உலக மக்கள்தொகை பெருக்கம்—ஒரு முக்கிய பிரச்னை
“குழந்தை ஐந்நூறு கோடி.” இப்படித்தான் சீன அரசாங்கம், ஜூலை 11, 1987 அன்று நள்ளிரவில் பீஜிங் மருத்துவமனையில் பிறந்த உவான் ஹே என்ற பெண் குழந்தையை அழைத்தது. அந்தக் குழந்தை அந்தச் சமயத்தில் உண்மையில் மொத்த உலக மக்கள்தொகையை 500,00,00,000-க்கு கொண்டு வந்ததோ இல்லையோ, ஒருவராலும் சொல்லமுடியாது. இருப்பினும், உலகின் மக்கள்தொகை அவ்வெண்ணிக்கையை அடையுமென ஐக்கிய நாட்டு சபையால் குறிப்பிடப்பட்ட திட்டவட்டமான அந்த நொடியிலே அவள் பிறந்தாள். சீனாவையும் உலகத்தையும் எதிர்ப்படும் கடும் பிரச்னையாகிய மக்கள்தொகை பெருக்கத்தைச் சித்தரிப்பதற்கு, சீன அரசாங்கம் இந்தச் சம்பவத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
நிபுணர்களை திடுக்கிடச்செய்யும் வேகத்தில் பூமியில் மக்கள்தொகை அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தற்போதைய வளர்ச்சி வேகத்தில், பூமியின் மக்கள்தொகை சுமார் 40 ஆண்டுகளிலேயே இரட்டிப்பாகிவிடும். அந்த வேகத்தில், உலகின் மக்களுக்கு உணவளிப்பதற்கு தேவைப்படும் உணவு விரைவில் உற்பத்தியை மிஞ்சிவிடும், அதன் விளைவு உலக பட்டினியாக இருக்குமென நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், உலகின் இயற்கை வள வழங்கீடு வரையறைக்குட்பட்டது; ஆதலால், ஒரு விஸ்தரிக்கப்பட்ட மக்கள்தொகையால் அத்தனை விரைவாக அவை முழுவதும் தீர்க்கப்படக்கூடும்; இது உலகளாவிய நாசத்தையே அர்த்தப்படுத்தும். உணவின்மை மற்றும் வளமின்மை நம் அழிவை விளைவிக்காவிடினும், நாம் உண்டுபண்ணிக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழலின் சேதம் நிச்சயமாக அதைச் செய்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காற்று, நீர், நிலம் ஆகியவற்றிற்கு நாம் என்ன செய்கிறோமோ அதன் மூலம், சொல்லர்த்தமாகவே நம் மூச்சைத் திணற வைக்கிறோம்; இன்னுமதிக மக்கள் அந்த வேகத்தைத் துரிதப்படுத்தவே முடியும். இவையனைத்தும் சமீபத்தில் நேரிடப்போகும் ஒரு நாசத்தை ஒலிப்பதாகவே தோன்றுகிறது.
இருப்பினும், அதைக் குறித்து என்ன செய்யப்படக்கூடும்? இக்காரியத்தைக் குறித்து அநேகக் கருத்துக்கள் உள்ளன. மக்கள்தொகை பெருக்கத்தைக் குறைக்க தீவிர முயற்சி எடுக்காவிட்டால், எல்லா மனிதரின் நலனும் அச்சுறுத்தப்படும் என்று சிலர் எண்ணுகின்றனர். முற்காலத்தில் உண்மையாயிருந்தது போலவே, உணவு, வளம், தூய்மைக்கேடு மற்றும் எவையெல்லாம் உட்பட்டிருக்கிறதோ அவையனைத்தையும் பற்றிய பிரச்னைகளை சமாளிக்க புதிய வழிகள் கண்டுபிடிக்கப்படும் என்று வேறு சிலர் நம்புகின்றனர். மொத்த மக்கள்தொகை முடிவில் நிலைவரப்படுத்தப்படுமாதலால், அதைக் குறித்து மிகவும் கிளர்ச்சி அடையவேண்டிய தேவையில்லை என்று இன்னும் மற்றவர்கள் கருதுகின்றனர். உண்மையில், கிட்டத்தட்ட அந்தப் பொருளின் ஒவ்வொரு அம்சத்தைக் குறித்தும் பலமான எண்ணங்களும் அபிப்பிராயங்களும் உள்ளன. தெளிவாகவே, உலக மக்கள்தொகை பெருக்கம் தர்க்கத்திற்கு இடமளிக்கும் முக்கிய பிரச்னையாகும்.
ஆயினும், பொதுவாக, இன்னும் ஓரளவு இடவசதியும் செல்வச்செழிப்புமிக்க தேசங்களில் வாழும் மக்களே வரப்போகும் அழிவைக் குறித்து ஊக்கமாகப் பேசுகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரமும் எதிர்கால நலனும் அச்சுறுத்தப்படுவதாக உணர்வதால் தங்கள் பயங்களைத் தெரிவிக்கின்றனர். ஆனால் ஏழ்மையான, வளர்ச்சியடையாத, அதிக மக்கள்நெருக்கமுள்ள தேசங்களைப் பற்றியதென்ன? மக்கள்நெருக்கப் பிரச்னையைக் குறித்து அவர்கள் எவ்வாறு உணருகின்றனர்? உலகின் நெருக்கடியான முனைகளில் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது?
மக்கள்தொகை வெடிப்பின் அழுத்தத்தின்கீழ் வாழ்வது எப்படிப்பட்டதாய் இருக்குமென்றும், அதில் உட்பட்டிருக்கும் சில பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உதவி செய்யவும் ஒரு, நேரடியான கண்ணோட்டத்திற்காக விழித்தெழு! உங்களை உலகிலுள்ள சில மிகவும் நெருக்கடியான இடங்களுக்குக் கொண்டு செல்கிறது. (g91 11/8)