உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 12/8 பக். 17-19
  • விருப்ப வேலைகளைப் பற்றியதென்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விருப்ப வேலைகளைப் பற்றியதென்ன?
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பயனுள்ள விருப்ப வேலைகள்
  • செலவை எண்ணிப்பாருங்கள்
  • சமநிலையில் வையுங்கள்!
  • சேகரித்தல்—சமநிலை தேவைப்படும் ஹாபி
    விழித்தெழு!—2005
  • நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • நோவாவின் பேழையும் கப்பல் வடிவமைப்பும்
    விழித்தெழு!—2007
  • ‘தேவனோடு நடந்தார்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 12/8 பக். 17-19

இளைஞர் கேட்கின்றனர்

விருப்ப வேலைகளைப் பற்றியதென்ன?

விருப்ப வேலைகள் மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றன. அவை “பெரும்பாலும் ஓர் ஆள் தன்னுடைய ஓய்வு நேரத்தில் செய்ய விரும்பும் ஏதாவது ஒன்று” என விவரிக்கப்படுகின்றன. சில இளைஞர் தங்களுடைய ஓய்வு நேரத்தை நீந்துதல், கால்பந்து விளையாடுதல், அல்லது ஓடுதல் போன்றவற்றில் செலவழிக்கின்றனர். உடற்பயிற்சிகளில் அதிக மனச்சாய்வு இல்லாத இளைஞர் இசை கேட்பது, நீண்ட தூரம் நடப்பது, அல்லது வீட்டிலிருந்து வாசிப்பது போன்றவற்றை விரும்பலாம். இன்னும் சிலர் திறமைகளை வளர்த்துக்கொள்ள அல்லது பொருட்களைச் சேகரிக்க விரும்பலாம். நடலீயின் விருப்பச்செயல் புல்லாங்குழல் இசைப்பது, அவளுடைய இளைய சகோதரி, நிக்கி, பொம்மைகளைச் சேகரிக்கிறாள்.

விருப்ப வேலைகள் தொழிலுக்கும் விளையாட்டுக்கும் இடையே ஒரு சமநிலையைக் கொடுத்து, ஓய்வு நேரத்தில் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கின்றன. அவை நீங்கள் ஓய்வை அனுபவிக்க உதவி செய்யும். தகுந்த ஓய்வு, மனம் மற்றும் சரீரப்பிரகாரமான நல்ல ஆரோக்கியத்தில் விளைவடையும். கானடாவைச் சேர்ந்த மருத்துவர் சர் வில்லியம் ஆஸ்லர், “ஒரு விருப்ப வேலையின்றி எந்த மனிதனும் உண்மையிலேயே சந்தோஷமாகவோ பாதுகாப்பு உணர்வுடனோ வாழமுடியாது” என்பதாக வலியுறுத்துகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “வெளியே ஆர்வத்துக்குரிய காரியம் என்னவாகயிருந்தாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவதில்லை . . . விருப்ப வேலை எதுவாக இருந்தாலும் சரி, விருப்ப வேலை ஒன்றைக் கொண்டிருந்து அதற்கு அதிக கவனம் கொடுத்துவந்தால் போதும்.” ஆனால், ஒரு நல்ல சவாரிக்காரன் தன்னுடைய போர்க் குதிரையைக் கட்டுப்படுத்துவதுபோல விருப்ப வேலை உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதைவிட, நீங்கள் அதைக் கட்டுப்படுத்தவேண்டும். எவ்வாறு?

