அரவணைக்கத் தோன்றும் கோஆலாவினால் கவர்ந்திழுக்கப்பட்டு
ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
கடந்த காலங்களில் முன் பின் தெரியாத, ஆராய்ச்சி செய்யப்படாத தேசங்களில் கிளர்ச்சியூட்டும் அரிதான விலங்குகளைக் கண்டுபிடிப்பது கவர்ச்சியூட்டும் அதிசயங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் 1788-ம் ஆண்டுக்குப் பிறகு இது நிச்சயமாகவே உண்மையாக இருந்தது.
அப்பொழுது, ஜாக்ஸன் துறைமுகத்தைச் (இப்போதைய சிட்னியை) சுற்றியிருந்த குற்றவாளிகளின் குடியிருப்புகள் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட குற்றவாளிகளால் குடியேறப்பெற்றிருந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு, ஆராய்ச்சிப் பயணத்தை மேற்கொள்பவராக மாறிய விடுவிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, உள்நாட்டில் 130 கிலோமீட்டர் தொலவிலுள்ள மேட்டுநிலங்களுக்குப் பிரயாணப்பட்டுப் போனர். முதன்முறையாக ஆஸ்திரேலிய கோஆலாவைக் கண்டபோது அவர் ஆச்சரியத்தில் மகிழ்ந்தார். அது, “[பழங்கால] குடிமக்கள் ‘கலவீன்’ என்று அழைக்கக்கூடிய, அமெரிக்காவில் வாழும் கரடிபோன்ற தேவாங்கு இனத்தைச் சேர்ந்த பாலூட்டிகளைப்போலத் தோன்றும் மற்றொரு வகை மிருகம்” என்பதாக அவர் எழுதினார்.
இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுப்பயணிகளின் முழு கவனத்தையும் இழுக்கும் ஒன்றான இந்தக் கவர்ச்சியூட்டும் முசுமுசு மூட்டையை ஆராய்ந்து பார்க்க விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் ஒரு கங்காருவைப் பார்க்க வேண்டும் என்று கேட்பதற்கு அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு வரும் பார்வையாளர்களிடமிருந்து அடிக்கடி வரக்கூடிய வேண்டுகோள்களில் ஒன்று: “நான் அரவணைக்கக் தோன்றும் உங்கள் நாட்டு விளையாட்டுக் கரடியைத் தொட்டுப் பார்க்க வேண்டும்,” என்பதாகும்.
உண்மையில் ஒரு கரடியல்ல
கேள்விக்கிடமின்றி, கோஆலா அரவணைக்கத் தோன்றும் ஒரு சிறிய விலங்கு. அது 80 சென்டிமீட்டர் நீளம் மாத்திரமே வளர்ந்து, பொத்தானைப் போன்ற மூக்கையும், முசுமுசுவென அழகான தோலையும் கொண்டு ஒரு விளையாட்டுக் கரடியைப்போலத் தோன்றுகிறது. ஆனால் அது கரடிக் குடும்பத்தைச் சேர்ந்ததே இல்லை என்று அறிவதில் நீங்கள் ஆச்சரியப்படலாம்.
ஆம், இது பெரும்பாலும் கோஆலா கரடி அல்லது ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கரடி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் தவறான பெயர்களாகும். கரடியின் குடும்பத்தைச் சேர்ந்திருப்பதைவிட, கோஆலா நிலநீர்வாழ் எலியுருவ விலங்கைப்போலத் தோன்றும், வயிற்றில் பையையுடைய பாலூட்டியாகிய ஒருவகை ஆஸ்திரேலியக் கரடியைப்போலத் தோன்றுகிறது.
தி ஆஸ்திரேலியன் என்ஸைக்ளோபீடியா கவர்ந்திழுக்கும், அரவணைக்கத் தோன்றும் இந்தப் படைப்பைப்பற்றி ஒரு கவர்ச்சியான படத்தை வரைகிறது: “கோஆலா ஒரு பருத்த உடலைக் கொண்டிருக்கிறது. மேல்பாகம் சாம்பல்நிறத்திலிருந்து பழுப்புநிறமுள்ளதாகவும், கீழ்ப்பாகம் மஞ்சள் கலந்த வெள்ளையாகவும் காணப்படும் தடித்த கம்பளிபோன்ற மென்மயிர்த்தோலையும் கொண்டிருக்கிறது. பெரிய வட்டமான மென்மயிர்த்தோல கொண்ட காதுகளையும், ஒரு தோல் போன்ற விரிவடைந்த பெரும்பாலும் நீள மூக்கையும் கொண்டுள்ளது. . . . இந்த விலங்கு ஏறும்போது உறுதியாக ஏறும், ஆனால் தரையிலோ செயல்திறனற்று நடக்கும்.”
