குடும்பக் கட்டுப்பாடு—கிறிஸ்தவ நோக்குநிலை
முதல் உலக மக்கள்தொகை மாநாட்டில், 1974-ம் ஆண்டு, பங்குபெற்ற 140 நாடுகளும், எல்லா தம்பதிகளுக்கும் “தங்களுடைய குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கிடையிலான இடைவெளி போன்றவற்றைச் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் தீர்மானிப்பதற்கான, மற்றும் அதைப்பற்றிய தகவல்கள், கல்வி, அதற்கான வழிவகைகள் போன்றவற்றைப் பெறுவதற்கான அடிப்படை உரிமை உண்டு,” என்று தீர்மானித்தன.
அந்தத் தீர்மானத்தை நல்ல ஒரு தீர்மானம் என அநேகர் கருதுகின்றனர். “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்”புங்கள், என்று கடவுள் ஆதாம் ஏவாளோடும் பின்பு நோவாவோடும் சொன்னது உண்மைதான். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அதுபோன்ற எந்தக் கட்டளையும் கொடுக்கப்படவில்லை. (ஆதியாகமம் 1:28; 9:1) வேதாகமம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றோ பிள்ளைப் பெறுவதிலிருந்து விலகியிருங்கள் என்றோ உற்சாகப்படுத்துவது கிடையாது. பிள்ளைகளைப் பெறுவதா, வேண்டாமா என்றும், பிள்ளைகளுக்காகத் திட்டமிட்டால், எத்தனை பெறுவது, எப்போது பெறுவது என்பதையெல்லாம் திருமணமான தம்பதிகள் தங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளலாம்.
கடவுளால் கொடுக்கப்பட்ட பொறுப்பு
உலக மக்கள்தொகை மாநாட்டின் அறிவிப்பு, தம்பதிகள் “குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கிடையிலான இடைவெளி போன்றவற்றைப் பொறுப்புடன்” தீர்மானிக்கவேண்டும் என்று சொன்னதைக் கவனித்தீர்களா? பொறுப்பின் இந்த நியமம் பைபிளோடும்கூட ஒத்திருக்கிறது. பிள்ளைகள் கடவுளிடமிருந்துவரும் ஒரு விலையுயர்ந்த பரிசாக இருந்தாலும், அந்தப் பரிசோடுகூட கணிசமான பொறுப்பும் வருகிறது என்பதைக் கிறிஸ்தவ பெற்றோர் உணர்கின்றனர்.
முதலாவதாக, பொருளாதார ரீதியில் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பு இருக்கிறது. பைபிள் சொல்கிறது: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”—1 தீமோத்தேயு 5:8.
வெறுமனே உணவளிப்பது, மற்ற செலவுகளுக்குக் கொடுப்பது போன்றவைதானே குடும்பத்தில் பெரும்பாலும் ஒரு பெரிய கடமையாக இருந்தபோதிலும் தன்னுடைய குடும்பத்தைக் கவனிப்பது இதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. பொறுப்புள்ள கிறிஸ்தவ தம்பதிகள், தங்களுடைய குடும்பத்தின் அளவைத் திட்டமிடுவதில், தாயின் உடல்நலம், அவளுடைய மனநலம், உணர்ச்சிசம்பந்தப்பட்ட நலம், ஆவிக்குரிய நலம் போன்றவற்றைக் கருத்தில் கொள்கின்றனர். ஒரு குழந்தையைப் பராமரிப்பதானது அதிக நேரத்தைத் தேவைப்படுத்துகிறது. குழந்தைக்குமேல் குழந்தை பெறுவதனால், தாய்மார்கள் தங்களுடைய ஓய்வு, பொழுதுபோக்கு, சொந்த வளர்ச்சி, கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றை மட்டுமல்ல, ஆனால் தங்களுடைய சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய நலனையும்கூட தியாகம் செய்கின்றனர்.
