசெய்யும் ஒரு சாந்து பொருளால் இணைக்கப்படுகின்றன, இந்தளவுக்கு உறுதியான பிடிப்பை ஏற்படுத்தும் சாந்து பொருள் என்ன என்பதை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்க முயலுகின்றனர். இந்த நுண்ணளவான “செங்கல்” அடைகள் அடுத்தடுத்தமைந்த அடுக்குகளில் சரிந்து அமைவதன் மூலம் ஏற்படும் அழுத்தங்களை ஈர்த்துக்கொள்கிறது. அதற்கிடையில், உயிர்ப்பொருட்கூறால் அமைந்த சாந்து அழுத்தத்தால் ஏற்படக்கூடிய விரிசல்களை விசேஷமான “தசைநார்களால்” எப்படியோ சேர்த்துவிடுகிறது. மொத்தத்தில் இந்தச் சிப்பி உடைவதைத் தடுக்கும் ஐந்து இயக்க அமைப்பைக் கொண்டிருக்கிறது!
விஞ்ஞானிகள் அபலோன் சங்குச்சிப்பியின் குறிப்பிடத்தக்க உறுதியைக் கண்டு வியப்படைகின்றனர். உறுதியான பீங்கான் பொருட்களை உண்டுபண்ணுவதற்கு இது போன்ற நுட்ப அமைப்பு முறைகளை உருவாக்கிட முயலுகின்றனர். அவர்கள் வெற்றிபெறுவார்களானால் புகழப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் யாருடைய வேலைப்பாடுகளைப் பின்பற்ற முயலுகிறார்களோ, ஒப்பிடமுடியா அறிவுத்திறனுடைய அந்த மகா வடிவமைப்பாளருக்கு அதற்குரிய கனம் அரிதாயிருக்கிறது என்பது எவ்வளவு வருத்தத்துக்குரிய காரியம்!—யோபு 37:14. (g91 9/22)