முதலாவதாக, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவது, குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பது, வீட்டுவேலைகளைச் செய்வது போன்ற வாழ்க்கையின் முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். (பிலிப்பியர் 1:10) இப்போது உங்கள் ஓய்வு நேரத்தில் எவ்வளவு நேரம் விருப்ப வேலைக்காக செலவிடமுடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

பயனுள்ள விருப்ப வேலைகள்

சில விருப்ப வேலைகள், பின்னல் வேலை, தையல் வேலை, அல்லது சமையல் கலைகள் போன்ற விலைமதிப்புள்ள திறமைகளை வளர்த்துக்கொள்ள பயன்படுகின்றன. இந்த விருப்ப வேலைகள் குறிப்பாக பெண்களுக்குக் கவர்ச்சியாக இருக்கின்றன என்பது உண்மையே. இருந்தபோதிலும், சமைப்பது ஆண்மையற்றத் தன்மையைக் குறிக்காது. (யோவான் 21:9-12-ஐ ஒப்பிடவும்.) நீங்கள் சுவைத்திற வல்லுநர்களின் தராதரங்களை அடையமுடியாமலிருக்கலாம், ஆனால், சிறிது சமையல் செய்துபார்ப்பது எப்போதாவது நீங்கள் உங்களையே கவனித்துக்கொள்ளவேண்டிய நிலைமை வரும்போது விலைமதிப்புள்ளதாக நிரூபிக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவக்கூடும். மறுபட்சத்தில், பெண்கள், வாகனங்களை இயக்கவோ அல்லது வீட்டில் பழுதுபார்க்கவோ முயற்சிசெய்வது பலனளிப்பதாயிருக்கும்.

பயனளிக்கும் மற்றொரு விருப்பச் செயல் ஒரு மொழியைக் கற்பதாகும். உதாரணமாக, இளைஞனான ஜேம்ஸ் தற்போது ரஷ்ய மொழி படிக்கிறான். ஒருவேளை ஓர் இரண்டாம் மொழியைப் படித்துவைப்பது என்றாவது ஒரு நாள் ஓர் அந்நியநாட்டிலே மற்றவர்களுக்கு பைபிள் சத்தியங்களைப் போதிக்க உதவக்கூடும்! உண்மையிலேயே, விருப்ப வேலைகள் அநேக சமயங்களில் மற்றவர்களுக்கு உதவுவதில் ஒரு வழியாக இருக்கக்கூடும்.

உதாரணமாக, தோட்டம் வைப்பது உங்கள் விருப்ப வேலையாக இருக்கிறதா? தோட்டத்தைச் சரிவர கவனித்துக்கொள்வதைக் கடினமாக உணரும் தாத்தா பாட்டிக்கோ மற்ற வயதானவருக்கோ சொந்தமான ஒரு தோட்டத்தில் ஏன் உங்கள் தோட்டக்கலைத் திறமையைக் கூர்மையாக்கிக்கொள்ளக்கூடாது? நீங்கள் தாமே செய்யவேண்டும் என்ற நிலையிலுள்ள வேலையை நீங்கள் அனுபவித்துக் களிக்கிறீர்களா? பிறகு ஒரு வயதானவருக்கோ, ஒரு விதவைக்கோ வீடு பழுது பார்ப்பதில் ஏன் உங்கள் உதவியை அளிக்கக்கூடாது? சமையல் உங்கள் விருப்ப வேலையாக இருக்குமானால், உங்களின் விருப்பப்பட்ட சமையல் செய்முறை ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால், தேவையில் இருக்கும் ஒருவருக்கு வெகுமதியாகக் கொடுப்பதற்காக ஏன் ஒரு பதார்த்தத்தைத் தயாரிக்கக்கூடாது? “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [அதிக சந்தோஷம், NW]” என்று இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள்.—அப்போஸ்தலர் 20:35.