பொறுப்புள்ள கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் தேவைகளையும்கூட மனதில் கொள்கின்றனர். தி ஸ்டேட் ஆஃப் தி உவோர்ல்ட்ஸ் பாப்புலேஷன் 1991 இவ்வாறு சொல்கிறது: “பெரிய, குறுகிய-பிறப்பு இடைவெளி உள்ள குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், உணவு, உடை, பெற்றோர் பாசம் போன்றவற்றிற்காக தங்களுடைய சகோதர சகோதரிகளோடு போட்டியிடவேண்டியுள்ளது. அவர்கள் எளிதில் நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். இந்தக் குழந்தைகள் தாங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தங்கள் குழந்தைப் பருவ வருடங்களைத் தப்பிப் பிழைக்குமானால், அவர்களுடைய வளர்ச்சி குன்றி, அறிவு வளர்ச்சியில் குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தக் குழந்தைகளின் வளர்ச்சியடைந்த பருவ வாழ்க்கையின் வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன.” இது எல்லா பெரிய குடும்பங்களிலும் இவ்வாறு இருப்பதில்லை, ஆனால் கிறிஸ்தவ தம்பதிகள் தாங்கள் பெறப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் திட்டமிடும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு காரியமாக இருக்கிறது.
பைபிள் கட்டளையிடுவதுபோல கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை ஆவிக்குரியவகையில் கவனித்துக்கொள்ளும் கடமையை உடையவர்களாய் இருக்கின்றனர். பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
நைஜீரியாவில் சட்டம் படித்துக்கொடுக்கும் ஒரு கிறிஸ்தவர், இமிகாவுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. அவர் ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்குவதற்காக அவசரப்படுகிறதில்லை. “நாங்கள் எத்தனை குழந்தைகளைப் பெறப்போகிறோம் என்று நானும் என்னுடைய மனைவியும் கலந்தாலோசித்தோம். நாங்கள் ஐந்து குழந்தைகள் பெறுவதாக யோசித்தோம், ஆனால் மூன்று குழந்தைகளைப் பெறுவதென தீர்மானித்தோம். பிறகு இரண்டு குழந்தைகள் இருந்தால் நலமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். பைபிள் நியமங்களின்படி பிள்ளைகளை வளர்ப்பது கடினம். அது ஒரு பெரிய பொறுப்பு.”
சில கிறிஸ்தவ தம்பதிகள் கடவுளைச் சேவிக்க தங்களுடைய எல்லா சமயங்களையும் அர்ப்பணிப்பதற்காகப் பிள்ளைகளைப் பெறுவதில்லை என தீர்மானித்திருக்கின்றனர். தன்னுடைய கணவனோடு சேர்ந்து குழந்தைகளில்லாமல் இருப்பதற்கு ஒப்புக்கொண்ட, ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு மிஷனரி இவ்வாறு கூறினார்: “குழந்தைகள் பெறாததனால் நான் எதையோ இழந்துவிட்டேன் என்பதாக நான் உணரவில்லை. நானும் என் கணவரும் பெற்றோராயிருப்பதன் சந்தோஷங்களை அனுபவித்ததில்லை, என்றாலும் எங்களுடைய வாழ்க்கை வேறு சந்தோஷங்களால் நிறைந்திருக்கிறது. மற்றவர்கள் பைபிள் சத்தியங்களை அறிந்துகொள்ள உதவுவதில் எங்களையே ஈடுபடுத்தியிருப்பதன்மூலம், உலகின் பல்வேறு பாகங்களில் எங்களுக்கு ஆவிக்குரிய குழந்தைகள் இருக்கின்றனர். நாங்கள் அவர்களை நேசிக்கிறோம், அவர்களும் எங்களை நேசிக்கின்றனர். எங்களுக்கிடையே ஒரு விசேஷ கட்டு இருக்கிறது. நல்ல காரணங்களோடுதான் அப்போஸ்தலன் பவுல் தன்னை ஒரு வளர்ப்புத்தாய்க்கு ஒப்பிடுகிறார். ஏனென்றால் தான் ஆவிக்குரியவகையில் உதவியவர்களுக்கு அவர் பரிவான அன்பைக்கொண்டிருந்தார்.”—1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
