குடும்ப அளவை யார் தீர்மானிக்க வேண்டும்?
பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்
பிறந்து மூன்று நாட்களே ஆகியிருந்த அந்த ஆண்குழந்தை, ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு சுரங்க ரயில் நிலையமொன்றில் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் அக் குழந்தையைத் தத்தெடுக்க பல குடும்பங்கள் முன்வந்தன என்று பிரேஸிலைச் சேர்ந்த ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டது.
குறிப்பாக அப்பேர்ப்பட்ட ஒரு நிகழ்ச்சி அரிதாயினும், விரும்பப்படாத மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை உலகெங்கும் வளர்ந்துவருகிறது. பொறுப்புள்ள பெற்றோர்த்துவமும் அடிக்கடி குறைந்துவருகிறது. கருத்தடை ஒரு தீர்வா? ஒருவரது குடும்ப அளவைத் திட்டமிடுவது தவறாய் இருக்குமா?
உலகளவில், சுமார் 50 சதவீத கருத்தரிப்புகள் திட்டமிடப்படாதவை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அடிக்கடி ஒரு கருத்தரிப்பு திட்டமிடப்படாததாய் இருப்பது மட்டுமல்லாமல், விரும்பப்படாததாயும் இருக்கிறது.
ஒருவேளை உடல்நலம், வீட்டு வசதி, அல்லது வேலைப் பிரச்சினைகள் காரணமாய் பலர் கருத்தரிப்பைத் தவிர்ப்பதற்கான வழியைத் தேடுகின்றனர். எனவே, பேறுத்தடை மாத்திரைகள், கருத்தடை உறைகள் போன்ற கருத்தடை முறைகள் பொதுவாயுள்ளன. கருச்சிதைவு மற்றும் மலடாக்கல் ஆகியவையும் பேறுத்தடை முறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிரேஸிலில் கருச்சிதைவு பற்றி, ஓ எஸ்டாடூ ட சாவ் பாவ்லூ என்ற செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “பிரேஸிலில் கருத்தரிக்கும் 1 கோடியே 30 லட்சம் பெண்களில் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இரகசியமாய் கருச்சிதைவு செய்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்கிறது.” மேலும், ஒரு துணையோடு வாழும், பிள்ளை பிறப்பிக்கக்கூடிய வயதுடைய, பிரேஸிலைச் சேர்ந்த பெண்களில் 71 சதவீதத்தினர் பேறுத்தடை செய்வதாய் டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. இவர்களில், 41 சதவீதத்தினர் கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர், 44 சதவீதத்தினர் மலடாக்கப்பட்டிருக்கின்றனர்.
பிள்ளைகளின் எண்ணிக்கையை முன்னதாகத் திட்டமிட வேண்டியது அவசியம் என்று பிரேஸிலைச் சேர்ந்தவர்களில் 75 சதவீதத்தினர் நினைப்பதாக ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. விதியில் நம்பிக்கை வைத்திருப்பதாலோ, ‘கடவுள் அனுப்பும் அத்தனைப் பிள்ளைகளை’ ஒரு குடும்பம் கொண்டிருப்பது கடவுளுடைய சித்தமாயிருப்பதாய் நினைப்பதாலோ பிறர் குடும்பக் கட்டுப்பாட்டை மறுத்துவிடுகின்றனர். குடும்ப அளவை யார் தீர்மானிப்பது—தம்பதியா, தேசிய அல்லது மத சம்பந்தமான அக்கறைகளா?
பேறுத் தடை—ஏன் சர்ச்சைக்குரியது?
பிரேஸிலின் மிகப் பெரிய மதமான, ரோமன் கத்தோலிக் சர்ச், ரிதம் முறையை (rhythm method) அனுமதித்தபோதிலும், கருச்சிதைவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கருத்தடை முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. “ஒவ்வொரு பாலுறவும் உயிர் கடத்தப்படுவதற்கு வழிவகுப்பதாய் இருக்க [வேண்டும்]” என்று போப் பால் VI கூறினார். “நேர்மையாய்த் தீர்ப்பளிக்கையில், கருத்தடை, ஒருபோதும், எக்காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாதபடி, முற்றிலும் சட்ட விரோதமானதாய் இருக்கிறது” என்று போப் ஜான் பால் II கூறினார். அதன் விளைவாக, கருத்தடையை ஒரு பாவமாய்க் கருதி, கத்தோலிக்கர் பலர் தங்கள் குடும்ப அளவை திட்டமிடத் தயங்குகின்றனர்.
