குழந்தைகள்—சொத்தா, கடனா?
குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்னை பெரும்பாலும் மக்கள்தொகை வெடிப்பு என்றழைப்பதோடு நெருக்கமாக இணைக்கப்படுகிறது. மனிதவர்க்க வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும், மக்கள்தொகைப் பெருக்கம் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்து வந்தது; இறப்போரின் எண்ணிக்கை பிறப்போரின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாயிருந்தது. இறுதியில், 1830-ம் ஆண்டின்போது, உலக மக்கள்தொகையின் எண்ணிக்கை நூறு கோடியை எட்டியது.
பிறகு மருத்துவ மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் தோன்றின. இது நோயினால், குறிப்பாக குழந்தை பருவத்தில் வரும் நோயினால், ஏற்படும் மரணங்களைக் குறைத்தது. உலக மக்கள்தொகை 1930-ம் ஆண்டின்போது இருநூறு கோடியானது. இதில் 1960-ம் ஆண்டின்போது இன்னும் நூறு கோடி கூட்டப்பட்டது. இன்னொரு நூறு கோடி 1975-ம் ஆண்டின்போது கூட்டப்பட்டது. உலக மக்கள்தொகை எண்ணிக்கை 1987-ம் ஆண்டின்போது ஐந்நூறு கோடியை எட்டியது.
இச்சூழ்நிலையை வேறு விதத்தில் நோக்குவோமானால், இக்கோளில் உள்ள மக்களின் எண்ணிக்கை தற்போது ஒவ்வொரு நிமிடமும் சுமார் 170 ஆட்கள் என்ற வீதத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு நாளும் சுமார் 2,50,000 ஆட்களைக் கூட்டுகிறது. இது ஒரு பெரிய நகரத்திற்குப் போதுமான எண்ணிக்கையாகும். இதன் அர்த்தம் ஒவ்வொரு வருடமும் 9 கோடிக்கும் அதிகமான ஆட்கள் என்ற மக்கள்தொகை அதிகரிப்பைக் கொண்டுவருகிறது. இது கனடா மக்கள்தொகையின் மூன்று மடங்குக்கோ, மெக்ஸிகோ மக்கள்தொகையின் ஒரு மடங்குக்கோ சமமாக இருக்கிறது. இந்த மக்கள்தொகைப் பெருக்கத்தின் 90 சதவீதம், ஏற்கெனவே உலக மக்கள்தொகையின் 75 சதவீதம் வாழ்ந்துவரும் வளரும் நாடுகளில் ஏற்படுகிறது.
அரசாங்கங்களின் அக்கறைக்குரியவை
ஆனால் அரசாங்கங்கள் ஏன் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆவலாய் இருக்கின்றன? ஐ.நா. மக்கள்தொகை நிதி நிறுவனத்திற்கான நைஜீரியாவின் தேசீய திட்ட அலுவலர், டாக்டர் பாப்ஸ் சேகோ, இக்கேள்விக்கு ஓர் எளிய உதாரணத்தோடு பதிலளிக்கிறார். இவ்வுதாரணம் சிக்கலும் முரண்பாடுமுள்ள ஒரு பிரச்னையை அளவுக்குமீறி எளிதாக்கிவிடக்கூடும் என அவர் எச்சரிக்கிறார். அவர் விவரிப்பதாவது:
‘ஒரு விவசாயி பத்து ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்குப் பத்துப் பிள்ளைகளிருந்து, நிலத்தைப் பத்துச் சமபங்குகளாக அவர்களுக்குள் பிரிப்பாரேயானால், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஓர் ஏக்கர் நிலம் கிடைக்கும். அந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகளிருந்து அதேபோல நிலத்தைப் பிரிப்பார்களேயானால் அவர்களுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் ஓர் ஏக்கரின் பத்திலொரு பாகம் மட்டுமே கிடைக்கும். தெளிவாவே, இந்தப் பிள்ளைகள் பத்து ஏக்கர் நிலத்தை வைத்திருந்த தங்களுடைய பாட்டனைப்போல வசதியுடனிருக்கமுடியாது.’
இந்த உதாரணம் அதிகரித்துக்கொண்டுவரும் மக்களின் எண்ணிக்கைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையுடைய எல்லைக்குட்பட்ட பூமிக்கும் உள்ள தொடர்பைச் சிறப்புப்படுத்திக் காட்டுகிறது. மக்கள்தொகை பெருகிக்கொண்டேவரும்போது, அநேக வளரும் நாடுகள் தற்போதைய மக்கள்தொகை அளவுகளைக் கையாள போராடிக்கொண்டிருக்கின்றன. பிரச்னைகளில் சிலவற்றைக் கவனியுங்கள்.