முழுவளர்ச்சியடைந்த கோஆலா 14 கிலோகிராம் எடையுள்ளதாகும். அவை வனாந்தரத்திலே சுமார் 20 வருடங்களுக்கு வாழலாம். அடைத்துவைத்த நிலையிலே சில 12 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கின்றன.
ஆஸ்திரேலியக் கங்காருவைப்போல, கோஆலா ஒரு பைம்மாவினமாகும் (“உறை” அல்லது “பை” என்ற அர்த்தம் கொண்ட மார்ஸுபியம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து). இது பைம்மாவினத்திற்கே உரித்தான தனிச்சிறப்புவாய்ந்த பிறப்புமுறையைக் கொண்டிருக்கின்றது. பிறக்கும்போது சிறியதாயிருந்து, முழுவதும் வளர்ச்சியடையாததாய், மற்றெந்த உதவியுமில்லாமல் தங்களுடைய தாயின் பைக்குள் செல்கின்றன. அங்குள்ள இரண்டு முலைக் காம்புகளில் ஒன்றைப் பற்றிக்கொள்கின்றன.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தச் சிறிய விலங்கு முழுவதும் வளர்ச்சியடைந்த குட்டியாகி குறுகிய காலங்களுக்குப் பையைவிட்டு வெளியே வரமுடிகிறது. ஆனால் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் பைக்குள் புகமுடியாதளவுக்கு பெரியதாகிவிடுகிறான். இப்பொழுது என்ன செய்வது? உண்மையான பிரச்னை ஒன்றுமில்லை! அவனுடைய தாய் மரங்களின் மேலும் கீழும் ஏறியிறங்கும்போது தன் தாயின் முதுகின்மேல் தொற்றிக்கொண்டு சவாரி செய்கிறான்.
எனினும், இந்தச் சவாரி எப்போதுமே நீடிப்பதில்லை, ஆகவே ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த இளையவன் தன்னையே பராமரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறான். இந்தக் குறுகிய காலத்தைத் தவிர, தாய் கோஆலா மென்மயிர்த்தோல் உள்ள தன்னுடைய முதுகின்மேல் தொங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை சந்தோஷத்துடன் சுமந்து திரிவது கவர்ச்சியூட்டும் ஒரு காட்சியாகும். தன்னுடைய தாயைவிட்டுப் பிரிந்த பிறகு, இளம் கோஆலா இப்போது ஒரு தனிமை வாழ்க்கை நடத்தி, இனப்பெருக்கத்தின்போது மட்டும் மற்றவர்களோடு தொடர்பு கொள்கிறது.
இலையுணவு
மிகச் சிறிய அளவே குடிக்கிறது என்றர்த்தப்படுத்தும் ஒரு பூர்வீக மூல வார்த்தையிலிருந்து கோஆலா என்ற பெயர் பெறப்பட்டது. ஆனால் தண்ணீர் இல்லாமல் அவை எவ்வாறு உயிர் வாழமுடியும்? பனித்துளிகளையும், தங்களுடைய உணவாகிய தைல மர இலைகளிலுள்ள ஈரத்தையும் உட்கொள்வதன் மூலம்.
தைல மர இலைகளா? ஆம், கோஆலாக்கள் சுமார் 50 வித்தியாச வகைகள் யூகலிப்டஸ் மரங்களில் மேய்கின்றன, ஆனால் இவற்றில் ஒரு டஜனுக்கும் குறைவான வகைகளே அவற்றின் விருப்பப்பட்ட சிறந்த உணவாகும். யூகலிப்டஸ் மரங்கள் மிகப் பொதுவாகவே தைல மரம் என்ற பெயரில் அறியப்படுகின்றன. இவற்றில் சில காட்டுச் சிவப்புத் தைல மரம், சாம்பல்நிற தைல மரம், டாஸ்மேனியன் நீலவண்ண தைல மரம் போன்றவை.