மறுபட்சத்தில், மருத்துவ பத்திரிகை லேன்ஸெட் இவ்வாறு கூறுகிறது: “கோடிக்கணக்கானோர் கல்வியறிவில்லாதவர்களாய், வேலையில்லாதவர்களாய், வீட்டு வசதியில்லாதவர்களாய், அடிப்படை ஆரோக்கியம், நலம், மற்றும் சுகாதார சேவைகள் ஆகிய வசதியில்லாதவர்களாய்த் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பர்; மேலும் கட்டுக்கடங்கா ஜனத்தொகை அதிகரிப்பு இந்நிலைமைகளுக்கு ஒரு பெரும் காரணியாய் இருக்கிறது.” எனவே, சர்ச் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், ஜனத்தொகை மிகுதி மற்றும் வறுமையைக் குறித்து அஞ்சி, குடும்பக்கட்டுப்பாட்டை சில அரசாங்கங்கள் உற்சாகப்படுத்துகின்றன. உதாரணமாக, “பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கையை [ஒரு குடும்பத்துக்கு] 7-லிருந்து 3-ஆக கோஸ்டா ரிகா குறைத்திருக்கிறது” என்று உயிரியலாளர் பால் எர்லிச் கூறுகிறார்.
ஐநா பிரசுரமான ஃபேக்ட்ஸ் ஃபார் லைஃப்—ஏ கம்யூனிக்கேஷன் சேலஞ்ச் இவ்வாறு கூறுகிறது: “ஒரு பெண் நான்கு பிள்ளைகளைப் பெற்ற பிறகு, கூடுதலான கருத்தரிப்புகள், தாய்க்கும் சேய்க்கும் உயிர் மற்றும் உடல்நலத்துக்கு பெரியளவு ஆபத்துக்களைக் கொண்டுவருகிறது. விசேஷமாக முந்தின பேறுகள் ஒவ்வொன்றுக்குமிடையே இரு ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி இல்லாதிருக்கையில், ஒரு பெண்ணின் உடல், அடுத்தடுத்த கருத்தரிப்பு, பிள்ளைப்பேறு, தாய்ப்பால் ஊட்டுவது, மற்றும் சிறு பிள்ளைகளைப் பராமரிப்பது போன்றவற்றால் எளிதில் களைப்படைந்துவிடலாம்.”
குழந்தை இறப்பு அதிகமாயுள்ள இடங்களில், குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவின் கிராமப் பகுதிகளில் பெரிய குடும்பங்கள் இன்னும் பொதுவாயுள்ளன. ஏன்? பலருக்கு கருத்தடை முறைகளைப் பற்றி தெரியாது. சில பகுதிகளில், “ஒரு மனிதன் ஒவ்வொரு ஆண்டும் தன் மனைவி கருத்தரித்தால் மட்டுமே தன்னை ஓர் ஆணாகக் கருதுகிறான்” என்று ஒரு சட்ட சபை உறுப்பினர் கூறினது போல் அதுவும் ஒரு காரணியாய் இருக்கலாம். ஜோர்னல் டா டார்ட மற்றொரு காரணியின் சாத்தியத்தை, விசேஷமாய், பெண்ணின் நோக்குநிலையிலிருந்து இவ்வாறு குறிப்பிடுகிறது: “பிள்ளைகள் அவர்களுக்கு அரிதாய்க் கிடைக்கும் இன்பத்துக்குக் காரணராய் இருக்கின்றனர், மேலும் தனிப்பட்ட சாதனை உணர்வைக் கொண்டுவருகின்றனர்.” மேலும், பிரேஸிலில் சுற்றுச் சூழலியல் துறையின் முன்னாள் செயலரான பௌலூ நோகேர நெட்டோ இவ்வாறு கூறினார்: “ஒரு குழந்தை ஏழை மக்களின் சமூக பாதுகாப்பாய் இருக்கிறது.”
பைபிள் என்ன கூறுகிறது
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், குடும்ப அளவைத் தீர்மானிப்பதை கணவனுக்கும் மனைவிக்கும் விட்டுவிடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும், இனப்பெருக்கம் செய்வதற்கு, அல்லது கனத்துக்குரிய நெருக்கமான பாலுறவின் மூலம் பாசத்தைக் காட்டுவதற்கு, திருமணம் பொருத்தமானதாய் இருப்பதாகவும் அது காட்டுகிறது.—1 கொரிந்தியர் 7:3-5; எபிரெயர் 13:4.