வளங்கள். மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, காடுகள், மேற்பரப்புமண், பயிரிடுநிலம், நல்ல தண்ணீர் ஆகியவற்றிற்கான தேவையும் அதிகரிக்கிறது. அதன் விளைவு? போபுலை பத்திரிகை வருத்தம் தெரிவிக்கிறது: “அடிக்கடி தங்களுடைய எதிர்கால வளர்ச்சி சார்ந்திருக்கும் தேசீய வளங்களை அளவுக்குமீறி பயன்படுத்தும்படி . . . வளரும் நாடுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன.”
இணைப்பமைவுகள். மக்கள்தொகை அதிகரிக்கும்போது, போதுமான வீட்டுவசதி, பள்ளிகள், துப்புரவு வசதிகள், சாலைகள், சுகாதார சேவைகள் போன்றவற்றைக் கொடுப்பதை அரசாங்கங்கள் அதிகக் கடினமாகக் காண்கின்றன. அதிகக் கடனால் இரட்டை பாரம் சுமத்தப்பட்டு, வளங்கள் குறைந்துகொண்டுபோகும் வளரும் நாடுகள் தற்போதைய மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இக்கட்டுக்குள்ளாக்கப்படுகின்றன. அப்படியானால், இதைவிட அதிக மக்கள்தொகைகளைப்பற்றி சொல்லவேண்டிய தேவையேயில்லை.
வேலைவாய்ப்பு. அநேக வளரும் நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் 40 சதவீதத்தினர் ஏற்கெனவே வேலையில்லாமல் இருக்கின்றனர் என்பதாக ஐ.நா. மக்கள்தொகை நிதி நிறுவன பிரசுரம் பாப்புலேஷன் அன்ட் தி என்வைரன்மென்ட்: தி சேல்லஞ்சஸ் அஹெட் கூறுகிறது. வளரும் உலகம் (Developing world) முழுவதும் 50 கோடிக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் அல்லது வேலை பற்றாக்குறையுடன் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொழில் முன்னேற்றமடைந்த உலகிலுள்ள முழு தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கைக்குக் கிட்டத்தட்ட சமமாகும்.
இந்த வீதங்கள் மோசமடைவதைத் தடுக்க வளரும் நாடுகள் ஒவ்வொரு வருடமும் 3 கோடி புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். அந்த வேலைவாய்ப்புகள் யாருக்குத் தேவைப்படுகிறதோ அந்த மக்கள் இன்று வாழ்கின்றனர்—அவர்கள் இன்றைய குழந்தைகளே. பரவலான வேலையில்லாத் திண்டாட்டம் சமுதாயக் கலகம், ஆழ்ந்த வறுமை, இயற்கை வளங்களின் மிகுதியான அழிவு போன்றவற்றிற்கு வழிநடத்தலாம் என நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.
எனவே அதிகப்படியான வளரும் நாடுகள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வளரச் செய்ய முயற்சிக்கின்றன என்பதில் அதிக ஆச்சரியமில்லை. சமீப காலங்களில் என்ன நடக்கவிருக்கிறதென்பதைக் குறிப்பிடும்போது லேன்ஸெட் என்ற பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையின் தலையங்கம் இவ்வாறு கூறிற்று: “[மக்களின்] எண்ணிக்கையின் அதிகரிப்பினால் வரும் அழுத்தம், முக்கியமாக உலகின் ஏழை நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இது அவர்கள் எதிர்ப்படும் பொறுப்புகளைப் பெருமளவில் அதிகரிக்கச்செய்கிறது. . . . இலட்சக்கணக்கானோர் படிப்பறிவு, வேலை வாய்ப்பு, நல்ல வீடுகள், அடிப்படை சுகாதாரத்திற்கான வழி, துப்புரவு மற்றும் உடல்நல சேவைகள், போன்றவையின்றி தங்கள் வாழ்நாளைக் கழிப்பார்கள். கட்டுப்பாடற்ற மக்கள்தொகைப் பெருக்கம் மேற்கூறிய பிரச்னைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.”
குடும்பங்களின் அக்கறைக்குரியவை
இலக்குகளை நிர்ணயித்துத் தேசீய அளவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது ஒன்று; ஆனால் பொது ஜனங்களின் மனதை மாற்றுவது மற்றொன்று. பெரிய குடும்பங்களை ஆதரிக்கும் பாரம்பரிய நோக்குநிலைகள் அநேக சமுதாயங்களில் இன்னும் உறுதியாக இருந்துவருகின்றன. உதாரணமாக, பிறப்பு வீதத்தைக் குறைப்பதற்கான அவளுடைய அரசாங்கத்தின் உற்சாகப்படுத்துதலுக்கு ஒரு நைஜீரிய தாய் இவ்வாறு சொல்லி பிரதிபலித்தாள்: “என் தகப்பனுடைய 26 பிள்ளைகளில் நான் கடைசி. என்னுடைய மூத்த சகோதர சகோதரிகள் எல்லாருக்கும் எட்டிலிருந்து 12 குழந்தைகள் வரை இருக்கின்றனர். எனவே, நான் மாத்திரம் குறைவாக பெற்றுக்கொள்ளும் ஒருத்தியாக இருக்கவேண்டுமா?”