ஒரு விருப்ப வேலை நீங்கள் ஆவிக்குரிய வகையில் முன்னேறுவதற்குகூட உதவிசெய்யும். உதாரணமாக, நீங்கள் மாதிரிகளை உண்டாக்குவதை விரும்புவீர்களானால், ஒரு சிறு மாதிரிப் பேழையை உண்டாக்குவது நோவாவுடைய விசுவாசத்தின் உறுதியின்பேரிலான உங்கள் போற்றுதலை ஆழப்படுத்தாதா? (பெட்டியைப் பாருங்கள்.) அதேபோல் ஒரு மாதிரி கூடாரத்தையோ ஆலயத்தையோ கட்டுவது வெகுகாலத்திற்குமுன் கடவுளின் ஊழியர்கள் வழிபட்ட விதத்தைப்பற்றிய உங்களுடைய அறிவை விருத்திசெய்யும். பைபிள் காலங்களில் மேய்ப்பனாயிருந்த சிறுவன் தாவீது தன்னுடைய ஓய்வு நேரத்தில் சுரமண்டலம் வாசித்தான். பின்னர் யெகோவாவின் துதிக்கு அழகிய பாட்டுக்களை இயற்றினான். ஓர் இசைக்கருவியை வாசிக்க நீங்களே சொந்தமாகக் கற்றுக்கொள்ள முடியுமா? அப்படியானால், யெகோவாவுக்குத் துதிபாடுங்கள் (ஆங்கிலம்)a என்ற பாட்டுப் புத்தகத்திலுள்ள பாட்டுக்களில் சிலவற்றைக் கற்றுகொள்வதன்மூலம் யெகோவாவுக்குத் துதிபாட ஏன் உங்கள் திறமைகளை உபயோகிக்கக்கூடாது? பாட்டைப் பாடும்போது, வார்த்தைகள் தெரிவிக்கிற மனநிலையின்பேரில் தியானம் செய்யுங்கள். நீங்கள் அரும்பொருட்கள் சேகரிக்கும் ஒருவரா? அப்படியானால் பைபிள் சம்பந்தப்பட்ட பொருட்களை சேகரியுங்கள். அல்லது ஒரு வெட்டியொட்டற் புத்தகத்தை பைபிள் இடங்களின் படங்களால் நிரப்ப முயற்சி செய்யுங்கள்.

செலவை எண்ணிப்பாருங்கள்

ஒரு விருப்ப வேலை எவ்வளவு பயனுள்ளதானாலும், அடிக்கடி உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: அது எவ்வளவு செலவை உட்படுத்தும்? (லூக்கா 14:28) இந்த விருப்ப வேலை உங்களுடைய வரவுசெலவுத் திட்டத்திற்குள் இருக்கிறதா? அது அஞ்சல்தலைகள், பழங்கலைப்பொருட்கள், அல்லது பொம்மைகள் போன்ற எதுவாக இருந்தாலும்சரி, அரும்பொருட்களை சேகரிப்பது உங்களுடைய பொழுதுபோக்காக இருக்குமானால் அது ஒரு சவாலாக இருக்கக்கூடும்!

உங்கள் பொருளை நீங்கள் எவ்வாறு உபயோகிக்கிறீர்கள் என்பது நீங்கள் நித்திய ஜீவன் பெறுவதற்கான வாய்ப்பைக்கூட பாதிக்கக்கூடும் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். இயேசு சொன்னார்: “நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி [யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும்], அநீதியான உலகப்பொருளால் [உங்கள் பணம்] உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.” (லூக்கா 16:9) “உன் பொருளால் கர்த்தரைக் கனம்பண்ணு”வதற்கு எதுவுமே இல்லாத அளவுக்கு உங்கள் விருப்ப வேலை அதிக பணத்தை உட்படுத்துகிறதா? (நீதிமொழிகள் 3:9) ஒரு விருப்ப வேலைக்குப் பணம் கொடுப்பது, ஒருவேளை ஆவிக்குரிய நடவடிக்கைகளை தியாகம்செய்து, பகுதிநேர வேலை செய்யவேண்டியதைத் தேவைப்படுத்துமா?

சமநிலையில் வையுங்கள்!