பிறப்புக் கட்டுப்பாடு
பைபிள் பிறப்புக் கட்டுப்பாட்டைக் கண்டனம் செய்கிறதா? இல்லை, அது கண்டனம் செய்வதில்லை. தெரிவு தம்பதிகளிடத்தில் விடப்படுகிறது. திருமணமான ஒரு தம்பதி பிறப்புக் கட்டுப்பாடு செய்துகொள்ள விரும்பினால், கருத்தடைச் சாதனத்தைத் தெரிந்துகொள்ளுதல் அவர்களுடைய ஒரு சொந்த விஷயமாக இருக்கிறது. எனினும், ஒரு கிறிஸ்தவ தம்பதி தெரிந்தெடுக்கும் பிறப்புக் கட்டுப்பாட்டு முறை, உயிரின் புனிதத்தன்மைக்கான மரியாதையினால் ஆளப்படவேண்டும். ஒரு நபரின் உயிர் கருத்தரித்தலின்போது தொடங்குகிறது என்று பைபிள் குறிப்பிட்டுக்காட்டுவதால், உருவாகிவரும் குழந்தையைச் சிதைக்கும், அல்லது அதன் உயிரை அழிக்கும் கருத்தடை முறைகளைக் கிறிஸ்தவர்கள் தவிர்ப்பார்கள்.—சங்கீதம் 139:16; ஒத்துப்பாருங்கள்: யாத்திராகமம் 21:22, 23; எரேமியா 1:5.
எனவே குடும்பக் கட்டுப்பாடு என்பது வரும்போது தம்பதிகள் தகுந்தமுறையில் வெவ்வேறு வகையில் தெரிவைச் செய்யலாம். சிலர் தாங்கள் பெறப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள விரும்பலாம். மற்றவர்கள், சில கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி, குழந்தைகளே இல்லாமலிருக்கத் தீர்மானிக்கலாம். ஒவ்வொன்றும் அதனுடைய நன்மை தீமைகளோடு பல பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் இருக்கின்றன. தங்களுக்கு எந்த முறை சிறந்தது என்பதைத் தீர்மானிப்பதில், சில முறைகள் மற்றவற்றைவிட அதிக திறம்பட்டது என்பதைத் தம்பதிகள் மனதில்கொள்ளவேண்டும். அவற்றால் விளையக்கூடிய பக்க விளைவுகளைப்பற்றியும்கூட அவர்கள் விசாரித்தறியவேண்டும். பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளைப்பற்றி அறிவுரை வழங்கவும், தங்களுடைய தேவைகளை மிகச் சிறந்த வழிகளில் பூர்த்தி செய்யும் ஒரு முறையைத் தெரிந்தெடுக்க தம்பதிகளுக்கு உதவவும் மருத்துவர்களும் குடும்பக் கட்டுப்பாட்டு மருத்துவமனைகளும் தகுதிபெற்றிருக்கிறார்கள்.
பல குழந்தைகளைப் பெறவோ, சில குழந்தைகளைப் பெறவோ, அல்லது குழந்தைகளே இல்லாமலிருக்கவோ ஒரு தம்பதி எடுக்கும் தீர்மானம் அவர்களுடைய சொந்த தீர்மானமாக இருக்கிறது. அது நீடிக்கும் விளைவுகளைக் கொண்டுவரும் ஒரு முக்கியமான தீர்மானம். இக்காரியத்தைக் கவனமாகவும் ஜெபசிந்தையுடனும் சீர்தூக்கிப்பார்ப்பது திருமணமான தம்பதிகளுக்கு ஞானமாகும்.
[பக்கம் 8, 9-ன் பெட்டி]
பொதுவாக உபயோகிக்கப்படும் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள்
கருத்திறவளங் கெடுத்தல்
ஆண்களில்: விரைப்பையில் ஒரு சிறிய கீரலை உண்டாக்கி விந்துவைக் கொண்டுச் செல்லும் குழாயைத் துண்டிக்கும் ஓர் எளிய அறுவை செயல்முறை.