இருப்பினும், அத்தகைய ஒரு நோக்குநிலை ஒரு காலத்தில் இருந்ததுபோல, ஒரு சராசரி பெண் ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் நைஜீரியாவிலுங்கூட, அவ்வளவு பொதுவானதாக இல்லை. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசிகளை எதிர்ப்படுவதால், லட்சக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களுக்கு உணவும் உடையுமளிப்பதில் இக்கட்டுக்குள்ளாகின்றனர். அநேகர் தங்களுடைய அனுபவத்தின்மூலம் யொருபாவின் இந்தப் பழமொழியின் உண்மையைப் புரிந்துகொண்டிருக்கின்றனர்: “ஆமா பாரி ஓஷி பாரி,” (தாராளமான குழந்தைகள், ஏராளமான வறுமையாகும்).
அநேக தம்பதிகள் குடும்பக் கட்டுப்பாட்டின் பலன்களைப் புரிந்துகொண்டிருந்தாலும் அவர்கள் அதைச் செயலில் காட்டுவதில்லை. அதன் விளைவு? வளரும் நாடுகளில் வருடத்தில் ஏறத்தாழ மூன்றிலொரு கருத்தரிப்பு, திட்டமிடப்படாதது மட்டுமல்லாமல் தேவையில்லாததுமாயிருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியால் வெளியிடப்பட்ட தி ஸ்டேட் ஆஃப் தி உவோர்ல்ட்ஸ் சில்ரன் 1992 கூறிற்று.
குடும்பக் கட்டுப்பாடு உயிர் காக்கிறது
பொருளாதார இக்கட்டுகள் மட்டுமன்றி, தாய் மற்றும் அவளுடைய பிள்ளைகளின் உடல்நலமும் குடும்பக் கட்டுப்பாட்டைச் சிந்தித்துப்பார்ப்பதற்கான ஒரு பெரிய காரணமாகும். “கருத்தரிப்பு ஒரு சூதாட்டம் மற்றும் பிள்ளைப் பெறுதல் வாழ்க்கையை அல்லது மரணத்தைக் குறிக்கும் ஒரு போராட்டமாகும்,” என்று மேற்கு ஆப்பிரிக்க பழமொழி ஒன்று கூறுகிறது. வளரும் நாடுகளில் ஒவ்வொரு வருடமும், கருத்தரிப்பின்போதோ பிள்ளைப்பேற்றின்போதோ ஐந்து லட்சம் பெண்கள் இறக்கின்றனர், பத்து லட்சம் குழந்தைகள் தாயற்றவர்களாகின்றனர். மேலும் 50 லட்சத்திலிருந்து 70 லட்சம் கூடுதலான பெண்கள் பிள்ளைப்பேறு சம்பந்தமான சுகவீனங்களால் முடமாக்க அல்லது ஊனமாக்கப்படுகின்றனர்.
வளரும் நாடுகளில் உள்ள எல்லா பெண்களுமே அதே அளவு ஆபத்திலில்லை. இதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டி காண்பிக்கிறதுபோல, அதிக எண்ணிக்கையில், மிகக் குறைந்த வயதில், அடிக்கடி, அல்லது அதிகம் பிந்திய வயதில் குழந்தை பெறும் பெண்களே பெரும்பாலும் அதிக ஆபத்திலிருக்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு இந்த மரணங்களில் கால் பாகத்திலிருந்து மூன்றிலொரு பங்கையும், லட்சக்கணக்கான முடத்தையும் தவிர்க்கமுடியும், என்பதாக ஐ.நா. வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
ஆனால் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவது மக்கள்தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க மட்டும் உதவுகிறதல்லவா? ஆச்சரியகரமாகவே, அநேக வல்லுநர்கள் இல்லை என்பதாக பதிலளிக்கின்றனர். “அதிக குழந்தைகள் உயிர்ப்பிழைத்தால் மக்கள்தொகைப் பிரச்னை இன்னும் மோசமாகும் என்று எண்ணப்படலாம். ஆனால் அதற்கு நேர்மாறாகும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் உயிர்ப்பிழைத்திருப்பார்கள் என்ற திடநம்பிக்கையுடன் இருப்பார்களேயானால் கருவுறுதிறன் (Fertility) குறைய நேரிடுகிறது,” என்பதாக 1991 ஹியூமன் டிவலப்மென்ட் ரிப்போர்ட் கூறுகிறது.