ஒரு முழு வளர்ச்சியடைந்த கோஆலா தின ஒதுக்கீடாக சுமார் ஒரு கிலோகிராம் இலைகளை, அவசரமின்றி ஆனால் முழுவதுமாக அரைத்துத் தின்கிறது. அவை அவற்றின் பெரும்பகுதியான நேரத்தை தைல மரங்களின் உயரத்திலேயே கழித்து, வேறொரு மரத்திற்குப் போவதற்கு மட்டுமே கீழே வருகின்றன. தரையிலே அவை தடுமாற்றத்துடனும், காண சகிக்காத வகையிலும் நடக்கின்றன.
இவை இரவில் வேலை செய்யும் விலங்குகளாதலால், பெரும்பாலான பகல் நேரத்தை, தரைக்குமேல் ஒரு மரத்தின் கவையை ஆதாரமாகக்கொண்டு தங்கி உறங்குவதில் செலவழிக்கின்றன. அசெளகரியமாகவா? அவை அவ்வாறு எண்ணுவதாகத் தெரியவில்லை. மேலும் அவ்விருப்பிடம், தன்னைக் கொல்ல வரும் எந்தவொரு விலங்குகளிடமிருந்தும் மிகச் சிறந்த பாதுகாப்பு அளிக்கிறது.
அவை பழக்கப்படுத்தப்பட முடியுமா?
சிறு வயதில் பிடிக்கப்பட்டால், கோஆலாக்கள் பாசமுள்ள ஆசைவிலங்குகளாக பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன. வட க்வீன்ஸ்லாந்திலுள்ள ஒரு தம்பதி அப்படிப்பட்ட ஓர் ஆசைவிலங்கை அவள் மூன்று மாத வயதிலிருக்கும்போதிருந்து வளர்த்தனர். இந்தச் சிறிய பெண் “குட்டி” தன் தாய்க்குப் பதிலாளாக கோஆலாவின் ஒரு மென்மயிர்த்தோல் துண்டை ஒரு தலையணையைச் சுற்றி கட்டி அவளோடு ஒரு கூடையில் வைப்பதன்மூலம் அவள் ஆறுதல் பெறும்வரை ஒவ்வொரு இரவும் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு டெடி (Teddy) என்று பெயரிட்டனர். அவள் தைல இலைகளாலான பலமான ஆகாரம் அருந்தத் தொடங்கும் வயது வரும்வரை, பசும்பாலை உட்கொண்டு உயிர்வாழ்ந்தாள். அவள் பூனைக்குட்டியைப் போல பாலை நக்கிக் குடித்தாள்.
பிரச்னை என்னவென்றால், டெடி மனிதரோடு அதிகம் பழகிவிட்டதனால் அவள் தனியே விடப்படுவதை வெறுக்கிறாள். குழந்தையைப் போல உடன் தூக்கிச் செல்லப்படுவதை விரும்புகிறாள். அவள் உண்மையிலேயே ஒரு தொல்லையாகிவிட்டாள். அவளுடைய திருப்தியான வாழ்க்கை 12 வருடங்களாக நீடித்தது. ஆம், கோஆலாக்களைப் பழக்கப்படுத்த முடியும், ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவில் அவைகளை ஆசை விலங்குகளாக வைத்திருப்பது சட்டவிரோதமானது.
பேரளவில் குறைந்தன ஆனால் இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளன
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கண்டத்தில் லட்சக்கணக்கான கோஆலாக்கள் இருப்பதாக அறிக்கை செய்யப்படும் அளவுக்கு அவை அதிமாகக் காணப்பட்டன. ஆனால் அவை பகல் நேரத்தில் யூகலிப்டஸ் மரக்கவைகளில் தூங்கிக்கொண்டிருப்பதனால், அவை அவ்வளவு எளிதில் வேட்டைக்கு இலக்குகளாகி ஆயிரக்கணக்கில் வெறுமென விளையாட்டுக்காக சுட்டுத் தள்ளப்பட்டன.