ஆனால், ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்று பரதீஸில் ஆதாம் ஏவாளிடம் கடவுள் கூறவில்லையா? (ஆதியாகமம் 1:28) ஆம், ஆனாலும் அதே கட்டளையின்கீழ் நாம் இருக்கிறோம் என்று பைபிளில் எதுவும் காட்டுகிறதில்லை. எழுத்தாளர் ரிகார்டூ லெஸ்கானூ இவ்வாறு குறிப்பிட்டார்: “கோளத்தில் இரண்டு பேராக இருந்தவர்களுக்கு மட்டுமே பொருத்தப்பட்ட அதே கூற்றை [கோடிக்கணக்கான] மனிதருக்குப் பொருத்துவது ஏதோ முரண்பட்டதாய்த் தோன்றுகிறது.” பிள்ளைகளே வேண்டாம் என்று தீர்மானித்திருந்தாலும், இது மதிக்கப்பட வேண்டிய ஒரு தனிப்பட்ட தெரிவாய் இருக்கிறது.
அக்கறையூட்டும் வகையில், யெகோவாவின் சாட்சிகளுடைய நோக்குநிலை பைபிள் சார்ந்தது என்பதாக நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. அது இவ்வாறு கூறுகிறது: “தம்பதியின் சொந்த தீர்மானத்திற்கு விட்டுவிடும் பேறுத் தடையைத் தவிர, அவர்களின் விவாக சம்பந்தமான மற்றும் பாலின ஒழுக்கநெறி மிகவும் கண்டிப்பானது.” அது மேலும் கூறுகிறது: “அவர்கள் பைபிளையே தங்களுடைய நம்பிக்கைக்கும், நடத்தைக்குரிய விதிமுறைக்கும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.”
குடும்ப அளவை மட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் எல்லா முறைகளும் ஏற்கத்தக்கதா? இல்லை. உயிர் புனிதமானதாய் இருப்பதால், கருச்சிதைவுக்குக் காரணமாயிருந்தவன் ஒரு கொலையாளியைப் போல் கருதப்பட வேண்டும் என்று இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த சட்டம் உரைத்தது. (யாத்திராகமம் 20:13; 21:22, 23) விந்துக்குழாய் வெட்டு போன்ற, மலடாக்கும் விஷயத்தில் செய்யப்படும் தீர்மானம் தனிப்பட்ட மனச்சாட்சிக்குட்பட்டது, ஏனெனில் இது நேரடியாக பைபிளில் குறிப்பிடப்படவில்லை. “அவனவன் தன் தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:5) a மேலும், பேறுத் தடைக்கு பல்வகைப்பட்ட முறைகள் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட முறையை உபயோகிப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்க மருத்துவம் சம்பந்தமான வழிகாட்டுதல் ஒரு தம்பதிக்கு உதவலாம்.
உங்களால் தாங்கிக்கொள்ள முடிகிற வகையில் தீர்மானங்களைச் செய்தல்
வாழ்வின் எல்லா விஷயங்களும் திட்டமிடப்பட முடியாது. ஆனால், உட்படும் விஷயங்களுக்கு உள்ளார்ந்த கவனம் செலுத்தாமல் ஒரு காரையோ, ஒரு வீட்டையோ நீங்கள் வாங்குவீர்களா? ஒரு காரோ, ஒரு வீடோ திரும்ப விற்கப்படலாம்; ஆனால் பிள்ளைகள் திருப்பிக் கொடுக்கப்பட முடியாதவர்கள். ஆகவே, ஒரு கருத்தரித்தலைத் திட்டமிடும்போது, வாழ்வின் தேவைகளை அளிக்கும் கணவன் மனைவியினுடைய திறனைக் கருத்தில் கொள்ள வேண்டாமா?
நிச்சயமாகவே, நம் குடும்பம் ஊட்டச்சத்தின்றி இருக்க நாம் விரும்புவதில்லை; அல்லது பிறருக்கு பாரமாய் இருக்கவும் நாம் விரும்புவதில்லை. (1 தீமோத்தேயு 5:8) அதே சமயத்தில், உணவு மற்றும் உறைவிடத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு கல்வி, ஒழுக்க மதிப்பீடுகள், அன்பு ஆகியவை தேவை.