பெண்களில்: கருப்பைக்குள் முட்டை செல்வதைத் தடுப்பதற்காகக் கருக்குழாய்களைக் கட்டும் அல்லது துண்டிக்கும் ஓர் அறுவை செயல்முறை.
நன்மைகள்: எல்லா பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளிலும் கருத்திறவளங் கெடுத்தல் அதிக திறனுடையது.
தீமைகள்: இது நிரந்தரமாக இருக்கக்கூடும். அறுவை சிகிச்சைகள் ஆண்களிலும் பெண்களிலும் கருவுறுதிறனைத் திரும்ப கொண்டுவந்திருக்கின்றன, ஆனால் உறுதிகொடுக்க முடியாது.a
கருத்தடை மாத்திரைகள்
இவை ப்ரோஜெஸ்டின்-மட்டும் என்னும் சிறுமாத்திரைகளை உட்படுத்துகின்றன. முட்டை முழுவளர்ச்சியடைந்து விடுவிக்கப்படுவதைத் தடுக்கும்படி, இவை ஒரு பெண்ணின் ஒழுங்கான இயக்குநீர் அளவோடு குறுக்கிடுகின்றன.b
நன்மைகள்: கருத்தரிப்பைத் தடுப்பதில் அதிக பயனுள்ளது.
தீமைகள்: சில சரீரப்பிரகாரமான பக்க விளைவுகள் ஏற்படும், ஆனால் 40 வயதுக்கும் குறைவான, புகைபிடிக்காத, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இவ்விளைவுகள் குறைவாகவே ஏற்படுகின்றன.
இடையீட்டு முறையும் விந்துக் கொல்லியும்
ஒரு குவிமாடம் வடிவிலுள்ள ரப்பர் கிண்ணம், விரிந்து சுருங்கும் ஒரு சட்டத்தின்மேல் விரிக்கப்பட்டதாகும் இந்த இடையீட்டுச் சவ்வுதிரை. விந்துவைக் கொல்லும் பாகு அல்லது பசையை (ஆண் விந்துத் தாதுக் கொல்லிகள்) இக்கிண்ணத்தில் பூசிய பிறகு, இந்தக் கிண்ணம் கருப்பை கழுத்தைச் சுற்றி பொருந்தும்வண்ணம் கருப்பை வாய்க்குழாயினுள் நுழைக்கப்படுகிறது.
நன்மைகள்: தகுந்த முறையில் உபயோகிக்கும்போது, இது ஒரு பாதுகாப்பான, நம்பகமான பிறப்புக் கட்டுப்பாட்டு முறையாக இருக்கிறது.
தீமைகள்: ஒரு தம்பதி உடலுறவுகொள்ளும் ஒவ்வொரு முறையும் இதை உபயோகிக்கவேண்டும். இந்த உபகரணத்தைத் தகுந்தமுறையில் நுழைக்க திறமை தேவைப்படுகிறது. உடலுறவிற்கு முன்னரே நுழைத்துவிட்டு, உடலுறவுக்குப் பின் ஆறிலிருந்து எட்டு மணிநேரத்திற்கு உள்ளே வைத்திருக்கவேண்டும்.
கருப்பை உட்கழுத்துத் தொப்பி
இடையீட்டுச் சவ்வுதிரையைவிட சிறிய, பிளாஸ்டிக் அல்லது ரப்பரால் ஆன கிண்ணம்போன்ற ஓர் உபகரணம். இடையீட்டுச் சவ்வுதிரையைப்போல, கருப்பையின் கழுத்தின்மேல் நுழைக்கப்படுகிறது. ஆனால் மிக சுகமாகப் பொருந்துகிறது. குறைந்தளவு விந்துக் கொல்லி பசையை அல்லது பாகுவைத் தேவைப்படுத்துகிறது.