பின்னர், அவற்றின் மென்மையான, வெள்ளி-சாம்பல் நிற மென்மயிர்த்தோலுக்குத் தேவை அதிகரித்தபோது, வியாபார நோக்கத்திற்காகக் கொல்லுதல் தொடங்கியது. உதாரணமாக, 1908-ல் கிட்டத்தட்ட 60,000 கோஆலா மென்மயிர்த்தோல்கள் சிட்னியில் மாத்திரம் விற்பனை செய்யப்பட்டன. மேலும் 1924-ல் 20-லட்சத்திற்குமேல் ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
சந்தோஷகரமாகவே, ஆஸ்திரேலியக் கூட்டரசாங்கம், இந்த அரவணைக்கத் தோன்றும் படைப்பின் இனம் அழிந்துபோவதன் அபாயத்தை உணர்ந்து, 1933-ல் கோஆலாக்களையும், அதன் பொருட்களையும் ஏற்றுமதி செய்வதை தடைசெய்ய சட்டம் பிறப்பித்தது. கோஆலா இப்போது ஒரு பாதுகாக்கப்பட்ட விலங்காகும்.
தங்களுடைய விலங்குக்காட்சி சாலைகளில் கோஆலாக்களை வைப்பதற்கு மற்ற நாடுகள் முயற்சி செய்து அதில் வெற்றிபெறவில்லை. அதன் சிறப்பு வாய்ந்த உணவாகிய வாடாத புதிய யூகலிப்டஸ் இலைகளை அளித்துப் பராமரிப்பது கடினமாகும். இருப்பினும், அமெரிக்க மாகாணமாகிய கலிஃபோர்னியாவில் இந்த முயற்சி வெற்றியடைந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அதன் தட்பவெப்பநிலை தைல மரங்களை வளர்ப்பதற்கு தகுந்ததாய் இருப்பதனாலேயாகும். இப்போது, சான் டியகோவிலும், லாஸ் ஏஞ்சலிஸிலும் உள்ள விலங்குக்காட்சி சாலைகள் ஆரோக்கியமும் செழிப்புமிக்க கோஆலா இனத்தொகையைக் கொண்டிருக்கின்றன. மிக சமீபகாலத்தில், கோஆலாக்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவை ஆரோக்கியமாக வைக்கப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்ள நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.—விழித்தெழு! (ஆங்கிலம்), ஆகஸ்டு 22, 1986-ஐப் பார்க்கவும்.
அரவணைக்கத் தோன்றும் கோஆலா தொடர்ந்து பிழைத்திருக்குமா?
வரம்பின்றி கொல்லுதலைத் தவிர்ப்பதற்கான ஓர் அறிவுள்ள அணுகுமுறை இது தொடர்ந்து பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். நூலாசிரியர் எலஸ் ட்ராட்டன், ஆஸ்திரேலியாவின் மென்மயிர்த்தோலுள்ள விலங்குகள் (Furred Animals of Australia) என்ற தன்னுடைய புத்தகத்தை நம்பிக்கையான இந்த விருப்பத்தோடு முடித்துள்ளார்: “கவர்ச்சியூட்டும் கோஆலா எல்லா இடங்களிலும் முற்றிலும் தீங்கற்றதாய் இருக்கிறது. வயிற்றில் பையையுடைய பாலூட்டியாகிய ஒருவகை அமெரிக்கக் கரடி அடிக்கடி செய்வதுபோல இவை வீட்டுப் பண்ணையையும் புறநகர்ப் பகுதிகளையும் நிரப்பப் போதுமான அளவுக்கு அதிகமாக இருந்தால் என்னே ஒரு மகிழ்ச்சியாயிருக்கும்! ஒதுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான வனங்களில் அமைதியாக மேய்வதற்கு அவற்றின் எண்ணிக்கைகள் அதிசயிக்கத்தக்கவகையில் அதிகரிப்பதாக.”
அரவணைக்கத் தோன்றும் கோஆலாக்கு மட்டுமல்ல, ஆனால் எல்லா நம்முடைய மகிழ்ச்சிக்கும் அனுபவிப்புக்கும் படைக்கப்பட்டு பூமியில் நம்மோடு வாழும் அழகிய விலங்குகளுக்கும், எல்லா இடங்களிலுமுள்ள விலங்குப் பிரியர்களும் இந்த உயர்நோக்கமுள்ள நம்பிக்கையை எதிரொலிக்கின்றனர். (g91 12/8)
[பக்கம் 16-ன் படம்]
ஒரு முழு வளர்ச்சியடைந்த கோஆலா நாள் ஒன்றுக்குச் சுமார் ஒரு கிலோகிராம் யூகலிப்டஸ் தைல இலைகளை, அவசரமின்றி ஆனால் முழுவதுமாக அரைத்துத் தின்கிறது