வேலை, பணம், பொறுமை ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் என்ன தேவை என்பதைக் கணக்கிடுவதோடுகூட, மனைவியின் உடல்நலமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஞானமாய்த் திட்டமிட்டு கருத்தரிப்பது உயிர்களைக் காப்பதோடு, மேம்பட்ட உடல்நலத்தை முன்னேற்றுவிக்கிறது. ஃபேக்ட்ஸ் ஃபார் லைஃப் இவ்வாறு கூறுகிறது: “கருத்தரிப்பு மற்றும் பிள்ளைப்பேறு சம்பந்தமாக தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதில் மிகவும் பலனுள்ள வழிகளில் ஒன்று, பேறுகளின் காலத்தை முன்கூட்டியே திட்டமிடுவது. தாயாகவிருப்பவர், 18 வயதுக்குக் கீழேயோ, 35 வயதுக்கு மேலேயோ இருந்தாலோ, அல்லது அதற்கு முன்பு நான்கு முறை அல்லது மேற்பட்டு கருத்தரித்திருந்தாலோ, அல்லது கடைசியாக பிள்ளைப் பெற்றதிலிருந்து இரு ஆண்டுகளுக்கும் குறைந்த இடைவெளியிருந்தாலோ, பிள்ளைப்பேறு சம்பந்தமாக ஏற்படும் அபாயங்கள் மிகவும் அதிகம்.”
பிள்ளைகளைக் கொண்டிருக்க எண்ணும் தம்பதிகள், பைபிளில் முன்குறிப்பிட்டபடி, குற்றச்செயல், பஞ்சம், போர், நிச்சயமற்ற பொருளாதாரம் ஆகியவற்றால் நிறைந்துள்ள ஓர் உலகால் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். (மத்தேயு 24:3-12; 2 தீமோத்தேயு 3:1-5, 13; வெளிப்படுத்துதல் 6:5, 6) பிள்ளைகளுக்காக உண்மையான அன்பைக் கொண்டிருப்பது, நாம் வாழும் உலகைப் பொறுத்தமட்டில் நிஜமானவர்களாயும், நம் காலத்தில் பிள்ளைகளை வளர்ப்பது ஒரு பெரிய சவால் என்பதைப் போற்றுபவர்களாயும் இருக்க தம்பதிகளுக்கு உதவும். ஆகவே, காரியங்கள் அதன் போக்கில் நடைபெறவும், முடிவில் எல்லாம் நல்லவிதமாகவே அமையும் என்று, எந்தவிதத் திட்டமுமின்றி, எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் பரவாயில்லை என்றும் அனுமதிப்பதற்கு மாறாக, பலர், தங்களுடைய குடும்பம் எவ்வளவு பெரிதாக இருந்தால் தங்கள் பிள்ளைகள் அதிகளவு சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் அனுபவிப்பர் என்பதைத் தெரிவு செய்ய விரும்புகின்றனர்.
குடும்ப விவகாரங்களில் ஞானமான தீர்மானங்களைச் செய்வதற்கு நமக்கு உதவுவதோடு, எதிர்காலத்துக்காக ஒரு திட நம்பிக்கையை கடவுளுடைய வார்த்தை நமக்கு அளிக்கிறது. ஒரு பரதீஸ் பூமியில் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் என்றென்றும் மனிதர் வாழவேண்டும் என்பதே சிருஷ்டிகரின் நோக்கம் என்பதாக பைபிள் காட்டுகிறது. இதை நிறைவேற்ற, கடவுள் இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார். பிறகு, வறுமை மற்றும் ஜனத்தொகை மிகுதியிலிருந்து விடுபட்ட ஒரு நீதியான புதிய உலகில், விரும்பப்படாததன் காரணமாக பிள்ளைகள் இனிமேலும் தூக்கியெறியப்பட மாட்டார்கள்.—ஏசாயா 45:18; 65:17, 20-25; மத்தேயு 6:9, 10.
ஒருவருக்கொருவரும், பிள்ளைகளுக்காகவும் கரிசனை காட்டுவதும், இனப்பெருக்கத்தைப் பற்றிய ஒரு சமநிலையான நோக்கும், தங்கள் குடும்ப அளவைத் தீர்மானிக்க ஒரு தம்பதிக்கு உதவும். காரியங்கள் அதன் போக்கில் நடைபெற அனுமதிப்பதற்கு மாறாக, அவர்கள் கடவுளின் வழிநடத்துதலை ஜெபத்துடன் தேட வேண்டும். ‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.’—நீதிமொழிகள் 10:22, NW.
[அடிக்குறிப்பு]
a ஆங்கில காவற்கோபுரம், மே 1, 1985, பக்கம் 31-ஐக் காண்க.
[பக்கம் 12-ன் படம்]
லட்சக்கணக்கான பிள்ளைகள் கைவிடப்படுகின்றனர்
[பக்கம் 13-ன் படம்]
பிள்ளைகளுக்கு அன்பான கவனிப்பு தேவை