நன்மைகள்: இக்கிண்ணம் அதன் திறமையில் இடையீட்டுச் சவ்வுதிரைக்கு ஒப்பாயிருக்கிறது. இது பொருத்தப்பட்ட இடத்தில் 48 மணிநேரத்திற்கு இருக்கலாம். உடலுறவுகொள்ளும் ஒவ்வொரு முறையும் விந்துக் கொல்லி பூசவேண்டிய தேவையில்லை.
தீமைகள்: இடையீட்டுச் சவ்வுதிரையைவிட இதை நுழைப்பது மிகக் கடினம். ஒவ்வொரு உடலுறவுசெயலுக்கு முன்பும் பின்பும் இது கருப்பை கழுத்தின்மீது பொருந்தியுள்ளதா என்பதைச் சோதித்துப் பார்க்கவேண்டும். கருப்பை அல்லது கருப்பை கழுத்து நோயினால் தாக்கப்படுவது சாத்தியமான ஆபத்துகளாகும். இது ஒழுங்கான மார்பு சோதனைகள் செய்துகொண்ட பெண்களால் மட்டுமே அணியப்படவேண்டும்.
ஸ்பாஞ்ச்
இது கருப்பை கழுத்தை அடைப்பதற்காக கருப்பை வாய்க்குழாயினுள் நுழைக்கப்படும் விந்துக் கொல்லியடங்கிய ஒரு பாலியுரதேன் பஞ்சு. இவ்வாறு இது விந்துவுக்கு ஓர் இரசாயன மற்றும் சடப்பொருளாலான தடையாக அமைகிறது. பயன்படுத்தப்பட்டப் பிறகு இது களையப்படுகிறது.
நன்மைகள்: இந்தப் பஞ்சு அது பொருத்தப்பட்ட இடத்தில் 24 மணிநேரம்வரை இருக்கலாம். இந்த நேரத்தின்போது எத்தனை முறைவேண்டுமானாலும் உடலுறவுகொள்வது நன்மை பயக்குவதாய் இருக்கிறது.
தீமைகள்: இது சிலருடைய உடலில் ஒவ்வாமையினால் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருடைய விஷயத்தில் விஷ அச்ச நோய்க்குறித் தொகுதி (Toxic shock syndrome) அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
கருப்பையின் உட்புறக்கருவி முறை
ஐயுடி (IUD), வளையம், சுருள் என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்த உலோக அல்லது பிளாஸ்டிக் உபகரணம் கருப்பையில் வைக்கப்படுகிறது. இது உண்மையில் எவ்வாறு செயல்புரிகிறது என்பது நிச்சயமில்லாதபோதிலும், கருவுறுதலை இது பல வழிகளில் தடை செய்வதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். கருவுற்ற முட்டை கருப்பையின் சுவற்றில் ஒட்டிக்கொள்ளாதவண்ணம் தடைசெய்வது, ஒருவேளை இதில் ஒரு வழியாக இருக்கலாம்.
நன்மைகள்: இது ஒரு நம்பகமான பிறப்புக் கட்டுப்பாட்டு வழியாக இருக்கிறது.
தீமைகள்: சிலசமயங்களில் இரத்தக் கசிவு அல்லது வேதனை ஏற்படுகிறது. இது வேலைசெய்யும் முறை சிலசமயங்களில் கருக்கலைப்புக்குச் சமமாக இருக்கிறது.c
கருத்தடை உறைகள்
இது விந்து கருப்பை வாய்க்குழாயினுள் நுழையாமல் தடுக்க, ஆண் உறுப்பின்மீது பொருந்தக்கூடிய ஓர் உறையாகும்.
நன்மைகள்: பாதுகாப்பான, பயனுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழியாகும். எய்ட்ஸ் உட்பட்ட, பாலின நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
தீமைகள்: இந்த உறையைப் பயன்படுத்தும் முறை உடலுறவு செயலில் தடை ஏற்படுத்துவதனால் இதைச் சிலர் விரும்புவதில்லை.