இருப்பினும், லட்சக்கணக்கான, குறிப்பாக ஏழை சமுதாயங்களில் உள்ள, பெண்கள், தொடர்ந்து அடிக்கடி பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் தங்களுடைய சமுதாயம் அவர்களிடத்தில் அதை எதிர்பார்க்கிறது, காரணம் அநேகக் குழந்தைகளைப் பெறுவது சில குழந்தைகளாவது உயிர்ப்பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளைப்பற்றி அறியாமலிருப்பதும் அல்லது அச்சேவைகளைப் பெறும் வாய்ப்பில்லாதிருப்பதும்கூட காரணமாக இருக்கலாம்.
எனினும், பெரிய குடும்பங்களை உடைய பல பெண்கள் எவ்வழியிலும் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்போவதில்லை. அவர்கள் ஒவ்வொரு குழந்தையையும் கடவுளிடமிருந்துவரும் ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகின்றனர்.
[பக்கம் 6-ன் பெட்டி]
வளரும் உலகில் மிக ஆபத்தான கருத்தரிப்பு
மிகக்குறைந்த வயதில்: கருத்தரிப்பின்போதும் பிள்ளைப்பேற்றின்போதும் ஏற்படும் மரண ஆபத்து, 20 முதல் 24 வயதுவரையுள்ள பெண்கள் மத்தியில் இருப்பதைவிட 15 முதல் 19 வயதுவரையுள்ள பெண்கள் மத்தியில் மூன்று மடங்கு அதிகமாகும். பருவ வயதினருக்குப் பிறக்கும் குழந்தைகள் இறப்பதற்கோ, தகுந்த சமயத்திற்கு அதிக முன்னதாக பிறக்கவோ அல்லது பிறக்கும்போது மிகக் குறைவான எடையைக் கொண்டிருக்கவோ அதிக வாய்ப்பு உண்டு.
அடிக்கடி: இரண்டு பிரசவங்களுக்கு இடையிலுள்ள காலப்பகுதி குழந்தை உயிர்ப்பிழைத்திருப்பதை அதிகம் பாதிக்கிறது. தாயின் முந்திய குழந்தைக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குக் குறைவான காலத்தில் பிறந்த குழந்தை, குழந்தை பருவத்திலேயே இறப்பதற்கு 66 சதவீதம் அதிக வாய்ப்பை உடையதாய் இருக்கிறது. இந்தக் குழந்தைகள் உயிர்வாழ்ந்திருப்பார்களானால், அவர்களுடைய வளர்ச்சி குன்றி அறிவு வளர்ச்சியில் குறைவு ஏற்பட மிக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தகுந்த பிறப்பு இடைவெளி கொடுப்பதன் மூலம் குழந்தை மரணங்களில் சுமார் ஐந்தில் ஒன்றைத் தவிர்க்கமுடியும். இரண்டு பிரசவங்களுக்கிடையில் மூன்று அல்லது அதற்கதிக வருட இடைவெளி மிகக் குறைந்த ஆபத்தையே கொண்டுவருகிறது.
அதிக எண்ணிக்கையில்: நான்கு குழந்தைகளுக்கு மேல் பெறுவது கருத்தரிப்பு மற்றும் பிள்ளைப்பேறு ஆகியவற்றின் ஆபத்துக்களை அதிகரிக்கிறது. விசேஷமாக முந்திய குழந்தைகளுக்கு இடையில் இரண்டு வருடங்களுக்குமேல் இடைவெளி இல்லையென்றால் இது அவ்வாறு ஆகிறது. நான்கு கருத்தரிப்புகளுக்குப் பிறகு தாய்மார்கள் இரத்த சோகையினால் துன்பப்பட்டு இரத்தப் போக்குக்கு அதிகம் ஆளாகிறார்கள். இவர்களுடைய குழந்தைகளோ உடலூனங்களுடன் பிறக்கும் அதிக ஆபத்துகளை உடையவர்களாய் இருக்கின்றனர்.
அதிகம் பிந்திய வயதில்: முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 20 முதல் 24 வரை வயதுள்ள பெண்களைவிட, கருத்தரிப்பின்போதோ அல்லது பிள்ளைப்பேற்றின்போதோ இறப்பதற்கான ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர். வயதான பெண்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் இறப்பதற்கான அதிக வாய்ப்பை உடையவர்களாக இருக்கின்றனர்.
தகவல் மூலம்: உலகச் சுகாதார நிறுவனம், ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம், மற்றும் ஐ.நா. மக்கள் தொகை நிதி நிறுவனம்.