சில சமயங்களில் விருப்ப வேலையில் அதிக ஈடுபாடுள்ளவர்கள், தங்களைப்போல அதே வேலையில் ஈடுபடுகின்ற மற்றவர்களோடு இருக்க வாஞ்சிக்கின்றனர். ஆயினும் இது பல ஆபத்துக்களை விளைவிக்கக்கூடும். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: அப்படிப்பட்ட கூட்டுறவு கட்டியெழுப்பக்கூடியதாக இருக்குமா? அவர்களுடைய சிகைஅலங்காரம் மற்றும் உடையின் தராதரங்கள், பொழுதுபோக்குகளின் தெரிந்தெடுப்பு, அல்லது அவர்களுடைய உரையாடல் போன்றவை உங்கள்மீது ஒரு தீய பாதிப்பைக் கொண்டிருக்கின்றனவா? உங்களுடைய சொந்த குடும்பத்தினர் அல்லது கிறிஸ்தவக் கூட்டாளிகளின் கூட்டுறவைவிட அவர்களின் கூட்டுறவிற்குள் நீங்கள் அதிகம் இழுக்கப்பட்டவர்களாக உங்களை காண்கிறீர்களா? எப்படியிருந்தாலும், பரஸ்பர அக்கறைகள் முழுமையற்ற நட்புக்கு உங்களை வழிநடத்தும்படி அனுமதிக்கிறீர்களா? “ஆகாத சம்பாஷணைகள் [கூட்டுறவு, NW] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்,” என்பதை நினைவில் வையுங்கள்.—1 கொரிந்தியர் 15:33.

அக்கறைக்குரிய மற்றொரு விஷயம்: உங்களுடைய விருப்ப வேலை எப்படிப்பட்ட மனநிலையை ஊக்குவிக்கிறது? அது ஓர் ஆரோக்கியமற்ற போட்டியின் ஆவியைக் கிளறிவிடுகிறதா? அது பயங்கரமான சரீரப்பிரகாரமான ஆபத்துகளை உட்படுத்துகிறதா? அப்படியிருக்குமானால், அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகளை மனதில் வைப்பது ஒருவேளை நல்லதாக இருக்கும்: “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.”—1 தீமோத்தேயு 4:8; கலாத்தியர் 5:26.

மறுபட்சத்தில், சாலொமோன் சொன்னார்: “ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” அது “நகைக்க ஒரு காலத்தை”யும் உட்படுத்துகிறது. ஆம், விருப்ப வேலைகளும் பொழுதுபோக்கும் அவற்றிற்குரிய இடத்தை வகிக்கின்றன. எனினும், ஒரு விருப்ப வேலை சாலொமோன் மேலுமாக கூறிய கீழ்க்கண்ட வார்த்தைகளை நீங்கள் அசட்டை செய்யுமளவிற்கு உங்கள் அக்கறையை எடுத்துப்போடாதபடி நிச்சயமாய் இருங்கள்: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 3:1, 4; 12:13. (g91 11/22)

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் சங்கத்தால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 18-ன் பெட்டி]

நான் நோவா பேழையைக் கட்டினேன்!

என் கைகளால் வேலை செய்வதை நான் அனுபவித்துக் களிக்கிறேன். ஒரு நாள் நோவா பேழையைப் பற்றி அதிகம் அறியவேண்டும் என்ற தூண்டுதல் எனக்கு ஏற்பட்டபோது, அதன் சிறிய மாதிரியை உருவாக்க நான் தீர்மானித்தேன்.