உடலுறவுத் தொடர்பறுத்தல்
ஆணின் விந்து வெளிப்படுவதற்குச் சற்று முன்னரே ஆண் உறுப்பைக் கருப்பை வாய்க் குழாயிலிருந்து வெளியே இழுத்துக்கொள்ளும் முறை.
நன்மைகள்: செலவோ, தயாரிப்போ, எந்த உபகரணங்களோ தேவைப்படுவதில்லை.
தீமைகள்: உடலுறவில் திருப்தி கிடைப்பதில்லை, அதிக தற்கட்டுப்பாட்டைத் தேவைப்படுத்துகிறது, மற்றும் இது மிகவும் நம்பமுடியாத ஒரு முறையாகும்.
ஒழுங்கு இயல்பு முறை
பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சியில், பெண் அதிக கருவுறுதன்மையைக் கொண்டிருக்கும் (Fertile) நாட்களுக்கு, தம்பதிகள் உடலுறவுகொள்வதிலிருந்து விலகியிருத்தல்.
நன்மைகள்: பாதுகாப்பானது, தீங்குள்ள பக்க விளைவுகள் ஒன்றுமில்லை, உடலுறவின்போது எந்த வித நடவடிக்கைகளும் தேவைப்படுவதில்லை.
தீமைகள்: தம்பதிகள் குழந்தைகளில்லாமலிருக்க மிகவும் தீர்மானமாயிருந்து, இம்முறைக்கான அறிவுரைகளை உறுதியாக பின்பற்றவில்லையெனில், கருத்தரித்தலைத் தடுப்பதில் இம்முறை வெற்றிகரமான ஒன்றாக இருக்காது.
இயக்கநீர் ஏற்றுதல்
பிறப்புக் கட்டுப்பாட்டுக் காட்சியில் மிகப் புதிதாகத் தோன்றியிருக்கும் இக்கருத்தடைச் சாதனம், பெண்ணுடைய கையின் தோலுக்கடியில் பதித்துவைக்கப்பட்ட சிறு சிலிக்கான் உருளைகளின் வரிசையேயாகும். இவை பெண்ணின் இரத்த ஓட்டத்தில், ஐந்து வருடங்கள்வரை, மிக நுண்ணிய அளவில் ஓர் இயக்குநீரைத் தொடர்ந்து சுரக்கின்றன. இக்காலப்பகுதியில் அவள் கருத்தரிப்பதிலிருந்து பாதுகாக்கப்படுகிறாள்.
நன்மைகள்: மிகப் பயனுள்ளது. பதித்துவைக்கப்பட்டதை அகற்றுவதன்மூலம் கருத்தரிக்கும்திறனை திரும்பப் பெறமுடியும்.
தீமைகள்: தீமைகள் மிகக் குறைவு. ப்ரோஜெஸ்டின்-மட்டும் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையை (சிறுமாத்திரையை) போன்றது. இந்த ப்ரோஜெஸ்டின்-மட்டும் மாத்திரைகளைப் பதித்துவைக்கும்போது, கருக்கலைப்பு முறையில் கருத்தரித்தலைத் தடுக்கிறது.d
[அடிக்குறிப்புகள்]
a கருத்தடை மாத்திரைகள் எவ்வாறு பிறப்பைத் தடுக்கின்றன என்பதன்பேரில் ஒரு கலந்தாலோசிப்பு ஜூன் 15, 1989, ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 29-ல் காணப்படுகிறது.
b கருவுறுதிறங் கெடுத்தல் கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவானதுதானா என்ற ஒரு கலந்தாலோசிப்பு மே 1, 1985, ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 31-ல் காணப்படுகிறது.
c கருத்தடை மாத்திரைகள் எவ்வாறு பிறப்பைத் தடுக்கின்றன என்பதன்பேரில் ஒரு கலந்தாலோசிப்பு ஜூன் 15, 1989, ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 29-ல் காணப்படுகிறது.
d IUD கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவானதுதானா என்ற ஒரு கலந்தாலோசிப்பு மே 15, 1979, ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 30-1-ல் காணப்படுகிறது.