“இயற்கையிடமிருந்து விஞ்ஞானம் பாடம்படிக்கிறது”
மேற்கூறப்பட்டது ஆகஸ்ட் 31, 1993 தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின் ஒரு தலைப்பாக இருந்தது. புதிய பொருட்களைத் திட்டமைக்கிற அதிகரித்துவரும் எண்ணிக்கையான விஞ்ஞானிகள் பையோமிமெட்டிக்ஸ் (biomimetics) துறையில் ஈடுபடுகிறவர்களாக ஆகியிருக்கின்றனர் என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. பையோமிமெட்டிக்ஸ் என்பதை டைம்ஸ் செய்தித்தாள் இவ்வாறு வரையறுத்தது: “செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருட்களுக்கான மாதிரிகளாக இருக்கிற உயிரியல் சார்ந்த பொருட்களின் கட்டமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய ஆராய்ச்சி.”
தாழ்ந்த கடல் விலங்குகளும் சிலந்திகளும் இன்றைய விஞ்ஞானிகள் செய்யக்கூடியது போன்ற பொருட்களுக்கு உயர்தரமாக இருக்கிற பொருட்களை உண்டுபண்ணுகின்றன என்பதை அந்தக் கட்டுரை ஒத்துக்கொண்டது. உதாரணமாக, அபலோன் என்ற சிப்பி இன உயிர்வகை தண்ணீரிலிருந்து சுண்ணாம்பினுடைய தூள்போன்ற கூட்டுப்பொருளாகிய கால்ஷியம் கார்பனேட்டை பிரித்தெடுத்து, மிக மெல்லிய தகடுகளை உண்டுபண்ணுகிறது. பின்பு, புரோட்டீனும் சர்க்கரையும் சேர்ந்த கலவையைப் பயன்படுத்தி இத்தகைய அநேக தகடுகளை அது ஒட்டுகிறது. சிப்பியின் கட்டமைப்பு ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்ட சாதாரண கால்ஷியம் கார்பனேட்டைவிட 30 மடங்கு பலம்வாய்ந்ததாகவும் கடினமானதாகவும் இருக்கிறது என்று டாக்டர் மெமட் சரிகாயா சொல்கிறார். “கடற்சிப்பியில் இருக்கிறது போன்ற மெல்லிய அடுக்குகளைக்கொண்ட பொருளை உண்டுபண்ணுவதற்குரிய தொழில்நுட்பத்தை நாம் கொண்டில்லை” என்பதாக அவர் ஒப்புக்கொள்கிறார்.
அதைப்போலவே, சிலந்திவலையின் பட்டிழை எஃகு இரும்பைக் காட்டிலும் உறுதியானதாகவும் நைலானைவிட நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. குண்டுதுளைக்காத கவசங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருளாகிய கெவ்லாரைவிட உறுதியான நூலை உண்டுபண்ணும் நம்பிக்கையில் சிலந்திவலை பட்டிழையைக்குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். என்றபோதிலும், சிலந்தியின் சிக்கலான தயாரிப்பு செயல்முறைகள், மனிதன் அதற்கு நிகரானதைச் செய்வதற்கு இன்னும் அப்பாற்பட்டிருக்கின்றன.
“சிலந்திகள், திறந்தவெளி காற்றில் தண்ணீரை கரைப்பானாகப் பயன்படுத்தி, சூழ்ந்துள்ள வெப்பநிலைகள் மற்றும் அழுத்தத்தில் பட்டிழையை உண்டுபண்ணுகின்றன. அது நிலையான, அதிக உறுதிவாய்ந்த நீர்க்காப்பு வலைப்பின்னலாக ஆவதற்கு இந்தப் படிநிலைகள் எல்லாவற்றையும் வெற்றிகரமாக கடந்து செல்கிறது” என்று சீயட்டிலில் உள்ள உவாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிரிஸ்டஃபர் வினீ குறிப்பிட்டார். “இருப்பினும், கெவ்லார் போன்ற கடினமான நூலை தயாரிப்பதற்கு, செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி அதை உயர்ந்த அழுத்தத்தின்கீழ் தயாரிக்கவேண்டியது அவசியம்.” எனவே, இந்த விஞ்ஞானி இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “நாம் கற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.”
இதைக்குறித்து சிந்தித்துப் பாருங்கள். தாழ்ந்த கடல் உயிரிகளும் சிலந்திகளும் தயாரிக்கக்கூடியதை மிக மேம்பட்ட மனித தொழில்நுட்பம் தயாரிக்க முடியாமலிருந்தால், இந்த ஜீவராசிகள் மிக உயர்ந்த புத்திக்கூர்மையின் தயாரிப்புகளாக இருக்கின்றன என்பதை நம்புவது நியாயமானதாகத் தோன்றுகிறது அல்லவா? ஞானமாகவே, மகத்தான திட்டமைப்பாளருக்குக் கனத்தைக் கொடுப்போம். அவருடைய தயாரிப்புகளால் இந்தப் பூமியை நிரப்புவதில் அவருடைய ஒப்பிடமுடியாத புதுப்புனைவுத்திறனுக்காக, அவருடைய கிரியையை இன்றைய விஞ்ஞானிகள் பின்பற்ற கடுமுயற்சிசெய்கிறார்கள்.—சங்கீதம் 104:24.