உவாட்ச் டவர் சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சித் துணைப் பிரசுரங்களின் உதவியால் ஆதியாகமம் 6:14-16-ல் உள்ள பைபிள் விவரப்பதிவைப் படிப்பதன்மூலம் நான் தொடங்கினேன். அந்தப் பேழை ஒரு நவீன காலத்துக் கப்பலைப்போலவே இல்லை என்பதை விரைவில் உணர்ந்தேன். அதைவிட, அது வெறுமென 300-க்கு 50-க்கு 30 முழம் அளவுள்ள ஒரு பெரிய பெட்டியைப் போலவே இருந்தது. அது 133.5 மீட்டர் நீளமும், 22.3 மீட்டர் அகலமும், 13.4 மீட்டர் உயரமுமுள்ளதாகும். இவ்வாறு பேழை 134 மீட்டர் நீளத்தைக் கொண்டு—ஓர் ஐ.மா. கால்பந்தாட்ட மைதானத்தைப் போல் ஒன்றரை மடங்கு நீளமுள்ளதாயிருந்தது. அப்படிப்பட்ட பிரமாண்டமான அமைப்பும்கூட, உயிர்வாழ்வதாக விஞ்ஞானிகள் சொல்லும் 10,00,000 விலங்கினங்களுக்கு இடமளிக்க முடியாது என்கின்றனர். எனினும், வெறுமென 43 “வகை” பாலூட்டிகள், 74 “வகை” பறவைகள், 10 “வகை” ஊர்வன மாத்திரமே இன்று வாழ்ந்திருக்கும் அநேக வகை இனங்களை உருவாக்கியிருக்கக்கூடும் என சில கண்டுபிடிப்பாளர்கள் நம்புகின்றனர் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

மின்சார இரம்பங்கள் இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்ப்பது, இழுவை இயந்திரங்கள் இல்லாமல் மரக்கட்டைகளைக் கட்டுமான இடத்திற்கு இழுத்து வருவது, பாரந்தூக்கிகள் இல்லாமல் பாரமான கூரை உத்திரங்களைத் தூக்கி வைப்பது போன்ற நோவாவுடைய வேலையின் மிகப்பெரிய அளவை போற்றுவதற்கும் என் ஆராய்ச்சி எனக்கு உதவிற்று. நோவாவின் வேலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்னுடைய வேலை எளிதாக இருந்தது! “மரங்களை”ப்பெற வெறுமென நான் உலர்ந்த காட்டுப்புதர்களின் தண்டுகளில் சில கட்டுகளை வெட்டினேன். என் “விலங்குகள்” களிமண்ணால் செய்யப்பட்டவை. உட்புறத்தின் அமைப்புமுறையைப் பொறுத்தவரையில், நான் சில கற்பனைவேலைகளை செய்யவேண்டியதாயிருந்தது. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும், பெரும்பாலான காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கக்கூடிய மேல்மாடியில் பெரும்பாலும் வாழத் தெரிந்தெடுத்திருப்பார்கள் என கற்பனை செய்து பார்த்தேன். விலங்குகளை பேழையின் கீழ் அடுக்குகளில் வைத்தேன்.

பல மணிநேர உழைப்புக்குப் பிறகு, என் மாதிரி முடிக்கப்பட்டது. மனதைக் கவரும்வண்ணம் இருப்பதாகச் சிலர் சொன்ன என் மாதிரியைவிட, அசல் பேழை நூறு மடங்கு நீளமானதாகவும் அகலமானதாகவும் உயரமானதாகவும் இருந்தது. அதாவது, அசல் பேழையின் கொள்திறனை சமமாக்க என் மாதிரியைப்போல 10,00,000 மாதிரிப்பேழைகள் தேவைப்படும். என் திட்டம் அசல் பேழையைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற என் பசியார்வத்தைத் தூண்டிவிட்டது என்பதில் ஆச்சரியமில்லை. கடவுளுடைய புதிய உலகில் பிரவேசித்து, மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் காண நான் வாழ்ந்திருக்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், எல்லா விவரத்தின்படி சரியாகவுள்ள ஒரு புதிய மாதிரிப்பேழையைக் கட்ட, ஒருவேளை நோவாவின் உதவியை வேண்டிக்கொள்ள முடியும்.—அளிக்கப்பட்டது.

[பக்கம் 19-ன் படங்கள்]

உங்களுடைய விருப்ப வேலை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறதா?

பைபிள் இடங்களின் படங்களைச் சேகரித்து வைப்பது வேதாகம நிகழ்ச்சிகளைக் கற்பனைச் செய்து பார்க்க உதவக்கூடும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்